றாம்சந்தோஷ் கவிதை


பகிரு

காற்று அடிக்கடி மணக்கிறது
காற்று அடிக்கடி நாறுகிறது
மணக்கிறது என்றால் அமர்த்திப் பூத்த வாயுவின் துர்மணம்
நாறுகிறது என்றால் நறும்பூவாசம்
நறும்பூ நாறும் காட்டில் பாம்பாக மாறிப்பார்க்கும் ஸ்நேகத்தோழி
படமெடுத்து ஆடலாம்
பந்தல் புடலங்காயாய் தொங்கி மகிழலாம் போன்ற பல்வகை யோசனைகள்
அவளைக் கிளச்சியுறச் செய்கின்றன
பச்சை இளம்பாம்பென வசீகரமூட்டும் உடல்வாய்த்தால்
அவன் மேனியைத் தீண்டி உயிர் மீதூர்ந்து இன்புறலாம்
களிப்பான விளையாட்டாய் அவன் கண்களைப் பரித்துப் புசிக்கலாம்
கண்கள் என்றால் பார்வை
பார்வை என்பது பூரணத்தின் குறை
குறை என்பது முழுமையின் மீச்சிறு அலகு
அலகு என்பது மாளிகையின் சிறுசெங்கல்
செங்கற்பார்வைகள் கட்டிய வெளிச்சத்தைத்
தகர்த்து இருளாக்குகிறேன் வெளியாவும் வீடாகிறது
இருள் என்றால் நித்ய எல்லையின்மை
நான் சன்னமான நாவால் அவன் உயிரை உண்டு மகிழ்வேன்
நித்ய எல்லையின்மையில் அவன் உடல்போல்
ஒருதோதான பண்டம் வேறொன்று இருக்குமா ப்ரதர்.

குறிச்சொற்கள்