ப்ரக்ட்-இன் கவிதைகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்
பெர்டோல்ட் ப்ரக்டின் கவிதைகள் இரண்டு காரணங்களுக்காக குறிப்பிடத்தகுந்த ஸ்தானத்தைப் பெறுகின்றன. அவர் பெயர் பெற்றிருந்த நாடகக் கொள்கைகள் மற்றும் அவரது நாடகங்களுக்கு அப்பாற்பட்டு அவர் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கை ஆச்சரியப்படுத்தக் கூடியது.
அவரது தொகுக்கப்பட்ட படைப்புகள் அடங்கிய 4 தொகுதிகளில் இக்கவிதைகள் அடங்கியுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை மேன்ஹெய்ம் மற்றும் வில்லட் ஆகியோர் தொகுப்பாளர்களாய் இருந்த கவிதைகள் 1913-1956 நூலில் இடம் பெறுகின்றன. இந்நூல் 1967இல் வெளிவந்த பிறகு ஒரு இணைப்புத் தொகுதியாக விடுபட்ட கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. தன் வில்லுக்கு இரண்டாவது நாண் என்று தன் கவிதையை ப்ரக்ட் கருதியபோதிலும் அவர் கவிதைகள் அவரை எண்ணிவிடக்கூடிய மகத்தான ஜெர்மானியக் கவிஞர்களில் ஒருவராக அவரை ஆக்கியிருக்கிறது. அவர் கவிதைகளின் தன்மை மிக உயர்ந்த தரத்தைக் கொண்டவையாய் மட்டுமின்றி வகைப்பாடுகள் மிக்கதாயும் அமைந்திருக்கின்றன. ஜெர்மானியக் கவிதையில் அவர் ஒரு அபாரத் தனித்தன்மை கொண்டவராய் இருந்தார். அவருக்கு முன்னரோ அன்றி பின்னரோ அத்தகையதொரு கவித்துவ ஆளுமை ஜெர்மானியக் கவிதையில் தோன்றவில்லை என்பது கவித்துவ நிஜம்.
ரில்கே மற்றும் ஹாஃப்மன்ஸ்தால் ஆகியோரால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட ஜெர்மானியக் கவிதையின் பிரதான நீரோட்டத்திலிருந்து வெளியில் நிற்கின்றன. மேற்குறிப்பிட்ட இரு கவிஞர்களுடன் நாம் காட்ஃபிரைட் பென்-ஐயும் ஜார்ஸ் ட்ரேக்ல்-ஐயும் சேர்த்துக் கொள்ளலாம். இருபதாம் நூற்றாண்டு ஜெர்மானிய இலக்கியத்தை நோக்கும் சம்பிரதாய அணுகல் ரில்கே மற்றும் பிற கவிஞர்களை மையமாய்க் கருதுவதால் இந்த இடத்தில் ப்ரக்டை வைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. சம்பிரதாய அணுகல் தவறானது என்பது இதற்கு அர்த்தமல்ல. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து வளர்ச்சியடைந்த ஜெர்மானியக் கவிதை கதே மற்றும் ரொமாண்டிக்குகளின் ஆதிக்கத்தால் அபரிமிதமான வகையில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த வகைப்படுத்தும் திட்டத்திற்கு வெளியில்தான் ப்ரக்டின் கவிதைகளை வைக்க வேண்டி இருக்கிறது.
ஆனால் எந்த வகைப்பாட்டிலும் அடங்காதவை ப்ரக்டின் கவிதைகள். ப்ரக்ட் கவிதைகளின் வகைமாதிரிகள் ஆச்சரியப்படுத்தக்கூடிய வகையில் வேறுபட்டவை: கதைப்பாடல்கள், கடிதங்கள், காதல் கவிதைகள், கிடார் வாத்தியத்துடன் சேர்ந்து பாடக்கூடிய பாடல்கள், கிராமஃபோன் இசைத்தட்டுக்களுக்காக எழுதப்பட்டவை, அறிக்கைகள் இது போன்று பல. ப்ரக்ட் 1927இல் வெளியிட்ட கவிதைத் தொகுதியிலேயே மிகத் தெளிவாக தனிநபர் வெளிப்பாடாய் இருந்த சம்பிரதாய ‘லிரிக்' கவிதையின் வெளிப்பாட்டு முறைகளிலிருந்து துண்டித்துக் கொண்டார். பிரார்த்தனைகள் என்பவை பொதுவாக பூர்ஷ்வா இல்லங்களில் காணப்படும் ஒழுக்கவியல் சார்ந்த முறையான வாழ்க்கைக்கான அனுசரிப்புகள் கொண்ட பாடல்கள். ஆனால் ப்ரக்டின் பிரார்த்தனைகள் எந்த விதத்திலும் முறையான வாழ்க்கையைச் சார்ந்தவையோ அல்லது மதச்சார்பானவையோ அல்ல. மாறாக மதத்தூஷணம் மிக்கவை. பிரார்த்தனைகளில் நாம் இளமையான துணிகரமிகுந்த துடுக்குத்தனமான ப்ரக்ட்ஐப் பார்க்க முடிகிறது.
ப்ரக்ட் ஆக்ஸ்பர்கில் பூர்ஷ்வாப் பெற்றோருக்குப் பிறந்தார். தந்தை ஒரு காகித ஆலையின் நிர்வாக அதிகாரியாக இருந்தார். Black Forest பகுதியில் ஒரு சிவில் அதிகாரியின் மகள் ப்ரக்டின் தாய். ப்ரக்டின் கலகக்காரத்தன்மை பள்ளிக்கூட நாட்களிலேயே வெளிப்பட்டது. முதல் உலகப்போர்க் காலத்தில் போருக்கெதிரான தன் வன்மையான கருத்துக்களைக் குரல் உயர்த்தி அறிவித்தார். ம்யூனிக் பல்கலைக்கழகத்தில் தனது வித்யாசமான எதிர்ப்பு வாழ்க்கையைத் துவக்கினார். அவரின் வாழ்நாள் நடைமுறையான பல காதல்களை ஒரே நேரத்தில் நடத்துவதையும் இங்குதான் ஆரம்பித்தார். ராணுவ மருத்துவமனையில் துணையாளராக சிறிது காலம் சென்றது. பவேரியாவில், போருக்குப் பிந்திய கம்யூனிஸப் புரட்சியில் பங்கு கொண்டார். இங்கு விடுதிகளிலும், குழுக்களிலும் ஒரு நாடோடிப் பாடகராகப் பிரசித்தம் பெற்றார். உள்ளூர் செய்தித்தாள்களில், குறிப்பாக இடதுசாரிப் பத்திரிகைகளில் அமிலத்தன்மையான விமர்சனங்களை வெளியிட்டார். பிறகு நாடகத்துறைக்கு வந்தார். பெர்லின் தியேட்டரில் 1924 ஆம் ஆண்டிலிருந்து 1933ஆம் ஆண்டுவரை தீவிரமாய் இயங்கினார். இந்தக் காலகட்டத்தில்தான் சாகித்யகர்த்தாவான Kurt weillஐச் சந்தித்தார். இருவரும் இணைந்து இயக்கிய பிரபல நாடகம் The Three Penny Opera. 1933இல் சுயவெளியேற்றத்தில் ஜெர்மனியை விட்டுச்சென்றார்.
டென்மார்க்கிலும், ஸ்வீடனிலும், ஃபின்லாந்திலும் மகா எளிய வாழ்க்கை வாழ்ந்தார். ரஷ்யாவின் வழியாக 1939 - 40களில் அமெரிக்காவுக்குச் சென்றார். ஹெல்சின்க்கியிலிருந்து விளாடிவாஸ்டாக்கிற்கு வந்து கலிபோர்னியாவுக்குப் புறப்பட்ட கடைசிப் படகினைப் பிடித்தார். ஹாலிவுட்டில் திரைப்படம் தயாரிக்கும் முயற்சியில் அளவற்ற சக்தியை வீணடித்தார். கிழக்கு பெர்லினுக்குத் திரும்புமுன் அமெரிக்க அமைப்பான Committee on Un-American Activities ப்ரக்டை விசாரணைக்கு உட்படுத்தியது. கிழக்கு பெர்லினில் Berliner Ensembleஐ நிர்மாணித்தார். ஆனால் பெரும்பாலும் ஸ்டாலினிய கிழக்கு ஜெர்மானிய அதிகாரிகளுடன் வேறுபாடுகளும், தவறான புரிந்து கொள்ளல்களும், பூசல்களும் உண்டாயின. 1956இல் ப்ரக்ட் காலமானார்.
Bertolt Brecht Poems (1913 -1956), Edited by John Willet and Ralph Manheim with the co-operation of Erich Fried. First published in Great Britain in 1976 by Eyre Metheun Ltd.