தலைவாசல்

அன்புடையீர், வணக்கம்.

ஆதாயவாதமும் சந்தர்ப்பவாதமும் அரசியலின் உடலும் உயிருமான ஜீவாதாரங்களாகிவிட்டன. குடியாட்சியின் நாயகர்களாகிய நாமும் சீர்கெட்ட இந்தச் செல்நெறிகளை நம் இயங்கு நெறிகளாக ஒரு மனதாகவே ஏற்றுக்கொண்டுவிட்டோம். இனியென்ன கேட்டுக்கேள்வி கட்டுத்திட்டம் ஏதுமில்லை. மனதை உலுக்கும் சம்பவம் மணிப்பூரில் நிகழ்ந்திருக்க அங்கு ஆட்சி பரிபாலனம் செய்யும் பா.ஜ.க. அரசு அதைத் தன் வெண்கொற்றக்குடையின் கீழ் கொண்டிருக்கும் ஒன்றிய அரசு இரண்டும் இவ்விடயத்தில் காட்டும் மெத்தனம் அவற்றின் சுயத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. ஆண்டுக்கொண்டிருக்கும் சொந்த நகரம் லங்கா தகனம், அரசர் பெருமானுக்கோ சங்கீத கவனம். அல்லற்பட்டு ஆற்றாது கசந்து வந்த பழங்குடியினரின் துயர் துடைக்காது மன்னர்பிரான் விருந்துண்டு களித்திருக்க வெளிநாடு பறந்துகொண்டிருக்கிறார். மானங்கெட அங்குள்ளவர்கள் எழுப்பிய வினாக்களை எதிர்கொள்ள முடியாமல் தரையிறங்கி இப்போது சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று சினிமா வசனம் பேசுகிறார். என்ன சொல்வது இந்த இழிவான அழி வழக்கை... சொன்னால் வெக்கம் சொல்லா விட்டால் துக்கம். இதுவல்ல மக்கள் வேண்டுவது...

வாழ்மானங்கள் தொலைத்த சிறும்பான்மை இனம் எதுவென்ற பொழுதும் அது அதன் நெருக்கடி  இல்லாத, இயல்புநிலை கெடாத, அன்றாடங்களுக்குத் திரும்பும்படியான நிவாரண நடவடிக்கைகளை அரசு துரிதமாக எடுக்கவேண்டும். வரலாற்றில் நெடிதும் பின்பும் நேர்ந்துவிட்ட பெரும்பிழைகளைக் களையும் படியான தீர்வுகள் காண உரிய வல்லுநர் குழுவை அமைத்து மூன்று இன மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து உற்ற தீர்வு காண வழிவகைச் செய்யவேண்டும்.

வேகும் வீட்டில் பிடுங்கியது லாபம் என்று அப்பாவி பழங்குடியினரை தங்களுக்குள் அடிப்பட்டுச் சாக அனுமதித்தால், மதவாதத்தால் மக்களுக்குள் பிளவு உண்டாக்கி, கலவரங்களை உண்டுச்செய்து அவற்றை வேடிக்கை பார்த்தால், கோடிகளில் புரள தங்களுக்கு வேண்டிய போதை வஸ்துக்கள் வளர்க்க அவர்கள் நிழலடியை அபகரித்து மலினமான அரசியல் செய்தால்...

அறங்கெட்ட ஆட்சி திறன் கெட்டு அழியும்.

---

வேத இதிகாச காலந்தொட்டு இணையப் பெருக்கங்கண்ட இன்றைய காலம் வரை திட்டு திடுக்கென்றால் பொதுவெளியில் பெண்களை மான பங்கப்படுத்துவது, துயிலுரிவது, பாலியல் வல்லாங்கு செய்து கொலை புரிவது போன்ற ஆண்மையற்ற இழிச்செயல்கள் தொடர்ந்து கொண்டேயிருப்பது பகுத்தறிவுள்ள ஒவ்வொரு ஆடவனையும் வெட்கித் தலை குனியச் செய்கிறது. அவகேட்டுக்கு ஆளான ஒவ்வொரு தாய்க்குலத்தின் முன் ஆற்றுவது ஒன்றுமில்லாத கையாலாகாத நமது இருப்பு ஒரு பெரிய கேள்விக்குறி? அச்சுறுத்தல்கள், வன்முறைகள், அத்துமீறல்கள் கண்டிக்கத்தக்கவை மட்டுமல்ல நிபந்தனையின்றித் தண்டிக்கத்தக்கவையும் கூட.

---

படிக்கட்டுகளில் உறைந்திருக்கும்  குருதிக்கறை, குடிக்கும்  குடிநீர்க்  குவளையில் மூத்திரம், பொது நீர்த்தொட்டியில்  கரைக்கப்பட்ட மலம்  இவை எல்லாம் மனிதச்  சிறுமைகளின்  உச்சம். சாதிய  வெறிக்கு வேறேதும்  சாயங்கள் பூசாமல், வாக்கு வங்கி  அரசியல் செய்யத்  தலைப்படாமல் நீதி ஒன்றை மாத்திரமே கருதி  வருத்தங்கண்ட மக்களுக்கு  தடங்கல்கள்  ஏதுமின்றி அதை வழங்கவேண்டியது முதல்வரின் தலையாயக் கடமை.

---

நூறு நாட்கள் ஏரி வேலைக்காரர்கள் கிராமப் புறங்களில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாருதல், ஒழுங்கைகளை நிலை திருத்தி செப்பம் செய்தல் போன்ற பணிகளைச் செய்து வருகிறார்கள். அத்தோடு அவர்கள் உழக்குடியினருடன் சேர்ந்து விளை  நிலங்களைத் திருத்துதல், விதைத்தல், பயிரிடுதல், களையெடுத்தல், அறுவடை என எல்லா உழவர் பணிகளிலும் நிபந்தனைகளேதுமின்றி ஈடுபடுத்தப்பட வேண்டும்.

காலத்தில் வேண்டிய உதவி பணியாட்கள் இன்றி முழுமையான விவசாயம் செய்ய வழியின்றித் தவிக்கும் உழவர்களுக்கு இது உதவியாக இருக்கும். கண் முன்னர் விவசாயம் நசிந்து, அருகி, மறைந்து விடாதபடிக்கு காக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நுகர்வோராகிய நமக்கு மெத்த உண்டு.

சூழியல், நீராதாரம் குறித்துச் சிந்திக்கிற யாவரும் அதே முக்கியத்துவத்துடன் உழவுதொழில் மற்றும் அது சார்ந்த உபதொழில்கள் நசிவுற்றுவிடாமல் மீட்டு எடுக்கச் சிந்திப்பது அவசியம். உற்றுழி உதவ உழவர்களுடன் இணைந்து நிற்கவேண்டியது நமது இன்றியமையாத கடப்பாடு ஆகும்.

சூப்பர் மார்கெட்டுகள், மெகா மால்களில் பாடம் செய்து பொதிகளில் வைத்து நிறை விலைக்கு விற்கும் பண்டத்தைப் பகுமானத்திற்கு வாங்கிப் பாவிப்பதற்குப் பதிலாக உழக்குடியினர் விளைவிக்கும் சிறுதானியங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அவர்களாகச் சந்தைப்படுத்தும் எளிய சந்தைகளில் நேரிடையாக அவர்களிடம் வாங்கிப் பாவிக்கும் வழக்கத்தைச் சிரத்தையுடன் நாம் மேற்கொள்ள வேண்டும்.

---

எழுதுவது வாசிப்பது தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்கிறார்கள் நம் இலக்கிய கர்த்தாக்கள். இப்போது அவர்கள் வேண்டி விரும்பி முண்டியடித்து மண்டி போட்டுச் செய்யும் பிரதான வேலை விளம்பரங்கள் செய்வது. திரள் கண்ட பக்கமெல்லாம் கொண்டை ஹார்ன் கட்டி தொண்டை வரளக் கத்துகிறார்கள். தரமுள்ள பொருளுக்குத்தான் விளம்பரம் தகுதி. தரங்கெட்டவற்றை விளம்பரஞ் செய்வது மல்லாந்து படுத்து மார் மீது எச்சில் உமிழும் மடமையே அன்றி வேறென்ன?

---

பத்திருபது வருடங்கள் இருக்கும் நிலை கெடாமல் ஓரிடத்தில் இருந்து வாட்டமாய்ப் பிட்டத்தை வைத்துத் தேய்க்கச் சிலாக்கியமான சர்க்கார் உத்தியோகம் போன்றதில்லை இலக்கியத் தளத்தில் களமாடுவது. அங்ஙனமே விருந்தாடி கேளிக்கைக்கு மாத்திரம் வந்து போகிற சமாச்சாரமுமில்லை இலக்கியம் புழங்குவது.

புதியன சிந்தித்தல், இலக்கிய மேம்பாடு, முன்னேற்றம், படைப்பு முனைப்பு, அடுத்தக்கட்ட நகர்வு, சோதனை முயற்சி, சொல் காமுறுதல், ஊடாடுவது, உரையாடுவது, விமரிசிப்பது, புதிய போக்குகள் சமைப்பது, இளையவர்தம் படைப்புகளை மதிப்பீடு செய்வது, ஏனைய பிற மொழி/ துறை புழக்கம் பரிவர்த்தனை என்றெல்லாம் ஆழ அகல கால் வைக்கவேண்டியிருக்கிறது.

பதினெட்டு வருடமாக ஒரு ஆகிருதி அவர் பாட்டுக்கு அவர் எழுதிக்கொண்டிருக்கிறார் என்று ஆலாபனை செய்கிறார்கள் அவரது அடிப்பொடிகள். நம்ம பாட்டுக்கு நாம எழுதினா அது நம்ம சொந்த டைரியாகத்தான் இருக்கமுடியும்.

எதனுடனும் இடையீடு செய்யவொண்ணாத அந்த இழிநிலை இலக்கியத்தில் இல்லை. தானே பேசி தானே சிரிப்பது பரிபக்குவம். இங்கே குப்பை போடும் எந்தக் கொம்பனுக்கும் அந்தக் கொடுப்பினை கிடையாது.

---

கோடம்பாக்கத்திற்கென்றே பிரத்தியேகமான குணக்  கேடுகள் பல உண்டு. அவையாவன ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்குவது, அழுக்கைத் திரட்டிப் புழுக்கையாக்குவது, புழுக்கையைப் பொன்னாக்குவது, செத்தையைத் தூக்கி மெத்தையில் வைப்பது...

பொருண்மையில்லாத ஒன்றை கூட்டாகச் சேர்ந்து வெட்டி, ஒட்டி மகத்துவமானதாக்கி விற்றுப் பிழைப்பது வியாபாரமாகவே இருந்துவிட்டு போகட்டும். அதற்கென்றே ஒரு நெறி கண்டவர்கள் நம் தமிழர்கள். அறமெனப்பட்டதே இக வாழ்க்கை என்றானவன். நடிகனுக்கு இருநூறு கோடி சம்பளமாம் ஒரு படத்தில் சமுட்டிப் போட. இட்டுமுட்டு முட்டுவழிக்குப் போகப் பட்ட பாட்டுக்குத் தக்கன கூலிதான் தக்கும். விற்கிறதே, விலை போகிறதே என்று எப்படியும் விற்று முதலாக்கலாமா? ஒன்றுக்கு பத்து லாபமா? யாருடைய பணம் அது? ஒரு நடிகனை மானசீகமாக உறவு கொண்டாடி, வியர்வைச் சிந்தி உழைப்பால் சம்பாதித்த பணத்தைக் கொட்டிக் கொடுத்து அவனை வாழவைக்கிற ரசிகப்பெரு மக்களின் பணமல்லவா அது. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைப்பவன், உறவாளியின் உதிரங் குடிப்பவன், பிள்ளைப்பாலில் குறியைத் தோய்ப்பவன் எப்படி அவனுக்கான தலைவனாக இருக்கமுடியும்? இப்படிப்பட்டவர்களையெல்லாம் இனங்கண்டு ஒதுக்க வேண்டும். அன்றேல் மதிகேட்டுக்கு உற்ற மருந்து அன்றுமில்லை இன்றுமில்லை என்றுமே இல்லை.

---

மொழியும் கலையும் புழங்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். தமிழ் நாட்டார் நிகழ்கலை கலைஞர்களுக்கு (பொம்மலாட்டம், தோற்பாவை நிழற்கூத்து, தெருக்கூத்து) நிகழ்வுகள் வழி வருமானம் பெற களரி அறக்கட்டளை நடத்தும் தொடர் இணைய நேரலை (FB LIVE) நிகழ்வுகளுக்குத் தங்களை அன்போடு வரவேற்கிறோம். தமிழ் கலையிலக்கிய அமைப்புகள்/ உணர்வாளர்கள் அவை /அவர்கள் நடத்தக்கூடிய விழாக்களில் எங்களுக்கு நிகழ்வு வாய்ப்பு வழங்கியோ (இணைய நேரலை - FB LIVE) அல்லது களரி அறக்கட்டளை நடத்தும் நிகழ்வு களுக்கு இயன்ற நிதியைக் கொடையாக வழங்கியோ தொடர் நிகழ்வுகள் இடையறாது நடக்க உதவ வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

இவண்

ஹரிகிருஷ்ணன்

தலைவாசல்

அன்புடையீர் வணக்கம்

சதீஷ்குமார் சீனிவாசன் அவர்களுக்கும் எனக்குமிடையே ஒரு பஞ்சாயத்துமில்லை. அவருக்கு நான் எவ்விதமான பாலியல் வல்லாங்கும் செய்யவில்லை. பால் புதுமையினர் குறித்த ஓர் உரையாடல், வலுத்த வாக்குவாதமாகி அதன் உக்கிரம் தாளாது, சதீஷ் இரண்டாயிரத்துப் பத்தொன்பதில் முகநூல் பதிவொன்றை எழுதி இருந்தார். மன உளைச்சலில் நிதானம் தப்பி எழுதிய பதிவென்று அவரே பின்பதை அழித்தார். மனம் வருந்தி அவர் அனுப்பிய முகநூல் குறுஞ்செய்தியை இங்கே இணைப்பது நாகரீகமாகாது என்பதால் தவிர்க்கிறேன். அந்த முகநூல் கணக்கும் இப்போது புழக்கத்தில் இல்லை.

இரண்டாயிரத்து இருபத்தொன்று சென்னை புத்தகண்காட்சியில் நேர்கண்டபோது அவரும் நானும் பரஸ்பரம் உரையாடிக் கொண்டோம். அத்துடன் பிரச்சினை முடிந்தது. நிற்க. நீதிநாயகம் காயத்திரி அம்மாள் பட்டணக்கரையில் வசிப்பவர். படித்தவர், பண்புள்ளவர், ஹிங்கிதம் தெரிந்தவர். இளைத்தவர்கள் - சளைத்தவர்கள் ஏழைகள் - பாழைகள், ஏப்பை - சாப்பைகள், ஏதிலிகளுக்கு ஒரு துன்பம் துயரமென்றால் அவர் மடி சுரக்கும் கருணாமிர்தத்தை அந்த இந்து மகா சமுத்திரமும் கொள்ளாது.

இப்படியாக இருக்கத்தொட்டுத்தான் புழக்கத்தில் இல்லாத முகநூல் கணக்கில் இருந்து நான்கு வருடங்களுக்கு முன்பே எழுதியவரால் அழிக்கப்பட்ட பதிவை கள்ளத்தனமாக எடுத்து வைத்திருந்து ஒரு முனைவர்ப் பட்ட ஆய்வாளர் பாலியல் சுரண்டல்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும்போது அதன் விசையைத் திசை திருப்பும் விதமாக அப்பதிவை இடைச்செருகியதுடன் அன்றி வருவோர், போவோர், வம்பாடிகள் யாவற்றைப் பேர்களுக்கும் அதன் இணையச் சுட்டியைப் பகிர்ந்து களிப்பாடி அடங்கியிருக்கிறார்.

அம்மையார் குசு அமிழ்தவஸ்து என்றேங்கி மயங்கிய நமது யோக்கிய சிரோன்மணிகள் தங்கள் புஜ பல பராக்கிரமங்களை (வெகு சௌகரியமாக, வெகு சாமார்த்தியமாக) முகநூல் பக்கங்களில் ஏகத்துக்கும் காட்டி வசையாகப் பெய்து வைத்திருக்கிறார்கள். நரை முற்றியும் ஆராயாது கெட்ட முறை செய்யும் முந்திரிக்கொட்டைகளுக்கு நான் சொல்லிக்கொள்வது...

ஒருவர் எழுதிய முகநூல் பதிவை அவரே அழித்துவிட்ட பின்பு அவரது அனுமதியின்றி அதைக் கண்டவர் எடுத்து பாவிக்கலாமா? முகநூல் பதிவு ஒன்றை அதன் உண்மைத்தன்மையைச் சரி பார்க்காது முற்றான புகாராகக் கொள்ளலாமா ? முகநூல் நடமாடும் நீதிமன்றமா? கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். தீர விசாரிக்காமல் ஒருநிமிட கால அவகாசத்தில் நீதி வேண்டி உங்களிடம் மண்டியிட்டது யார் நீதிமான்களே?

காயத்திரி கார்த்திக் அம்மையார் அவர்கள் சமூகத்திற்கு… எனது இழிந்த செயலைக் கண்டு பொறுக்கமாட்டாது வெகுண்டு முகநூலில் என்னைப் பிளாக் செய்த நீதிநாயகமே! பிறகெதற்கு மானம் ஈனம் இன்றி எனது விவகாரத்தில் தலையிடுகிறீர்கள்? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு... என்னைக் குறித்தோ எனது செயல்பாடுகள் குறித்தோ மறுமுறை எங்காவது ஒரு சொல்... ஒரே ஒரு சொல் அவதூறு செய்வது (அல்லது அவதூறாக வார்த்தையாடுவது) தெரிந்தால் உங்கள் மீது சட்டப்பிரகாரமான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்... அன்றியும் இந்த இழிசெயலைத் தொடர்ந்து செய்வீர்கள் என்றால் அதனை அடுத்து நான் புழங்கும் எனது சொல்லில் மரியாதை இருக்காது நான் மேற்கொள்ளும் நடத்தையில் பண்பு இருக்காது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு சொல் மானிடர் உத்தமபுத்திரர் சுயமோகச் செயமோகன் அவர்கள் சந்நிதானத்திற்கு... நான் செய்த நிதி மோசடி குறித்துத் தங்களிடம் பிராது கொடுத்த பெயரில்லாத பிரஹஸ்பதி யார்? பிரபஞ்சத்தின் ஒரேயொரு அறிவாளி, உன்னதக் கவிச்சிங்கம் உங்களுக்குத் தெரியாதா அய்யா வழக்காடு மன்றம் செல்லும் வழி? பொருளைத் தொலைத்தவனை அங்குப் போகும்படிக்கு அறிவுரைக்காமல் தங்கள் வலைப்பக்கத்தில் வழி வந்தமாய் வாய்ப்பந்தல் (காசில்லாத சேவை) போட்டுக்கொண்டிருந்தால் இழந்தவனுக்கு நிதி/ நீதி மீளக் கிடைக்குமா அறத்தெய்வமே சுவாமி? கொக்கு அறியாத குளம் உண்டா? தாங்கள் செய்யாத மோசடியா அறக்கடவுளே! பிராயத்துப் பிள்ளைகளை, அவர்களின் சிந்தனைப்போக்கை ஒருமுகமாக முடக்கி உங்கள் விளம்பரப் பிரலாபங்களை மட்டுமே காட்சிப்படுத்தும் பதாகைகளாக ஆக்கி வைத்திருக்கிறீர்களே இது மோசடியில்லையா?

பொறுக்கித் தின்பவைகளுக்கு மூக்கைத் தரித்து, இடுப்பையும் உடைத்து உரல் குழிகளையே கைலாசம் என்றாக்கி வைத்திருக்கிறீர்களே அறிந்தும் அறியாத எம் சிவமணியே இது மோசடியில்லையா? கையுழைப்பில் தேடிய பெரும் பொருளைக்கொண்டா தாங்கள் அறஞ் செய்கிறீர்கள்? ஊரெல்லாம் உண்டி குலுக்கித்தானே உங்கள் பாடும் விடிகிறது? கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் உங்கள் பரோபகாரச் சிந்தைக்கு உதிரிகளைக் கண்டால் இளக்காரம் விளக்காக எரிகிறது. சுதாகர் கதக்கின் கைம்மண்ணுக்கோ / கண்மணி குணசேகரனின் புள்ளிப் பெட்டைக்கோ / அழகிய பெரியவனின் நெரிக்கட்டுக்கோ / ஆதவன் தீட்சண்யாவின் நமப்புக்கோ /குமாரசெல்வாவின் உக்கிலுவுக்கோ /எழில் வரதனின் ரதிப்பெண்கள் திரியும் அங்காடித் தெருவுக்கோ ஈடானது இல்லை உங்கள் எழுத்து, பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவொன்று அவ்வளவுதான்.

தலைத் தடவி மூளை உறிஞ்சப்பட்ட சுயமில்லாத மந்தைக் கூட்டத்திற்கு உகந்தபடி அவர்கள் மேவும் சந்தைக்குத் தக்க எழுத்தை உற்பத்தி செய்து விற்கும் வியாபாரி அவர்களே! எச்சரிக்கிறேன், இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள். சுயாதீனமாகச் செயலாற்றும் எளியவர்களை, அவர்கள் செயல்களை, உணர்வுகளை இழித்துப் பழிப்பது, ஏகடியம் பண்ணுவது, வகைத் தொகை அறியாது வலைப்பக்கத்தில் நீதிபரிபாலனம் செய்வது போலான மலிவான செயல்களை…

இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது பாம்புக்கு ராசா மூங்கத்தடி.

------

வர வர மாமியார் கழுதைப் போலானார் என்றொரு சொலவடை தமிழ் நாட்டில் வழக்கத்தில் உண்டு. கருதி அரசுக் கட்டிலில் அமர்த்தப்பெற்றவர்கள் ஆரம்பத்திலே நம்பிக்கையைத் தரத்தான் செய்தார்கள் வாஸ்தவம்தான். திட்டக்குழுவிலே துறைசார் அறிவாளுமைகள் இடம் பெறச் செய்ததுமொரு நல்ல முன்னெடுப்பு. போகப் போகச் சிக்கல்கள் களையப்படாமல், குறைகள் தீர்க்கப்படாமல் பூசி மெழுகுதல், தப்பை வைத்துக் கட்டுதல் போன்ற தந்திர உபாயங்கள் மேற்கொள்ளப்பட்டு அவை இப்போது கைகண்ட மருத்துவமாய் நடைமுறைச் செல்நெறிகளாகிவிட்டன.

ஒத்தூதிகளை, துதிபாடிகளை, உடன் பிறப்புகளை, கட்சி அபிமானிகளை, வாரிசுகளை அரவணைத்து ஆலிங்கனம் செய்து அதிகாரத்தை, வருமானத்தைப் பங்கீடு செய்து காபந்து பண்ணுவது கிடக்கட்டும். ஆட்சி நாயகர்களை அம்போவென்று நடுத்தெருவில் விடலாமா?  சீர்கெட்ட விவசாயிகளின் நிலை மேலும் அவலத்திற்குள்ளாகிவிட்டிருக்கிறது. வருங்காலம் பிள்ளைகள் கையில். படித்த பட்டதாரிகளுக்கு அரசு தேர்வுகள் வழி கிடைத்துக்கொண்டிருந்த வேலை வாய்ப்புகள் இன்று அருகி மறைந்து வருவதைப் பார்க்கமுடிகிறது. 

கண்துடைப்புக்காக நடத்தப்பட்ட தேர்வுகள் நான்கில் மூன்று பங்கு குறைந்துவிட்டது. வேலைவாய்ப்பு, விவசாயம், கல்வி, மருத்துவம் போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திச் செய்வதில் முறைகேடுகள், சீர்கேடுகள், துஷ்பிரயோகங்களை முற்றிலும் தவிர்க்க துரித நடவடிக்கைகளை அரசு உடன் மேற்கொள்ள வேண்டும். விளம்பரங்களில் தோன்றுதல், சமூக ஊடகங்களில் காட்சிகொடுத்து சாதனைப்பட்டியல் வாசிப்பது, வெத்துவேட்டுப்பிரகடனங்கள் மற்றும் பழம்பெருமை திரைவசனங்கள் பேசுவது போன்ற மலினமான வழக்கொழிந்த யுக்திகளை விடுத்து நேரிடையாகக் களத்தில் இறங்கி மக்களுக்குகந்த செயல்களைச் செய்வதே சாலச் சிறந்தது ஈரோட்டில் இடைத்தேர்தல் முடிந்த கையோடு திருவாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களுக்கு மாரடைப்பு. செய்த செலவெல்லாம் வீணாகிவிடும் என்று சூழலே பரபரத்துக்கொண்டிருக்கிறது. வெட்கக்கேடு.

ஆட்சியாளர்களை வழித்துக்கொண்டு சிரிப்பது, கழுவி கண் மேல் ஊற்றுவது ஒருபக்கம் கிடக்கட்டும். காசு வாங்காமல் ஓட்டுப் போட நம்மால் ஆகாதா. ஆண்டி குறிச் சுவைக்கச் சொன்னால் தாதனுக்கு எங்கே போயிற்று புத்தி? இதிலே கொங்கு பெல்ட் தேர்தலுக்குத் தங்கம் விநியோகம், தலைக்குப் பத்தாயிரம், பதினைந்தாயிரம் என்ற அங்கலாய்ப்புகள் வேறு. பகுத்தறிவு உள்ளவன் செய்கிற வேலையா நாம் செய்துகொண்டிருப்பது? தாரமங்கலத்து சட்டமன்ற தேர்தலில் ஜெயம் பெற்ற அபேட்சகர் அருமை அண்ணார் திருமிகு அர்ச்சுனன் அவர்கள் நன்றி நவில ஓர்முறை எங்களூருக்கு வந்தார்.

வந்தவருக்குத் துண்டுபோர்த்தி, மாலை சார்த்தி, சோடா உடைத்து கொடுத்து அனுப்பியிருந்தால் பாவம் அவர் பாட்டுக்கு வந்தவழி போயிருப்பார். எங்களூர் திருவாளத்தானொருவன் ஓட்டு போட்டச் சனத்துக்கு ரோடு போடறது, ஆத்து தண்ணி டேங்க் கட்டிக்கொடுக்கறது மாதர ஏதாவதொரு உபகாரஞ் செய்யுங்க சாமி என்றதுதான் மாயம்… கடன் வாங்கி, உடன் வாங்கி, எம்பொண்டாட்டி தாலி அடகு வெச்சி இருபத்தி அஞ்சு லட்சம் உரூபா ஏற்கனவே வாக்கரிசி போட்டுட்டேனே! இன்னும் என்னடா உங்களுக்கு எம்மயிர புடுங்கி அடிக்கணும்னு ஒரு செம கேள்வி கேட்டாரு. மனசுக்கு நெம்பக் குளுமையா இருந்தது அன்னைக்கு. இங்ஙனம் அரசியல் ஊழல்கள், சமூகச் சீர்கேடுகள், சாதி மதத் தீண்டாமைகள், உழைப்புச் சுரண்டல்கள், அறிவுக்கொள்ளைகள், தனிமனிதக் கொடுமைகள் எதுவென்றபோதிலும், அரசு எந்திரம், ஆட்சியாளர்கள், எதிர்க் கட்சியினர் போன்றோரைக் குற்றம் பாராட்டுகின்ற அதே காலை ஆய்ந்தோய்ந்தோமானால் கருததக்க வகிபாகம் அதில் நமக்கும் உண்டென்பதை உணரமுடியும். சமரசங்கள், சாக்குப்போக்குகள் கூறி நமது பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல் முதலில் நமதளவில் உள்ள பிழைகளைக் தாமதங்கள் இன்றிக்களைவதே தார்மீக அறமாகும்.

----

எழுபது எண்பதுகளில் ஈழத்தில் எண்ணிறந்த குழுக்கள் இருந்தன. அவை ஈழத் தமிழ்மக்கள் விடுதலையை முன்னெடுத்துப் போராடின. இன்று அளவும் அந்தப் போராளிகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். 

போலவே நமது தமிழ் நாட்டில் அதே காலகட்டத்தில் எழுத்து, நடை, நிறப்பிரிகை, கசடதபற, படிகள், மீட்சி போன்ற இதழ்களோடு மேலும் பல சிற்றிதழ்கள் சார்ந்து பல தோழர்கள் தீவிர இலக்கியம், நுண்கலைகள், புதிய பரிசோதனை முயற்சிகள், புதிய மொழியாக்கம், இளையவர்களுக்கான தளம், மனத்தடை இல்லாத புதிய எழுத்துவகைமைகள், உலக அளவிலான கலை இலக்கியப் போக்குகள், சினிமா உள்ளிட்ட மாற்றுக் கலை வடிவங்கள், மாற்றுத்துறை அறிவு வளர்ச்சி என்று தங்கள் உடல் பொருள் ஆவி ஈந்து மாறாத அர்ப்பணிப்புணர்வோடு இலக்கிய மேம்பாட்டுக்கு உழைத்தனர். சுருங்கக் கூறின் அவர்கள் தங்களைத் தின்னக் கொடுத்துக் கலை இலக்கியத்திற்கு உயிரூட்டினார்கள்.

இப்போதும் இருக்கின்றன பல இலக்கியக் குழுக்கள், அவை தங்களது தன்னகங்காரத் தீ எரிய இலக்கியத்தை நெய்யாய் ஊற்றுகின்றன. மேல் மேச்சலும், மித மிஞ்சின ஒப்பனையும், கண் கூசும் வெளிச்சமும், காதடைக்கும் விளம்பர இரைச்சலும் இலக்கிய இலட்சணமில்லை. 

இதழ்த் தரமென்பது ஓர் எடிட்டரின் பொறுப்புணர்வால் மாத்திரம் விளைவது அல்ல. படைப்பாளிகளுக்கும் ஏன் வாசகர்களுக்கும் கூட அதில் பாத்தியமிருக்கிறது. ஆக்கிப் படைத்திருக்கும் அவ்வளவும் பாகுபாடு இன்றி வெளியாகும் இதழ்களத்தனைக்கும் அனுப்பப் பெறல் வேண்டும். 

விடைப்பது, பிணங்குவது, வேரோடுப் பிடுங்கிக்கொள்வது, நிறைக்குடம் தண்ணீர் தலையோடு வார்த்துக்கொண்டு கோவிலில் முறைப்பாடு வைப்பது, மிளகாய் அரைத்துப் பூசுவது, மோடி வைப்பது, வசியம் பண்ணுவது, ஆடுவது, பாடுவது, ஓடுவது, ஒளிவது, அங்குமிங்கும் தாண்டிக்குதிப்பது, அழுவது, புறத்தே சிரிப்பது, கைக் கொடுத்துக் கொண்டே கடையாணி கழற்றுவது, கொண்டான் கொடுத்தான் உறவு கொண்டாடுவது போன்ற உள்ளடி வேலைத்தனங்களையெல்லாம் அவரவர் அந்தரங்கத்திலே வைத்துக்கொள்ளவேண்டும். இலக்கியத் தளத்திலே இலக்கியம் மட்டும்தான் முதற்பொருளும் கருப்பொருளுமாக இருக்கவேண்டும்.

இலக்கியத்தை முன்வைத்து அங்கே காரியம் பார்ப்பது மட்டுமல்ல படைப்பதையும், நுகர்வதையும் பொதுவில் வைக்கிறதை ஒரு பண்பாக வளர்த்துக்கொள்ளவேண்டும். அணுக்கமான ஆதர்ச புருஷர்களிடம் இலக்கியம் உசாவுகிற வேளையில் வாசகர்கள் வெறுமே ஊம் போட்டுக்கொண்டிருக்காமல், ஊடகங்கள் பால் அவர்கள் காட்டும் பாரபட்சங்கள் குறித்து, சுரணைக்கெட்டிருப்பதைக் குறித்துக் கேள்விகள் எழுப்பி அவரவர் கடமைகளைச் செய்ய வலியுறுத்தவேண்டும். (காசுக் கொடுத்துப் புத்தகம் வாங்கிப் படிக்கிறவர் சொன்னால் எழுத்தாளன் கேட்டுக் கொள்ளவேண்டும்.) இந்நிலையில் ஊக்கமும் உத்வேகமும் உள்ள இளையவர்கள் படைப்பாளிகளாவது இன்றியமையாதது. தவிர மொழியும் கலையும் புழங்கப்பட்டுக் கொண்டேயிருக்கவேண்டும். தீவிர எழுத்து முயற்சி, இலக்கிய வாசிப்பு, மனம் திறந்த உரையாடல் ஆகியனவற்றுக்கான களமாக மணல்வீடு தன் பயணத்தைத் தொடர்கிறது உணர்வாளர்களின் பேராதரவோடு…

பதிலளியுங்கள், 
திரும்பப் பேசுங்கள்,
உரையாடுவோம் தொடர்ந்து...
இவண் 
ஹரிகிருஷ்ணன்

தலைவாசல்

அன்புடையீர் வணக்கம்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி  நிர்வாகம் பலி  கொண்ட  உயிர்கள் இத்தோடு  ஏழு  என்கிறதொரு செய்தி.

பள்ளிக்கட்டணம் கட்டாத பிழைக்கு இரண்டாயிரத்து ஆறில்  இதே பள்ளி பதினொரு வயதே  நிரம்பிய  மாணவனைக் கொன்ற வன்கொடுமைக்கு எதிராக இடதுசாரி தோழர்கள்  போராடியதை    தமிழகமே  அறியும்.

நெறிகெட்ட நீசர்களிடம்  நீதி  எதிர்பார்த்து சட்டத்துறையும்  நீதித்துறையும் பாய்கிற மாட்டின் முன்பு  வேதம் படித்துக்கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில்  இந்த விஷயத்தில்  ஆதாயந்தேடி   அரசியல்  பண்ணி  விளையாடாமல் அதிகாரத்திலிருப்போரும், சாமானியர்களும், ஊடகங்களும்   சமூக நீதி  விழைவோர்  யாவரும் பாதிக்கப்பட்ட  குடும்பத்தின் துயர்  துடைக்கும்  அருவினை ஆற்றவேண்டும்.


ஊக்கமும் உயிர்ப்பும் அற்ற படைப்புகளை ஒரு பிராணாவஸ்தையோடு மணல்வீடு இதழிலோ மற்றும் பிற அதன் வெளியீடுகளிலோ இனி பிரசுரிப்பது இல்லையென்று முடிவெடுத்திருக்கிறோம்.

இலக்கியம் கருதுகிற பேர்களிங்கு எவருமிலர். சூழ இருக்கிற தட்டோட்டக்காரர்களோடு ஓடுவதாக இல்லை.


எதிர் வினையல்ல வினையே ஆற்றவொண்ணாத பேடுகள் நிறைந்த தளமாகிவிட்டது நமது இலக்கிய களம்.

இங்கு மலிந்திருப்பவர்கள் பெரு வயிறு கொண்டதை அறியாமல் சீமந்தம் வைப்பவர்களும் காற்படி அரிசி அன்னதானத்திற்கு விடிய விடிய கொட்டுமுழக்கு போடுபவர்களுந்தான்.

படைப்பை பொதுவில் வைக்கும் திராணி இல்லாத கோழைகள் இன்றைய பெருமை பீற்றல் கலயங்கள்.

கூடாரம் தாண்டி ஒரு படைப்பு, ஒரு பிரதி வெளியில் செல்வதில்லை அந்தரங்கத்தில் தங்கள் காதலிகளுக்கு அல்வா கொடுப்பதைப்போல இவர்கள் ஓனர்களுக்கு மாத்திரம்தான் கற்பு நெறி தவறாது முந்தி விரிக்கிறார்கள்.

என் படைப்பு எனது உரிமை என்றவர்கள் கொக்கரித்தாலும் வாசகன் முன் பல்லிளிக்கிறது அவர்களது பாரபட்சம் பாகுபாடு. கருதாத பேர்களிடம் இலக்கியாண்மை எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நாயமல்ல.


மக்கள் நலம் பேணாது சொந்த ஆதாயங்களுக்காக வரம் கொடுத்தவன் தலையிலேயே கையை வைப்பது போல இன்னல் விளைவிப்பது அன்றி வேறு ஏதும் அவர்களுக்குச் செய்யாத, செய்யவே விழையாத கேடு கெட்ட அரசியல்வாதிகள், அவர்தம் சந்தர்ப்பவாத அரசியல் செயல் நடவடிக்கைகளுக்கு எதிராக அறிவு தளத்தில் இயங்குவோர் அணிதிரண்டுப் போராடுவது எவ்வளவு இன்றியமையாததோ அதே அளவு இன்றியமையாதது தங்கள் TRB மதிப்பீடுகளுக்காக மிகவும் மட்டரகமான, கீழ்மையான பணிகளை செய்யும் வணிக ஊடகங்கள் மற்றும் அவற்றில் அன்றாடம் குப்பைப் போடும் டம்மி பீஸ்களுக்கு பாடம் புகட்டுவது.

முகநூல் இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பயில்வான் ரங்கநாதன் என்பார் அவ்வப்போது காட்சிக் கொடுத்து ஏதாவது உளறிக் கொட்டி கிளறி மூடுவார்.

பாட்டாளிகளின் பாடு கஷ்டங்களையேதோ அவர் அங்கலாய்க்கிறார் என்று வாளாவிருந்தேன்.

அப்புறம் பார்த்தால் மனுஷன் அந்த நடிகை இந்த நடிகருக்கு இத்தனாவது பொண்டாட்டி, இந்த நடிகர் அந்த நடிகைக்கு இத்தனாவது புருஷன் என்று துல்லியமான கணக்கு வழக்குகளை அள்ளி விட்டுக்கொண்டிருக்கிறார்.

இந்தக் கண்றாவிகளை காணச் சகியாமல் நடிகர் பொன்வண்ணன் அவர்களிடம் என்ன தோழர் இப்படி மல்லாந்து படுத்து எச்சில் உமிழ்கிறாரே மனுஷனுக்கு கொஞ்சங்கூட ஈனப்பானம் இல்லையே என்று ஒரு பிராதாக சொன்னபோது இதையே தொழுவாடாக செய்து அவர் வயிறு வளர்க்கிறாரென்றும் இந்த மாதிரி கேவலமான விஷயங்களை வலையேற்ற யூ-ட்யூப்காரர்கள் வாரி கொடுக்கிறார்கள் என்றும் பதிலளித்தார்.

வருமானம் வருகிறதென்று ஒருவர் வகை தொகை இன்றி தனது சகபாடிகளின் அந்தரங்கங்களைச் சபையில் அரங்கேற்றுவது அதையொரு அறிவு விழிப்பில்லாத மந்தை விந்தையாக வேடிக்கைப் பார்ப்பது, அதில் ஒரு சமூக ஊடகம் அத்துமீறுகிறோம் என்ற பிரக்ஞை இல்லாமல் பணம் பண்ணுவது...

சதகோடி மக்கள் புழங்கும் ஒருவெளி தனக்கென்று ஒரு தணிக்கை முறைமையை செயல்படுத்தாமல் இருப்பது எத்துணை பொறுப்பற்றதனம்.

நல்லவேளை  திருமதி  ஸ்ரீலேகா  அம்மையார்  கடற்கரையில்  வைத்து  பயில்வான்   ரங்கநாதன் அவர்களை  செருப்பு  பிஞ்சிடும்  என்று  கனிந்த தொனியில்  எச்சரித்து  என்  மனப்புண்ணுக்கு  மருந்திட்டார். இதுவேளை  இது சமயம் அவர்தம் வீரம் போற்றுவோம்.


இங்கேயொரு கட்சி அநியாயத்துக்கு இட சண்டை, வாரிசுச் சண்டை, அதிகாரச் சண்டையிட்டு மண்டை உடைத்துக்கொண்டிருக்கிறது.

சற்றேனும் வெட்கமில்லாமல் அடிப்பட்டுத் துணி பொறுக்குகிறார்கள்.

காரியத்திற்கு காலைப் பிடிப்பதும் காரியம் மிஞ்சினால் கழுத்தைப் பிடிப்பதுமான இழிபிறப்புகளை காசை வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டு நம்மை ஆளச் சொல்லி அவசரம் அவசரமாக அரசுக்கட்டிலில் உக்கார வைத்தோம். (அறிந்தும் கெட்டோம், அறியாமலும் கெட்டோம், சொரிந்தும் புண் ஆச்சுது.)

அதன் பலா பலன்களை இப்போது சாவகாசமாக அனுபவித்து வருகிறோம்.

விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?

உரியவர்களை உரிய இடத்தில் அமர்த்தாததின் அவலம் அந்நிர்வாகத்தின் அடிமட்டம் வரை பாதகம் செய்யும்.

புதியதோர் உலகம் செய்வோம் நாவலில் நாவலாசிரியர் கோவிந்தன் அவர்கள் முன்னோடி ஈழ விடுதலை இயக்கமான பிளாட் அமைப்பின் நசிவுக்கு காரணமாக வைப்பது இதைத்தான்.

விடுதலைக்காக போராடவேண்டிய இயக்கம் ஒரு கட்டத்தில் வாய்க் கால் தகராறு, வரப்பு தகராறு, பங்காளிச்சண்டை இவற்றுக்கெல்லாம் பழி தீர்க்க பயன்படுத்தப்பட்டது.

ஆகையால் அது குறுகிய காலத்தில் பிளவுண்டு சிதறி அடையாளமில்லாமல் அழிந்து ஒழிந்தது.

லட்சிய வேட்கையுள்ள உணர்வாளர்களால் கட்டப்படாத இயக்கம், அமைப்பு, கட்சிகள் இப்படித்தான் உருப்படி இல்லாமல் போகும்.

அங்ஙனமே கம்பளியில் சோற்றைப்போட்டு விட்டு காலாகாலத்துக்கும் மசுரு மசுரு என்று நாம் அலறிப் புடைத்துக்கொண்டே இருக்கவேண்டும்.

இதழில்  படைப்புவழி  பங்களிப்பு செய்தமைக்கும், இதழ் வெளியீட்டு தாமதத்தை சமித்துக்கொண்டமைக்கும்     அனைவற்ற பேர்களுக்கும்  நெஞ்சார்ந்த நன்றி.

இவண்

மு. ஹரிகிருஷ்ணன்


தலைவாசல்

அன்புடையீர் வணக்கம்.
பேரிடருக்குப் பிறகான பெருமழை ஓர் ஊழிக்காலம் போல் வந்து சனங்களை உறுத்திவிட்டுச் சென்றிருக்கிறது. அல்லல் மேல் அல்லல்பட்டே அவர்கள் இப்பொழுது தங்கள் அன்றாடங்களுக்குத் திரும்பியிருக்கிறார்கள். கண் கெட்டாலும் ஊன்றுகோல் கிடைத்தது போல மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. நம் உழவர் பெருங்குடியினரின் போராட்டம் பெற்ற வெற்றி. ஒன்றிய அரசுக்கெதிரான நீண்ட நெடிய போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. அறப்பிடிவாதத்துடன் போராடிய நம் தோழர்களுக்கு நெஞ்சார்ந்த செவ்வணக்கம்.


உலைக்களமாக இருக்கவேண்டிய நம் இலக்கியத்தளம் விளம்பரக்காடாகி ஒன்றிரண்டு தசாப்தங்களாகிவிட்டது. என்றாலும் ஓயாது இன்னுமே அதன் ஆர்ப்பரிப்பு, இரைச்சல் நாள்பட்ட ரோகமாய்த் தொடர்கின்றது. எழுத்து வாசிப்பு என்பதெல்லாம் அவரவர் விருப்ப செயல்பாடு ஆத்ம திருப்தி.

அவதானம், விவாதம், உரையாடல், விமர்சனம், மதிப்பீடு, அங்கீகாரம் என்பவை படைப்பால் விளையும் எதிரீடுகள். வாய்த்தால் நலம் அன்றேல் அஃதொரு பெரும் பிழையன்று. அதையுணராத அறிந்தும் அறியாத சிவமணிகளாகிய நம் அண்ணாவிகள் கிடந்து அங்கலாய்ப்பதுவும் அழுது புலம் விழுந்து புரள்வதுவும் காணச் சகிக்கவில்லை. தானாகப் பழுப்பது நல்லதா இல்லை தடியால் அடித்துப் பழுக்க வைப்பதா.

உப்பிருந்த பாண்டமும் உபயமிருந்த நெஞ்சமும் தட்டியல்ல, தானே திறக்கும்.

உண்கின்ற சோற்றுக்கு உப்பைப் போட்டுத் தின்னும் உணர்த்தி உள்ளவர் எவரென்றாலும் சரி, பாவிக்கும் புழங்கும் படைப்பு வகைமை எதுவென்றபோதிலும் சரி, கண்டிப்பாய் அவை சோதிக்கும். தின்றதை நெஞ்சு அறியும். அப்படி அந்த உணக்கை கெட்டவர்கள் வந்து ஓர் எழுத்து மீது, ஒரு பிரதி மீது வெறும் வாய் வார்த்தையாடினால் உண்மையான உணர்வாளனுக்கு அது நிறைந்த அவமானமே அன்றி வேறில்லை.

நிற்க நம் சகோதரர்களின் நலம் விரும்பி சொந்த செலவில் யான் சில திட்டங்கள் செய்யலாமென்றிருக்கிறேன், அவையாவன,

முதல் கட்டமாக, மாதம் இருபதாயிரம் சம்பளத்திற்கு மும்மூன்று நபர்களை நேமிப்பது. (மூன்று பணிமுறை) ஒன்றியம், வட்டம், மாவட்டம் வாரியாக.

பிரதம பணிகள் பின்வருமாறு…

1

எழுத்து என்று ஓர் அட்சரம் நண்டு, சிண்டு, குஞ்சு, குழுவான் என எவர் உதிர்த்தாலும், காணூடகம், அச்சூடகம் என்றில்லை குமுகாய ஊடகமெது என்ற பொழுதிலும் ஷணம் பிசகாமல் சதா புகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும். முகப்புத்தகம், மேம்பாட்டுப்பக்கம், தனிப்பக்கம், விளம்பரப்பக்கம், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், புலனம் என்றவர் அவர் வினையாற்றும் தளம் ஒன்றுவிடாமல், வினாடியும் தாமதிக்காது சென்று லைக் இட வேண்டும்.

அவசியம் வாழ்த்துகள், ஆஹா ஆஹா, அற்புதம் அற்புதம், சக்கையா இருக்கேடா, பின்னீட்டீங்க, கொன்னுட்டீங்க, சூப்பர் சூப்பர், இது வேற லெவல், மரணமாஸ், செம, கெத்து, கண் திறந்தது, திவ்யதர்சனம் போன்ற ஹிதமான பதங்களைச் சொல்லி தொடர்ந்து தடவி கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். இமைப்பொழுதும் சோரலாகாது.

தினசரி, வாராந்திரி, மாதாந்திரி மற்றும் அவற்றின் இணையப் பிரசுர பருவ இதழ்களில் பிரசுரமாகும் சிறியதோ பெரியதோ அதைப்பற்றிக் காரியமில்லை. அவற்றைப் படியெடுத்து ஒரே ஒரு நபர் பாக்கியில்லாமல் சகபாடிகள் பக்கத்தில் டேக் செய்துகொண்டே இருக்கவேண்டும்.

மறக்காமல் மேற்படி பாராட்டுப் பதங்களை இட்டு நிரப்பிய வாசகர்கடிதம், பின்னூட்டச் சேவைகளை 24 x 7 நாட்களும் செய்யவேண்டும். முறை வைத்து அலைபேசி அழைப்புகள் வழி அவர்களுக்கான கவனத்தைச் சரியாகக் கொடுக்கப் பால்மாறக்கூடாது. அவர்கள் வேண்டாம் என்றுதான் கதறுவார்கள் விட்டுவிடக்கூடாது.

படைப்பாளன் உயிர்ப்புடன் பிழைத்திருக்க இன்றியமையாதது அது. அவர்தம் ஆவி நீங்கி அஸ்தியாய் கரையும் பரியந்தம், நுகர்வாளர் இறந்தாலும் அவரது வாரிசுகள் வாயிலாகக் கைங்கர்யம் தொடரவேண்டும்.

2

எழுதி எழுதி எம்மக்கள் விளைவித்த மாற்றங்கள், ஏற்றங்களுக்குத் தனிநபர்கள் புகழாரங்கள் போதவே போதாது. ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்கும் குறையாத ஹோட்டல்களில், பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக வளாகங்களில் கூட்டங்கள் போட்டு திரள் திரளான மக்கள் விண்ணதிரும் புகழாரங்களை
முழங்கிக்கொண்டே இருக்கவேண்டும்.

3

நோபல், புலிட்ஜர், புக்கர், இயல் விருது, விளக்கு விருதுபோன்ற உலகளாவிய விருதுகள் மற்றும் ஞானபீடம், சாகித்திய அகாதமி, விஷ்ணுபுரம் போன்ற உள்ளூர் விருதுகளுக்கு அவற்றின் தெரிவு குழுக்களுக்கு எ.கலைஞர்களின் எழுத்துவன்மை, நுட்ப திட்பங்கள் ஆகியவற்றை நுணுகி ஆய்ந்த சான்றுகள் மற்றும் கோடிக்கணக்கான வாசகர் ஒப்பங்களுடன் பரிந்துரைகளைச் சமர்ப்பித்துக் கொண்டே இருக்கவேண்டும்.

வருடங்களுக்கோர் முறை விருதுகள் வழங்கும் கேவலமான முறைமைகளை மாற்றி டெய்லி பேசிசில் அவை வழங்கப்படல் வேண்டும். (ஆளுமை, ஆகிருதி இவற்றைக் கருத்தில் கொண்டு அன்றாடம் மூன்று நேரங்கூட விருதுகள் வழங்கப்படலாம்) அவனி ஐம்பத்தி ஆறு தேசங்களிலும் அங்கு வழங்கும் ஆறாயிரத்து ஐநூறு மொழிகளிலும் விருதுபெற்ற பிரதி மொழிபெயர்ப்பு செய்யப்படல் வேண்டும்.

4

முக்கியப் பதிப்பகங்களான காலச்சுவடு, தமிழினி, உயிர்மை, எதிர் வெளியீடு, எழுத்து போன்ற பதிப்பக உரிமையாளர்களிடம் அன்னார்களது ஆக்கங்கள் குறித்து அவை பிரதிகளாவது குறித்து முக்கியமாக, கெட்டி அட்டை செம்பதிப்புகளாவது குறித்து நல்ல வார்த்தைகள் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.

மூப்பு அடிப்படையில் அங்கு வெளியிடப்பெறும் நூல்களுக்கு முன்னுரை, பின்னுரை, பிளர்ப் எழுத ஒப்பந்தங்கள் கட்டாயம் ஆக்கப்படவேண்டும். அதைவிடக் கட்டாயம் நன்றி நவிலும் பட்டியல்களில் படைப்பாளிகள் பெயர்கள் தொச்சமின்றி இடம் பெறச் செய்வது.

5

எழுத்தாளன் சமூகத்தின் அங்கம், ஆகையால் அவன் குடும்பத்தின் அங்கத்தினனுமாவான். குடும்பச் சடங்குச் சம்பிரதாயங்கள், காதுக்குத்து, கெடாவெட்டு, திரட்டிக் கல்யாணம், தெவம், தெவசம், வேண்டுதலை, கும்பிடிக்கைப் போன்ற வீட்டு வைபவங்கள் யாவற்றையும் அவனை முதலாக முன்நிறுத்தியே நிகழ்த்தப்படுதல்வேண்டும்.

கூச்சப்படுவான் அவன், அதை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. சாதியை மறுத்த திருமணமா இல்லை சாதியை மறுக்காத திருமணமா எந்தத் திருமணமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் நமதன்பர் பதிவேட்டில் ஒப்பமிடாமல், மங்கள நாணை தொட்டெடுத்துத் தராமல் கல்யாணம் நடக்கக்கூடாது. முகூர்த்த கால் நடுவது முதல் பிள்ளைக்குப் பேர் வைப்பது வரை அவனன்றி ஓர் அணுவும் அசையக்கூடாது.

6

நம்மாள் செத்து சிவன் பதி மாண்டு மயன் பதி ஏகிவிட்டால் தேசிய கடற்கரைகள் தோறும் நினைவாலயங்கள் கட்டுவிக்க, நகர, மாநகர, பேரூர்,
சிற்றூர், குற்றூர் பூங்காக்கள், வீதிகளுக்குப் பெயர் நாமங்கள் சூட்ட, மடங்கள், கோயில்கள், மடாலயங்கள், மசூதிகள், தேவாலயங்கள் தோறும் தேர் திருவிழாக்கள், கொடைகள், ஆராதனைகள் நடத்த, நடப்பு அரசு சிறப்புச் சட்டங்கள் கொணர உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் வேண்டும்.

அது மட்டுமல்ல பெருத்த, நலிந்த, இளைத்த எழுத்துக் கலைஞர்களுக்குக் குடிமனை, ஓய்வூதியம், வைப்புநிதி போன்ற சகாய நலத்திட்டங்கள்
ஏலவே உள்ளதுதான் என்றாலும் உடன்செயலாக்கம் பெற ஆவண செய்யவேண்டும்.

7

ஏகாங்கியாக அவனிருந்து சிருஷ்டிக்க இலவய உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சொகுசுப் பயணங்கள் அதற்கு வேண்டிய ரொக்க ரோஜனைகள் உலகெங்கும் உடன் பரிவர்த்தனைகள் செய்யும்படியான செலாவணிகள் வங்கிகளில் சேவைகளாக்கப்படவேண்டும்.

எழுத்தாளர்கள் எல்லாம் செல்லப்பிள்ளைகள் இதழாளர்களெல்லாம் எடுப்பார் கைப்பிள்ளைகளா? அவர்களது மாத்திரம் என்ன சூத்தப்பங்கா? அதிலும் இணைய இதழ்க்காரர்கள் இருக்கிறார்களே! அப்பப்பா அவர்கள் இலக்கியப் பங்களிப்பு அளப்பரியது. அவர்களாலேதான் இலக்கியம், அவர்களது மட்டும்தான் இலக்கியம்.

வாசக மடையர்களுக்கு இணைய இதழ்க்காரர்களின் அருமை பெருமைத் தெரிவதில்லை. துரோகிகள் ஒரு கண்ணுக்கு வெண்ணையும், ஒரு கண்ணுக்குச் சுண்ணாம்பும் வைக்கிறார்கள். நம் சகோதரர்களை நாம்தான் இனங்கண்டு பாராட்டவேண்டும்.

படைப்பாளியாகப்பட்டவர் தனது படைப்பு வெளியான தினத்தில் இருந்து இதழ் சுட்டியை அறிந்தவர் தெரிந்தவர் என்றில்லாது அனைத்து சீவராசிகளுக்கும் பகிர்ந்துகொண்டே இருக்கவேண்டும்.

படைப்பை வெளியிட்ட ஆசிரியருக்கு, அவரது குடும்பத்தார்களுக்கு, உற்றார், உறவினர்களுக்கு, மாமன், மைத்துனர் என்று எல்லா உறவின்முறைகளுக்கும் நன்றி கலந்த பாராட்டைச் சொல்லிக் கொண்டேயிருக்கவேண்டும் அதாவது ஒரு முறை இட்ட உளுத்த பிசுக்கோத்துக்கு ஒரு நாயாகப்பட்டது தன் ஆயுள் பரியந்தம் குழைந்து வாலை ஆட்டி ஆட்டி விசுவாசத்தைக் காண்பிக்குமே அத்தன்மைபோல.

சிறப்பு வெளியீடுகள் கொணரும் இணைய இதழ் ஆசிரியருக்குக் கூடுதல் பணி நேரம் கூடுதல் சிறப்புச் சேவைகள் தொண்டுகள். அதாவது வீதிதோறும் அவர் உருவம் வனைந்த பதாகைகள் நாட்டி, அவற்றிற்கு மூன்றுகாலப் பூஜைகள், பாலாபிஷேகம், தேனாபிஷேகம், பீராபிஷேகம், பிராந்தி அபிஷேகம், ஆராட்டல்கள், சீராட்டல்கள் என்னென்ன உண்டோ அத்தனையும் செய்தாகவேண்டும்.

முச்சந்திகள், நாற்சந்திகள், சதுக்கங்கள், ஒதுக்குப்புறங்களிலெல்லாம் அன்னாரது பெயரில் அன்னசத்திரங்கள், தண்ணீர் பந்தல்களமைத்து அல்லும் பகலும் அறுபது நாழிகையும் சேவைகள் தொடரவேண்டும். மக்கள் திரளாக உள்ள இடங்களில் எல்லாம் நின்று இலவயமாக அன்னாரது கையடக்கப் புகைப்படங்கள், அன்னாரது படம் போட்ட பயர்னைகள், அன்னாரது
புகழ்பாடும் துண்டுப் பிரசுரங்கள் ஆகியவை விநியோகம் செய்யவேண்டும்.

பிறப்புறுப்பு நீங்கலாக அங்க அவயங்கள் யாவற்றிலும் இணைய இதழாசிரியரின் திருவுருவத்தை (குறிப்பாக நெஞ்சுப் பகுதியில் கண்களுக்குப் பளிச்சென்று தெரியும்படி பெரிதாக) பச்சைக் குத்திக் கொள்ள
வேண்டும்.

மொத்தத்தில் சாவு வீட்டில் பிணமாகவும் கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும் அவர்கள் இருக்கவேண்டும்.

கடைசியாக ஒன்று, படைப்பாளர் என்பவரது ஓர் எழுத்தை தானும் வாசிக்காது ஒன்றிய அரசிலோ, மாநிலத்திலோ, ஓர் உயிர் ஜனிக்கவோ, மரிக்கவோகூடாது. மேற்சொன்ன காரியங்கள் தடைகள் ஏதுமின்றி நிலைபெற்று நடக்கும்படியான தோதான நிலையைப் பணியாளர்கள் உருவாக்கிக்கொண்டே இருக்கவேண்டும்.

ஆர்வம் உள்ளவர்கள் மணல்வீட்டு முகவரிக்கு விண்ணப்பிக்கவும். ஒத்தூதிகளுக்கும் துதிபாடிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.


வாழ்த்துகள்!

கோக் நிறுவனம் சர்வதேச அளவிலான இசைஅரங்க கச்சேரித் தொடர் ஒன்றை பதினான்கு ஆண்டுக்காலங்களாக யூடியூபில் நிகழ்த்துகிறது. எட்டாவது பருவத்தில் ஆடிப் அஸ்லம் என்றொரு இருபத்தி நான்கு வயது யுவன் அதில் பாடி இருந்தார். சர்வதேச கவனம்பெற்ற அரங்கில் பங்களிப்பு செய்த அவர் அங்கு வாய்ப்புப் பெறுகையில் அஸ்லாம் தம்கா-இ-இம்
தியாஸ் விருதுக்குச் (பாகிஸ்தான் அரசாங்கத்தின் நான்காவது-உயர்ந்த சிவிலியன் கௌரவம்) சொந்தக்காரர்.

அப்பன் கூத்தாடி ஆயி விவசாயி. அரிதாரம் பூசுகிற பிள்ளைக்கு அரிகண்டமாகயிருக்கிறது எந்திரவியல் பட்டயப் படிப்பு. மூன்று மணி கருக்கலில் வேடந்தரித்து வெளியே வந்தவன் தவசுக் கம்பமேறி கீழே இறங்கும்போது பழைய சோற்று நேரம் தாண்டிவிட்டது. (பகல் பத்துமணி) கூத்து முடிந்து கூட்டாளிகளை அவரவர் யதாஸ்தானம் கொண்டு சேர்த்து இவன் வீடு திரும்பியதும் தோட்டத்தில் பறித்த வெண்டை கொட்ட கொட்ட மூட்டையில் விழித்திருக்கும்.

வேவாரி போன் மேலே போன் போட்டு வாங்காமல் உயிரை வாங்குவார். ஈருருளியில் பாரம் ஏற்றி பறப்பான் மகன் பாலக்கோடு. வந்து சற்றுக் கண்
அயரலாம் என்றால் சம்சாரியின் வாசலில் வேலைகள் வரிசைக் கட்டி நிற்கும்.

குச்சிக்கிழங்கு காட்டுக்குத் தண்ணீர் பாய்ச்ச, மாட்டுக்குத் தட்டறுக்க, மடி கனத்த ஆவின் பால் கறக்க, அருக்காணி தங்காளுக்குக் கோழி பொசுக்க.
அந்திப்பொழுது அடி சாயுமுன்னே முந்தைய நாள் கூத்தில் திகைந்திருந்த முந்நூறு பிணக்கு தீர்த்து ஒவ்வொருவராக வருந்தியழைத்துச் சென்று இடம்
சேர தாமதமாக வந்த பிழைக்கு முகத்தில் உமிழ்வான் ஆட்டம் விட்ட பண்ணாடி.

வித்தைக்குச் சத்ரு விசனம் என்று ஒழுகும் எச்சிலை சிரித்த முகத்தோடு துடைத்துவிட்டு பவுடர் போட உட்கார்ந்தால் அன்றைக்கும் வைப்பார்கள் அர்ஜூனன் தபசு கூத்து.

வெற்றிவேலுக்கு வயது இருபத்தி நான்கு. இளையவர் முதியவர் என்று இருபதுக்கும் மேற்பட்ட நபர்களை ஒன்றிணைத்து ஜமா கட்டியிருக்கிறான். எல்லோரையும் போல அல்ல ஆட்டக்காரர்கள். ஒவ்வொருவர் மீதும் ஒன்பது கிரகங்களும் கூடி வந்து இறங்கி இருக்கும்.

அஞ்சிக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டுக் கிளைவிட்டு கிளைத் தாவுவது, நுனிக்கிளையில் அமர்ந்து அடிக்கிளையை வெட்டுவது, கைக் கொடுத்துக்கொண்டே கடையாணியைப் பிடுங்குவது இப்படி எல்லாச் சேட்டைகளையும் மனம் கோணாமல் சுதாரிக்கவேண்டும்.

இசைக்கலையோ, ஓவியக்கலையோ, நிகழ்கலைக்கலையோ அது எந்தத் தளமாக இருந்தாலும் சரி ஒரு நபர் அங்கே நட்சத்திரமாக மிளிர்ந்து ஒளிவீசும்நிலை அடைய எவ்வளவு அர்ப்பணிப்புணர்வோடு உழைத்திருக்க வேண்டும், எத்தனை ஈடுபாட்டோடு பயிற்சிகள், சாஹித்தியங்கள், அப்பியாசங்கள் செய்திருக்கவேண்டும், எவ்வளவு தேட்டத்தோடு கற்றோரை நத்தி கற்றிருக்கவேண்டும். எண்ணமும் சிந்தனையும் ஒன்றி எத்தனைக் காலம் அதில் ஆழ்ந்து ஆட்பட்டிருக்கவேண்டும்.

இவ்விதமான இயங்கு செல் நெறிகள் குறித்துக் கடுகத்தனை உறுத்தையாவது எழுத்துத்துறை இளவல்கள் கைக்கொண்டிருக்கின்றனரா என்றால் இல்லை. தகுதி தகமை இருந்து அங்கீகாரத்திற்கு ஆசைப்படுவதி
லொரு நாயமிருக்கிறது. ஆசைப்படுவதையே தகுதி தகமை என்று கொள்வது இழிகுணம். அல்லாத ஒன்றைக் கருதக்கூடாது என்றுதான் அவ்வை பிராட்டி ஏற்பது இகழ்ச்சி என்றோதி சென்றிருக்கிறாள்.பெண்களின் இடுப்பைக் கிள்ளி ஊர்ப்பஞ்சாயத்தில் உதைபடுவது போலான சில்லறை ஜோலிகளை ஆசான் மடத்துச் சீடக்குஞ்சிகள் அவ்வப்போது பார்க்கிறார்கள்.

ஞானம் கெட்ட வெள்ளைச்சாமிகள் மடத்தாயை குருவம்மா என்று அழைப்பது மட்டுமல்ல, அங்க மட்டும்தான் தீவிர இலக்கியம் பண்றாய்ங்க, அங்க மட்டும்தான் நல்லா நொட்டறாய்ங்க, அங்க மட்டும்தான் நல்லா வெரைய்க்கிது, அங்க மட்டும்தான் ஜார்ஜ் ஏறுகிறதென்று மிழற்றித் திரிகிறார்கள்.

நேற்றொரு சீடக்குஞ்சு ஆசான் சொன்னதைமட்டும் படித்தால் போதும் இலக்கிய ஆகிருதியாகிவிடலாமென்று அடாவடி பேசுகிறது. சுயமாகத் தேடிக்
கண்டடையும் திறமும் தீரமுமில்லாத போலிகள் கொட்ட மரத்தை கருடகம்பம் என்கிறதுகள். சரிதான் எருமை மூத்திரம் எறும்பு கண்ணுக்கு ஏகப் பெருவெள்ளம்.


கலைஞர் பெருமக்களுக்குக் காலத்தினால் உதவியயாவற்றைப் பேர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

தலைவாசல்
இதழ் 42

மரத்திலிருந்து விழுந்தவனை மாடு மிதித்தது போலாயிற்று. முதல் சுற்றில் விளைந்த தீம்புக்கு மருந்து தேடும் முன்பே இரண்டாம் சுற்று கோவிட் 19 அணுக்கமான உயிர்களையெல்லாம் அள்ளிக்கொண்டு போயிற்று. தொடரும் வாதைகள் அவலமாக நிலைத்திருக்கிறது. இதில் ஏழு சுற்றுக்கள் வேறு வருமென்கிறார்கள். கொடுஞ்சூழலில் நமது இன்றியமையாத கடமை சுய ஆரோக்கியம் பேணுவதுபோல சூழல் ஆரோக்கியத்தையும் பேணுவது.


புதிய ஆட்சி, பொருத்தமான நிர்வாகிகள் நம்பிக்கையாக இருக்கிறது. உரியவர்கள் உரிய இடத்தில் இருப்பது அவசியம். மேடுபள்ளங்களை இட்டு நிரப்புவதை ஆட்சியாளர்கள் சாமார்த்தியமாகக் கொள்ளாது மக்களுக்கான ஆட்சி நிலைபெற்று இருக்க ஆவண செய்துகொண்டே இருக்கவேண் டும். பட்டியல்கள், விளம்பரங்கள், பதாகைகள், வெளிச்சங்கள், பாராட்டு பத்திரங்கள் மீது நம்பிக்கை வைக்காமல் ஓட்டுப்போட்டு உக்கார வைத்த மக்கள் நலனில் சமரசமின்றி கருத்தை வைக்க வேண்டும். அன்றாடம்  அரசுக்கு துதி பாடாமல் தொன்மையான தமிழ்க்குடிகளாகிய நாமும் ஓயா தொழியாது அறிவு விழிப்போடு இருக்கும்படியான நடவடிக்கைகளை  மேற்கொள்ளவேண்டும்.


ஆடு அறுக்கும் முந்தியே அப்பாவெனக்கு புடுக்கு கறி என்னும் பிள்ளைகள் தாளில் எழுத்து விழும் முன்னே அதைப் படிக்க, பாராட்ட, அங்கீகரிக்க, ஆள் வேண்டுமென்கிறார்கள் அதுவும் வல்லிய கம்பெனி ஆள். பிள்ளைகளுக்குத்தான் பல்லூருகிறதென்றால் தோப்பன்மார்களாவது சித்தே நோகாமல் கடிக்க வேண்டாமா? முன்னேயாவது வலைப்பூக்களில் உருப்படியாக சிலர் எழுதிக்கொண்டிருந்தார்கள். முகநூல் வரும்படிக்கு அது மூன்று நான்கு வரியாயிற்று. இப்போதிந்த கிழடன் ஹவுசில் விடாது பதிமூன்று மணித்தியாலங்கள் கதைக்கிறார்கள். ஒரு பிரதியை எடுத்து தொடர்ந்து பதிமூன்று மணி நேரம் படித்த பாவிகளுண்டா? இன்றியமையாமை கருதி ஒரு ஆக்கம் குறித்து சிந்திக்க, கற்க, விமர்சிக்க, விவாதிக்க, எழுத, இத்தனை முனைப்புக் காட்டியிருக்கிறோமா? இதனால் சகலமானபேர்களுக்கும் சொல்லிக்கொள்வதென்னவென்றால் இலக்கியமென்பது படைப்பதன்று. வாய்க்குக் கேடாக வளவளவென்று பேசிக்கொண்டிருப்பது.


தளத்தில் இப்போதியங்குகிற இளையவர்கள் தனக்கு மூத்தவர்களோடும் அவர்தமக்கு மூத்தவர்களோடும் மனம் திறந்த இலக்கிய உரையாடல் தன்னை வேண்டுவது வாஸ்தவம்தான். ஆனால், அவர்களோ குரங்கானத்தை மருந்துக்குக் கேட்டாலது மரத்துக்கு மரம் தாவுகிறதைப்போல முறைத்துக் கொண்டும் விரைத்துக்கொண்டும் ஏற்ற கூடாரம் நமக்கெதுவென்றே தேடித் திரிகிறார்கள், வருங்காலம் பிள்ளைகள் கையில் என்று கருதாது.

(தம்பிகளும் லேசுப்பட்டவர்களல்லர் அவர்களும் பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் எரியவேண்டுமென்கிறார்கள். கற்றாரைக் கண்டு காமுறுவதில்லை. விகல் பம் இன்றி இடைப்பட்டபேர்களிடம் உரையாட இணக்கம் காட்டுவதில்லை. கூடாரத்து தலைவர்களே வந்துதான் செவ்வெண்ணை வைக்கவேண்டுமென்று அடம் பிடிக்கிறார்கள்.)

விளையாட்டு முசுவில் உள் நுழைந்து குறுக்கு சட்டத்தைச் சாய்த்தால் வீதியில் ஒடியெடுக்கும் நெச வாளி பழுக்க முதுகிலறைவார். தறிக்குழியில் மிதி பலகையை உடைத்தாலும் முதுகுத்தோல் பெயர்ந்து விடும். ஒரு வண்டியைத் தள்ளி ஒன்பது வண்டியை உடன் சாய்த்தால் சைக்கிள் கடை மணியக்காரர் திருப்புளியில் கைமுட்டியை உடைப்பார். கிணற்றடியில் உக்கார்ந்து பேத்திக்கி பேன் ஈத்தும் கெண்டிக்கார கிழவியின் பின்புறம் சென்று சிண்டுப் பிடித்திழுத்து கீழே தள்ளினால் கன்னம் ஓய் என்க காது காதாய் அப்பு விழும். பூவாயா வீட்டு முற்றத்தில் அங்காயா புடைத்த சாமைத் தவிட்டில் காலிட்டு விளையாடும் நாய்க்குட்டிக்கும்  உலக்கைத்தடியில்  ஓரிடி  விழும்...

ஜூலை மாத அரங்காற்றுகை ஒன்றில் பாஞ்சாலி சபதம் கூத்து வைத்திருந்தோம் பென்னாகரம் அருகிருந்த கரியப்பன அள்ளி  கிராமத்தில். வீட்டுக்கு விலக்காகி அந்தப்புறமிருக்கும் பாஞ்சாலியை கௌராதிகளின் தலைவன்  துரியோதனன் தன் தம்பியாகிய வீரப்புலி துச்சாதனனை விட்டு சபைக்கிழுத்து வந்து துகிலுரிந்து மானபங்கம் செய்யப் பணிக்கிறதுபோலான ஒரு காட்சி. தமையன் சொல்லை தலைமேல் வைத்து, கொலுவிலிருந்து குதித்தோடிச் சென்று, அவமரியாதையான வார்த்தைகள் பேசி அழைக்கிறான் அவன் பாஞ்சாலியை. சிறுவன் சொல்லை செவிமடுக்காமல் அவளிருக்க, சிகையைப்பிடித்து இழுக்கப்போகிறான் துச்சாதனன். எட்டி அவர் பாஞ்சாலி வேடதாரியின் சிகையைப் பிடித்தாரோ இல்லையோ எங்கிருந்தோ வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல சீறிப்பறந்து வந்தாளொரு அம்மை. எகிறிப்பிடித்தாள் வீரப்புலியின் குரல்வளையை. அவளை விலக்கி சபைக்கு அப்புறம் கொண்டு செல்வதற்குள் நான்கு ஆகிருதியான ஆடவர்களுக்கு நாக்கு தள்ளிவிட்டது. பார்க்க பூஞ்சையான பெண்மணி, பத்து தினங்கள்கூட ஆகியிருக்கவில்லை அவளுக்கு கர்ப்பப்பையில் அறுவை சிகிச்சையாகி. நோய்மையுற்ற உடல்,  நலிந்த சிந்தனை.  காட்சி வழி ஒரு அத்துமீறல் அவளுக்குள் ஓர் உணர்வு  தாக்கத்தைத்  தப்பாமல்  உண்டு  செய்கிறது.

வினையில் ஒன்றியிருக்கும்போது நிலைக்கு ஊறு விளைந்தாலங்கு எதிர்வினை பிறக்குமென்பதே விதி. உப்புப் போட்டுத் தின்பவர்கள் உடம்பில்

நல்ல உணர்த்தி உள்ளவர்கள், செய்யும் காரியமும் அதுவே. நம்மவர்கள் நாடி செத்தவர்கள். எசக் கற்றவர்களை வசக்கு வசக்கு என்றால் அவர்கள் என்னதான் செய்வார்கள். அல்ப ஜகவாசம் பிராண ஜங்கடம்.


எழுத்தொன்றும் மகத்துவமில்லை. எழுதி இங்கே புரட்சி விளையாது. ஏன் அது அரை வயிற்றுகஞ்சிக் கூட வார்ப்பது உண்மையில்லை. எழுத்தால் ஆவித் துறந்தவர்கள் இங்கே வைத்துவிட்டு போனதைப் பார்க்கில் நாம் பண்ணுவது எள்ளளவும் காணாது. இந்தப் புரிதல் உள்ளவர்கள், இலக்கியத்தை இலக்கியமாகவும், கலையை கலையாகவும், நோக்கும் பக்குவம் உள்ளபேர்கள், உணர்வாளர்கள், செயற் பாட்டாளர்கள் இவர்களுடன் உடன் உழைக்கவே மணல்வீடு அவா கொண்டிருக்கிறது. பேரிடரில் இயற்கையுடன் கலந்த அன்பர்கள் நண்பர்கள் யாவற்றைப்பேர்களுக்கும் மணல்வீடு தனது நெஞ்சார்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறது.

தலைவாசல்

ஏர் பின்னது உலகென்று உலகத்திற்குச் சொன்னவர்கள் நாம். நமது உழவர் பெருமக்கள் தலைநகரில் மாதக்கணக்கில் மெய் வருத்தி போராடிக்கொண்டிருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியிருக்கின்றன. இதன் மீதான ஆளப்பட்ட ராசாவின் எதிர்வினை என்னவாக இருக்கிறது. கருதத்தக்கதாக இல்லையென்பதோடு கருத்தில் வைத்துச் சிந்திக்கவுமே இல்லை. குடலைப் பிடுங்கிக்காட்டினாலும் வாழை நார் என்பவர்தாமே நாம். எங்கோ மழை பெய்கிறது எங்கோ இடி இடிக்கிறது.


எவர் ஆட்சி பீடத்தில் இருந்தாலும் அரசு எந்திரம் இட்டதெல்லாம் சட்டமாகாது. உரியவர்கள் அதன் பாதக சாதகங்கள் குறித்து அலசி ஆராய்ந்து எதிர் பேசுவதும், ஏற்று அதை மறுபரிசீலனைச் செய்வதும் அரசு அதிகாரத்தின் தலையாயக் கடமை. ஊன்றக் கொடுத்த கோல் நம் உச்சியைப் பிளப்பதா? அரசுக்கட்டிலில் குந்த வைத்த குடிகள் முன்பு சமர்த்துக்காட்டுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமே அன்றி வேறில்லை. சொந்த ஆதாயங்களைப் பல்கிப்பெருக்கத் திட்டங்கொண்டே இந்தக் கேடுகெட்ட அரசு உழவர் போராட்டத்தின் கரங்களை முறித்துத் தரகு நிறுவனங்களுக்கு விளக்குப்பிடித்துச் சோரம் போகிறது. இடைத்தரகர்களுக்கு அங்கு வேலையே இல்லை. உழுகிறவனுக்கு நிலம் சொந்தம். விளைவிப்பவன்தான் அதன் விலை நிர்ணயிக்கவேண்டும். உள்ளளவும் நினைந்து உழவர் குடிகளின் பின் நிற்போம். அருவினை வாகை சூடுவதாக!


இசை ஆர்வலன் என்போன் மதுரை சோமுவின் குரலிசையையும், டோனி காட்லீப் படங்களில் அமைந்த இசைக்கோர்வைகளையும் செவிமடுக்க வேண்டும். அப்படியது கையால் ஆகவில்லை என்றால் அத்தன்மைவொரு நாள்பட்ட நோயே. இப்பெருவியாதிப் பீடித்த பேர்கள் மலிந்த தளமாகிவிட்டது தமிழ் இலக்கியத்தளம். கவிதைக்காரர்கள் சிலபேர்களுக்கு குலம் கோத்திரம் மாற்றிக் கவிதைகொள்ள முடியவில்லை. சிறுகதையாளர்களுக்குக் கவிதை என்றால் குமட்டுகிறது. நாவல் ஆசான்களுக்குச் சொல்லவே வேண்டாம் சாமான் எழும்பி நெற்றியில் அடிக்கிறது. அம்மா கோந்துகளுக்குச் சம்சாரம் எதுக்கு? மாடெதற்கு? கன்று எதற்கு? இந்த மானம் கெட்ட பிழைப்பெதற்கு? தூங்கப் பூனைகளுக்குத் தூலத்து மேல் ஆட்டமெதற்கு ?


எசக்கு அற்ற பொழுதில் பண்ணாடிகள் உருவாத்தாளை விளையாட்டுப்பிள்ளைகளிடம் வீசியெறிந்து அவை ஏமாந்த வேளையில் குறி ஊட்டக் கொடுத்து ஜுகம் காண்பதுபோல இங்கே சில மாமாக்கள் இலக்கியத்தின் அருமை உணராது பால் பிஞ்சுகளை இலக்கிய அங்கீகாரம் ப்ரோமோஷன் என மடித்தடவி கெட்டுப்போன பழத்தை வாயில் திணிக்கிறார்கள். அரும்புகளைத் தலை வருடி மூளை உறிஞ்சுவது அறமாகாதுதானே?


பொய் சாட்சிக்காரர்களின் கூண்டாகவிருக்கிறது விமரிசன களம். அவர் இவர் என்ற பேதமெல்லாம் இல்லை. ஆயிரம் பேரும் பால் வார்க்காது வெறும் தண்ணீரை வார்த்தவர்களே! பொறுப்பற்ற வேலைகளை ஏனடா செய்கிறீர்கள்? படைப்பென்றால் உயிர்ப்புப் பதைப்பு ஒரு துடிப்பு வேண்டாமா? செத்த பயபுள்ள படைப்புகளை மனசாட்சியென்பது கண் கண்மயிரளவுக்குக்கூட இல்லாமல் எப்படியடா பொதுவில்வந்து உலகம் உய்ய வந்த காவியமென்று புளுகித் தள்ளுகிறீர்கள்? பொண்டுகளென்றால் எதற்கடா ஓரம் சொல்கிறீர்கள் என்றால் என்ன செய்வது காலை விரித்துவிட்டாளே என்கிறானொரு ராஜகவி. போக்குவரத்துப் புழக்கமெல்லாம் கடந்த பிரதி விமர்சனம் இன்று கானல் நீராகிவிட்டது. நீ செத்த நாம்பு, நான் செத்த நாம்புகிறேன் என்று தவிப்பாற்றிக்கொள்வது, பிரதியை அந்தரங்க திம்பண்டமாக்கி கொண்டான் கொடுத்தானிடம் மட்டுமே பந்தி வைப்பது இவையெல்லாம் கண்ணியமான இலக்கியச் செயற்பாடு ஆகாது. அடர்ந்தடர்ந்து இந்த ஈன வேலைப் பார்க்கும் இழி பிறவிகளைக் கழுவேற்றும் மந்திரம் அவர்கள் ஊத்தை வாய் கண் பிறக்கும் சொல்லே அன்றி வேறில்லை. இன்னுமிருக்கிற பேர்பாதி புண்ணியர்கள் அண்டை பற்றி எரிகிறது, அத்த ஏன் சொல்வானேன் வாய் ஏன் நோவானேன் என்கிறார்கள்? விமர்சனம் ஒரு படைப்புக்கலை, பிரதியை ஊடறுத்து, ஒப்பு நோக்கி மதிப்பீட்டு அலகுகள், கோட்பாடுகள் வழி மேன்மைகள், போதாமைகள் குறித்து உரையாடாது இலக்கியம் மேம்பாடு காணாது. மூத்தவர்களும் இளையவர்களும உடன் களமிறங்க வேண்டிய காலமிதே.


கூத்துக்கலைஞர் கொம்பாடிபட்டி ராஜு சிறுவயதாக இருக்கும்போது எங்கள் வீட்டுப்பிள்ளை திரைக்கு வந்திருக்கிறது. நான் ஆணையிட்டால் பாடல் வெகு பிரசித்திப் பெற்றது அப்போது. மாரியம்மன் கோவில் திடலில் பொம்மை செட்டு விளம்பரத்துக்குப் பொய் வந்த களைப்பு நீங்க நம் தலைவன் விளையாட, நான் ஆணையிட்டால் பாடல் கோயில் ஒலிபெருக்கியில் ஒலிக்கக் கருப்பண்ணன் மகனுக்கு வந்ததே வேகம், தோள் துண்டை வாளாக்கிச் சுழற்ற, மணியக்காரர் மகனின் மானியை பதம் பார்த்துவிட்டது முடிச்சு. பையன் மயக்கமாகி கீழே சாய, ஊர் கூடி நிறைந்த சண்டையாகிவிட, செம்மலைப் பொம்மைப் பெட்டிக்குள் போட்டு ராஜூவை வீடு சேர்த்திருக்கிறார். அந்தக்கதை அப்படி இருக்க, அசட்டுப் பிள்ளைகள் சிலர் இங்கே காப்காவைப் படித்து விட்டுச் சாமத்தில் கரப்பான் பூச்சியாகி வீடு முழுக்க மாத்திரமன்றி ஊர் முழுக்கக் குதித்துத் திரிகிறார்கள். மாதத்தில் பல அவதாரங்கள். இப்போது அவர்கள் எடுத்து திரிவது ஆசான் அவதாரம். அது சரி ஆனையை மலர்த்த நினைப்பது அப்படியெல்லாம் அறக்குற்றமில்லைதான், ஆனால் உசரம் எட்டவேண்டும் அல்லவா?


 இது விருதுகளின் காலம். கடலை பொரி போல அள்ளி இறைக்கிறார்கள். கொடுக்கிற ஆண்டைகளுக்கும் இன்னதற்கு விருது கொடுக்கிறோம் என்று தெரியாது வாங்குகிற ஆகிருதிகளுக்கும் எதற்கு வாங்குகிறது என்று தெரியாது. அத்திக்காயும் தெரியாது குரங்கு புடுக்கும் தெரியாது. பச்சை சிரிப்பு கூழைக்கும்பிடு தெரியும். உள்ளுணர்வு ஒன்றாமல் எந்தக் காரியமும் செய்யலாமா? மாலையின் மாண்பு மணத்திலிருக்கிறது, விளக்கின் மாண்பு ஒளியிலிருக்கிறது. விருது, விழா கொண்டாட்டங்களின் மாண்பு எண்ணங்கள் சிந்தனையாகி அவை செயல்தனில் இழைவதிலிருக்கிறது.


தமிழ் ஊடகங்களில் கொட்டைப் போடுகிற சிங்கங்கள் சில தீவிர இலக்கியத்தில் ஆட்டம் போடத்தலைப்பட்டிருக்கின்றன. ஊறு விளைவிக்கும் செயலொன்றும் அல்லவது. ஆனால் தங்களை அவை சர்வரோக நிவாரணி போல நினைத்துக்கொள்வது, கல்வி, அரசியல், பொருளாதாரம், சூழியல், தத்துவம், இலக்கியம் என்று எல்லாவற்றின் பீடாதிபதிகள் போலக் களம் கண்ட பக்கமெல்லாம் கருத்து சொல்வது, காணூடகங்களில் வலியத் தோன்றி மிழற்றித்திரிவது அவன் கவிஞன் இல்லை, இவன் கவிஞன் இல்லை என்று ஊளை இடுவது, பட்டியல் போடுவது, பதாகைச் சுமப்பது, நிழல் சாய்ந்த திசையில் குடை பிடிப்பது போன்ற எச்சிப் பண்ணாட்டுகள் செய்யக்கூடாது. கூலிக்கு மாரடிப்பதையெல்லாம் இலக்கியம் என்று கூவி விற்று, இடறி விழுவதையெல்லாம் கரடி வித்தை என்றால் கல்தான் பறக்கும், காலில் பூ விழாது. பந்துப்பொறுக்கிகளுடன் மேட்ச் ஆடிவிட்டு ஆட்ட நாயகன் நானே என்று மார்தட்ட எத்தனை நெஞ்சுரப்படா உங்களுக்கு?


சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது, அனைத்துக்கட்சி அபேட்சகர்கள் நாடெங்கும் மக்களைச் சந்தித்து, கண்ணீர் மல்க அவர்தம் குறைகளை, கோரிக்கைகளைக் கேட்டு, நிவர்த்திக்கும்படிக்கு கையிட்டுச் சத்தியம் செய்திருக்கிறார்கள். நம்பிய மக்கள் உபரியாக டிவி வாஷிங் மெசின், வைபரேட்டர், கூதலுக்கு உகந்த பொறிகளையெல்லாம் கொசுறாக இனாமாகக் கேட்டிருக்கிறார்கள். கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவது ஒரு பிழையா?

மிக்சர்களை மிக்சர்கள்தாம் ஆள்வார்கள். உன்னைவிட்டாலும் வழியில்லை வேறெதுவும் கதியில்லை.

ராமனாண்டாலென்ன ராவணனாண்டாலென்ன

போடும் ஓட்டுக்கு காசு வந்தால் சரி

தெருவில் படியளந்தவர்கள்

கதவுத் திறந்திருக்க வாசலைத் தாண்டி

அப்புறம் போனால் அவமானம்

காடிக்கஞ்சியென்றாலும் மூடிக் குடிக்கவேணும்

இடுப்புக்கந்தையை வழித்து முக்காடுப் போட்டவன்

முன்னோடி மறித்து

ஒரு கண்ணுக்கு வெண்ணையும்

ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைக்காதீர்கள்

என்றேன்

கணமேனும் யோசிக்கவில்லை எம்முடன்பிறப்புகள்

கும்பிட்ட கரத்தில் கோடிவைத்து

வாழ்த்திய வாயிற் உரித்த பழமூட்டி

காதையறுக்காமல் கடுக்கணைப் பறித்தார்கள்

அல்லும் பகலும் உழைத்தவர்கள்

அரங்கையும் புறங்கையும் நக்குவார்களா

தவிட்டுக் கொழுக்கட்டைக்கா

தண்டவாளப்பெட்டி யுடைப்பது

இலைக்குக் குலைதானே மாற்று

இலைக்குக் குலைதானே மாற்று

அம்மையு மப்பனுமொண்ணு

அறியாதவர் தலையிற் மண்ணு.

இயற்கையில் கலந்த முன்னோடிகள் ஆ. மாதவன் , தொ.பரமசிவன், டொமினிக் ஜீவா, மருத்துவர் ஜீவானந்தம், தோழர் ஜனநாதன், சோலை சுந்தரபெருமாள் ஆகியோர் தமக்கு மணல் வீட்டின் நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.

இதழில் பங்களித்த யாவற்றைப் பேர்களுக்கும், இளையப் படைப்பாளிகளின் முதல் பிரதி வெளியிட உதவிய இலக்கிய உணர்வாளர்களுக்கும் நன்றி.

தலைவாசல்

வணக்கம்

பேரிடர் உழல் காதை

ஈழவிடுதலைப் போரின்போது அதன் நிமித்தமாக மேலை நாடுகளில் உருவான சந்தைகளும் புழங்கிய பணப்புழக்கமும் ஏராளம்… அவற்றில் பத்தில் ஒரு பங்கு நிதி கிடைத்திருந்தால் கூட போர் வெற்றி முகம் கண்டிருக்கும் என்றுவோர் ஈழ நண்பர் மனம் கசந்தோர்முறை அங்கலாய்த்தார். ஒரு இன விடுதலைப்போரை தங்களுக்கான ஆதாயங் கொழிக்கும் சந்தையாக மாற்றும் ரசவாதம் தெரிந்த பேர்கள் எம்மனோர் போன்றோர் எவருமிலர்.

பேரிடரில் இயற்கையோடு கலந்த எல்லா உயிர்களுக்கும் நெஞ்சார்ந்த அஞ்சலிகள்

அந்தப்படியே பேரிடர் வந்து உறுத்தும் இத்துயர்காலத்திலும் உரியவற்றை காலத்தே செய்யாது, வாளாவிருந்துவிட்டு, அறிவு விழிப்பற்ற பலவீனமான மக்களை தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக பரிசோதனைக் கூட எலிகளாக்கி பணம் பண்ணும் அரசு அதன் அமைப்புகள், நிலைமையை சாதகமாக்கி பாட்டாளிகள் வாயில் மண் இட்ட சர்க்கார் பால் குடித்து வளரும் நிறுவனங்கள் கீழ்மையை என்னவென்று சொல்ல?

o

தருமபுரி ஏரியூர் செல்லமுடி பகுதியைச் சார்ந்த நண்பர் கிருஷ்ணன் சேலம் சீலநாயக்கன்பட்டியில் சொந்தமாக கம்பெனி வைத்து ஜவுளி ஏற்றுமதிச் செய்துவருகிறார். பொது முடக்க காலத்தில் பொம்மை அலங்காரத்திற்கு துணி வாங்க அவர் காரியாலயம் சென்றிருந்தேன். இருபதுக்கு மேற்பட்ட தொழிலாளிகள் அங்கே சிச்சிறு வேலைகள் செய்துகொண்டும் ஓய்வாகவுமிருந்தார்கள். கார்பரேட் நிறுவனங்களெல்லாம் தங்கள் பணியாளர்களை எடுத்துப்போட்டு கழுத்தை முறித்துக்கொண்டிருக்க நீங்களெப்படி இத்தனை பேர்களை வைத்துக்குப்பைப் போடுகிறீர்களென்றேன். உண்டான வேளையில் நாளைக்கு இரண்டு பணிமுறை வேலைப்பார்த்து சம்பாதித்துக் கொடுத்தவர்களை இடுங்கட்டில் வைத்தாதரிக்கவேண்டாமா என்றார் அமைதியாக.

அகண்ட பாரதம் மட்டுமல்ல உலகெலாம் தமிழ் மணம் பரப்பி உள்நாட்டில் ஏழு லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்த ஆ. வி பத்திரிகை நிறுவனம் தனது பர்த்தாக்களை சமயம் பார்த்து நட்டாற்றில் கைகழுவி விட்ட நேர்த்தியை, இழைத்த அநீதியை கண்டித்து ஓர் வார்த்தை தானும் உதிர்க்க எழும்பாத நம் நாக்கு (நக்குகிறபோது நாவெழும்புவதேது) மேடைதோறும் குச்சி மைக்கைப் பிடித்து அறம்பாடி என்ன? அரசியல் எழுதி என்ன? பொங்கும் நம் சத்தியாவேசம் பொட்டணம் மிச்சருக்கு அடங்கி விடக்கூடியதுதானே!

o

மக்கள் அரசு மக்களுக்காகவே… எனில் நெருக்கடி நேரத்தில் மருத்துவ படிப்பு விவகாரத்தை ஆய்ந்தோய்ந்து வல்லுநர்கள் சொல்லுமாப்போலே இடைநிறுத்தி நிபந்தனை ஏதுமில்லாமல் பரிசீலித்தால் என்ன. முறையானது இதுதான் என்றால் இத்தனை பதட்டம் எதற்கு? உத்தமர்க்கும் ஒசுப்படி தப்பிலிக்கும் பத்திர ஓலை எதற்கப்பனே?

o

நேயமுள்ள இதயங்கள் பலவற்றை நேரில் தரிசிக்க முடிந்தது இப்போது. கருணையோடு அவர்கள் நிவாரணங்கள் வழங்கும் செயற்பாடுகளில் காத்திரமாக இயங்கிக்கொண்டிருக்க நம் ஆட்கள் இணைய வெளியே நாறும்படிக்கு வாயில் கழிந்து கொண்டிருந்தார்கள். விளம்பரம் பண்ணாதவன் கொடும்பாவி என்றமானிக்கு இவர்கள் வழி நெறி பிறழ சுயமோகம் தவிர பிறிதொன்றும் காரணமில்லை. எண்ணெய் செலவாகிறதே ஒழிய பிள்ளைப்பிழைக்கிற வழியைக் காணோம்.

o

நிலைய வித்துவான்கள் இங்கு நிறைய பேர்களிருக்கிறார்கள். தகைமை சார்ந்து பல சர்வகலா சாலைகளில் அத்தக்கூலிக்கு அவர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். வள்ளல் பெருந்தகைகளின் சூத்துக்கு பிரமனையாய் இருப்பது போக விஞ்சிய நேரமெல்லாம் தன் சிந்தையில் வைத்துச் (அவர்கள் வெகு பாடுபட்டு) சிந்திக்கும் ஒரே சிந்தனை, இந்த தளம் குறித்து அதன் மேம்பாடு குறித்து மட்டுமே அன்றி வேறொன்றுமில்லை. விளைகிற பிரதிகள் எல்லாம் அவர்கள் கண்டு சொன்னவைதாம். பாருங்கள் இரண்டாயிரத்து பதினொன்றில் சபரிநாதனின் ‘களம் காலம் ஆட்டம்’ வெளியாகி இரண்டாயிரத்து பதினாறில் ‘வால்’ வெளியாகியது. பத்தொன்பதில் இரண்டாம் பதிப்பும் கண்ட அப்பிரதி முன்னிட்டு தளத்தில் குறைந்த அளவில் ஆன விவாதங்களும் நடைபெற்றது. இடையில் அவரது மொழியாக்க பிரதியொன்றை ‘கொம்பு’ கொண்டு வந்தது. ஆகிருதிகள் என்று போர்டு மாட்டிக்கொண்டு திரியும் பேர்வழிகள் பழம் தின்று கொட்டைப் போட்ட பதிப்பு செம்மல்கள் தன்னோடு இலக்கியம் உசாவுகிறபொழுது, நடப்பு இலக்கியம் என்கிற பொருண்மையில், புதியவர்கள், ஆக்கங்கள், புதிய பதிப்புகள் பதிப்பது குறித்து வாய் திறக்கமாட்டார்களா? விலையில்லா அவர்தம் சொல்லுக்கு அங்கே மதிப்பு இல்லையென்றால் அங்கே நமக்கென்ன ம . பி வேலை ?

o

தனி நபர்கள் மீதான பிரேமை காரணமாக இலக்கியத்தரம், படைப்பு உயிர்ப்பு என்பதையெல்லாம் கொண்டு கூட்டி மதிப்பீடு செய்வதோடு விருது அங்கீகாரம் என்கிறபோது மன்றம் ஏறி தயங்காது பொய்சாட்சி சொல்லும் இலக்கியப்போலிகள் விளைவிக்கும் சூழல்சீர்கேட்டுக்கு ஏற்ற மீட்பு நடவடிக்கையாக முழுமுற்றான இலக்கிய திறனாய்வை முன்னெடுக்கவேண்டியது இன்றியமையாதது.

மணல்வீட்டின் இணை இணைய இதழாக ‘ரசமட்டம்’ கலையிலக்கிய விமர்சன சஞ்சிகை மாத இதழாக வரும் அக்டோபரில் இருந்து (முழுமையான விமர்சன இதழாக) வெளியாக இருக்கிறது. சமரசமற்ற விமரிசனம் இதழின் பிரதான செயல் நோக்கமாகும். அன்பர்கள் மனமுவந்து படைப்பு வகைமை எதுவென்றபோதிலும் பிரதியின் மீதான விமர்சன கட்டுரைகள், ஆய்வு கட்டுரைகள், நூலறிமுகம் என்ற பொருண்மைகளில் எழுதி அனுப்பி பங்களிக்கவேண்டுகிறோம். வலை இதழ்களில் வெளியாகும் படைப்புகள் குறித்த உரையாடல்கள், விவாதங்கள், சிறு சஞ்சிகைகள் அவற்றின் நோக்குபோக்கு, அவையெடுக்கவேண்டிய முன் எடுப்புகள் , இலக்கியதளம், அதன் தரம், மேம்பாடுகுறித்த தனி நபர் / குழு இவற்றின் ஆலோசனைகள், பிரதியாக்கம் செய்யவேண்டிய படைப்புகள், காத்திரமாக எழுதும் புதிய படைப்பாளிகள், மறு பதிப்பு செய்யவேண்டிய நூல்கள், மொழியாக்கம் செய்யவேண்டிய நூல்கள் என ஜீவனுடன் படைப்பு தளம் இயங்க என்னென்ன ஆலோசனைகள் உள்ளனவோ இவற்றோடு அவை எல்லாமும் வரவேற்கப்படுகின்றன.

o

மணல்வீடு அச்சு இதழ் எண் நாற்பதுடன் கவிஞர் செல்வசங்கரனின் ‘சாலையின் பிரசித்திபெற்ற அமைதி’ என்ற கவிதைப்பிரதி அதன் பிறகான அவகாசத்தில், கறுத்தடையான் அவர்களின் ‘கோட்டி’ நாவலும், சர்வோத்தமன் சடகோபன் அவர்களின் ‘முறையிட ஒரு கடவுள்’ சிறுகதைப் பிரதி, கவிஞர் விவேகானந்தன் அவர்களின் ‘சுதந்திரம் ஒரு டப்பா’ கவிதைப்பிரதி, கவிஞர் ரபேல் கிறிஸ்டி செல்வராஜ் அவர்களின் ‘மார்வளையங்கள்’ கவிதைப்பிரதி, கவிஞர் நெகிழன் அவர்களின் ‘பூஜ்ய விலாசம்’ கவிதைப்பிரதி, சிவசித்து அவர்களின் ‘உவர்’ சிறுகதைப் பிரதி ஆகியன வெளியாக இருக்கிறது. வேண்டுவோர் முகவரி அனுப்பி பெற்றுக்கொள்க .

நன்றி நவில்தல்

உற்ற நேரத்தில் இணைய நேரலை நிகழ்வு வாய்ப்பு தந்ததோடு தொடர்ந்து நிகழ்வுகள் நடத்த ஏதுவாக வெப் கேமரா, மடிக்கணினி வாங்கித் தந்து கலைஞர் பெருமக்கள் வாழ்வாதாரம் முற்றிலும் நசிந்து போகாதபடிக்கும் யாசகம் எங்கும் கேக்காமல் தங்கள் பிழைப்பை தாங்களே பார்த்துக் கொள்ளும்படிக்கும் வழிவகை செய்த சாஸ்தா தமிழ் பவுண்டேசன் நிறுவனர் திருமிகு வேலுராமன் அவர்களுக்கு, சாக்ரமண்ட்டோ தமிழ் மன்றம், சான் பிரான்சிஸ்கோ பாரதி தமிழ் சங்கம், வளைகுடாப்பகுதி தமிழ்மன்றம் (வட அமெரிக்கா தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு) அதன் தோழமை தமிழ்ச்சங்கங்கள், அவற்றை நிர்வாகிக்கும் தமிழ் உணர்வாளர்கள், முகநூல் நண்பர்கள் யாவற்ற பேர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.

இவண்
மு. ஹரிகிருஷ்ணன்

தலைவாசல் இதழ் 37-38

அன்புடையீர், வணக்கம்.
இரண்டாயிரத்து பத்தொன்பதில் இருக்கிறோம் நாம் ஏனைய பிற துறைகள் கண்டிருக்கும் உயரம் நம் எழுத்து துறையும் கண்டிருக்க வேண்டும். முழங்கால் மட்டமாவது ஏறியிருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். படைப்பாக்க செயற்பாடுகளுக்கான கற்கை நெறிகள் விளைந்து ஊடகச்சந்தைகளில் ஏகதேசமாக எங்கும் மலிந்து கிடக்கின்றன. மட்டுமல்லாது நம் மேசய்யாக்கள் உப்புக்கும் புளிக்கும் ஒலிவ மலையிற் கண்ணிருந்து உபதேசிக்கிறார்கள் கருத்தாய். ஒரு ஜமாவில் ஆடும் கூத்தாடி இன்னொரு ஜமாவில் உயிர் போகிறதென்றாலும் ஆடுவதில்லை. சொந்த ஜாதியில் மாத்திரம் கொண்டு கொடுத்து சம்மந்தம் கலக்கும் இவர்கள் கதைப்பது எப்போதும் குன்னூத்திநாயம். கதையோ கவிதையோ கட்டுரையோ நாவல் பகுதியோ ஒரிதழுக்கு இன்று வரும் படைப்புகள் அதிகமும்
உப்பு சப்பு இல்லாதவைகளாகவே உள்ளன. முன்னோடிகளை விஞ்சிய படைப்புக்களாக அவைகள் இருப்பதில்லை. ஒரு அச்சில் உருக்கி வார்த்தது போல சர்வம் நகல் மயம். சுட்டி ஒரு வார்த்தை சொல்வதற்கில்லை. நொய்யரிசிகள் கொதி பொறுப்பதில்லை. உடனே விடைத்துக் கொண்டுவிடுகிறார்கள் அல்லது தொடர்பறுத்துக்கொண்டு தூர்ந்து போய்விடுகிறார்கள் பசை தேடி. இந்தப் பிரகஸ்பதிகளை வைத்துக்கொண்டு இலக்கியம் பண்ணுவது மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பது போன்ற வெட்டிவேலை என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. தேடிக்காணாத விடாய்ப்புக்கு ஆறுதலாய் ஆதவனின் சிறுகதை இங்கே இவ்விதழில் மீளவும் பிரசுரம் காண்கிறது.

கூடிவிட்டது சந்தை
துண்டுப்போட்டு மூடி
தடையற நடக்குது
தரங்கெட்ட வணிகம்.

வாகன சாரதி முதல் வண்டியில் வைத்து பழங்கள் விற்கும் வேவாரி வரை முதல்வரோடு நேரடி டீலிங் வைத்திருக்கிறார்கள். அங்கன்வாடி ஆயா பணி நியமனமா, ஆசிரியை பணியிட மாறுதலா ஆய்வாளர் காவல்துறை பணி நியமனமா என்ன செய்யவேண்டுமுங்களுக்கு கைல காசு வாயில தோச.

அன்னாரது கைகளில் லட்சங்கள் வைத்து நேர்வழியில் காரியம் சாதிக்கிறார்கள். வருவாய் கோட்டாட்சியர் ஒருவர் ஆளும் கட்சியின் சார்பாக நடுசாமத்தில் வந்து ஓட்டுக்கு இவ்வளவு என்று கச்சிதமாக பணம் பட்டுவாடா செய்து கடமையாற்றுகிறார். வாசல் தாண்டி போய்விட்ட அரசியல்வாதியின் அல்லக்கை ஒருவனை தனது ஓட்டுக்கு காசு கொடுக்காத குற்றத்துக்கு நடுத்தெருவில் சட்டையைப் பிடித்து நாயம் கேக்கிறான் நமது குடிமகன். போடும் ஓட்டுக்கு கையேந்தும் வண்ணமாகத்தான் இருக்கிறது நமது பூளவாக்கு. தெருவெல்லாம் குப்பைக்கூளம் என்று வகை தொகை தெரியாது கூவும் நாம் நம்மிடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள ஆகாதா? தடங்கண்டு நெறி செல்ல நம்மை தடுப்பவர் யார்? நாம்தான் உக்காரச் சொன்னால்
படுத்துக்கொள்பவர்கள் ஆயிற்றே.

கேடெலாங் கூடித் திரண்டுக் கொண்டுகுடி
கேடுட லெடுத்த வம்பன்
கேட்டபேர் கண்டபேர் காதுகண் ணோவெடுக்
கின்றவடி யுண்ட வம்பன்
நாடெலா மிவனையு நாடலா மோவென்று
நகையாட லுண்ட வம்பன்
நாடோறு மாடுபோ லோடோடி யேதின்று
நாவுருசி கண்ட வம்பன்
மேடுமுட்டத் துருத் திக்குட் பருக்கைமிக
வெட்டியே வீசு வம்பன்
மெத்தவம் புற்றவடி யேனுமுமை நம்பினேன்
மேன்மைதந் தாளு தற்கே
மாடம்ப ஜம்பநடை யுள்ளநீர் பின்றொடர
வள்ளலிறசூல் வருகவே
வளருமரு ணிறைகுணங் குடிவாழு மென்னிருகண்
மணியே முகியித்தீனே.

சென்ற இதழ் தலையங்கம் இலக்கிய தளமெங்கும் கால் பாவியிருக்கும் கயமைப்போக்குகள் குறித்த விமர்சனமாக எழுதப்பட்டிருந்தது. உருக்கின நெய் வார்த்து அமுது படைத்தாலும் கண்ட ஞாயந்தானே சொல்லவேண்டும். ஆனால் மாண்பமை எழுத்தாளர் பலருக்கு அது மனக்காயத்தை உண்டு செய்துவிட்டதாக அறிகிறேன். விலையில்லா கண்டனங்கள் பல வீடு தேடி வந்து மிரட்டியதுடன் வீட்டுப்பெண்டுகளை விலைக்கு விற்று இதழ் நடத்த புத்தியும் உரைத்தார்கள். எலும்புக்கேற்ற குரைப்பு இருக்கத்தானே செய்யும். நானொரு ஊரறிந்த வேசி (சூப்பர் ஐயிட்டம்) பல பேர் நாற்றங்களை கண்டுதான் தொழுவாடு நடக்கிறது. ஜல ஜலப்புக்கு அஞ்சாது நரி.

மற்றொன்று

உன்னதமானவரென்று சமூகத்தில் மகத்துவப்படுத்தும் ஓர் பிரகிருதியின் பிரலாபங்களை வேண்டுவோர் பிரதிகளில் எழுதி மதிப்பு கூட்டவேணும் அல்லது அவர் விட்டு சென்ற சேவையைத் தொட்டு தொடர வேணும் அல்லது மாநிலமெங்கும் சிலை வைத்து தொழுகைகள் வழிபாடுகள் நடத்தி வணங்கவேணும் அல்லது மஹாநுபாவரின் பெயரால் தாம் தொண்டில் பழுத்து தொங்கவேணுமே அன்றி, தீப்பாயாமல் கொக்கரிக்கக் கூடாது. அது சரி ஒப்பிலிக்கும் ஒசு பாடி தப்பிலிக்கும் எதற்கப்பனே பத்திர ஓலை.

வஞ்சிக்கப்பட்டவனின் குரல், ஏமாற்றப்பட்டவனின் குரல், இழந்தவர் தம் குரல் இப்படித்தான் ஒலிக்க வேண்டும் என்று சொல்ல எந்த கிரையஸ்தருக்கும் யோக்கியதை கிடையாது.

கலை, இலக்கியம், சிறு சஞ்சிகை, ஓவியம், சினிமா, ஊடகம், நவீன அரங்காற்றுகை, நாட்டார் கலைகள், நிழற்படக்கலை, சூழலியல், சமூகம், அரசியல் ஆகிய துறைகளில் களமாடும் இளவல்களோடு அவரவர் களம் குறித்த பரிவர்த்தனை புரிந்துணர்வு வேண்டி ஒருங்கிணையும் முன்னெடுப்பாக தொடர் கலந்துரையாடல் ஒன்றை மணல்வீடு இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்யவிருக்கிறது. (முறையான அழைப்பு
பிறகு) ஆர்வமுள்ள அன்பர்கள் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.

இவண்
மு.ஹரிகிருஷ்ணன்

தலைவாசல் இதழ் 36

அனைவருக்கும் வணக்கம்

இவ்விடத்தில் இலக்கியம் பண்டுவது அவ்வளவு சிலாக்கியமானதாகயில்லை. எச்சுப்பண்ணாட்டாகவே எனக்குப்படுகிறது. ஊர் ஊருக்கு நன்நான்கு சந்தைக் கடைகள். அங்கு உற்பத்தியாகும் மலினப்பட்ட இலக்கிய சரக்கை விற்று முதலாக்க தொரசங்கட்டி ஒரு பட்டப்பகல் விளம்பரதட்டிபோல் நிற்கிறான் இலக்கியவாதி மானங்கெட்டு.

சின்ன கவுண்டர் படத்தின் இறுதிக்காட்சியில் நடிகர் சலீம் கவுஸ் ஊர் ஜனங்கள் ஒவ்வொருவர் காலிலும் வீழ்ந்து அய்யா எனக்கு தண்டனை கொடுங்கய்யா தயவுசெய்து தண்டனை கொடுங்கய்யா என்று கெஞ்சி கதறுவதை போன்று இங்கே இலக்கியவாதிகள் ஊடகவெளி எதுவென்றே பொழுதிலும் இரவுபகல் எந்நேரமும் காசுவில் ஆறாம்பக்கம் வெளியானது ஆவியில் அறுபத்தி ஏழாம் பக்கம் சூடாக வெளிவந்தது என்று தங்கள் ஆக்கங்களை வாசிக்க கூவி கூவி அழைக்கிறார்கள், கொள்பவர்கள் யாரில்லாத போதும். படைப்பை வெளியிட்ட பரோபரகாரத்திற்கு ஆ.குழுவிற்கு அவர்கள் அப்பனாத்தாவிற்கு மாளாத நேர்த்திக்கடன் செலுத்தி மாய்கிறார்கள். விட்டால் மொட்டையடித்துக்கொண்டு கோவில் கோவிலாக அங்கபிரதட்சணம் செய்தாலும் செய்வார்கள். சொல்லி சொல்லியே நன்றி என்னும் உணர்வை கொன்றேவிட்டார்கள். தக்கப்படியான படைப்பைத் தெரிவு செய்து வெளியிடுவது அவன் வேலை, டூட்டி. கடமையை செய்பவனுக்கு இடையூறாக வலிவந்தமாக நீ ஏன் அவன் மேலே விழுகிறாய்?

ஆட தெரியாதவன்தானே மத்தளத்து மேல் விழ வேண்டும். தரமாகப் படைப்பது மனமுவந்து ஓர்மையுடன் வாசிப்பது என்பதெல்லாம் இலக்கியவெளியில் இனி காண்பதரிதுபோல.

என்னதான் ஆயிற்று நம்ம ஊர் இலக்கியவாதிகளுக்கு.அச்சில் பார்த்த அவசரத்தில் உடன் அங்கீகாரம் வேண்டுகிறது பேதை மனம். சுமை கால் பணம் சும்மாடு முக்கால் பணம். ஒரு கேடுகெட்ட அரசியல்வாதியின் அதிகாரபோதைக்கும் இவர்களது அங்கீகாரபோதைக்கும் துளியும் வித்தியாசமில்லை. சாமானத்தில் ஜிகினாவைத்து ஒன்றுக்கு போகாத குறையாக என்னவெல்லாம் செய்கிறார்கள்?

உன்னத கவிச்சிங்கமொன்று உள்ளது சென்னையில். திமுக அதிமுக என்றெல்லாமதற்கு பாகுபாடுகள் கிடையாது. பார்த்தால் பரமசாது பக்கம் போட்டு படுத்துக் கொள்ளலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். யூலைத்திங்கள் இருப்பத்தியேழாம் திகதி வெளிவந்த பிரதிக்கு ஆகத்து ஒன்பதாம் தேதிக்கெல்லாம் ஐம்பது பெயர்கள் நூல் மதிப்புரை எழுதித் தள்ளிவிட்டார்கள். என்ன வேகம் என்ன தாபம். அன்பின் பிரவாகம் கங்குகரை காணாது பாய்கிறபோழ்து இலக்கியமாவது மண்ணாங்கட்டியாவது.

பர்ராவை வாசிக்கிறேன். பாஷோவை உள்வாங்குகிறேன். போர்ஹேஸ், மார்க்கேஸ் என்றாலும் அப்படியே. இங்கே சில இலக்கிய குழுக்களுக்கு அயல் இலக்கியம் பேரில் பேய்க்காமமும் உள்ளூர் இலக்கியம் என்றால் குமட்டிக்கொண்டு வருகிற ஒவ்வாமையுமாக இருக்கிறது. சிரத்தையும் முனைப்பும் ஆர்வமும் ஈடுபாடும் இருந்தால் உலக இலக்கியம் பெருசு உள்ளூர் இலக்கியம் சிறுசு என்ற பேதமின்றி வாசிக்கவொண்ணும்.

இலக்கியவாதி சமூகத்தின் கண்ணாடி
இலக்கியம் சர்வரோக நிவாரணி
வாசித்தல் மதிப்புறு செயற்பாடு
படைத்தல் அறிவு செயற்பாடு என்றெல்லாம் கற்பிதம்
செய்துக்கொண்டிருக்கிறது இந்த விளம்பரம் சூழ்
உலகு.

பாவலர் மொக்கை பழனிசாமிக்கு
பாசாபிமானம் தேசாபிமானம்
இலக்கியதாகமென்றெல்லா மெதுவுங் கிடையாது
மறிகள் வாசலில் புழுக்கையிடும் கடைகள்
லீபஸார் சேட்டுகளுக்கு இருக்கின்றார் போலே
அம்மாபேட்டை தனியார் விடுதியிலவருக்கோர்
நிலவறை காரியாலயமிருந்தது
வயிற்றுவலிக்கு கட்டிலை திருப்பி போடுபவர்கள்
இலக்கியந் தழைக்கவங்கே நித்தமும் வந்துபோவார்கள்
நாடோடி பாணர்கள் லௌலீக துறவிகளென்றாலோ
அபிஷேகம் ஆராதனை கும்பமேளா னிதக்குடி
கொண்டாட்டம்
இலவு வீட்டுக்கு காரனுப்பவேண்டுமா
ஏற்காட்டில் தேனிலவுக்கு அறையொதுக்க வேண்டுமா
என்ன சேவை வேண்டும் உங்களுக்கு
பத்துபேர் கொண்ட குழுவுக்கு ஒரு சிம் வீதமாக
அந்தரங்க அவசங்கள் மிகு பிரியங்கள் உடன்
பகிர்ந்தளிக்கப்படும்
முழுநேர பரிசாகரத்தில் நிபந்தனையற்ற அன்பில்
பிரதியுபகாரம் கருதா பெருந்தொண்டில்
முக்குளித்து இளைப்பாறும் இலக்கிய திரு உருக்கள்
நெய்வதை விடுத்து நினைத்துக்கொண்டாற்போல
மொ. ப. சா
எழுத்து ஆக்கமென்றேதோ அவ்வப்போது
உளறிக்கொட்டி கிளறி மூடுவார்
கண்டு காணாதவர்களதைப் பெண்டு பிடித்து
காடு மேடெல்லாம் இழுத்தடிக்க
எங்கும் பிரவாகித்தது இலக்கியப் பெருவெள்ளம்
பீடம் புடைத்து மேடாகி
நிறைந்த வெள்ளாமை மேலான அறுவடை
எண்ணமெல்லாம் பொய் எமனோலை மெய்
இப்படியாகத்தானே
நேரத்திற்கு அரைப்படி பால்குடித்த மதர்ப்பில்
தூங்கப்பூனை என்னை விட
பெரிய புளுத்தி இங்காரடா என்று
அந்த தூலத்திற்கும் இந்த தூலத்திற்கும்
ஆட்டம் போட
ஆடிக்கொண்டிருந்த பஞ்சைக்கயிறு அறுந்துவிட
குப்புற விழுந்த பாவை தன் சாவை
நல்ல விலைக்கு விற்றுவிட்டது
செத்தும் கொடுத்தான் சீதக்காதி
ஆதாயமில்லாது இந்த செட்டி ஆற்றைக்கட்டி இறைப்பானா என்று கேட்டால்
கோடுவிட்டு கோடு தாண்டா குருகுல வமிசம்
குறுக்கில் மிதித்துச் சொல்கிறது
நாய்தான் குரைக்கனும் கழுதைதான் கெனைக்கனும்.

உரியவர்களை உரிய இடத்தில் வைக்கும் பண்பு இன்றும் நமக்கு வாய்க்கவில்லை என்பது எண்ணி வெட்கப்படவேண்டிய சங்கதி. அரசு, அதிகாரம், சமூகம், கலை, இலக்கியம், பண்பாடு என்று துறை எதுவென்றாலும் உணர்வாளர்களுக்கு இடமின்றி போவது தற்செயல் அல்ல. சீர்கேடுகள் யாவும் தனி மனிதனிடம் இருந்தே தொடங்குகிறது. தகுதி திறமை என்பதையெல்லாம் நமக்கு வேண்டாத அலகுகள் ஆக்கி ஆண்டுகள் பலவாயிற்று. மற்றவை பேணுவது, எதிர்கொள்வது எல்லாம் பண்புகெட்ட செயல்களாகி விட்டது. சுயம், தனித்தன்மை, சொந்தகாலில் நிற்பது இவற்றை எல்லாம் வீசம் என்ன விலை என்று கேக்கிறார்கள்.

சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம், பருமரத்தை அண்டி வாழும் சமயோசிதம் இவைதான் நாம் உடன் பயில வேண்டிய, நெறிமுறைகள், படிப்பினைகள், வாழ்வாதார கூறுகள்.

சமரசமே ஜெயம்.

பராரி இலக்கியம் படைத்தலாகாதென்று நல்ஊழியஞ் சொன்னார் உலக இலக்கிய பிரகஸ்பதி ஒருவர். விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்.

பரவலான கவனம் பெற்றது சென்ற இதழ். பங்கு பற்றிய அன்பர்கள் யாவருக்கும் நன்றி.

இது இழப்புகளின் காலம். ஆளுமைகள் ஒவ்வொருவராக நம்மை பிரிந்தபடியே இருக்கிறார்கள்.

ந.முத்துசாமி, ஐராவதம் மகாதேவன், பிரபஞ்சன் ஆகியோருக்கு மணல்வீடு வாசகர் சார்பாக தனது நெஞ்சார்ந்த அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

தலைவாசல் இதழ் 39

அன்புடையீர் வணக்கம்.

அடர்ந்து அடர்ந்து ஓர் இதழ் வெளியீட்டில் தாமதங்கள் நேர்வது அத்துணை யதார்த்தமான சமாச்சாரமல்ல, இந்தப்பூட்டு கூடிய மட்டும் நான் இழுத்தடித்தேன். காரணங்கள் பல செயல் ஒன்றுதான். படைப்புகளை உவந்தளிக்கிறதும் உருத்துடன் வாசிக்கிறதுமான போக்குச் சுத்தமாகவே இல்லை. அங்க அவயங்கள் அவற்றின் உணர்வுகளின்றிப் பூச்சு மேல் பூச்சாக ஒப்பனைகள் மாத்திரமே செய்யப்படுகின்றது. அதாவது வெறுங்கூட்டின் மீது மார்ப்பந்து வைத்துக்கொள்வது. பெரு வயிறு கொண்டது அறியாமல் சீமந்தம் வைக்கிற ஊத்தை சொத்தைகள் வெறுங்கூப்பாட்டில் சரக்கை விற்றுவிடலாம் என்றே கருதுகிறார்கள், கருத்து கந்தசுவாமிகள், பிளர்ப் பெரிய சுவாமிகள், கார்ப்பரேட் தரகர்கள் வழியமைந்த சந்தைக் காடுகளில். இங்கே இப்பேறுப் பெற்ற காத்திரமான சூழலில் சிறுசஞ்சிகை என்ற வஸ்துவுக்கு ஜோலி எதுவும் இல்லை என்பது மனம் கசக்கும் உண்மை. புளியேப்பக்காரர்களின் முன்பதாக அமுது படைப்பதா? இலக்கியப்புள்ளி என்ற பேர் இல்லாமலாகி விட்டால் வயிற்றுக்கஞ்சிக்கு பங்கமா வந்துவிடும்? ஆனால் அச்சிலே வார்ப்பது ஆகாவிட்டால் மிடாவிலே வார்ப்பது.

மானுடத்தின் உயிர் குடிக்கும் தீண்டாமை சுவர், மாணாக்கர் என்றும் பாராது வன்முறையைக் கட்டவிழ்க்கும் எதேச்சதிகாரம், சக உயிரியை பாலிச்சைக்குப் பலியிடும் காட்டுமிராண்டிகள், நித்தமோர் ஒடுக்குமுறை, நேரத்துக்கு ஒரு அடக்குமுறை மற்றும் அத்துமீறல் என அன்றாடம் நிகழ்ந்தேறும் அறப்பிறழ்வுகளுக்கெதிராக ஏதிலியாகப்பட்ட நமது இருத்தாசாயம் கொதித்தடங்கிக் கொதித்தடங்கி ஓர் உலைக்களமாகவே ஆகிவிட்டப்பிறகு, சூதுகளை எல்லாம் கவ்வும் படியான ஓராயுதம் அங்கே தோன்றியிருக்கலாகாதா? யாது செய்யவும் வக்கற்று, தலை ஒன்றுக்கு இருநூறு முதல் எழுநூறுவரை சன்மானம் பெற்று, விலையில்லா வாக்குகளை வாரி வழங்கி, மீண்டும் மீண்டும் ஆண்டைகளைப் பீடத்தில் குந்த வைத்திருக்கிறோம் அரும்பாடுபட்டு. இனி வேண்டியமட்டும் நம்மை அவர்கள் வெச்சி வெச்சி செய்வார்கள். வாழிய செந்தமிழ்! வாழிய நற்றமிழ்! வாழிய பாரத மணித்திரு நாடு!

முலைக்குத்து அறியாத சவலைப்பிள்ளைகளாய் இருக்கிறார்கள் ஆசான்களின் சீடப்பிள்ளைகள். ஈனவும் தெரியவில்லை நக்கவும் தெரியவில்லை. மட்டித்தண்ணி வைத்தாலும் உர்ர்... மடக்கி கழுத்தையறுத்தாலும் உர்ர்... சுயமாகவொரு சிந்தனை தெரிவு தேடல் என்பதோ முரண்படும் மற்றமைகளிடம் உறவு பேணி வார்த்தையாடுகிற வழக்கமென்பதோ அறவே கிடையாது. அட ஆய் கழுவ வேண்டுமென்றாலும் ஆசான்கள் வேண்டுமென்கிறார்கள் அய்யா. கிணற்றுக்குள்ளே தாண்டி தாண்டி சமுத்திரத்தை காட்டுகிறதுகள் இணையத் தவளைகள்.

பந்திக்கு வேண்டாமென்றாலும் இலையோட்டை இலையோட்டை என்கிற இலக்கியத் தாத்தாக்கள் சில பேர் இங்கே களமாடுகிறார்கள். பார்த்த வேலைகளுக்கெல்லாம், ஈபிஎப், பென்ஷன் எல்லாம் வாங்கிக்கொண்டாயிற்று. ஒழிந்த வேளைகளில் உதிரியாக இலக்கிய ஷேவை. பெயர்த்திகளை மடியில் கோர வைத்து தலையைத் தடவி மூளையை உறிஞ்சுவது அவர்கள் பிரியம். முன்னுரை என்கிற பெயரில் ஒன்றுக்கும் ஆகாத குப்பைகளுக்கெல்லாம் வக்கணையாக வியாக்கினங்கள் எழுதி நம்புகிறபேர்களின் காசை கரியாக்குகிறார்களே அதைக்கண்டால்தான் நமக்குத் தலைவில் எரிகிறது. மரம் முத்தினால் சேகு, மனுஷன் முத்தினால் குரங்குதான் போல.

இவ்விடம் சிறந்த முறையில் பிளர்ப் எழுதி தரப்படும். முன்னட்டை, முன் உள்ளட்டை, பின்னட்டை, பின் உள்ளட்டை இவற்றுக்குத் தக்கபடியும், அங்குப் பங்காளிகள், அத்தைமார் மாமன்மார், விட்டவர்கள் உருவின பேர்கள் இவர்களுக்குத் தக்கபடியும், மற்றும் ஆளுமைகளின் இன்றைய பொருளாதார ஸ்திதிக்கு தக்கபடியும், பதிப்பாளர்கள் பணிவான வேண்டுகோள்களுக்கு இணங்கியும்...

எஞ்சிய களத்திலிங்கு இலக்கியக் கம்பு சுற்றும் மிட்டாய் மாமாக்கள் மலிந்து வருகிறார்கள் நடப்பில். இவர்களது தலையாயக் கடமை, கூடுகைகளில் கழுத்து நரம்பு புடைக்க உரையாற்றுவது. (உபரியாகத் தினசரிகளில் பட்டியலிடுவது, கூட்டங்களில் ஆசி வழங்குவது) கூட்டத்துக்கு வர பஸ்சுக்குக் கிளம்புகையில் பிரதியை கையில் கொடுத்தால் போதும். ஆழ்ந்த வாசிப்பின் வழி அப்பிரதியை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்வார்கள். (தடியுமொடியாது பாம்பூஞ் சாகாது) மேடை ஏறும்போது கண்ணாடியை வசதிபோல் வீட்டில் வைத்துவிட்டு வந்திருப்பார்கள்.

சங்கபலகாரம் முன்னமர்ந்து ஓயாது ஈயோட்டிக்கொண்டிருக்கும்
நக்கீரர் கையிலொரு அஞ்சி பத்தாவது வையுங்கள்
உதடு மன்றாட உள்ளிருந்த பல்லும்போய்ப் புலம்பித்தவிக்குமந்த
வாய்க்கொரு குவளை தேத்தண்ணீர் வாங்கியூற்றுங்கள்
உலையாய் கொதிக்குமிதயம் சற்றிதங் காணட்டும்
இனமான தமிழ்மகனின் மொழிப்பற்றை இனப்பற்றை
மேல் சென்றிடித்தலை நலம்விரும்பியின் கரிசனத்தை
துதிபாடிகளின் பிழைப்புவாதமென மொழி பெயர்க்க
எவ்விதம் அய்யா துணிகிறீர்கள்
ஈனங்கெட்ட இலக்கியப்பதடிகளின் வாடகைச்சரக்கில் மலிந்திருக்கும்
சொற்குற்றம் பொருட்குற்றம் தாளப்பிழை மேளப்பிழை
ஜதிப்பிழை சுதிப்பிழை கண்டு தாளாதேதோ அங்கலாய்க்கிறார்
பொற்கிழியில் முடிந்திருக்கும் ஆயிரம் வராகன்களுக்கு
ஆசைப்படவேண்டமென அவரெப்போது சொன்னார்
கெண்டையைப் போட்டுத்தானே விராலை பிடிக்க வேணும்
உறி கழண்ட நெய்ச்சட்டியுடைந்தால் நாய்க்காதாயமென்பதும்
ஓமலிட்டால் பண்டங்களேதும் வீடு வந்து சேராதென்பதும்
அவரறியாத பழைமையா - கொக்கறியாத குளமேது
எருமை உழுகிறது உண்ணிக்கேன் விடாய்க்கிறது
அல்லும் பகலும் அறுபது நாழிகையும் ரத்தம் சிந்தி
மானம் காக்கிறவர் சகோதர வாஞ்சையை இப்படியா சாடுவது
ஆகாயம் பூமி சாட்சி அடியேன் சொல்கிறேன்
கிடாய் பதுங்குவதெல்லாம் பாய்ச்சலுக்கு இடம்

புதியதாகக் களம் காண புகுந்திருக்கும் இளையவர்களின் இலக்கு இலக்கியமாக இருப்பதில்லை. தகுதி திறமை இல்லையென்றாலும் அண்டிப்பிழைக்க ஸ்கோப் உள்ள மல்டினேஷன் கம்பெனிகள் தேடியலையும் பட்டதாரிகள் போல உள்ளீடு உணர்வுத்தீவிரம் என்பது மருந்துக்குக் கூட இல்லையென்றாலும் வெளிச்சம் பாய்ச்சும் மேடைகளைக் கைக்காசு செலவு செய்து தேடித் திரிகிறார்கள். மூத்தவர்களைச் சந்திப்பது, முசுவாக இலக்கியம் பேசுவது, செட் - வெட் சென்ட் அடித்து இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்வது, சிநேகிதர்களுடன் கதைப்பது இவற்றையெல்லாம் இலக்கியத்தேட்டம் தாகமெனக் கொள்ளமுடியாது. கூத்தாடி சிலம்பம் படைவெட்டுக்கு உதவாது.

தெல்லுமணிகளைப்போலப் பிள்ளைகள் பிறந்தீர்கள்
நீங்கள்தானப்பா உஸ்தியமானவர்கள்
தொடுதிரை மடிக்கணணியில் தரிசனம் நகக்கண்ணில் பூதலம்
பிடித்தகிளை முறிந்து மிதித்தகொம்பும் ஒடிந்தால் நம் இனத்திற்கு ஈனம்
கதியற்ற நாய்களுக்கேது அம்மாவாசை கும்பிடிக்கை
படகினடியில் வெப்பம் - இசைக்க மறந்த காற்றின் பாடல் யாரறிவார்?
நெரிந்து - நெரிக்கட்டு - பசலை - கைம்மண்
புள்ளிபொட்டை எங்கு மேய்கிறதோ
முன்பொரு காலத்தில் ஆயிரத்தெட்டு கிளிகளிருந்தன
ஒளிப்புகாவென் அழகிய வீடு
அபத்தங்களின் சிம்பொனியை நினைத்தால்
அழுவாச்சி வருதுங் சாமி
எம்புளுலே செம்புளுல் - எம்புளுலே செம்புளுல்
அடிக்கட்டையில் அமர்ந்து
உன் குறி நீவிக்கொண்டிரு என் ஆலமரத்துச்செல்லமே.

சூழலியல், பொருளாதாரம், சமூகம், அரசியல், கலை, இலக்கியம், சிறு சஞ்சிகை, ஓவியம், சினிமா, ஊடகம், நவீன அரங்காற்றுகை, நாட்டார் கலைகள், நிழற்படக்கலை ஆகிய துறைகளில் களமாடும் ஆளுமைகளோடு, அவரவர் களம் குறித்த பார தூரமான பரிவர்த்தனை, புரிந்துணர்வு வேண்டி, செயற்தளத்தில் அவர்களுடன் செயல்பட வேண்டி ஓர் ஒருங்கிணையும் கூடுகையையும் அதனையட்டி இயங்க தொடர் செயல் திட்டங்களையும் மணல்வீடு இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்யவிருக்கிறது. ஆர்வமுள்ள அன்பர்கள் கலந்துகொள்ள வேண்டுகிறேன். நிகழிடம், நாள், நேரம் - ஏர்வாடி பிரதி மாதம் நான்காம் ஞாயிறு மாலை ஐந்து மணிக்கு.

கலைஞர்கள் வாழ்வை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதன் மூலம் தொல்கலைகளை மீட்டெடுப்பது, மேம்படுத்துவது, ஆவணமாக்குவது, அவற்றின் தொன்மம் மாறாது பாரம்பர்யம் வழுவாது நமது அடையாளங்களாக வளர் தலைமுறையினர்க்குக் கையளிப்பது என்று மேல் சொன்ன களப்பணிகளில் பதினைந்து ஆண்டுக் காலங்களாக முனைப்புடன் செயல்பட்டு வரும் களரி தொல்கலைகள் & கலைஞர்கள் மேம்பாட்டு மையம், கலை இலக்கிய உணர்வாளர்களுக்கு மரியாதை செய்யும் முகமாக சென்ற 11 - 01 - 2020 அன்று மதியம் மூன்று மணிக்கு, மேட்டூர் வட்டம், மேச்சேரி அருகமைந்த, ஏர்வாடி கிராமத்தில் நிகழ்த்திய மக்கள் கலை இலக்கிய விழாவிற்குக் கை கொடுத்த பேர்களுக்கும் நேரில் வந்து கலந்துகொண்டுச் சிறப்பித்த பேர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.