ஆசைமுகம்
இத்தனை நாள் தலை வாருகையில்
தலைமுடிதான் சீப்போடு
வந்து தொலைத்தது
இன்று பார்த்து தலையே
கையோடு வந்துவிட்டது
இனி கடன்காரன் கதவைத் தட்டினால்
குதிருக்குள் ஒளியத் தேவையில்லை
அடமானம் வைக்கவேண்டுமென்றால்
பாத்திர பண்டங்களை
உருட்டும் அவசியமில்லை
அன்றாடப் பாடுகளில்
அஞ்ஞாத வாசங்களில்
கால்பந்தென உதைபடும் தருணங்களில் காலணி
ஸ்டாண்டில்
கழற்றி வைத்திடப் பரிந்துரைப்பேன்
மையல் கொள்ளக் காலம் தவறினால்
ஆங்காரம் கொண்டு
தனங்களைத் திருகியெறியும்
நேசம் மிகுந்த நாயகியை
சாந்தப்படுத்த இனி ஆசைமுகத்தைக்
கையளித்து வணிகம் திரும்புவேன்.
நிச்சலனம்
உத்தரத்தில் சுழல்கிறது காற்றாடி
அட்டணங்காலிட்டுச் சிலைத்திருக்க
மெல்ல மொக்கவிழ்கிறது
அனந்தாதி பூடகங்கள்
சீரான தாளகதியில்
சிருஷ்டியின் தட்டாமாலை
விட்டு விட்டுக் கேட்கிறது
சுவர்க்கோழியின் பேச்சரவம்
உற்றுணர்ந்தது யாரடி பயித்தியமே
ஊழியின் மத்தியில் நிச்சலனம்.