மருத்துவரீதியாக மரணம்

வெளிச்சமில்லாத அறை.

மஞ்சள் பல்பின் மங்கின நிறம் நெஞ்சில் சுவாசத்துக்கான அனக்கமில்ல. நாடிகளில் ஒன்னு கூடத் துடிக்கல. இதயத்துடிப்பு நின்னுபோச்சு. கண்ணு திறந்தநிலையில் நிலைகுத்திப்போச்சு. கிளினிக்கலி எக்ஸ்பயேடு... மருத்துவ அறிவியலின்படி செத்துப்போய்ட்டாங்க. பத்து நிமிசமாவது காத்திருந்து பார்த்துட்டு அப்புறந்தான் சொல்லமுடியும். தெய்வமே! சொல்லி வாய்மூடறதுக்குள்ளயே மூச்சு கொஞ்சம் இழுத்துச்சோ? நாடித்துடிப்பு நின்னுடுச்சா? இன்னொரு தடவைகூட ஸ்டெத் வச்சு பார்க்கணுமா? இல்லை, இனி முடியாது. அழுகுரல் எழுந்து அடங்குச்சு. மருத்துவப்படி உறுதிப்படுத்தியாச்சு.

வீட்டை விட்டுப் படியிறங்கி நடக்கும்போது நான் ஒருக்காக்கூட திரும்பிப் பார்த்தேன். இல்லை, சும்மா இப்படித் தோனுது. திரும்பவும் பல்ஸ் பார்க்கிறபோது தெரியறது என்னோட விரலில் இருக்கும் துடிப்பாத்தான் இருக்கும். பின்னையும் தோனும் இதே சந்தேகம்.

கொஞ்சதூரம் முன்னாடி நடந்துட்டுத் திரும்பிப் பார்த்தபோது திடீரென நிலைச்சுப்போன அழுகைகளோட கனத்த அமைதி மெதுவா என்னையும் கடந்து எனக்கு முன்னால நீண்டு நிமிர்ந்து நடக்குது.

வீட்டுக்கு வந்து சேர்ந்ததில் இருந்தே இதயத்துடிப்பு வேகம் கூடுறதல்லாம குறையமாட்டேன்கிறது. வயலுக்கு அந்தக்கரையில் தெரியறதுதான் அந்த வீடு. இந்த ஊரில் மொத்தமா மிஞ்சியிருக்கும் விளைநிலங்கள் இவ்வளவுதான். அதுக்கு இந்தக்கரையில்தான் இந்த வீடு. இந்த வீட்டில் நான் ஒத்தையாளு. இன்று வேறு ஒன்னும் செய்யுறதுக்கில்லை. பொறுப்பேத்துக்கறதுக்கு இரண்டு நாளுக்கு முந்தி, நேரத்துலயே வந்து சேர்ந்துட்டேன். கொண்டுவந்த முக்கியமான சாமான்களை நேத்து ராத்திரியோட வீட்டுக்குள்ள வைக்கவேண்டிய இடங்களில் வச்சாச்சு. வசதியும் அழகுமுள்ள இந்த வீட்டைக் கண்டுபிடிச்சுக் கொடுத்த புரோக்கரும் அவர்கூட வந்த சில ஊர்க்காரங்களும் மட்டுந்தான் இப்போதைக்கு மொத்தமாத் தெரிஞ்சவங்க.

உறுதிப்படுத்தின மரணத்தை இன்னொரு தடவை போயிப் பார்க்கணும்னு மனசு அடிச்சுக்கிட்டு நிர்ப்பந்தம் பண்ணினாலுங்கூட சகிச்சுக்கிட்டுக் காத்திருக்கணும்னு புத்தி உபதேசம் பண்ணுச்சு. இந்த ஊரு அரசாங்க ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து புரபஷனல் வாழ்க்கையைத் தொடங்கறதுக்காக வந்து சேர்ந்திருக்கிறேன். இப்போதைக்கி புத்தி சொல்லறதைத்தான் கேட்டுக்கணும்.

அப்படிப் புத்திக்குக் கீழடங்கி, அந்தக்கரையில் இருக்கும் வீட்டைப் பார்த்துக்கிட்டே இருந்து என்னோட கண்ணு களைச்சுப்போச்சு. கக்கூசுக்குப் போகல. பல்லு தேய்க்கல. ஒரு டம்ளர் தண்ணிகூடக் குடிக்கல. இன்னைக்கி விடியற்காலம் நாலு மணிதான் ஆகியிருந்துச்சு. யாரோ வந்து காலிங்பெல் அடிச்சு எழுப்பிவிட்டாங்க, டார்ச் லைட் வெளிச்சத்தில் அந்த வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. போனமாதிரியே திரும்பவும் கூட்டிட்டுவந்து விட்டுட்டாங்க. அப்போதிருந்து இந்தத் திண்ணையில் உக்கார்ந்திட்டிருக்க ஆரம்பிச்சேன்.

உறுதிபடுத்துனதுக்கு அப்புறமும் மரணத்தை உற்றுப் பார்த்து அந்த வீட்டில் இருக்கிறவங்க அமைதியானவங்களா இருக்கறாங்களோ! செத்த உசுரு பொழச்சு திரும்ப வரும்னு சத்தமில்லாம பிரார்த்தனை செய்யுறாங்களோ!

அந்த வீட்டைப் பார்த்தால், சாவு நடந்ததுக்கான லட்சணம் ஒன்னையும் வெளியே பார்க்கவே முடியலை. இழவு வீட்டுக்கு வண்டிகள் எடதடவில்லாம ஓடிவாரதோ, பாய்ந்து போறதோ, அந்த வண்டிகளில் இருந்து இறங்கி அழுது ஒப்பாரி வச்சுக்கிட்டு சனங்க வீட்டுக்கு ஓடுறதோ ஒன்னையும் பார்க்க முடியல.

சூரியன் இப்போது என்னோட தலைக்கு மேல் வந்தாச்சு.

எடதடவில்லாம ஜனிச்சு விழுகின்ற எண்ணங்களோட குஞ்சுகள் பற்றியெரிகிற வயிற்றுக்குள் குழஞ்சு விழுகின்றன.

தூக்கம் வந்து கண்கள் மூடிப்போகாமல் இருக்கறதுக்காகப் பார்வையை பலமா முன்பக்கமா ஓடவிட்டேன். மூக்குக்குத் துணையா கட்டாயமா முழிச்சிருக்க வேண்டியிருந்துச்சு. அய்ந்து புலன்களும் வேறு எதுக்காக இருக்குதுங்க! ஒன்னு இன்னொன்னுக்கு உதவி செய்யணும். வயலைக் கடந்து வருகிற காற்றில் இப்போது என்ன நெடியடிக்குது? சூட்சுமமா கவனி.

இவ்வளவு சூட்சுமமா வாசத்தத் தெரிஞ்சுக்கறதுக்காக என்னோட மூக்கு முதல் தடவையா பரிசீலனைக்கு உள்ளாச்சு! புலன்கள் அய்ந்தும் பூரணமான புலன் அனுபவங்களைத் தெரிஞ்சுக்கவேணும்னா அதுல தீவிரமான கவனமும் பரிசீலனையும் வேணுங்கறது எனக்கு இப்போதுதான் அர்த்தமாச்சு.

ஒவ்வொரு தடவையும் மூக்குக்குள் நுழஞ்சு வெளியேறிப் போகின்றபோது காற்று சிரமப்பட்டுச் சொல்லுச்சு:

“நெல்வயல்களோட மணத்தைக் கொண்டுவந்து கொடுக்கறதுக்கு இந்த வயல்களில் நெற்பயிர் ஒன்னுமில்லயே...”

வயலில் சுட்டுக்கிட்டிருக்கும் செங்கற்கள் வெந்து கரியும் நெடி மூக்கறைகளுக்கு அடர்ந்து வந்துச்சு.

வெசனத்தோட உக்கார்ந்திருக்கற ஒருத்தனுக்கு புதுநெல்லோட மணத்தையாவுது கொண்டுவந்து கொடுத்தாகவேண்டியிருந்துச்சு

பசியோட வாசமும் காற்றுக்குத் தெரியுமா?

நான் காற்றிடம் சொன்னேன்:

ஒரு உறுதிப்பாட்டுக்கு வேண்டித்தான் இந்தக் காத்திருப்பு.”

இதயத்துடிப்பு சாந்தமடையணும்.

என்னோட உடம்பு ஒரு கெஞ்சலோடு திண்ணையில் சுருண்டு குறுகிக் கிடந்துது.

இப்படி இரண்டுமில்லாத ஒரு அவஸ்தையில், நிச்சயத்திலும் நிச்சயமில்லாமையிலும் சிக்கிக்கிறதவிடக் கஷ்டமானது வேறொன்னுமில்லை உலகத்தில்.

வயல் மண்ணு, மழை வெள்ளத்தில் நனையும்போது மண் அடுக்குகளில் இருந்து எழுந்து பொங்குகின்ற வாசனைய வாரியெடுத்து நான் கொண்டுவந்து தந்துட்டிருந்தேன். அந்த மணம் இதயத்தைச் சாந்தப்படுத்தும்.”

எனக்கு இப்போதைக்கு மரணத்தை இன்னொரு தடவை உறுதிப்படுத்தறதுக்கான வாசம்தான் வேண்டியது.”

ஆனால் யாசகனுக்கு நேராகப் பார்த்து மிகுந்த தளர்ச்சியோடு காற்று சொன்னது:

எனக்கு வேண்டியது ஒரு மழைதான். மழையில் விழித்தெழுகிற பூமியில் இருக்கும் உயிர்களோட அத்தனை மணங்களும். நான் கடந்துபோன, தீப்பிடிக்கிற காடுகளோட அடிவயிறு குளிரணும்.”

சொற்களில் புகைநெடி நிறைந்த காற்று எனது மூக்குக்குள் திரும்பத் திரும்ப நுழஞ்சு வெளியேறுச்சு.

மரணத்துக்கு ஒரு மணம் மட்டும்தானா இருக்குது...”

காற்று, அதனோட சிறு குட்டி அலைகளால் முற்றத்தில் அங்கேயும் இங்கேயும் மெதுவா நடந்தவாறே பேசிக்கொண்டிருந்தபோது, வயலில் இருந்து எழும்பிப் பொங்கின புகைமூட்டங்களுக்கு மேலாக கறுத்த சிறகுகளை வீசியடித்து இணைகளான கொக்குகள் எங்கேயென்று இல்லாமல் பறந்துபோவதை நான் பார்த்துக்கிட்டிருந்தேன்.

இப்படிச் சாவுக்குக் காத்துக்கெடந்து காவலிருக்காம, எதிர்பார்ப்புகளோட ஆவலை நெறச்சு என்னோட சிறகுகளால் நீங்க பறக்கவேணும்னு நான் ஆசைப்படுறேன். நனஞ்ச மண்ணோட மணம் உணர்வில் காதல் ருசிகளைப் பரவசப்படுத்துமென்று தெரியும் தானே!”

எனக்குள் இருக்கும் காதலின் மணத்தையும் இந்தக் காற்றுக்குத் தெரியுமோ!

இயற்கையின் இண்டு இடுக்குகளையும் தீண்டிக் கடந்து போவதுக்குச் சக்தியுள்ள இந்தக் காற்றிடம் யாருக்கும் ஒன்னையும் ஒழிச்சு வைக்க முடியறதில்லைன்னு அப்ப எனக்குப் புரிஞ்சுது.

எனது மூச்சு மிகவும் வேகமெடுக்குது.

தெரியும்... என் காதலி தூரத்தில் இருக்கிறாள். இன்று நான் அவளைப் போயிப் பார்த்துட்டு நாளைக்குத் திரும்பி வரவேணும்னு நினச்சு காரை எடுத்துப் பறக்கறதுக்குத் தயாராக இருந்தேன். அதுக்குள்ள என்னென்னவோ நடந்துட்டிருக்குது!”

“பற்றியெரிகின்ற மலைகளுக்கும் காடுகளுக்கும் முன்னால் இதுபோலக் காவலிருக்க முடியாமல் லட்சியமில்லாமல், திசையில்லாமல் ஏதேதோ வழிகளினூடாக அலஞ்சலஞ்சுதான் நான் இங்கே வந்து சேர்ந்தேன்.”

எனது கண்கள் இரண்டும் சுட்டுப் பொசுங்குகின்றன.

தயவு செய்து ஒரு உதவி செய்கிறாயா? அந்த வீட்டுக்கு அதிவேகத்தில் சென்று அதே வேகத்தில் என்னிடம் திரும்பி வருவாயா... நான் இங்கே இந்த ஊருக்கு புதியவனே...”

காய்ந்துபோன உதடுகளைக் கஷ்டப்பட்டுத் திரும்பவும் திறக்கறதுக்குப் பார்த்தேன். அதே ஆயாசத்தோடு எனக்கு முன்னாலயே முற்றத்தில் தளர்ந்து நின்ற காற்று முணுமுணுத்தது:

நானும் இந்த ஊருக்கு இப்பொழுதுதான் வந்தேன். இந்தச் சுடுவயல்களைக் கடந்து போயிட்டுத் திரும்ப வருவது பெருந்துன்பம். கொஞ்சநேரம் நான் இங்கே சற்று உக்காந்துக்கிட்டா.”

முற்றத்து மண் துகள்கள் சற்று அடங்கின. திரும்பவும் அந்த இடத்திலேயே உருகிக்கிடந்தேன். வயல் கரையில் இருக்கும் தென்னை ஓலைகள் சுருண்டு புரண்டு அனங்காமல் நின்றன.

முற்றத்தில் இறங்கி, மண்ணில் குனிந்து நின்று, காற்றுக்குத் தண்ணி கொடுத்து எழுப்பிவிடலாமென்று நான் ஆசைப்பட்டேன். ஆனால், அங்கே தங்கி நெறஞ்சு நின்ற எரிந்த காட்டோடதும் மலைகளோடதுமான சாம்பல் நெடியில் எனது ரத்த நாளங்கள் எல்லாம் மிகவும் வேர்த்துப்போயின. நான் அந்த வீட்டின்மேல் கண்களை ஓடவிட்டுத் திண்ணைமீதே சரிந்து சுருண்டு கிடந்தேன்.

காற்று உறங்குது. இனி நான் மட்டுந்தான் முழிச்சிக்கிட்டிருக்கணும். வயல் கரையில் வீட்டுத்தோட்டத்தில் தீநாக்குகள் எழுந்தால் அதை எனது கண்கள்தான் முதலில் பார்க்கவேண்டும்.

ஒரு சிதைக்குத் தீ வைக்கிறதுக்குச் சில விதிமுறைகள்கூட உண்டு. அது முடியாமல் இருக்கும்போல தாமதமாகறதுக்கு.

சாவு வீட்டோட சப்தங்களைக் கேட்கமுடியவில்லையென்று வருத்தப்பட்டுக் காதுகள் இரண்டும் இருந்த இடத்திலேயே இருந்து கவலையோடு விறைப்புக் கொள்கின்றன. அங்கே இப்பவும் கனத்த அமைதி இருக்குதா? ஆனால் அங்கே இருப்பவர்களுடைய சப்தங்களுக்கு இங்கே வரைக்கும் வருவதற்கு நிபந்தனையா?

எல்லா நிசப்தங்களுக்கும் சவால்விட்டது கிருஷ்ணாவின் ரிங்டோன். சட்டைப்பையில்கிடந்து சப்தம்போடத் தொடங்கியது. உடனே உறங்கிக்கொண்டிருந்த காற்று கண் திறந்து தூக்க கலக்கத்தோடு என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறது. கிருஷ்ணா என் தவம். எங்களுக்கு நடுவில் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு பிறப்பாகும். அவளோடு பேசிக்கொண்டிருக்கும்போது எனக்கு வேறெந்தச் சப்தத்தையும் காட்சியையும் தொடுதலையும் ருசியையும் மணத்தையும் அறிவதில்லையே தெய்வமே! இனியென்ன செய்வேன்!

ஃபோன் எடுக்காமல் இருந்தால் கிருஷ்ணா நெஞ்சில் தலைகவிழ்ந்து அழுவாள். அவளுடைய பயமும் அழுகையுங்கூட எனது உடம்பையும் மனசையும் வாரிப் பொதிஞ்சு தழுவி எக்காலத்துக்கும் அமைதிகொள்ளச் செய்வதற்கும்கூட சக்தியுள்ளவைதான். புறப்படாதேன்னு சொல்லியுங்கூட கிருஷ்ணா புறப்பட்டிருப்பாளோ? நான் எதற்காக இப்படி அப்பப்ப நடுங்கறேன்! பயம் நெய்தெடுக்கின்ற வலைக்குள் எந்தவழியிலும் மாட்டிக்கொள்ளாமல் இருக்கணும்.

ஃபோன் எடுத்தால் நான் கிருஷ்ணாவிடம் சொல்வது இப்படியா இருக்கும்:

நேரம் கெட்ட நேரத்தில் பரிச்சயமில்லாத வாடகைக் காரைப் பிடிச்சிக்கிட்டுப் பயணம் போகவேண்டாம்.”

அப்போது அவள் இப்படிப் பதில் சொல்வாள்:

இரண்டு நாளுக்குள்ள இருபதாவது தடவையா என்கிட்ட இதைச் சொல்றே.”

“அவங்க எல்லா இடத்திலும் இருக்காங்க. ராத்திரியில் மட்டுமல்ல, பகலிலும்”

சட்டைப்பையில் இருந்து ஃபோனை எடுத்து காதோடு சேர்த்துப் பிடித்தேன்.

எனக்கு இன்று புறப்பட்டுத்தான் ஆகவேண்டும். அஃபீஷியல் பயணமல்லவா!”

போகிற இடத்திலெல்லாம் காடும் மலையும் ஏறுவதற்குப் போகவேண்டாம். இப்போது எனக்குப் பக்கத்தில் ஒராள் உட்கார்ந்திட்டிருக்கான். நெருப்புப் பிடிச்சுக் கரிஞ்சுபோன நெடிக்கு நடுவுலதான் நான் இப்போ இருக்கேன்.

அங்கே வேலையில் சேருவதற்கு முன்னாடியே நோயாளிகள் வரத்தொடங்கிட்டாங்களா! அப்படினா நான் அப்புறமா கூப்பிடறேன்.”

எதாவது வண்டியை வரச்சொல்லிப் போகாதே.”

போகிற இடத்துக்கெல்லாம் தெரிஞ்ச வண்டி கிடைக்குமா?” அவள் சிரிக்கிறாளோ அழுகிறாளோ.

அப்படியானா நானும் அங்கே வாரேன். ஒரு நாளைக்கு.”

சிறகு விரிஞ்சு விரிஞ்சு வருவதுபோல் அவள் சிரிக்கிறாள்.

அப்படினா, பாக்கியுள்ள நாளெல்லாம்? வெளிய போகவேண்டா!”

பத்திரமா இரு... எல்லா இடத்திலும் ஆபத்து உண்டு!”

“மனுசனுக்கு அறிவு உதிக்கும்போது உலகம் சுந்தரமாகும். அடர்ந்த வனத்துக்குள் ஊடுருவிச் செல்கிற சூரியக்கதிர் மாதிரிதான் அறிவு என்றெல்லாம் சொல்கிற நீ என்னைப் பயப்படுத்தறையோ?”

! நான் திருத்திக்கிறேன். நீ தைரியமா இருக்கணும்.”

“அங்கே இன்னைக்கி நடக்கிற ஹர்த்தால் முடியட்டும். நான் அங்கு வாரேன்.”

“நாளைக்கும் ஹர்த்தால் நடக்காதுனு சொல்ல முடியாதே... பதிலுக்குப் பதிலு இன்னைக்கி எங்கெங்கையோ என்னென்னவோ நடக்குது.”

அவள் உண்மையாகவே உடைந்து அழத்தொடங்கி விட்டாள்.

வயலுக்கு நடுவில் இருக்கும் ரோடும் கடந்து, மண்கட்டிகள் வேகின்ற சூளைகளும் தாண்டி நடு உச்சிப் பொழுதைக் காவி உடுக்கச்செய்துவிட்டுப் போகின்ற பிரகடனமாக இருந்தது இங்கே இதுவரைக்கும். எனக்கு இன்னைக்கு கண்ணை மூடியிருக்கறதுக்கு ஆன நாளல்ல

“நான் ஃபோன வைக்கிறேன். அந்த நோயாளியப் பாரு. நேரம் கிடைக்கும்போது கூப்பிடு. நான் சாயுங்கால ரயிலில்தான் போவேன்”.

“அழாதே. நான் வாரேன். முடிந்தால் கொஞ்ச நாளைக்கு உன்னைக் கூட்டிக்கிட்டு வரணும். கல்யாணமும் சடங்கும் ஒன்னும் வேண்டாம் என்று நாம் இரண்டுபேரும் கூடித் தீர்மானிப்பதுதான் செய்ய வேண்டியது. அப்பாகிட்டயும் அம்மாகிட்டயும் சீக்கிரமா விசயங்களைச் சொல்லு.”

நம்ம வாடகை வீட்டைப் பார்க்கறதுக்கு அவசரம் எனக்கு.”

நல்ல அழகுள்ள வீடு.”

ரொம்ப நேரமாச்சு ஏதாவது சாப்பிட்டயா

இல்ல

பழங்கள் ஒன்னும் இல்ல... அதானே...”

“இல்ல. கடைகளெல்லாம் தொறக்கறதுக்கு சாயுங்காலமாகும்!”

கிருஷ்ணா ஒரு சஞ்சாரி. பயணங்கள் உள்ள வேலையில் மூழ்குபவள். போகிற இடத்தில் அந்தந்த இடத்துக்கு ஏற்றதுமாதிரியான சுபாவத்தோடு வாழக்கூடியவள் அவள். கொஞ்ச நாளைக்கு இலைகள் மட்டும். இல்லாவிட்டால் பழங்கள் மட்டும். சிலசமயம் தானியங்களும் பயறுகளும் போதும். ஒன்னுமே கிடைக்காத இடத்தில் தண்ணியக் குடிச்சுக் குடிச்சு ஒரு தெளிந்த நீர் அருவி மாதிரி ஆகிடுவாள். காட்டு மண்ணின் புராதன ருசி, மணங்களில் முகம் சேர்த்துக் கிடந்து என்னை காட்டுக்குக் கூப்பிடக்கூடியவள்.

கிருஷ்ணாவின் சிறகுகளுக்கு பூமியிலிருக்கும் ஆபத்துகளில் இருந்து உயர்ந்து பறக்கறதுக்கான சக்தி வரட்டும்.

ஃபோன் அமைதியானதும் நீண்டு வந்த மூச்சுக்குப் பிறகு முற்றத்தில் உட்கார்ந்திருந்த காற்று மெதுவா எழுந்து நின்றது.

பூமியில் எல்லாப் பெண்பிள்ளைகளுக்கும் சிறகுகள் வேணும்.” காற்றில் இருந்து மெல்ல வழிந்து இறங்கின அலைகள் முழுக்க துக்கத்தின் பாசிப்படர்ந்த மணம்.

களைப்புத் தீர்ந்துட்டுதா?”

பதிலை எதிர்பார்த்ததுக்கு இடையில் எனது கண்கள் வயலுக்கு அந்தப்பக்கத்துக்குக் காட்சிகளைப் பிடித்தெடுப்பதற்காக முகத்தில் இருந்து பறந்துபோயின.

எனது கேள்விக்குப் பதிலா காற்று குசுகுசுவெனச் சொன்னது:

எனக்குக் கொஞ்சம் தூங்கவேணும். ஆத்மா வரைக்கும் தூங்கவேணும். செடி வித்துக்குத் திரும்பிச்சென்று தூங்குவதுமாதிரி. திரும்பவும் முளைவிட்டு முளைக்கத் தொடங்குவது வரைக்கும். சமாதி மாதிரி உறக்கம்.”

அந்த வீட்டில் இப்போ என்னதான் நடக்குது...” ஒரு மரம் மாதிரி இரண்டு கைகளையும் விரித்து நான் கவலைப்பட்டேன்.

உண்மையாவே இந்த உசுரு போயிருச்சுனு நீங்க நம்பறீங்களா?”

ஆமாம், ஆனா இவ்வளவு நேரத்துக்கு அப்புறமும் அந்த வீட்டில் இருந்து காரியமான ஒரு அனக்கமும் இல்லையே...”

அந்த வீட்டில் இறந்துவிட்டது என்று முடிவு செய்த உடம்பைச் சுற்றிலும் அலைமுறையிடுவதற்கு ஆரம்பித்த முகங்கள் எனக்கு முன்னால் இப்பவும் தெளிஞ்சு நிற்கின்றன. அப்புறம், திண்ணையிலும் முற்றத்திலும் நிற்பவர்கள். அக்கம்பக்கத்தில் இருந்து ஆட்கள் வந்துசேருவதைக்கூடப் பார்த்துக்கிட்டேதான் அந்த இடத்தவிட்டு வந்தேன்.

இது ஒரு ஒத்தச் சாவுதானே.” காற்று குரலுயர்த்தியது.

சாவை உறுதிப்படுத்தவேண்டி வருவது எத்தனை பெரிய பொறுப்பு! அதை, ரொம்ப ஜாக்கிரதையாச் செஞ்சாலும் எல்லாமே சூச்சுமம்தான்னு மறுபடியும் உறுதிப்படுத்தணும். எனக்கு இந்தப் பொறுப்போட சுமையில் இருந்து தப்பிக்கிறதுக்கு முடியறதில்லையே...”

செத்துட்டாங்கனு சொன்னாலும் வேணும்னா உயிர் திரும்பக் கிடைக்கறதுக்கான ஒரு வாய்ப்பையும் கணக்கில் எடுத்துக்கணும் என்றா!”

அப்படியும் யோசிக்கவேணும்

உண்மையாவே செத்துப்போனது யாரு? எப்படிச் செத்தாங்க?”

என்னோட கிருஷ்ணா வயசில் இருக்கும் இரண்டு புள்ளைங்களோட அம்மா. ராத்திரி டிவியில் செய்தி கேட்டதுக்குப் பிறகு படுத்துட்டாங்கனு சொன்னாங்க. ஏதோ இயல்புக்கு மாறானதைக் கேட்டு ஸ்தம்பிச்சுப்போன இதயத்தோட பயந்த அடையாளம் அந்த முகத்துல இருந்து மறஞ்சு போறதுக்கு முடியாமல் அதேபடிக்கி நின்னுட்டிருந்துச்சு”.

அந்தப் புள்ளைங்களுக்கு இனி யாரு இருக்காங்க?”

தெரியல. நான் அங்க கவனிக்கட்டா. கொஞ்சங் கூட ஓய்வெடுத்துக்க.”

நீங்க இவ்வளவு பெருசா கவலப்படாம இருங்க...சில சமயம் அந்த அம்மாவுக்கு சாவுகிட்ட இருந்து தப்பிப்பொழச்சு வாரதுக்கு முடிஞ்சுதுனா நல்லதுதானே!”

இங்கபாரு, நானொரு டாக்டராக்கும்.” என்னோட பேச்சுக்குள் இருந்து ஒரு பெரிய தேம்பல் அடக்க முடியாமல் வெளியே வந்தது.

காற்று எனக்கு மேல் நிற்காமல் வீசத்தொடங்கியது.

அங்கே இருந்து பெண் பிள்ளைகளோட அலறல் சத்தம் செங்கல்சூளை வயல்களைத் தாண்டி வருதோவென்று கேட்பதற்காக எனது காதுகள் ஏக்கம்கொண்டு விடைத்து நின்றன. நான் கேட்டது காற்றின் ஆவிபறக்கும் சப்தத்தை மட்டும்தான்.

“சவமான மரணத்தின் வாசத்தைத் தெரிஞ்சுக்கறதுக்குத்தான் இந்த மெனக்கெடல். எல்லாத்துக்கும் அடியில் புதஞ்சு கெடக்குது அது. ஊரெல்லாம் சுத்துகிற என்னோட ஆழத்துக்குள் மூக்கு நீட்டிக் கொஞ்சம் முகந்துபாருங்க. கரிஞ்சதும் புகஞ்சதும் காயமானதும் எரிஞ்சதும் வெந்ததும் பிளந்ததும் ரத்தம் ஒழுகறதும் அழறதும் தேம்புறதுமெல்லாத்தையும் நீங்க சீக்கிரமாத் தெரிஞ்சுக்க முடியும். இவையெல்லாம் சேர்ந்து எனக்குள்ளாக ஒட்டிப்பிடிச்சிட்டு இருக்கும். அழுகின நாற்றம் என்கிட்ட இருந்து எனக்காகக்கூட வேறுபடுத்தி அறியறதுக்கு முடியறதுமில்லை...”

காற்று அமைதியானது. அந்த நாற்றத்தை அறிந்த எனது கண்கள் இருட்டுக்குள்ள விழுந்துவிட்டன. காற்றின் ஒவ்வொரு அலையையும் கழுவியெடுப்பது எப்படியென்று நினைத்து, எனது உணர்வில் பெய்வதற்கு ஆரம்பித்த பேய்மழை மெல்ல மெல்ல எனது புலன்களின் கதவுகளை ஒவ்வொன்றாய் அடைத்துத் தாழிடுவது மாதிரி. எனக்குத்தெரியும், இது ஆனா சமாதியல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *