தரிசனம்
நியாயமாக
உன்னை நீ கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரே கேள்வி இதுதான்
உனக்கும் பூச்சிக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது
காஃப்காவின் தரிசனத்துக்குப் பின்
பல பத்தாண்டுகள் போய்விட்டன
இன்று எல்லா வீட்டிலும்
எல்லோரும் பூச்சிகள்
எல்லா வீடுகளும் உயிர்பெற்ற பூச்சிக்கூட்டம்
பிறந்தவுடன் நடந்துவிடுகிறது உருமாற்றம்
உடனே தொடங்கிவிடுகிறது அதன் அரித்தல்
பிற பூச்சிகளிலிருந்து வானம் வரைக்கும்
முடியும்வரை
பெரிய பூச்சிகள் சின்னப் பூச்சிகள்
அப்பா பூச்சிகள் குழந்தை பூச்சிகள்
கல்லூரி பூச்சிகள் ஆஸ்பத்திரி பூச்சிகள்
மிகப் பிரமாண்டமான அரசாங்க விஷப் பூச்சி
அதன் வயிற்றுக்குள் கோடிப் பூச்சிகள்
நீயும் ஒரு சின்னப் பூச்சிதான்
ஊர்ந்து செல்லவில்லை
பறக்கவில்லை என்பதால்
இல்லை என்றாகிவிடாது
ஒரு பூச்சி என்றைக்குத்
தானொரு பூச்சி என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறது.
நவம்பர்
சாத்தானின் ஆன்மா உறைந்து போய்விட்டது
வகுப்பறையிலிருந்து அலுவலகத்துக்கு நூறு அடிகள்
சாவின் போர்வை போல
வெள்ளை நிலத்தில்
சில தலைகள் நட்டுவைக்கப்பட்டிருக்கின்றன
கண்களாலேயே புத்தகங்களை அவை புரட்டுகின்றன
அடுத்த வாரம் செமஸ்டர் தேர்வுகள்
அவற்றுக்கும்
வாழ்க்கைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை
அவள் தன் குதிகால்களை கவனமாகப் பதித்து
நடக்கிறாள்
சறுக்கிவிடாதபடிக்கு
அவளுக்கும் இந்த நிலத்துக்கும்
எந்தச் சம்பந்தமுமில்லை
துருவப்பனி வேக வேகமாக
ஓடி வருகிறது கடலுக்கு
யாரோ ஒருவர்
அவசர அவசரமாக ஸ்டாப் என்கிறார்
துருவப்பனிக்கும் கீழ்ப்படிதலுக்கும்
எந்தச் சம்பந்தமுமில்லை
அவள் ஜன்னல் வழியே பார்க்கிறாள்
பார்க்க ஒன்றுமில்லை
கடவுளின் அருட்கைகள்
ஆளில்லா ரயில்வே கேட்களில்
உயர்ந்து தாழப் பழகிக்கொள்கின்றன.
இளம் கவிஞர்களுக்கு
ஊரில் மிச்ச மீதி மரம் இருந்தால்
அதில் உங்களைக் கட்டிவைத்து அடித்தால்கூட
உறுதியாக நிற்கவேண்டும்.
‘கவிதையை எப்படி வேண்டுமானாலும் எழுதுவோம்.
வெற்றுத்தாளை மேம்படுத்தினால் போதும்
என்கிறான் மகாகவி பர்ரா’
இந்நாள் வரை
கவிதையை கவிதையைவிட
தைரியமே காப்பாற்றியிருக்கிறது
வரலாற்றில்
கடக்க ஒரு மரப் பாலமும்
பேச சில மண்டையோடுகளும் இருந்தால்
போதாதா?...
எல்லோருடைய நாட்களும் ஒன்றல்ல
பார்த்திருப்போம்
அவமானத்திலிருந்து தொடங்கும் பலருடைய நாட்கள்
அவமானத்திலேயே முடிகின்றன
சந்தேகத்தின் முன்னால் தூக்கம் கலைந்து
அதன் முன்னால் தூங்கச் செல்பவர்கள் உண்டு
சூரிய உதயம் அஸ்தமனம் எல்லாம்
வெகு சிலருக்கானவை
பாதுகாப்பாக இருப்பவர்களுக்கு
‘மனதிலிருந்து கூப்பிட்டாலும்’
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர ஆட்கள் இருப்பவர்களுக்கு
வசதிகள் இருப்பவர்களுக்கு
குடும்பத்தில் நம்பிக்கை என்பது ஒரு வசதி
சூரியனின் காலை, மாலைக் காட்சிகளை
குடும்பமாக
பெரும்பாலும் தவறாமல் கண்டுவிடலாம்
மற்றபடி
சாட்டையை எப்படிச் சொடுக்கினாலும்
உன் குதிரை
அந்தியில் வந்து நிற்கப்போவதேயில்லை.