தலைவாசல் இதழ் 37-38

அன்புடையீர், வணக்கம்.
இரண்டாயிரத்து பத்தொன்பதில் இருக்கிறோம் நாம் ஏனைய பிற துறைகள் கண்டிருக்கும் உயரம் நம் எழுத்து துறையும் கண்டிருக்க வேண்டும். முழங்கால் மட்டமாவது ஏறியிருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். படைப்பாக்க செயற்பாடுகளுக்கான கற்கை நெறிகள் விளைந்து ஊடகச்சந்தைகளில் ஏகதேசமாக எங்கும் மலிந்து கிடக்கின்றன. மட்டுமல்லாது நம் மேசய்யாக்கள் உப்புக்கும் புளிக்கும் ஒலிவ மலையிற் கண்ணிருந்து உபதேசிக்கிறார்கள் கருத்தாய். ஒரு ஜமாவில் ஆடும் கூத்தாடி இன்னொரு ஜமாவில் உயிர் போகிறதென்றாலும் ஆடுவதில்லை. சொந்த ஜாதியில் மாத்திரம் கொண்டு கொடுத்து சம்மந்தம் கலக்கும் இவர்கள் கதைப்பது எப்போதும் குன்னூத்திநாயம். கதையோ கவிதையோ கட்டுரையோ நாவல் பகுதியோ ஒரிதழுக்கு இன்று வரும் படைப்புகள் அதிகமும்
உப்பு சப்பு இல்லாதவைகளாகவே உள்ளன. முன்னோடிகளை விஞ்சிய படைப்புக்களாக அவைகள் இருப்பதில்லை. ஒரு அச்சில் உருக்கி வார்த்தது போல சர்வம் நகல் மயம். சுட்டி ஒரு வார்த்தை சொல்வதற்கில்லை. நொய்யரிசிகள் கொதி பொறுப்பதில்லை. உடனே விடைத்துக் கொண்டுவிடுகிறார்கள் அல்லது தொடர்பறுத்துக்கொண்டு தூர்ந்து போய்விடுகிறார்கள் பசை தேடி. இந்தப் பிரகஸ்பதிகளை வைத்துக்கொண்டு இலக்கியம் பண்ணுவது மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பது போன்ற வெட்டிவேலை என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. தேடிக்காணாத விடாய்ப்புக்கு ஆறுதலாய் ஆதவனின் சிறுகதை இங்கே இவ்விதழில் மீளவும் பிரசுரம் காண்கிறது.

கூடிவிட்டது சந்தை
துண்டுப்போட்டு மூடி
தடையற நடக்குது
தரங்கெட்ட வணிகம்.

வாகன சாரதி முதல் வண்டியில் வைத்து பழங்கள் விற்கும் வேவாரி வரை முதல்வரோடு நேரடி டீலிங் வைத்திருக்கிறார்கள். அங்கன்வாடி ஆயா பணி நியமனமா, ஆசிரியை பணியிட மாறுதலா ஆய்வாளர் காவல்துறை பணி நியமனமா என்ன செய்யவேண்டுமுங்களுக்கு கைல காசு வாயில தோச.

அன்னாரது கைகளில் லட்சங்கள் வைத்து நேர்வழியில் காரியம் சாதிக்கிறார்கள். வருவாய் கோட்டாட்சியர் ஒருவர் ஆளும் கட்சியின் சார்பாக நடுசாமத்தில் வந்து ஓட்டுக்கு இவ்வளவு என்று கச்சிதமாக பணம் பட்டுவாடா செய்து கடமையாற்றுகிறார். வாசல் தாண்டி போய்விட்ட அரசியல்வாதியின் அல்லக்கை ஒருவனை தனது ஓட்டுக்கு காசு கொடுக்காத குற்றத்துக்கு நடுத்தெருவில் சட்டையைப் பிடித்து நாயம் கேக்கிறான் நமது குடிமகன். போடும் ஓட்டுக்கு கையேந்தும் வண்ணமாகத்தான் இருக்கிறது நமது பூளவாக்கு. தெருவெல்லாம் குப்பைக்கூளம் என்று வகை தொகை தெரியாது கூவும் நாம் நம்மிடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள ஆகாதா? தடங்கண்டு நெறி செல்ல நம்மை தடுப்பவர் யார்? நாம்தான் உக்காரச் சொன்னால்
படுத்துக்கொள்பவர்கள் ஆயிற்றே.

கேடெலாங் கூடித் திரண்டுக் கொண்டுகுடி
கேடுட லெடுத்த வம்பன்
கேட்டபேர் கண்டபேர் காதுகண் ணோவெடுக்
கின்றவடி யுண்ட வம்பன்
நாடெலா மிவனையு நாடலா மோவென்று
நகையாட லுண்ட வம்பன்
நாடோறு மாடுபோ லோடோடி யேதின்று
நாவுருசி கண்ட வம்பன்
மேடுமுட்டத் துருத் திக்குட் பருக்கைமிக
வெட்டியே வீசு வம்பன்
மெத்தவம் புற்றவடி யேனுமுமை நம்பினேன்
மேன்மைதந் தாளு தற்கே
மாடம்ப ஜம்பநடை யுள்ளநீர் பின்றொடர
வள்ளலிறசூல் வருகவே
வளருமரு ணிறைகுணங் குடிவாழு மென்னிருகண்
மணியே முகியித்தீனே.

சென்ற இதழ் தலையங்கம் இலக்கிய தளமெங்கும் கால் பாவியிருக்கும் கயமைப்போக்குகள் குறித்த விமர்சனமாக எழுதப்பட்டிருந்தது. உருக்கின நெய் வார்த்து அமுது படைத்தாலும் கண்ட ஞாயந்தானே சொல்லவேண்டும். ஆனால் மாண்பமை எழுத்தாளர் பலருக்கு அது மனக்காயத்தை உண்டு செய்துவிட்டதாக அறிகிறேன். விலையில்லா கண்டனங்கள் பல வீடு தேடி வந்து மிரட்டியதுடன் வீட்டுப்பெண்டுகளை விலைக்கு விற்று இதழ் நடத்த புத்தியும் உரைத்தார்கள். எலும்புக்கேற்ற குரைப்பு இருக்கத்தானே செய்யும். நானொரு ஊரறிந்த வேசி (சூப்பர் ஐயிட்டம்) பல பேர் நாற்றங்களை கண்டுதான் தொழுவாடு நடக்கிறது. ஜல ஜலப்புக்கு அஞ்சாது நரி.

மற்றொன்று

உன்னதமானவரென்று சமூகத்தில் மகத்துவப்படுத்தும் ஓர் பிரகிருதியின் பிரலாபங்களை வேண்டுவோர் பிரதிகளில் எழுதி மதிப்பு கூட்டவேணும் அல்லது அவர் விட்டு சென்ற சேவையைத் தொட்டு தொடர வேணும் அல்லது மாநிலமெங்கும் சிலை வைத்து தொழுகைகள் வழிபாடுகள் நடத்தி வணங்கவேணும் அல்லது மஹாநுபாவரின் பெயரால் தாம் தொண்டில் பழுத்து தொங்கவேணுமே அன்றி, தீப்பாயாமல் கொக்கரிக்கக் கூடாது. அது சரி ஒப்பிலிக்கும் ஒசு பாடி தப்பிலிக்கும் எதற்கப்பனே பத்திர ஓலை.

வஞ்சிக்கப்பட்டவனின் குரல், ஏமாற்றப்பட்டவனின் குரல், இழந்தவர் தம் குரல் இப்படித்தான் ஒலிக்க வேண்டும் என்று சொல்ல எந்த கிரையஸ்தருக்கும் யோக்கியதை கிடையாது.

கலை, இலக்கியம், சிறு சஞ்சிகை, ஓவியம், சினிமா, ஊடகம், நவீன அரங்காற்றுகை, நாட்டார் கலைகள், நிழற்படக்கலை, சூழலியல், சமூகம், அரசியல் ஆகிய துறைகளில் களமாடும் இளவல்களோடு அவரவர் களம் குறித்த பரிவர்த்தனை புரிந்துணர்வு வேண்டி ஒருங்கிணையும் முன்னெடுப்பாக தொடர் கலந்துரையாடல் ஒன்றை மணல்வீடு இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்யவிருக்கிறது. (முறையான அழைப்பு
பிறகு) ஆர்வமுள்ள அன்பர்கள் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.

இவண்
மு.ஹரிகிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *