ஏதோவொரு நாள் அடிக்கப்பட்டு, தோற்கடிக்கப்பட்டு ஊர்ந்தபடி வீடு திரும்பலாம் நான், ஆனால் என் உடைந்த நெஞ்சத்திலிருந்து கதைகளைத் துயரத்திலிருந்து அழகை என்னால் ஆக்கமுடிகிறவரை அது இல்லை.
- சில்வியா ப்ளாத், சுருக்கப்படாத குறிப்புகள்
தாயகம் கடந்த தமிழ் மாநாட்டில் புதிய சிறகுகள் என்ற தலைப்பிலான அரங்கத்தில் பெண்ணிய எழுத்து குறித்து பேச, கட்டுரை எழுத நான் அழைக்கப்பட்டவுடன் நான் மகிழ்வடைந்ததற்கு முக்கிய காரணம் உண்டு: இந்த வாய்ப்பால் நான் இதுவரை அறியாத புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள், குறிப்பாக பெண் எழுத்தாளர்களின் எழுத்தை வாசிக்க எனக்கு இதனால் கிடைத்த உந்துதலே அது. பலசமயம் புதிய புத்தகங்கள் கண்ணையும் கவனத்தையும் கவர்ந்தாலும், வாசிப்பில் மனம்கொள்ளும் ஆசையையும் எழுத்து தரக்கூடிய இன்பத்தையும் நேர்க்கோட்டில் இணைக்க வாசிப்புக்கான நேரத்தை நாம் தரவேண்டும். ஆனால் அன்றாடத்தில் குடும்பமும் உறவுகளும் பணியும் நேரத்தைப் பிய்த்துத் தின்றுவிடும் சூழலில், இப்படியான நிகழ்வுகளில் பங்குபெறும் வாய்ப்பு தரும் உந்துதல் மட்டுமே நேரத்தைக் கொஞ்சம் நமக்கான வாசிப்புக்கு பங்கிட்டுத் தரச்செய்கிறது.
என் கட்டுரையின் இயங்குதளங்களை முதலில் கூறிவிடுகிறேன். பெண்ணியம் என்றவுடன் பெண் எழுத்தாளர்களின் எழுத்தை மட்டும் விசாரிக்கும் தமிழ்ச்சூழலின் பரவலான விமர்சனப்போக்கை இக்கட்டுரையும் பிரதிபலிக்கிறது. ஒரு எழுத்தாக்கத்தை பாலின வகைப்பட்ட எழுத்துச் செயல்பாடாக (gendered textual production) எழுத்தாளரின் பால் (sex) எனும் சாராம்சத்தை வெளிக்காட்டுவதாகப் பார்ப்பதோடு எனக்கு உடன்பாடில்லை. மேலும் பெண் எழுத்தாளரின் ஆக்கம் பெண்சார்பு நிலைகளோடு செயல்படும், ஆண் எழுத்தாளரின் ஆக்கம் அப்படியில்லை என்று பால் இருமையை படைப்பின் இருமையாக மாற்றி பொதுப்படையாக நிறுவுதலிலும் எனக்கு ஒப்புதலில்லை. பெண் உணர்வுகளை, சார்புநிலைகளை முன்வைக்கிற ஆண் எழுத்தாளர்களின் கதைகள் (அரிதாகவேனும்) நம்மிடமிருக்கின்றன. உடனடியாக நினைவுக்கு வருவன:
புதுமைப்பித்தனின் வாடாமல்லி, அகல்யை, அசோகமித்திரனின் விமோசனம், சமீபத்தில் வெளிவந்த திலீப் குமாரின் புதினமான ரமாவும் உமாவும். என்றாலும் பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளை மட்டும் இங்கே ஆய்வுக்கு எடுத்துக்கொள்வதற்கு சில முகாந்திரங்கள் உண்டு. முதலில், சில வருடங்களாகத்தான் பெண் எழுத்தாளர்களின் எழுத்துகள் தமிழ் இலக்கியச் சூழலில் பேசுபொருளாகியிருக்கின்றன, இன்னமும்கூட பிரபல ஆண் இலக்கியவாதிகள் தருகிற மையநீரோட்டத் தரவரிசையில் பெண் எழுத்தாளர்கள் இடம்பெறுதல் அபூர்வமாகவே இருக்கிறது, தவிர, அப்படி இடம் பெறுதல்கூட சாதி, நட்புவட்டம், பிராந்தியம் போன்றவற்றைக் கருத்தில்கொண்டு செய்யப்படும் சைகையளவாக இருக்கிறது. பெண் எழுத்தாளர்களின் எழுத்து குறித்த, பெண்ணியம் குறித்தத் தீவிர ஆய்வுகள், வாசிப்புகள், விமர்சனங்கள் பெரிதும் நம்மிடையே இல்லை. இது போன்ற பெண்ணியத்துக்காக ஒதுக்கப் படுகிற அரங்குகளில்கூட பெண் எழுத்தாளர்களின் ஆக்கங்களைப் பேசவில்லையென்றால் வேறெங்கே பேசுவது? எனவே, அரசியல் நிலைப்பாடாக பெண்களின் எழுத்தை முன்நிறுத்தவேண்டிய வேண்டிய தேவையிருக்கிறது. மேலும், எழுத்தாக்கத்தில் எழுத்தாளரின் பால் என்பதன் கையெழுத்துக்கு இடமில்லை என்றாலும், ஆக்கம் வாசிப்புப்பிரதியாக துலங்கும் போது, பல சமயங்களில் அதனை வாசகர் அர்த்தப்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளில் ஒரு முக்கியமான சட்டகமாக எழுத்தாளரின் பால் செயல்படுகிறது. உதாரணமாக, பெண் ஒடுக்குமுறை, குடும்பத்தின் ஆண் செலுத்தும் வன்முறை, பெண் பாலியல் போன்றவை இடம்பெறும் ஆக்கம் ஆண் எழுத்தாளரைவிட பெண் எழுத்தாளரிடமிருந்து வரும்போது கூடுதல் முக்கியத்துவத்தை, ஈடுபாட்டை வாசிப்புச் செயல்பாடுகளில் பெறுவதை நாம் பார்க்கிறோம்.
தாயகம் கடந்த பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளை (குறிப்பாக சிறுகதைகள், ஒரு குறுநாவல்) ஆராய முயலும் இக்கட்டுரை, அவற்றைப் பற்றிய விரிந்த சுற்றுப்பார்வையை (survey) வைப்பதாக எழுதப்படவில்லை. எடுத்துக்கொண்ட சில கதைகளின் கதையாடல்களில் பெண்பார்வையில் புலம்பெயர்ந்தவெளியும் வீடும் எப்படி பங்குபெறுகின்றன; எத்தகைய அனுபவங்கள், ஞாபகங்கள் மையப்படுத்தப்படுகின்றன; பாலியல்கள், பால் அடையாளங்கள், சகோதரத்துவ ஒன்றிப்பு கதையாடலில் (narrative) எவ்வகைகளில் உருவாக்கப்படுகின்றன; இவை உருவாக்கப்படுகிற வழி முறைகளில் ‘தமிழ்ச் சமூகபண்பாட்டு நியதிகள்’ என்று கருதப்படுபவை எவ்வாறு செயல்படுகின்றன; இவற்றில் எவ்வகையான குறுக்கீடுகள் நடக்கின்றன போன்ற கேள்விகளை சரடுகளாக்கி நகர்கிறது இக்கட்டுரை. இடம்பெயர்தலின் சமூக, பண்பாட்டுக் கூறுகளும் ஞாபகங்களும் பதிந்திருக்கக்கூடிய சொல்லாடல் களம் (discursive site) இலக்கியம் என்கிற புரிதல் இக்கேள்விகளின் அடிப்படை. இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் எழுத்தாளர்கள் அவர்கள் ஆக்கங்களில் தத்தம் தாயகங்களையும் எழுத்துச்சட்டகங்களாகக் கொண்டிருக்கிறார்கள்; எனினும் கட்டுரை வகைமையின் பக்க எல்லைகளும் தாயகம் கடந்த எழுத்து குறித்த என் ஆர்வமும் கட்டுரையின் பேசுபொருளைத் தீர்மானித்திருக்கின்றன.
Diaspora என்ற வார்த்தை dispersion அதாவது பரவுதல், தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து பரவி யிருத்தலை எளிய பொருளில் குறிக்கிறது. ஆனால் இந்தப் பரவியிருத்தல் என்பது ‘இங்கிருந்து’ ‘அங்கு’ என்று பயணம் மூலமாக பிறிதொரு புலத்தில் உடல்ரீதியான நிலைகொள்ளுதல் எனப் புரிந்து கொள்ளுதல் எளிமைப்படுத்துவதாக இருக்கும். மேலும் ஒரு சமூகத்திரளை, ஒற்றைப் பண்பாட்டை, ஒரு பிராந்தியத்தை வைத்துப் புலம்பெயர்ந்தவர்களை பெட்டிகளிலிட்டு அடையாளப்படுத்தல் வசதியென்றாலும் அப்படிச் செய்வதிலிருக்கும் பிரச்சினைகள் புலம் பெயர்தல் ஆய்வுகளில் பேசப்பட்டிருக்கின்றன. முக்கியமாக, இன்றைக்கிருக்கும் உலகமயச்சூழலில் ’மனிதர்களும் பொருட்களும் பணமும் தகவலும் தொடர்ச்சியான சுழற்சியில்’ இருக்கும்போது, நாடு கடந்த சுற்றுகளையும் (transnational circuits) அவற்றின் சிக்கலான பண்பாட்டு உருவாக்கங்களையும் நாம் காண வேண்டிய தேவையிருக்கிறதை ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். தவிர, புலம்பெயர்தல் (diaspora) என்பதற்கும் குடிபுகுதல் (immigration) என்பவற்றுக்கிடையிலான வேறுபாட்டை உணர்தலும் அவசியம். பின்நவீனத்துவச்சிந்தனையை மானுடவியல் ஆய்வில் பதிக்கும் ஜேம்ஸ் க்ளிஃபர்ட் இந்த வேறுபாட்டைப்பற்றி எழுதும்போது, நினைவேக்கமும் (nostalgia) இழப்பும் புலம்பெயர்ந்தவர்க்கும் குடிபுகுந்த வருக்குமானவை, என்றாலும் புலம்பெயர்ந்த நாட்டின் தேசியச்சொல்லாடலுக்கு முற்றிலும் அந்நியமானவர்களாக புலம்பெயர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்கிறார் (Clifford 1994, 307). குறிப்பாக இடம்பெயர்தலின், வன் இழப்புகளின் கூட்டுவரலாற்றைக் கொண்டவர்களை புலம்பெயர்ந்தவர்களாக வரையறுக்கும் க்ளிஃபர்ட், அவர்களின் வலியை, புலம்பெயர்ந்த இடத்தின் அனைவரையும் உள்ளிழுக்கப்பார்க்கும் தேசியச் சொல்லாடல் எளிதில் ஆற்றிவிடமுடியாது எனக் கூறுகிறார் (307). இப்படியான கொடிய வரலாறுகளின் பின்னணியில், புலம்பெயர்ச் சொல்லாடல் வேர்களையும் வழிகளையும் பின்னிப்பிணைந்து மாற்றுப் பொது வெளிகளை, குழுவிழிப்புணர்வை, ஒன்றிப்பை (Solidarity) உருவாக்குகிறது; விளைவாக புலம்பெயர்ந்த இடத்தில் வித்தியாசத்தோடு வாழ, கால / வெளிகளைத் தாண்டிய அடையாளங்களை புலம்பெயர்ந்தவர்கள் பராமரிக்க முடிகிறது (Clifford, 308). மேலும், அவர்களுக்கான தனித்த அரசியல் போராட்டத்தோடு - தேசத்துக்கான போராட்டமாகவும் அது இருக்கலாம் - ஒன்றிணைந்து இயங்கக்கூடியவர்களாகவும் புலம்பெயர்ந்தவர்களிருக்கிறார்கள். (Clifford, 307-8). வாழும் இடத்திலிருந்து அகற்றப்படுதல், உடைமைப்பறிப்புகள், இவற்றின் நீண்ட வரலாறுகளும் வம்சாவளிகளும் புலம்பெயர் தன்னிலைகளை வரையறை செய்வதாக கனேடியப் பேராசிரியர் லிலி சோ-வும் கருதுகிறார். (2007,14).
மேலே சொன்னவற்றின் அடிப்படையில் ஈழத்தமிழர்களையும் இந்தியத் தமிழகத் தமிழர்களையும் ‘புலம்பெயர்ந்தவர்கள்’ என்ற ஒரே வகைமைக்குள் கொண்டுவருவது பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. இந்தியத் தமிழர்களை ‘குடிபுகுந்தவர்கள்’ என்று கொண்டோமானால், அவர்கள் கட்டமைக்கிற பொது வெளிகளைப் பிரித்துப்பார்க்கவேண்டியிருக்கிறது. மேலும், இவ்விரண்டு வகையினர் மத்தியிலும் நிலவும் இந்தக் கட்டமைப்பில் பெண்கள் பங்குபெறுகிற முறைகளை அவதானித்தல் அவசியம். ‘பெண்ணை’ அல்லது ‘பெண்களை’ ஒற்றை வகைமயாகப் பார்க்காமல் இவற்றையணுக முயற்சிக்கிறது கட்டுரை.
ஆணின் ‘வரைபடத்தில்’ பெண் எனும் பயணி பொதுவாக இந்திய, தமிழ் வம்சாவளியினரைப் பொறுத்தவரை இடம்பெயர்தல் பெண்ணின் பால் இருப்பில் எழுதப்பட்டிருக்கும் ஆண் - மையப் பண்பாட்டு விதி. திருமண பந்தத்தில் கணவனின் வசிப்பிடத்தில் பெண் போய்ச்சேர்வது இயல்பாகவேக் கருதப்படுகிறது. வீடு இடவாகுபெயராக குடும்பத்தை, குறிப்பாக மனைவியைச் சுட்டுகிறது; இல்லாள் இல்லத்திலிருப்பவளாக மனைவியை அடையாளப்படுத்துகிறது. எனினும் பெண்ணைப் பொறுத்தவரை, ‘வீடு’ உறைவிடம் என்பதன்றி, அந்தச் சொல்லுக்கிருக்கும் ‘விட்டுவிடுதலை’ என்கிற பிறிதொரு பொருளில் அவள் தாய்வீட்டையும் அவ்வீடுசார் நிலத்தையும் அன்றி, கணவன் வீட்டையோ, அதுசார் நிலத்தையோ சுட்டுவதாக இல்லை. சந்திரா இரவீந்திரனின் ‘யாசகம்’ ([2001] 2011) கதையில் வீடு அம்மாவின் நினைவுகளோடு கூடிய வீடு; முற்றத்து வேப்பமரக்கிளைகள், அம்மாவின் மூக்குத்தி ஒளிரும் சமையலறை, ஊஞ்சலின் ஒய்யார ஆட்டம் இட்டுச்செல்லும் மனதின் வானுயரம், வெள்ளை மணற்கும்பி தந்த நிசப்த வேளைகள், ஏகாந்தம் இவை அனைத்தும் திருமணத்தில் தொலைந்துவிடுகின்றன. கதைசொல்லிப் பெண்ணின் ‘சுவாசத்துக்காக மூச்சுக்காற்றையே தந்து விட முயல்பவன்’ அவள் காதலித்து மணந்தவன் (93). அவளின் ‘சரிபாதியாக’ அவனைக் கருதுகிறாள் (89), ஆனால் அந்தச் சரிபாதியின் ‘விரல்களில் நசித்துக் கொண்டிருக்கிறது அவளின் இதயம்’ (93). இயல்பான சிறகுகள் வெட்டப்பட்டுவிட, தனது ஆண்பாதி தரும் சிறகை ‘கடன்வாங்கி’ அணியவேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு (93). அவளை அவளாகவே ‘பறக்க விட்ட’ அவளது அன்னையின் அருகாமைக்கான யாசகம், அன்னையோடான ஒன்றிப்புக்கான யாசகமாகிறது (93). சுதந்திரத்தைச் சுட்டும் மிகவும் வழமையான கற்பனைவாத உருவகமான வானமும் பறத்தலும் கதையாடலில் வருகின்றன. இவற்றுக்கு நேரெதிராக நகர்தலைக் கண்காணிக்கும் ‘மாயப்பலகையொன்று எச்சரிக்கையுடன்’ அவள்முன் நடப்பட்டிருப்பதும் சொல்லப்படுகிறது (88). அவள்மேல் ‘நெருப்புத் துகள்களோடு நகர்கிற’ இரு கண்கள் வேறென்ன, அவன் கணவனுடையதாகத்தான் இருக்க வேண்டும் (88). அவள் வாழ்வுக்கு அவன் வரைபடமிட்டுத் தந்திருப்பதாகக் கூறுகிறாள் கதைசொல்லி (88). கணவனின் வரைபடத்தில், கண்காணிப்புப் பார்வையில் அவளற்ற அவளின் பயணமாக நகர்கிறது வாழ்க்கை.
எனினும், நகைமுரணாக அவளுக்கு வாழ்க்கை ‘அழகாக’ இருக்கிறது: ‘லண்டன் பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் பெயர்தெரியாத மரங்களைப்போல, வாசனையேதுமற்ற வண்ணப்பூக்களைப்போல, மொழி மறந்த உதடுகள் தரும் கவர்ச்சிப்புன்னகையைப்போல’ அழகு அது (89). பெயர் தெரியாத மரம் பசுமையென்றாலும் அந்நியம், வண்ணமிருந்தாலும் வாசமிலா மலர்கள், மொழித்திறனை கைவிட்ட உதடுகள். திருமண உறவில் அந்நியப்படுதலும் காதல்நீக்கமும் பயனற்ற மேம்பூச்சுத்தன்மையும் இடம்பெயர்ந்திருக்கும் புலத்தின் வர்ணனைகளாகிவிடுகின்றன. விளைவாக, புறவெளி கதையின் பின்னணியாகவன்றி அகத்தின் நீட்சியாகக் கதையாடலில் பங்குபெறும் இன்றியமையாத கதாபாத்திரமாகிவிடுகிறது.
சந்திராவின் சிறுகதை புலம்பெயர்ந்திருக்கும் பெண்ணின் மன உணர்வுகளைச் சித்தரிக்கிறது என்று சொல்லி விடலாம். ஆனால், பெண்ணைப் பொறுத்தவரை, புலம் பெயர்தல் இரண்டு பரிமாணங்களில் செயல்படுவது கதையை வாசிக்கையில் மனதிலோடியதை மறுக்கமுடியாது. புலம்பெயர்தலை ஒரு குழுவின் பொதுவானவன் இழப்புகளின், இடம்பெயர்தல்களின் கூட்டு வரலாறைக் குறிக்கும் குறியீட்டுச்செயல் என்று கொண்டால், இந்திய அல்லது தமிழ் சமூகத்தில் திருமண நிமித்தத்தால் பிறந்த இடத்திலிருந்து பிய்த்து வேறிடத்தில் நடப்படுகிற - சந்திராவின் கதைசொல்லியின் வார்த்தைகளில், ‘சிறகுகள் வெட்டப்படுகிற’- வன் இழப்பை, உள ஊறுதனை காலம் காலமாக சந்தித்துவரும் பெண்கள் அனைவருமே தத்தம் தாயகங்களில் இருந்தாலும் புலம்பெயர்ந்தவர்கள் என்ற வரையறைக்குள் வந்துவிடுகிறார்கள். ஆக, பெண்ணின் புலம்பெயர்தலோடு திருமணத்தை முன்னிட்டு பெண்ணின் புலம்பெயர்தலும் சேரும்போது, தாயகம் நீங்குதலோடு தாயிடத்தை நீங்குதலும் சேர்ந்துவிடுகிறது. இந்நிலையில் புலம்பெயர்தல் கொள்கிற இரட்டைத்தன்மை பெண்ணின் இழப்புகளிலும் பிரதிபலித்து, கூடுதல் மன அழுத்தத்தை நினைவேக்கத்தைத் தரக்கூடியதாகவும் உள்ளது. இந்த இரட்டைத்தன்மை அதனளவில் தனித்த, விரிவான ஆய்வைக் கோரும் பொருளாக இருக்கிறது.
இழப்புகளின் வேறுபட்ட ஒரு சுவாரசியமான கதையாடலாக, புலம்பெயர் வெளிக்கு எதிர்ப்புள்ளியில் விரிகிறது காஞ்சனா தாமோதரனின் ‘ஒரு அமெரிக்க நெடுஞ்சாலைப் பயணம்’ (2009). இங்கே 11 செப்டம்பர் 2001-இன் நியூயார்க் இரட்டைக்கோபுரத் தாக்குதலில் கதைசொல்லியின் கணவன் மறைய, அந்த உறவிழப்போடு அவள் ஓவியக்கலையில் கொண்டிருக்கும் ஊக்க இழப்பும் நிகழ்கிறது. சில வருடங்களுக்குப்பின் ‘அகத்தூண்டல்கள்’ அற்றுப்போக, ‘இறுதிப் புகலிடமான கலையும் இழந்து நிற்க’ ‘திட்டமோ இலக்குகளோ இல்லாத’ நெடுஞ்சாலைப் பயணத்தில், அமெரிக்காவின் பலபண்பாட்டுக் குடியினரையும் அவள் சந்திக்கிறாள். கதையாடலில் மெய்ன், மிஸிஸிப்பி, வர்ஜினியா என்று விரியும் நிலப்பரப்புகள் வெவ்வேறுவகை இழப்புகளை சங்கிலியாகக் கோர்த்து அவள் முன் காட்சிப்படுத்துகின்றன. அமெரிக்கப் பூர்வகுடியினரின் பல வருடங்களுக்கு முந்தைய நில இழப்புகளும் இன அழிப்பும், சமகாலத்திய கேத்ரினா புயலில் கிராமங்கள் சந்தித்த இழப்புகளும் இச்சங்கிலியின் சில கண்ணிகள். கதைசொல்லியை ஆற்றுப்படுத்தி, உலகோடு அவள் ஒத்திசைந்துவாழ பூர்வகுடியினர் செய்யும் மருத்துவச் சடங்குக்குப் பிறகு கதையாடலில் வைக்கப்படுகிற வேறு சில இழப்புக் கண்ணிகளில் முதன்மையானது அமெரிக்கப் பெண்ணொருத்தியின் கணவனின் சாவைப் பற்றிய குறிப்பு. ஈராக் போரில் நடந்த இது கதைசொல்லியின் கணவனின் இரட்டைக்கோபுரத் தாக்குதலின்போது நடந்த சாவுக்குச் சமமாக வைக்கப்படும் ஒரு கதைக்கூறு. அமெரிக்கப் பெண்ணோடு நட்பு வலுப்பட்டு, அவளது பிரசவத்தின்போது கதைசொல்லி குழந்தையின் தொப்புள்கொடியையறுக்கிறாள், தன் ‘தாய்மையை உணர்கிறாள்.’ அந்த நாளும் செப்டம்பர் 11 ஆக இருக்கிறது. இரட்டைக்கோபுர அழிப்பை பதிலீடு செய்யும் பிறப்பின் பிரசன்னத்தில், கதைசொல்லி இழந்த உறவை பின்னாளில் பதிலீடுசெய்யக்கூடிய அமெரிக்க ஆண் ஒருவரும் பங்குகொள்கிறார்.
பூர்வகுடியினர் நிகழ்த்தும் மருத்துவச் சடங்குக்கு முன், கதைசொல்லியின் கூற்று: ‘பல மில்லியன் வருடங்களுக்கு முன்னும் இந்நிலம் இப்படியேதான் இருந்திருக்கும். நீலவானத்தில் நகரும் வெண்மேகங்களுடன் பாறைகளும் பள்ளத்தாக்கும் சேர்ந்து நகருவது போலிருந்து, தலை மெல்லச்சுற்றியது. உறைந்த காலம் சூழக்கிறங்கும் தலையுடன் நான் அங்கே நின்றேன் (51).’ பல்லாண்டுகள் சென்றும் மாறாத நிலம், உறைந்த காலம் என்கிற விவரணைகள் இழப்பெனும் விதியின் மாறாத்தன்மையைச் சொல்கின்றன. ஆனால் மேகமும் பாறையும் வானமும் நகர்வது இந்த மாறாத்தன்மையிலும் நிற்காத இயக்கத்தைக் குறிப்பிடுவதாகவுள்ளது. சாவின் மத்தியிலும் முன்நகரும் வாழ்க்கையைச் சுட்டுவதுபோல கதையாடலில் பின்னர் வருகிற நேர்மறைச் சம்பவங்களை - குழந்தையின் வரவு, புது உறவின் அணுக்கம் போன்றவை - சுட்டும் கதையாடல் குறியீடுகளாக இவை செயல்படுகின்றன.
புலம்பெயர்ந்தவர், குடிபுகுந்தவர் என்கிற வகைமைகளை வித்தியாசப்படுத்துவது வன்இழப்புகளின், இடம்பெயர்தல்களின் கூட்டு வரலாறு என்று பார்த்தோம். செப்டம்பர் 11 இரட்டைக்கோபுரத் தாக்குதலில் சம்பவித்த மரணங்கள் வன் இழப்புகள்தாம். ஆனால் இடம் பெயர்தலின் கூட்டுவரலாறு இதிலில்லை என்பதைக் கவனிக்கவேண்டும். கதைசொல்லியின் கணவனின் மரணம் அதில் உயிரிழந்த அமெரிக்க மக்களின் மரணங்களில் ஒன்று. இந்த செப்டம்பர் 11 நிகழ்வின் மூலம் அமெரிக்க தேசியத்தின் உள்வாங்கும் சொல்லாடலுக்குள் (American nationalism's discourse of assimilation) கதையாடல் தொடக்கத்திலேயே நுழைந்துவிடுகிறது. கணவன் மறைந்த துயரத்தை விவரிக்கும் கதைசொல்லியின் கூற்று இதை வெளிப்படையாக நிறுவுகிறது: ‘வெளியே, என் வாழ்நாளில் நான் கண்டிராத வகையில் ஒரு தேசமே இணைந்து நின்றது. அன்றாடத்தின் இயந்திரத்தனத்தில் இதயத்தைத் தொலைத்துவிட்டதாய் நான் நினைத்திருந்த தேசம் தன் இதயத்தைத் திறந்து காட்டியது. வெறுப்பில்லை. அன்பு இருந்தது. ‘ஐ லவ் யூ’ (37). அமெரிக்க தேசத்தின் இதயம் திறக்க, கதைசொல்லியின் அடையாளம் குடிபுகுந்த தேசத்தின் அடையாளத்துக்குள் உள்வாங்கப்படுகிறது. இவ்விடத்தில் இந்த உள்வாங்கலை ஆங்கிலமொழிப்பயன்பாடு சுலபமாக்குகிறது. ஈராக் போருக்கெதிராக நியூயார்க்கில் நடந்த எதிர்ப்புப்பேரணியில் கதைசொல்லி பங்கெடுக்கும் முந்தைய நிகழ்வு அமெரிக்க தேசியத்தின் கரிசனைகளுக்கு மாற்றான கரிசனையை அவர் கொண்டிருப்பதாக முதல் வாசிப்பில் தெரியலாம், ஆனால் கதையாடல் இந்நிகழ்வையும் அமெரிக்கத் தேசியச் சொல்லாடலுக்குள் கதைசொல்லியின் அடையாளத்தை நிறுவுவதற்கே பயன்படுத்துகிறது. ஈராக் போரில் கணவனை இழந்த அமெரிக்கப் பெண்ணை கதைசொல்லி பின்னர் சந்திக்கும் தருணத்தின் உரையாடல் இதற்குச் சான்று: ‘தப்பா நினைக்காதே, ஸமாந்த்தா,’ என்னும் முகாந்திரத்துடன் போர் எதிர்ப்புப் பேரணியில் பங்கெடுத்தது பற்றிச் சொன்னேன். நம் அரசியலமைப்புச் சட்டம் தரும் உரிமையுடன். ஆக்கபூர்வமான ஜனநாயக வழியில்.’ இதையெல்லாம் ஏன் மன்னிப்பு கேக்கிற தொனியிலே சொல்லுறீங்க, கோதை? நீங்க ஒரு நல்ல குடிமகள். நாமதானே நம்ம அரசாங்கத்தைத் தட்டிக்கேக்கவும் விமரிசனம் செய்யவும் முடியும்?’ (72 - 73)
அமெரிக்கப் பெண்ணின் ‘நாம’ ‘நம்ம அரசாங்கம்’ என்கிற தன்மைப் பன்மைப் பயன்பாடும் கதைசொல்லிக்குத் தரப்படும் ‘நல்ல குடிமகள்’ உத்திரவாதமும், பல பண்பாட்டினரையும் உட்கொள்ள முயலும் அமெரிக்கத் தேசியச்சொல்லாடலின் அழுத்தமான மொழித்தருணங்கள். ஆனால், கதைசொல்லிக்கு இதைக் கேட்டவுடன் ‘பலதளங்களிலும் பல முரண்கள் நெருடுகின்றன.’ ‘எல்லா நவீன தேசங்களும் எதிர் கொள்ளும் முரண்கள்’ என்று அடைப்புக்குறிகளுக்குள் கொடுத்துவிட்டு மேலே தொடர்கிறார்: ‘ஆனால் வலி நிரம்பிய ஆத்மசோதனைகள் மூலம் முரண்களை விலக்கி விலக்கி மெல்ல முன்னேறிய சரித்திரம் உள்ள சமூகம் இது. இந்தக் குடிமைச் சமூக அமைப்பின் மேல், அந்த ஒட்டுமொத்த மனசாட்சி மேல், நம்பிக்கை வைத்துத்தான் முன்னகர முடியும் (73).’ சில பல நூற்றாண்டுகளாய் குடிபுகுந்த பலபண்பாட்டினரும் கட்டமைத்திருக்கிற நவீனதேசத்தின் முரண்கள் கதைசொல்லிக்குத் தெரியாமலில்லை. ஆனாலும் அமெரிக்காவின் ‘குடிமைசமூகம்,’ ‘ஆக்கபூர்வ ஜனநாயகம்’ ஆகியவற்றால் முரண்களைக் களைந்துவிடமுடியும் என்றும் நம்பிக்கை ஏற்படுகிறது. கதைசொல்லி அமெரிக்காவில் ‘குடிபுகுந்த’ இந்தியத் தம்பதியினரின் பெண் என்பதற்கு ஏற்றவகையில் செயல்படுகிறது கதையாடல்.
‘புலம்பெயர்ந்தவர்’ போலன்றி ‘குடிபுகுந்தவருக்கு’ இலகுவாகச் சாத்தியமாகும் தேசிய ஒன்றுபடுதல், இந்தக் குறுநாவலின் கதையாடல் சென்றடையும் இலக்கு. இங்கே பெண்ணின் அடையாளம், குடிபுகுந்த தேசியத்தில் பங்குபெறும் குடிமகளின் அடையாளம். ‘வீடு’ இங்கே கணவனின் இடமான பெண்ணைக் கட்டுறுத்தும் வரம்பெல்லைகளோ அல்லது அன்னையின் இடமான நினைவேக்கத்தின் களமோ அல்ல, மாறாக அது இதயத்தைத் திறந்துவிட்ட, குடிபுகுந்த தேசிய வெளியின் அங்கம். இங்கே கதைசொல்லியின் ஆழமான ஒன்றிப்பு குடிமைச்சமூகத்தின் பிற பல பண்பாட்டுக் குழுக்களுடன். தன்னைப்போலவே துயரைச் சந்தித்த அமெரிக்கப்பெண்ணுடன் ஒன்றிப்பும் இந்தக் குடிமைச் சமூகத்துக்குள்தான்.
காஞ்சனா தாமோதரனின் சிறுகதையொன்றில்கூட இத்தகைய ஒன்றிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. சுருக்கமாக இதைப் பேச நினைக்கிறேன். 2000-ல் வந்த அவரது சிறுகதைத்தொகுதி ‘வரம்.’ அதில் ‘சில பயணக்குறிப்புகள்’ சிறுகதை. இடம்பெயர்ந்துவந்த பெண், தமிழ்ப்புத்தகங்களில் ‘அவளை அவளால் கண்டுகொள்கிறவள்’ (153) இக்கதையின் கதைசொல்லி. ஒன்பது வருடங்களுக்குப்பின் 2009-ல் வெளிவந்த, மேலே விவாதித்த குறுநாவலைப் போலன்றி, இச்சிறுகதையில், பிறந்த நாட்டுக்கும் குடிபுகுந்த நாட்டுக்குமிடையே கதைசொல்லியின் அடையாளத்தின் அல்லாட்டத்தைக் கண்கூடாகப் பார்க்கிறோம்: ‘நான் ஒரு நாடோடி. பிறந்த நாடு என்பது நான் என்றோ இழந்துவிட்ட, இன்று அந்நியப்பட்ட, என் கற்பனையில் மட்டுமே தொடரும் ஒரு லட்சியவாதம். புகுந்தநாட்டின் அந்நியம் என்றுமே மாறாதது. ஓர் அந்நியத்துள் குடியிருந்து, இன்று இல்லாத (என்றுமே இருந்திருக்காத?) அந்நியமாகிப்போன மற்றொன்றைப் பற்றிக் கற்பனாவாதக் கனவுகள் காண்பதே மிச்சமிருக்கும் என் வாழ்வில் என்னால் ஆகக்கூடியது’ (159). நாடோடி என்று கதைசொல்லி தன்னைக் கருதினாலும் அமெரிக்க தேசம் அவளை உள்ளிழுக்கக்கூடியதை கதையாடல் சுட்டிக்காட்டுகிறது. கதைசொல்லியைப் போலவே தன் குடும்ப ‘வேர்களைத் தேடும்’ ஸூஸன் எனும் பெண்ணின் குரலில் இது நடக்கிறது: ‘உன் மகளிடம் அவள் வேர்களைப் பற்றி நீ பகிர்ந்து கொள்வது முக்கியம். பல நாடுகளிலிருந்தும் புலம்பெயர்ந்தோர் தத்தம் தனித்துவத்தைப் பேணிப் போற்றுமிடம் இந்தத் தேசம். நம்மைத் தாங்கிக்கொள்ள வேரோ, விழுதோ ஏதோ ஒன்று தேவைப்படுகிறது’ (155). ஆலமரத்தின் உருவகத்தில் மரம் விரிந்து விழுதுகள் விட்டு அவற்றில் வேர்பிடித்து மீண்டும் நிலைகொள்ளும் வாய்ப்பு; பலபண்பாட்டையும் அதே நேரத்தில் தனித்துவத்தையும் போற்றுவதாக அமெரிக்க தேசியச் சொல்லாடல் பற்றிய விவரணை; புலம்பெயர்ந்தோர் என்ற சொற்றொடரைக் கதைசொல்லி உபயோகித்தாலும், குடிபுகுந்தவருக்கே உரித்தான தேசியச் சொல்லாடலுக்குள் கிடைக்கும் அடையாளத்தை, பங்கைத் தெளிவாக முன்வைக்கிறது கதையாடல். இதிலும் கதைசொல்லி தன்னையொத்த இன்னொரு குடிபுகுந்த வம்சாவளிப் பெண்ணுடன் ஆனால் குடிமைச்சமூகத்தின் அமெரிக்கப் பெண்ணுடன்தான் ஒன்றிப்பு கொள்கிறாள் என்பது கவனிக்கத்தக்கது.
வீடு, சுமதி ரூபனின் ‘அகச்சுவருக்குள் மீண்டும்’ (2003) சிறுகதையில், பெண்ணின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதாக மட்டுமில்லை, அது ஆண் வன்முறையின் நிகழ்த்துக் களம். ‘கொத்தாக தலைமயிர் பிடித்திழுத்து முகத்தில் குத்துவிடுபவன்’ கணவன் (18). வீடல்லாத வேறிடத்தில் அவன் இல்லாத போதும் அவள் கடவுளிடம் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்யும் நேரத்திலும்கூட அவன் தாக்குதலை உணர்கிறாள் (18). வீடு அச்சுறுத்தலின் உருவகமாய் வீடுதாண்டியும் வெளிவருகிறது. பௌதீகப் பொருளென்றாலும் அதன் சுவர் அவள் அகத்துக்குள் வந்து அழுத்துகிறது. மனவுறவில் கொடுந்திரையாய் எழும்பி நிற்கும் சுவரென்றாலும் அவன் வன்முறையிலிருந்து காப்பாற்றக் கூடிய, ஒளிய இடம் தரும் சுவர்போல அவளுக்குத் தோன்றுகிறது, ஆனால் அதுவுமில்லை: ‘உண்மையைக் கூறப்போனால் அவளுக்கும் அவனைப் பிடிப்பதில்லை. எங்காவது போய்ச் சந்தோஷமாக இருந்துவிட்டு வந்தான் என்றால் தான் நிம்மதியாக இருக்கலாம் என்று நம்பினாள். ஆனால் அதுவும் கிடைக்கவில்லை. அவளை தினம்தினம் புழுதியில் போட்டுப் புரட்டி எடுக்கின்றான்’ (24). அவளால் அவனை எதிர்த்து நிற்க முடியாமல் போகிறது. காவல்துறைக்கு அவனைப் பற்றிப் புகார்செய்தாலும் வழக்கைத் தொடராமல் பின்வாங்க வேண்டியிருக்கிறது. புலம்பெயர்ந்திருப்பது பழக்கமில்லாத நாடெனும் யதார்த்தம்: ‘கால் விறைக்கும் குளிர், மகன், நிரந்தரமற்ற வேலை, இருப்பது இவ்வளவுதான், இதற்குள் ரோஷம் என்றால் பொருந்தாது’ (22). மேலும் ‘ஆம்பிளைகள் அப்பிடி இப்பிடித்தான் இருப்பீனம், நாங்கள்தான் அனுசரிச்சி நடக்கவேணும். உவங்களுக்கு எங்கட கலாச்சாரம் பண்பாடு எங்கை விளங்கப்போகிறது... உனக்கு இஞ்ச ஆர் இருக்கீனம்?’ என அறிவுறுத்துகிற மாமியின் குரலுக்குச் செவிகொடுக்கவேண்டியிருக்கிறது (22). மாமி போல புலம்பெயர்ந்த மற்ற பெண்களோடுகூட எந்த ஒன்றிப்பும் கொள்ள இயலாது, முழுமுற்றாக நசுக்கப்பட்ட பெண் தன் அடையாளத்தை காவுகொடுக்க வேண்டியிருப்பதை, ஆனால் காவுகொடுக்கும்போதும் அது குறித்த விழிப்போடு அவளிருப்பதை முன்வைக்கிறது கதையாடல்.
இருண்மையைத் தொனியாகக் கொண்டிருக்கும் இக்கதையின் வன்முறைக்களம் சுமதியின் ‘ஆதலினால் நாம்...’ சிறுகதையிலும். ஆனால் இதில் கணவனிடமிருந்து ‘அறை விழ, அறை விழ’ அவளில் ‘ஏன் என்ற கேள்வி கூடிக்கொண்டேபோகிறது’ (31). படிப்பில் ஆசை வருகிறது: நெஞ்சுறுதி வலுக்கிறது. தான் சந்தித்ததைப்போன்றே ஆணிடமிருந்து அச்சுறுத்தலை எதிர்கொள்கிற இன்னொரு புலம்பெயர்ந்த அவள் தோழிக்கு நம்பிக்கையும் உதவியும் தருகிற அளவுக்கு புலம்பெயர்ந்த நாட்டில் தன்னை நிறுவிக்கொள்ள முடிகிறது அவளால். கதைசொல்லியும் தோழியும் ஒருவருக்கொருவரில் வன்முறைக்காளான தம் பிம்பங்களைக் காண்கிறார்கள். கதைமுடிவில் பிம்பங்களின் ஒன்றிப்பு பாலியல் தளத்திலும் நிகழ்கிறது. இந்தப் பெண்களின் சந்திப்புக்கு முன்பே, கதையாடலில் இதற்கான அடித்தளம் அமைக்கப்படுகிறது. கதை சொல்லிக்கு ‘ஆணின் நெருக்கம் உடல் சிலிர்க்க வைப்பதற்குப் பதில் அருவருக்கத் தொடங்கியதாகச்’ சொல்லப்படுகிறது (31). மோசமான வாழ்வனுபவங்களை ஆண் தரும்போது, எதிர்ப்பாலியல் (heterosexual) உறவுக்கு மாற்று மட்டும்தானா பெண்ணின் ஒருபாலுறவு என்ற கேள்வி எழுகிறது. மேலும், மரபார்ந்த எதிர்ப்பாலியல் குடும்பத்தின் ஆண் செலுத்தும் வன்முறைக்குத் தீர்வாக இந்த ஒருபாலுறவு வலிந்த முழக்கமாக வைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இரு பெண்களின் ஒன்றிப்பின், ஒருபாலுறவில் இணையும் பெண்பால் அடையாளங்களின் பரப்பாக வடிவெடுக்கிறது வீடு. புலம் பெயர்ச் சூழலில்தான் இத்தகைய வீடு சாத்தியமாகக் கூடியதாக இருக்கிறதோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.
புலம்பெயர்ந்த சூழலில் புறத்திலும் அகத்திலும் பெண் அடையாளத்தின் பொருளின்மையைப் பேசுகிறது லதாவின் ‘அடையாளம்’ (2008) சிறுகதை. பெண்ணின் வழமைப் பாதையில் புகுந்த வீட்டில் இருக்கும் அனைவரின் தேவைகளைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அவளுக்கு உகந்ததைச் சமைக்கும், உண்ணும் சுதந்திரமும் அவளுக்கில்லை. தன் பெண்குழந்தையின் ஆடைத் தேர்வுகூட அவளுக்கு மறுக்கப்படுகிறது. அக்குழந்தைக்கும்கூட அவளோடு நெருக்கமிருப்பதாகத் தெரியவில்லை. புறத்திலும் அவள் படிப்புக்கான அங்கீகாரமும் வருமானமும் இல்லை. அந்நியமாக இருக்கிறது புறமும்: இங்கே ஏன் யாருமே தனக்கு நெருக்கமாயில்லை. ஒருவேளை தன்னால்தான் இந்த ஊர் மக்களை, அவர்கள் வாழ்க்கையை நெருங்க முடியவில்லையோ... இந்த மண்ணோடு ஒட்டமுடியவில்லையோ... என்று யோசித்துக்கொண்டே மணிபர்சைத் திறந்தாள். சிவப்பு நிறத்தில் சிங்கப்பூர் குடியுரிமை அட்டை. வாய் நிறையப் புன்னகையோடு அவள் படம். ‘ஐ யெம் சிங்கப்பூரியன்.’ அவளால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. (21) மலாய் மொழி தெரியாததால் அவளைச் சிங்கப்பூர்க்காரி என்று அங்கீகரிக்க மறுக்கும் ‘டாக்ஸிக்காரன்’ அவள் எதிர்கொள்ளும் புறவுலகத்தின் பிரதிநிதியாக இருக்கிறான் (13). வெளிநாட்டிலிருந்து இறங்கியிருக்கும் ‘மெயிட்,’ ‘வேலைக்காரி’ என்றழைக்கிறான் (13). கதைசொல்லிக்கே தன் அடையாளத்தில் சந்தேகம் வருகிறது, கண்ணாடியில் பார்த்துக்கொள்கிறாள் (18 - 19). அழகுநிலையத்துக்குச் சென்று தன் உருவத்தை மெருகேற்ற நினைக்கிறாள், ஆனால் நேரமில்லை, அவளுடைய நேரமும் உழைப்பும் குடும்பத்தில் உள்ளவர்களுக்காக, அவர்களுடையதாக இருக்கின்றன. பெண்ணியலாளர் ஜெர்மைன் கிரியர் ‘நிரந்தரப் பணியாளாக இருக்கக் கிடைக்கும் பாதுகாப்புக்காக சம்பளம் வாங்காத பணியாள் வீட்டில் மனைவி’ என வீட்டில் பெண்ணின் பணிச்சுரண்டலை விமர்சிப்பதை இவ்விடத்தில் பொருத்திப் பார்க்கலாம். வீட்டில் ‘மனைவி’ என்கிற அவள் அடையாளம் பெயரளவில்தான். பொதுவெளியில் அவள் அடையாளமோ தட்டைப் பரிமாணமான குடியுரிமை அட்டை. ஆக, வீட்டிலும் பொதுவெளியிலும் ஒன்றே போல் உள்ளீடற்ற வெற்றுக்குறியே பெண் அடையாளமாக வலம் வருகிறது.
கணவனின் வீட்டில் சுய அடையாளத்தைத் துறக்க வேண்டியிருக்கும் அல்லது சுய அடையாளம் நசுக்கப்படும் பெண்கள் அந்த வீட்டைத் துண்டித்து வெளியே வந்து ஏன் தமக்கொரு சுதந்திர வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயல்வதில்லை என்றொரு வழக்கமான கேள்வி எழலாம். முன்பின் தெரியாத அந்நிய இடம் பற்றிய யோசனை, குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலை போன்ற வழக்கமான பதில்களையும் தரலாம். ஆனால், தீர்மானிப்பவையாக இங்கே இருப்பன, பெண்ணின் தன்னிலையை எதிர்ப்பாலியல் குடும்பவெளியில் காலம்காலமாக, வம்சாவழி வழியாக உருவாக்கியபடியிருக்கும் சமூக, பண்பாட்டு நியதிகள் (norms) தாம். பெண் தன் சுய அடையாளம் குறித்து கேள்விகேட்க, விசாரணை செய்ய முற்படும்போதெல்லாம் இவை தொடர்ந்து நினைவூட்டப்படுகின்றன; நியதிகளுக்கு இயைந்த, உட்பட்ட பெண்பால் தன்னிலை (female subjectivity) தொடர்ந்து உருவாகிக்கொண்டிருக்க, அடையாளம் குறித்த விசாரணைகளும் கேள்விகளும் புறந்தள்ளப்படுகின்றன. இந்த நியதிகள் கதையாடல்களில் தாயின் குரலாக, மாமியின் குரலாக என்றெல்லாம் வடிவெடுக்கின்றன. உதாரணமாக, லதாவின் கதையில் பெண் கோபப்பட யத்தனிக்கும்போதெல்லாம், நினைவில் மீளும் தாயின் வார்த்தைகள், ‘எத்தனை கோபமாயிருந்தாலும் பொறுமையாப் போம்மா... அதாம்மா நமக்கு நல்லது ...
‘என்ன பொண்ணு வளர்த்திருக்கிறா பாரு’ன்னு நாலு பேர் என்னைச் சொல்றமாதிரி வைச்சிடாதம்மா’ கோபத்தை மழுங்கடித்துவிடுகின்றன (லதா, 14-15).
அல்லது மாமியின் குரலாக கலாச்சாரத்தையும் பண் பாட்டையும் குறிப்பிட்டு எச்சரிக்கின்றன (சுமதி ரூபன் 2003, 22). இந்த நியதிகளை நிறுவுபவர்களாக தாய்களும் மாமிகளும் மட்டுமில்லை, பலசமயம் பெண்ணியம் பேசும் பெண்கள்கூட பெண்ணை எதிர்ப்பாலியல் குடும்பவெளியில் நிறுவ முனைவதில் விதிவிலக்கில்லை (பார்க்க, சுமதி ரூபனின் ’பெண்கள்: நான் கணிக்கின்றேன்,’ 2010). வயதான காலத்தில் தனித்திருக்கும் பெண்ணைக்கூட ‘ஆக்கள் நினைப்பினம், ஆக்கள் சொல்லுவினம், ஆக்கள் கதைப்பினம்’ என்று‘ஆக்களின்’ நினைப்பும் வார்த்தையும் பேச்சும் விட்டு வைப்பதில்லை (பார்க்க, சுமதி ரூபனின் ‘சூன்யம்,’ 2003)
பெண்ணொழுக்க நியதிகளைத் தடையின்றி நினைவூட்டும் கண்காணிக்கும் புலம்பெயர்ந்த சமூகத்தைத் தமிழ்நதியின் ‘மாயக்குதிரையிலும்’ (2012) காணலாம். இதில் கதைசொல்லி வித்தியாசமான கதாபாத்திரம். வீடு, பணியிடம், பயணம் என்கிற வழக்கமான கதைக்களனில் இல்லாமல் காசினோவில் பெரிதும் நிகழ்கிற கதையாடல். பெண்ணை முறைப்படுத்தும் சமூக, பண்பாட்டு நியதிகளின் யதார்த்தம் குறித்த புரிதல் கதைசொல்லிக்கு இருக்கிறது; ஆனால் அந்த யதார்த்தம் அவள் காசினோவுக்குச் செல்வதைத் தடுப்பதில்லை. காசினோவுக்குச் செல்ல பேருந்துக்காக காத்திருக்கும்போதுகூட நினைவூட்டுதல் நடக்கிறது: சனிக்கிழமை, எங்காவது உணவகத்துக்குப் போகிறார்களாயிருக்கும். உணவுச் செலவு நாற்பது டாலருக்குள் முடிந்துவிடும். தான் காசினோவுக்குச் செல்வது தெரிந்தால் இவர்கள் என்ன சொல்வார்கள் என்று நினைத்துப் பார்த்தாள். ‘கொழுப்பு’ என்பார்கள். அநேகமானவர்கள் அவளை ஒரு விசித்திரப் பிராணியாக, கேவலமாக நோக்கவும் கூடும். ‘அந்தப் பெட்டையோ...’ எனத் தொடங்கி ஆயிரம் கதை சொல்வார்கள்.’ காசினோவிலும் சூதுக்களத்திலிருந்து குடும்பக்களத்துக்கு அவள் திரும்பவேண்டிய பொறுப்பும் கடமையும் அவளுக்கு நினைவூட்டப்படுகின்றன, இதைச் செய்பவர்களும் தமிழர்களே:மேசையில் சூதாடுபவர்களில் தமிழ் முகங்களும் உண்டு. பெரும்பாலும் ஆண்கள். மிக அரிதாக பெண்கள். ‘ஒரு தமிழ்ப் பெண்... குடும்பத்தில் பொறுப்பாக இருக்க வேண்டியவள்... இங்கு என்ன செய்கிறாய்?’ என்றொரு பார்வையை உரிமையோடும் கண்டிப்போடும் அவளை நோக்கி எறிந்த ஆண்கள் உண்டு. தமிழ்ப் பெண்கள் குடிக்கக்கூடாது என்பது போன்ற விதி சூதிற்கும் பொருந்தும் என்பதை அவள் அறிவாள். ஆரம்பத்தில் அத்தகைய பார்வைகளுக்கு அஞ்சி அவசரமாக அவ்விடத்தைக் கடந்து சென்றாள். பிறகோ, ‘நீ மட்டும் இஞ்சை என்ன பிடுங்கிக்கொண்டிருக்கிறாய்?’ என்ற பார்வையை அலட்சியமாக திருப்பி எறியப் பழகினாள்.
சூதாடியில் ஆணென்ன, பெண்ணென்ன? ஆனால் இந்தப் பெண் ஏன் சூதாடப் போகவேண்டும்? கதையாடலின் சிறப்பே இக்கேள்விக்கு அதில் நேரிடையான விடையில்லை என்பதுதான். இந்த மனிதர்கள்தான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று எண்ணினாள். தன்னிரக்கம் பெருகியது. இளமையின் வறுமையையும், அகதியாக அலைந்ததையும், புலம்பெயர்ந்துபட்ட சிரமங்களையும் நினைத்துத் தன்னிரக்கம் கொள்வதனூடாக தனது செயலுக்கு நியாயம் கற்பிக்க விழைந்தாள். வறுமையும் அகதி அனுபவமும் புலம்பெயர்த்துயரமும் தனிமையும் இவள் சூதுக்குச் செல்லக் காரணங்களா, அல்லது அதை நியாயப்படுத்தும் முகாந்தரங்களா? என்றாலும், தாய்க்கு அவள் ஒற்றைப்பெண், கேட்டவுடன் தன் சொற்ப சேமிப்பிலிருந்து பணம் தருகிற தாய், சூதில் இவளின் நாட்டம் பற்றிப் புரிதலும், அதிலிருந்து அவளை மீட்க நினைக்கிற மேலான அன்பும் கொண்ட காதலன். ஆனாலும், காசினோவில் சூதாடி அதில் மீண்டும் மீண்டும் தோற்றுப்போய் நிற்கும்போது எந்த ஆண் கூப்பிட்டாலும் பணத்துக்காகப் போயிருக்கக் கூடியவள்தான் அவள் என்று தன்னை நினைக்கிறாள். நியான் விளக்குகள், கண்சிமிட்டும் இலக்கங்கள், நாணயங்கள் எண்ணப்படும்போது கேட்கும் ஓசை, இவையெல்லாம் அவளுக்குள் சூதாடியை உயிர்ப்பித்து விடும்போது வேறென்ன செய்ய முடியும் என்றும்.
கதையாடலில் முன்வைக்கப்படுகிற பொதுவெளி வழக்கமானதல்ல. காரண காரியத்துக்கு அப்பால் செயல்படும் சூதுவெளி. என்ன நடக்குமென்று தெரியாத மாயவெளி. எனினும் புறத்தே பொது வெளிக்கும் இதற்கும் வேறுபாடுண்டு. சூதின் ஆட்டம் தன்னிச்சையானது (arbitrary). தர்க்கத்துக்கு அப்பாற்பட்டது. வெற்றியும் தோல்வியும் யாருக்கும் வரும். தர்க்கத்துக்கு அப்பாலான தன்னிச்சைவெளியில், தாயங்களாக விழும் வெற்றியும் தோல்வியும் சூது களத்துக்குப் புறத்தே சமூகத்திலிருக்கும் அனைத்துப்படி நிலைகளையும் (தற்காலிகமாகவேனும்) கலைக்கமுடியும்.
ஆசியப் பெண்ணென்று தோல் நிறத்தை முன்னிட்டு அலட்சியம் காட்டும் மேசைப்பணியாளர்களுக்கு, கதைசொல்லி தான் ஆட்டத்தில் ஜெயிக்கும்போது எதிர்பாராத டிப்ஸ் கொடுப்பதன் மூலம் அங்கீகாரத்தைப் பெற்றுவிடுகிறாள். ஆட்டத்தில் தோற்று நிராதரவாக நிற்கும்போது, வெளிறிப்போகும்போது, அரற்றும்போது, அழும்போது, விவாதித்துப் பிரிந்துபோகும்போது, தமிழர், மஞ்சள் நிறத்தவர், வெள்ளையரிடையே எப்பேதமுமில்லை. காஞ்சனா தாமோதரனின் ஆக்கங்களில் வைக்கப்படும் பலபண்பாட்டினரையும் உள்வாங்கப் பார்க்கும் தேசியப் பொதுவெளிக்கு நேரெதிர்ப்புள்ளி சூதாட்டப் பொதுவெளி. புலம்பெயர்ந்தவர்களுக்கு, ‘வந்தேறிய’ புலத்தின் தேசியப் பொதுவெளியில் அல்ல, சூதாட்ட வெளியென்கிற தர்க்கம் மீறிய, தன்னிச்சைவெளியில்தான் குடிமைச் சமூகத்துடன் ஒன்றுபட முடியும், ஒன்றிப்பு நடக்கும் என்கிறது கதையாடல். இப்படிச் சொல்வதன் மூலம் குடிபுகுந்தவர் பார்வையில் வியந்தோதப்படுகிற தேசியச்சொல்லாடலைத் தலைகீழாக்குகிறது, நிராகரிக்கிறது. என்றாலும், சூதாட்ட மாயவெளியில்கிட்டும் ஒன்றிப்பும் ஒன்றுபடுதலும் நிரந்தரமல்ல, நிஜமல்ல, இந்த வெளியில் கண்டடையும் அடையாளம் மாயக் குதிரை. அது எங்கும் கொண்டு சேர்க்கப்போவதல்ல என்ற எச்சரிக்கைப் பார்வையும் உள்ளோடுகிறது கதையாடலில்.
இக்கட்டுரையில் தாயகம் கடந்து செல்லலை புலம்பெயர்தல், குடிபுகுதல் என்கிற வகைமைகளில் வைத்து தமிழகத்துக்கு, ஈழத்துக்கு வெளியே வசிக்கும் சில பெண் எழுத்தாளர்களின் குறிப்பிட்ட எழுத்துச் செயல்பாடுகளை புரிந்துகொள்ள முயன்றிருக்கிறேன். வீடும் புறவெளியும் கதைக் களன்களாக அல்லது நிகழ்வுகளின் பின்னணித் திரையாக அன்றி கதையாடல்களில் பங்குகொள்ளும் விதங்களைக் கட்டுரை குறிப்பிட்டிருக்கிறது. கதையாடலின் புலம்பெயர் சூழலில், நினைவேக்கத்தின், ஆணின் கட்டுப்பாட்டின், ஆண் செலுத்தும் வன்முறையின், பணிச்சுரண்டலின் களமாக வீடு இருக்கிறது. புறவெளி, அகத்தின் பொருளற்ற நீட்சியாக, சுரண்டும், அங்கீகரிக்க மறுக்கும் வீட்டின் பிரதிபலிப்பாக, சூதாட்ட மாயவெளியாக உருவம்கொள்கிறது. பெண்ணின் அடையாளம் அவளின் சுயம் நீக்கப்பட்டதாக, காவுகொடுக்கப்பட்டதாக, வெற்றுக்குறியாக முன்வைக்கப்படுகிறது. அடையாளம் குறித்த பெண்ணின் கேள்விகளும் சுய விசாரணைகளும் சமூக, பண்பாட்டு நியதிகளின்முன் பயனிழக்கின்றன. விதிவிலக்காக கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படும்போது, ‘மரபார்ந்த’ எதிர்ப்பாலியல் குடும்பத்துக்கு மாற்றாக, பெண் அடையாளம் ஒருபாலுறவில் நிலைகொள்கிறது, வீட்டை அதற்கேற்ப மறுவடிவாக்கம் செய்ய முனைகிறது.
குடிபுகுந்தவரின் சூழலில், வீடு குடிமைச்சமூக பொதுவெளியின் அங்கமாகக் கட்டமைக்கப்படுகிறது. தேசியச் சொல்லாடலின் அடையாளத்தில் குடி புகுந்தவரால் எளிதாகப் பங்குபெற முடிகிறது, ஒன்றிவிட முடிகிறது என்று ‘ஆதர்ச நம்பிக்கையை’ கதையாடல் தருகிறது. ‘ஜனநாயகம்,’ ‘குடிமைச்சமூகம்’ ஆகியவற்றை உரத்துப் பேசுகிற தேசியச் சொல்லாடலில், குடி மகள் என்கிற அடையாள ஒளிவட்டத்தில், பால் அடையாளங்களும் பேதங்களும் கதையாடலில் இருளில் தள்ளப்படுகின்றன. இதைப்போலவே, பால் அடையாளங்களும் பேதங்களும் முக்கியத்துவம் பெறாத இடம் சூதாட்டப் பொதுவெளி. புலம்பெயர்ச் சூழலில், ஒன்றுபடுதலின் ஒன்றிப்பின் இந்தத் தலைகீழ் வெளியில், அடையாளம் மாயக் குதிரையாக, ஒரே நேரத்தில் மாயமென்றும் தோற்றம் கொண்டும் அலைகிறது.
இந்த முடிவுரை, தாயகம் தாண்டிய எழுத்துவெளியில் புலம்பெயர், குடிபுகும் சூழல்கள் குறித்த முற்றான உரையல்ல. இதைப் பிரச்சினைக்குட்படுத்தும் வகையில் கதைகள் எழுதப்பட்டிருக்கலாம், எழுதப்பட்டிருக்கும். ஒருவகையில் இந்தக் கட்டுரை எடுத்துக்கொண்ட கதைகளுக்கும் என் வாசிப்புக்குமான தீவிரமான கண்ணாமூச்சி ஆட்டம் என்றும் சொல்லலாம். வேறு கதைகளோடு மற்றவர்களுக்கோ, மீண்டும் எனக்கோ விளையாட வாய்ப்பு கிடைக்காமலா போகும்?
தாயகம் கடந்த தமிழ் மாநாட்டில் ‘புதிய சிறகுகள்’ என்ற தலைப்பிலான அரங்கத்தில் பெண்ணிய எழுத்து குறித்து பேச எழுதப்பட்டக் கட்டுரை.
நன்றி: மாலன்
காஞ்சனா தாமோதரன். ‘சில பயணக் குறிப்புகள்.’
வரம். சென்னை: ஆசிரியரால் பதிப்பிக்கப்பட்டது, 2000.
‘ஓர் அமெரிக்க நெடுஞ்சாலைப் பயணம்.’
மரகதத் தீவு. சென்னை: உயிர்மை, 2009.
சந்திரா இரவீந்திரன்.. ‘யாசகம்.’
நிலவுக்குத் தெரியும். நாகர்கோவில்: காலச்சுவடு, 2011.
சுமதி ரூபன். ‘அகச் சுவருக்குள் மீண்டும்.’
யாதுமாகி நின்றாள். சென்னை: மித்ரா, 2003.
‘ஆதலினால் நாம்...’ யாதுமாகி நின்றாள். சென்னை: மித்ரா, 2003
‘சூன்யம்.’ யாதுமாகி நின்றாள். சென்னை: மித்ரா, 2003.
‘பெண்கள்: நான் கணிக்கின்றேன்.’
உறையும் பனிப்பெண்கள். சென்னை: கருப்புப் பிரதிகள், 2010.
தமிழ்நதி. ‘மாயக்குதிரை.’ அம்ருதா, ஜூன் 2012.
லதா (கனகலதா). ‘அடையாளம்.’ நான் கொலைசெய்யும் பெண்கள். நாகர்கோவில்: காலச்சுவடு, 2008.
Cho, Lily M. ‘The Turn to Diaspora.’
Topia 17, special issue on ‘Diaspora’ (Spring 2007): 11-30.
Clifford, James. Diasporas. Cultural Anthropology, 9.3 (Aug., 1994): 302-338.
Greer, Germaine. 1970. The Female Eunuch. New York: Harper Collins, 2006.