மெதுவாங்க கோவிந்து

“ஊருக்குள் எல்லாம் வரமாண்டேன் நானு. உம்பட பழைய ஊட்டுக்காரரு பாத்து எம்மேல கோவங்கீவம் வச்சிருந்து கைக்கி சிக்குனது எதாச்சிம் எடுத்து மண்டெப்போடா போட்டுட்டாருன்னா எனக்கு மண்டெ போச்சு!” என்ற கோவிந்தராசு தன் டிவிஎஸ் எக்ஸெலை செந்தாம்பாளையம் ஊர் முகப்பிலேயே நிப்பாட்டிக்கொண்டான். மயிலாத்தா சலித்துக்கொண்டே இறங்கிக்கொண்டாள்.

வானம் மாலை நாலு மணியைப் போல இடறிக் கொண்டிருந்தது. கருமேகங்கள் அவசரமாய் மேற்கே வேகமாய்ச் சென்றுகொண்டிருந்தன. கோவிந்தராசு மயிலாத்தாவை இறக்கிவிட்ட இடத்தின் தென்பக்கமாய், புதிதாய் கட்டப்பட்டு, வர்ணங்கள் பூசப்பட்டிருந்த கோவில் ஒன்றிருந்தது. கோவிலையொட்டி புளியமரங்கள் இரண்டு உயர்ந்து நின்றிருந்தன. வடபுறத்தில் பெரும் பாறை கிடையாய் நீண்டு கிடந்தது. அதில் பீர் பாட்டில்கள், குவாட்டர் பாட்டில்கள் என்று சிதறிக் கிடந்தன.

‘தாயோளிங்க குடிக்கறானுங்க… போத ஏறினப்புறம் பாட்டிலை எதுக்கு ஒடச்சி வீசிட்டு போறானுங்க? நாளையிம் பின்னியும் வந்து உக்கோந்து இங்க குடிக்கவே மாட்டானுங்களா?’ என்று கோவிந்தராசு சிதறிக் கிடந்த பாட்டில்களைப் பார்த்து மனதில் நினைத்துக்கொண்டான்.

“ஏண்டா பையா, ஊரு இன்னும் அங்க கெடக்குதுடா கெஸ்ஸு கெஸ்ஸுன்னு நானு இனி நடந்து போவணும். சாமம்னாலும் எம்பட ஊடு ஏறி செய்யறதுக்கு மட்டும் வீரனாட்டம் வந்துடறே! அதுக்கு வர்ற வீரம் இங்க ஊருக்குள்ள வண்டிய உடறதுக்கு வரலியா உனக்கு?”

“உம்பட ஊட்டுக்கார்ரு தான் பேங்க்கு நெம்பரு கேட்டாருன்னு சொன்னியே, அத குடுத்துட்டா அஞ்சு நிமிசத்துல போன்ல இருந்து பணத்தை அனுப்புனார்னா உனக்கு வந்துடும். இவ்ளோ தூரம் வரணுமா? நீ என்ன பேசுனாலும் நான் வரமாட்டேன். நம்மூருல எம்பட தலையச் சீவுறதுக்கு ஒருத்தனுமில்ல. இது அசலூரு! என்ன ஏதுன்னு ரெண்டு பேரு கேட்டாலும் பதிலு சொல்லணும். நீ போயிட்டு பணத்தை வாங்கீட்டு எனக்கு போனு பண்டு. நானு கொளத்துப்பாளையம் போயி ஒரு கட்டிங் போட்டுட்டு உக்காந்திருக்கேன்”

“எச்சா ஏத்தீட்டு வந்து என்னையக் கூட்டீட்டு போயி தள்ளீறாதெ சாமி! எங்கப்பன் எனக்கு பீ வழிச்சு கொட்ட மாட்டான். தாலியக் கழட்டி வீசிட்டு வந்துட்டேன்னு ரெண்டு வருசமா என்மேல காண்டுலயே இருக்கான்”

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது, சரி நான் கிளம்புறேன்” என்று சொன்ன கோவிந்தராசு எக்ஸெல்லை முறுக்கிக்கொண்டு கிழக்கே சென்றான். மயிலாத்தா ஊர் நோக்கி சாலையில் நடந்தாள்.

மயிலாத்தாவுக்கு சொந்த ஊர் பெரிய வீரசங்கிலி. இங்கிருந்து இருபது கிலோ மீட்டர் வரும். இரண்டு வருடமாக சென்னிமலை செல்லும் பேருந்தில்தான் நாலு மாதத்திற்கொரு முறை செந்தாம்பாளையம் வந்துபோய்க் கொண்டிருந்தாள். கோவிந்தராசு இவளுக்குப் பழக்கமாகி ஒன்னரை மாதங்கள்தான் ஆகிறது. கோவிந்தராசு இவளை விட பத்து வயது சிறியவன். இவளைவிட அதிகமாய் தறிக்குடோனில் சம்பாதிக்கிறான். இவள் தறிக்குடோனுக்கு நூல் போடச் சென்று வருகிறாள்.இருவருக்கும் தொடுப்பான கதை கொஞ்சம் நீளமான கதை. அதில் மயிலாத்தாவின் காதலும் இருப்பதால்தான் நீளமான நெஞ்சை ஈரப்படுத்தும் கதை ஆயிற்று.

தறிக்குடோன்களிலோ, பஞ்சுக்குடோன்களிலோ, பனியன் கம்பெனிகளிலோ, கோழிப்பண்ணைகளிலோ,வரும் காதல்களில் நல்லனவும் கெட்டனவும் கலந்துதானிருக்கின்றன. நல்லவற்றையும் கெட்டனவற்றையும் மக்கள் பேச்சாய் பேசத்தான் செய்கிறார்கள். வீரசங்கிலி முழுக்க கோழிப்பண்ணைகள் நிரம்பியிருக்க, அதனால் ஊர் முழுக்க ஈக்களின் தொந்தரவு அதிகமாகி, பிரச்சினை, பேப்பர், கலெக்டர் வரை சென்றதெல்லாம் நடந்ததால் மக்கள் மனதில் பதிவான ஊர்தான் வீரசங்கிலி.

மூல நட்சத்திரத்தை வைத்துக்கொண்டு இருபத்தியெட்டாவது வயதில் ஆறு வருடங்களுக்கு முன்பாக புதுப்பெண்ணாக முருகேசன் வாத்தியாரைக் கட்டிக்கொண்டு செந்தாம்பாளையம் வந்தவள்தான் மயிலாத்தா. வந்த மறு வருடமே வாத்தியாருக்கு ஒரு ஆண் மகவை ஈன்றெடுத்துக் கொடுத்து நாற்பது வயது முருகேசனை மகிழ்ச்சிப்படுத்தினாள். பையனுக்கு சோமசுந்தரம் என்கிற பெயரை வைப்பதில் பிடிவாதமாக இருந்தாள் மயிலாத்தா. ஒழுக்கத்திலும் ஒழுக்கமான மற்றும் அடக்கத்திலும் அடக்கமான ஆசிரியர் அதையும் இவளின் விருப்பத்தின் பேரிலேயே விட்டுவிட்டார். அது ஏன்? என்றொரு கேள்வியைக் கூட அவர் தன் வீட்டினுள் வைக்கவில்லை. கட்டுப் பாட்டுக்கும், கடமைக்கும், கண்ணியத்துக்கும் பள்ளியில் பெயர் பெற்ற ஆசிரியர் அவர். ஊருக்குள் ஆசிரியர் என்றொருவர் இருக்கிறாரா? என்கிற சந்தேகம் ஊர் மக்களுக்கே உண்டு. தானுண்டு தன் வீடுண்டு தன் பள்ளியுண்டு என்றிருப்பவர் அவர்.

மலைமீது மாடு மேஞ்சாலும் மாட்டுக்காரன் பேரைத்தான் சொல்லும் என்றாற் போல, ஊருக்குள் சந்து சந்தாக மயிலாத்தா சுத்தினாலும் வாத்தியார் பொண்டாட்டி என்றாகிப் போனாள் நான்கு வருடத்தில். ஐந்தாவது வருடத் துவக்கத்தில் தான் உள்ளூர் பெரிய மனிதர்களிடம் சென்று, பஞ்சாயத்து கூட்டி தன்னை அத்துவிடச் சொல்லி வேண்டி விரும்பிக்கேட்டுக்கொண்டாள்.

அவளுக்கு முதலாக இந்த ஊரே பிடிக்கவில்லை. சென்னிமலை மாதிரியான குறுநகரத்திலேனும் வாழ ஆசை கொண்டு முருகேசனிடம் சொல்லிப் பார்த்தாள். முருகேசன் சென்னிமலையில் வாடகைப் பிரச்சினையிலிருந்து தண்ணீர் பிரச்சினை வரை எடுத்து இயம்பினார். ‘அப்ப சென்னிமலையில இருக்கறவங்க பூராம் மல்லவா குடிக்காங்க?’ என்று எகிறியும் பார்த்தாள். ‘சீவிச் சிங்காரித்து அன்ன நடை பயில இந்தக் கிராமம் சுத்தப்படுமா? நாலு பேர் பார்த்து வாய் பிளந்து ரசிக்க வேண்டாமா? வாத்தியானுக்கு ஆக்கிப்போட்டே காலம் போயிடும்போல? இப்படி ஒரு கஞ்சப் பிசினாறி வாத்தியானுக்கு வாழ்க்கைப்பட்டதிற்கு வீரசங்கிலியிலேயே குப்பை கொட்டிக் கிடந்திருக்கலாம்’ என்று பலவாறு சிந்திக்கத் துவங்கிய மயிலாத்தா ஒரு நாள் வாத்தியாரைப் பஞ்சாயத்தில் நிறுத்தியேவிட்டாள்.

வீட்டை விட்டு வெளியில் தலை காட்டும் சமயமெல்லாம் வெள்ளை வேட்டி, வெள்ளை முழுக்கை சட்டையோடே இருக்கும் முருகேசன் ஆசிரியர், அன்று கட்டம் போட்ட லுங்கியும், கட்டம் போட்ட அரைக்கை சட்டையும் அணிந்தபடி ஊர்க்காரர்கள் முன்பாகக் கைகட்டி நின்றிருந்தார். பஞ்சாயத்து தலைவருக்கே அவரைப் பார்க்கையில் பாவமாய் இருந்தது. ஓட்டுக்காக ஆசிரியர் வீடு சென்றால், ‘வீடு வரைக்கும் வரனுமுங்களா தலைவரே! உங்களுக்குப் போடாம யாருக்குப் போடப் போறேன் நானு!’ என்றே தன்மையாய் பேசுபவர் முருகேசன் வாத்தியார் அல்லவா! வாச்சது சரியில்லப்போல! என்றே எண்ணினார்.

முருகேசனுக்கு மூல நட்சத்திரத்தில் பொண்ணு கட்ட வேண்டாமென அறிவுறுத்திய பங்காளிகள் ஒவ்வொருவரும் மனதில் வந்து வந்து போனார்கள். அப்போதைக்கு கிடைத்ததே பெரும்பாடு என்றே கட்டிக்கொண்டார். பங்காளிகளில் இருவர் கூட்டத்தில் நின்று கொண்டுதானிருந்தார்கள். பங்காளிகள் இருவரின் மனைவிமார்களும் பெண்கள் கூட்டத்தினிடையே நின்றிருந்தார்கள்.

கூட்டத்தலைவர்கள் சரியான காரணத்தைக் கேட்டுக்கொண்டேயிருந்தார்கள் மயிலாத்தாவிடம். எங்கே சின்னச் சின்ன விசயங்களாய் சொன்னால் பேசிச் சரிப்படுத்தி வாழத் தூண்டி விடுவார்களோவென அஞ்சி, ‘சாமத்துல இவரு தனியாப் போயி படுத்துக்கறாருங்க ரெண்டு வருசமா!’ என்று ஒரே போடாகப் போட்டாள். கூட்டத்தில் சலசலப்பு அதிகப்பட்டது. ‘நாம் பாத்துக்கறேன்’ என்றொரு சப்தம் ஆண்கள் கூட்டத்திலிருந்து வந்தது. பெண்கள் கூட்டத்திலும் சலசலப்பு கிளம்பிற்று. ‘சோறு இல்லீன்னாக்கூட இருந்துக்கலாமக்கா… ஆனா அது இல்லாம எப்பிடி இருக்குறது?’

ஒரு கட்டத்தில் முருகேசன் ஆசிரியர் மயிலாத்தாவுக்கு மூனு லட்சம் கொடுத்துவிடவேண்டுமென்று தீர்ப்பாயிற்று. மயிலாத்தா இதை எதிர்பார்க்கவேயில்லை. ஆளைவிட்டால் போதுமென்றிருந்தவளுக்கு போனஸ் கிட்டியது போல் ஆகிவிட்டது. பஞ்சாயத்தாருக்கு மனதில் கோவில் ஒன்றை உடனே கட்டி கும்பாபிஷேகம் நிகழ்த்தினாள்.

ஒன்னரை லட்சம் இந்த வாரத்திலேயே தந்து விடுவதாகவும், மேற்கொண்டு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இருபதாயிரம் தன்னால் கொடுத்து கணக்கை முடிக்க முடியுமென்றும் முருகேசன் சொல்லிவிட்டார். ஒன்னரை லட்சத்திற்கு எத்தனை சைபர்கள் வரும்? என்றே யோசித்தாள் மயிலாத்தா. மூன்று வயது சோமசுந்தரத்தை விருப்பப்பட்டவர்கள் வளர்த்தலாம் என்றபோது முருகேசன் முந்திக்கொண்டார். ‘நானே பாத்துக்கிறேன்.’ பஞ்சாயத்து அப்போதே கலைந்தது. மயிலாத்தா ஒன்னரை லட்சத்தை மஞ்சள் பையில் வைத்துக்கொண்டு பேருந்து ஏறினாள் வீரசங்கிலிக்கு.

நான்கு வருடத்தில் வீரசங்கிலி ஊரே மாறிப்போயிருந்தது. விசயமங்கலம் சந்தைப்பக்கமாய் காய்கறி வாங்க சிங்காரித்துக்கொண்டு சென்றால், உதட்டுச்சாயம் அப்பின வெள்ளை வெளேர் ஒல்லிப்பிச்சான் பெண்களும் பையன்களும் இந்தியில் பேசிக்கொண்டு இவளைப் பாராமல் போய்க்கொண்டிருந்தார்கள். உத்திரப்பிரதேசத்தில் காய்கறி வாங்க வந்தவள்போல தவித்தாள். இதற்குப் பேசாமல் வீரசங்கிலியில் மளிகைக் கடையிலேயே அஞ்சு ரூவா அதிகமென்றாலும் சாமான்கள் வாங்கிக்கொள்ளும் முடிவுக்கு வந்தாள்.

வீட்டில் அப்பனும் ஆயாவும் ‘தொண்டு முண்டே, கூதிக் கொளுப்பெடுத்து பொச்சாட்டீட்டு ஏறீட்டு வந்துட்டா என்னையும் பாரு எங்கூதியையும் பாருன்னு!’ என்று தொட்டதற்கெல்லாம் பேச ஆரம்பிக்க தனி வீடு பார்த்துப் போய்விட்டாள். இவளுக்கும் பக்கத்து அறைகளில் ஒரீசாவிலிருந்து வந்த காதில் கடுக்கன் போட்ட, முக்கா கால் பேண்ட் போட்ட பையன்களாகவே தங்கியிருக்க கொஞ்சம் வெறுப்பாய்த்தான் இருந்தது.

என்னதான் அலங்காரமாய் அவர்கள் முன் நடமாடினாலும் அந்தக் கேனக்கூதிகள் வாய்பிளந்து பார்ப்பதில்லை. உள்ளூர்க்காரன்கள் லூசுப்பயல்களாய் இருப்பதால் அரைகுறை தமிழ் பேசும் சிவந்த தோல்காரன்களை உள்ளூர் பெண்களுக்குப் பிடித்துவிடும். அப்படியொருத்தி ஒரீசாக்காரனிடம் மயங்கி லோடு வயிற்றில் ஏற்றிக்கொண்ட சமயம் அவன் ஊரைவிட்டு சென்றிருந்தான். சின்னப்பிள்ளைகள் என்றால் வயிற்றில் லோடு ஏற்றிவிட்டு ஓடிவிடும் அவன்கள், முத்தின கத்திரிக்காய்களைச் சந்தைக்கடையில் கூட தொடுவதில்லை.

பெருந்துறைப்பகுதியில் ஓட்டுப்போட ஐடி கார்டு வைத்துக்கொண்டிருக்கும் வடமாநில வாண்டுகள் இருப்பதை அரசியல் நோக்கோடு பார்ப்பதற்கு அரசியல் பார்வை இங்கே யாரிடமுமில்லை. சாலையில் வாகன சோதனையில் சிக்கிய வடமாநிலத்தவன் தன் ஐடியை காட்ட, சந்தேகப்பட்ட அதிகாரி அவனது ஒரிஜினல் வண்டவாளங்கள் அனைத்தையும் பிடிங்கிப்பாக்க, அனைத்துமே போலி ஆதாரங்கள்தான். ஒரு கம்பெனியில் மூன்று வருடங்களாக அவன் உயர் பதவியில் வேலையில் இருக்கிறான்.

கூடிய சீக்கிரம் அவர்கள் தமிழகத்தை முழுமையாக அடைத்துக் கொள்ளப்போகிறார்கள். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் அவர்களோடு போராடிக்கொண்டிருக்கும் நிலைமையும் வந்துவிடலாம். அரசியல் தலைவர்கள் ஓட்டெண்ணிக்கையில் தன் கட்சி மட்டும் வெற்றிபெற்றால் போதுமென நினைக்கும் காலமிது. அவர்களையும் ஓட்டுப் போட வைத்து வெற்றிக் கொண்டாட்டங்களில் களிப்பவர்கள் நாளை அவர்களிடமே கையேந்தும் நிலைமையும் உருவாகலாம்.

முன்பாக இவள் நூல் போட்டுக்கொண்டிருந்த குடோன் ஓனரிடமே சென்று சேர்ந்துகொண்டாள். தறிக்குடோனில் இவளையொத்த வயதுக்காரிகள்தான் நூல் போட வந்து போய்க்கொண்டிருந்தார்கள். எல்லோருக்குமே கல்யாணமாகி குழந்தை குட்டிகள் இருந்தன. வயதுக்கு வந்த பிள்ளைகள் எல்லாம் ஊருக்குள் காலையில் வரும் வேனில் ஏறி பனியன் கம்பெனிகளுக்குச் சென்றுவிடுவதைக் கண்டாள். சம்பளம் இங்கே விட அங்கு அதிகமாம். இவளுக்கும் கம்பெனிக்குச் செல்ல ஆசைதான் என்றாலும் அங்கு போய் என்ன வேலை செய்வதெனத் தெரியாது. போக உடம்பு வேறு உருளைக்கட்டை போல உப்பிப்போய்விட்டது இந்த நான்கு வருடத்தில்.

முன்பெல்லாம் ஒல்லிப்பிச்சானாய் இருக்கையில் ஏதோவொரு நேரத்தில் ஒருமுறைதான் ஆய் வரும். இப்போது தினமும் மூன்று வேளையும் ஆய் வருகிறது. எதனால் என்றும் இவளுக்குத் தெரியவில்லை. குடோன் முதலாளிக்கி ஓதம்! என்று சரோசா சொல்ல எல்லோரும் சிரித்தார்கள். இவளுக்கு சிரிக்க முடியவில்லை. ஓதம் என்றால் என்ன என்று யாராவது சொல்லியிருந்தால் இவளும் சிரித்திருப்பாளோ என்னவோ!

இவள் அறையில் டிவி வாங்கி கேபிள் கனெக்சன் போட்டுக்கொண்டாள். காலை நேரத்தில் உடல் இளைக்க அதில் கையையும் காலையும் ஆட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்தவள், தானும் அப்படியெல்லாம் செய்தால் உடல் இளைத்து பழைய மயிலாத்தாவாக வலம் வரலாமென நம்பினாள். ஒரு மாதம் போல கதவை உள்பக்கமாக தாள் போட்டுக்கொண்டு அம்மணக்கட்டையாய் வீட்டினுள் கைகளை கால்களை விரித்துச் சேர்த்தி, விரித்துச் சேர்த்திக் குதித்தாள். மூச்சு வாங்கிற்று. இருந்தும் போராடினாள்.

இடுப்பின் அளவைக் குறைக்க பெல்ட் விளம்பரம் செய்தார்கள். அதை ஆர்டர் போடத் தெரியாமல் தவித்தாள். முக அழகுக்காக சோத்துக்கத்தாழை பறித்து வந்து, தினமும் இரவில் படுக்கப் போகையில் பூசிக்கொண்டாள். தன்னை மட்டுமே விரும்பும் காதலன் ஒருவனை உள்ளூர்ப் பாதைகளில் தேட ஆரம்பித்தாள். அவன் குடோனிலேயே கோவிந்தராசு என்ற பெயரில் தறி ஓட்டிக் கொண்டிருந்தான்.

கோவிந்தராசு ஆறு மாதமாகத்தான் குடோனுக்கு தறியோட்ட வந்துகொண்டிருந்தான். குடோனில் இருபது தறிகள் ஓடிக்கொண்டிருந்தன. ‘ஓனரு இத்தன சம்பாதிச்சு என்ன பண்ண? ஓதமாப் போச்சே!’ என்றே சரோசா சொல்லிச் சிரிக்கிறாள். கோவிந்தராசுவை ‘தம்பி தம்பி’ என்றுதான் மற்ற பெண்கள் அழைத்தார்கள். கோவிந்தராசுக்கு இருபது வயதிருக்கும். ஆனால் இருபத்தி நான்கு என்கிறான். அவனை இவளுக்குப் பிடித்திருந்தது. சுறுசுறுப்பானவன். ஒரு நாள் கூட தலைவலி காய்ச்சல் என்று விடுப்பு எடுத்துக்கொள்ள மாட்டான்.

அவன் கையில் அகலமான தொடுதிரை செல்போன் இருந்தது. விலை பத்தாயிரம் என்றான். இவளிடம் இருப்பது ஒரு சோப்புப் பெட்டி. ஆயிரம் ரூவாய்க்கு வாங்கியது. குடோனுக்கு வருபவர்களில் தொடுதிரை செல்போன் வைத்திருப்பவன் அவன் ஒருவன்தான். வேலை செய்கையில் அவனது ஜட்டிப் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக்கொள்வான். அவன்தான் நான்காவது மாதத்தில் தன் போனில் ‘சும்மா பாருங்க!’ என்று இவளிடம் மேட்டர் படம் காட்டினான். இவளோ, அப்படியெல்லாம் கேள்விப்பட்டது கூட கிடையாது. ‘யாரு இவிங்க ரெண்டு பேரும்? நெடச்சலாபாளையத்துக்காரியாட்ட சாடைத் தெரியுதே!’ என்றாள். கோவிந்தராசு சிரித்தான். இவள் அவனது கடைவாயைக் கிள்ளி,’தெரியலீன்னு தான கேக்கேன். அதுக்கென்ன இளிப்பு உனக்கு?’ என்றாள்.

இப்படித்தான் அந்த உறவு மிக மெதுவாக அவர்களுக்குள் உருவாயிற்று. கோவிந்தராசு உலக விசயமனைத்தையும் தன் போன் வழியாகக் கண்டு இவளுக்குச் சொல்லி ஆச்சரியப்படுத்தினான். ஆனால் இவளுக்கு ஆர்வமெல்லாம் ஒன்றிலேயே இருந்தது! ‘செய்யறதைப் பாக்கலாம்டா. நல்லா இருக்குது பாக்கப் பாக்க!’ என்றாள். கோவிந்தராசுவை இழுத்துக்கொண்டு ஈரோடு போய் அவனைப் போன்றே தொடு திரை போன் வாங்கிக்கொண்டாள். ஜியோ சிம் வாங்கிப் போட்டு ஒவ்வொன்றாய் பழக்கிவிட்டான். தெரியாமல் மேட்டர் படம் பார்க்கப் போய் எப்போது செல்லை எடுத்தாலும் அதுவே முன்னால் வந்து நிற்பதாய் அழுது வடிந்தாள் ஒரு நாள் அவனிடம். அவன் அதை சரிப்படுத்திக்கொடுத்தான்.

கோவிந்தராசு மீது இவள் கொண்ட காதல் ஒரு நாள் கட்டிலில் முடிந்தது. பின்பாக கோவிந்தராசு ருசி கண்ட மனிதனாகிவிட்டான். ‘பையா பையா’ என்றே வெளியிடங்களிலும், குடோனிலும் கோவிந்தராசை அழைப்பவள் தன் வீட்டுக்குள் அவன் வந்ததும் கொஞ்சட்டத்தை துவங்கிவிடுவாள். ‘மெதுவாங்க கோவிந்து!மெதுவா வலிக்குதுங்க கோவிந்து! குடோன்ல அந்த சரோசா கிட்ட நீங்க பேசனீங்கன்னா எனக்கு பத்தீட்டு வருதுங்கொ! கோவத்துல உங்களை கொன்னாலும் கொன்னுடுவேன் ஒரு நாளைக்கின்னு பயமா இருக்குதுங்கொ கோவிந்து… மெதுவாங்கொ! கிழிச்சிப்பிடாதிங்கொ!’ என்று பூனைக் குரலில் பேசுவாள். கோவிந்தராசு, தான் காரியத்தில் கெட்டிக்காரன் என்ற நம்பிக்கைகொள்வான்.

மயிலாத்தா செந்தாம்பாளையத்துக்குள் நுழைந்தாள். சேந்து கிணற்றுப் பக்கம் இரண்டு நாய்கள் படுத்துக்கிடந்தன. உள்ளூர் சின்ராசு சைக்கிள் கேரியரில் இரண்டு குடங்களில் தண்ணீர் பிடித்து முக்கி முக்கி அழுத்திச் சென்றார். மாகாளியாத்தா கோவில் கதவு திறந்திருந்தது. உள்ளே நடமாட்டம் தெரிந்தது. தெற்கு வீதிக்கு வந்து சேர்ந்தாள். கடைசி வீடு முருகேசனுடையது. பொம்மி வாசலில் படுத்திருந்தது இவளைக் கண்டதும் எழுந்து வாலை ஆட்டிக்கொண்டு வந்தது.

கதவு திறந்திருக்க வீட்டினுள் நுழைந்தாள். ஹாலில் டிவிப் பொட்டி துணி போட்டு மூடப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் முருகேசனின் பைக் உள்ளே நின்றிருக்க வேண்டும். ஆனால் பைக் நிற்குமிடம் காலியாயிருந்தது. முருகேசன் இன்னும் வரவில்லை போலிருக்கிறது. அப்புறம் எப்படி வீடு திறந்து கிடக்கும்? என்ற கேள்வியோடே ஆடு திருட வந்தவள் போல பம்மினாள்.

சமையல் கட்டிலிருந்து சோமசுந்தரம் ஓடி வந்தான் வெளியே. இவளைப் பார்த்து ப்ரேக் போட்டது போல நின்றவன். ‘சின்னம்மா! எம்பட பழைய அம்மா வந்திருக்காங்க!’ என்று சொல்லிக்கொண்டே ‘பர்ர்ர்ர் பர்பர்’ என வாயில் பைக் சத்தம் குடுத்துக்கொண்டே வெளிவாசலுக்கு ஓடிப்போனான்.

சமையலறையில் சோமசுந்தரம் குடித்த காபி டம்ளரை கழுவி முடித்த சுகுணாவுக்கு வந்திருக்கிறவள் முருகேசனின் முன்னாள் மனைவி என்று தெரிந்தது. முருகேசன் அவளைப் பற்றி எல்லாமும் சொல்லியிருக்கிறான் சுகுணாவிடம். முக்கியமாக மயிலாத்தா ஒரு வாயாடி என்றும் எந்த சந்தர்ப்பத்திலும் எதை வேண்டுமானாலும் பேசுவதற்கான வாயை கடவுள் அவளுக்கு மட்டுமே படைத்திருப்பதாய் கூறியுள்ளான். மயிலாத்தா அவள் தேவைக்காக வீட்டுக்குள் வந்திருக்கிறாள். அது அவள் பாடு என்று முடிவெடுத்தவள் இரவு உணவுக்காக வெங்காயம் மிளகாய் நறுக்க கூடையோடு வெளியில் வந்து, ஷோபாவில் அமர்ந்திருந்தவளைக் கண்டு கொள்ளாமல் வெளிக்கதவுக்கருகாமையில் வெளிச்சம் வந்த இடத்தில் சென்று அமர்ந்தாள்.

சமையலறையிலிருந்து வந்தவள் தன்னிடம் ஒரு வார்த்தை பேசாமல் அவள் பாட்டுக்கு சென்று அமர்ந்து வெங்காயம் நறுக்குகிறாளே என்று மயிலாத்தாவுக்கு எதாலோ அடித்தாற்போலிருந்தது. அவளோ சிவந்த நிறத்தில் ஒல்லிப் பிச்சானாய் இருந்ததும் கடுப்பாய் இருந்தது. முருகேசனுக்கு வந்த வாழ்வு மயிறைப் பாரப்பா! என நினைத்தபடி இவள் டிவியைப் பார்த்துப் போடப்பட்டிருந்த ஷோபாவில் அமர்ந்தாள். புதியவளின் கழுத்தை ஷோபாவில் அமர்ந்தபடி முகம் திரும்பிப் பார்த்தாள். தாலிக்கொடி இருந்தது. இப்படி ஒரு சம்பவம் நடந்ததே தெரியாமல் போயிருக்கிறதே! வயது இருந்தால் முப்பதை தாண்டியிருக்கலாமென்ற முதிர்ச்சியை புதியவளின் முகத்தில் கண்டாள்.

“தேம்மிணி யாரு நீயி?” என்ற மயிலாத்தாவுக்கு இவள் பதிலேதும் சொல்லாமல் சூரிக்கத்தியில் வெங்காயத் தொப்பைகளை உரித்தபடியிருந்தாள்.

புதியவள் சுகுணா ஈங்கூர்க்காரி. அம்மாவுடன் தனித்துக் கிடந்த பாவப்பட்ட பெண். தெரிந்த ஆட்கள் பேசி முருகேசனுக்கு கட்டி வைத்துவிட்டார்கள். திருமணம் முடிந்து மூன்று மாதங்களாகிவிட்டது. முருகேசன், பையனின் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு சுகுணாவைக் கட்டிக்கொண்டார். திருமணம் சென்னிமலை ஈஸ்வரன் கோவிலில் எளிமையாக முடிந்தது.

“காது கேக்கும்ல அம்மிணி உனக்கு? இப்பத்தானே சோமசுந்தரம் உனக்கு சொல்லீட்டு ஓடினானே! எந்தூரு நீயி? எப்ப கல்யாணமாச்சு?”

தொப்பை உரித்த வெங்காயங்களை சிறு சிறு துண்டுகளாக்கி சில்வர் தட்டில் போட்டபடி இருந்தாள் சுகுணா. இன்று தக்காளி போட்டு கூட்டாஞ்சோறு செய்துவிடுவதென்ற முடிவில்தான் இருந்தாள். முருகேசனுக்கு ஏழரை ஆனதுமே பசியெடுத்து விடும்.

“அடப் பேசுறக்கே காசு கேப்பியாட்ட இருக்குதா! என்ன இருந்தாலும் நாம் பாத்த பாம்பத்தான் நீயும் பாத்துட்டு இருக்கீங்கறதெ மறந்துறாதெ! ஆமா உங்கூட்டுல எத்தன பேரு? நம்ம சனமா நீயி?”

வெங்காயங்களை நறுக்கி முடித்தவள் வரமிளகாயை இரண்டாய்க் கிழித்து விதைகளை விரல்களால் தட்டி உதிர்த்தாள். ஒன்னரை டம்ளர் அரிசியை ஊற வைத்தால் போதும் இரவுக்கு. விதைகளை உதிர்த்துவிட்டு மிளகாயை காய்கறிகளுக்கு உபயோகிப்பதை அவல் அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டாள் சுகுணா.

“ஊமச்சியா நீயி? அடப்பாவத்தெ, முருகேசனுக்கு வந்த கேடுகாலத்தைப் பாருங்கப்பா!” என்ற மயிலாத்தாவுக்குள் கோபம் சின்னக் கங்காய் வயிற்றில் கிளம்பியது. என்ன ஒரு தெனாவட்டு இருந்தால் ஒருவார்த்தைப் பேசாமல் எருமை மேல மழ பேஞ்சாப்டி உக்காந்திருப்பாள் இவள்? என்றே நினைக்க நினைக்க கோபத்தின் கங்கை ஊதிப்பெரிதாக்கியது போலாயிற்று.

சுகுணா மூன்று தக்கோளிப்பழங்களை தண்ணீரில் கழுவி எடுத்து கூடையில் போட்டு வந்திருந்தாள். அதை சின்னத் துண்டுகளாய் நறுக்கி தட்டை நிரப்பினாள். பின்னர் கூடையில் தட்டை வைத்து எழுந்தவள் நேராக சமையல் கட்டுக்குச் சென்றாள். இவள் தலை சமையல்கட்டுக்குள் மறைந்ததுமே மயிலாத்தாவுக்கு உச்சி மண்டைக்கு கோபம் சர்ரென ஏறிக் கொண்டது.

“என்னை என்ன பைத்தியகாரின்னு நினைச்சியாடி எருமைக்கிப் பொறந்தவளே? நாம்பாட்டுக்கு கேட்டுட்டே இருக்கேன் பதில் சொல்றாளா ஒன்னா? ஏல எந்தூருன்னு கேட்டேன். அதுக்கு பதிலு சொல்றதுக்கென்ன உம்பட வாயிலிருந்து முத்தா உதுந்து போயிரும்? என்னா ஒரு அநியாயம்? அவனையெல்லா ஒரு மனுசன்னு கட்டீட்டு வந்து நிக்குற உனக்கு இத்தினி கூதிக்கொழுப்பாடி? அவன் கெட்ட கேட்டுக்கு ரெண்டாவது வேற கேட்டுருச்சோ? சொங்கி! வரட்டும் அவன் இன்னிக்கி!” மயிலாத்தா சமையல்கட்டு டெல்லியில் இருப்பது போன்று சப்தத்தை அதிகப்படுத்திப் பேசினாள்.

சுகுணா கருவேப்பிலையை தட்டில் உருவிப் போட்டுவிட்டு சமையலறையிலிருந்து வெளிவந்தவள் நேராய் வட பக்கத்து அறைக்குள் கதவைத் தள்ளிக்கொண்டு சென்றாள். அது அவர்களது படுக்கையறை. முருகேசனின் துணிகளையும், சோமசுந்தரத்தின் யூகேஜி துணிகளையும் கொஞ்சம் நேரம் முன்பு தான் அயர்ன் பண்ணி டேபிள் மீது வைத்திருந்தாள். பீரோவை நீக்கி அதனுள் மடித்து வைத்திருந்த துணிகளை பத்திரமாய் வைத்தாள்.

என்ன சத்தம் போட்டாலும் உரைக்கவே மாட்டேன்கிறதே இவளுக்கு? என்று நினைத்த மயிலாத்தா,

“எல்லாத் துணியையும் அவுத்துப் போட்டுட்டு நின்னாத்தான் அவனுக்கு மூடு வரும்பானே! நிக்கச்சொல்றானா? நிக்கச் சொல்லுவான். பின்ன கட்டீட்டு வர்றது எதுக்கு? பணத்தை உன்கிட்ட குடுத்துட்டு போவலியா வாத்தியாரு? பீரோவுல இருந்து எடுத்தா. நான் வாங்கீட்டுப் போறேன்! வாத்தியான் வந்தா, நானு ஒன்னு கிடக்க ஒன்னு பண்ணிப் போடுவேன்!”

சுகுணா பீரோவை சாத்தும் ஒலி மயிலாத்தாவுக்கு கேட்டது.

“எந்தூர்ல இசி தின்னுட்டு இருந்தவொ நீயி, செந்தாம்பாளையத்துக்கு பீ திங்க வந்திருக்கே? இவனை எங்க தாம் புடிச்சே? பையன் என்னுமோ என்னைய பழைய அம்மான்னுட்டு ஓடுறான். நீயி புது அம்மாவாடி? உன் ஜாமானும் புதுசா? வாத்தியான் சத்து செத்தவன்டி! சோமசுந்தரம் அவன் பையன்னு நினைச்சிட்டு நானே வளர்த்துறேன்னு சொல்லி வச்சிக்கிட்டான். சோமசுந்தரத்துக்கு அப்பன் வீரசங்கிலில இருந்தான். பாம்பு கடிச்சி செத்துட்டான். அவன் பேரயேதான் வச்சேன் நானு. என்னை என்ன கேனச்சீன்னு நினைச்சிட்டியா? ஊமக்கோட்டானாட்டம் ஊட்டுக்குள்ள சுத்தீட்டு இருந்தீன்னா நல்லவோன்னு நாஞ் சொல்லீருவனா? வகுந்து போடுவேன் வகுந்து!” மயிலாத்தா குரலை ஏற்றினாள்.

சுகுணா திடீரென படுக்கையறையிலிருந்து குண்டான் குண்டானென ஓடி வந்தவள் இவளைத் தாண்டி தெற்கு மூலையில் சாத்தி வைத்திருந்த விளக்குமாத்தை நோக்கி ஓடினாள். கையில் அதைத் தூக்கியதும் திருப்பிப் பிடித்துக் கொண்டு வந்து நாலு சாத்து சாத்தினாள் ஷோபாவில் அமர்ந்திருந்த மயிலாத்தாவை இந்த இடமென்று பாராமல்.

“ஐயோ கொல்றாளே! ஐயோ கொல்றாளே!” என்று அலறிக்கொண்டு எழுந்த மயிலாத்தா வாசலை நோக்கி ஓடினாள். விடுவேனா என்று சுகுணாவும் விளக்குமாத்தோடு பொறவுக்கே ஓடி வந்தவள் வாசலில் வைத்து மயிலாத்தாவின் முதுகில் ஒரு போடு போட்டாள்.

“வருவியாளே இனிமே இந்தப் பக்கம் நீயி? கொன்னே போடுவேன் கண்டாரோலி! எம் பிருசனை சத்துச்செத்தவன்னு சொல்றதுக்கு நீ யாருடி தொண்டு முண்ட?” பெரிதாய் சுகுணா சப்தமிட்ட போது சாலையில் தப்புறு குப்புறுவென ஓடிக் கொண்டிருந்தாள் மயிலாத்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *