கொட்டாவி விடுவதைப்போல சிறந்த கலை
உலகில் வேறேதும் உண்டா தெரியவில்லை
ஒவ்வொரு கொட்டாவியும்
மனிதர்களின் விசித்திர முகபாவங்களை
ஓவியங்களாகத் தீட்டிவிடுகின்றது
சில கொட்டாவிகள்
மனிதர்களின்
கௌரவ முகமூடிககளைக் கழற்றி எறிந்து விடுகின்றன
சிலர் கொட்டாவி விடுகையில்
இசையின் ஒரு துணுக்கு
சடாரெனச் சிதறும்
காண்டாமிருகத்தின்
குகை வாசலை நினைவுபடுத்திவிடும்
சிலரது கொட்டாவிகள்
வெளிப்புறப் பற்களின் வெண்மையில்
மயங்கி இருக்கையில்
சிலரின்
உள்புறப் பற்களின் கறைகள்
உறுத்தும்.
உதடுகள் கோணி உள்வாங்கும் கொட்டாவி மறைக்க
அஷ்ட கோணலாகிவிடும் அழகிய முகம்
திறக்கும் வாய்க்கு முன் சிட்டிகைபோட்டு
கட்டைவிரல் ஆள்காட்டி விரலால்
சங்கீதமெழுப்பும் சில இசைவல்லுநர்க் கொட்டாவிக்காரர்கள்
எனக்கொரு உபயோகமான யோசனை தோன்றுகிறது
எதற்கெடுத்தாலும்
சதா அண்டைநாட்டைப் போருக்கழைக்கும்
கோமாளி சர்வாதிகாரிகள்
போர்க்களத்திற்குப் போகும் வழியில்
அவர்களின் கண்ணில் படும்படி
கொட்டாவி நிபுணர்களைக் கூட்டிவர வேண்டும்.
அஷ்ட கோணல் முகம் பார்த்த அதிர்ச்சியில்
போரைக் கைவிட்டு
சமாதானமாவதற்கொரு சந்தர்ப்பம் வாய்க்கலாம்