கலைப்பொருள்

ஆன்டன் செக்காவ்
தமிழில் : வேங்கட சுப்புராய நாயகர்

பகிரு

பங்குசந்தைச் செய்திகள் வெளிவரும் ‘ஸ்டாக் எக்ஸ்சேஞ் நியூஸ்’ஸின் 223ஆம் இதழினால் சுற்றப்பட்டிருந்த அந்தப் பொருளை, தன் தாய்க்கு ஒரே மகனான சாஷா ஸ்மிர்நோவ் மிகக் கவனமாகத் தன் கக்கத்தில் தாங்கியபடி வந்தான். சோகமான முகத்துடன் இருந்த மருத்துவர் கோஷெல்கோவின் அலுவல் அறைக்குள் அவன் நுழைந்தான்.

“அட, தம்பியா வா! இன்று எப்படி? எல்லோரும் நலமாக இருக்கிறீர்களா?” என்று அவனை மருத்துவர் வரவேற்றார்.

கண்களைச் சிமிட்டிய சாஷா, தன் மார்பின்மீது கைகளை அழுத்தி, நடுக்கத்துடன் உணர்ச்சிவசப்பட்டு பேசினான்:

“டாக்டர், அம்மா உங்களை விசாரித்ததாகச் சொல்லச் சொன்னார்கள். உங்களுக்கு நன்றி தெரிவிக்கச் சொன்னார்கள். அந்த அம்மாவின் ஒரே பையன் நான். என் உயிரை நீங்கள் காப்பாற்றிவிட்டீர்கள். அபாயகரமான நோயிலிருந்து என்னை மீட்டுவிட்டீர்கள். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே என் அம்மாவுக்கும் எனக்கும் தெரியவேயில்லை.”

“உளறாதே” என்று இடைமறித்த மருத்துவர், உள்ளூர மகிழ்ச்சியில் அசட்டுத்தனமாகச் சிரித்துக்கொண்டே, “என் இடத்தில் யார் இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார்கள்” என்றார்.

“நான் என் அம்மாவுக்கு ஒரே பிள்ளை. நாங்கள் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். டாக்டர், நீங்கள் செய்த சிகிச்சைக்கு எங்களால் பணம் செலுத்த முடியவில்லைதான் என்றாலும், அம்மாவும் நானும், அதாவது அவரது ஒரே பிள்ளையான நான் உங்களை மிகவும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்வதெல்லாம் இதுதான். இதோ இந்தப் பொருளை எங்கள் சார்பாக நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். இது ஒரு பழமையான வெண்கலக் கலைப்பொருள்; அற்புதமான கலை நயம், வேலைப்பாடு கொண்டது”.

“முடியாது. உண்மையாகத்தான் சொல்கிறேன். என்னால் இதனை…” எனப் புருவத்தை நெறித்தபடி மருத்துவர் மறுத்தார்.

“இல்லை. இல்லை நீங்கள் இதனை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்” என முணுமுணுத்தபடியே தான் கொண்டு வந்திருந்த பொருளைச் சுற்றியிருந்த தாளை பிரிக்கத் தொடங்கினான்.

“நீங்கள் முடியாது என்றால் அம்மாவுக்கும் எனக்கும் மனது புண்படும். இது ஒரு அருமையான பொருள். பழைய பொருள். வெண்கலத்தாலானது. அப்பா இறந்தவுடன் இது எங்களுக்குக் கிடைத்தது. இதனை விலை மதிப்பற்ற நினைவுப் பொருளாக நாங்கள் பாதுகாத்து வந்தோம். இது போன்ற பழைய வெண்கலப் பொருட்களை வாங்கி கலைப் பொருள் சேகரிப்பவர்களுக்கு விற்பதை என் அப்பா தொழிலாகச் செய்து வந்தார். இப்பொழுது அம்மாவும் நானும் அந்தத் தொழிலைப் பார்த்துக்கொள்கிறோம்…”

அப்பொருளைச் சுற்றியிருந்த தாளைப் பிரித்து முடித்தவுடன் அங்கிருந்த மேசை மீது அதனை எடுத்து வெற்றிகரமாக வைத்தான். மெழுகுவத்திகள் வைப்பதற்கென அழகாக சிறிய அளவில் வடிவமைக்கப்பட்ட பழைய வெண்கலக் கொத்துவிளக்குத் தண்டு அது. அதன் பீடத்தில் இரண்டு பெண் உருவங்கள் பிறந்தமேனியாக காட்சியளித்தன. அவை எப்படி நின்றிருந்தன என்பதை விவரிக்குமளவு துணிச்சலோ, பாலுணர்வோ எனக்கு இல்லை. அந்த உருவங்கள் பசப்புகின்ற முறையில் சிரித்துக்கொண்டிருந்தன. மெழுகுவத்திகளைத் தாங்க வேண்டிய வேலையை விடுத்து அவை அந்தப் பீடத்திலிருந்துத் தாவிக் குதித்து இந்த அறை முழுவதும் மோசமான காட்சியை உண்டாக்கக்கூடும் என்பதைப் போல் தோன்றியது. அதை நினைக்கும் மாத்திரத்திலேயே, இனிய வாசகரே, உங்களுக்கு வெட்கத்தால் கன்னம் சிவந்து போய்விடும்.

அந்தப் பரிசுப் பொருளை ஒரு முறை நோட்டமிட்டவுடன், தன் காதின் பின் பகுதியை மருத்துவர் லேசாகச் சொறிந்துகொண்டார். தொண்டையை செருமிக்கொண்டு பெருமூச்சு விட்டார்.

“உண்மைதான். இது ஓர் அழகான கலைப்பொருள்தான். ஆனால், இதை நான் எப்படி வைக்க முடியும்? இது ரசனை என்று நீ சொல்ல முடியாது. அதாவது, கழுத்து தெரிய இறக்கி வெட்டப்பட்ட சட்டை ஒருபுறம் இருக்க, இது உண்மையில் எல்லை மீறிய…”

“எல்லை மீறிய என்றால், என்ன சொல்ல வருகிறீர்கள்?”

“உணர்வுகளைத் தூண்டும் அந்தப் பாம்புக் கூட இந்த அளவு பண்பாடு குறைவாக எதையும் நினைத்திருக்காது. மேசை மீது இத்தகைய சாதாரண அலங்காரப் பொருளை வைப்பதனால், இந்த வீடு முழுவதும் கெட்டு விடுவதாக நான் ஏன் நினைக்கவேண்டும்?”

“டாக்டர், கலை மீது ஏன் உங்களுக்கு இத்தகைய வினோதமான பார்வை இருக்கிறது?” சாஷாவின் மனவருத்தம் பேச்சில் எதிரொலித்தது.

“இது உத்வேகத்தை அளிக்கக்கூடிய வேலைப்பாடு உடையது. இதன் ஒட்டுமொத்த அழகையும் நேர்த்தியையும் பாருங்கள். அப்படியே பயபக்தி ஏற்பட்டு உங்கள் தொண்டை அடைக்கவில்லையா? இது போன்ற அழகை ரசிக்கும்போது இந்த பூமியில் உள்ள மற்ற விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு மறந்து போகும். அதோ அந்த அசைவைப் பாருங்கள் டாக்டர். அந்தத் தோற்றத்தை, முகபாவத்தைப் பாருங்கள்.” என்று சாஷா சொல்லிக்கொண்டே போனான்.

“நான் அதை மிகவும் ரசிக்கிறேன், பாராட்டுகிறேன்,” என்று சுதாரித்துக்கொண்ட மருத்துவர், “ஆனால் ஒரு விஷயத்தை நீ மறந்துவிட்டாய். நான் ஒரு குடும்பத்தலைவன். இங்கு வந்து விளையாடப் போகும் என் சிறு பிள்ளைகளைப் பற்றியும் பெண்கள் பற்றியும் யோசித்துப்பார்” என்றார்.

“உண்மைதான். சாதாரண மக்களின் பார்வையில், இந்த மாபெரும் கலைப்படைப்பு வேறு மாதிரியாகத்தான் தெரியும். ஆனால், டாக்டர், நீங்கள் இவர்களை விட ஒருபடி மேலே நின்று பார்க்கவேண்டும். குறிப்பாக, அம்மாவும் நானும் நீங்கள் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்தால் மிகவும் வருத்தமடைவோம். நான் அம்மாவின் ஒரே மகன். நீங்கள்தான் என் உயிரைக் காப்பாற்றினீர்கள். எங்களிடம் உள்ள மிகவும் மதிப்புவாய்ந்த பொக்கிஷத்தை உங்களுக்குத் தருகிறோம். இதனை ஜோடியாக தருமளவு எங்களிடம் இதேபோல் வேறு ஒன்று இல்லையே என்ற ஒரே குறைதான் எனக்கு இருக்கிறது” என்றான் சாஷா.

“நன்றி, தம்பி. அம்மாவை நான் மிகவும் கேட்டதாகச்சொல். ஆனால் என் இடத்தில் கொஞ்சம் இருந்து பார். இங்கு வரக்கூடிய குழந்தைகள், பெண்கள் பற்றி யோசித்துப் பார்…சரி, விடு, அது இங்கேயே இருக்கட்டும்! உன்னைச் சமாதானப்படுத்த முடியாது என நான் நினைக்கிறேன்” என்று மருத்துவர் கூறினார்.

“என்னைச் சமாதானம் செய்ய ஒன்றுமில்லை.” என சந்தோஷமாக சொன்ன சாஷா, “இதோ, இந்தப் பூச்செடியின் பக்கத்தில் இந்தக் கொத்து விளக்குத்தண்டை நீங்கள் வைக்கவேண்டும். என்ன, இது ஜோடியாக இல்லை! வருத்தமாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய, சரி! போய் வருகிறேன் டாக்டர்!” என விடை பெற்றான்.

சாஷா சென்ற பிறகு, நீண்ட நேரம் அந்தக் கொத்து விளக்கையே உற்று நோக்கியபடி இருந்த மருத்துவர், காதின் பின்புறத்தைச் சொறிந்துகொண்டே யோசித்தார்.

“இது ஒரு அற்புதமான பொருள்தான். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. இதனை வாங்காமல்விட்டிருந்தால்தான் அவமானம். ஆனால், இதனை இங்கு வைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஹும்! பிரச்சனைதான்! யாரிடம் இதனைக் கொடுப்பது அல்லது தள்ளி விடுவது?” என யோசித்தார்.

நீண்ட நேர யோசனைக்குப் பின், அவருடைய சிறந்த நண்பரும் வழக்கறிஞருமான ஹர்கீன் நினைவுக்கு வந்தார். மருத்துவருக்கு நிறைய சட்ட உதவிகளைச் செய்தவர் அவர்.

“ஆம், இதுதான் சரியான தீர்வு” என மருத்துவர் முடிவெடுத்தார்.

‘நண்பர் என்ற முறையில் நான் தரும் பணத்தை ஏற்றுக்கொள்வது சங்கடமாக இருக்கும். ஆனால், இந்தப் பொருளை அன்பளிப்பாகத் தந்தால் அது முறையானதாக இருக்கும். ஆமாம், இந்தக் கொடூரமானப் பொருளை நேராக அவரிடம் கொண்டு போய் கொடுக்கவேண்டும். எப்படிப் பார்த்தாலும் அவர் திருமணமாகாதவர்தானே. வாழ்க்கையினை அப்படி ஒன்றும் பெரிதாகச் சட்டை செய்யாதவர்’ எனப் பலவாறு சிந்தித்தபடியே இருந்தார்.

இதற்கு மேல் காலம் தாழ்த்தாமல், தன் கோட்டை எடுத்து மாட்டிக்கொண்டு, அந்தக் கொத்து விளக்கை எடுத்துக்கொண்டு ஹர்கீன் வீட்டை நோக்கி விரைந்தார்.

அவர் வீட்டுக்குள் நுழைந்ததும், “வணக்கம்” என்றார் மருத்துவர். “நீ எனக்கு செய்த உதவிகளுக்கு நன்றி சொல்ல வந்திருக்கிறேன். நீ பணம் எதுவும் பெற்றுக்கொள்ள மாட்டாய் என்பது எனக்குத் தெரியும். இந்தச் சிறிய அன்பளிப்பை ஏற்றுக்கொள்ள சம்மதிப்பாய் என நினைக்கிறேன். இதோ இதுதான். உண்மையிலேயே இது மிகவும் சிறப்பு வாய்ந்தது.” என்று அப்பொருளை வழக்கறிஞரிடம் மருத்துவர் வழங்கினார்.

அந்தச் சிறு அன்பளிப்பினைப் பார்த்ததும் வழக்கறிஞர் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே போய்விட்டார்.

“ஆமாம் நிச்சயமாக! எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள். அருமை! அபாரம்! இது போன்ற பொக்கிஷம் உனக்கு எங்கு கிடைத்தது?” என்று உற்சாகத்தில் குதித்தார் வழக்கறிஞர்.

தன் மகிழ்ச்சியின் வெளிப்பாடுகளை எல்லாம் கொட்டித் தீர்த்த பின், கதவின் பக்கம் பதட்டத்துடன் நோட்டமிட்டபடியே,

“நல்ல பிள்ளையாக இதனை நீயே திரும்ப எடுத்துச்சென்று விடு. இதனை நான் வைத்துக்கொள்ளமுடியாது” என வழக்கறிஞர் கூறினார்.

“ஏன்? என்ன காரணம்?” எனப் பதறினார் மருத்துவர்.

எல்லோருக்கும் தெரிந்த காரணம்தான். என் அம்மாவோ வாடிக்கையாளரோ உள்ளே வர நேர்ந்தால் என்ன ஆகும் என்று யோசித்துப்பார். என்னிடம் வேலை செய்பவர்களை எப்படி நான் ஏறிட்டுப் பார்க்க முடியும்?” என்று கேட்டார்.

“இல்லை, இல்லை, இதை நீ மறுக்க முடியாது! நீ சரியான பட்டிக்காட்டானாக இருக்கிறாய். இது ஒரு உத்வேகமான படைப்பு. அந்த அசைவைப் பார். அந்த முக பாவத்தைப் பார். இதற்கு மேல் ஏதாவது பிடிவாதம் பிடித்தால், நான் மிகவும் வருத்தமடைவேன்.” என்று வேக வேகமாக மறுத்தார் மருத்துவர்.

“மேலே ஏதாவது வண்ணம் பூசி இருக்கலாம். இடையினை மறைக்க ஆடை இருந்தாலாவது பரவாயில்லை…” என வழக்கறிஞர் பொருமினார். ஆனால், இன்னும் வேகமாக அவரைப் பார்த்துக் கையசைத்துவிட்டு, மருத்துவர் சாமார்த்தியமாக அந்த வீட்டைவிட்டு வெளியேறி தன் வீடு வந்து சேர்ந்தார். ஒரு வழியாக அந்த அன்பளிப்பினைக் கை கழுவியதில் அவருக்கு மிகுந்த திருப்தி ஏற்பட்டது.

நண்பர் போனதும், அவர் விட்டுச்சென்ற கொத்து விளக்கை ஹர்கீன் உற்று நோக்கினார். அதன் எல்லா பாகத்தையும் தொட்டுப் பார்த்த வழக்கறிஞர், மருத்துவரைப் போலவே இதனை என்ன செய்வது என்று மண்டையை உடைத்துக்கொண்டார்.

‘இது ஒரு அற்புதமான படைப்புதான். இதனை எடுத்துச் செல்லவிட்டிருந்தால் அவமானம்தான். ஆனால், இதை இங்கே வைத்துக்கொள்வது என்பது முறையாகாது. யாரிடமாவது இதைக் கொடுத்துவிடுவதுதான் உத்தமம். ஆமாம், இன்று இரவு, நகைச்சுவை நடிகர் ஷாஷ்கின்னுக்கு நிதி அளிக்க சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொத்து விளக்குத் தண்டை அவனுக்கு அன்பளிப்பாக அளித்துவிடலாம். எப்படிப் பார்த்தாலும் அந்த ராஸ்கலுக்கு இதுபோன்ற பொருட்கள் பிடிக்கும்…’ என முடிவு செய்தார் வழக்கறிஞர்.

உடனடியாக அங்குப் புறப்பட்டுச் சென்றார். மிகுந்த கவனத்துடன் சுற்றப்பட்ட அந்தக் கொத்துவிளக்குத்தண்டு, நகைச்சுவை நடிகர் ஷாஷ்கின்னுக்கு அன்பளிப்பாக அன்று மாலை அளிக்கப்பட்டது. அன்று மாலை முழுவதும் அந்த நடிகரின் ஒப்பனை அறையில் இருந்த அன்பளிப்பினைப் பார்வையிட ஆண் பார்வையாளர்கள் மொய்த்தனர். அந்த ஒப்பனை அறை, ஆச்சரியத்தில் எழும்பிய உற்சாகமான ஆரவாரத்தாலும், குதிரை கனைப்பது போன்ற சிரிப்பொலியாலும் நிரம்பியிருந்தது. நடிகைகளில் யாராவது ஒருவர் உள்ளே வர கதவைத்தட்டினால், நடிகர் தன் காந்த குரலில்,

“தற்சமயம் வேண்டாம் டார்லிங், உடை மாற்றிக்கொண்டிருக்கிறேன்” என்று சமாளித்துவிடுவார்.

நாடகம் முடிந்ததும் தன் தோள்களை வளைத்துக்கொண்டு, குழப்பத்தில் கைகளை உதறிக்கொண்டிருந்தார்.

“இந்தப் பாழாய் போன விகாரத்தை நான் எங்கு வைப்பது? நான் இருப்பதோ தனியார் விடுதியில். என்னைப் பார்க்க வரும் நடிகையை நினைத்துப்பார்க்கிறேன். சட்டென எடுத்து மேசைக்குள் போட்டு மூட இது ஒன்றும் புகைப்படம் இல்லை.!” எனப்புலம்பிக்கொண்டிருந்தார்.

அவரது உடைகளைக் களைய உதவி செய்து கொண்டிருந்த ஒப்பனைக்காரர், “ஏன் சார், இதை விற்றால் என்ன?” என்று கேட்டார். இந்தப் பகுதியில் இது மாதிரியான பழைய வெண்கலப் பொருட்களை வாங்கும் வயதான பெண் ஒருவர் இருக்கிறார். திருமதி.ஸ்மிர்நோவா என்று கேளுங்கள். எல்லோருக்கும் தெரியும்.” என அவருக்கு ஆலோசனை வழங்கினார்.

அவரது ஆலோசனைப்படியே நகைச்சுவை நடிகர் நடந்து கொண்டார்.

இரண்டு நாட்கள் கழித்து, பித்தநீர் குறித்த சிந்தனையில் இருந்த மருத்துவர், நெற்றியில் ஒரு விரலை அழுத்தியபடி, தன் அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தார். திடீரென கதவைத் திறந்துகொண்டு, சாஷா ஸ்மிர்நோவ் உள்ளே நுழைந்தான். உற்சாகமாகச் சிரித்தபடி வந்த அவன் முகம் முழுக்க சந்தோஷத்தால் நிரம்பி வழிந்தது. அவன் கையில் வைத்திருந்த ஏதோ ஒரு பொருள், செய்தித்தாளால் சுற்றப்பட்டு இருந்தது.

“டாக்டர்,” எனப்பேசத் தொடங்கும்போதே மூச்சு வாங்கியது. அப்படியே தொடர்ந்தான்.

“நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். உங்களுக்கு இருக்கும் அதிர்ஷ்டத்தை உங்களால் நம்ப முடியாது. எப்படியோ உங்களுக்கு அன்று கொடுத்த கொத்துவிளக்குத்தண்டுக்கு ஒரு ஜோடி கிடைத்துவிட்டது. அம்மாவுக்கு ரொம்ப திருப்தி. நான் அம்மாவுக்கு ஒரே பிள்ளை. நீங்கள்தான் என்னைக் காப்பாற்றினீர்கள்…”

மிகவும் நன்றி விசுவாசத்துடன், அந்தக் கொத்துவிளக்குத்தண்டை மருத்துவர் முன் சாஷா வைத்தான். வாயைப் பிளந்த மருத்துவர், ஏதோ சொல்ல முயன்று பார்த்தார். ஆனால், வார்த்தை எதுவும் வரவில்லை.
வாயடைத்து நின்றார்.

இக்கதை முதன்முதலில் வெளிவந்த 1886-ஆம் ஆண்டிலேயே
பெரும் வரவேற்பினைப் பெற்றது.

ஆன்டன் செக்காவ் (1860-1904), ரஷ்ய இலக்கியம் மட்டுமின்றி உலக இலக்கிய வரலாற்றில் தனி முத்திரை பதித்தவராவார்.

பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுப் பலதரப்பட்ட வாசகர்களைக் கவர்ந்த அவருடைய சிறுகதைகள், பல இளம் எழுத்தாளர்கள் உருவாகக் காரணமாகவும் அமைந்துள்ளன.

முதன் முதலில் 1886இல் எழுதப்பட்ட இக்கதை, 1967இல் வெளியான அவருடைய கதைகள் அடங்கிய பிரஞ்சு மொழியாக்கத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer