அதிகாரம் நோக்கி உண்மையைப் பேசுகின்ற, வரலாற்றை மறுவாசிப்பு செய்து அதிகாரத்தின் மொழியைக் கட்டுடைக்கின்ற கலக மொழியாடல்களால் விடுதலையை முன்னிறுத்துகின்றன விளிம்பு நிலை இலக்கியங்கள். இவை ‘தலித்திய’, ‘பெண்ணிய’இலக்கியங்கள் என்ற சட்டகத்துள் இருத்தி வாசிக்கப்படுகின்றன. சாதிக் காலனிய, பார்ப்பனிய ஏகாதிபத்திய அதிகாரத்திற்கு எதிரான விடுதலை அரசியலை உள்ளடக்கிய தலித்தியமும் காலனியாதிக்கப் பண்போடு ஒத்த பண்பு கொண்டதான ஆணாதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான அரசியலை முன்வைக்கும் பெண்ணியமும் இன்றைக்குப் பின்னைக்காலனியக் கோட்பாட்டுப் பின்புலத்தில் வாசிக்கப்படும் சூழலில் ‘பெண்ணியக்கவிதைகள்’ என்ற அடையாளத்துடன் வெளியிடப்பட்டிருக்கும் (ப.24-ல் படைப்பாளி பெண்ணியத்தை முன்வைத்து எழுதப்பட்ட இக்கவிதைகள் எனக் குறிப்பிடுகிறார்.) ‘பால்(ழ்) முரண்’ என்ற கனலி விஜயலட்சுமி - யின் கவிதைப் பிரதி நிகழ்த்தும் பெண்ணிய அரசியல் கவனத்திற்குரியது. ஒரு வகையில், பிரதி மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்தச் சட்டகப் புரிதல் பிரதியின் பன்முகத்தன்மையைச் சீர்குழைப்பதாக இருப்பதனை உணர்ந்துகொள்ளமுடியும். அதாவது, வாசகன் தனக்கான பிரதியாக வாசிக்க அனுமதிக்காமல் படைப்பாளரின் பெண்ணியக் கவிதைகளாகத்தான் வாசிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு படைப்பு மன அதிகாரத்தை வெளிப்படுத்துவதாக இருப்பதனை மறுப்பதற்கில்லை. இது ஒருவகையில் அதிகாரத்திற்கு எதிரான அதிகார அரசியல் என எடுத்துக்கொள்ளவும் இடம் தருகிறது.
படிநிலைச் சமூக அமைப்பில் எவ்வகைப்பட்ட முரண்களைக் காட்டிலும் ஓர் உலகளாவிய பொதுமை உடையது பாலினம் சார்ந்த ஆணாதிக்க ஒடுக்குமுறை வரலாறு. இந்த வரலாற்றில் உறைந்து கெட்டித்தட்டிப் போயுள்ள மொழி, பண்பாடு, சமூக அமைப்பு ஆகிய அடிப்படைத்தளங்கள்மீது கலக மொழிகளால் அதிர்வுகளை உண்டாக்கச் செய்கின்றன பால் (ழ்) முரண் கவிதைகள். பாலிய வேறுபாட்டினடிப்படையாகக் கட்டமைக்கப்பட்ட இந்தச் சமூகம் பாழ்பட்டுக் கிடக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதாய் அமைந்துள்ளது தலைப்பு.
மனித சமுதாய வரலாற்றில் ஆணாதிக்க வழிப்பட்ட சமய அரசியல்களால் முழுமையாகப் பீடிக்கப்பட்டு சுய அடையாளங்களை அனைத்து வகைகளிலும் தொலைத்துவிட்ட பெண் சமூகத்தின் வலியை, அவ்வடையாளங்களை மீட்டெடுக்க, மறுஉற்பத்தி செய்ய வேண்டிய உடனடித் தேவையை ‘ஆதித்தாய்’ என்ற முதல் கவிதையில் படைப்பாளி பேசுபொருளாக்குகிறார்.
காலக் கண்ணாடிக்குள் கடந்து சென்று தேடத்தொடங்கினேன். என் ஆதித்தாயை... ... வலிமையின் வடிவமாம் ஆதித்தாயின் அங்கம் கண்டு அங்காப்போடு அருகில் சென்றேன் பொம்மை என்று எண்ணி அள்ளி எடுத்தாள் பெண்மை என்றறிந்து பெயர்ந்து நின்றாள் பூஞ்சையாய்... பொருளாய்... போனதன் சதி கேட்டாள் காமத்தின் கண்டுபிடிப்பும் கருவியாய்ப் பெண் உடலமைப்பும் ஆனதன் கதை சொன்னேன் வாரி எடுத்து வாஞ்சையுடன் தோளிலிட்டு உருக்கி எடுத்து புடமிட்டு எனக்கு உருவம் கொடுக்க அழைத்துப் போனாள் ஆதிகாலத்திற்கு. (ப.30)
ஆணாதிக்கப் பண்பாட்டில் பெண் மீது குவியப்படுத்தியிருக்கும் காமம் முதலான கருத்துருவப் பண்பட்டுக் கூறுகளை உடைத்தெறியும் ஆயுதமாகத் தாய்வழிச் சமூகப் பண்பாட்டினை இக்கவிதை முன் வைக்கிறது. தாய்வழிச் சமூகப் பண்பாட்டை பெண் தனது வலிமையின் மையப்பகுதியாக அடையாளம் காண்கிறாள். ஆணாதிக்கச் சமூகம் திணித்துள்ள ‘மென்மை’ முதலான மெய்ப்பாட்டு அழகியல்களை மறுதலித்து, வலிமையின் அடையாளமாக இருந்த பெண் உடலை மீட்டுருவாக்கம் செய்கிறாள். தந்தையதிகாரச் சமூகத்தின் கருத்தியல் அதிகாரங்களான கற்பு, தீண்டாமை உள்ளிட்டவற்றாலும் ஆணின் காம உணர்வினைத் தீர்த்துக் கொள்வதற்கான கருவியாகவும் பார்க்கப்பட்ட ஆண்களுக்கான நுகர்வுப்பண்டங்களாகப் பெண் உடல்கள் உருவாக்கம் செய்யப்பட்டதன் தன்மையைக் கவிதை விவாதிக்கிறது. கீழைத்தேயச் சமூகங்கள் காலனிய அதிகாரங்களால் திணிக்கப்பட்ட அடையாளங்களை, சிந்தனைகளை காலனிய நீக்கம் செய்து தனக்கான சுய பண்பாட்டையும் அடையாளங்களையும் முன்னிறுத்திச் செயல்படும் இன்றைய பின்னைக்காலனியச் சூழலில் படைப்பாளரின் ஆதித்தாயை மீட்டெடுக்கும் இந்த அடையாள மீட்டுருவாக்கக் கவிதையில் பெண் விடுதலைக்கான பின்னைக்காலனிய அரசியல் வினையாற்றுவதாக இருக்கிறது. மீண்டும் உடல், மன வலிமை நிறைந்த ஆதித்தாயின் ஆதிகாலத்திற்குச் செல்லும் படைப்பாளரின் இச்சிந்தனை ஆணாதிக்கச் சமூகத்திற்கான நுகர்வுப்பண்டங்களாக, நகல்களாக மாறிப்போன பெண் சமூகத்தின் மனவெளியைக் காலனிய நீக்கம் செய்து பெண்விடுதலைக்கான கலகம் செய்தலாய் அமைந்துள்ளது.
தாய்வழிச்சமூகம் தழைகீழாக்கப்பட்டு, தந்தைத் தலைமைச் சமூகமாக உருமாற்றப்பட்ட பின்பு, பெண் மீது நிகழ்த்தப்பட்டுவரும் தொடர் ஒடுக்குமுறைகளை (உடல், மனம் சார்ந்து), அவ்வொடுக்குமுறைமைகளின் போலித்தனங்களை தம் மீது சுமத்தப்பட்ட வரையறைகளைச் சிதைத்துக் கலகம் செய்வதாக இயக்கம் பெறுகிறது இப்பிரதி. நல்லது x கெட்டது, உண்மை x பொய், கருப்பு x வெள்ளை, புனிதம் x தீட்டு, மேல் x கீழ் போன்ற இணைமுரண்களால் தொடர்ந்து இயக்கம் பெற்றுவரும் இவ்வுலக நியதியில் ஆண், பெண் என்ற பாலியம் முரணாகிப்போனதை பேசுபொருளாக்கியுள்ளது. ஆண் முதல்நிலையில் செங்குத்துத் தளத்தில் இருந்துகொண்டு பெண்னை இரண்டாம் நிலையில் கிடைக்கோட்டுத் தளத்தில் இருத்தித் தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு உட்படுத்தி வதைத்துறு மோகத்தில் திளைத்துக்கொண்டிருப்பதை இப்பிரதி சுட்டிக்காட்டுகிறது. ஆண்மையச் சமூகம் பெண் சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடும் ஆதிக்க, அதிகார வடிவங்களைப் பேசுபொருளாக்கி,
முரண்கள் கூட இணைந்து
நடந்தன
பால்(ழ்) முரண் மட்டும்
பகையாய்த் தொடர்ந்தது. (ப.54)
என்று அதன் தீவிரத்தன்மையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இந்தியச் சமூக அறங்களின் பெண் மீதான சொல்லாடல்கள் எல்லாமே ஆணாதிக்கத் தளத்தில் இருந்துகொண்டு மொழியாடியுள்ளன. அம்மொழியாடல்கள் வழி உருவாக்கப்பட்ட பொதுப்புத்திக் கற்பிதங்களால் நிர்மாணிக்கப்பட்ட பெண் அடையாளங்களை மறுவாசிப்புக்குட்படுத்திக் கலகம் செய்து கலைத்துப்போடுகிறது பால்(ழ்) முரண் கவிதைகள்.
சமய நிறுவனங்கள் எல்லாமே ஆணை முன்னிறுத்தி ஆண் அதிகாரத்தைத் தற்காத்துக்கொள்ளும் பொருட்டே நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளதால் சமய அதிகாரங்களின் கருத்தியல் உருவாக்கங்கள் ஆண் மொழியிலேயே உருவாக்கம் பெற்றுள்ளன. ஆக, கருத்தியலைக் கட்டமைத்த ஆணிய மொழியை முதலில் கட்டுடைத்து பெண் மொழியை முன்னிறுத்திக் கலகம் செய்கிறது பெண்ணியம். மொழி மூலமாக நிகழ்த்திக் காட்டப்படும் இக்கலகத்திற்குக் கலைத்தன்மையை ‘தொன்மங்கள்’ மூலமாக படைப்பாளர்கள் முன்வைக்கிறார்கள். இதனை, “ஓர் இலக்கியத்தில் தொன்மக்கூறு சிறப்பாக அமைந்துவிடின் அதன் கலைத்தன்மை குறைவுடையதாக இருப்பினும் கற்போரை அது, பற்றி ஈர்க்கக் கூடிய ஆற்றல் பெறும்” (2005, ப.10) என்று யுங் கூறுவதாக டாக்டர் பா.மருதநாயகம் முன்வைக்கும் கருத்தியல் தெளிவுபடுத்துவதாக இருக்கிறது.
ஆரிய நிலவுடைமைச் சமூக, ஆண்மையக் காலனியாதிக்கக் கருத்தாக்கங்களின் அனைத்துக்கனைகளும் சிறிதும் தயக்கமின்றி குத்திக் கிழிக்கும் பெண் உடலின் உணர்வுகளின் வலிகளை உரக்கப்பேசுகிறது இப்பிரதி. புனிதம் x தீட்டு என்ற போலித்தனத்தால் பெண் உணர்வுகளின் மீது அதிகார மேலாண்மை செய்கிற ஆணாதிக்க அதிகார வடிவங்களை உடைத்து நொறுக்கி அதன் குரல்வலையை நசுக்குகிறது. பால்பேதமற்ற மனித சமத்துவத்துக்கான குரலை உயர்த்திப்பிடிக்கவும் விளிம்பை மையம் நோக்கி நகர்த்தவும் எத்தனிக்கிறது படைப்பாளியின் பால்(ழ்) முரண் கவிதைகள்.
பெண் சமூகத்தின்மீது ஆணாதிக்கச் சமூகம் நேரடியாகக் கட்டவிழ்த்துவிடும் உடல் சார்ந்த ஒடுக்குமுறை வடிவங்களை, பாலியல் சுரண்டல்களை, உழைப்புச் சுரண்டல்களை மட்டுமின்றி, கருத்தியல் காலனியாதிக்க வடிவங்களாகிய கற்பு, தீண்டாமை, தீட்டு ஆகிய கலாச்சாரக் காலனியாதிக்க வடிவங்களின் ஆதிக்கக் கற்பிதங்களையும் தனது கவிதைகளால் பகடி செய்து பெண் விடுதலைக்கான கலகக்குரல்களை முன்வைக்கிறார் படைப்பாளி.
வரலாறு நெடிகிலும் ஆண்களின் விருப்பப் பார்வைகளுக்கு ஏற்பவே பெண் தன் உடலையும் உணர்வுகளையும் கட்டமைத்துக்கொண்டு சுய அடையாளமற்றவளாய் சுய உணர்வுகளற்ற பொம்மை உடல்களாய், ஆண் பசிக்கு ஏற்ற பழங்களாய்த் தங்கள் உடல்களைக் கட்டமைத்துப் புசிக்கக் கொடுக்கும் இயந்திர உற்பத்தி உடல்களாய் பெண் சமூகம் இருத்தப்பட்டுள்ளமையையும் அத்தகைய அதிகாரத் திணிப்புக்கு எதிரான கலகக் குரலையும் படைப்பாளி, ‘கைக்குள் ஒரு கனல்’ (ப.71), ‘படைப்பு’ (ப.41) ஆகிய கவிதைகளில் பதிவு செய்துள்ளார். இக்கவிதைகள் மில்லத்தின் ‘பாலுணர்வு அரசியல்’ என்ற பெண்ணியல் விமர்சனக் கருத்தாக்கத்தின் பின்புலத்தில் இருத்தி வாசிக்கத்தக்கது.
ஆணாதிக்கத்தின் மையங்களாக நிறுவனமயப்பட்ட சமயங்கள் பெண் சமூகத்தின்மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள ஏகாதிபத்திய, பாசிசக் கருத்தியல்கள் மொழி என்னும் வல்லாதிக்கக் கருவியினூடே இரண்டறக்கலந்து ஆண் மொழியாகப் பரிணமித்து பெண்ணை மொழியற்றவளாகச் செய்துள்ளது. சிதிலமாக்கப்பட்ட பெண் அடையாளங்களை மீட்க மொழியை மறுகட்டமைப்புச் செய்ய முற்படும் பெண்ணியவாதிகள் ஆண்மொழியைக் காயடிப்புச் செய்யவேண்டிய உடனடித் தேவையை உணர்ந்து செயல்படுகின்றனர்.
இருமை எதிர்வுகளுக்கு உயிர்ப்பூட்டும் மொழி, அதிகாரத்தின் பக்கம் மட்டுமே சாய்ந்து கொடுப்பதனை வரலாறு நெடுகிலும் கண்டுகொண்ட அடிமையாக்கப்பட்ட பெண்ணுடல்கள் தன்னுடைய மொழியில் தானே அந்நியமாக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளதை ‘மொழிபெயர்ப்பு’ என்ற கவிதையில்,
மொழியே இங்கு முட்டுக்கட்டை ஆகிவிட்டது அந்நியமாக்கப்பட்டுவிட்டன அனைத்தும் எனக்கு நானே புரியாமல் பேசிக்கொள்கிறேன் பெற்ற பிள்ளை கூட வேற்று மொழியில் வித்தியாசமாய் பேசுகிறது உள்ளத்து உணர்ச்சிக்கும் மொழி ஒரு பெரும் தடை வாழ்க்கையே இங்கு மொழிபெயர்ப்பாகிவிட்டது... புரிந்த மொழியிலிருந்து புரியாத மொழிக்கு... (ப.48)
என்று பதிவு செய்துள்ளது. மொழிபெயர்ப்பாகிப் போன தங்களின் வாழ்வை, மொழியை மறுநிர்ணயம் செய்ய வேண்டியுள்ளதை உணர்ந்து செயல்பட தன்முனைப்புக்காட்டும் சூழலில் படைப்பாளரின் ‘புதுமொழி’ என்ற தலைப்பின் கீழான கவிதை,
கல்லானாலும்... கட்டடம் கட்டலாம் புல்லானாலும்... எருமைக்குக் கொடுக்கலாம் ... கட்டிக்கட்டி பெறும் சொந்தங்கள் வேண்டாம் கட்டற்ற சொந்தங்கள் இருப்பின் அவை போதும். (ப.34)
சமூக அதிகாரக் கட்டமைப்பைக் கட்டுடைக்கும் கலக மொழியாக வடிவம் பெறுகிறது. சமூகத்தில் பிறர் மீது தன்னுடைய கோபத்தை மொழிவாயிலாக வெளிப்படுத்த முனையும்போது கையிலெடுக்கும் வசைமொழிகூட பெண்னை இழிவுபடுத்தும் பாங்கில் பெண்ணின் உடல் உறுப்புகளை மையப்படுத்தியதாகவே இருந்து வருவதையும் அத்தகைய ஆதிக்க மொழிக்கட்டுமானத்திற்கு எதிராக ஆணை மையமிட்ட மொழியும் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதனையும் முன்வைக்கும் படைப்பாளி ஆணை வசைபாடுவதற்கான சொற்களைக் கொடுத்து அச்சொல்லுக்குள் உறைந்துகிடக்கும் புறந்தள்ளல்களையும் ஒடுக்குமுறைகளையும் ஆணுக்கும் கொடுத்துச் சமத்துவம் பேசுகிறார் ‘சுடச்சுட’ என்ற கவிதையில்,
வேசனைக் கூட்டி வா
விளையாட வேண்டும்
விதவனை விரட்டிவிடு
அபசகுணத்திற்காய்
தேவடியான் எங்கே
தெருவிலே தேடிப்பார்
...
இருக்கட்டும்
சமத்துவம் இதிலும் கூட. (ப.73)
தேவடியான், வேசன், வாயாடன், மூளன், பத்தனன், சுமங்களன் என சொற்களை அடுக்கி பெண் மொழியை, மொழிக்கிடங்கை விசாலப்படுத்துகிறார். இங்கு ஆண் மொழியைப் போலச்செய்யும் பெண்மொழியும் அதிகார மொழியாகத்தானே வடிவம் கொள்ளும் என்ற வாதம் பொருத்தமற்றது. ஏனெனில் அடிவாங்கினவன் திருப்பி அடிக்கும்போதுதான் கலகம் பிறக்கும். அக்கலகம்தான் சமநிலைப்படுத்தலுக்கான தீவிரத்தைத் துரிதப்படுத்தும் என்பதான பொருண்மையில் அவை புரிந்துகொள்ளப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
சமய அதிகாரங்களின் உயர்கட்டுமானமாகிய புனிதம் x தீட்டு என்ற கட்டுமானத்திற்குள் தீட்டுக்கானவர்களாக அகிலம் முழுவதும் பெண்கள் இருந்து வந்து உள்ளதையும் அதன் பீடிப்பை உடைத்து அதன் கட்டுமானங்களைச் சிதைத்த பின்நவீனத்துவக்கால கட்டத்திலும் பெண்கள் தீட்டுக்குரியவர்களாகவும் தீண்டாமைக்குரியவர்களாகவும் ஆளாக்கப்பட்டு வருவதைத் ‘தீண்டாமை’ எனும் கவிதையில்,
பின் நவீனத்துவ காலத்திலும்
நாங்கள் தீண்டப்படாதவர்கள்தான்
உனக்கு மட்டுமல்ல
உன் கடவுளர்களுக்கும். (ப.39)
என்று பதிவு செய்கிறார். பெண்னைத் தீட்டுக்குரியவர்களாகப் புறந்தள்ளி வைத்த சமய வெறியர்களின் உயர்வழிப்படுத்தப்பட்ட நனவிலி மனச்செயல்பாடுகளை ‘ஐயோ சாமி’ என்ற கவிதையில்,
... தேவியின் உடை களைத்து தேகம் கழுவி பின்னால் பிட்ட வளைவில் தண்ணீர் ஊற்றி முன்னால் முலைக்காம்புகளை மெல்லத் தடவி ஒடுங்கிய இடுப்பை இறுகத் தேய்த்து மொத்தமாய்த் தடவி முழு அலங்காரமும் ஆசாரமாய் செய்ய பூசாரினி வேண்டாம் என்றீர் என்ன தர்க்கம்? தேவிக்குப் பிடிக்காது என்ற பேரில் தெய்வப் பெண்ணின் தொடு சுகம் காண செய்த சதியா? ஐயோ சாமி... ... (ப.49)
என்று அம்பலப்படுத்துகிறார். பெண்ணினுடைய பார்வையில் ஆணாதிக்கச் சமூகத்தின் பெண்ணுடல் மீதான தீண்டலின் வன்மத்தைச் சுட்டிக்காட்டும் இக்கவிதை, சமய அதிகாரங்களைத் தூக்கிச் சுமக்கும் ஆணாதிக்கச் சமூகத்தின் நனவிலிக்குள் உறைந்து கிடக்கும் குப்பைகளைத் திறந்து காட்டுவதாக இருக்கிறது. சமயத்தின் பெயரால் ஆணின் பாலியல் இச்சைகள் உயர்வழிப்படுத்தப்படுவதான புரிதலை முன்வைக்கும் இக்கவிதை, அது எழுதப்பட்ட காலத்துக்குப் பின் கோவிலின் கருவறைக்குள் சிதைக்கப்பட்ட ஆசிபாவை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. அதோடு, சாதிய முரண் கடந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சமத்துவச் சிந்தனைப்புலம் பால் சமத்துவத்தையும் உள்ளடக்கியதாக இல்லாமல் ஆணாதிக்கச் சமூகத்தின் வழிப்பட்ட சிந்தனைப்போக்காக மட்டுமே அணுகப்படுவதைச் சுட்டிக்காட்டி பெண்களும் பூசாரினிகளாக வேண்டும் என்ற கலகத்தை முன்வைப்பதாக இருக்கிறது.
சமயங்கள் பெண் மீது நிகழ்த்தும் அதிகார வடிவங்களுக்கு எதிராகக் கலகத்தை முன்வைக்கும் படைப்பாளியின் கவிதைகள் நுட்பமாகச் சமயங்கள் குறித்த தன்னுடைய நிலைபாட்டை பதிவு செய்யாமல் கடந்துவிடுகிறது.
இன்றைய பாசிச மதவாத ஆட்சிமுறையின் கற்பழிப்பு அரசியலின் இயங்குதளம் குறித்த வாசிப்புப் புரிதலையும் இக்கவிதை கொடுப்பது எண்ணத்தக்கது. தொடர்ந்து, ‘பொய்முகம்’ என்ற கவிதையில் சமூக இயங்குவெளியில் நல்லவர்களாகவும் உயர்ந்தவர்களாகவும் பெண்ணிய ஆதரவாளர்களாகவும் முகம் காட்டும் வேடதாரி ஆண்களின் ஆழ்மனக் கிடக்கையையும் படைப்பாளர் வெளிச்சப்படுத்தி அவர்களின் பொய்முகங்களை அம்பலப்படுத்துகிறார். அத்தகைய முகமூடி மனிதர்களின் உண்மைமுகம் அறியாது.
.......................
.......................
அருகில் இருந்து உணர்ந்தேன்
பாவம் நான் இலவு காத்த கிளி (ப.55)
என்று பெண் சமூகம் ஆண்களால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டும் ஏமாற்றப்பட்டும் வருவதனைப் பதிவுசெய்கிறார். சமூகத்தில் ஆதரவுக்கரம் நீட்டும் ஆணாதிக்கக் கரங்களை இனங்காண வேண்டிய தேவையை ‘அறிவாளிகள்’ என்ற கவிதையில்
எங்கே... உன்
அறிவார்த்தம்...?
உன் காமப் பசிக்கு
அறிவார்த்த முலாமா? (ப.62)
என்று கோபம் கொப்பளிக்க கேள்வி கேட்கிறார். ‘பெண் உடல்’ வரலாறு நெடிகிலும் ஆணுக்கான நுகர்வுப் பண்டமாகவே இருந்து வந்துள்ளதை இலக்கிய, புராண, தொன்மங்களின் ஊடே சுட்டிக்காட்டும் படைப்பாளி இன்றைக்கும் அதன் சரடு அறுபடாமல் ஆணாதிக்கம் கட்டிக்காத்து வருவதனையும் தொடர்ந்து பெண் உடல்கள் ஆண்களால் சூறையாடப்படுவதனையும்
.................. கடிக்கும் உயிரிக்கு காய் என்ன கனி என்ன உணராமலே உலர்ந்தன உயிர்கள். (ப.81)
என்று ‘இருப்பு’ என்ற கவிதையின் இறுதி வரிகளில் ஆணாதிக்கத்தின் வக்கிரத்தை, பாலியல் சுரண்டலைப் பதிவு செய்கிறார். பெண் உடலைப் பாலியல் மோகித்தலுக்கான, பொம்மை உடல்களாக்கக் கற்பிதம் செய்துகொண்டு தொடர்ந்து சுரண்டும் ஆணின் உடல் மோகித்தலுணர்வைக் காயடிப்புச்செய்யப் போர்க்கொடி தூக்கும் படைப்பாளி,
பூவுலகெங்கிலும்
குறிவைக்கும் குறிகளைத்
தர்ப்பையாய்க் கிள்ளி
பிண்டம் வைக்க
புறப்பட வேண்டாமா? (ப.40)
என்று தனது கோபக் கனலை வார்த்தைகளில் வெளிப் படுத்துகிறார்.
ஆண் சமூகத்தால் தொடர்ந்து முடமாக்கப்பட்ட பெண்சமூகத்தின் உணர்வுகளையும் உறுப்புகளையும் மீட்டெடுக்கும் பொருட்டு ஆதித்தாயின் அரவணைப்பில் அடைக்கலம் புகத்துடிக்கும் பெண்ணிணத்தின் ஒடுக்கப்பட்ட ஓலக்குரல் ‘தொடக்கம் முதல்’ (ப - 31) என்ற கவிதையில் ஓங்கி ஒலிக்கிறது. பெண்ணின் அடையாளங்களாக ஆண் சமூகம் முன்வைத்த அடையாளங்கள் அனைத்தும் அடிமையாக்குவதற்கான அஸ்திரங்களாகவே இருந்து வந்துள்ளன என்பதனைச் சுட்டிக்காட்டி,
ஆட்டத்தைக் கலைத்து
தொடக்கம் முதல் விளையாடுவோம்
வா... (ப.31)
என்று சரிநிகர் வாதத்திற்கு அழைத்து ஆணாதிக்கத்திற்கு எதிராகக் கலகம் செய்கிறது. அடக்கம், ஒடுக்கம், அச்சம், நாணம், மடம் என்று தந்தை தலைமை அதிகாரச்சமூகத்தைக் கட்டிக்காக்கும் பொருட்டு பெண்கள் மீது சுமத்தப்பட்ட பண்பாட்டு வெங்காயங்கள் தூக்கியெறியப்பட்ட பின்பும் அறிவியல் முலாம் பூசப்பட்டு, பண்பாட்டுக் காவலர்களால் மீண்டும் மீண்டும் கவர்ச்சிகரமாக விற்பனை செய்யப்படுவதைப் பெரியாரைப் பின்புலமாகக்கொண்டு பகடி செய்யும் படைப்பாளி, தனது ‘பண்பாட்டு வெங்காயம்’ எனும் கவிதையில்,
சேம்பிலுக்கு ஒன்றை
உரித்துப் பார்த்தேன்
அதே அழுகிய ...
பண்பாட்டு வெங்காயம். (ப.33)
என்று ‘பண்பாடு என்னும் போலித்தனத்தின்’ நுண்ணரசியலை உரித்துக்காட்டுகிறார். அதோடு இந்தப் பண்பாட்டு வெங்காயத்தின் வடிவத்தில், பெண் உடல் மீது திணிக்கப்பட்ட கருத்தாயுதங்களால் பெண் சமூகம் எதிர்கொள்ளும் உபாதைகளை, உதிர்ந்துபோகும் போராட்ட குணங்களை எல்லாம் கடந்து மீறி, விடுதலைக்கான வேட்கையை உரக்க ஒலிக்கும்போது அதன் குரல்வளையை நசுக்கத் துடிக்கும் ஆணாதிக்க வெறியர்களின் வெறியாட்டத்திற்கு எதிராகத் ‘தொல்லை’ என்ற கவிதையில்,
அப்பப்பா என்
சிந்தனைகள் உடலையே
கடக்க முடியவில்லை
இதில் உயரப் பறப்பது எங்கே? (ப.47)
என்று சாடுகிறார். ‘குழந்தை’ எனும் கவிதையில் தன்னுடைய அடுத்தத் தலைமுறைகூட பெண்ணைச் சம உயிரியாக மதிக்கத் தெரியாத ஆணாதிக்கம் நிறைந்த தினவு ஏறிய உடல்களாக இருந்து ஏளனம் செய்வதனை,
நிரம்பிய மையுடன் – நீ
எழுதிய பேனா எழுத்துகளுக்கு
குருதி ஓட்டத்தைக்
கொண்டு கொடுத்தது
என் கருவறைப் புத்தகம்
இன்று அவ்வெழுத்துக்கள்
எழுந்து சிரிக்கின்றன
என்னைப் பார்த்து. (ப.68)
எனப் பதிவு செய்கிறார். பெண்களைக் காலனியாதிக்கப் பண்புகொண்டு நசுக்கியும் சுரண்டியும் தன்னைச் செழுமைப்படுத்திக்கொண்ட ஆணாதிக்கச் சமூகத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் இக்கவிதைப் பிரதியை, ‘மேற்கு என்பதே கிழக்கின் உழைப்பால் விளைந்ததே’ என்ற பின்னைக்காலனிப் பார்வையை அடியொட்டிப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. இப்புரிதலை ஒட்டியதான வாசிப்பைக் கொடுக்கும் படைப்பாளரின்,
சுற்றிப் படர்ந்திருக்கும்
பூங்கொடியின்
தயவில்
பூத்துக் குலுங்குகிறது
வெத்துக் கரண்டு கம்பம். (ப.38)
என்ற கவிதையும் இங்கு எண்ணத்தக்கது. இப்படியாக, சமூகத்தில் பெண்கள் மீது வரையரையின்றிக் கட்டவிழ்த்துவிடப்படும் ஆணாதிக்கத்திற்கு எதிரான கலகக்குரல்களைத் தனது கவிதைகளின் வழி விடுத்து பெண் விடுதலை பேசும் கனலி விஜயலட்சுமியின் ‘பால் (ழ்) முரண் என்ற கவிதைத் தொகுப்பு மூன்றாம் உலக இலக்கியங்கள் வரிசையில் பெண் விடுதலைக்கான போராட்ட அரசியலை முன்னிறுத்தி, கலக இலக்கியமாக இருந்து, மையமறுப்பு மொழியாடலைச் செய்கிறது.
ஆண் x பெண் என்ற பால் பேதத்தை அடிப்படையாகக்கொண்டு இக்கவிதைகள் படைக்கப்பட்டதாகத் தன்னை அறிவித்துக்கொண்டாலும் அவை வாசகப் பிரதிகளாக அர்த்தங்களைத் தன்னுள் உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றன. பிரதியில் தொகுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கவிதைப்பிரதியும் ஆண் x பெண் என்ற பால் முரணைக் கடந்து, முதலாளி x தொழிலாளி, புனிதம் x தீட்டு, கீழ் x மேல், உயர்வு x தாழ்வு என சமூகத்தால் இணைமுரணில் வைத்து மதிப்பிடப்படும் அனைத்து மதிப்பீடுகளிலும் பொருத்தி வாசிப்பதற்கான திறப்புகளைக் கொண்டுள்ளன.
ஆரிய நிலவுடைமைச் சமூகத்தின் கலாச்சாரக் காலனியாதிக்கக் கருத்தாயுதங்களின் ஆதிக்க மொழியாடல்களைக் கேள்விக்குள்ளாக்கிய படைப்பாளி, இச்சமூகத்தின் ஆகச்சிறந்த காலனியாதிக்க வடிவமான சாதியச்சட்டக அதிகார வடிவங்களை, அது ஒடுக்கப்பட்ட சமூகத்தைச்சார்ந்த பெண்சமூகத்தின் மீது நிகழ்த்தும் மும்மைக்காலனிய ஆதிக்க வடிவங்களின் அழுகிய முடைநாற்றத்தைப் பேசாமல் கடந்து சென்றிருப்பது முரண்பாட்டுணர்வை ஏற்படுத்துகிறது. ஒருவேளை அதைப்பேச தலித் படைப்பாளிகள் இருக்கின்றனர் என விட்டுவிட்டாரோ என்ற எண்ணம் மேலிடுகிறது. இப்பண்பு படைப்பாளியின் படைப்புமன ஆழத்தில் உறைந்து கிடக்கும் சாதிச்சட்டக ஏற்பின் விளைவோ? இந்தியச் சமூகத்தைப் பொருத்தமட்டில் சாதியச் சட்டக ஆதிக்க அதிகார வெங்காயங்களின் தோலை உரித்து, அதன் உட்கிடக்கையை அம்பலப்படுத்தாமல் கிளைகளை ஒடித்துவிடுவது அவ்வாதிக்க வடிவத்தை வலிமைபெறச் செய்வதான செயல்பாடாகவே இருக்கும். தொடர்ச்சியான அவரது எழுத்தில் ஆண் x பெண் பாலிய முரண் கலகமொழியோடு சாதி, மத, இன நுண்ணரசியல் சார்ந்த பாலியல் சுரண்டல்களின் அடித்தளங்களும் கவிதைப் பொருண்மைகளாக வெளிப்படும் என நம்புவோம்.