பெர்டோல்ட் ப்ரக்ட் - தேர்ந்தெடுத்த கவிதைகள்
ஒரு காதலியைப் பற்றிய பாடல்

1
எனக்குத் தெரியும் காதலிகளே: காட்டுத்தனமான வாழ்க்கை
காரணமாய் என் தலைமுடியை இழந்து கொண்டிருக்கிறேன்,
மேலும் நான் கற்களின் மேல் உறங்கவேண்டியிருக்கிறது. 
நான் மிக மலிவான ஜின்னைக் குடித்துக்கொண்டிருப்பதை
நீங்கள் பார்க்கிறீர்கள். மேலும் நான் நிர்வாணமாய்
காற்றினூடாய் நடக்கிறேன்.
2
நான் தூய்மையாய் இருந்த காலம் ஒன்றிருந்தது காதலிகளே.
3
எனக்கு ஒரு பெண் இருந்தாள். அவள் என்னைவிட
வலிமையானவளாய் இருந்தாள், எருதை விட புல் வலிமையாய்
இருப்பதைப் போல: அது நிமிர்ந்து நிற்கிறது மீண்டும்.
4
நான் பொல்லாதவனாய் இருப்பதைக் கண்டாள். இருந்தும் என்னை 
நேசித்தாள்
5
பாதை எங்கே செல்கிறது என என்னைக் கேட்கவில்லை, அது 
அவளது  பாதையாயிருந்தது. ஒருவேளை அது கீழ்நோக்கி
செல்வதாக இருந்திருக்கலாம். அவள் உடலை எனக்குத்
தந்தபோது அவள் சொன்னாள்: இதற்கு மேல் ஒன்றுமில்லை.
மேலும் அவள் உடல் என்னுடலாயிற்று.
6
இப்போது அவள் எங்கேயிமில்லை, மழைக்குப் பிறகான
மேகமென மறைந்து போனாள். நான் அவளைப் போகவிட்டேன்,
அவள் கீழ்நோக்கிச் சென்றாள், காரணம் அதுதான் அவளது பாதை
7
ஆனால் இரவில் சில சமயங்களில் நான் குடித்துக் கொண்டிருப்பதை 
நீங்கள் பார்க்கும்போது காற்றினுள் வெளிறிய அவள் முகத்தைப்
பார்க்கிறேன். வலிமையானதாய் அது என்னை நோக்கித்
திரும்பியிருக்கிறது, மேலும் காற்றில் அவளுக்குத் தலைவணங்குகிறேன்.

From Five Epistles

பெர்டோல்ட் ப்ரக்ட் - தேர்ந்தெடுத்த கவிதைகள்
மூன்றாம் சங்கீதம்

1
ஜூலை மாதத்தில் நீங்கள் என் குரலைக் குளங்களிலிருந்து
தூண்டிலில் பிடிக்கலாம். கான்யாக் மது என் நாளங்களில்
ஓடுகிறது. என் கை சதையால் ஆகியிருக்கிறது.
2
குளத்து நீர் என் சருமத்தை நிறம் மாற்றிவிட்டது, நான் ஒரு
ஹேஸல் மரக்கிளை போல உறுதியாய் இருக்கிறேன்,
படுக்கைக்கு நான் சிறந்தவன் பெண்களே.
3
கற்களின் மேல் சிவப்புச் சூரியன் படும்போது நான்
கிட்டார்களை விரும்புகிறேன். அவை விலங்குகளின் நரம்புகள்,
கிட்டார் ஒரு விலங்கினைப் போல பாடுகிறது, அது சிறிய
பாடல்களை மெல்லுகிறது.
4
ஜூலையில் எனக்கு வானத்துடன் ஒரு காதல் சந்திப்பிருக்கிறது.
நான் அதை நீலநிற குட்டிப் பையனே என்றழைக்கிறேன்,
மகிமைமிக்கதாய், வயலட் நிறத்தில். அது என்னை நேசிக்கிறது.
அது ஆண் காதல்.
5
அது வெளிர்ந்து போகிறது என் நரம்பு விலங்கினை துன்புறுத்தி
வயல்களையும் பசுக்களின் பெருமூச்சுகளாலும் ஆன சிற்றின்ப
நடத்தையைப் போலி செய்கையில்

From Thirteen Psalms

பெர்டோல்ட் ப்ரக்ட் - தேர்ந்தெடுத்த கவிதைகள்
முதலாம் சங்கீதம்

1
எவ்வளவு பயமுறுத்துவதாய் இருக்கிறது இரவில் இந்தக் 
கரிய நிலத்தின் நடுமேடான முகம்
2
உலகின் மேற்பகுதியில் மேகங்கள் உள்ளன, அவை உலகிற்கு
சொந்தமானவை.மேகங்களுக்கு மேல் ஒன்றுமில்லை
3
பாறைக்கற்கள் நிறைந்த வயலில் இருக்கும் தனித்த மரம் இதெல்லாம்
பயனற்றது என்று கட்டாயமாய் நினைத்துக்கொண்டிருக்கும்.
வேறு மரங்களே இல்லை.
4
நாம் கவனிக்கப்படவில்லை எனத் தொடர்ந்து நினைக்கிறேன்.
இந்த இரவின் ஒரேயொரு நட்சத்திரத்தின் தொழுநோய்.
5
வஸ்துக்களை இணைக்க இன்னுமே கூட முயன்றுகொண்டிருக்கும் 
கதகப்பான அந்த கத்தோலிக்கத் தனமான காற்று.
6
நான் மிகவும் தனிமைப்பட்டுப்போனவன். பொறுமையே கிடையாது 
எனக்கு. நம் ஏழைச் சகோதரர் காட்ரெவார்டியு உலகைப் 
பற்றிக் கூறினார்: அதைக் கணக்கில் சேர்க்கவேண்டாம்.
7
நாம் பால்வெளிமண்டலத்தில் உள்ள ஒரு நட்சத்திரத்தை நோக்கி
உயர் வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். உலகின்
முகத்தில் ஒரு மஹா அமைதியிருக்கிறது. என் இதயம் வேகமாய்த் 
துடிக்கிறது. மற்றபடி எல்லாம் சரியாக இருக்கிறது.

From Thirteen Psalms

பெர்டோல்ட் ப்ரக்ட் - தேர்ந்தெடுத்த கவிதைகள்
எல்லாமே மாறுகிறது

எல்லாமே மாறுகிறது.
உன் இறுதி மூச்சினை வைத்து நீ ஒரு புத்தம்புதிய தொடக்கம் செய்யலாம்
ஆனால் என்ன நடந்ததோ அது நடந்துவிட்டது.
மேலும் நீ ஒருமுறை மதுவில் ஊற்றிய நீரை
வடித்து அகற்ற முடியாது.

என்ன நடந்ததோ அது நடந்துவிட்டது.
நீ ஒருமுறை மதுவில் ஊற்றிய நீரை
வடித்து அகற்றவியலாது.
ஆனால் நீ செய்யலாம்
ஒரு புத்தம் புதிய தொடக்கத்தை
உன் இறுதி மூச்சினைக் கொண்டு.

Postlude

பெர்டோல்ட் ப்ரக்ட் - தேர்ந்தெடுத்த கவிதைகள்
தற்கொலை பற்றிய ஒரு கடிதம்

ஒருவர் உயிரை மாய்த்துக் கொள்வது
சாதாரண விஷயம்.
உங்கள் வீட்டு துணிவெளுக்கும் பெண்ணுடன்
இது பற்றி அரட்டையடிக்கலாம்.
எதிரான மற்றும் சார்பானவை பற்றி ஒரு நண்பரிடம் விளக்கம் தரலாம்.
எவ்வளவு வசீகரமாய் இருந்த போதிலும்
ஒருவித துன்பியல்தன்மை தவிர்க்கப்படுதல் வேண்டும்.
ஆனால் இதுபற்றி இன்னும் கூடுதலாக சொல்லப்பட
வேண்டியிருக்கிறது என நான் எண்ணுகிறேன்.
அந்த வழக்கமான லேசான வஞ்சனை பற்றி.
உங்கள் படுக்கை விரிப்பினை மாற்றுவதில் சலித்துப் போய்விட்டீர்கள்
அல்லது இன்னும் சிறப்பாய்
உங்கள் மனைவி உங்களுக்கு துரோகம் செய்துவிட்டாள்
(இது பொதுஜனங்களுக்கு ஈர்ப்பாக இருக்கிறது
அவர்கள் அதுபோன்ற விஷயங்களால் ஆச்சரியப்படுகிறார்கள்
ஆனால் அது மிக உயர்ந்தது அல்ல)
எனினும்
அதில் ஒருவர் தன் உயர்ந்த மதிப்பீடுகளை
இட்டு வைத்துள்ளார் என்று
கண்டிப்பாய் தோன்றக்கூடாது

From Five Epistles

பெர்டோல்ட் ப்ரக்ட் - தேர்ந்தெடுத்த கவிதைகள்
நான்காவது 14 வரிக் கவிதை

கருணையுடன் நீங்கள் அவனைத் தங்குவதற்கு வரவேற்றீர்கள்
ஆனால் உங்கள் விருந்தாளியை சந்தோஷப்படுத்த எந்த இடமும் இல்லை
அவன் கிளம்பிச் செல்லுமுன் எதிர்ப்பு தெரிவிக்கத் துணிந்தான்.
அவசரத்தில் அவன் வந்தான் அவசரத்தில் அகன்று போனான்.

அவன் இருப்பதற்கு ஓரிடம் கூட உங்களிடம் இருக்கவில்லையா?
மிக வறிய பிச்சைக்காரர்கள் கூட தம் விருந்தாளிக்கு
கொஞ்சம் ரொட்டியைத் தருகிறார்கள்.
இங்கே ஓர் வீட்டுக்கோ அல்லது படுக்கைக்கோ தேவை ஏதுமில்லை
மரத்தினருகில் ஒரு சிறிய பாதுகாப்பிடம்.

அது இல்லாமல் அவன் வரவு நல்வரவாக அவனால் கருத இயலாது
உணர்ச்சியற்று வரவேற்கப்பட்ட அவன்
போவது சாலச் சிறந்ததென நினைத்தான்.
அவனது இருப்பு நேரடி அவமரியாதையானதாய்த் தோன்றியது.

எனவே அவன் அங்கே இருப்பதற்கான தைரியத்தை இழந்தான்
அவனது விருப்பங்கள் இப்பொழுது அவனுக்கு ஒவ்வாதவையாய்த் தோன்றின.
மேலும் அவன் அவசரம் எல்லாம் சமமாகப் பொருத்தமற்றதாய்.

From Poems of the Crisis Years 1929 - 1933

பெர்டோல்ட் ப்ரக்ட் - தேர்ந்தெடுத்த கவிதைகள்
கவிதைக்கு மோசமான காலம்

ஆம், நான் அறிவேன்:
சந்தோஷமான மனிதனே
விரும்பப்படுகிறான்.
அவன் குரல் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.
அவன் முகம் வசீகரமாயிருக்கிறது.

முற்றத்தில் உள்ள குன்றிய மரம்
மண் ஊட்டமில்லாதது என்பதைக் காட்டுகிறது
இருப்பினும்
அதைக் கடந்து செல்பவர்கள்
அது குன்றிப்போனதற்காய் நிந்திக்கின்றனர்
மேலும் அது தகுதியானதுதான்.

சவுண்ட் கடல் பகுதியில்
பச்சைநிறப் படகுகளும்
நடனமிடும் பாய்மரங்களும்
பார்க்கப்படாமல் போகின்றன
அவை எல்லாவற்றிலும்
நான் மீனவர்களின் கிழிந்த வலைகளையே பார்க்கிறேன்.
நாற்பது வயதான ஒரு கிராமத்துப் பெண் கூனி நடப்பதை மட்டுமே
நான் ஏன் பதிவு செய்கிறேன்.
இளம்பெண்களின் மார்பகங்கள்
எப்பொழுதும் போல் கதகதப்பாய் இருக்கின்றன.

என் கவிதையில் எதுகை மோனை
ஏறத்தாழ துடுக்குத்தனமாய்த் தோன்றும்.

எனக்குள்ளாய் போட்டியிடுகின்றன
பூக்கள் மலரும் ஆப்பிள் மரத்தைப் பார்ப்பதில் உள்ள சந்தோஷம்.
வீட்டுக்கு வர்ணமடிப்பவனின் உரைகளால் உண்டான பயங்கரம்.
ஆனால் இரண்டாவதுதான்
என்னை என் மேஜைக்குத் துரத்துகிறது.

From Poems written between 1938 and 1941

பெர்டோல்ட் ப்ரக்ட் - தேர்ந்தெடுத்த கவிதைகள்
ஜனநாயக நீதிபதி

லாஸ் ஏஞ்சல்ஸில் அமெரிக்க குடிமக்களாய் ஆக முயலும்
மக்களை விசாரணை செய்யும் நீதிபதியின் முன்னால்
ஒரு இதாலிய உணவுவிடுதி உரிமையாளர் வந்து நின்றார்.
கடுமையான தனது தயாரிப்புகளுக்குப் பிறகும்
புதிய மொழி அறியாமையால் தடைபட்ட போதிலும்
தேர்வில் அவர் ஒரு கேள்விக்குப் பதில் அளித்தார்:
8ஆம் திருத்த மசோதா என்பதென்ன?
தடுமாற்றத்துடன்:
1492 என்றார்.
சட்டத் தேவையானது
விண்ணப்பதாரர்கள் மொழியை அறிந்திருக்க வேண்டுமென்றிருந்ததால்
அவர் மறுக்கப்பட்டார்.
மூன்று மாத கால மேற்படிப்பிற்குப் பிறகும்
புதிய மொழியின் அறியாமையால் தடைபாடுற்று
அவர் இம்முறை இந்தக் கேள்வியால் எதிர்கொள்ளப்பட்டார்:
உள்நாட்டுப் போரில் வெற்றிபெற்ற ஜெனரல் யார்?
அவரது பதில்:
(இனிய இயல்புடன், உரத்த குரலில்).
மீண்டும் திருப்பி அனுப்பப்பட்ட
அவர் மூன்றாம் தரம் திரும்பி வந்து
மூன்றாம்கேள்விக்குப்
பதில் அளித்தார்:
எவ்வளவு காலத்திற்கு ஒருமுறை எமது ஜனாதிபதிகள்
தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
மீண்டும் ஒருமுறை 1492 என்ற பதில்.
இப்பொழுது நீதிபதிக்கு
அந்த மனிதனைப் பிடித்துப்போய்விட
அவனால் புதிய மொழியைக் கற்கவியலாதென்பதை அறிந்தார்.
அவனிடம் கேட்டார்
அவனது வருவாயை எப்படிச் சம்பாதிக்கிறான் என:
கடின உழைப்பின் மூலமாய் என்றான் அவன்.
எனவே
அவனது நான்காவது சந்திப்பில்
நீதிபதி இந்தக் கேள்வியைக் கேட்டார்:
அமெரிக்கா எப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டது?
1492 என்ற அவனது சரியான பதில் அளிப்பின்
உறுதியின் மீது அவனுக்கு குடியுரிமை அளிக்கப்பட்டது.

From Poems Written between 1941 and 1947

பெர்டோல்ட் ப்ரக்ட் - தேர்ந்தெடுத்த கவிதைகள்
உலகின் நட்பார்ந்த தன்மை பற்றி

1
காற்றுமிகு இந்த உலகின் சில்லிடும் கடுந்துயரினுள்
நீங்கள் யாவரும் வந்து சேர்ந்தீர்கள் சர்வ அம்மணமாய்
குளிரில் கிடந்தீர்கள் சகலத்திலும் வறியவர்களாய்
ஒரு பெண் உங்களை ஒரு சால்வையால் சுற்றும்வரை.
2
எவரும் உங்களை அழைக்கவில்லை
அருகில் அணுகச் சொல்லி ஒருவரும் சொல்லவில்லை
ஒரு மனிதன் உங்கள் கையைப் பற்றும்வரை
இந்த பூமியில் நீங்கள் அந்நியர்களாய் இருந்தீர்கள்.
3
காற்றுமிகும் இந்த உலகின் சில்லிடும் கடுந்துயரிலிருந்து
நீங்கள் அனைவரும் பிரிகின்றீர்கள் அசுத்தத்திலும் அசௌகரியத்திலும்
ஏறத்தாழ ஒவ்வொருவருமே இந்த உலகினை நேசித்திருக்கின்றனர்
ஒருவர் மீது இரண்டு கை மண் வீசப்படும் வரை.

From Bertolt Brecht's Domestic Breviary (1927)

பெர்டோல்ட் ப்ரக்ட் - தேர்ந்தெடுத்த கவிதைகள்
செம்படை வீரன் ஒருவனின் பாடல்

1
நமது நிலம் ஒரு களைப்புற்ற சூரியனுடன் உண்ணப்பட்டதால்
அது துப்புகிறது எம்மை இருண்ட நடைபாதைகளின் மீதும்
உறைந்த கற்பொடிகளைக் கொண்ட நாட்டுப்புற பாதைகளின் மீதும்.
2
வசந்தகாலத்தில் ராணுவத்தை உருகும் சகதி கழுவியது
அது கோடை சிவப்பின் குழந்தை.
பிறகு அக்டோபரில் திரள்பனி விழத் தொடங்கிற்று
ஜனவரியின் காற்றுகளில் அதன் மார்பு உறைந்து மரித்தது.
3
அந்த வருடங்களில் விடுதலை பற்றிய பேச்சு வந்தது
கெட்டிப்பனியால் வெடித்துப்போன உதடுகளிலிருந்து
புலியினுடையதை ஒத்த தாடைகளுடன்
மேலும் பலரை நீங்கள் கண்டீர்கள்
சிவப்பு மற்றும் மனிதமையற்ற கொடியைப் பின்தொடர்ந்து.
4
வயல்களின் ஊடாய் நிலா சிவப்பாய் நீந்தியபொழுது
ஒவ்வொருவரும் தம் குதிரைகளின் பக்கவாட்டில் ஓய்வுகொண்டனர்
வந்து கொண்டிருக்கிற காலங்களைப் பற்றி
அவர்கள் அடிக்கடி பேசினர்
பிறகு குதிரைச் சவாரியால் சோர்ந்து உறங்கிப் போயினர்.
5
மழையிலும் இருளார்ந்த காற்றிலும்
உறங்குவதற்கு சிறந்ததாய்த் தோன்றியது கடினப் பாறை.
மழை எமது அழுக்கடைந்த கண்களைக் கழுவி
வேறுபட்ட பாவங்களிலிருந்தும் அசுத்தங்களிலிருந்தும் சுத்தமாக்கியது.
6
இரவில் அடிக்கடி வானம் சிவப்பாயிற்று
சிவப்பு விடியல் மீண்டும் வந்துவிட்டதென அவர்கள் எண்ணினர்.
அது ஒரு தீ, ஆனால் விடியலும் கூடவே வந்தது.
விடுதலை என் குழந்தைகளே என்றுமே வரவில்லை.
7
எனவே, அவர்கள் எங்கே இருந்தபோதிலும்
சுற்றிலும் பார்த்து கூறினார்கள் : இது நரகம் என்று.
காலம் கடந்து சென்றது.
இருப்பினும் சமீப நரகம்
என்றுமே இறுதியான நரகமாய் இருக்கவில்லை.
8
அவ்வளவு நரகங்கள் இன்னும் வரவிருந்தன.
விடுதலை என் குழந்தைகளே என்றுமே வரவில்லை.
காலம் கடந்து போகிறது. ஆனால் சொர்க்கம் இப்பொழுது
வருமானால்
அந்த சொர்க்கங்களும் எந்த வேறுபாடுமின்றி இருக்கும்.
9
களைத்துப் போன இதயத்துடன் எம் உடல் உண்ணப்பட்டவுடன்
ராணுவம் எம் சருமத்தையும் எலும்புகளையும்
சில்லிடும் குளிரிலும் ஆழமற்ற குழிகளிலும் உமிழ்ந்துவிடுகிறது.
10
மழையினால் விறைத்துப்போன எமது உடல்களுடன்
பனிக்கட்டியால் வடுபட்ட எம் இதயங்களுடனும்
ரத்தக்கரை படிந்த எமது வெறுங்கைகளுடனும்
நாங்கள் உமது சொர்க்கத்திற்குள் இளித்தபடி வருகிறோம்.

From Bertolt Brecht's Domestic Breviary (1927)

பெர்டோல்ட் ப்ரக்ட் - தேர்ந்தெடுத்த கவிதைகள்
கற்றுக் கொள்பவன்

முதலில் மணல் மீதும் பிறகு பாறை மீதும் கட்டினேன்
பாறை நொறுங்கி வீழ்ந்தபோது
நான் இனியும் எதையும் கட்டவில்லை.
பிறகு நான் அடிக்கடி கட்டினேன்,
மணல் மீதும் பாறையின் மீதும்
அது வந்த விதத்திலேயே
ஆனால்
நான் கற்றுக் கொண்டுவிட்டேன்.

நான் என் கடிதத்தை நம்பி ஒப்படைத்தவர்கள்
அதைத் தூர எறிந்துவிட்டனர்.
ஆனால் நான் யார் மீது கவனமே செலுத்தவில்லையோ
அவர்கள் அதை என்னிடம் திரும்பக் கொணர்ந்தனர்.
அவ்வாறும் நான் கற்றேன்.

நான் கட்டளையிட்டது செய்து முடிக்கப்படவில்லை
நான் வந்து சேர்ந்த சமயம்
அது தவறானது என்பதைக் கண்டேன்.
சரியான விஷயம்
செய்யப்பட்டிருந்தது.
அதிலிருந்தும் நான் கற்றேன்.

வடுக்கள் வலி தருபவை.
இப்பொழுது குளிர்ந்திருக்கிறது
ஆனால் நான் அடிக்கடி கூறினேன்:
சவக்குழி ஒன்று மாத்திரமே
எனக்குக் கற்றுத்தர ஏதுமில்லாமல் இருக்கும்.

From The First Years of Exile 1934-1936

பெர்டோல்ட் ப்ரக்ட் - தேர்ந்தெடுத்த கவிதைகள்
தொடங்குதலின் சந்தோஷம்

ஓ தொடங்குதலின் சந்தோஷமே
அதிகாலையே
எவர் ஒருவரும் பச்சை நிறம் எப்படி இருக்கும் என்று
நினைவுகூறாத சமயம் வரும்
முதற் புல்லே
நீண்ட காலமாய் காத்திருந்து, அதன் ஆச்சரியத்துடன் வரும்
புத்தகத்தின் முதல் பக்கமே
அவசரமின்றி வாசி
மிக விரைவில்
படிக்கப்பட்டிராத பகுதி உனக்கு மிக மெல்லியதாகிவிடும்.
வியர்வை வழியும் முகத்தில் படும் தண்ணீரின் முதல் தெறிப்பே.
அதிக வெப்பமடையாதிருக்கும் புதிய சட்டையே
ஓ காதலின் தொடக்கமே
தமது இடத்தை விட்டகன்று திரிபவர்களைப் பார் ஒரு கணம்.
பணியின் ஆரம்பமே.
ஜில்லிட்ட யந்திரத்தினுள் எண்ணெய் ஊற்றுதல்
முதல் தொடுதல் மற்றம் என்ஜின்
உயிர்பெற்றுத் துடிக்கும் முதல் முனங்கொலி
மேலும் புகையின் முதல் இழுவை
நுரையீரல்களை நிரப்புதல்.
புதிய சிந்தனையே
நீயும் கூடத்தான்.

From The Darkest Times 1938-41

பெர்டோல்ட் ப்ரக்ட் - தேர்ந்தெடுத்த கவிதைகள்
ஃபின்லாந்து 1940

1
ஃபின்லாந்தில்
நாங்கள் அகதிகள்.
என் குட்டி மகள்
எந்தக் குழந்தையும் அவளுடன் விளையாடவில்லை
என்பதைப் பற்றி புகார் சொன்னபடி
மாலையில் வீட்டுக்குத் திரும்பி வருகிறாள்.
அவள் ஒரு ஜெர்மன் தேசத்தவள்
அவள் வருவது தாதாக்களின் தேசமான ஜெர்மனியிலிருந்து.
ஒரு விவாதத்தின் போது நான் உரத்த சொற்களை பரிமாற்றும்போது
நான் அமைதியாக இருக்கும்படி சொல்லப்படுகிறேன்.
இங்குள்ள மக்கள்
தாதாக்களின் தேசமான ஜெர்மனியிலிருந்து வரும் ஒருவரின்
உரத்த சொற்களை விரும்புவதில்லை.
நான் என் குட்டி மகளுக்கு
ஜெர்மனியர்களின் தேசம் தாதாக்களின் தேசம் என்பதை நினைவூட்டும்போது
அவள் என்னுடன் சந்தோஷப்படுகிறாள் மேலும் அவர்கள்
நேசிக்கப்படுதில்லை என்பதையும்.
இருவரும் சேர்ந்து சிரிக்கிறோம்.
2
விவசாயிகளின் குடும்பத்தில் பிறந்த நான்
ரொட்டி வீணாய் வீசப்படுவதைக் கண்டு வெறுப்டைகிறேன்
நான் போரை எவ்வளவு வெறுக்கிறேன்
என்று நீங்கள் நன்றாய் புரிந்துகொள்ள முடியும்.
3
ஒரு பாட்டில் மது அருந்திபடி
எமது ஃபின்லாந்து நண்பி விவரிக்கிறார்
போர் எவ்வாறு அவளது செர்ரித் தோட்டத்தை நாசமாக்கியதென.
நாங்கள் அருந்திக் கொண்டிருக்கும் மது அதிலிருந்து வருகிறது
என்றாள் அவள்.
எங்கள் கோப்பைகளைக் காலி செய்தோம்
நிர்மூலமாக்கப்பட்ட செர்ரி பழத்தோட்டத்தை
நினைவில் நிறுத்தி
மேலும் காரண அறிவின் பொருட்டும்.
4
இந்த ஆண்டு மனிதர்களால் பேசப்படப் போகிறது.
இந்த ஆண்டு பற்றி மனிதர்கள் மௌனம் சாதிக்கப்போகிறார்கள்.
வயோதிகர் இளையோர் இறப்பதைக் காண்பர்
முட்டாள்கள் அறிவார்ந்தவர்கள் இறப்பதை.
இந்தப் பூமி இனியும் உண்டாக்குவதில்லை.
அது விழுங்கிவிடுகிறது.
வானம் மழையைப் பொழிவதில்லை
இரும்பை மாத்திரமே.

From The Darkest Times 1938 - 41

பெர்டோல்ட் ப்ரக்ட் - தேர்ந்தெடுத்த கவிதைகள்
ஸ்டார்லிங் பறவைக் கூட்டங்களைப் பற்றிய பாடல்

1
சூய்யான் மாகாணத்திலிருந்து
அக்டோபர் மாதத்தில் நாங்கள் கிளம்பினோம்
நாங்கள் நேராக தெற்குதிசை நோக்கி விரைந்து பறந்தோம்
மாகாணங்களின் ஊடாய் சில நாட்கள் எடுத்துக்கொண்டோம்.
விரைந்து பற சமவெளி காத்திருக்கிறது
குளிர் அதிகரிக்கிறது
மேலும் அங்கே கதகதப்பாய் இருக்கிறது.
2
சூய்யான் மாகாணத்திலிருந்து
நாங்கள் புறப்பட்டோம், எங்களில் எட்டாயிரம் பேர்
ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேராகப் பெருகினோம்
நான்கு மாகாணங்களின் ஊடாய் அப்பால் வந்தோம்
ஐந்து நாட்கள் எடுத்துக்கொண்டு.
3
இப்பொழுது நாங்கள் சமவெளியின் மீதாய் பறந்து கொண்டிருக்கிறோம்
ஹூனான் பிரதேசத்தில்
எங்களுக்குக் கீழே பெரும் வலைகளைப் பார்க்கிறோம்
மேலும் அறிகிறோம்
ஐந்து நாட்களாய்ப் பறந்து எங்கே வந்திருக்கிறோம் என:
சமவெளிகள் காத்துக் கொண்டிருந்தன
வெதுவெதுப்பு அதிகரிக்கிறது
ஆனாலும் எங்கள் மரணம் நிச்சயம்.

From Svendborg Poems

பெர்டோல்ட் ப்ரக்ட் - தேர்ந்தெடுத்த கவிதைகள்
வேறுபட்ட இடங்களிலிருந்து
வேறுபட்ட காலங்களில் ஒரு மனிதனுக்கு அளிக்கப்பட்ட
நான்கு அழைப்புகள்

உனக்கான ஒரு இல்லம் அங்கே.
உன் பொருள்களுக்கான ஓர் அறை உள்ளது.
உனக்குப் பொருத்தமான வகையில் மரச்சாமான்களை மாற்றி வைத்துக் கொள்.
உனக்கென்ன தேவை என்பதை எங்களிடம் சொல்.
இதோ சாவி
இங்கே தங்கிவிடு.

நம் எல்லோருக்குமான முகப்பறை இருக்கிறது
உனக்கான ஒரு படுக்கையுள்ள ஒரு அறையும் உள்ளது.
முற்றத்தில் நீ எங்களுடன் இணைந்து பணிசெய்யலாம்.
உனக்கான சாப்பிடும் தட்டு உள்ளது
எங்களுடன் தங்கு.

இதுதான் நீ தூங்கும் இடம்
படுக்கை விரிப்புகள் இன்னுமே சுத்தமாய் உள்ளன.
அது ஒரே ஒரு தடவை மட்டுமே உறங்கப் பயன்பட்டுள்ளது
நீ சுத்தம் பார்க்கிறவனாய் இருந்தால்
அங்கே உள்ள பக்கெட்டில் தகரக்கரண்டியை அலசிவிடு
அது புதியதைப் போலிருக்கும்
நீ எங்களுடன் தங்க வரவேற்கிறோம்.

சீக்கிரம்
அதுதான் அந்த அறை
இல்லையென்றால் இரவு மட்டும் தங்கலாம்
ஆனால் அதற்கு கூடுதல் செலவாகும்
நான் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன்
சரி, எனக்கு உடல்நலக்குறைவில்லை
வேறெங்கிலும் இருக்கும் அளவுக்கு சௌகரியமாய் இங்கே இருப்பாய்
எனவே நீ எங்களுடன் இங்கே தங்கவும் செய்யலாம்.

From Poems written between 1926 and 1933

பெர்டோல்ட் ப்ரக்ட் - தேர்ந்தெடுத்த கவிதைகள்
இரவுக்கான படுக்கை

நான் கேள்விப்படுகிறேன்
நியூயார்க் நகரில்
குளிர்மாதங்களில்
பிராட்வேயில் 26வது தெருவின் திருப்பத்தில்
ஒரு மனிதன் ஒவ்வொரு மாலையிலும் நிற்கிறான்

மேலும் அங்கிருக்கும் வீடற்றவர்களுக்கு
வழிபோக்கர்களிடம் முறையீடு செய்து
படுக்கைகளைப் பெற்றுத் தருகிறான் என.

அது உலகை மாற்றிவிடாது
அது மனிதர்களுக்கிடையலான உறவுகளை மேம்படுத்தாது
சுரண்டலின் காலத்தை அது குறைக்கப் போவதில்லை.
ஆனால் சில மனிதர்களுக்கு இரவுக்கான படுக்கை கிடைக்கிறது
ஓரிரவுக்கு காற்றிலிருந்து தப்பிக்கின்றனர்
அவர்கள் மீது விழ இருந்த பனி சாலைவழியில் வீழ்கிறது.

இதைப்படித்தவுடன் புத்தகத்தை கீழே வைத்துவிடாதே மனிதா.
சில மனிதர்களுக்கு இரவுக்கான படுக்கை கிடைக்கிறது
ஓரிரவுக்கு காற்றிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர்
அவர்கள் மீது விழ இருந்த பனி சாலை வழியில் வீழ்கிறது.
ஆனால் அது உலகினை மாற்றிவிடாது
அது மனிதர்களுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்தாது
அது சுரண்டலின் காலத்தைக் குறைக்காது.

From Poems written between 1926 and 1933

பெர்டோல்ட் ப்ரக்ட் - தேர்ந்தெடுத்த கவிதைகள்
படிக்கும் ஒரு தொழிலாளியிடமிருந்து கேள்விகள்

தீப்ஸ் நகரத்தின் ஏழு நுழைவாயில்களைக் கட்டியது யார்?
புத்தகங்களில் நீங்கள் அரசர்களின் பெயர்களைக் காண்பீர்கள்.
பாறைகளின் திரள்களை அரசர்கள் இழுத்து மேலேற்றினார்களா?
மேலும் பாபிலோன் பல முறை இடிக்கப்பட்டபோது
அத்தனை முறை அதை மீட்டுயர்த்தியது யார்?
என்னவிதமான தங்கமுலாம் பளபளக்கும் லிமா வீடுகளில்
கட்டிடத் தொழிலாளர்கள் வாழ்ந்தார்கள்?
சீனப்பெருஞ்சுவர் கட்டி முடிக்கப்பட்டபோது
கொத்தனார்கள் அந்த மாலை எங்கே சென்றனர்?
மகத்தான ரோம் நகர்
வெற்றி வளைவுகளால் நிறைந்துள்ளது.
அவற்றை எழுப்பியவர்கள் யார்?
யாரை எதிர்த்து வெற்றிபெற்றனர் சீசர்கள்?
பாடல்களில் புகழப்பட்ட பைஸாண்ட்டியம்
அதில் வசித்தவர்களின் மாளிகைகளாய் மட்டுமே இருந்ததா?
கட்டுக்கதைகளின் அட்லாண்ட்டிஸில் கூட
அதை கடல் கொண்ட இரவில்
மூழ்கியவர்கள் தமது தமது அடிமைகளுக்காக
இன்னும் கூக்குரலிட்டனர்.

இளம் அலெக்ஸாண்டர் இந்தியாவை வென்றார்.
அவர் தன்னந்தனியனாய் இருந்தாரா?
கால் தேசத்தவர்களைத் தோற்கடித்தார் சீஸர்.
அவருடன் ஒரு சமையல்காரர் கூட இருக்கவில்லையா?
ஸ்பெயின் தேசத்தின் ஃபிலிப் அரசர்
அவரது போர்க்கப்பல் மூழ்கியபோது அழுதார்.
அழுதது அவர் மாத்திரம்தானா?
ஃபிரெடரிக் ஏழு ஆண்டுகளின் போரில் ஜெயித்தார்.
அவர் தவிர வேறு யார் அதை ஜெயித்தது?

ஒவ்வொரு பக்கமும் ஒரு வெற்றியாக இருக்கிறது.
வெற்றியாளர்களுக்கு விருந்து சமைத்தவர்கள் யார்?
ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒரு மாமனிதன்.
பணத்தைச் செலுத்தியவர்கள் யார்?

அத்தனை அறிக்கைகள்
அத்தனை கேள்விகள்.

From The First Years of Exile 1934-1936

பெர்டோல்ட் ப்ரக்ட் - தேர்ந்தெடுத்த கவிதைகள்
பிறகு பிறந்தோர்க்கு

1
நிஜத்தில் நான் இருண்ட காலங்களில் வாழ்கிறேன்.
நேர்மையான சொல் முட்டாள்தனமானது.
மிருதுவான நெற்றி உணராத்தன்மையை தெரிவிக்கிறது.
சிரிக்கும் மனிதன் இன்னும் பயங்கர செய்தியைக் கொண்டவனில்லை.

என்னவிதமான காலங்கள் இவை
மரங்களைப் பற்றிப் பேசுவது ஏறத்தாழ குற்றமாகிறது?
காரணம் அது பல்வேறு பயங்கரங்களைப் பற்றிய மௌனத்தை உணர்த்துவதுதானா?
அதோ வீதியை அமைதியாகக் கடந்து செல்லும் மனிதன்
ஏற்கனவே தனது உதவி தேவைப்படும் நண்பர்களின் அணுகுதலுக்கு
அப்பால் சென்றுவிட்டான்?

நான் என்னைப் பேணும் உணவை இன்னும் சம்பாதிக்கிறேன்
ஆனால், என்னை நம்புங்கள், அது ஒரு விபத்து மாத்திரமே.
நான் செய்யும் எதுவும் நிறைவான உணவை உண்ணும் உரிமையை
எனக்களிப்பதில்லை.
சந்தர்ப்பவசமானக நான் பிழைத்திருக்கிறேன்
(என் அதிர்ஷ்டம் முறிந்தால் நான் தொலைந்து விடுவேன்)

அவர்கள் என்னிடம் சொல்கின்றனர்: சாப்பிடு, குடி.
அவையெல்லாம் கிடைத்திருப்பது பற்றி சந்தோஷப்படு.
நான் உண்பதைப் பட்டினியில் கிடக்கும்
ஒருவரிடமிருந்து பிடுங்கிக்கொள்ளும்போது
நானெப்படி உண்ணவும் குடிக்கவும் இயலும்
மேலும் அந்த கண்ணாடித் தம்ளர் குடிநீர்
தாகத்தினால் சாகும் ஒருவருக்கு சேர வேண்டியதாய் இருக்கையில்?
இருப்பினும் நான் உண்ணவும் குடிக்கவும் செய்கிறேன்.

நான் அறிவார்ந்தவனாய் இருக்க விரும்புவேன்.
புராதனப் புத்தகங்களில் விவேகம் என்னவென்று சொல்லப்பட்டிருக்கிறது:
இந்த உலகின் சச்சரவுகளைத் தவிர்த்தல்
மற்றும் உங்கள் குறைந்த காலத்தை பயமின்றி வாழ்தல்
மேலும் வன்முறையின்றி ஒத்து வாழ்தல்
தீவினைக்கு நல்வினையைப் பதிலாய்த் தருதல்
உங்கள் விழைவுகளை நிறைவேற்றிக்கொள்ளாது
மாறாக அவற்றை மறந்துவிடுல்.
இவை எல்லாம் புத்திசாலித்தனம் எனக் கருதப்பட்டது.
இவற்றை என்னால் செய்யவியலாது:
நிஜமாய், நான் இருண்ட காலங்களில் வாழ்கிறேன்.
2
நான் நகரங்களுக்கு வந்தது
ஒரு சீர்குலைவின் காலத்தில்.
அப்போது அங்கே பசி அரசோச்சியது.
நான் மனிதர்களுக்கிடையே வந்து சேர்ந்த சமயம்
கலகக் காலம்
மேலும் நான் அவர்களுடன் இணைந்து கலகம் செய்தேன்.
இவ்வாறு எனக்கு இந்த பூமியில் அளிக்கப்பட்ட
என் காலத்தைக் கழித்தேன்.

போர்களுக்கிடையே நான் என் உணவினை உண்டேன்.
உறங்குவதற்கு நான் கொலைகாரர்களுக்கிடையில் படுத்துக்கொண்டேன்.
காதலை நான் கவனமின்றிக் கையாண்டேன்.
மேலும் இயற்கையை நான் பொறுமையின்றி நோக்கினேன்.
எனக்கிந்த உலகில் அளிக்கப்பட்ட காலத்தைப்
போக்கினேன் இவ்வாறு.
3
என் காலத்தில் எல்லா சாலைகளும் சகதிக்குள் இட்டுச்சென்றன.
கசாப்புக்காரர்களிடம் என் நாக்கு என்னைக் காட்டிக்கொடுத்தது.
என்னால் செய்யவியன்றதெல்லாம் சொற்பமே.
ஆனால் அதிகாரத்தில் இருந்தவர்கள் அமர்ந்திருந்தனர்
நானின்றிப் பாதுகாப்பாய்:
அது என் நம்பிக்கையாய் இருந்தது.
எனக்கிந்த உலகில் அளிக்கப்பட்ட காலத்தை
கழித்தேன் இவ்வாறு.
எமது படைப்பிரிவுகள் பலவீனமாய் இருந்தன.
எமது நோக்கம் தொலைவில் கிடந்தது.
என்னால் அதனை அடைய சாத்திமற்றிருந்தும்
அது தெள்ளத் தெளிவாய்த் தெரிந்தது.
எனக்கிந்த உலகில் அளிக்கப்பட்ட காலத்தை
போக்கினேன் இவ்வாறு.
4
வெள்ளத்திலிருந்து வெளிப்படப்போகிற நீங்கள்
அதில் நாங்கள் மூழ்கிப்போனோம்.
நினைவிருக்கட்டும்
எமது தோல்விகள் பற்றிப் பேசுகையில்
இருண்ட இருண்ட காலத்திலிருந்தும் கூட
நீங்கள் தப்பித்துவிட்டீர்கள்.

காரணம் எம் காலணிகளை மாற்றுவதைவிட அடிக்கடி
நாங்கள் நாடுகள் மாறினோம்.
வர்க்கங்களின் யுத்தங்களின் ஊடாய்
வெறும் அநீதி மாத்திரமே இருந்தபோது நம்பிக்கையிழந்தோம்
மேலும் கலகம் ஒன்றுமில்லை.

இருப்பினும் நாங்கள் அறிவோம்:
வெறுப்பு, கீழ்மையைப் பற்றியது கூட
தோற்றக்கூறுகளை கோணல்மாணலாக்குகிறது.
அநீதிக்கு எதிரான கடுங்கோபம் கூட
குரலைக் கரகரப்பாக்குகிறது.
ஓ
நட்பார்ந்த தன்மைக்கான அடித்தளத்தைத்
தயார் செய்ய விரும்பிய
நாங்களே நட்புடன் இருக்க இயலவில்லை.

ஆனால் நீங்கள்
ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கான உதவியாளனாய்
மாறும் காலம் வரும்போது
எம்மைப் பற்றி எண்ணிப்பாருங்கள்
பொறுமையுடன்.

Svendborg Poems (1939)