லிடியா டேவிஸ் உரையாடல்

சாரா மங்குசோ
தமிழில்: வளவன் தங்கவேல்

பகிரு

I

ஒருவேளை, உற்றதுக்கு பின்பு ஒரு வகைமாதிரி கிடைக்கலாம்

தி பிலீவர்: இப்போது வேலை நாட்கள் எப்படி போகிறது, பாடமெடுப்பதிலிருந்து விடுப்பில் இருக்கிறீர்கள் அல்லவா?

லிடியா டேவிஸ்: எனது வேலை நாட்கள் எனது எழுத்து வேலையினூடும் எனது தற்போதைய மொழிபெயர்ப்பிற்கும், அது பெங்குயினுக்கான மேடம் பாவரியின் புதிய பதிப்பு, இடையேயும் பிரிந்துள்ளன.

தி பிலீவர்: உண்மையில் முன்பை விட கூடுதலாக எழுதினாலும், மெக்காத்தர் பெல்லோஷிப்பிற்கு பின்பு உங்கள் எழுத்து தர அடிப்படையில் மாற்றம் அடைந்திருப்பதாக தோன்றுகிறது?

லிடியா டேவிஸ்: அது மாற்றமடைந்திருக்கிறது, ஆனால் அது எப்போதும் மாறியபடியேதான் இருக்கிறது. நான் பிறருடைய பிரதிகளோடு வேலை செய்வதில் கூடுதலான ஈடுபாட்டோடு இருப்பதாகப்படுகிறது - அதாவது, ஒரு மொழிபெயர்ப்போடு எனது குறிப்புகளை இணைப்பது அல்லது இரண்டு அல்லது அதற்கு மேலான பிரதிகளோடு எனது குறிப்புகளை இணைப்பது - மேலும் கொஞ்சம் நீண்ட கதைகளில் ஈடுபடுவதென. ஆனால் சமீபமாக எனது சொந்த கற்பனையில்/ தனி முயற்சியில் மிகச்சிறிய கதைகளை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆக எனக்கு உண்மையில் அடுத்தது என்ன என்பது தெரிவதில்லை.

தி பிலீவர் : நீங்கள் ஒரு வாசகராக தொடங்கும் போதே பெக்கெட் உங்களின் ஆழமான பாதிப்பு எனக்கூறியிருந்தீர்கள்.

லிடியா டேவிஸ்: நான் பெக்கெட்டிடம் மிக ஆரம்பித்திலேயே வந்துவிட்டேன் அவரது கச்சிதமான நடையைப் பார்த்து பயங்கர ஆச்சரியப்பட்டேன். எனது இருபதுகளில் எழுதிப்பயிலும்போது, அவர் வாக்கியங்களை ஒன்று கூட்டும் விதத்தை நான் ஆர்வத்துடன் பயின்றேன். அவரது விருப்பமான வாக்கியங்களை காப்பி அடித்தேன். எனக்கு பிடித்தது என்னவென்றால் அந்த நேரடியான / ஆங்கிலோ - சாக்சன் சொற்கள்; அந்த அறிவுத்திறன்; எனது அறிவுத்திறனுக்கான சவால்; கனமான செய்தியாகக் கூடியவற்றுக்கு அடியே ஊடும் அந்த நகைச்சுவை; மேலும் மொழிக்குறித்த தன்னுணர்வு.

தி பிலீவர்: என்னுடைய பள்ளி ஆசிரியரொருவர் பெக்கெட்டின் ப்ரௌஸ்ட் பற்றிய கட்டுரையை அதிர்ஷ்டக் கயிற்றைப்போல எடுத்துச்செல்வார். ப்ரௌஸ்டும் பெக்கெட்டும் உங்களுக்காக இணைக்கப்பட்டவர்களா?

லிடியா டேவிஸ்: நான் ப்ரௌஸ்டிடம் கொஞ்சம் தாமதமாகத்தான் வந்தேன். முப்பது வருடங்களுக்கு முன்பு ஸ்வான்ஸ்வேயின் முக்கால்வாசி பகுதியை வாசித்திருக்கிறேன், ஆனால் பெக்கெட்டை வாசித்த அளவு ப்ரௌஸ்டை வாசிக்கவில்லை. சமீபமாக ப்ரௌஸ்டை மொழிபெயர்க்கும்போது அடைந்த மகிழ்ச்சி. என்னுடையது போன்ற இல்லாத நடையை எழுதுவதனால் அடையும் மகிழ்ச்சிதான் என எண்ணுகிறேன். மேலும் அதுபோல் எப்போதுமே எழுத முடியாது, ஆனால் அதை முயற்சி செய்வது விந்தையானது.

தி பிலீவர்: பெக்கெட்டையும் ப்ரௌஸ்டையும் உங்களின் படைப்புகளுள் இணைப்பது போன்று ஏதோ மாஸ்டர் ப்ளான் உள்ளது போல் தெரிகிறதே?

லிடியா டேவிஸ்: ஒரு சில எழுத்தாளர்களே ஒரு விரிவான மாஸ்டர் ப்ளான் அல்லது செயல் திட்டத்தோடு இருப்பதாக எனக்குப்படுகிறது - அல்லது குறைந்த பட்சம், முதலில் எழுதத் தொடங்கும்போது ஆரம்பிப்பது கிடையாது. அது எப்படியாகினும் நான் என் எழுத்தின் ஒவ்வொரு கட்டத்திற்கும் படிப்படியாக வருவதாகத்தான் எண்ணுகிறேன். ஒருவேளை உற்றதுக்கு பின்பு ஒரு வகைமாதிரி கிடைக்கலாம், ஆனால் அது செல்ல செல்ல, ஒருவரது வளர்ச்சியென்பது, ஒரு விதத்தில் தர்க்கரீதியானதாக அல்லது தவிர்க்கமுடியாததாக இருந்தாலும், இன்னொரு விதத்தில் அது பெருங்குழப்பமானதாகும்.

II

ஒரு கதை, சிறிதாவது விவரணையைக் கொண்டிருக்க வேண்டும்

தி பிலீவர்: சிறுகதைக்கும் கதைக்குமான உங்களின் வேறுபாட்டோடு உடன்படுகிறேன் - அந்த கதை என்ற சொல், சிறுவை கழித்தால் பல்வேறு விசித்திரமான வடிவங்களை உள்ளடக்கலாம். நீங்கள் ரசல் எட்சனின் ‘உரைநடை கவிதைகளை’ ‘கதைகள்’ என்று அழைத்ததாக வாசித்தேன் (அதை அவர் முதலில் ‘நீதிக்கதைகள்’ என்று அழைத்தார்.)

லிடியா டேவிஸ்: எட்சன் அவைகளை ‘கவிதைகள்’ என்று குறிப்பதற்காக அப்படிச்சொன்னேன், அவரது தொகுப்புகளின் அட்டைகளில் பார்த்திருக்கிறேன் (‘உரைநடை கவிதைகள்’ அல்லது ‘நீதிக்கதைகள்’ என்பதைக் காட்டிலும்). அவைகளை ‘நீதிக்கதைகள்’ என்று அழைக்கலாம், ஆனால் அந்தச் சொல் ஒரு நீதி அல்லது போதனை என்பதையே சுட்டுவதாக இருக்கிறது மேலும் அவரது படைப்புகள் வியத்தகு வகையில் நீதிமொழிகளின்றி இருப்பதாகவே நினைக்கிறேன். அவைகள் எனக்கு கதைகளாகவேப் படுகிறது, ஏனென்றால் அவை முழுவதும் விவரணைகளாக உள்ளன.

அவற்றிலுள்ள வலியுறுத்தலின் கணம் விவரணையிலேயே உள்ளது, மொழியில் இல்லை என நினைக்கிறேன். அந்த கணம் மொழிக்கு மாறும்போது, அவை அப்போது கவிதையின் வெளிக்குள் நுழையலாம்.

தி பிலீவர்: நீங்கள் ‘கதை’ யென்பது ‘கவிதையை’ விட பெரிய வகைமையாக இருப்பதற்கான சாத்தியம் இருப்பதாக கருதுகிறீர்களா?

லிடியா டேவிஸ்: ஆம், கதை என்ற வகைமை கொஞ்சம் கூடுதல் நெகிழ்வுதன்மையோடு இருப்பதாகவே கருதுகிறேன். ஆனால் பிரச்சனையென்னவென்றால் நம்மிடையே மிகச் சில பரிச்சயமான வகைமைகளே உள்ளன. அவற்றில் ஏதோவொன்றில் எட்சன், காஃப்கா, பீட்டர் ஆல்டென்பெர்க், ராபெர்ட் வால்சர், ஜிம் ஹெய்னன், ஹென்றி மிச்சாக்ஸ், லீயோன் பால் ஃபர்க், பீட்டர் செர்செஸ், ப்ரான்ஸிஸ் பொஞ்சே, ஜேஃப் போவியெர், மார்த்தா ரோன்க், பைலிஸ் கொஸ்டென்பாம், டயான் வில்லியம்ஸ்... போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளைப் பொருத்தப் பார்க்கிறோம்.

தி பிலீவர்: ஃப்ளாஷ் புனைவு, திடீர் புனைவு, சிறிய சிறுகதைகள், குறுங்கதைகள், உரைநடை கவிதைகள், கவிதைகள் - இன்னும் நிறைய வகைமைகளை உருவாக்குவதுதான் இந்த குழப்பத்திற்கான தீர்வு என நினைக்கிறீர்களா?

லிடியா டேவிஸ்: இன்னுமொரு வகைமைக்கான ஒரு தேவையிருப்பின், அதற்கு கொஞ்சம் காலமானாலும் அது உருவாக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும். ஃப்ளாஷ் புனைவு, திடீர் புனைவு போன்றவற்றிற்கு கொஞ்சம் ஏற்புடைமை உள்ளதுதான். ஆனால் மக்கள் ஃபளாஷ் ஃபிக்‌ஷன் கதைகளை வாசிக்கத் தொடங்குகையில் ஒரு மாதிரி ஒரு குட்டி சிறுகதையைத்தான் எதிர்பார்க்கிறார்கள், வழமைக்கு குறைவாக வழங்குபவையாக அவை இருப்பினும் - எண்ணவோட்டம், புதிர் விளையாட்டு, விரிவான வார்த்தை ஜாலம், வசைமாரி - அதற்கு நல்லதொரு பொதுப்பெயர் கிடையாது. ஒரு விமர்சகர் ராபர்ட் வால்செரை ‘ஃபுயில்லெடனிஸ்ட்’* என (தரம் தாழ்த்தி தான் என நினைக்கிறேன்) அழைத்தார். அவர் சில சமயங்களில் தன் படைப்புகளை வெறுமெனே ‘சிறு உரைநடை படைப்புகள்’ எனக் குறிப்பிட்டார்.

தி பிலீவர்: ஏதோ சில இதழ்களில் பார்த்த கதைகள் போல் இல்லை என்பதற்காக உங்களது சில கதைகளை கதைகளே இல்லை என ஈடுபாடற்ற விமர்சகர்கள் கூறுகிறார்கள். கதைக்கான ஒரு நேர்மறையான வரையறையை எப்போதும் எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறேன். ஒரு கதை கதைதானென்று எப்படி தெரிந்துகொள்வீர்கள்?


“சாரு ஒரு ஒரு பத்தி எழுத்தாளர் மட்டுமே! ” என்று குறிப்பிட்டு கேள்விப்பட்டிருக்கிறோமல்லவா, அது போல Feuilletonist என்பது பிரெஞ்ச் தினசரிகளின் இணைப்பிதழான feuilleton இல் பத்தி எழுதக்கூடியவர்களைக் குறிப்பிடுவது


லிடியா டேவிஸ்: அது விளக்குவதற்கு கடினமான ஒன்று, அது குறித்து எளிமையாகச் சொல்லுவதென்றால், இப்படிச்சொல்வேன், ஒரு கதை சிறிதாவது விவரணையைக் கொண்டிருக்கவேண்டும், ‘அவள் கூறினாள்’ அப்படியென்று சொன்னால்தான், வேறு காலம் இடத்தை உருவாக்கி வாசகனைக் கடத்த தோதுவாக இருக்கும். ஆனால், கண்டிப்பாக, அது விவரணைக்கவிதை கிடையாது. கொஞ்சம் தட்டையாக, கவிதையிலிருந்து சந்த வேறுபாட்டோடு இறுக்கம் குறைந்து இருக்கும்.

தி பிலீவர்: கதை சந்தங்களில் வேறுபடுவது எப்படி? இறுக்கம் என்பதன் மூலம் சிக்கனமான அல்லது வேண்டுமென்றே தெளிவற்றத்தன்மையாக இருப்பதைக் குறிக்கிறீர்களா?

லிடியா டேவிஸ்: வெறும் வரி முடிவுகள் உள்ள கவிதைகளை மட்டும் நான் எடுத்துக்கொண்டால், பின்பு அங்கு தெளிவான சந்த வேறுபாடுகள் உண்டு - வரி முடிவில் உள்ள இடை நிறுத்தத்திற்கு பதிலாக ஓவ்வொரு வரிகளின் இறுதியில் உள்ள தொக்கி நிற்றல். ஆனால் அதற்கு மேலேயும், உண்மையான ஒரு கவிதையில் ஓவ்வொரு சொல்லும் சொற்றொடரும் ஒரு வெடிகுண்டாக இருப்பதைக் காண்கிறேன், அதாவது அது வாசகனின் மனதில் மலரவேண்டும் அல்லது வெடிக்கவேண்டும். ஒரு உரைநடைப் படைப்பில் உள்ள ஒவ்வொரு சொல்லும் சொற்றொடரும் அந்த மாதிரி அழுத்தப்பட்ட அல்லது செறிந்த பொருளை கொண்டிருப்பதில்லை. இறுக்கமானது என்பது மூலம் வெறுமனே சிக்கனமானதோ அல்லது வேண்டுமென்ற தெளிவற்றத்தன்மையையோ நான் அர்த்தப்படுத்தவில்லை. கண்டிப்பாக ஒரு நல்ல கவிதை சிக்கனமாக இருக்கவேண்டும் (நல்ல உரைநடைப் படைப்பை விட மேலும் சிக்கனமானது என்பதாக இல்லை - ப்ரௌஸ்ட் தன் உரைநடை சிக்கனமானது என்றார், நான் அதை ஒத்துக்கொள்கிறேன்),

ஆனால் அது வாசகர் வெளிப்படையாகவோ அல்லது உள்ளார்ந்தோ வழங்கக்கூடிய பொருளை விட்டு விடக்கூடலாம். (‘கூடலாம்’ என்று சொல்கிறேன். ஏனென்றால் ஒவ்வொரு கவிதையும் அது போன்ற பல்வேறு விதிகளில் இயங்குகிறது.) ஒரு நல்ல கவிஞன் எப்போதுமே வேண்டுமென்ற தெளிவற்றத்தன்மையோடு இருப்பதை நான் நம்பவில்லை. ஒரு கவிஞன் அவனுக்கு அல்லது அவளுக்கு அவசியமான விதத்தில் எழுதுகிறார். வாசகர், பின்பு அக்கவிதையைக் கடினமாக உணரலாம்.

கிறிஸ்டபர் மிடில்டன் எழுதுகிறார், ‘கவிதையின் தாளமென்பது மாறுபடும் இசைவேகத்தின் அமைப்பாகும். அது தனது ஓசைகளே அர்த்தத்தின் முளை வேரென உணர்கிறது.’ (நான் அவர் சொன்னதைப் அப்படியே குறிப்பிடுகிறேன், ஆனால் உணர்கிறது என்பது பன்மையில் இருப்பது எனக்கு சரியென்று படுகிறது). இது கொஞ்சம் அதிகம்தான், ஆனால் சிந்திப்பதற்கு சுவாரஸ்யமானது.

III

நடையில்லாத எழுத்து என்றொன்று இல்லை.”

(லிடியாவின் ப்ரௌஸ்ட் மொழிபெயர்ப்பு குறித்தான கேள்வி)

தி பிலீவர்: Prosaic என்ற சொல்லை, Prosaique - ன் நேரடி அர்த்தமாகிறதால் அதையே உபயோகிப்பது நல்லது என்று நினைக்கிறீர்களா? அல்லது ‘dull’ என்ற சொல்லை பயன்படுத்தலாமா? ஏனென்றால் அது தற்காலத்து ஆங்கிலத்தில் ப்ரௌஸ்ட்டின் பிரெஞ்சில் Prosaique இருந்த இடத்தில் இருக்கிறது. நீங்கள் முந்தையதை தேர்ந்தெடுத்தீர்கள், சி.கே.ஸ்காட்- மான்கிரிஃப் பிந்தையதைத் தேர்ந்தெடுத்தார்.

லிடியா டேவிஸ்: எது என்னை Prosaicஐ தேர்வு செய்ய வைத்தது என்று என்னால் இப்போது மீட்டுருச்செய்ய முடியாது - ஆனால் நான் Swann's wayஐ மொழிபெயர்க்கும்போது, ஒரு முறைக்கு இருமுறை ஓவ்வொரு சிக்கலான சொற்தேர்வையும் சரி பார்த்துக்கொண்டேன், என் மொழிபெயர்ப்பின் மூலம் அந்தக் காலத்தில் ப்ரௌஸ்ட் பிரெஞ்சில் வெளிப்படுத்தியதை இந்தக் காலத்திய ஆங்கிலத்தில் வெளிப்படுத்திவிட வேண்டுமென மெனக்கெட்டேன். உங்களின் உதாரணத்தில், prosaic இன் ஓசை பிரெஞ்சிற்கு நெருக்கமாக இருப்பதால் அதை நான் விரும்பியிருக்கலாம்: அதே மூன்று அசைகள் மற்றும் pr என்ற தொடக்கத்தைக்கொண்டிருந்தது. வரலாற்று ரீதியாகவும் சந்தவகையிலும் அது dullல் இருந்து முற்றிலும் வேறானது - அதுவே தன்னளவில் ஒரு அற்புதமான சொல், கண்டிப்பாக என்னுடைய எழுத்தில் prosaicக்கு பதிலாக அதைப் பயன்படுத்தவே அதிக வாய்ப்புள்ளது.

தி பிலீவர்: அது போன்ற சமயங்களில், எப்போதும் ‘cognate’ஐயே நீங்கள் தேர்ந்தெடுப்பீர்களா?

லிடியா டேவிஸ்: என்னால் எப்பவெல்லாம் முடிகிறதோ, அப்போதெல்லாம் நான் ‘cognate’ -ஐ பயன்படுத்தலாம், ஆனால் அது எப்போதும் சந்தம், தாள ஓசைக்கானக் காரணங்களுக்காகத்தான்.

தி பிலீவர்: பெக்கெட்டின் சுயசரிதையில், ஜேம்ஸ் நோவல்சன் கூறுகிறார்: பெக்கெட், ப்ரௌஸ்ட்டை தேர்ந்தெடுத்ததற்கானக் காரணம் எழுத்து நடையில்லாமல் எழுதுவதற்கு பிரெஞ்சில் எழுதுவதே எளிமையானது என்பதுதானதென்கிறார். நீங்களும் மொழிபெயர்ப்பைக் குறித்து அதே போன்று கூறியிருக்கிறீர்கள் - அது தன்னுடைய சொந்த நடையை இன்னொரு எழுத்தின் மேல் திணிக்கச் செய்யாத ஒரு பயிற்சியென. கொஞ்சம் அடிப்படை உண்மையை எழுத்து நடை மூடி மறைக்கிறதென்பது - ஒருவரெடுக்கக்கூடிய குறைந்தபட்ச பின்நவீனத்துவ நிலைப்பாடு என்று படுகிறது.

லிடியா டேவிஸ்: இல்லை, உங்கள் கேள்வியைச் சரியாக புரிந்துகொண்டேனென்றால், கொஞ்சம் அடிப்படை உண்மையை எழுத்து நடை மூடிமறைப்பதாக நான் கூறமாட்டேன். இது நாள் வரை மூலத்தின் நடையைப் பேணியே வந்திருக்கிறேன், மூலத்தின் நடையை பேணாமல் என்னுடைய நடைக்கு ஏற்றபடி மொழிபெயர்த்தால், நான் அக்கதையின் தன்மையை முக்கியமான கூற்றை மாற்றிவிடுகிறேன். ஒரு முறை விளையாட்டாக லாரன்ஸ் ஸ்டேர்னை கொஞ்சம் தற்காலத்தைய ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தேன். சில கதைக்கூற்றின் உள்ளடக்கம், கொஞ்சம் நகைச்சுவை, விசித்திரத்தன்மை, இன்னும் சிலவற்றைப் பேண முடிந்தது, கொஞ்ச தூரத்திற்கு பரவாயில்லை, ஆனால் அது கடினமாகயிருந்தது. ‘மேம்படுத்தப்பட்ட’ பதிப்பிற்காக ஓவ்வொரு முறை அவரது சில சொற்றொடர்களை கைவிடும்போது, அப்படைப்பின் மிக இன்றியமையாத, இனிமையான விசித்திரத்தன்மைத் தொலைந்து போயிற்று.

தி பிலீவர்: ஆக ஒரு மொழிபெயர்ப்பாளராக தனது நடையைக்கொண்டு எழுத்தாளரின் நடையை மறைத்து விடாமல் இருப்பதன் அவசியம் குறித்து நீங்கள் கூறுகிறீர்கள். இன்னொரு விதத்தில் பெக்கெட், நடையில்லாத எழுத்துக்குறித்தான சாத்தியத்தைச் சுட்டுகிறாரெனப்படுகிறது. அது சாத்தியமென நினைக்கிறீர்களா? ஒருவேளை தனக்கு பரிச்சயமான ஆங்கில - மொழி நடையின் பாரமின்றி எழுவது குறித்து மட்டும் கூறுகிறாரோ?

லிடியா டேவிஸ்: இறுதியில், நடையில்லாத எழுத்து என்றொன்று உள்ளது என்பது போன்ற விஷயத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ரொம்ப நேரான, தட்டையான, வழக்குகளற்ற, கவித்துவ செழிப்புகளற்ற, கடுமையான உருவகங்கள் புழங்கப்பெற்ற, நடையும் நடைதான், அது நெருக்கமான அடர்த்தியான, மரபுகள் மற்றும் சொற்களஞ்சியங்களைப் பயன்படுத்தும் எழுத்தாளரின் நடைக்கிணையான தனிச்சிறப்பான எழுத்து நடையாகிவிடுகிறது. நான் பெக்ட்டின் சுயவிளக்கத்தை போய் பார்க்கவேண்டும், ஆனால் அவர் ஒரு மாதிரி தனக்கு பேசுவதற்கும் ஆங்கிலத்தில் எழுதுவதற்கும் வெகு இயல்பான ஜாய்சிய மிகு பெருக்கத்தைத் தடுத்தாட்கொண்டிருக்கவேண்டும் என்றுபடுகிறது.

IV

நிஜ வாழ்வு

தி பிலீவர்: உங்களது தனிப்பட்ட வாழ்கையின் அடிப்படை விஷயங்களைப்பற்றி நீங்கள் ரகசியமாக இருப்பது கிடையாது - நீங்கள் ஒரு மொழிபெயர்ப்பாளராக வேலை செய்கிறீர்கள், பல்கலைக் கழகத்தில் பாடமெடுக்கிறீர்கள், மணமுடித்தீர்கள் மறு மணமுடித்தீர்கள், இரண்டு மகன்களைப் பெற்றீர்கள், இசை படித்தீர்கள், புத்தகம் எழுதுகிறீர்கள். உங்களிடம் முன்பே கேட்டிருக்கக்கூடும், டேவிஸின் கதாபாத்திரங்களுக்கும் டேவிஸ் என்ற மனிதருக்குமுள்ள வெளிப்படையான ஒப்புமை என்ன?

லிடியா டேவிஸ்: நான் பீட்டெர் ஆல்டென்பெர்கிடம் மீண்டும் செல்கிறேன் - அவரது பெரும்பான்மையான சின்ன கதைகள் அவர் சம்பந்தப்பட்டதாகவோ அல்லது அவரை ஒத்த கதாபாத்திரத்தைப் பற்றியதாகவோ இருக்கும், இருந்தும் அனைத்திற்கும் மேலாக என்னை ஈர்ப்பது, அந்தக் கதைகள் அதனளவில் நேர்மையாகவும், முழுமையாகவும் மற்றும் சுயமான ஒரு வாழ்வை கொண்டுள்ளன. முடிவில், அவை எங்கிருந்து வருகின்றன, எப்படி உருவாக்கப்பட்டன, முதன்மை கதாபாத்திரம் ஆல்டென்பெர்கா இல்லையா என்பது குறித்தெல்லாம் எனக்கு ஆழ்ந்த விருப்பமில்லை. இல்லை ஒரு வேளை, எனக்கு விருப்பமிருக்கலாம், ஆனால் அது அவைகளை நான் சிறு புனைவுகளாக வாசிப்பதில் எந்த தடையையும் ஏற்படுத்துவதில்லை. எப்படி தன் வாழ்விலிருந்து கூறுகளை தேர்ந்தெடுத்தார் என்பது கொஞ்சம் சுவாரஸ்யமானது தான் - மேலும் அது போன்று வலுவான, முழுமையான, வேடிக்கையான, துயர்மிகு உலகத்தை - தேர்ந்தெடுத்ததுதான் விஷயம். ரசல் எட்சனின் படைப்புகளில் எவ்வளவு நேர்மையும் ஈர்ப்பும் இருக்கிறதோ அதே அளவு இந்த சிறு படைப்புகளிலும் உள்ளது, அவைகள் கண்டிப்பாக அல்லது பெரும்பான்மையானவை சுயசரிதைத்தன்மை இல்லாதவை என நம்புகிறேன் அநேகமாக உணர்வுகளைத்தவிர. மேலும் தேர்ந்தெடுப்பது குறித்த - தொனி மற்றும் நோக்கம் கொண்டு - கருத்திற்கு திரும்புதல் அவசியமாகிறது. நாம் தேர்ந்தெடுக்கும் வாழ்வியற்கூறுகள் அல்லது உளவியல் குணங்கள் மூலம் என்னுடைய கதைகளில் வரும் ஒரு கதாபாத்திரம் என்னை சில வழிகளில் ஒத்திருக்கலாம் ஆனால் அவள் மொத்ததில் வேறுவொன்று, இன்னொரு படைப்பு.

தி பிலீவர்: கலைப்படைப்பென்பது தேர்ந்தெடுக்கும் செயல்முறை என்று நம்புகிறீர்களா?

லிடியா டேவிஸ்: கண்டிப்பாக அது அதைவிட இன்னும் கூடுதலானது. என்ன சொல்கிறேன் என்றால் உங்கள் ‘நிஜ வாழ்விலிருந்து’ எடுக்கும்போது, நீங்கள் தேர்வு செய்கிறீர்கள் மேலும் அதன்படி திரித்து கூறுகிறீர்கள், ஒரு வகையில் - உங்கள் விஷயங்களைச் சிதைக்கிறீர்கள், அல்லது உண்மையில் அவற்றைப் புனைந்துகொள்கிறீர்கள்.

தி பிலீவர்: உங்கள் கதைகள் குறித்து பென் மார்கஸ் இப்படிச்சொல்கிறார்: ‘ அனுபவத்தால் அறியப்படும் விஞ்ஞானமே டேவிஸின் சிறந்த கதைகளை வழி நடத்துகிறது. மாறாக ஒரு உள்ளுணர்வால் கதைசொல்லும் முறையல்ல.’ எழுத்தாளர்களை வெறும் உணர்வுகளின் பெருமூட்டைகள் என்பதல்லாமல், ஒரு இயந்திரத்தனமான இஞ்சினாக எண்ணுவது எனக்குப் பிடித்திருக்கிறது.

லிடியா டேவிஸ்: உள்ளுணர்வுகளாலான அனுபவ கதைச் சொல்லும் பாணி என்பது எப்படி இருக்கிறது?

இரண்டு மாடல்களும் (உணர்வு மூட்டைகள் மற்றும் இயந்திர இஞ்சின்கள்) வழிநடத்தும் நுண்ணறிவை விட்டு விடுகின்றன. வழிநடத்தும் நுண்ணறிவில் ஒரு வியத்தகு விஷயம் ஒன்று உள்ளது அது விஞ்ஞான கொள்கைகளை உறிஞ்சி ஒன்றுசேர்த்து மனித உளவியலிலும் உணர்வுகளிலும் கொண்டு சேர்த்துவிடுகிறது. இன்று உள்ளபடியே இன்றைய விஞ்ஞானத்தைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன், ஏனென்றால் என்னுடைய நண்பரொருவர் என்னிடம் வெப்பச்சலனம் மற்றும் வெப்பக்கடத்தல் குறித்த வித்தியாசத்தை விளக்கிக் கொண்டிருந்தார், பின்பு வெப்பக் கதிரியக்கம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார். (தொட்டி நிறைய தண்ணீரில் சாம்பெய்ன் குளிர்ந்துகொண்டிருந்தபோது இது ஆரம்பித்தது.) விஞ்ஞானக் கொள்கைகள் மற்றும் கணித விதிகள் குறித்து ரொம்ப இனிமையான விஷயங்கள் உண்டு, அவை புலனாகாத, ஏதோ வழியில் தவிர்க்கவேமுடியாததாகவும் மிக ஓத்திசைவானதாகவும் இருக்கின்றன. எனக்கு மிகவும் பிடித்த கவிஞர், ரே ஆர்மண்ட்ராட், குறிப்பிட்ட சில விஞ்ஞானத்தில் ஆழ்ந்த விருப்பம் கொண்டிருந்தார். விஞ்ஞான கொள்கைகளும் உண்மைகளும் அவரது கவிதைகளில் தவிர்க்க முடியாத ஒருங்கிணைந்த ஓர் அங்கமாகிறது ஏனென்றால் அவை அவரது சிந்தனையின் ஓர் ஒருங்கிணைந்த அங்கமாகும்.

தி பிலீவர்: அருமை. எனது அழகான சிறிய முரண் தர்க்கம் காணாமல் போனது. ஆக, நான் சரியாக புரிந்துகொள்கிறேனென்றால், முடிவில், வழிநடத்தும் நுண்ணறிவே கலையை உருவாக்கும் என்று சொல்கிறீர்கள் - அந்த நுண்ணறிவிற்கு பின்புறம் எப்போதும் தகவல் மற்றும் உணர்வுகளிலான செயலியக்கம் நடந்துக் கொண்டே இருக்கிறது எனலாம்.

லிடியா டேவிஸ்: வழி நடத்தும் நுண்ணறிவு, ஆம், ஆனால் படைப்பின் தோற்றத்தில் வலிமையான உணர்வு இருக்க வேண்டும், அது எவ்விதத்திலேனும் நன்மை பயக்குமென்றால். கண்டிப்பாக, அந்த வலிமையான உணர்வு மொழியின் பெருங்களிப்பாகலாம்.

தி பிலீவர்: ஆர்மண்ட்ராட் குறித்து உங்களைக் கவர்ந்தது எது?

லிடியா டேவிஸ்: ஒ, அவரின் நகைச்சுவை, அவரின் நுண்ணறிவு, அவரின் துல்லிய படிமங்கள், அவரின் உணர்ச்சி வரிகள், மொழி மீதான அவரின் அக்கறை, - ஒவ்வொரு கவிதையிலும் வரும் ஆச்சர்யங்கள்.

வை ஸ்டாப் வித் பார்னகெல்?’ என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன் - தலைப்பு அவருடைய ஒரு வரி தான், எனக்கு மிக விருப்பமானவற்றில் சேர்ந்தது.

V

தன்மன இறுக்கமான கதைசொல்லிகள்

தி பிலீவர்: ‘கிட்டதட்ட, உணர்வுபூர்வமான முக்கியமான விஷயங்களைக் கவனப்படுத்த தன்மன இறுக்கமான கதைசொல்லல் தோல்வியடைந்துள்ளது. மேலும் கதாபாத்திரங்களுக்கிடையேயான விவரணைக்காட்சிகளில் துடுக்கான ஆர்வமின்மை உள்ளது’ என உங்கள் கதைகள் குறித்து பென் மார்க்கஸ் மேலும் சொன்னவை.

லிடியா டேவிஸ்: இந்தத் தருணத்தில், கதாபாத்திரங் களிடையே விவரணைக்காட்சிகளை உருவாக்க எனக்கு சுத்தமாக விருப்பமில்லை. அந்த மாதிரி எழுதப்பட்டவை களில் குறிப்பிடும்படியான செயற்கைத்தனங்கள் அது நான் உருவகித்துக்கொண்டதாக இருக்கக்கூடும், அவற்றிலிருந்து விலக எண்ணுகிறேனோ என்னவோ. இருந்தும், அதைச் சொன்ன கணத்தில், வேறு என்ன எதிர்வினைகள் அந்தச் செயற்கைத்தனம் குறித்த அனுமானத்திற்கு இருக்குமென்று எண்ணுகிறேன். உதாரணத்திற்கு ஜேன் பாவெல்ஸ் போன்ற எழுத்தாளர், கொஞ்சம் அறிந்த செயற்கைத் தனத்தை, கதாபாத்திரங்கிடையிலான அந்த விவரணைக் காட்சிகளில் அனுமதித்து எப்படி பயனுள்ள அங்கமாக்குகிறார் என...

தி பிலீவர்: அந்தக் காட்சிகளில் அப்படியென்ன செயற்கையானது? மீதிக் கதையைவிட அது எப்படி செயற்கைத்தனமானது?

லிடியா டேவிஸ்: நம் தலைகளில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு கதைக்கூறு ஒன்றுண்டு, நண்பன் ஒரு கேள்விக்கேட்டால் சத்தமாக பதிலளிக்கக் கூடியக் கூற்று. எனக்கு அந்தக் கூற்று வெகு இயல்பாகப் படுகிறது. உரையாடலின் துண்டுகளோடு நாமும் இருத்திக்கொள்கிறோம். நமது ஞாபகங்கள் எப்போதும் முழுமையான உரையாடல்கள் கொண்ட மொத்த காட்சிகளாக விரிவது கிடையாது. ஆக நமது கதாபாத்திரம் கொஞ்சம் உள்ளடங்கிய பகுதியிலிருந்து எதை நினைவுக்கொண்டிருக்குமோ அது குறித்து எனது படைப்புகள் இருக்க வேண்டும் என எண்ணுகிறேன்.

தி பிலீவர்: இது தவறாக கூட இருக்கலாம், ஆனால் நான் இதைக் கேட்டாகவேண்டும் - உங்கள் கதை சொல்லிகள் குறிப்பாக தன்மன இறுக்கத்தோடு இருப்பதாக எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா (அல்லது வேறு ஏதாவது நரம்பியல் கோளாறுகளுடன்)?

லிடியா டேவிஸ்: இல்லை, எனக்கு அப்படி எப்போதுமே தோன்றியதில்லை. கதாபாத்திரங்கள் அல்லது கதைசொல்லிகள் ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் கவனமாக இருக்கலாம், - நாம் நமது வாழ்வில் செய்வது போல.

ஒரு எழுத்தாளராக, உணர்வுபூர்வமான முக்கிய விஷயத்தையும் விவரங்களில் கவனத்தையும் பொருட்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் அந்த உணர்வுபூர்வமான முக்கிய விஷயம் எப்படியாவது கடத்தப்பட்டுவிடும் என நம்புகிறேன். உதாரணத்திற்கு, எனது சமீபத்திய புத்தகத்தில் உள்ளவி மிஸ் யூஎன்ற கதையில், கிட்டத்தட்ட பித்தநிலையிலான மனவொருமையுள்ள கதைச்சொல்லி (ஒரு சமூகவியலாளராக) அலைவுறாத கவனத்தோடு அதே நேரம் அவரது சொந்த உணர்ச்சிகரமான எதிர்வினைகளை விட்டுக்கொடுத்து விடாதவாறும் சிறுவர்களின் கடிதத்தைப் பற்றிய விரிவானஅலசலில் ஈடுபட்டிருப்பார். மேலும் தனது நடுநிலையையும் அவரதுவிஞ்ஞானபூர்வவிலகலையும் தக்கவைக்க போராடுவதற்கான துணுக்குகளும் அங்கு இருக்கிறது. அக்கதைக்கு, பெரும்பாலான கதைகளுக்கு போல, உணர்வே பிரதானமானது.

தி பிலீவர்: உங்கள் கதைசொல்லிகள் எப்போதும் உலகைப் புரிந்துக்கொள்ள வேண்டுமென விரும்புவதாக தெரிகிறது, ஆனால் சமயங்களில், அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கு பிறகும், சிறிது எஞ்சக்கூடிய விளங்கா புதிர்தன்மைக்கு வேண்டுவது போலப்படுகிறது.

லிடியா டேவிஸ்: எனது கதைசொல்லிகள், விளங்கா புதிர்த்தன்மைச் சூழ வாழ்வதற்கு கவலைப்பட்டதே இல்லை என எண்ணுகிறேன். ஆனால் அதே வேளையில், அவர்கள் முழுமையாக புரிந்துகொள்ள விரும்பும் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளும் உண்டு. நாம் புனைவிலோ அல்லது நிஜ வாழ்விலோ கற்பனையான எதோவொரு நாடகத்தில் மாட்டிக்கொண்டு மேலும் அது எவ்வாறு ‘முடிவுறும்’ என்று தெரிந்துகொள்ளவேண்டுமென ஒரு அவசரத்தன்மையைக் கொண்டிருப்போம், கதைசொல்லிகளின் விருப்பம் அதே உணர்வைக்கொண்டிருக்கும். கேள்விகள் உளவியல் ரீதியானதாகவோ அல்லது உணர்வு பூர்வமானதாகவோ இருக்கலாம். அல்லது அவை தாவரவியல் சம்பந்தமானதாகவோ இருக்கலாம், அல்லது இந்த விஷயத்தில் அது உடற்கூறு சம்பந்தபட்டதாக இருக்கிறது. எனது கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே நான் இரண்டு துண்டுத்தாள்களை, பிடித்துக்கொண்டிருக்கிறேன், ஒன்றல்ல இரண்டென்று எப்படி எனது உடம்புக்குத் தெரியும்? நான் கவனிக்கும் புதியவர்களின் மேல் (பேருந்திற்காக வரிசையிலிருப்பவர்கள்போல) பெரும் ஆர்வத்தோடு இருக்கிறேன். விடைகளைக் கண்டுபிடிப்பதோடு நான் மிக நெருக்கமாக உணர்கிறேன். ஆனால் நான் கூறியது போல, நானும் என்னுடைய கதாபாத்திரங்களும் சௌகரியமாக உணரும் அந்தப் புதிர்தன்மையின் சூழலில் இவையெல்லாம் தனித்துவிடப்பட்ட நிகழ்வுகள்.

தி பிலீவர்: புதிர்த்தன்மையின் சூழலில் தனித்துவிடப்பட்ட நிகழ்வுகள் - அது உங்கள் புனைவுக்கான சாத்தியமான மாதிரி எனப்படுவதோடு, பிரபஞ்சத்துக்குமானது என்பதைச் சொல்லத்தேவையில்லை.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2019 Designed By Digital Voicer