தலைவாசல்


பகிரு

ஏர் பின்னது உலகென்று உலகத்திற்குச் சொன்னவர்கள் நாம். நமது உழவர் பெருமக்கள் தலைநகரில் மாதக்கணக்கில் மெய் வருத்தி போராடிக்கொண்டிருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியிருக்கின்றன. இதன் மீதான ஆளப்பட்ட ராசாவின் எதிர்வினை என்னவாக இருக்கிறது. கருதத்தக்கதாக இல்லையென்பதோடு கருத்தில் வைத்துச் சிந்திக்கவுமே இல்லை. குடலைப் பிடுங்கிக்காட்டினாலும் வாழை நார் என்பவர்தாமே நாம். எங்கோ மழை பெய்கிறது எங்கோ இடி இடிக்கிறது.


எவர் ஆட்சி பீடத்தில் இருந்தாலும் அரசு எந்திரம் இட்டதெல்லாம் சட்டமாகாது. உரியவர்கள் அதன் பாதக சாதகங்கள் குறித்து அலசி ஆராய்ந்து எதிர் பேசுவதும், ஏற்று அதை மறுபரிசீலனைச் செய்வதும் அரசு அதிகாரத்தின் தலையாயக் கடமை. ஊன்றக் கொடுத்த கோல் நம் உச்சியைப் பிளப்பதா? அரசுக்கட்டிலில் குந்த வைத்த குடிகள் முன்பு சமர்த்துக்காட்டுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமே அன்றி வேறில்லை. சொந்த ஆதாயங்களைப் பல்கிப்பெருக்கத் திட்டங்கொண்டே இந்தக் கேடுகெட்ட அரசு உழவர் போராட்டத்தின் கரங்களை முறித்துத் தரகு நிறுவனங்களுக்கு விளக்குப்பிடித்துச் சோரம் போகிறது. இடைத்தரகர்களுக்கு அங்கு வேலையே இல்லை. உழுகிறவனுக்கு நிலம் சொந்தம். விளைவிப்பவன்தான் அதன் விலை நிர்ணயிக்கவேண்டும். உள்ளளவும் நினைந்து உழவர் குடிகளின் பின் நிற்போம். அருவினை வாகை சூடுவதாக!


இசை ஆர்வலன் என்போன் மதுரை சோமுவின் குரலிசையையும், டோனி காட்லீப் படங்களில் அமைந்த இசைக்கோர்வைகளையும் செவிமடுக்க வேண்டும். அப்படியது கையால் ஆகவில்லை என்றால் அத்தன்மைவொரு நாள்பட்ட நோயே. இப்பெருவியாதிப் பீடித்த பேர்கள் மலிந்த தளமாகிவிட்டது தமிழ் இலக்கியத்தளம். கவிதைக்காரர்கள் சிலபேர்களுக்கு குலம் கோத்திரம் மாற்றிக் கவிதைகொள்ள முடியவில்லை. சிறுகதையாளர்களுக்குக் கவிதை என்றால் குமட்டுகிறது. நாவல் ஆசான்களுக்குச் சொல்லவே வேண்டாம் சாமான் எழும்பி நெற்றியில் அடிக்கிறது. அம்மா கோந்துகளுக்குச் சம்சாரம் எதுக்கு? மாடெதற்கு? கன்று எதற்கு? இந்த மானம் கெட்ட பிழைப்பெதற்கு? தூங்கப் பூனைகளுக்குத் தூலத்து மேல் ஆட்டமெதற்கு ?


எசக்கு அற்ற பொழுதில் பண்ணாடிகள் உருவாத்தாளை விளையாட்டுப்பிள்ளைகளிடம் வீசியெறிந்து அவை ஏமாந்த வேளையில் குறி ஊட்டக் கொடுத்து ஜுகம் காண்பதுபோல இங்கே சில மாமாக்கள் இலக்கியத்தின் அருமை உணராது பால் பிஞ்சுகளை இலக்கிய அங்கீகாரம் ப்ரோமோஷன் என மடித்தடவி கெட்டுப்போன பழத்தை வாயில் திணிக்கிறார்கள். அரும்புகளைத் தலை வருடி மூளை உறிஞ்சுவது அறமாகாதுதானே?


பொய் சாட்சிக்காரர்களின் கூண்டாகவிருக்கிறது விமரிசன களம். அவர் இவர் என்ற பேதமெல்லாம் இல்லை. ஆயிரம் பேரும் பால் வார்க்காது வெறும் தண்ணீரை வார்த்தவர்களே! பொறுப்பற்ற வேலைகளை ஏனடா செய்கிறீர்கள்? படைப்பென்றால் உயிர்ப்புப் பதைப்பு ஒரு துடிப்பு வேண்டாமா? செத்த பயபுள்ள படைப்புகளை மனசாட்சியென்பது கண் கண்மயிரளவுக்குக்கூட இல்லாமல் எப்படியடா பொதுவில்வந்து உலகம் உய்ய வந்த காவியமென்று புளுகித் தள்ளுகிறீர்கள்? பொண்டுகளென்றால் எதற்கடா ஓரம் சொல்கிறீர்கள் என்றால் என்ன செய்வது காலை விரித்துவிட்டாளே என்கிறானொரு ராஜகவி. போக்குவரத்துப் புழக்கமெல்லாம் கடந்த பிரதி விமர்சனம் இன்று கானல் நீராகிவிட்டது. நீ செத்த நாம்பு, நான் செத்த நாம்புகிறேன் என்று தவிப்பாற்றிக்கொள்வது, பிரதியை அந்தரங்க திம்பண்டமாக்கி கொண்டான் கொடுத்தானிடம் மட்டுமே பந்தி வைப்பது இவையெல்லாம் கண்ணியமான இலக்கியச் செயற்பாடு ஆகாது. அடர்ந்தடர்ந்து இந்த ஈன வேலைப் பார்க்கும் இழி பிறவிகளைக் கழுவேற்றும் மந்திரம் அவர்கள் ஊத்தை வாய் கண் பிறக்கும் சொல்லே அன்றி வேறில்லை. இன்னுமிருக்கிற பேர்பாதி புண்ணியர்கள் அண்டை பற்றி எரிகிறது, அத்த ஏன் சொல்வானேன் வாய் ஏன் நோவானேன் என்கிறார்கள்? விமர்சனம் ஒரு படைப்புக்கலை, பிரதியை ஊடறுத்து, ஒப்பு நோக்கி மதிப்பீட்டு அலகுகள், கோட்பாடுகள் வழி மேன்மைகள், போதாமைகள் குறித்து உரையாடாது இலக்கியம் மேம்பாடு காணாது. மூத்தவர்களும் இளையவர்களும உடன் களமிறங்க வேண்டிய காலமிதே.


கூத்துக்கலைஞர் கொம்பாடிபட்டி ராஜு சிறுவயதாக இருக்கும்போது எங்கள் வீட்டுப்பிள்ளை திரைக்கு வந்திருக்கிறது. நான் ஆணையிட்டால் பாடல் வெகு பிரசித்திப் பெற்றது அப்போது. மாரியம்மன் கோவில் திடலில் பொம்மை செட்டு விளம்பரத்துக்குப் பொய் வந்த களைப்பு நீங்க நம் தலைவன் விளையாட, நான் ஆணையிட்டால் பாடல் கோயில் ஒலிபெருக்கியில் ஒலிக்கக் கருப்பண்ணன் மகனுக்கு வந்ததே வேகம், தோள் துண்டை வாளாக்கிச் சுழற்ற, மணியக்காரர் மகனின் மானியை பதம் பார்த்துவிட்டது முடிச்சு. பையன் மயக்கமாகி கீழே சாய, ஊர் கூடி நிறைந்த சண்டையாகிவிட, செம்மலைப் பொம்மைப் பெட்டிக்குள் போட்டு ராஜூவை வீடு சேர்த்திருக்கிறார். அந்தக்கதை அப்படி இருக்க, அசட்டுப் பிள்ளைகள் சிலர் இங்கே காப்காவைப் படித்து விட்டுச் சாமத்தில் கரப்பான் பூச்சியாகி வீடு முழுக்க மாத்திரமன்றி ஊர் முழுக்கக் குதித்துத் திரிகிறார்கள். மாதத்தில் பல அவதாரங்கள். இப்போது அவர்கள் எடுத்து திரிவது ஆசான் அவதாரம். அது சரி ஆனையை மலர்த்த நினைப்பது அப்படியெல்லாம் அறக்குற்றமில்லைதான், ஆனால் உசரம் எட்டவேண்டும் அல்லவா?


 இது விருதுகளின் காலம். கடலை பொரி போல அள்ளி இறைக்கிறார்கள். கொடுக்கிற ஆண்டைகளுக்கும் இன்னதற்கு விருது கொடுக்கிறோம் என்று தெரியாது வாங்குகிற ஆகிருதிகளுக்கும் எதற்கு வாங்குகிறது என்று தெரியாது. அத்திக்காயும் தெரியாது குரங்கு புடுக்கும் தெரியாது. பச்சை சிரிப்பு கூழைக்கும்பிடு தெரியும். உள்ளுணர்வு ஒன்றாமல் எந்தக் காரியமும் செய்யலாமா? மாலையின் மாண்பு மணத்திலிருக்கிறது, விளக்கின் மாண்பு ஒளியிலிருக்கிறது. விருது, விழா கொண்டாட்டங்களின் மாண்பு எண்ணங்கள் சிந்தனையாகி அவை செயல்தனில் இழைவதிலிருக்கிறது.


தமிழ் ஊடகங்களில் கொட்டைப் போடுகிற சிங்கங்கள் சில தீவிர இலக்கியத்தில் ஆட்டம் போடத்தலைப்பட்டிருக்கின்றன. ஊறு விளைவிக்கும் செயலொன்றும் அல்லவது. ஆனால் தங்களை அவை சர்வரோக நிவாரணி போல நினைத்துக்கொள்வது, கல்வி, அரசியல், பொருளாதாரம், சூழியல், தத்துவம், இலக்கியம் என்று எல்லாவற்றின் பீடாதிபதிகள் போலக் களம் கண்ட பக்கமெல்லாம் கருத்து சொல்வது, காணூடகங்களில் வலியத் தோன்றி மிழற்றித்திரிவது அவன் கவிஞன் இல்லை, இவன் கவிஞன் இல்லை என்று ஊளை இடுவது, பட்டியல் போடுவது, பதாகைச் சுமப்பது, நிழல் சாய்ந்த திசையில் குடை பிடிப்பது போன்ற எச்சிப் பண்ணாட்டுகள் செய்யக்கூடாது. கூலிக்கு மாரடிப்பதையெல்லாம் இலக்கியம் என்று கூவி விற்று, இடறி விழுவதையெல்லாம் கரடி வித்தை என்றால் கல்தான் பறக்கும், காலில் பூ விழாது. பந்துப்பொறுக்கிகளுடன் மேட்ச் ஆடிவிட்டு ஆட்ட நாயகன் நானே என்று மார்தட்ட எத்தனை நெஞ்சுரப்படா உங்களுக்கு?


சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது, அனைத்துக்கட்சி அபேட்சகர்கள் நாடெங்கும் மக்களைச் சந்தித்து, கண்ணீர் மல்க அவர்தம் குறைகளை, கோரிக்கைகளைக் கேட்டு, நிவர்த்திக்கும்படிக்கு கையிட்டுச் சத்தியம் செய்திருக்கிறார்கள். நம்பிய மக்கள் உபரியாக டிவி வாஷிங் மெசின், வைபரேட்டர், கூதலுக்கு உகந்த பொறிகளையெல்லாம் கொசுறாக இனாமாகக் கேட்டிருக்கிறார்கள். கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவது ஒரு பிழையா?

மிக்சர்களை மிக்சர்கள்தாம் ஆள்வார்கள். உன்னைவிட்டாலும் வழியில்லை வேறெதுவும் கதியில்லை.

ராமனாண்டாலென்ன ராவணனாண்டாலென்ன

போடும் ஓட்டுக்கு காசு வந்தால் சரி

தெருவில் படியளந்தவர்கள்

கதவுத் திறந்திருக்க வாசலைத் தாண்டி

அப்புறம் போனால் அவமானம்

காடிக்கஞ்சியென்றாலும் மூடிக் குடிக்கவேணும்

இடுப்புக்கந்தையை வழித்து முக்காடுப் போட்டவன்

முன்னோடி மறித்து

ஒரு கண்ணுக்கு வெண்ணையும்

ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைக்காதீர்கள்

என்றேன்

கணமேனும் யோசிக்கவில்லை எம்முடன்பிறப்புகள்

கும்பிட்ட கரத்தில் கோடிவைத்து

வாழ்த்திய வாயிற் உரித்த பழமூட்டி

காதையறுக்காமல் கடுக்கணைப் பறித்தார்கள்

அல்லும் பகலும் உழைத்தவர்கள்

அரங்கையும் புறங்கையும் நக்குவார்களா

தவிட்டுக் கொழுக்கட்டைக்கா

தண்டவாளப்பெட்டி யுடைப்பது

இலைக்குக் குலைதானே மாற்று

இலைக்குக் குலைதானே மாற்று

அம்மையு மப்பனுமொண்ணு

அறியாதவர் தலையிற் மண்ணு.

இயற்கையில் கலந்த முன்னோடிகள் ஆ. மாதவன் , தொ.பரமசிவன், டொமினிக் ஜீவா, மருத்துவர் ஜீவானந்தம், தோழர் ஜனநாதன், சோலை சுந்தரபெருமாள் ஆகியோர் தமக்கு மணல் வீட்டின் நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.

இதழில் பங்களித்த யாவற்றைப் பேர்களுக்கும், இளையப் படைப்பாளிகளின் முதல் பிரதி வெளியிட உதவிய இலக்கிய உணர்வாளர்களுக்கும் நன்றி.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2021 Designed By Digital Voicer