யாழ் அதியன் கவிதைகள்


பகிரு

பிறழ்கால மெய்மை

துள்ளிவிளையாடும் ஆடுமாடுகளும்
எல்லையற்றுத் திரிந்து மேய பசுங்கரடுகளும்
கடுங்கோடையிலும் வற்றாத மடுக்களும்
நெடிதுயர்ந்த நீர்மத்திகளும்
சேகேறிய வன்னிமரங்களும் குடைவேலானும்
காற்றின் சுவையை மாற்றிவிடும் எடத்தாரிகளுமாக
நரிகள் ஊளையிட்டு இருள்மணக்கும் காட்டருகே
முன்பொருகாலத்தில் எங்களுக்கு நிலமிருந்தது
வயல்வெளிகள் இருந்தன
நீர்நிலைகள் இருந்தன
வெடிச் சத்தங்கள் கேட்டறியாத
முன்பொருகாலத்தில் வானம் இருந்தது
விடைத்த குறிகள் குண்டுமழை பொழிந்த காலத்திற்கு முன்பு
சடைசடையாய்க் குலை தொங்கும் பனைபாடும் இசை இருந்தது
சகுனிகளும் கண்ணன்களும் திருவிளையாடல் புரியும் முன்பு
உறவுகள் எங்களுக்கானதாயிருந்தன
திக்குத்தெரியாமல் நிலம்தேடி உப்புநீர்வெளியெங்கும்
அலைந்தலைந்து பனித்தீவுகளில் பாலைவனங்களில்
வெங்குளிரில் மாயும் முன்பு
தளிர்நடுவே காதல் இருந்தது
நிலவும் ஞாயிறும் கண்விழித்துப் பார்த்துக்கொண்டிருந்த
முன்பொருகாலத்தில்
இருந்தது உலகமும்.

உவர்த்தாவரம்

தன்னுள் தானே பூத்துக் காய்த்துக் கனியும்
உறங்காக் கருங்காலி நிழல்மரத்தில்
அவளும் அவளும்
ஓர் காட்டு முல்லைக்கொடி
அவனும் அவனும்
இடியும் மின்னலும் அடங்கமறுக்கும் காற்றுமென
சடசடத்து முளையரும்பிற்று கார்காலச் செவ்வி
தப்பிய பருவங்கள் வேர்பிடிக்கத் தொடங்கின
கொடிநிலவின் அரும்பிய
இசையொளிர் பாடலை
நீரெனப் பாய்ச்சி மீட்டும் நடுக்கமற்ற இரவு
சுரத்தானங்கள் தளிரின் ஆலத்திகளை மணக்கச்செய்து
கைவிடப்பட்ட பகலை ஒளிப்புள்ளியாக்கிச்
சூடிக்கொள்ளும் அவர்கள் கேசமெங்கும்
நீர்மை நீராலானாது
எதிர்த்தேறும் மீன்களின் துள்ளல்
வழியும் மடுவெங்கும்.

வல்லெழுத்து மிகினும் மானமில்லை

காகமொன்றின் மீதேற்றப்படும் புனைவின் வன்மம்
முகத்தில் காறி உமிழ்கிறது
விலங்கொன்றின்மீது படர்கையில்
அருவருப்பின் மொழியாகிறது
மற்றைமையைத் தின்றுவளரும் கவிதை
குரூரமாய் நாறுகிறது

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் வெளியீடு
ஏர்வாடி, சேலம்
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer