நிறைய நேரங்களில் ச்சும்மா சிவனேயென்றுதானே தொங்குகிறது உருண்டு பொரளட்டுமேயென ஆரம்பித்தது எனது ஒரு கையை எனது இன்னொரு கையோடு மோத வைக்கும் இந்தச் சொகம் எப்படியோ தொடங்கி விடுவேனா என்கிறது இது தொல்லையைப் பிடித்துத் தோளில் போட்ட கதைதான் இன்றைக்கும் ஆரம்பித்துவிட்டது பிடித்துப் பிதுக்காமல் என்னை விடாது கண் மூடி கண் திறப்பதற்குள்ளாக வேலையைக் காட்ட கொலம்பஸ் ராட்டினத்தின் ஒரு சைடு தூக்குமே அப்படியே மெது மெதுவாக வலது தூக்கியது வலது சரியச் சரிய அதே ஏத்தத்திற்கு இந்தப் பக்கம் இடது தூக்கியது பாம்பு கிடக்குமே அது போல கிடந்து திடீரென முடிச்சு போல குழம்பியது எந்நேரமும் இரண்டும் சரி மல்லுக்கு நின்று என் மண்டைக்குள் தான் எப்பொழுதும் கொழ கொழவென்ற சத்தம் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் அனைவருக்கும் பற்பசை விளம்பரத்தில் நடிப்பவருக்கு வாயில் ஒரு மினுக் வந்து போகுமே அந்த மினுக் வந்து மறைந்தது ஆளுக்கொரு மடச்சாம்பிராணியை வாயில் ஏந்திப் பிடித்திருந்தனர் கண்டும் காணாது இருந்தவாறு வேலையில் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்த கைகள் உஆ உஆ யென என் வாயையுமே சேர்த்து வாடகைக்கு எடுத்திருந்ததால் அங்கு சுவாரசியத்திற்கெல்லாம் ஒரு சுணக்கமுமில்லை அம்மா உளையுதே அய்யா வலி உசிர் போகுதேயென்ற இரவுகளில்தான் கையிருந்த ஏரியா வழி ஒன்று கசிய சொகத்தின் விளிம்பாகையால் அப்படித்தான் வழுக்குமென மனச்சொஸ்தம் வந்து யாரும் பார்க்காத நேரம் அதையும் எம்சீல் பூசி அடைத்தது காலம் ரொம்ப கடந்துவிட்டபிறகு எனது கைகளை இன்று கவனிக்கிறேன் வேறு இரண்டு பேருடையதை ஒட்டி வைத்தாற் போலயிருந்தன சொல்லாத வேறு எதையோ மும்முரமாகச் செய்துகொண்டிருந்தன அதற்காக எல்லாம் யாரும் இந்த மடச்சாம்பிராணியை நடு ஹாலில் வைத்துப் பவுடர் அடிப்பதை நிறுத்திவிடவேண்டாம் அதது அது பாட்டுக்கு நடக்கட்டும் எல்லாருக்குமிருப்பது இரண்டு கைகள் தான் என்றாலும் எனக்கு மட்டுமேயது எண்ணிக்கைச் சுத்த இரண்டு இந்தப் பக்கம் ஒன்று அந்தப் பக்கம் இன்னொன்று ஈஈஈஈஈஈஈஈஈஈ...யென நானுமே கும்பலோடு கும்பலாக வந்து கும்மியடிச்சால் போச்சு.