மஹாஸ்வேதாதேவியின் 1084 - ன் அம்மா

ஆங்கிலம் மூலம்: சாமிக் பந்தோபாத்யாய்
தமிழில்: என். ஜம்புநாதன்

பகிரு

காட்சி - 1

திரை உயரும்பொழுது மேடையில் இருள். திரை உயரும் பொழுதே ஒரு குரல் ஒரே அளவான இடைவெளியுடன் மூன்று முறை திரும்பத்திரும்ப ஒலிக்கிறது. ‘ஜனவரி பதினேழு, ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபது’ அதிகாலை ஒளிரும் பொழுதில் தொலைபேசி ஒலித்து, பாதி மேடையை அவ்வொலி நிரப்புகிறது. சுஜாதா வெண்ணிற சேலையில் படுக்கையிலிருந்து எழுந்து, நடந்து வருகிறாள். இணக்கமற்ற ஓர் அதிகாரியின் குரல்.

குரல்: (மேடைக்கு அப்பால்) 460001 ஆ?

சுஜாதா: ஆமாம்

குரல்: திவ்யநாத் சாட்டர்ஜி வீடுதானே?

சுஜாதா: ஆமாம்

குரல்: நீங்க யாரு?

சுஜாதா: (வியப்படைந்து) மிஸஸ் சாட்டர்ஜி

குரல்: மிஸஸ் திவ்யநாத் சாட்டர்ஜியா?

சுஜாதா: ஆமாம். நீங்க யாரு?

குரல்: வீட்ல ஆம்பிளைங்க யாரும் இல்லியா?

சுஜாதா: தூங்கிக்கிட்டிருக்காங்க நீங்க யாரு?

குரல்: ப்ரதீ சாட்டர்ஜி உங்களுக்கு என்ன சொந்தம்?

சுஜாதா: என் மகன்.

குரல்: மகனா? கண்டாபுர்க்கூருக்கு வாங்க.

சுஜாதா: (கிரகித்துக் கொள்ள முடியாமல்) கண்டாபுர்க்கூருக்கா?

குரல்: ஆமாம் நீங்க ப்ரதீ சாட்டர்ஜியை அடையாளம் காட்டணும்.

(தொலைபேசி மறுமுனையில் துண்டிக்கப்பட்டுவிட்டது. தொலைபேசி ரிசீவர் சுஜாதாவின் கரங்களிலிருந்து நழுவுகிறது. திவ்யநாத்தும் ஜோதியும் உள்ளே வருகிறார்கள்)

திவ்யநாத்: என்ன விஷயம்? யாரு Phone- ல?

சுஜாதா: எனக்குப் புரியல.

திவ்யநாத்: என்ன புரியல.

சுஜாதா: போனில் பேசினது யாருன்னுத் தெரியல. கண்டாபுர்க்கூருக்கு வாங்கன்னு அதை மட்டுதான் சொன்னார் ஒருத்தர்.

திவ்யநாத்: என்ன?

ஜோதி: நீங்க என்ன சொன்னீங்க?

சுஜாதா: அவர் சொன்னாரு கண்டாபுர்க்கூருக்கு வாங் கன்னு, அவர் சொன்னாரு... நீங்க அடையாளம் காட்டணுமின்னு... ப்ரதீயை...?

(நடந்தது என்னவென்று தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டு திவ்யநாத்தும் ஜோதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர்)

திவ்யநாத்: கண்டாபுர்க்கூருக்கா?

சுஜாதா: ஆமாம் நான்தான் சொன்னேனே ஜோதி, காரை எடு, கிளம்பணும்.

திவ்யநாத்: இல்ல! நம்ம காரை எடுக்கக் கூடாது.

சுஜாதா: ஏன்?

திவ்யநாத்: என் கார், கண்டாபுர்க்கூருக்கெல்லாம் போகக்

கூடாது! ழிஷீ! ஜோதி, நல்லா கேட்டுக்க.

ஜோதி: சொல்லுங்கப்பா.

சுஜாதா: ஆனா ஏன்? கார் ஏன் அங்கே போகக் கூடாது? ஏன்?

திவ்யநாத்: எனக்கு கார் வேணும் நான் போய் சௌதுரியைப் பார்க்கணும். நீ தாத்தாவுக்கு போனப் போடு, சொல்லிடு அவர் கிட்ட... நீ போய் நேர்லியே போய் பாத்துடேன் என்ன?

சுஜாதா: ஏன் இவங்களையெல்லாம் பாக்கணும்கறீங்க? ஏன்? ப்ரதீ...

திவ்யநாத்: (சுஜாதா இருப்பதையே மறந்து) ஜோதி உன் மாமியாரோட சொந்தக்காரங்க யாரோ போலீஸில் இருக்காங்க இல்ல?

ஜோதி: மாமியோரோட சித்தி பையன்...

திவ்யநாத்: போன்லக் கூப்பிடு, வெளியில் இதை வராம மூடி மறைச்சாகணும். சௌதுரி நமக்கு உதவி பண்ணுவார். நிச்சயம் அப்பவே அபாய எச்சரிக்கை குடுத்துக்கிட்டிருந்தாரு... பையனை கண்காணியுங்கனிட்டு.

ஜோதி: (எதையும் புரிந்துகொள்ள முடியாமல், கலவரமடைந்து) நீங்க எதை மூடி மறைக்கணும்? ஏன் மூடி மறைக்கணும்? நீங்க எதைப்பத்தி பேசிக்கிட்டிருக்கீங்க?

திவ்யநாத்: ஜோதி, நேரம் ஓடிக்கிட்டிருக்கு கதைலாம் பேசிக்கிட்டிருக்க நேரமில்ல. (கிளம்புகிறார்)

சுஜாதா: ஜோதி (ஜோதி முனைப்பாக எண்களைச் சுழற்றிக்

கொண்டிருக்கிறான் அவன் பதிலிறுப்பதில்லை) ஜோதி...!

(அனுமதிக்காமல்) ஜோதி என்னதான் இங்கே நடக்குது?

ஜோதி: ப்ரதீ... (எண்களைச் சுழற்றிக்கொண்டே தொடர்பு கிடைக்காததால்)

சுஜாதா: ஜோதி! என்ன இந்த கண்டாபுர்க்கூர்...? யாரு கூப்பிட்டாங்க?

ஜோதி: (தவிர்க்கமுடியாமல்) போலீஸ்தான் கூப்பிட்டுருக்கு. சவக்கிடங்கு மார்ச்சுவரி கண்டாபுர்க்கில் இருக்கு.

சுஜாதா: போலீசா?... சவக்கிடங்கா?

ஜோதி: (சற்று எதிர்ப்புடன் கட்டாயமாக பதில் சொல்ல வைக்கப்பட்டதால்) ஆமாம்.

சுஜாதா: (கூட்டிக்கழித்து ஒருமாதிரியாக தெளிவடைந்து) ... அதான் உன்னோட அப்பா சௌதுரியைப் பாக்க விரைஞ்சு போயிக்கிட்டிருக்காரா? ஆனா ப்ரதீ ப்ரதீயைப் பாக்க யாருடா போவாங்க?... ப்ரதீ...

ஜோதி: நாம போவோம் அம்மா, ஆனா கொஞ்ச நேரம் கழிச்சு...

சுஜாதா: கொஞ்ச நேரம் கழிச்சா?

(சுஜாதா தலையை அசைக்கிறாள், அசைத்துக்கொண்டே

யிருக்கிறாள். மேடையின் இந்தப் பகுதி இருளடைகிறது.

ஐந்து இளைஞர்கள் மேடையின் மற்ற பகுதியிலிருந்து மேடைக்குள் நுழைகிறார்கள், படுத்துக்கொள்கிறார்கள், வெண்நிற துணியால் போர்த்திக்கொள்கிறார்கள். அடுத்த

படியாக இரண்டு பேர்கள் வந்து நிற்கிறார்கள் மேடையின் இந்த பகுதி இருளிலேயே மூழ்கிக் கிடக்கிறது.)

இருளில் சுஜாதாவின் குரல்:

ஜோதியும் ஜோதியோட அப்பாவும்... (மௌனம்) ஊர் ஊரா போயிக்கிட்டிருக்காரு... இந்த விஷயத்தை மூடி மறைச்சு அழிக்க (மௌனம்) வெளியில் வராம அமுக்கி வைக்க... அதான், நான் மட்டும் தனியா வந்திருக்கேன்.

காட்சி - 2

மேடையின் மற்றப்பக்கத்தில் ஒளி பரவுகிறது. ஐந்து சடலங்கள், போர்வை போர்த்தப்பட்டு, பணியிலிருக்கும் பொறுப்பு அதிகாரி (பொ.) இரக்கமே அற்று, பிணங்களின் தலைப்பக்கம் நின்று கொண்டிருக்கிறான். வெட்டியான் அவன் பின்னால் நின்று கொண்டிருக்கிறார். பின்னால் எங்கேயோ நிற்கும் ஒரு பெண்மணியின் கதறும் ஒலி கேட்கிறது.

அழும் குரல்: அவனைத் திருப்பிக் கொண்டு வந்து கொடுத்திடு... ஒரே ஒரு தடவ என் மார்ல சாச்சு கட்டிக்கிறேன்... அப்புறம் நான் அழவே மாட்டேன்... ஐயா, என் சோமு. (இந்த ஒப்பாரி, இந்த காட்சி முடியும் வரை, முழுவதுமாக மெல்லிய ஒலியில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது)

பொ.அ: (சுஜாதாவிடம், கையிலிருக்கும் காகிதங்களைப் பார்த்துக்கொண்டே) ப்ரதீ... யெஸ்... ப்ரதீ சாட்டர்ஜி (சுஜாதா நின்று கொண்டிருக்கிறாள், கைகளால் வாயை அழுத்தமாக பொத்தியபடி. அவளுடைய கண்கள் இதை நம்பிய மாதிரி தெரியாததால்...) யெஸ் லெப்டிலருந்து மூனாவது பாடி Yes உயரம் 5’10” சரிதானே?

பொ.: சிவப்பு நிறம்?

சுஜாதா: யாரோட நிறம்?

பொ.: உங்க பையனோட நிறம், ப்ரதீ சாட்டர்ஜியோட நிறம்.

சுஜாதா: ப்ரதீ எங்கே?

பொ.: ஏதாவது அங்க அடையாளமிருக்கா?

சுஜாதா: கழுத்தில்... கழுத்தில் ஒரு மச்சம் இருக்கும்.

பொ.: யெஸ்.

(வெட்டியானைப் பார்த்து சைகை செய்கிறான். அவன் காலிலிருந்து கழுத்துவரை துணியை நீக்குகிறான், முகம் மூடியே இருக்க) சுஜாதா கால்சராய்களின் முனையைத் தொடுகிறாள். தொட்டவுடன் ஏதோ ரத்தத்தைத் தொட்டு விட்டாற்போல் பயந்து சட்டென்று கையை எடுத்துவிடுகிறாள். மீண்டும் கையை நீட்டி இறந்தவனது ஆடையை உழப்பிப் பார்க்கிறாள். மீண்டும், மீண்டும் ஆனால் ஒவ்வொரு முறையும் தலையை அசைத்தபடி இல்லை... இல்லை... இல்லை என்று சொல்லியபடி, சொன்னாலாவது அவள் முகத்தில் படிந்துவிட்ட இந்தஆமாம்என்கிற பயங்கரம்இல்லைஎன்று மாறிவிடுமோ என்ற நப்பாசையில் அவள் ப்ரதீயின் கையைத் தூக்குகிறாள். விரைத்த விரல்கள் எதையோ பற்றிக் கொண்டு...

அவன் எதைப் பற்றிக் கொண்டிருக்கிறான். சுஜாதா பற்றிய அவனது கைகளைவிட அவை திடும் என்ற சத்தத்துடன் கீழே விழுகின்றன. அவள் தலையை அசைத்துக்கொண்டே முகத்தை மூடிநிற்கும் துணியை நீக்க முனையும்பொழுது)

பொ.: நோ... மூஞ்சியை மூடியிருக்கிற துணியை நீக்காதீங்க....

சுஜாதா: நான் அவனோட முகத்தைப் பார்க்கணும்.

பொ.: அங்கே பாக்கறதுக்கு என்ன இருக்கு? ஒன்னு கூட மிச்சம் மீதி இல்லை.

சுஜாதா: (அவள் துணியைப் பட்டென்று நீக்குகிறாள். ஆனால் நாம் ப்ரதீயின் முகத்தைப் பார்க்க முடிவதில்லை. அவன் தலை ஒரு செயற்கையான கோணத்தில் கிடப்பதால்) ப்ரதீ...! (அவள் அவன் முகத்தை தட்டுகிறாள். ஆனால் மறுவிநாடியே பட்டென்று ஒரு குலுக்கலோடு கையை எடுத்துக் கொள்கிறாள்) ப்ரதீ! ப்ரதீ! அவனுடைய தலையை தன் கைகளால் பிடித்துப்பார்க்க விரைந்து குனிகிறாள். ஆனால், பாதி வழியில் அப்படியே பாதி குனிந்தபடி நின்று பிறகு தலையை மெல்லத் தூக்குகிறாள், அவள் குரல் ரகசிய தொனியாக மாறுகிறது. முணுமுணுக்கும் குரல்) நான் இவனை வீட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போறேன்.

பொ.அ: No. முடியாது...

சுஜாதா: ஏன்?

பொ. அ: No முடியாது...

சுஜாதா: முடியாதா?

பொ.அ: No உங்களுக்கு சடலம் கிடைக்காது...

சுஜாதா: ஏன்?

பொ.: இல்ல உங்களுக்கு சடலம் கிடைக்காது.

அந்த வாக்கியம் பொ.இல்லை உங்களுக்கு சடலம் கிடைக்காதுபல குரல்களில், பல ஸ்ருதிகளில் மீண்டும் மீண்டும் குரலசைகிறது. ஒவ்வொரு முறையும் அது சுஜாதாவின் முகத்தில் சவுக்கடி போல் விழுகிறது. இந்த நேரம் முழுவதும் சுஜாதா மண்டியிட்டு இருக்கிறாள். முகம் உயர்கிறது மேலே பார்த்தபடி, அதிர்ச்சியுடன். ஒளி மங்குகிறது, திரை இறங்குகிறது.

காட்சி - 3

திரை மேலே உயர்ந்த பொழுது மேடையில் இருள் கவிந்திருக்கிறது டெலிபோன் மணி ஒலிக்கிறது.

சுஜாதா: (குரல் எங்கிருந்தோ)

மறுபடியும் அந்த ஜனவரி பதினேழு... இரண்டு வருஷங்கள் ஓடிப்போயிடுச்சு. டெலிபோன் மணி மறுபடியும் அடிச்சுச்சு, விடியற்காலையில், ப்ரதீயின் பிறந்த நாள் அன்னைக்கு (சுஜாதாவின் குரல் தான் போனில் ஒலிக்கிறது அவள் பேசும் வரை மேடை இருளில் உள்ளது.)

நந்தினியா? ஆமாம் நான் ப்ரதீயோட அம்மாதான் பேசறேன். No... நான் வரேன் நாலு மணிக்கு... No, இன்னிக்கு நான் பேங்குக்குப் போகல. இன்னிக்கு துலியோட நிச்சயதார்த்தம். No... தேதி நிச்சயம் பண்றப்ப அவங்க என்னைக் கலந்துக்கில (இந்த டெலிபோன் உரையாடல் நடக்கும் முழு நேரமும் நந்தினி மறுமுனையில் வெண்கலக்குரலாக ஆனால் ஏதும் விளங்கிக் கொள்ள முடியாதபடி)

(சில விநாடிகளுக்குப் பின் மேடை ஒளி பெறுகிறது. துலி, சுஜாதாவின் இளைய பெண் மேஜை முன்னால், பொறுமையிழந்து எரிச்சல், படப்படப்போடு நிற்க, சுஜாதா கையில் எலுமிச்சம் பழ ரச பானம் உள்ள ஒரு டம்ளர் கையில் ஏந்தி வருகிறாள். நெற்றியில், மீண்டும் மீண்டும் வலிகளால் ஏற்பட்ட சுருக்கங்கள்... சுஜாதா மேசையின் எதிர்பாகத்தில் அமர்கிறாள்)

துலி: டீ வேணாமா உங்களுக்கு?

சுஜாதா: No. லைம் ஜுஸ்... போதும்.

துலி: ஏன், ரொம்ப வலிக்குதா?

சுஜாதா: காலையில் ஒரு Tablet போட்டேன்... கேக்க மாட்டேங்குது.

துலி: ஏன் நீங்க அதை ஒத்தி ஒத்தி போட்டுக்கிட்டிருக்கீங்கன்னு தெரியல... அப்பென்டிசிடிஸ் ஆபரேஷன் ஒரு பெரிய ஆபரேஷனே இல்ல... அதில் எந்த ரிஸ்க்கும் இல்ல.

சுஜாதா: (லைம் ஜூசை ஒரு ஸ்பூனால் கலக்கியபடி) நீ சொல்றது பொதுவாக, நான் ரத்தசோகை புடிச்சவ... அப்புறம் தாறுமாறா வேல செய்யறவ, இந்த heart வால்வு... டாக்டருக்கே நிச்சயமா சொல்ல முடியல.

துலி: அப்ப நீங்க எப்பதான் பண்ணிப்பீங்க?

சுஜாதா: உன் கல்யாணம் முடியட்டும்.

துலி: அது ஏப்ரல்ல இல்ல.

சுஜாதா: பாக்கலாம் துலி.

துலி: காலங்காலையில் யாரு போன்ல உங்கள கூப்பிட்டாங்க?

சுஜாதா: (சற்று மௌனத்திற்குப் பிறகு) நந்தினி...

துலி: நந்தினியா?

சுஜாதா: ஆமாம்.

துலி: (சில விநாடிகளுக்குப் பிறகு, விஷமத்துடன்) என்ன வீடு இது! ஒருத்தர் கூட நேரத்துக்கு வந்து டீயைக் குடிச்சிட்டுப் போகமாட்டேங்கறாங்க.

சுஜாதா: இன்னும் யாரு டீக்கு வரணும்? ஜோதி வீட்ல இல்ல. உன் அப்பா...

துலி: நான் அவரைச் சொல்லல, மசாஜ் ஆள் வந்திட்டு போனவுடனே அவருக்கு குடிக்க தயிர் அனுப்பி வச்சிட்டேன்.

சுஜாதா: பினி பூஜை ரூம்ல இருக்கா...

துலி: பூஜை எல்லாம் வெறும் வெக்கக்கேடு! இந்த சாமி, பூதம் இதையெல்லாம் எங்க போய் பொறுக்கினா இவ? பிரிட்டன்ல பொறந்து வளர்ந்த பொண்ணு... எந்நேரமும் சாமியைக் கட்டி அழுதுக்கிட்டு...

சுஜாதா: (துலியின் அதிகமான பொறுப்பைக் கண்டு உணர்ந்து) துலி, இதனால உனக்கு என்ன? அவளோட அப்பா பிரிட்டன்ல வேலை பார்த்தாரு, அவ அங்கே இருந்தா. பதினாறு வயசு வரைக்கும் அங்கே தான் இருந்தா. அதுக்காக சாமிக்கு பூ போட்டு அர்ச்சனை செய்யக்கூடாது, அபிஷேகம் செய்யக் கூடாதுன்னு இருக்கா எதுவும்?

துலி: உங்களுக்கு இதெல்லாம் புரியாதும்மா.

சுஜாதா: இல்ல... துலி... No...

துலி: எனக்குத் தெரியும்

சுஜாதா: நீ ஒரு சுவாமிஜியை நம்பற. உன் வருங்கால மாமியோரோட குருஜி அந்த சுவாமிஜியை நம்பற. அது வெக்கக்கேடு இல்லன்னா பினி சாமி கும்பிடறதும் வெக்ககேடு இல்ல. பினியோட முதுகுக்குப் பின்னால சிரிக்கற நீ... இப்படி தரம் தாழ்ந்து போவேன்னு நெனைக்கவே இல்ல நான்.

துலி: ப்ரதீ மட்டும் மத்தவங்க நம்பிக்கைகளைப் பார்த்து சிரிச்சதில்லையா?

சுஜாதா: சுவாமிஜி மேல உனக்கு நம்பிக்கை, சாமி கடவுள் மேல பினிக்கு நம்பிக்கை. இதிலேருந்து வேறுபட்டது ப்ரதீயோட நம்பிக்கை. இந்த விஷயத்தில் அவனோட பேர வீணா இழுக்கறது வெறும் அபத்தமாயிருக்கு!

துலி: திரும்பத் திரும்ப அதயேச் சொல்லுங்க. ப்ரதீ பேரைச் சொல்லிட்டா போதுமே, வரிஞ்சுக் கட்டிக்கிட்டு வந்திடுவீங்க!

சுஜாதா: ஆமாம்!

துலி: அவன் பேரை உச்சரிக்க கூட எங்களுக்கு தகுதி இல்லையா?

சுஜாதா: நீ அந்த பேரை உச்சரிக்கிற விதம், என்னை காயப்படுத்தணுமின்னு கங்கணம் கட்டிக்கிட்டு கிளம்பிட்டா மாதிரி இருக்கு.

துலி: காயப்படுத்தறதா?

சுஜாதா: இந்த டோனி, அவனோட கூட்டம், மத்தவங்க நீ உன் அப்பா, ஜோதி நீபா... எல்லாரும் அவன் பேரை சொல்றப்ப, ப்ரதீ ஏதோ பெரிய கிரிமினல் என்கிறாப்போல... அவன் பேரை உச்சரிக்கிற மாதிரி உச்சரிக்கிறீங்க.

துலி: சரி,சரி நீங்க பழைய பல்லவியையே பாடிக்கிட்டே இருங்க போதும்.

ஜோதி: நிறுத்து துலீ!

துலி: லாக்கர்ல வச்சிருக்கிற நகைங்க? அது எப்பவரும்?

சுஜாதா: நான் கொண்டு வந்துடுவேன்.

துலி: சாயங்காலம் வீட்லதான் இருப்பீங்க?

சுஜாதா: இருக்காமல்? இன்னிக்கு ப்ரதீயோட பிறந்த நாள் உனக்கும் இது சரின்னு தோணிச்சின்னா இங்கேயே இருந்திட்டுப் போறேன்.

துலி: தேதியை ஸ்வாமிஜிதான் முடிவு பண்ணினாரு... நாங்க பண்ணல.

சுஜாதா:நிச்சயமா வரேன் கவலைப்படாதே வந்துடறேன்.

(லேசாக மிரட்டும் குரலில்) ஒரு விஷயம் டோனியோட பிரன்ட்ஸ் கிட்டே நீங்க நல்லபடியா நடந்துப்பீங்கன்னு நெனைக்கிறேன்.

சுஜாதா: (துலியின் வரிகளில் உள்ள கோடிக்காட்டலைப் புரிந்துக் கொண்டு) ... சரோஜ்பாலை நீ கூப்பிட்டிருக்கியா?

துலி: ஆமாம்... கூப்பிட்டிருக்கோம் ஆனால் அவர் வருவாரான்னு தெரியல.

சுஜாதா: சரோஜ் பால்!

(சுஜாதா விழிகளை மூடிக்கொள்கிறாள். மேடையில் பின் திரையில் எழுதப்பட்டவைத் தெரிகின்றன) ‘சரோஜ்பால் போலீஸ் இலாகாவின் மிகப்பெரிய நச்சுப் பாம்பு நீ. உனக்கு மன்னிப்பே கிடையாதுகதாநாயகனாக வீறுகொண்டு எழுந்து நக்சலைட் போராட்டங்களை நசுக்கி எரிந்த சரோஜ்பாலுக்கு வெகுமதியாக வெகு சீக்கிரம், பதவி உயர்வு காத்திருக்கிறது.

(டேப்ரெக்கார்டரில் குரல்) No மிசஸ் சாட்டர்ஜி உங்க பையன் தீகாவிற்குப் போகல எனக்கு தெரியும். எனக்கும் அம்மா இருக்காங்க No மிஸஸ் சாட்டர்ஜி, இதெல்லாம் பேப்பர்ல வராது No.. நாங்க வீட்டை சர்ச் பண்ணப் போறோம். ஜனநாயகத்தோட உடம்பிலே புற்றா இது வளர்ந்து கிடக்கு (இவையெல்லாம் சுஜாதாவின் மனதில் புகுந்து வெளியேறியவை. துலிக்கு இவைப்பற்றி எந்தக் கவனமுமில்லை. புருவத்தைச் சுருக்கிக்கொண்டு பொறுமையாகக் காத்திருக்கிறாள். சுஜாதா கண்களைத் திறக்கிறாள்)

துலி: இதுமாதிரி ஒரு விஷயம் நடக்கறப்ப அதை மூடி மறைக்கிறது, அமுக்கி வைக்கறது இயற்கைதானே அம்மா.

சுஜாதா: அதுக்காக இத்தனை அவசரம் அவசரமாவா? இத்தனை வேகமாகவா? சவத்தை அடையாளம் காண்றதுக்கு முன்னாலேயேவா? ஒரு தகப்பனாருக்கு டெலிபோன்ல தகவல் வருது, ஓடிப்போய் பார்க்கணுமின்னு ஒரு தவிப்பு, சின்ன நெனைப்புக் கூட வராதா? கண்டாபுர்க்கூர்லே இவரோட காரை யாராவதுப் பாத்துட்டா இவர் தலையில் இருக்கிற கிரீடம் கீழே விழுந்திடுமாம்.

துலி: அம்மா இதெல்லாம் இயற்கைத்தான் மா.

சுஜாதா: உங்களைப் பொறுத்தவரை, ப்ரதீ, ரொம்ப வருஷங்களுக்கு முன்னாலியே செத்துப் போயிட்டான், நான் சொல்றது சரிதானே?

துலி: எப்பவும் உங்களுக்கு ப்ரதீயை தலையில் தூக்கி வச்சிட்டு கூத்தாடனும். இப்பவும் கூட...

சுஜாதா: நிறுத்து துலீ

(துலி ஸ்பூனால் டம்ளரில் தட்டி ஓசைப்படுத்துகிறாள். சுஜாதா அவளையே கண்காணித்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய நினைவுகள் டேப்ரிகார்டரில் நமக்கு கேட்கிறது)

ப்ரதீயோட என்னையும் எல்லாரும் எதிர் முகாம்லதான் வச்சிருக்கீங்க, ப்ரதீ ஜோதியை மாதிரி இருந்திருந்தா அல்லது நீபாவின் - சுமீத் மாதிரி இருந்திருந்தா, இல்ல கெட்ட போக்கிரி டோனி போலிருந்திருந்தா இல்ல டைப்பிஸ்ட்டோட புடவையைப் பிடிச்சுகிட்டு அவங்க பின்னாலியே போற அவங்க அப்பா மாதிரி இருந்திருந்தா, ப்ரதீயை அவங்க கட்சியில சேத்துக்கிட்டிருப்பீங்க (அவள் எழுந்து - உரத்துப் பேசுகிறாள்) துலி, உன்னோட வாழ்க்கை சந்தோஷமாயிருக்கும்.

காட்சி - 4

(மேடையில் இருள் சூழ்ந்திருக்க திரை உயர்கிறது)

சுஜாதா: (டேப் ரெக்கார்டரில் குரல்) ஒரு நாள் மத்தியானம் கிளம்பி சோமுவோட அம்மாவைப் பார்க்கப் போனேன். இப்பல்லாம் காலனிக்குள்ள சுலபமாப் போயிட்டு வரமுடியுது. இப்பல்லாம் தொந்தரவில்லை, பயம் இல்லை, போலீஸ் அபாய சங்கு சப்தம் கிடையாது, துப்பாக்கி குண்டு வெடிக்கற சப்தம் கிடையாது, இளம் வயது பையன்களோட அலறல் சப்தம் கிடையாது. (இடைவெளி) ரெண்டாவது தடவ சோமுவோட அம்மாவைப் பார்க்கப் போறேன். (இடைவெளி) சோமுவோட அம்மா புரிஞ்சு வச்சிருக்கிற அளவுக்கு கூட நான் ப்ரதீயைப் புரிஞ்சுக்கல. நான் அவங்களப் பாத்து பேசறப்பதான் அவனே எனக்குத் தெரிய வர்றான்.

(மேடையின் ஒரு பகுதி ஒளி பெறுகிறது சோமுவின் அம்மாவும், சுஜாதாவும் நேருக்கு நேர் உட்கார்ந்திருக்கிறார்கள்)

சோமுவின் அம்மா: அக்கா, அழாதேம்மானிட்டு என் பொண்ணு சொல்லுறா. அழுதா அவன் திரும்ப வந்துடுவானான்னு, என்கிட்ட அவ கேக்கறா. நீங்க எவ்வளவோ பரவாயில்ல அக்கா, பார்த்தாவோட அம்மாவை நெனைச்சுப் பாருங்க, பையனை சாகக் கொடுத்துட்டு நிக்கறா. பார்த்தாவோட தம்பியும் வீட்டுக்குத் திரும்பி வர முடியாது. ஏரியாவுக்குள்ள காலடி எடுத்து வச்சாவே சுட்டுக் கொன்னுப்புடுவானுங்க.

சுஜாதா: இப்பக்கூடவா இப்படி?

சோமுவின் அம்மா: இப்ப கூடத்தான், ஆயிரமாயிரம் சின்னவயசுக்காரங்க வீடு வாசல் இல்லாம அல்லாடிக்கிட்டிருக்காங்க. காலனியிலேந்து அத்தனை குடும்பங் களையும் அடிச்சு விரட்டிட்டானுங்க. நெனச்சுப் பார்த்தா மனசே முடங்கிப் போயிடுது. அப்புறம் எங்கே நினைச்சு பாக்கறது?

சுஜாதா: எல்லாம் அடங்கி அமைதி வந்திடுச்சா இப்ப?

சோமுவின் அம்மா: (அமைதியா) அம்மாக்களோட மனசுங்கள்ளாம் நெருப்பல சாத்தி வச்ச பிணங்களானப் புறம் எங்கே அக்கா அமைதியா இருக்க முடியும்? என் பொண்ணுந்தான் பத்தி எரிஞ்சுக்கிட்டிருக்கா. அம்மாவும் பொண்ணும் வயத்தை கழுவ, நாலு காசு வேணுமே, அவ டியூஷன் எடுக்கலாமுன்னா முடியல. அவகிட்ட நான் என்னத்த சொல்லுவேன்? சோமுவைத்தான் பொத்திப் பொத்தி வளர்த்தோம், இவளைப் படிக்க வைக்கக் கூட நேரம் இல்ல... சோமு எங்களை விட்டுட்டுப் போயிட்டான், இங்கே எல்லாம் அலங்கோலமாக் கிடக்குது. இதெல்லாம் நெனச்சுப் பார்த்தா (அழத் துவங்குகிறாள் )

சுஜாதா: (மெல்லிய குரலில் அழாதீங்க... )

சோ. அம்மா: எல்லாரும் அதத்தான் சொல்றாங்கஅழா தீங்கம்மாஎன்னால் மறக்க முடியலியே.

சுஜாதா: எனக்குத் தெரியுது

சோ. அம்மா: அக்கா உங்க பையன், உயிரை துச்சமா மதிச்சிட்டு வந்தான். இங்கே சோமுவையும் அவன் சகாக்களையும் எச்சரிக்கை பண்ண வந்தான். இந்த நாலு பேரும் காலனிலதான் இருக்காங்கன்னு எப்படியோ மோப்பம் பிடிச்சிட்டாங்க. அவனுங்க ஒரு நாள் ராத்திரி தாக்குப்பிடிக்க முடியுமாங்கற பயம் வந்திடுச்சு. சோமு எங்கே சித்தின்னு ப்ரதீ வந்து கேட்டான். நான் ஏன்னு கேட்டேன், சோமுவுக்கு ஒரு விஷயம் தெரியப்படுத்திட்டு நான் உடனே கிளம்பணுமின்னான்.

சுஜாதா: அப்ப சாயங்கால நேரந்தானே?

சோ.அம்மா: ஆமாம் அப்பதான் நான் விளக்கைப் பொருத்தினேன். சோமு, பிஜித்தையும் மத்தவங்களையும் கூப்பிட போயிருக்கான்னுச் சொன்னேன். ராத்திரிக்கு அவங்கள்ளாம் இங்கேயே சாப்பிடுவாங்கன்னு கோதுமை மாவு கொண்டுவந்திருந்தான். எல்லாருக்கும் நான் சப்பாத்தி பண்ணினேன். நான் பேசிக்கிட்டே நின்னேன். அவங்கலாம் வந்தாங்க, ப்ரதீகிட்ட பேசினாங்க. அப்புறம் ப்ரதீ கேட்டான், இப்ப போலாமானிட்டு...

சுஜாதா: அப்புறம்?

சோ. அம்மா: சோமு கேட்டான், ஏண்டா நீ சாவறதுக்கு துடிக்கிறியான்னிட்டு. இங்கேயே இருந்த நானும் அவங்க கூட சேர்ந்துக்கிட்டேன். போகாத கண்ணு இன்னிக்கு ராப்பொழுது இங்கியே தங்கிடுன்னேன். ஏரியாவில் இருக்கிற இளவயசுக்காரங்களையெல்லாம் கொன்னுக்கிட்டிருந்தாங்க. அப்பல்லாம் வெளியாள் ஒருத்தன் உள்ளே வந்தா, அவங்க குறி தப்பவே தப்பாது யாருக்குத் தெரியும் அக்கா? அன்னிக்கு ராத்திரி அவனைப் போகவிட்டிருந்தா அவன் உயிர் பொழச்சிருப்பானோ என்னவோ...

(சுஜாதா மாட்டான் என்பதுபோல் தலை அசைக்கிறாள்)

அந்த ஒரு நாள் ராத்திரிக்கு அப்புறம் அவங்க உயிரோட இல்ல. எல்லாம் என் கண்முன்னால அப்படியே நிக்குது. சோமு, பிஜித், பார்த்தா, ப்ரதீ எல்லாமும் இந்த வீட்ல இருக்கிற கிழிசல் பாயில இந்த ஓட்டை வீட்ல படுத்துக்கிட்டு, பேச்சும் கும்மாளமும் சிரிப்புமாக...

சுஜாதா: அந்த இன்னொரு பையன் லால்ட்டூ?

சோ. அம்மா: அவனை வீட்டை விட்டு அடிச்சு இழுத்துக்கிட்டுப் போயிட்டாங்க.

சுஜாதா: (சுற்றுமுற்றும் ஏக்கம் நிறைந்த கண்களோடு பார்த்து) இந்த ரூம்லதானா?

சோ. அம்மா: அக்கா எங்க வீடே, இந்த ஒரே ஒரு ரூமுதானே? இதை வாங்கிப்போடவே இவங்க அப்பா தலைகீழா நின்னு பாடுபட்டாரு. சோமுவோட அப்பா பாவம் சின்ன பொட்டிக்கடை வச்சிருந்தாரு. சேமிப்பு எதுவும் கிடையாது. வெள்ளந்தியான மனுசன் ஏமாத்தறது எப்படிங்கறதை கத்துக்காமயே போய் சேர்ந்துட்டாரு. அன்னைக்கு நாங்க ரெண்டு பேரும் முழிச்சிக்கிட்டேயிருந்தோம். அவங்களும் தூங்கப் போகவே இல்ல. ப்ரதீ சிரிச்ச விதம் அக்கா..., ப்ரதீ சிரிச்சது என் காதில் ஒலிச்சிக்கிட்டேயிருக்கு.

சுஜாதா: ப்ரதீ இங்கே அடிக்கடி வருவானா?

சோ. அம்மா: ஆமா அக்கா, அடிக்கடி வருவான். சித்தி சித்தின்னு கூப்பிட்டுக்கிட்டே வருவான். கொஞ்சம் டீ போட்டு கொடுங்கம்பான், கொஞ்சம் தண்ணிகுடுங்கன்னு கேப்பான், இனிப்பாய் இனிக்கிற பேச்சு. என்னோட சோமு முரடன். தனக்குன்னு ஒண்ணுமே இல்லாதவங்க இத்தினியூண்டு ரொம்ப சாதாரண விஷயங்களை கூட கண்டு மனசு எளகிப்போறவங்கதான் இப்படி முரடாகப் போயிடுவாங்களாம்.

சுஜாதா: எல்லாப் பையன்களும் இந்த ஏரியாப் பையங்க தானா?

சோ. அம்மா: எல்லாம் இந்த காலனிப் பசங்கதான். இவங்கள்ள லால்ட்டு ரொம்ப நேர்த்தியான பையன். எல்லாரையும் இதில் இழுத்து ஒண்ணாச் சேர்த்தவன் அவன்தான். கடைசியில அதுக்காக உயிரையும் குடுத்துட்டான்.

சுஜாதா: நான் இவங்களையெல்லாம் பார்த்தது கூட

இல்ல. (மௌனம்) ப்ரதீ இவங்கள் வீட்டுக்கு கூட்டிக் கிட்டு வந்ததே இல்ல. (மௌனம்) நானும் எந்நேரமும் வீட்டில் இருந்தவ இல்லியே... பேங்க் உத்தியோகம்...

சோ. அம்மா: (நீண்டபெருமூச்சு விட்டு) நீங்க வேலைக்குப் போறவங்க, நீங்க பணக்காரங்க, ஆச்சர்யமா இருக்கு இந்த வழியில் போக ப்ரதீக்கு எப்படித்தான் தோணிச்சோ... உங்க பையன் என்ன வழியைத் தேடறான்னு உங்க மனசுக்கு பிடிப்படலியா?

சுஜாதா: இல்ல... (துயரூட்டும் நினைவுகளுடன்) எனக்குத் தெரியல இதெல்லாம்... அவன் எப்பவும் வீட்டில்தான் இருப்பான். ரொம்ப காலம் கழிச்சுதான் எனக்கு புரிஞ்சுச்சு - அவன் நாள் முழுக்க ஏதோ ஒரு அழைப்புக்காக காத்துக்கிட்டிருந்தான்னு... சோமுவுடன் அவன் சகாக்களும் ஏரியாவுக்குத் திரும்பி வந்துடுவாங்கன்னு தெரியும். திரும்ப வந்தால் தலைக்கு மேலே ஆபத்து இருக்குன்னு தெரியும். அநிந்தியாவை அந்த செய்தியோடதான் அனுப்பி வச்சிருக்காங்க. சோமுவையும் அவன் சகாக்களையும் எச்சரிச்சு அவங்க ஏரியாவுக்கு அனுப்பி வைக்கறது அநிந்தியாவோட வேலை. ப்ரதீ சொல்லி அநிந்தியா சோமுவுக்கு எச்சரிக்கை கொடுத்திருக்கணும், ஏரியாவுக்குத் திரும்பிப் போகாதீங்கடான்னு.

சோ. அம்மா: அநிந்தியாவா? அவன் சோமுகிட்டே எதுவுமே சொல்லலே.

சுஜாதா: ஆமாம் அநிந்தியா சோமுகிட்டே எதுவும் சொல்லல. அநிந்தியா இந்த ஏரியாவுக்கு வந்தது, சோமுவும் அவன் சகாக்களும் இந்த ஏரியாவுக்கு வர்றப் போறாங்கற விஷயத்தை மத்தவங்ககிட்ட அநிந்தியா சொன்னது இதெல்லாம் ப்ரதீக்கு தெரியாது (மனமுடைந்து) அநிந்தியாதான் உளவு தகவல் கொடுத் தான்னும், ராத்திரி நேரத்தில் அதை செஞ்சு முடிக்கணும் பகல்ல வேணாமின்னும் முடிவானதாக பின்னால் நான் கேள்விப்பட்டேன். அநிந்தியா போலீசுக்கும் தகவலும் கொடுத்துட்டான், அப்புறம் எப்படி அவங்க ஆக்க்ஷன் எடுப்பாங்க?

சோ. அம்மா: அநிந்தியாவா? - நி - ந் தியா? இங்க பலதடவை வந்துருக்கான். சோமுவுக்கு ரொம்ப நெருங்கின கூட்டாளி.

சுஜாதா: ப்ரதீ கலங்காம இருந்தான். எல்லாம் கட்டுப் பாட்டில் இருக்குங்கற ஒரு நம்பிக்கையில இருந்தான். சாயங்காலம் போன் வந்தப்பதான் ஒரு பேரழிவு நடக்க போகுதுன்னு தெரிஞ்சுது. சோமுவும் அவன் சகாக்களும் அவங்க ஏரியாவுக்குத் திரும்பி வந்துட்டாங்க. அவங்களை யாரும் எச்சரிக்கை பண்ணலே.

சோ. அம்மா: போன்ல யாரு பேசினாங்க?

சுஜாதா: எனக்குத் தெரியல... போன் கால் வந்தப்ப... (அவள் எழுந்து நிற்கிறாள் மேடையின் அடுத்த பகுதியை நோக்கி ஓரடி எடுத்துவைக்கிறாள்.) நான் வீட்டில் இருந்தேன்... ப்ரதீயும் நானும் லூடோ விளையாடிக்கிட்டிருந்தோம்.

காட்சி - 5

(சுஜாதா பேசி முடிக்கும் முன்னாடியே மேடையின் அப்பகுதி இருள் அடைகிறது மற்றபக்கத்தில் ஒளி வருகிறது, சுஜாதா வருகிறாள், ப்ரதீ கேரம் போர்டு விளையாட்டு போர்வையும், ஒரு பாயையும் எடுத்துக்கொண்டு வருகிறான். அவர்கள் பாயை விரிக்கிறார்கள். அதில் சாய்ந்து கொண்டு விளையாட ஆரம்பிக்கிறார்கள். சுஜாதாவின் இடது கை ப்ரதீயின் முழங்கால் மேல் கிடக்கிறது)

ப்ரதீ: நான் ஒரு Coin - ஐ வெட்டிட்டேன். வெளியில எடுத்துவையுங்க அதை.

சுஜாதா: மறுபடியும் வெட்டிட்டியா?

ப்ரதீ: நெருங்கி வந்துச்சு. எப்படி விடுவேன் நான் அதை.

சுஜாதா: ஆனாலும் நீ ரொம்ப கல்லுமனசுக்காரண்டா.

ப்ரதீ: நீங்க மட்டும் Coin - ஐ வெட்டலயா?

சுஜாதா: (லூடோ போர்டைப் பார்த்த வண்ணம்) ப்ரதீ, யாரு இந்த நந்தினி?

ப்ரதீ: (ஆச்சரியமடைந்து), எச்சரிக்கையோடு, புன்னகைப் பூத்து) ஏன் கேக்கறீங்க?

சுஜாதா: ஏன் நீ சொல்ல மாட்டியா?.

ப்ரதீ: அவ ஒரு இளம் பெண். அவ்வளவுதான்.

சுஜாதா: அவளை நான் ஒரு நாள், ஒரு பார்வை பார்க்க விடுவியா.

ப்ரதீ: அவ ரொம்ப இயல்பான ஆளு.

சுஜாதா: அதனால் என்ன? உனக்கு பிடிச்சிருச்சா, அப்ப எனக்கும் பிடிக்கும்.

ப்ரதீ: (மாறுபட்ட குரலில் சட்டென்று) அம்மா உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு நாளும் ஆபிஸ் முடிஞ்சப்புறம் அப்பா எங்கே போறார்னு தெரியுமா?

சுஜாதா: (குரல் டேப்ரெக்கார்டரில்) ப்ரதீக்கு இந்த டைப்பிஸ்ட் விஷயம் தெரிஞ்சிடுச்சா...

ப்ரதீ: (கண்களைத் தாழ்த்தி) அம்மா, எனக்காகத் தானே நீங்க எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டுப் போயிக்கிட்டிருக்கீங்க இல்ல? இல்ல ப்ரதீ? உனக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டிருக்கேனா? ... இல்ல... இல்லவே இல்ல.

ப்ரதீ: என்ன மனசில வச்சுக்கிட்டு உங்களப் போட்டு எல்லாரும் இந்தப்பாடு படுத்தறாங்க? இல்ல?

சுஜாதா: படுத்தட்டும், அவங்க படுத்தட்டும்.

ப்ரதீ: (கனிவாக, ஈடுபாட்டுடன்) அம்மா, இதையெல் லாம் எதுக்காக தாங்கிக்கிட்டிருக்கீங்க?

சுஜாதா: முந்தியெல்லாம் வலிச்சுச்சு... ஆனா இப்பல்லாம் வலிக்கறதே இல்ல. நீ வந்து பொறந்த வலியெல்லாம் பறந்து போயிடுச்சு. ஏன்னா, நீ இங்கே இருக்கே, என் கூட இருக்கே.

ப்ரதீ: நான் இங்கே இருக்கிறதினாலே...

சுஜாதா: ... அதை விடேன். நாளைக்கு டின்னருக்கு உனக்கு என்ன பண்ணனும்னு சொல்லு.

ப்ரதீ: ஏன்? நாளைக்கு என்ன விஷேசம்?

சுஜாதா: நாளைக்கு உன்னோட பொறந்த நாள் மறந்துட்டியா? (புன்னகைக்கிறான்) இப்ப மணி பன்னண்டரை ஆயிடுச்சு. இன்னைக்குத்தான். கணக்குப்படி, நாளைக்கு அதாவது பதினாறாந்தேதிதான் பொறந்த. ஆனா நடுராத்திரி தாண்டிடுச்சு. அதில பதினேழாந்தேதியாம். வினோதமான கணக்குங்க!

ப்ரதீ: பொறந்த நாளயெல்லாம் எப்படி நீங்க ஞாபகம் வச்சிருக்கீங்க?

சுஜாதா: இதையெல்லாம் எப்படி மறக்க முடியும்? நீ பொறந்தப்ப, கிட்டத்தட்ட நான் செத்தே போயிட்டேன்.

ப்ரதீ: (புன்னகையுடன்) என் அதிர்ஷ்டம் நல்லவேளை நீங்க உயிரோட இருக்கீங்க!

(அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். ப்ரதீ ஒரு பக்கம் நகர்ந்து சுஜாதாவின் நெற்றியில் புரளும் கேசத்தை ஒதுக்குகிறான்)

சுஜாதா: சரி நான் போய் ஹேம் கிட்டே பாலுக்கு சொல்றேன்.

ப்ரதீ: ஏன்?

சுஜாதா: உனக்காக நாளைக்கு கொஞ்சம் பாயசம் பண்ணனும்.

ப்ரதீ: வேற என்ன பண்ணனும்?

சுஜாதா: ஹேமுக்கு புடவை எடுத்து கொடுக்கணும்.

ப்ரதீ: ஹேமுக்கும் நாளைக்கு பொறந்த நாளா?

சுஜாதா: அவளுக்கு ஏதாவது கொடுக்கணும். எத்தனை கரிசனத்தோட அவ ஒன்னை வளர்த்தா... உனக்கு ஏதாவது கொடுத்தா நீ ஆர்ப்பாட்டம் பண்ணுவே.

ப்ரதீ: அண்ணியில்ல அப்பா பண்ணுவாங்க...

சுஜாதா: உனக்கு நான் எதுவும் கொடுக்கப்போறதில்ல. அவ உனக்கு புதுசா ஒரு சால்வை தர்றப்போறா. நீ கிழிஞ்ச, ஹைதர் அலி காலத்து போர்வையை போத்திக்கிட்டு அலையறியாம். அதை துவைக்க கூட போடறதில்லியாம்...

ப்ரதீ: அண்ணிக்கு இந்த பழம்பெரும் சால்வையோட சுகம்லாம் எங்கே தெரியப்போவுது?

சுஜாதா: ஒரு நிமிஷத்தில் வந்திடறேன். போயி ஹேம் கிட்ட பாலுக்கு சொல்லிட்டு வரணும்.

(டெலிபோன் மணி ஒலிக்கிறது. ப்ரதீ துள்ளி எழந்து ஓடி டெலிபோன் ரிசீவரை எடுக்கிறான். சுஜாதா வெளியேறுகிறாள் )

ப்ரதீ: யெஸ், ப்ரதீதான் பேசறேன். என்ன சொல்றீங்க நீங்க? சோமுவும் தோழர்களும் கௌம்பிட்டாங்களா? அநிந்தியா...? Ok

(அவன் ரிசீவரை வைக்கிறான், கைகளைப் பிசைகிறான். நெற்றியில் சுருக்கங்கள் வருகின்றன. தலையை அசைக்கிறான் அவன் கலக்கமடைந்திருப்பது வெளிப்படை

யாகத் தெரிகிறது. கழுத்தில் கிடக்கும் சால்வையை எடுத்து வீசி எறிகிறான். பையிலிருந்து ஒரு துண்டு காகிதத்தை எடுத்து, தீக்குச்சியால் கொளுத்துகிறான். அந்த சாம்பலை பாதங்களால் தேய்க்கிறான். சட்டைப் பையிலிருந்து சில நாணயங்களை எடுக்கிறான் அவற்றை எண்ணுகிறான்)

சுஜாதா: என்ன சமாச்சாரம்?

ப்ரதீ: நான் வெளியில் போகணும் கொஞ்சம் பணம் தர்றீங்களா?

சுஜாதா: எங்க போகப்போற நீ? (ஏமாற்றமடைந்து) வெளியில் போகப்போறன்னு என்கிட்ட சொல்லவே இல்லியே. வீட்லயே இருப்பன்னு சொன்ன...

ப்ரதீ: ஒரு முக்கியமான வேலை... திடீர்னு...

(பாக்கெட்டிலிருந்து இன்னொரு காகிதத்துண்டை எடுக்கிறான். அதைப் பார்த்துவிட்டு பாக்கெட்டிலியே வைத்துக்கொள்கிறான்)

சுஜாதா: (பாய் மீது இருக்கும் Bag - ஐ எடுத்து) இந்தா பணம்... உனக்குதான் வச்சுக்க. (பணத்தை கொடுக்கிறாள்) எப்ப திரும்பி வருவ?

ப்ரதீ: நான் திரும்பி வந்துடுவேன்... திரும்பி...

(சட்டென்று சுஜாதாவைப் பார்க்கிறான். அவன் சுஜாதாவின் பார்வையில் கலக்கமும் வாத்சல்யமும். ஏன் ப்ரதீ ஓர் அந்நியனைப் போல் தெரிகிறான்? ப்ரதீ சட்டென்று இறுக்கத்திலிருந்து விடுபடுகிறான், புன்னகைக்கிறான், சுஜாதாவின் தோள் மீது தனது கைகளை வைக்கிறான்.)

அம்மா நான் அலிப்பூர் போறேன் லேட்டாயிடுச்சுன்னா ரோனுவோட வீட்ல தங்கிடுவேன்.

சுஜாதா: (நிவாரணமடைந்து) ஆபத்து ஒன்னும் இல்லையே!

ப்ரதீ: (பாதுகாப்புடன்) என்ன அர்த்தம் இதுக்கு? ஆபத்து, கீபத்துங்கறீங்க...

சுஜாதா: ஒனக்கு இதெல்லாம் தெரியாது. உனக்கு பேப்பர் படிக்க கூட நேரமில்ல. இந்த கல்கத்தாவில் என்னென்னவோ நடந்துக்கிட்டிருக்கு. ஒரு ஏரியாவில் இருக்கிற பசங்க இன்னொரு ஏரியாவுக்குள்ள நுழைய அனுமதியில்ல. நுழைஞ்சா கொன்னு எரியறாங்க. ஆனா ரோனு இருக்கிற இடம் பாதுகாப்பான இடம்.

ப்ரதீ: நான் வர்றதுக்கு லேட்டாச்சுன்னா கவலைப்படாதீங்க.

சுஜாதா: நான் கவலைப்படறேன், படல... அதைப்பத்தி கவலையா உனக்கு?

ப்ரதீ: நான் கௌம்பறேன்.

சுஜாதா: ஹேமு கிட்டே கதவைச் சாத்திக்கச் சொல்லு.

ப்ரதீ: அவங்க கிட்டச் சொல்றேன்.

(சுஜாதா லூடோ போர்டையும், பானயையும் எடுக்கும்போது ப்ரதீ அவளையே பார்த்துக்கொண்டிருக்கிறான். சட்டென்று சுய நினைவுக்கு வந்த சுஜாதா அவனைப் பார்க்கிறாள். ப்ரதீ புன்னகைத்துக்கொண்டே போகிறான். புருவத்தை உயர்த்தி சுஜாதா, அவன் போவதையே பார்த்துக்கொண்டிருக்கிறாள். கையிலிருக்கும் பொருட்களோடு அவனைத் தொடர்ந்துச் செல்கிறாள். பிறகு கையில் Bag - உடன் வருகிறாள் மேடையைக் கடந்து, அடுத்த பாதிக்கு வருகிறாள். முதல் பாதியில் விளக்குகள் அணைந்து அடுத்த பாதியில் விளக்குகள் ஒளிர ஆரம்பிக்கின்றன)

காட்சி - 6

(சோமுவின் அம்மாவும் சுஜாதாவும் உட்கார்ந்திருக்கிறார்கள் நேருக்கு நேராக)

சோ.அம்மா: அவ்வளவுதான் உங்களுக்கு தெரியாது. ஒருத்தர் தெரிஞ்சே தன் பையனை சாவுறதுக்கு அனுப்ப மாட்டாங்க.

சுஜாதா: அன்னைக்கு ராத்திரி என்ன நடந்துச்சு?

சோ. அம்மா: (அந்த கொடுமையான இரவின் அவலங்கள்

அவளை உலுக்க கடந்த காலத்திற்குள் செல்கிறாள் )

நடு ராத்திரி கூட ஆவல. கொஞ்சம் நேரம் இருந்துச்சு... பயங்கர கனவு மாதிரி... பயங்கர கனவாத்தான் தெரியுது. அவங்க ஏற்கனவே வீட்டை சுத்தி வளைச்சிட்டாங்க.

காட்சி - 7

(மேடையின் ஒரு பக்கம் இருள் மறுபக்கத்தில் மோதும் அம்புகள் போல் குறுக்கேயும் நெடுக்கேயும் ஒளிக்கற்றைகள் சுஜாதா வெளியேறுகிறாள். சோமுவின் அப்பா, ப்ரதீ, பிஜித், பார்த்தா மற்றும் சோமு நுழைகிறார்கள். முழு மேடையும் சிவப்பு ஒளிவெள்ளம் அடைந்து கிடக்கிறது. ப்ரதீயும் அவனது குழுவும் ஒரு பக்கம் ஆக்கிரமித்து நிற்கிறது. ஒரு நாசகாரக் கும்பல் மேடையின் மறுபக்கத்திலிருந்து உள்ளே வருகிறது. இரண்டு குழுக்கள் ஒன்றை ஒன்று நோக்கி நகர்ந்தாலும் அவர்கள் வீட்டிற்கான இடம் எது என்பதை நினவில் வைத்திருக்கின்றனர்.)

கும்பல்: சோமு, வெளியில் வா.

சோமுவின் அப்பா: அதுல் பாபுவோட குரல் மாதிரியில்ல இருக்கு.

சோமு: (கடுமையாக) ஆமாம் மதன் முக்தியார் கூட அங்கதான் இருக்காரு.

கும்பல்: சோமு வெளியில வா... இல்லாட்டி வீட்டை கொளுத்திடுவோம் பார்த்தா, வெளியில வா, இல்லாட்டி உங்க அத்தனை பேரையும் கூண்டோட எரிச்சிடுவோம்.

சோமு: (ப்ரதீ மற்றும் அங்கு இருப்போரிடம் நான் முதல்ல போறேன், அப்படி அவங்க என்னைப் பிடிச்சுட்டாங்கன்னா, உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கு... முயற்சி செஞ்சு ஓடிப்போயிடுங்க.

சோ. அப்பா: (நடுங்கும் குரலில்) நீ பின் வழியா போக முடியுமான்னு பாக்கறேன்.

(மேடை மீதும் அப்பாலும் கூட்டாக மிரட்டும் ஒலிகள் (டேப்ரிக்கார்டரில்) ஒரு கூட்டு Slogan- கள் போல)

கும்பல்: வெளியில வா... வெளியில வா...

சோ. அப்பா: பிரயோசனமில்லடா மகனே! அவங்க எல்லா பக்கத்திலியும் நம்மை சூழ்ந்துக்கிட்டிருக்காங்க

(சோமுவின் அம்மா அவனைப் பார்க்கிறாள் பீதியடைந்த, ஊமையான ஒரு பிராணிபோல... இந்த காட்சி முழுதும் அவள் மௌனமாக கதறிக்கொண்டிருக்கிறாள் சேலை தலைப்பை வாயில் கவ்விக்கொண்டு)

கும்பல்: வா, வெளியில... வா வெளியில...

ப்ரதீ: நீ தனியா வெளியில போறதில் அர்த்தமில்ல. தப்பிக்க வழியே இல்ல. நாம் எல்லாரும் சேர்ந்து வெளியிலப் போவோம்.

பிஜித்: (அமைதியாக) நாம் வேகமா வெளியிலப் போயிடுவோம், ப்ரதீ இல்லாட்டி நம்ம வீட்டுக்கு நெருப்பு வச்சுடுவாங்க. மதன் முக்கியமா ஏற்கனவே ஏகப்பட்ட வீடுகளை கொளுத்தியிருக்கான்.

கும்பல்: வெளியில வா... சாவைக் கண்டு பயமில்லன்னு வாய் கிழிய பேசற. அப்புறம் ஏன் ஒணான் மாதிரி ஒரு பொந்துக்குள்ள போய் ஒளிஞ்சுக்கிட்டிருக்க?

ப்ரதீ: கத்தாதே பொறு கொஞ்சம், நாங்க வெளியில வந்துக்கிட்டிருக்கோம்.

கும்பல்: (மற்றோர் இரையை கைப்பற்றி விட்டதால் அடையும் வெற்றியை ஊளையிட்டு கெக்கலித்தது)

புதுசா ஒரு குரல்: இந்த தாயோளிங்க கூட்டத்துக்கு புதுசா ஒருத்தன் வந்துருக்காண்டா, வா வெளியில கல்கத்தா பையா, வெளியில வாடா.

சோ.அம்மா: (தன் குரல் கதியற்றுப் போவதை உணர்ந்து) போகாதே சோமு...

கும்பல்: (அவளைப் போலவே பேசி நையாண்டியாக போகாதே சோ...மூமூமூமூ...)

சோமு: (நிலையான உறுதிப்பாட்டுடன் அம்மாவை நோக்கி பளிச்சென்று) அம்மா அழுதது போதும். அப்பா, அம்மாவைக் பாத்துக்கோங்க.

(சோமுவின் அப்பா தன் மனைவியைப் பிடித்துக்கொண்டு நகர முயற்சிக்கிறார். அவங்கள போக விட்றாதீங்க... சரி நாம கிளம்புவோம், இல்லாட்டி அவனுங்க வீட்டுக்கு தீயை வச்சுப்புடுவானுங்க )

(சோமுவின் அம்மா கதியற்றுப் போய் தனது கணவனின் கையில் சாய்கிறாள். பிஜித் விரல்களால் முடியை வாரி நிறுத்திக்கொள்கிறான். பிஜித்தும் பார்த்தாவும் கத்திகளை எடுத்து அதை நீட்டிப் பிடித்து நிற்கின்றார். சோமுவும், ப்ரதீயும் எந்த ஆயுதங்களும் அற்று)

சோமு: (கையை நீட்டி விரல்களை உயர்த்தி ஆணைகள் இடுகிறான்) போவோம் நாம்.

(சோமு கதவைத் திறக்கும்பொழுது அவர்கள் ஒருவர் கைளை ஒருவர் இணைத்துக்கொண்டு நிற்கிறார்கள். கோஷங்கள் எழுப்புகின்றனர். நக்சல்பாரி ஜிந்தாபாத், நக்சல்பாரி ஜிந்தாபாத், லால்சலாம் லால்சலாம்.

(அவன் வெளியேப் போகிறான் மேடை இருளாகிறது. மேடை ஒளி பெறும்பொழுது சோமுவின் அம்மாவும், சுஜாதாவும் ஒருவரை ஒருவர் நோக்கியபடி உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர்)

சோமுவின் அம்மா: (தலையை அசைக்கிறாள்) சோமுவோட அப்பா ஓடு ஓடுன்னு ரொம்ப ஓடி நம்பிக்கையோட போலீஸில் கம்பளெயிண்ட் குடுத்தாரு. ஆனா அவங்க கம்ளெயிண்ட்டை தொடக் கூட இல்ல, பொணங்கள அள்ளிட்டுப் போக Van - களை அனுப்பிச்சாங்க எல்லாம் முடிஞ்சப்புறம் கூட இவரு லால்பஜார் இருக்கற பெரிய போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினாரு.

(அவள் மீண்டும் தலையை அசைக்கிறாள்)

அவங்களும் ஒண்ணுமே செய்யல. அவருக்கு நெஞ்சு பொறுக்கல அதிர்ச்சியில செத்துப் போயிட்டாரு. ... கடவுளே இந்த நாட்ல நீதியே இல்லையா? கடவுளே நீதி இல்லியா? ன்னு திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டே உயிரை விட்டாரு.

சுஜாதா: (தலையை அசைக்கிறாள்) ஆமாம் நீதியே இல்லைதான்.

சோ.அம்மா: உங்களுக்கு இன்னொரு புள்ள இருக்கான். அவனையாவது நீங்க நெஞ்சில சாச்சுக்கிட்டு கொஞ்சம் துக்கத்தை மறக்கலாம். (சுஜாதா தலை அசைக்கிறாள்) என் புள்ளையும் போயிட்டான், புள்ளையோட அப்பாவும் போயிட்டாரு மனசுக்குள்ள அந்த ரெண்டு பொணங்களோட நெருப்பு இன்னும் எரிஞ்சுக்கிட்டிருக்கு. இத்தோட புட்டத்துக்கு மையிட்ட மாதிரி இருக்கிற இந்த வாழ்க்கையை வாழ்ந்து முடிச்சாகணும்.

சுஜாதா: புரியுது எனக்கு.

சோ.அம்மா: (திடீரென்று நினைவுக்கு வந்தாற்போல) அக்கா உங்ககிட்ட ஒரு விஷயத்தை சொல்லட்டுமா?

சுஜாதா: உம்... சொல்லுங்க.

சோ.அம்மா: (தன்னம்பிக்கையற்று அதைரியத்துடன்) நீங்க எங்க வீட்டுக்கு அடிக்கடி வர்றீங்களாம் அதுக்காக என் பொண்ணை மிரட்டுறாங்க. இவங்க.

சுஜாதா: சோமுவோட அக்காவையா? யாரு மிரட் டறாங்க அவளை?

சோ.அம்மா: வேற யாரு? சோமுவைக் கொன்ன வங்களும், அவங்கக் கூட்டாளிகளும்தான்.

சுஜாதா: அதே கும்பலா?

சோ.அம்மா: அவகிட்ட அவங்க சொல்றானுக, இவ உன் வீட்டுக்கு ஏண்டி வர்றா? தடுத்து வை, இல்லாட்டி பயங்கரமா ஏதாச்சும் நடந்துடும்னு.

சுஜாதா: நீங்க என்ன சொல்ல வர்றீங்க?

சோ.அம்மா: இங்க வலிக்குது அக்கா. அவங்களப் பகைச்சுக்கிட்டு நாங்க இங்க குடியிருக்க முடியாது. சோமுவோட அக்காவுக்கு ஸ்கூல் வேலையும் கிடைக்கல. அதனால அவ எப்பவுமே ஒரு கடுப்புல இருக்கா. என்கிட்டே எரிஞ்சு எரிஞ்சு விழறா... உங்களோட ஒரு புள்ளைக்காகத்தான் இத்தனையும்... என் வயத்தை கழுவிக்க கூட ஒரு வேலையும் செய்யவிட மாட்டேங்கறானுங்க.

சுஜாதா: நான் பேங்க் வேலைக்கு போயிக்கிட்டுதானே இருக்கேன் என்னை...

சோ.அம்மா: அது ஏன்னா நீங்க பணக்காரங்க. மலையும், மடுவுமா நீங்களும் நானும் இருக்கோம்...

சுஜாதா: (மனமுடைந்து) ரொம்ப நல்லது. இனிமேல் நான் வரமாட்டேன். இப்ப ஒரே ஒரு விஷயம்...

சோ.அம்மா: என்ன சொல்லுங்க

சுஜாதா: அது ஒண்ணுமில்ல அக்கா ஒண்ணுமேயில்ல.

சோ.அம்மா: (அதை நினைத்துப் பார்த்து) இல்லக்கா, மறுபடியும் வாங்க, உங்கக்கிட்ட பேசிக்கிட்டிருந்தா மனசுக்கு நிம்மதியாயிருக்கு.

சுஜாதா: (தலையை அசைக்கிறாள் அவள் திரும்பி வரப்போவதில்லை ஒரு விநாடி மௌனம் பிறகு சிறிது முயற்சியுடன்) ப்ரதீ... ப்ரதீ ப்ரதீ இறந்து போன நாள் அதுதான் அவன் பிறந்தநாள்.

(சோமுவின் அம்மா சுஜாதாவின் கரங்களைப் பற்றுகிறாள் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்க திரை இறங்குகிறது)

காட்சி - 8

(திரை தாழ்ந்தே இருக்கிறது டேப்ரெக்கார்டரில் சுஜாதா வின் ஓய்ந்துபோன சோகமான குரல் கேட்கிறது)

சுஜாதா: (டேப்ரெக்கார்டரில் குரல்) துக்கம் சோமு வோட அம்மாவையும் என்னையும் ஒண்ணா சேர்த்து வச்சுது. ஒரு நாள் காலம் எங்களைத் தனியா பிரிச்சு வச்சுது. நான் அவனைப் பார்க்க, சோமு வீட்டுக்கு போயிக்கிட்டிருந்தேன். இனிமேல் நான் அங்கே போகமாட்டேன். அவன் எங்கேதான் இருக்கான்? நான் சோமுவீட்டுக்கு காலையில் போனேன். அதே நாள் மத்தியானம் நந்தினிகிட்டே வந்தேன் (இடைவெளி) ப்ரதீ (இடைவெளி) காதலிச்சான் (இடைவெளி) நந்தினியை (திரை உயர்கிறது மேடையின் ஒரு பகுதி மட்டும் தெரிகிறது. ஒளி பெறுகிறது நந்தினியும் சுஜாதாவும் ஒரு மேஜைக்கு எதிரும் புதிருமாக அமர்ந்திருக்கிறார்கள் நந்தினி கறுப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறாள். அவளைப் பற்றிய எல்லாமே - அவளது வடிவம் அவள் அமர்ந்திருக்கும் விதம் / அவள் பேசும் விதம் - நமக்கு ரகசியமான ஒரு இறுக்கத்தை அவள் சுயமாக விலங்குகளை அணிந்து நிற்பதை உறுதிப்படுத்துகிறது. அவள் பேசும்பொழுது ஒரு கதை சொல்லி ஏதோ மற்றவர்களைப் பற்றி பேசுவது போல் அவளைப்பற்றி இல்லாமல் அவளுடைய ஜனங்களை பற்றி பேசுவது போல் ஒரு தோற்றம் எழுகிறது. ப்ரதீயின் பெயரை உச்சரிக்கும் பொழுது மட்டும் மென்மையாகப் பேசுகிறாள். அவர்கள் சில விநாடிகள் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள். மேஜை மீது கண்ணாடி தம்ளரில் தண்ணீர். சுஜாதா பையிலிருந்து ஒரு Baralgon மாத்திரையை எடுத்து வாயில் போட்டு ஒரு மடக்கு தண்ணீரை குடிக்கிறாள் )

நந்தினி: எங்களைக் காட்டிக் கொடுத்தது இந்த அநிந்தியாதான்.

சுஜாதா: (படிமானமாக) எனக்கு எதுவும் தெரியாது நந்தினி.

நந்தினி: உங்களுக்கு தெரியாததினால் எதுவும் மாறப் போறதில்லை.

சுஜாதா: அதுவும் எனக்கு தெரியும்.

நந்தினி: இப்படியிருந்தும் முட்டாள் மாதிரி ப்ரதீ அநிந்தியாவை நம்பினான் அவன் ஏன் நம்பினான்னு உங்களுக்கு தெரியுமா?

சுஜாதா: இல்ல... தெரியாது.

நந்தினி: ஏன்னா.. இந்த நீதுதான் அநிந்தியாவை அறிமுகப்படுத்தினான். நீது பல செயல் திட்டங்கள்ல இருந்தான், அப்புறம் நீது கொல்லப்பட்டான். ரொம்ப ஈசியான ஒரு குட்டிக் கணக்கு நீதுதான் அநிந்தியாவை அறிமுகப் படுத்தினான்.

+ (Plus) நீது செத்துப்போனான்

+ (Plus) நீதுவோட சாவுதான் அவனோட விசுவாசத்துக்கு ஆதாரம். அதனாலே நீதுவால் நியமிக்கப்பட்ட அநிந்தியா ரொம்ப நம்பகமானவன். அப்படித்தான் எங்களோட விவாதம் போச்சு. எப்பவுமே அவனை நாங்க சரியா எடைபோடல, அவனைப் பத்தி சரியா விசாரிக்கல... சரியா தெரிஞ்சுக்கிட்டிருக்கணும்.

சுஜாதா: என்ன தெரிஞ்சுக்கிட்டிருக்கணும்.

நந்தினி: எங்களுக்கு மாதிரியே அவங்களுக்கு ஒரு ப்ரோகிராம் இருக்கு. அதை தெரிஞ்சிக்கிட்டிருக்கணும். எங்களுக்கு ஒரு காரணம் இருந்தது அவங்களுக்கும் இருந்திருக்கும்.

சுஜாதா: காரணம், ப்ரோகிராம் இதெல்லாம் என்ன நந்தினி? பெரிய ப்ரோகிராம் எல்லாம் காட்டிக்கொடுக்கிற ப்ரோகிராம்... அவங்களுக்கு காரணமே இந்த காட்டிக் கொடுக்கிறதுதான்.

சுஜாதா: (புரிந்து கொள்வதாக) ஆனா எப்படி?

நந்தினி: பணம் பெரிய வேலைங்க அதிகாரம் இதெல் லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்ல. ஆனா எங்களைக் காட்டி குடுக்கறதுக்காகவே சேர்ந்தவனுக்கு இதெல்லாம் பெரிய சபலத்தை உண்டாக்கிச்சு. அந்த சபலங்களோட பலத்தை நீங்க குறைச்சு எடை போட முடியாது. (இடைவெளி) அதனால்தான் நான் ஓயாம ஆச்சரியப்பட்டுக்கிட்டே இருக்கேன்.

சுஜாதா: நந்தினி ஆச்சரியப்படறியா?

நந்தினி: கட்சியில் சேர்ற நம்ம நண்பர்களே காட்டி குடுக்கறதுக்குத்தான் உள்ள நுழைஞ்சிருக்காங்கற உண்மையை ஆரம்பத்திலேயே நாம ஏன் புரிஞ்சிக்கல. அதான் ஆச்சரியப்படறேன்.

(சற்று படபடப்பு, சிறிய புன்னகையுடன்) நீ சின்னவயசுக்காரி.

நந்தினி: இல்ல, இல்ல இதெல்லாம் கற்பனை கதைங்க. Pure romanticion ஓவர் டோஸ், நடைமுறையைப் பற்றி, நிதர்சனங்களைப் பற்றி துளி கூட அறியாத விடலைத்தனம். அந்த காலத்தில் ஏற்பட்ட பெரும்பாலான தோல்விகள்ல இதுவும் ஒன்னு.

சுஜாதா: தோல்விகளா?

நந்தினி: தோல்விகள் தவறுகள், வழி தவறல்கள் 1947 -லிருந்து நடந்தது நம் எல்லாருக்கும் தெரியும். தெரிஞ்சும் எப்படி 1970க்குள்ளே மனித விசுவாசங்கள்லாம் காத்தோட காத்தா போயிடுச்சு? நமது சொல்லை, நம்மளை ஒருத்தன் காட்டிக் கொடுக்கறான். இது எப்படி நமக்குத் தெரியாமப் போவுது. இந்த படுகொலைகளுக்கு பின்னால் ஒரு அப்பா, ஒரு உடன் பிறந்தவன், ஒரு உறவுக்காரன், ஒரு நண்பன், ஒரு தெரிஞ்சவன் இருக்கான். கேட்டாலே ஆச்சரியம் வருது (புன்முறுவல் செய்கிறாள்) நாங்க இங்க இருக்கற அத்தனையையும் வெறுக்கறோம்னு ஜனங்க நெனைக்கறாங்க. (புன்முறுவல் செய்கிறாள்) ஆனா மேலாகத் தோற்றம் தருகிற இந்த வெறுப்பின் அடியில் வெறியாக ஒரு நேசமும், பணிவான பெரும் வணக்கமும் இருக்குன்னு ஒரு நாள் ஜனங்க புரிஞ்சுக்குவாங்க.

சுஜாதா: நீ எதுக்கு ஆச்சரியப்படறே?

நந்தினி: உங்களுக்கு புரியாது (இடைவெளி) இப்ப நாங்க திரும்பிப் பாக்கறப்ப, இங்கே எல்லாமே வெறும் காட்டிக் கொடுக்கறதாகவே இருக்கு.

சுஜாதா: இது சிந்திக்கிற வழி இல்ல நந்தினி. இதால உன் கஷ்டங்கள் தான் அதிகமாகும்.

நந்தினி: நிறைய காட்டிக் கொடுத்தல்கள். ஆனா எதையும் சந்தேகின்னு யாரும் எங்களுக்கு சொல்லித் தரல. நாம் சந்தேகப்படணும். நம்மோட கடந்த கால அனுபவங்களை ஆராய்ஞ்சு பாக்கணும். அப்பத்தான் நமக்கே ஒரு தன்னம்பிக்கை உண்டாகும்.

சுஜாதா: நந்தினி...

நந்தினி: (அவளே அறியாமல் அவளுடைய குரலில் ஓர் குழைவு உண்டாகிறது) அந்த நாட்கள்ல ஒரு யுகமே முடிஞ்சு போயிடுச்சுன்னு தோணிச்சு எங்களுக்கு. நாம் ஒரு புதுயுகத்தை கொண்டுவந்துகிட்டிருக்குமான்னு தோணிச்சு. (இடைவெளி) நானும் ப்ரதீயும் தெனமும் காலேஜ் ரோட்டிலேருந்து பவானிப்பூர் வரை நடந்தே போவோம் பேசிக்கிட்டே. அப்படி ஒரு பேச்சு அந்த நாட்களிலே ஒரு மகிழ்ச்சி. வெறுமனே பேசறதில, தெருக்கள பார்க்கறதில, ஊர்வலங்களைப் பார்க்கறதில, ஜனங்களோட பேசறதில, தெரு முனையில் கிடக்கும் சிவப்பு ரோஜாக்கள் எடுத்துப் பார்க்கறதில, தெருவில் உள்ள நியான் விளக்குங்கள பார்க்கறதில, ரேடியோவில ஹிந்திப்பாட்டு கேட்கறதில ( Chim 'O' Arab Hamara - Mukesh Phir Subah Hoger' Film - Song இரண்டு வரிகள்) சந்தோசத்தில மனசே வெடிச்சு சிதறிடும். ஆனா (இடைவெளி) நான் இப்ப அந்த ஆள் இல்ல. அந்த யுகம் முடிஞ்சு போயிடுச்சு. அப்ப இருந்த நான் செத்துப் போயிட்டேன். இப்ப நடமாடும் பிணம் நான்...

சுஜாதா: அப்படியெல்லாம் சொல்லாதே.

நந்தினி: நீங்க அப்புறம் என்னோட அம்மா... எல்லாருமே ஒரே மாதிரியே பேசறீங்க (இடைவெளி) உங்களுக்கு இது என்னிக்குமே புரியாது. ஏதோ ஒரு காரணத்திற்காக எப்பவாவது ஒரு உறுதிமொழி எடுத்திருக்கீங்களா நீங்க? நாங்க எடுத்திருக்கோம்.

சுஜாதா: இல்ல நாங்க எடுத்ததில்ல.

நந்தினி: ப்ரதீ சொல்லிக்கிட்டேயிருப்பான் உங்களை மாதிரி ஒரு நேர்மையான ஆசாமியை அவன் பார்த்ததில்லன்னிட்டு.

சுஜாதா: அப்படியா ப்ரதீ சொன்னான்?

நந்தினி: இதை ப்ரதீ உங்க கிட்ட சொல்லலியா?

சுஜாதா: இல்ல.

நந்தினி: ஆனா அவன் பேசறதைப் பார்த்தா உங்க ரெண்டு பேருக்கும் இடையில் நிறைய்ய நெருக்கம் இருந்த மாதிரி தோணிச்சு (முற்றிலும் வேறுப்பட்ட குரலில்) இந்தக் காட்டிக் கொடுத்தல் இன்னும் தொடர்ந்து கிட்டுத்தானிருக்கு.

சுஜாதா: இன்னுமா?

நந்தினி: இன்னும் (மௌனம்) அதுதான் மனசை உலுக்குது. காட்டி கொடுக்கறது. சிறையின் சுவர்கள் உயர்ந்துக்கிட்டே போவுது, புதுசு புதுசா கண்காணிப்பு கோபுரங்கள்! முளைச்சுக்கிட்டேயிருக்குது. இன்னும் நிறைய இளைஞர்கள் சிறையில் வாடிக்கிட்டிருக்காங்க. ஆனா தங்களோட ஆதாயங்களையே மனசில இருத்திக்கிட்டு, அரசியல் கட்சிகள் மத்திய அரசிடம் எதையும் கேட்காததும்... சில போராளிகள் இரக்கத்தை உண்டாக்க எதை வேணும்னாலும் செஞ்சிக்கிட்டு எங்க பேரையும் கெடுத்துக்கிட்டு... ஜனங்களுக்கும் வேண்டாதவர்களா எங்களை செஞ்சுக்கிட்டு, காட்டிக் கொடுத்தல்... ப்ரஸ், பேப்பர், இது எதுகிட்டேயும் நாங்க வாய் திறந்து சொல்லமுடியாது. எதையும் சொன்னாலும் ப்ரஸ் காதை இறுக்கமாய் அடைச்சுக்கும்... சில பத்திரிகைகள் எங்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும். அனுதாபப் படற மாதிரி வேஷம் போடும். காட்டிக் கொடுத்தல் எங்கள் மேல் இரக்கம் கொண்டு எழுதும் கட்டுரைகள் கூட திறமையுடன் நிச்சயமாக எங்களை வீரசாகசங்கள் புரிபவர்களாக சித்தரிக்கும். காட்டிக் கொடுத்தல் நாங்கள் கொல்லப்பட்டால் கூட எல்லா எழுத்தாளர்களும், வாராந்தரிகளும் பங்களாதேஷை பற்றி பிலாக்கணம் வைக்கும், மேற்கு வங்கத்தைப் பற்றி சொல்ல எதுவுமே இல்லை என்பது போல் அவர்களே இப்பொழுது எங்களைப்பற்றி ஒப்பாரிகளை எழுதிக் குவிக்கிறார்கள், ஜெயிலுக்குள்ளே.

சுஜாதா: ...இன்னுமா ?

நந்தினி: பின்னே? இவங்களைப் பத்தி எழுதாத பத்திரிகைகள் இல்லை. அவங்க எல்லாத்தியும் நிறுத்திட் டாங்கன்னு நெனைக்கறீங்களா? கைதுகள்? சித்ரவதைகள்? என்கவுண்டர் என்ற பேரில் கொலைகள்... பதினாறு வயதுலேந்து நாற்பது வயது வரை இதற்கிடையே உள்ள ஒரு தலைமுறையே அழிக்கப்பட்டு வருது.

சுஜாதா: என்கிட்டே சொல்லாதே! மனசு...

நந்தினி: நான் ப்ரதீயை நேசிச்சேன்!

சுஜாதா: தெரியும் எனக்கு (மௌனம்) இப்ப நீ நினைச்சுப் பார்க்கறப்ப ஒருத்தருக்கு வெற்றிடந்தான் தெரியும். ப்ரதீ என் வாழ்க்கையின் ஜீவன், ஆனா அவனை கொஞ்சந் தான் எனக்குத் தெரிஞ்சிருந்தது.

நந்தினி: எப்பவாவது முயற்சி செஞ்சீங்களா? தெரிஞ்சுக்க, முழுசா தெரிஞ்சுக்க.

சுஜாதா: இது முயற்சி செஞ்சு தெரிஞ்சுக்க வேண்டிய வரவா?

நந்தினி: சொந்தக்காரங்க, ரத்த சம்பந்தம், அதால அன்பும், பாசமும் பெருகிடுமுன்னு நினச்ச...அந்தக்காலம் எல்லாம் மலையேறிப் போயிடுச்சு... இந்த நாள்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொருத்தருக்கு அந்நியமா இருக்

காங்க. இதை இப்படியே இருக்கவிடறது மஹா பெரிய குற்றம். இப்பல்லாம் ஒரு மகனை ஒரு அப்பா புரிஞ்சுக்கறது, அவர் அவனுக்கு வழங்கற ஒரு சலுகையாப் போயிடுச்சு.

சுஜாதா: பெற்றோர்களுக்கு மட்டுந்தான் இதில் பொறுப்பு இருக்கா?

நந்தினி: (புன்முறுவல் செய்து) நீங்க முதல்ல ஒரு அடி எடுத்து வையுங்க. இளந்தலைமுறைக்கு உதாரணமா இருங்க. நீங்க நேர்மையோட இருங்க. நீங்க நேர்மையா இருக்கமாட்டீங்க. நீங்களாக உறவை பலப்படுத்த மாட்டீங்க. ஆனா, எங்க மேல பழியை மட்டும் தூக்கி போடுவீங்க.

சுஜாதா: நான் அப்படிச் சொல்லல.

நந்தினி: அப்ப நாம எங்கே தான் போயிக்கிட்டிருக்கோம்? ப்ரதீ ஒரு வகையான குடும்பத்திலிருந்து வந்தவன், அவனோட அப்பாவை அவன் மனசுல வெறுத்தான். சஞ்சயும், தீபாவும் ஸ்மரனு கட்டித்தட்டி போன ஒரு மேல் நடுத்தட்டு குடும்பத்திலிருந்து வந்தாங்க. சோமு, லால்ட்டூ, பிஜித் இவங்கள்ளாம் அரசியலே தெரியாத ஏழை அகதிகள் குடும்பத்திலேருந்து வந்தாங்க. மணி குஷாலோட குடும்பங்கள் இடது சாரி அரசியல்ல ஈடுபட்ட குடும்பங்கள். ஆனா, இவங்கள்லாம் ஒரு பொதுவான விஷயத்தைப் பகிர்ந்துகிட்டாங்க. அது குழந்தைகளும் பொற்றோர்களும் ஒருவருக்கொருவர் அந்நியர்களாகவே இருந்தாங்க... Stranger, under the same Root

சுஜாதா: ப்ரதீ என்னைப் பத்தி எதாவது பேசியிருக்கானா?

நந்தினி: உம்... பேசியிருக்கான்... ஜனவரி 16-ந் தேதி வரை வீட்டிலேயே இருந்தான், உங்க உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கணுமின்னு. இல்லாட்டி அவன் பதினஞ்சாம் தேதியே கிளம்பி களத்துக்கு வந்திருப்பான்.

சுஜாதா: (வெளிறிப்போய்) அப்ப போன்ல கூப்பிட்டது நீ தானா?

நந்தினி: ஆமாம். அநிந்தியா எங்களை காட்டிக் கொடுத்தது தெரியாம சோமுவும் சகாக்களும் அவங்க ஏரியாவுக்குப் போயிட்டாங்க. இந்த விஷயங்க தெரிஞ்சவுடனே ப்ரதீக்கு போன் பண்ணி சொல்லிட்டேன். ப்ரதீ இந்த நியூசை பிஜித்கிட்ட உடனே கூப்பிட்டு சொல்லியிருப்பான்னு நெனச்சேன். அதைத்தான் நான் எதிர்பார்த்தேன், இவனே கிளம்பிப் போவான்னு நெனைக்கல.

சுஜாதா: உனக்கு எப்பத் தெரியும் இதெல்லாம்?

நந்தினி: (அழகே இல்லாத புன்கையுடன்) அன்னைக்கு காலையிலேயே என்னை அரஸ்ட் பண்ணிட்டாங்க. அநிந்தியா மொத்தமா எங்க எல்லாரையும் காட்டிக் கொடுத்திட்டான். போலீஸ்கிட்டேயிருந்துதான் எனக்கு முதல் தகவலே கிடைச்சுது.

சுஜாதா: அப்புறம்?

நந்தினி: ஜெயில் சாலிட்டர் செல் மகா மோசமான சித்ரவதை (சுஜாதா நடுங்குகிறாள், நந்தினி திரும்பவும் அழுத்தமாக) ஆமாம் காட்டுமிராண்டித்தனமான, மிக மோசமான சித்ரவதை

சுஜாதா: நந்தினி!

நந்தினி: (கறுப்பு கண்ணாடியைக் கழற்றி மேசை மீது வைக்கிறாள். மேடையின் இந்தப்பகுதியில் ஒளி குறைகிறது) அவங்க விசாரணையை ஒரு இருட்டறையில் நடத்தினாங்க. பிறகு தன்னந்தனியாய் தனிமைச்சிறையில், அப்புறம் ஒரு நாள் வேற ஒரு ரூமுக்கு என்னை கூட்டிக்கிட்டுப் போனாங்க.

(மேடையில் இருள் குவிகிறது. சுஜாதா மேடையை விட்டு வெளியேறுகிறாள்)

காட்சி - 9

(மேடையில் அதே பகுதியில் ஒளி பரவுகிறது நந்தினி ஒரு நாற்காலியில், மற்றொரு நாற்காலியில் அமர்ந்திருக்கும் சரோஜ்பாலை நோக்கி கண்ணைப் பறிக்கும் அதீதமான ஒளி நந்தினியின் முகத்தில். காட்சி முழுவதும் நந்தினி அடிக்கடி உடம்பைத் தூக்கிக்கொள்ள முயற்சிக்கிறாள். நமக்கு நன்றாகத் தெரிகிறது அவளுடைய கால்களும் கைகளும் நாற்காலியில் கட்டப்பெற்றிருக்கின்றன)

சரோஜ்பால்: (ஓர் அறிக்கையிலிருந்து வாசிக்கிறது) அப்பா சூர்யகுமார் மத்ரா, அலிப்பூர் கோர்ட்டில் ஒரு வழக்கறிஞர், முகவரி 23/2/1A பாணி (P) கோலா(G) சந்து, காலிகட் (T1)

நந்தினி: ஆமாம்

சரோஜ்பால்: பிரெசிடென்சி காலேஜ்?

நந்தினி: உங்ககிட்டதான் எல்லா விவரங்களும் இருக்கே... அப்புறம் என்னைப்போட்டு ஏன்...?

சரோஜ்பால்: உன்னோட வகுப்பு நண்பர்களோட டிசம்பர் 12-ந் தேதி தீகாவிற்கு போனியா?

நந்தினி: ஆமாம்

சரோஜ்பால்: (கவர்ச்சியான புன்னகையோடு) ஆனால் நீ தீகாவிற்கு போகல. நீ பையன்களோடப் போயிட்ட. அந்த குருப்பில் வேற பெண்களே கிடையாது.

நந்தினி: அதில் இருந்தாங்க வேற பெண்ணுங்க.

சரோஜ்பால்: ஜாலியா இருக்க ஒரு கிரிமினல்கள் கும்பலோட தீகாவிற்குப் போன? உங்கப்பா இந்த News - ஐ கேட்டு மயக்கம் போட்டு விழுந்தாரு. ஆகக்கூடி நீ தீகாவில இருந்த?

நந்தினி: ஆமாம் இருந்தேன்.

சரோஜ்பால்: என்னோட ரிப்போர்ட்படி நீ டிரெய்ன்ல போயிருக்க.

நந்தினி: இல்ல.

சரோஜ்பால்: கரக்பூரிலிருந்து தீகாவிற்கு டிரெய்ன்ல போயிருக்க. நீ போய் சேரவேண்டிய இடம் Deola நீயும் மணியும் Deolaவில தங்கி Cardres - களுக்கு பயிற்சி கொடுக்கறதாக ஏற்பாடு. கல்லூரிகளுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நீயும், மணியும் போட்டி போட்டிருக்கீங்க. கிராமங்கள்ல கொரில்லாவுகளுக்கு பயிற்சி அளிக்க நீ முடிவு பண்ணின.

நந்தினி: இல்ல.

சரோஜ்பால்: உன்னை போலீஸ்ல தேடிக்கிட்டு இருக் காங்கன்னு சங்சயன் நியூஸ் தந்தப்ப நீ Deola வில பஸ்ஸில ஏறுவதற்காக இருந்த. அதனால நீ ஹைவேஸ்ல ஒரு பெரிய Truck- ஐ பிடிச்சு 12-ந் தேதியே திரும்பி வந்திட்ட.

நந்தினி: இல்ல.

சரோஜ்பால்: 12-ந்தேதியிலிருந்து அஞ்சு நாட்கள் நீ தீகாவிலியே இருந்திருந்தா எப்படி நீ 13 - ந் தேதி நீது பால் வீட்ல இருக்கமுடியும்?

நந்தினி: (புருவத்தை உயர்த்தி இவர்களை யார் காட்டி கொடுத்திருப்பார்கள் என யோசித்து) நான் அங்க போகல.

சரோஜ்பால்: எனக்கு நீதுவோட நண்பர்களைத் தெரியும்

சாமிரான், பிஜித் பார்த்தா...

நந்தினி: எனக்கு இவங்களைத் தெரியாது.

சரோஜ்பால்: ஆனா என்கிட்ட ஒரு தகவல் இருக்கு

(புன்னகைக்கிறான்) நீ இவங்களுக்கு ரொம்ப நெருக்க மானவன்னு... நீ சாமிரான் வீட்டுக்கு ஆயுதங்களை சேகரிச்சு எடுத்துக்கிட்டு வரப் போவே, அத பிஜித்துக்காக தயாரா வச்சிருப்பே, சஞ்சயனோட சேந்துக்கிட்டு போஸ்டர்லாம் எழுதுவ, தகவல்களைச் சுமந்துக்கிட்டு காலிகட்டிலேந்து ஜாதவ்பூருக்கு போவ. (வெட்டி, வெட்டி, சிறு இடைவெளிகளுடன்) பார்த்தாவோட சேந்துகிட்டு Pipe gun லாம் தயாரிக்க கத்துப்ப, ஆனா கேட்டா அவங்களைத் தெரியாதுன்னு சொல்லி அழிச்சாட்டியம் பண்ணுவே.

நந்தினி: (இறுதியில் உணர்ந்து) அநிந்தியா...

சரோஜ்பால்: ரைட் அநிந்தியா ரொம்ப நல்ல பையன். அவன் அவனோட நாட்டை அவனோட சமூகத்தை நேசிக்கிறான் (இடைவெளி) உன்னை இந்த கட்சிக்குள்ள இழுத்துவிட்டது யாரு?

நந்தினி: எதையும் நான் சொல்லமாட்டேன்.

சரோஜ்பால்: ரொம்ப நல்லது (அவளை உற்று நோக்கி) உன் பிடிவாதத்துக்காக உன்னைப் பெத்தவங்க நிறைய கஷ்டப்படப் போறாங்க. புரியுதா உனக்கு?

நந்தினி: நான் எதையும் சொல்லமாட்டேன்.

சரோஜ்பால்: இந்த அமளிதுமளியில எல்லாரும் உன்னை விட்டுட்டு கிளம்பிட்டாங்க, எங்களோட ஒத்துழைச்சிக் கிட்டிருக்காங்க இப்ப.

நந்தினி: நான் உன்னை நம்பல!

சரோஜ்பால்: ஏன்? அவங்கள விலைக்கு வாங்க முடியாதுன்னு நெனைக்கறியா.

நந்தினி: No.

சரோஜ்பால்: சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டு... பெரிய தலைவலியா போயிடுச்சு...

நந்தினி: No No நான் எதுவுமே சொல்லப்போறதில்ல.

சரோஜ்பால்: காலேஜில் பேச்சு போட்டியில அப்படியே கொட்டி முழங்குவியாமே...

நந்தினி: எதையும் காதில் வாங்கிக்க நான் தயாராய் இல்ல.

சரோஜ்பால்: (கோப வேகத்துடன்) அப்ப சரி இந்த போட்டோக்கள் பாரு...

நந்தினி: போட்டோக்களா?

சரோஜ்பால்: போலீஸ் சவக்கிடங்கிலேருந்து வந்திருக்கிற போட்டோங்க.

நந்தினி: இல்ல நான் அதைப் பார்க்கமாட்டேன் (முகத்தை திருப்பிக்கொள்கிறாள் எழுந்திருக்க முயற்சிக் கிறாள் முடியவில்லை)

சரோஜ்பால்: ஏன் சும்மா ஓரப் பார்வைதான் பார்த்து வையேன்.

நந்தினி: இல்ல நான் மாட்டேன். (ஒரு முறை போட்டோக்கள் பக்கம் பார்வையைத் திருப்புகிறாள்)

சரோஜ்பால்: (போட்டோவை அவள் முகத்திற்கு முன்னால் பிடித்து) இதைப்பாரு இது சோமு தத்தா ராய்.

நந்தினி: இல்ல, இது சோமு இல்ல.

சரோஜ்பால்: அப்புறம் பிஜித்குஹா அப்புறம் (ஒவ்வொரு போட்டோவாகக் காட்டுகிறான்) அப்புறம்...

நந்தினி: வேற யாரு? (அவள் அலறுகிறாள்)

சரோஜ்பால்: அப்புறம் ப்ரதீ சாட்டர்ஜி.

நந்தினி: No இது ப்ரதீ இல்ல (பலமாக அவள் முகத்தைத் திருப்புவதால், சரோஜ்பால் கட்டாயத்துடன் அந்த போட்டோவை அவள் கண்களுக்கு முன்னால் பிடிக்கிறான். இல்ல இது ப்ரதீ இல்ல, இல்ல இது ப்ரதீ இல்ல என்று நந்தினி திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருக்கிறாள்)

சரோஜ்பால்: (அதே குரலில்) உனக்கும் ப்ரதீ சாட் டர்ஜிக்கும் என்ன உறவு? உன் பிரண்டா? (அவளருகே நன்றாகக் குனிந்து சிகரெட்டைப் பற்றவைத்து எரியும் சிகரெட்டில் நந்தினியின் கன்னத்தில் சுடுகிறான், அவள் அலறுகிறாள்) உனக்கும் ப்ரதீ சாட்டர்ஜிக்கும் என்ன உறவு? அவன் உன் பிரண்டா (சிகரெட் புகையை அவன் அவள் மீது விடுகிறான். சிகரெட்டில் அவளது கன்னத்தில் சுடுகிறான் கேள்விகளும் பாணிகளும் தொடர்கின்றன)

(மேடை இருளடைகிறது. சரோஜ்பால் எழுந்து வெளியே கிளம்புகிறான். சுஜாதா உள்ளே நுழைந்து அவளுடைய நாற்காலியில் உட்கார்கிறாள் நந்தினி கறுப்பு கண்ணாடியை அணிந்து கொள்கிறாள்)

காட்சி - 10

(இந்தப் பகுதியில் மேடை ஒளி பெறுகிறது)

சுஜாதா: (அவளது குரல் நடுங்குகிறது) நந்தினி! நந்தினி!

நந்தினி: அதுதான் ஆரம்பம்!

சுஜாதா: ஆரம்பமா?

நந்தினி: நடந்ததை எல்லாம் உங்களுக்கு என்னால் சொல்லமுடியாது.(மௌனம்) தோலில் ஏற்பட்ட காயம் ஆறிடுச்சு ஆனா பழையபடி என்னால இருக்க முடியாது. (விரல்களால் அவளது முகத்தையும் மார்பகங்களையும் சுட்டிக் காட்டுகிறாள் )

சுஜாதா: (வாழ்வதில் இப்படி ஒரு பெருங்கொடுமை நந்தினிக்கு நடந்துள்ளது. ப்ரதீயின் மரணத்தை விட துக்ககரமானது என்பதை உணர்ந்து) ஆனா ப்ரதீ இப்ப இங்க இல்ல நந்தினி.

நந்தினி: அதற்காகச் சொல்லல (புன்னகைக்கிறாள்) சொல்ல வந்தது வேற. ஜெயில்ல காலத்தை கழிச்சுட்டு வந்தப்புறம் என்னை குறுக்கிடுற மனுஷன்லாம் போலீஸ்காரனா தெரியறான்.

சுஜாதா: நந்தினி!

நந்தினி: நாளாவட்டத்தில் நான் ப்ரதீயை மறந்திடுவேனான்னு ஆச்சரியப்பட்டுப் போறேன். இந்த மரணங்கள், இந்த ரத்தக்களரி எல்லாமே வீண்தானோன்னு ஆச்சரியமடையறேன். இந்த கைதுகள், கொலைகள், ரத்தம் சிந்தறது இதெல்லாம் இன்னும் தொடருதே ஒண்ணுக்குமில்லாம வெறும் வெட்டியான்னு அதிசயிச்சுப் போறேன்.

சுஜாதா: ஆனா இப்ப தான் எல்லாம் அமைதியா ஆயிடுச்சே நந்தினி.

நந்தினி: (அலறும் குரலில்) இல்ல! இல்ல! இல்ல!

எப்பவும் அமைதியாயிருந்தது இல்ல. எதுவும் அமைதி

யாயில்ல. எதுவும் மாறல. ஆயிரக்கணக்கான இளைஞர்கள்

ஜெயில்ல அழுது செத்துக்கிட்டிருக்காங்க, விசாரணை இல்லாம. அவங்களுக்கு அரசியல்ல ஒரு நியாயமான இடம் இல்ல, நிலைமை இப்படியிருக்க நீங்க சொல்றீங்க எல்லாம் அடங்கி ஓஞ்சு இயல்பான நிலைக்கு வந்திடுச்சுன்னு? நவநாகரிகமான சித்ரவதைகள் தொடர்ந்துகிட்டிருக்கு இன்னும் ரகசியமா! நீங்க சொல்றீங்க அமைதியாய் ஆயிடுச்சுன்னு? எல்லாம் அமைதியா... உங்க மண்டையிலதான் ஆயிடுச்சு.

சுஜாதா: (ப்ரதீயைப் பற்றிய சிந்தனைகளை அவள் எண்ணங்களிலிருந்து அழிக்கப்பட்டு நந்தினியின் மேல் அதீத கரிசனம் உண்டாகிவிட்டது!) அமைதியாயிடு நந்தினி.

நந்தினி: இப்படி சாணியா, களிமண்ணா நீங்க எப்படி இருக்கமுடியும்? நிறைய இளைஞர்களை கொன்னு வீசிட்டாங்க. நிறைய பேரை சிறைக்கு அனுப்பிட்டாங்க. நிலைமை இப்படி இருக்க, நீங்க சந்தோஷமா, வழவழா குழகுழா - ன்னு காலத்தை ஓட்டிக்கிட்டிருக்கீங்க? ‘லோகமே ஷேமமா இருக்கு, நாமும் சந்தோசமா காலத்தை கழிப்போம்ங்கற உங்களோட போக்கு என்னை பயமுறுத்துது. இந்த பூஜை, புனஸ்காரம், பாட்டுக் கச்சேரி, பரதநாட்டியம், திரைப்பட விழாக்கள், கவிஞர் சங்கமம் இது எல்லாத்திலயும் இந்த நிலைமை யில எப்படி உங்களால ஈடுபட முடியுது?

சுஜாதா: நீ இப்ப என்ன செய்யப்போறே?

நந்தினி: நானா? நான் பரோல்ல இருக்கேன். மெடிக்கல் ட்ரீட்மெண்ட்டுக்காக இல்லன்னா அவங்க என்னை வெளியில விட்டுருக்கமாட்டாங்க.

சுஜாதா: ட்ரீட்மென்ட்டா?

நந்தினி: (கண்ணாடியைக் கழற்றுகிறாள் கண்களை விரித்துக் காட்டுகிறாள். மீண்டும் கண்ணாடியை அணிகிறாள்) ஆயிரம் வாட்ஸ் லைட்டை அந்த போலீஸ்காரன் மணிக்கணக்காக என் மூஞ்சிக்கு முன்னால பிடிச்சிக்கிட்டிருந்தானா, அதிலே வலது கண்ணு குருடாயிடுச்சி. இடது கண்ணுல பார்வை ஏதோ கொஞ்ச நஞ்சம் ஒட்டிக்கிட்டிருக்கு.

சுஜாதா: நந்தினி!

நந்தினி: (புன்னகைக்கிறாள்) உங்களை என்னால் பார்க்க முடியாது. நீங்க என்கிட்டே ரொம்ப அன்பா இருக்கீங்க (தனக்குள்ளேயே) தனிமைச்சிறையில் இருந்து இருந்து கசாப்புக் கடை கத்தி மாதிரி மனசு கூரா ஆயிடுச்சி. உங்கள் பார்க்க முடியாட்டி கூட நீங்க என்ன நினைக்கிறீங்கன்றது எனக்கு தெரிஞ்சு போயிடும்.

சுஜாதா: ட்ரீட்மென்ட்டுக்கு அப்புறம்...?

நந்தினி: தெரியல எனக்கு (பளிச்சென்று புன்னகைக் கிறாள்) இந்த நேர்த்தியான வாழ்க்கைன்னு ஏதோ சொல்றாங்களே, அந்த வாழ்க்கையை வாழ என்னால முடியாது. ஒருநாள், நீங்க கேள்விப்படுவீங்க, என்னை மறுபடியும் அரெஸ்ட் பண்ணிட்டாங்கன்னு (கடிகாரம் ஆறு அடித்து ஓய்கிறது)

சுஜாதா: நான் கௌம்ப வேண்டிய நேரம்.

நந்தினி: ஆமாம் உங்க இளைய பொண்ணுக்கு இன்னிக்கு நிச்சயதார்த்தம், பார்ட்டி.

சுஜாதா: நான் போயிட்டு வர்றேன்.

நந்தினி: இல்ல (புன்னகையுடன்) போயிட்டு வர்றேன் இல்ல!

சுஜாதா: (மனமுடைந்து) இல்லியா?

நந்தினி: இல்லதான். என்னை வந்து பாக்கறதினால் உங்களுக்கு என்ன லாபம்? நீங்க உங்க கடந்தகாலத்தில் வாழுங்க. நான் என் நிகழ்காலத்தைப் பார்த்தாகணும். வருங்காலத்தைப் பத்தி சிந்திச்சாகணும்.

சுஜாதா: இனிமே நான் சோமுவோட அம்மாவையும் பாக்கபோகமாட்டேன். உன்னை பாக்கவும் வரமாட் டேன். ப்ரதீ இருக்கற இடங்களுக்கு நான் போக மாட்டேன். ப்ரதீயை முழுசா தெரிஞ்சிக்காததற்கு எனக்கு இதான் தண்டனை.

நந்தினி: (புன்னகைத்து) உங்களோட தனிமைச் சிறை... வாங்க, வழிகாட்டறேன்.

சுஜாதா: பரவாயில்ல. என் வழியைக் கண்டுபிடிச்சு நானே போய்க்கறேன்.

காட்சி - 11

திரை உயர்கிறது. மேசையின் ஒரு மூலை இருளில் இருக் கிறது. மற்ற இடங்கள் ஒளி வெள்ளத்தில் இருக்கிறது. மற்ற இடங்கள் ஒளிவெள்ளத்தில் உள்ளது. பார்ட்டி கனஜோராக நடந்து கொண்டிருக்கிறது. எல்லார் கை களிலும் மதுக்கோப்பைகள், சுஜாதா, பினி மற்றும் துலி இவர்களைத் தவிர.

மிஸஸ் கபாடியா: நான் ஸ்வாமிஜியைப் பார்த்த அந்த விநாடி, மை டியர், எனக்குள்ள பளீர்னு ஒரு ஒளி மின்னல்! நாங்க சான்பிரான்ஸிஸ்கோ ஏர்போர்ட்டில் சந்திச்சிக்கிட்டோம். அவரு - ஸ்வாமிஜி சொன்னாருமை டியர் டாட்டர்  என்னை மியாமில் மீட் பண்ணுன்னாரு கொஞ்சம் நெனைச்சுப்பாரு, நான் மியாமி பீச்சுக்குப் போகப்போறேன்னுட்டு இவருக்கு எப்படித் தெரியும்?

சுஜாதா: (குரல் டேப்ரெக்கார்டரில்) ப்ரதீ, ஒருநாள் முழுக்க உன் கூட கழிச்சிட்டேன், இப்ப நான் என் கடமைகளை மறந்திட்டு இருந்திட முடியாது... (உரக்க) நெஜந்தான், எப்படித் தெரியும்?

மிஸஸ் கபாடியா: அந்த விநாடியே ஸ்வாமிஜி என் குருவாயிட்டாரு... அமெரிக்கா கண்டெடுத்திருக்கு ஸ்வாமிஜியை, ஒரு காலத்தில் விவேகானந்தரை கண்டெடுத்த மாதிரி. இப்ப நம்ம இந்தியா ஸ்வாமியை ஈசியா அங்கீகரிச்சிடும். குருப்யோ நம (மிஸஸ் கபாடியா திவ்யநாத், திமானை நோக்கி நகர்கிறாள். பினி ஒரு தம்ளரில் தண்ணீருடன் சுஜாதாவிடம் வருகிறாள்)

பினி: ரொம்ப வலிக்குதாம்மா.

சுஜாதா: (சுகவீனமான குரலில்) இல்ல.

பினி: நானும் பாத்துக்கிட்டுதான் இருக்கேன்... ஐஸ் வாட்டர் குடிச்சே, பச்சைத் தண்ணில குளிச்சே... (சுஜாதா தம்ளரை மார்பிற்கு நேராகப் பிடிக்கிறாள். கண்களை மூடிக்கொள்கிறாள்)

சுஜாதா: (டேப்ரெகார்டரில் குரல்) ப்ரதீயின் கண்கள், கைவிரல்கள் தொட்டுப்பார்க்க சில்லுனு இருக்கும். இதைவிட சில்லுனு எதுவுமே இருக்க முடியாது. நான் ப்ரதீயோட நாள் முழுக்க இருந்தேன்...

திமான்: (வந்தபடி) மிஸஸ் கபாடியா எவ்வளவு அழகாப் பேசறாங்க! அவங்கள எனக்கு அறிமுகப்படுத்தறீங்களா?

சுஜாதா: , யெஸ், கண்டிப்பா... பினி, டோனியோட அம்மாவுக்கு இவரை அறிமுகப்படுத்து (பினி திமானோடு கிளம்பிச் செல்கிறாள், திருவாளர் கபாடியாவும், திருமதி. கபாடியாவும் வரும்பொழுது சுஜாதா மேடையின் ஒரு முனைக்கு வந்துவிடுகிறாள்)

திமான்: ஆமாம், இன்னைக்கு அவனோட பிறந்தநாள்!

மிஸஸ் கபாடியா: யாருதான் நெனைச்சிருப்பாங்க இந்த குடும்பத்திலிருந்து இப்படி ஒருத்தர்...

திமான்: பாவம் இந்த இளைஞனுக்கு யாரோ தப்பான வழியைக் காட்டியிருக்காங்க.

(அமித் - நீபாவின் கணவன் வருகிறான் )

அமீத்: (திமான் நெஞ்சில் விளையாட்டாகக் குத்தி, நாட்டீ! நாட்டீ! நாட்டீ! நம்ம புரட்சிக்கவிஞர் என்ன சொல்லிக்கிட்டிருக்காரு...?

மிஸஸ் கபாடியா: நீங்க கவிஞரா? வாவ், லவ்லி...

அமீத்: கவிஞரே தான். ப்ரதீக்கும் அவன் தலைமுறைக்கும் நினைவு அஞ்சலி எழுதற கவிஞர்.

மிஸஸ் கபாடியா: மார்வலெஸ்!

திமான்: (போலியான தன்னடக்கத்துடன் ) ஒருத்தர் வேற எதைப் பத்தியும் எழுத முடியுமா என்ன? (திமானும், கபாடியும் பேசிக்கொண்டே மேடையின் பின்பக்கம் செல்கிறார்கள். ஜோதியும், நீபாவும் வருகிறார்கள், குடிபோதையில்)

ஜோதி: ஜெயில்ல செத்துக்கிட்டிருக்கிற 20,000 மனுஷங்களைப் பத்தி எப்பவும் திமான் அழுவாச்சி கவிதைகள்தான் எழுதிக்கிட்டிருப்பாரு... நீபா... ஸ்டடியா இரு.

நீபா: (கண்கள் தானாகவே மூட ) எனக்கு... எனக்கு... எனக்குத் தெரியும்.

ஜோதி: ப்ரதீ இறந்தப்ப இவரு பங்களாதேஷ் பத்தி முனகிக்கிட்டும், சிணுங்கிக்கிட்டும் இருந்தாரு, இப்ப நிலைமை ஒரு கட்டுக்குள்ள வந்திட்டப்புறம் பன்னித் தொழுவத்தில உக்காந்துகிட்டு இவங்களைப்பத்தி நினைவாஞ்சலி எழுதிக்கிட்டிருக்காரு நீபா... careful... careful.

நீபா: எனக்கு... எனக்கு... எனக்குத் தெரியும்.

அமீத்: (நீபாவை நெருங்கி வந்து) என்ன தெரியும் உனக்கு?

நீபா: உன் ப்ரெண்ட்டைப் பத்திதானே? வார்த்தைகள் போண்டியான காலாவதி கவிஞர்! பணக்காரங்களுக்கு காவடி எடுத்து ஓசி சாராயம் குடிக்கற ஒட்டுண்ணி இந்த ஆளு, நீ பெருசா அவன பூதாகரமா காட்ற பெரிய புரட்சிக்கவிஞன்னு! என் தம்பி கொல்லப்பட்டப்ப இந்த கவிஞர் எங்க போயிருந்தாரு? புல்லு பிடுங்கவா?

அமீத்: நீ கூடத் தான் ப்ரதீயைப் பத்தி அவமானமா நெனைச்சே! நான் இல்ல.

நீபா: பொய்க்கொள்ளி - வாயை மூடு.

அமீத்: (கத்துகிறான்) நான் ஒரு நல்ல குடும்பத்திலேந்து வரேன். கிதிரிப்பூர் கங்கூலிகள். மூணு ரூபாய்க்கு முந்தான விரிக்கறவங்ககிட்டேருந்து எதுவும் நான் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமில்ல.

சுஜாதா: (அருகில் வந்து) அமீத்! நீபா! நிறுத்துங்க...

நீபா: உன்னைப் பார்க்க வேடிக்கையா இருக்கும்மா! நாங்க சண்டை போட்டுக்கிட்டா எவ்வளவு ஜாலியா இருக்கு தெரியுமா?

சுஜாதா: அதையெல்லாம் வீட்ல வச்சுக்கங்க! பப்ளிக்கா

வேண்டாம்! ப்ளீஸ்! (அமீத் ஏதோ சொல்ல நினைக்கிறான். திடீரென்று டோனியும், துலியும் நடனமாடத் துவங்குகிறார்கள். நீபாவும், ஜோதியும் அவர்களோடு சேர்ந்து கொள்கிறார்கள். கபாடியாக்கள், திவ்யநாத் மற்றும் திமான் முன்னால் வருகிறார்கள்)

மிஸஸ் கபாடியா: சின்னப்பையனோட மரணம் தந்த அதிர்ச்சியிலிருந்து மிஸஸ் சாட்டர்ஜியால மீளவே முடியல! தோணுது எனக்கு...

திவ்யநாத்: இல்ல! இல்ல!

மிஸஸ் கபாடியா: எப்படி உங்க பையன்..?

திவ்யநாத்: கெட்ட சகவாசம், Bad company மோசமான நண்பர்கள்... அம்மாவோட பாதிப்பு... Hundred percent.

மிஸஸ் கபாடியா: அம்மாவோட பாதிப்பா?

திவ்யநாத்: உங்களுக்குத் தெரியாது? நானும் பிரதீயும் எவ்வளவு நெருக்கமா இருந்தோம் தெரியுமா?

மிஸஸ் கபாடியா: தெரியும் எனக்கு துலி எங்ககிட்ட சொல்லியிருக்கா.

திவ்யநாத்: நாங்க குழந்தைங்க மாதிரி...

திமான்: உங்க மாதிரி ஒரு அப்பா இருக்கறப்ப, இது இயற்கைதானே.

திவ்யநாத்: அந்த நியூசைக் கேட்டப்ப என் இதயமே வெடிச்சுடுச்சு.

திமான்: வெடிக்காதா பின்னே?

மிஸஸ் கபாடியா: (திவ்யநாத்தின் கரங்களைப் பற்றி) வருத்தப்பட ஒண்ணுமே இல்ல. சுவாமிஜி சொல்றார். மரணம்னு ஒண்ணு இல்ல, இந்த உடம்புதான் சாகுது. ஆன்மாவுக்கு அழிவில்ல உன் உடம்புதான் மரணிக்கும்...

ஆன்மாக்கள் சுவர்க்கத்திலே சந்திச்சிக்கும், கை குலுக்கும்...

திவ்யநாத்: உண்மையாவா?

மிஸஸ் கபாடியா: நூற்றுக்கு நூறு உண்மை.

திவ்யநாத்: இனிமே சுவாமிஜி வழியில் நடக்கப்போறேன். நான் (சுஜாதாவிடம்) சுஜாதா, காதில் விழுந்திச்சா?

சுஜாதா: (அவள் இடத்திலிருந்து) என்ன?

திவ்யநாத்: புதுப்புது விஷயங்களா சொல்லிக்கிட்டிருக்காங்க...

சுஜாதா: நானும் கேட்டேன்!

மிஸஸ் கபாடியா: மிசஸ் சாட்டர்ஜி! கொஞ்சம் விஸ்கி சாப்பிடறீங்களா!

சுஜாதா: ழிஷீ, தாங்க்ஸ், நான் குடிக்கறதில்ல!

திவ்யநாத்: உடம்பு சரியில்லியா?

சுஜாதா: இல்லயே!

(இருளடைந்த மூலையை நோக்கி அவள் நகர்ந்து செல்லும்போது பினி அவளை நோக்கி கை அசைப்பதை பார்த்தபின், அவள் பினியை நோக்கி நகர்கிறாள்)

திவ்யநாத்: விநோதமான பொம்பளை! நாள் முழுக்க ஊர் சுத்திட்டு வருவா... நான் கேட்டா சொல்ல மாட்டா. நான் கேட்டா அவ சொல்றா. உங்க விஷயங்களைப் பத்தி கேக்க எப்ப எனக்கு உரிமையில்லையோ, அப்ப என் விஷயங்களைப் பத்தி கேக்க உங்களுக்கு உரிமையில்ல...

மிஸஸ் கபாடியா: அதிகமாத்தான் இருக்கு !

திவ்யநாத்: இப்படித்தான் மேடம் என் வாழ்க்கையே... இம்மி சந்தோஷம் கூட இல்லாம... (அவர்கள் பின்னால் செல்கிறார்கள், நடனமாடுபவர்களைப் பார்த்துக் கொண்டே பேசிக்கொண்டே)

சுஜாதா: என்ன சமாச்சாரம் பினி?

பினி: டோனியோட பிரண்டு ஒருத்தர் வெளியில நின்னுக்கிட்டிருக்காரு.

சுஜாதா: அவரை உள்ளே கூட்டிக்கிட்டு வாயேன்! (திடீரென்று அவள் தள்ளாடுகிறாள்)

பினி: அம்மா, உங்களுக்கு என்ன ஆயிடுச்சு?

சுஜாதா: அதான், அந்த வலி

பினி: அப்ப உக்காருங்களேன் கொஞ்சம்!

சுஜாதா: இல்ல நான் அவரை உள்ளே கூட்டிக்கிட்டு வரேன். (சுஜாதா கருமையான வட்டத்தைக் கடந்து சில அடிகள் எடுத்து வைக்கிறாள். அமுக்கப்பட்ட அலறல் ஒலியோடு பின்நோக்கி நகர்கிறாள். தொண்டையை கனைத்து அலறல் ஒளி வெளிப்படாமல் நிறுத்தி வைக்கிறாள். கண்களில் அவநம்பிக்கையின் கீற்றுகள். கருமையான வட்டம் ஒளிரத் துவங்குகிறது, சரோஜ்பால் காலடி எடுத்து வைக்கும் பொழுது,சரோஜ்பால் DCDD (டெபுடி கமிஷனர் டிடெக்டிவ் டிபார்ட்மெண்ட் என்ற பாட்ஜை அணிந்திருக்கிறான்).

சரோஜ்பால்: (டேப்ரெக்கார்டரில் குரல்) எனக்கும் அம்மா இருக்காங்க... No... உங்க பையன் தீகா போகவே இல்ல... நோ இதையெல்லாம் நாங்க வீட்டில் விட்டு வைக்கமாட்டோம்... உங்க பையன் செஞ்சது மன்னிக்க முடியாதது... No... உங்களுக்கு பிரேதம் கிடைக்காது... NO... பிரேதம் கிடைக்காது...

(டேப்ரெகார்டரில் குரல் தேய்கிறது, சுஜாதாவும் சரோஜ்பாலும் நேருக்கு நேர் அமைதி)

பினி: (வந்தபடி) உள்ளே வரமாட்டீங்களா?

சரோஜ்பால்: இல்ல, நான் டூட்டியில் இருக்கேன். பரான்நகர்... Total Elimination Action நடந்துக்கிட்

டிருக்கு (சுஜாதாவை ஒரு முறைப் பார்க்கிறான். அவனுடைய குரல் டேப்ரிகார்டரில் வருகிறது) 1084ன் அம்மா... ப்ரதீ சாட்டர்ஜியின் அம்மா ... அவளை நேருக்கு நேரா பார்க்க வேண்டி வரும்னு எனக்குத் தெரியும்... அதுக்காகத்தான் வரவேண்டாம்னு பார்த் தேன் (டேப்ரிகார்டரில் குரல் ஓய்கிறது) டோனிக்கும் துலிக்கும் என் வாழ்த்துக்களை சொல்லு. (சரோஜ்பால் வெளியேறுகிறான். வெளியே வான் கிளம்பும் ஒலி, சைரன் ஒலி பினி நடனமாடும் ஜோடிகளோடுச் சேர்ந்துகொள்கிறாள். ஜோதி அவளை நடனமாட அழைத்துக்கொள்கிறான்)

சுஜாதா: இன்னும் டியூட்டியில் இருக்கானா இவன்? பாரன் நகர்லே Total Elimination Action...ஆ?

(நடனமாடுபவர்களை நோக்கித் திரும்புகிறாள். சுழன்றாடும் நடன அசைவுகளில் அவர்களில் மூழ்கியிருக் கிறார்கள்)

இன்றும் அதே Blackmania துப்பாக்கி! இன்றும், ஹெல்மெட் அணியாத போலீஸ்காரர்கள் வேனுக்குள்! இன்றைக்கு எங்கே உங்கள் வேட்டை துவங்கப்போகிறது? எங்கே இந்த அபாய சங்கு, ‘வீல் வீல்’ என்று அலறப்போகிறது?

இன்றைக்கு எந்த வீதிகளில்தடக் தடக் என பூட்சுகள் பேரொலி எழுப்பப்போகின்றன? எங்கே காற்றைக் கிழித்துக்கொண்டு புல்லட்டுகள் புறப்படப்போகின்றன? எங்கே - மறுபடியும்? ப்ரதீயால் எங்கே ஓடிப்போக முடியும்? எங்கே (பார்வையாளர்களை நோக்கி) நீங்கள் ஏன் பேசக்கூடாது. பேசுங்க. அந்த ஆண்டவனுக்கு புண்ணியமாப் போகட்டும் பேசுங்க, பேசுங்க, பேசுங்க! எத்தன காலம் இதை அமைதியாப் பொறுத்துக்கிட்டிருப்பீங்க? கொலைகாரன் இல்லாத, தோட்டாக்கள் இல்லாத, சிறைகள் இல்லாத, போலீஸ் வேன்கள் இல்லாத இடம் எங்கே இருக்கு?

(மேடையைச் சுற்றி வருகிறாள்.)

இவற்றிலேந்து நீ எப்படி தப்பிச்சு போவே பிரதீ? இந்த கல்கத்தாவிலே, இந்த மேற்கு வங்காளத்தில், தெற்கு வடக்காக... கிழக்கு மேற்காக... உன்னால ஓடிக்கிட்டே இருக்க முடியாதே!

ப்ரதீ! திரும்பி வந்திடு! இன்னைக்கு உன்னை கண்டுபிடிச்சிட்டேன் ப்ரதீ! திரும்பவும் அபாயச் சங்கு அலறிச்சுன்னா, திரும்பவும் போலீஸ் வேன்கள் ரேசாக ஓடினால், திரும்பவும் எங்கியாவது இந்த சரோஜ்பால் துரத்த ஆரம்பித்தால், நீ மறுபடியும் காணாமல் போயிடுவே!

(பார்வையாளரை, நடனமாடுபவர்களை விரல் நீட்டிக் காட்டி) சவங்கள், விரைத்துப்போன சவங்கள், நீங்க எல்லோருமே (தன்னையும் காட்டி) நானுந்தான். சவங்களை யாரோ ஆட்டுவிக்கிறார்கள்! அழுகிப்போன சவங்கள்! எல்லாம் - இந்த தீமான், அமித், திவ்யநாத், மிஸ்டர் கபாடியா, துலி, டோனி - இந்த சவங்கள் தங்கள் அழுகிப்போன இருப்பின் பலத்தில், குழந்தையின் அழுகை ஒலியை, கவிதைகளை, ஓவியங்களை, சிவப்பு ரோஜாக்களை, பசும்புல்லை, நியான் விளக்கொளியை எல்லாவற்றையும் நெடுங்காலம் அனுபவித்துக்கொண்டு இருக்கட்டும் என்றுதான் ப்ரதீ இறந்தானா? இதற்காகத் தான் உலகத்தை இந்த சவங்களிடம் ஒப்படைத்தானா? ஒருபோதும் இல்லை. No இல்லவே இல்லை!

(நடனமாடுபவர்கள் நடனமாடுவதை நிறுத்திவிட்டு பின் மேடையில் அசையாமல் வரிசையாக, திவ்யநாத், கபாடியாக்கள் ஆகியோரோடு) என்னுடைய இந்த இல்லை என்ற சொல் இந்த நகரத்தின் இதயத்தை கிழிக்கட்டும், அது ஆகாயத்தை நோக்கி எழட்டும். காற்றில் கலந்து இந்த மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவட்டும். என்னுடைய இந்த அலறல் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாவற்றையும் விதிர்விதிர்க்கச் செய்யட்டும்.

தங்களுடைய சுகம் ஒன்றில் மட்டும் திளைத்துக்கிடக்கும் ஒவ்வொருத்தரின் சுகத்தையும் இது கிழித்தெறியட்டும் (மௌனம்) ப்ரதீ!

(அவள் கீழே சாய்கிறாள் இடைவெளி... மற்றவர்கள் உறைந்ததிலிருந்து விடுபட்டு அவளை நோக்கி ஓடிவருகிறார்கள்)

திவ்யநாத்: (கத்துகிறார்) அப்பென்டிஸ்... அப்பென்டிஸ்... வெடிச்சிடுச்சு...

(திரை)

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2019 Designed By Digital Voicer