பெர்டோல்ட் ப்ரக்ட் - தேர்ந்தெடுத்த கவிதைகள்
ஒரு காதலியைப் பற்றிய பாடல்

தமிழில்: பிரம்மராஜன்

பகிரு

1
எனக்குத் தெரியும் காதலிகளே: காட்டுத்தனமான வாழ்க்கை
காரணமாய் என் தலைமுடியை இழந்து கொண்டிருக்கிறேன்,
மேலும் நான் கற்களின் மேல் உறங்கவேண்டியிருக்கிறது. 
நான் மிக மலிவான ஜின்னைக் குடித்துக்கொண்டிருப்பதை
நீங்கள் பார்க்கிறீர்கள். மேலும் நான் நிர்வாணமாய்
காற்றினூடாய் நடக்கிறேன்.
2
நான் தூய்மையாய் இருந்த காலம் ஒன்றிருந்தது காதலிகளே.
3
எனக்கு ஒரு பெண் இருந்தாள். அவள் என்னைவிட
வலிமையானவளாய் இருந்தாள், எருதை விட புல் வலிமையாய்
இருப்பதைப் போல: அது நிமிர்ந்து நிற்கிறது மீண்டும்.
4
நான் பொல்லாதவனாய் இருப்பதைக் கண்டாள். இருந்தும் என்னை 
நேசித்தாள்
5
பாதை எங்கே செல்கிறது என என்னைக் கேட்கவில்லை, அது 
அவளது  பாதையாயிருந்தது. ஒருவேளை அது கீழ்நோக்கி
செல்வதாக இருந்திருக்கலாம். அவள் உடலை எனக்குத்
தந்தபோது அவள் சொன்னாள்: இதற்கு மேல் ஒன்றுமில்லை.
மேலும் அவள் உடல் என்னுடலாயிற்று.
6
இப்போது அவள் எங்கேயிமில்லை, மழைக்குப் பிறகான
மேகமென மறைந்து போனாள். நான் அவளைப் போகவிட்டேன்,
அவள் கீழ்நோக்கிச் சென்றாள், காரணம் அதுதான் அவளது பாதை
7
ஆனால் இரவில் சில சமயங்களில் நான் குடித்துக் கொண்டிருப்பதை 
நீங்கள் பார்க்கும்போது காற்றினுள் வெளிறிய அவள் முகத்தைப்
பார்க்கிறேன். வலிமையானதாய் அது என்னை நோக்கித்
திரும்பியிருக்கிறது, மேலும் காற்றில் அவளுக்குத் தலைவணங்குகிறேன்.

From Five Epistles

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer