தலைவாசல் இதழ் 39

மு.ஹரிகிருஷ்ணன்

பகிரு

அன்புடையீர் வணக்கம்.

அடர்ந்து அடர்ந்து ஓர் இதழ் வெளியீட்டில் தாமதங்கள் நேர்வது அத்துணை யதார்த்தமான சமாச்சாரமல்ல, இந்தப்பூட்டு கூடிய மட்டும் நான் இழுத்தடித்தேன். காரணங்கள் பல செயல் ஒன்றுதான். படைப்புகளை உவந்தளிக்கிறதும் உருத்துடன் வாசிக்கிறதுமான போக்குச் சுத்தமாகவே இல்லை. அங்க அவயங்கள் அவற்றின் உணர்வுகளின்றிப் பூச்சு மேல் பூச்சாக ஒப்பனைகள் மாத்திரமே செய்யப்படுகின்றது. அதாவது வெறுங்கூட்டின் மீது மார்ப்பந்து வைத்துக்கொள்வது. பெரு வயிறு கொண்டது அறியாமல் சீமந்தம் வைக்கிற ஊத்தை சொத்தைகள் வெறுங்கூப்பாட்டில் சரக்கை விற்றுவிடலாம் என்றே கருதுகிறார்கள், கருத்து கந்தசுவாமிகள், பிளர்ப் பெரிய சுவாமிகள், கார்ப்பரேட் தரகர்கள் வழியமைந்த சந்தைக் காடுகளில். இங்கே இப்பேறுப் பெற்ற காத்திரமான சூழலில் சிறுசஞ்சிகை என்ற வஸ்துவுக்கு ஜோலி எதுவும் இல்லை என்பது மனம் கசக்கும் உண்மை. புளியேப்பக்காரர்களின் முன்பதாக அமுது படைப்பதா? இலக்கியப்புள்ளி என்ற பேர் இல்லாமலாகி விட்டால் வயிற்றுக்கஞ்சிக்கு பங்கமா வந்துவிடும்? ஆனால் அச்சிலே வார்ப்பது ஆகாவிட்டால் மிடாவிலே வார்ப்பது.

மானுடத்தின் உயிர் குடிக்கும் தீண்டாமை சுவர், மாணாக்கர் என்றும் பாராது வன்முறையைக் கட்டவிழ்க்கும் எதேச்சதிகாரம், சக உயிரியை பாலிச்சைக்குப் பலியிடும் காட்டுமிராண்டிகள், நித்தமோர் ஒடுக்குமுறை, நேரத்துக்கு ஒரு அடக்குமுறை மற்றும் அத்துமீறல் என அன்றாடம் நிகழ்ந்தேறும் அறப்பிறழ்வுகளுக்கெதிராக ஏதிலியாகப்பட்ட நமது இருத்தாசாயம் கொதித்தடங்கிக் கொதித்தடங்கி ஓர் உலைக்களமாகவே ஆகிவிட்டப்பிறகு, சூதுகளை எல்லாம் கவ்வும் படியான ஓராயுதம் அங்கே தோன்றியிருக்கலாகாதா? யாது செய்யவும் வக்கற்று, தலை ஒன்றுக்கு இருநூறு முதல் எழுநூறுவரை சன்மானம் பெற்று, விலையில்லா வாக்குகளை வாரி வழங்கி, மீண்டும் மீண்டும் ஆண்டைகளைப் பீடத்தில் குந்த வைத்திருக்கிறோம் அரும்பாடுபட்டு. இனி வேண்டியமட்டும் நம்மை அவர்கள் வெச்சி வெச்சி செய்வார்கள். வாழிய செந்தமிழ்! வாழிய நற்றமிழ்! வாழிய பாரத மணித்திரு நாடு!

முலைக்குத்து அறியாத சவலைப்பிள்ளைகளாய் இருக்கிறார்கள் ஆசான்களின் சீடப்பிள்ளைகள். ஈனவும் தெரியவில்லை நக்கவும் தெரியவில்லை. மட்டித்தண்ணி வைத்தாலும் உர்ர்... மடக்கி கழுத்தையறுத்தாலும் உர்ர்... சுயமாகவொரு சிந்தனை தெரிவு தேடல் என்பதோ முரண்படும் மற்றமைகளிடம் உறவு பேணி வார்த்தையாடுகிற வழக்கமென்பதோ அறவே கிடையாது. அட ஆய் கழுவ வேண்டுமென்றாலும் ஆசான்கள் வேண்டுமென்கிறார்கள் அய்யா. கிணற்றுக்குள்ளே தாண்டி தாண்டி சமுத்திரத்தை காட்டுகிறதுகள் இணையத் தவளைகள்.

பந்திக்கு வேண்டாமென்றாலும் இலையோட்டை இலையோட்டை என்கிற இலக்கியத் தாத்தாக்கள் சில பேர் இங்கே களமாடுகிறார்கள். பார்த்த வேலைகளுக்கெல்லாம், ஈபிஎப், பென்ஷன் எல்லாம் வாங்கிக்கொண்டாயிற்று. ஒழிந்த வேளைகளில் உதிரியாக இலக்கிய ஷேவை. பெயர்த்திகளை மடியில் கோர வைத்து தலையைத் தடவி மூளையை உறிஞ்சுவது அவர்கள் பிரியம். முன்னுரை என்கிற பெயரில் ஒன்றுக்கும் ஆகாத குப்பைகளுக்கெல்லாம் வக்கணையாக வியாக்கினங்கள் எழுதி நம்புகிறபேர்களின் காசை கரியாக்குகிறார்களே அதைக்கண்டால்தான் நமக்குத் தலைவில் எரிகிறது. மரம் முத்தினால் சேகு, மனுஷன் முத்தினால் குரங்குதான் போல.

இவ்விடம் சிறந்த முறையில் பிளர்ப் எழுதி தரப்படும். முன்னட்டை, முன் உள்ளட்டை, பின்னட்டை, பின் உள்ளட்டை இவற்றுக்குத் தக்கபடியும், அங்குப் பங்காளிகள், அத்தைமார் மாமன்மார், விட்டவர்கள் உருவின பேர்கள் இவர்களுக்குத் தக்கபடியும், மற்றும் ஆளுமைகளின் இன்றைய பொருளாதார ஸ்திதிக்கு தக்கபடியும், பதிப்பாளர்கள் பணிவான வேண்டுகோள்களுக்கு இணங்கியும்...

எஞ்சிய களத்திலிங்கு இலக்கியக் கம்பு சுற்றும் மிட்டாய் மாமாக்கள் மலிந்து வருகிறார்கள் நடப்பில். இவர்களது தலையாயக் கடமை, கூடுகைகளில் கழுத்து நரம்பு புடைக்க உரையாற்றுவது. (உபரியாகத் தினசரிகளில் பட்டியலிடுவது, கூட்டங்களில் ஆசி வழங்குவது) கூட்டத்துக்கு வர பஸ்சுக்குக் கிளம்புகையில் பிரதியை கையில் கொடுத்தால் போதும். ஆழ்ந்த வாசிப்பின் வழி அப்பிரதியை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்வார்கள். (தடியுமொடியாது பாம்பூஞ் சாகாது) மேடை ஏறும்போது கண்ணாடியை வசதிபோல் வீட்டில் வைத்துவிட்டு வந்திருப்பார்கள்.

சங்கபலகாரம் முன்னமர்ந்து ஓயாது ஈயோட்டிக்கொண்டிருக்கும்
நக்கீரர் கையிலொரு அஞ்சி பத்தாவது வையுங்கள்
உதடு மன்றாட உள்ளிருந்த பல்லும்போய்ப் புலம்பித்தவிக்குமந்த
வாய்க்கொரு குவளை தேத்தண்ணீர் வாங்கியூற்றுங்கள்
உலையாய் கொதிக்குமிதயம் சற்றிதங் காணட்டும்
இனமான தமிழ்மகனின் மொழிப்பற்றை இனப்பற்றை
மேல் சென்றிடித்தலை நலம்விரும்பியின் கரிசனத்தை
துதிபாடிகளின் பிழைப்புவாதமென மொழி பெயர்க்க
எவ்விதம் அய்யா துணிகிறீர்கள்
ஈனங்கெட்ட இலக்கியப்பதடிகளின் வாடகைச்சரக்கில் மலிந்திருக்கும்
சொற்குற்றம் பொருட்குற்றம் தாளப்பிழை மேளப்பிழை
ஜதிப்பிழை சுதிப்பிழை கண்டு தாளாதேதோ அங்கலாய்க்கிறார்
பொற்கிழியில் முடிந்திருக்கும் ஆயிரம் வராகன்களுக்கு
ஆசைப்படவேண்டமென அவரெப்போது சொன்னார்
கெண்டையைப் போட்டுத்தானே விராலை பிடிக்க வேணும்
உறி கழண்ட நெய்ச்சட்டியுடைந்தால் நாய்க்காதாயமென்பதும்
ஓமலிட்டால் பண்டங்களேதும் வீடு வந்து சேராதென்பதும்
அவரறியாத பழைமையா - கொக்கறியாத குளமேது
எருமை உழுகிறது உண்ணிக்கேன் விடாய்க்கிறது
அல்லும் பகலும் அறுபது நாழிகையும் ரத்தம் சிந்தி
மானம் காக்கிறவர் சகோதர வாஞ்சையை இப்படியா சாடுவது
ஆகாயம் பூமி சாட்சி அடியேன் சொல்கிறேன்
கிடாய் பதுங்குவதெல்லாம் பாய்ச்சலுக்கு இடம்

புதியதாகக் களம் காண புகுந்திருக்கும் இளையவர்களின் இலக்கு இலக்கியமாக இருப்பதில்லை. தகுதி திறமை இல்லையென்றாலும் அண்டிப்பிழைக்க ஸ்கோப் உள்ள மல்டினேஷன் கம்பெனிகள் தேடியலையும் பட்டதாரிகள் போல உள்ளீடு உணர்வுத்தீவிரம் என்பது மருந்துக்குக் கூட இல்லையென்றாலும் வெளிச்சம் பாய்ச்சும் மேடைகளைக் கைக்காசு செலவு செய்து தேடித் திரிகிறார்கள். மூத்தவர்களைச் சந்திப்பது, முசுவாக இலக்கியம் பேசுவது, செட் - வெட் சென்ட் அடித்து இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்வது, சிநேகிதர்களுடன் கதைப்பது இவற்றையெல்லாம் இலக்கியத்தேட்டம் தாகமெனக் கொள்ளமுடியாது. கூத்தாடி சிலம்பம் படைவெட்டுக்கு உதவாது.

தெல்லுமணிகளைப்போலப் பிள்ளைகள் பிறந்தீர்கள்
நீங்கள்தானப்பா உஸ்தியமானவர்கள்
தொடுதிரை மடிக்கணணியில் தரிசனம் நகக்கண்ணில் பூதலம்
பிடித்தகிளை முறிந்து மிதித்தகொம்பும் ஒடிந்தால் நம் இனத்திற்கு ஈனம்
கதியற்ற நாய்களுக்கேது அம்மாவாசை கும்பிடிக்கை
படகினடியில் வெப்பம் - இசைக்க மறந்த காற்றின் பாடல் யாரறிவார்?
நெரிந்து - நெரிக்கட்டு - பசலை - கைம்மண்
புள்ளிபொட்டை எங்கு மேய்கிறதோ
முன்பொரு காலத்தில் ஆயிரத்தெட்டு கிளிகளிருந்தன
ஒளிப்புகாவென் அழகிய வீடு
அபத்தங்களின் சிம்பொனியை நினைத்தால்
அழுவாச்சி வருதுங் சாமி
எம்புளுலே செம்புளுல் - எம்புளுலே செம்புளுல்
அடிக்கட்டையில் அமர்ந்து
உன் குறி நீவிக்கொண்டிரு என் ஆலமரத்துச்செல்லமே.

சூழலியல், பொருளாதாரம், சமூகம், அரசியல், கலை, இலக்கியம், சிறு சஞ்சிகை, ஓவியம், சினிமா, ஊடகம், நவீன அரங்காற்றுகை, நாட்டார் கலைகள், நிழற்படக்கலை ஆகிய துறைகளில் களமாடும் ஆளுமைகளோடு, அவரவர் களம் குறித்த பார தூரமான பரிவர்த்தனை, புரிந்துணர்வு வேண்டி, செயற்தளத்தில் அவர்களுடன் செயல்பட வேண்டி ஓர் ஒருங்கிணையும் கூடுகையையும் அதனையட்டி இயங்க தொடர் செயல் திட்டங்களையும் மணல்வீடு இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்யவிருக்கிறது. ஆர்வமுள்ள அன்பர்கள் கலந்துகொள்ள வேண்டுகிறேன். நிகழிடம், நாள், நேரம் - ஏர்வாடி பிரதி மாதம் நான்காம் ஞாயிறு மாலை ஐந்து மணிக்கு.

கலைஞர்கள் வாழ்வை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதன் மூலம் தொல்கலைகளை மீட்டெடுப்பது, மேம்படுத்துவது, ஆவணமாக்குவது, அவற்றின் தொன்மம் மாறாது பாரம்பர்யம் வழுவாது நமது அடையாளங்களாக வளர் தலைமுறையினர்க்குக் கையளிப்பது என்று மேல் சொன்ன களப்பணிகளில் பதினைந்து ஆண்டுக் காலங்களாக முனைப்புடன் செயல்பட்டு வரும் களரி தொல்கலைகள் & கலைஞர்கள் மேம்பாட்டு மையம், கலை இலக்கிய உணர்வாளர்களுக்கு மரியாதை செய்யும் முகமாக சென்ற 11 - 01 - 2020 அன்று மதியம் மூன்று மணிக்கு, மேட்டூர் வட்டம், மேச்சேரி அருகமைந்த, ஏர்வாடி கிராமத்தில் நிகழ்த்திய மக்கள் கலை இலக்கிய விழாவிற்குக் கை கொடுத்த பேர்களுக்கும் நேரில் வந்து கலந்துகொண்டுச் சிறப்பித்த பேர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer