ஷாஅ - கவிதைகள்


பகிரு

தூங்கா நதி

பகல்கள் நிரம்பிவரும் அதிகாலை
ஒரு நீண்ட ஆறு மணிக்கு
வாசலாகிப் பார்க்கிறேன்
என்ன பார்க்கிறேன் இப்போது
இப்போதே சொல்லத் துவங்குவதற்குள்
கோலம் முடித்து நீ எழுந்து நிற்கிறாய்
கோலம் போட சிற்றகல் எடுப்பதற்குச் சற்றுமுன்
வீட்டின் பின்புறம் ஓடும்
தூங்கா நதி
உன்னையும் குளிக்க விட்டிருக்கும்
உனக்கும் சற்று முன்பே
யாரும் கால் வைக்காத நீர்கொண்டு
தன்னைத்தானே குளித்திருக்கும் நதி
சலசலக்கும் அவ்விருளில்
கலந்து போனது
இன்னதென்று தெரிந்திருந்தால்
எதிர் நிற்கும் உன்னிடம்
இப்போது என்ன பார்க்கிறேன் என்பதைச்
சுலபமாகக் கூறிவிடுவேன்

மச்ச கணிதம்

வதனங்கள் அறியாத துளியின் பெருந்துளையில்
படிந்தும்
பிரியாமலும்
விடை பெறல் என்பது
யாதென வினவுகின்றது வெட்டவெளியின் மௌனம்
சுருள் கேசம் + மச்சம் = கடல்
திறவா இமை + மச்சம் = தீச்சுடர்
கடலும்
தீச்சுடரும்
வெடித்து அழியும் உலகில்
இரண்டேயிரண்டு மீன்கள் மட்டும் நீந்துகின்றன.
*
++
ஏ
னிவ்
விமை துளிய
ளவு பருகச் செ
ம்புனலூற்றா யொ
ளி யோடியோடிப் புகுகிற திவ
னோரடி நின்றாறடி படுத்தெழு
கிற தனியொ
ரு நாளி
ல்
*

பருக ஓர் முதல் லெமன் டீ

நழுவிச் சரியும் இருளின் இடைவேளையில்
சற்றுமுன்புதான் புலர்ந்தது உலகின்
முதல் பகல்பொழுது
அருகருகே சாய்ந்தமர்ந்த தேகங்களுக்கு மத்தியில்
நுழையும் அங்கு
புதுக் கோப்பை இரண்டு வனைந்து
தாங்குகிறது பீங்கான் குழைநிலம்
வட்டப் பள்ளத்தாக்கு நிரம்ப சரிவுகளில்
தேயிலைத் தோட்டம்
மையத்தில் எலுமிச்சை எட்டிப் பார்க்க
உள் புகுந்த அடிக்கரும்பு கலந்து, வளைந்து
மிதமான வெம்மையுடன்
எழுகிறது
இரண்டிலும் ஒரே சூரியன்
உதடுகள் தாமாகக் குவிகின்றன
பிரபஞ்சம் வடிக்கும் முதல்
தே
நீர் இதுவேயென்று
ம்… என்ன சுவை என்ன சுவை.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer