பிரில்லு பாவாட

சிவசித்து

பகிரு

1

கொமட்டல் எழுப்பக்கூடிய அழுக்கடைந்த மக்குவாடைதான் அறைமுழுவதும் மண்டிக்கிடந்தது. அங்கும் இங்கும் இறைந்து கிடக்கும் குப்பைகளுக்கு மத்தியில் கிடந்த ‘முப்பிடாதி’ கைகள் ரெண்டையும் முட்டுக்கிடையில் கொடுத்தபடி முனங்கிக்கொண்டு அரை கிறக்கத்தில் இருந்தான்.

சன்னமாகத் திறந்திருந்த சன்னல் ஒன்றின் விளிம்பில், நூலாம்படை மெல்ல ஆடிக்கொண்டிருந்தது. சாமத்தில் வந்தடங்கும் வறட்டலறல், இப்போது அக்கம்பக்கத்தில் கொஞ்சம் பழக்கப்பட்டிருந்தது. நாள் முதல் ரெண்டில்
இருந்த கெதி இல்லை. அடிவயித்து கேவல்தான் கையிருப்பு.

கவிந்த இரவின் பிடியில் அவனைப் பிணைக்கும் கனவு இன்றும் வரத்தான் போகிறது. அடர்ந்த நாள்பட்ட நோவின் வாசத்தோடு. திட்டித்திமிறிய முப்பிடாதியின் பல வசைகளையும் சகித்தபடியேதான் போன வாரம் மாரி வந்து வம்படியாக அவனை வெளியே இழுத்து வந்தான். முளைப்பாரி எடுத்துவரும் கூட்டம் திரள் திரளாக முப்பிடாதியைக் கடந்து போனது. கதம்பப்பூச்சரம் சூடி நிமிர்ந்து வருபவர்கள் மீது வெக்கை அனல் அடிக்க தோள்ப்பட்டையில் இருந்து வகுடெடுத்தபடி ஓடியது வேர்வை. வேர்வையும் கதம்பப்பூவும் ரசமான வாசத்தை பெண்களின் மேலெல்லாம் படரவிட்டிருந்தது. மாரியின் கையை உதறிக்கொண்டு, வீட்டுக்குள் விழுந்தெழுந்து போய் கதவடைத்துக் கொண்டான் முப்பிடாதி. இருந்தும் அவனோடு பின்தொடர்ந்து வந்த வாசம் களைந்த நினைவுகளைச் சிதைத்தபடி ஒரு கணம் சடுதியில் முயக்கத்தின் சம்போக நெடியாக நிலைகுத்தி நின்றது. அதை அவன் புலன் உணர உடல் விறைப்பு கொண்டது. அதை தடுப்பதற்காக கைலியை சுருட்டிமூடியும் தலையணையில் அழுத்தி முகம் புதைத்தும் கூட முன்பை விட தீவிர கதியில் அடர்ந்துகொண்டேதான் வந்தது.

உருண்டு புரண்டவன் கைகள் நெகிழ்ந்து கிடந்த கைலியை ஒதுக்கி தொடையிடுக்கில் புரளத் துடங்கியது. உடல் பொங்கி விம்மியவன்,

“அப்புடி உனக்கு கறி கேக்குதோ… ம்… கேக்குதோ” யென கைகளை, தரையில் அறைந்தபடி அலறினான்.பின் அதுவே கதியத்து கேவலாக மிஞ்சியது.

2

ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு மணமுண்டு. களம் நிறைந்த நெல் மணமாக பரதவர் நிலத்தில் மீன் மணமாக தன் வாழ்வை அந்த ஊர் எதன் வழி இயக்குகிறதோ, அதன் வழியே அந்த மணம். இந்த மக்களுக்கு அதிகம் பழகிப்போன மணம் ஒன்று உண்டு. ஊர் பிரிந்து போனவர்களின் நினைவுகளில் தனதூர் வரும்போதெல்லாம் நெஞ்சுக்கூட்டில் நிறைந்துகொள்வதும் அந்த மணம்தான். பிரதான வழிப்போக்கர்கள் தவிர்த்து இராசபாளையம் - தென்காசிச்சாலையை கடந்து போகும் எவருக்கும் நெடுஞ்சாலையில் இருந்து மூன்று கிலோமீட்டர் உள் ஒதுங்கியபடி தளவாய்புரம் என்றொரு ஊர் இருப்பதை அறிந்திருக்க நியாயமில்லை. இருந்தும், அதைச்சுற்றியுள்ள ஊர்களின் ஜீவனை குறுக்கும் நெடுக்குமாக நூல் இழைத்தபடி இருப்பது இதுதான். அந்த இழைப்பில் ஊடும் பாவுமாக நிறைந்த மணம்தான் இந்த அறை முழுவதும் கலந்திருக்கிறது.

நாடா நூற்காத, பாகம் சேராத, கண்டுகளை பொதித்து வைத்து கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்ட முழுமை பெறாத பாவாடை துணிவாசம்! பழனி நாடார் கடையில்
நிறைந்த அந்த வாசத்தை இழுத்தவாறே முத்து தொடர்ந்தாள்.

“பதினாறு வகை கூட்டும் வைச்சு, பக்கத்துல கொஞ்சம் நரகலும் வப்பா மகேசு அவ! பழனி அண்ணாச்சி மாரியெல்லாம் கெடயாது அவுக வீட்டம்மாவுக்கு கொணங்காணாது!”

மகேசு பதிலேதும் பேசாது நாடாக்களைக் கணக்குப்பாத்து பிரித்துக்கொண்டிருந்தாள். பத்தாம் வகுப்பு விடுமுறையில் பழனி நாடார் கடையில் வேலை செய்தமையால் அவளுக்கு தையலில் பெரிய மலவுத்தட்டவில்லை.

எட்டுப்பார்ட்டு பாவாடைக்கு தையக்கூலி எண்பது பைசா, ஏழுப்பார்ட்டு பாவாடைக்கு எழுபது பைசா, ஆறுப்பார்ட்டுக்கு அறுவது பைசா, கால் இஞ்ச் அல்லது அரை இஞ்ச் பட்டி வைத்து தைத்தால் கூடுதலாக பத்து பைசா, பட்டிக்குப் பதிலாக பிரில் வைத்து தைத்தால் கூடுதலாக இருபத்தி ஐந்து பைசா என்ற கணக்கு விவரங்களை முத்துவிடம் கேட்கும்போது மகேசுக்கு இருந்த ஆர்வம் அவள் சொல்லும் வேறு கதைகளில் இருந்ததில்லை. முத்து மட்டும் அல்ல அங்கு வேலையில் மூழ்கும் எந்தப் பெண்ணுமே யாரையும் எதிர்பார்த்து கதை சொல்வது கிடையாது. பேசித் தீராத கதைகள், பேசத் திகட்டாத கதைகள் என்று அறை முழுவதும் கதைகள் கலந்து சுவர்களில் அப்பியபடியே இருக்கும்.

முத்து நூல் கண்டுகளை எண்ணிப்பார்த்துவிட்டு மூச்சிறைத்தபடி,

“பாத்தியா மகேசு அந்த கருவாமுண்டைய. ஒரு நாளும் கண்ட எண்ணிக் குடுக்கமாட்டான், அவன்கிட்ட நம்ம தாங்கிக்கிட்டு இருக்கனும்”

“இங்கனதானக்கா இருக்கு!”

என்று அவள் கால்மாட்டில் உள்ள கண்டுகளை பிறக்கி மகேசு முத்துவிடம் நீட்ட தன்பங்கு பாவாடைத்துணி பண்டல்களை எடுத்துக்கொண்டு ஆளுக்கொரு மிசினில் அமர்ந்தனர். மகேசு முத்துவின் தங்கைதான். முத்தக்காளுக்குத் துணைபுடிச்ச மாதிரி பன்னெண்டு முடிச்சதும் சேர்ந்துவிட்டாள்.

பத்துக்குப் பிறகும், பன்னென்டுக்குப் பிறகும் தன்னுடன் படிக்கும் மத்த பிள்ளைகளில் பெரும்பாதி பாவாடை, நைட்டி தைக்க ஒதுங்கியபோதும் நன்றாகப் படிக்கும் பிள்ளைகளுக்கு உண்டான கனவுகளையே முத்துவும் கொண்டிருந்தாள். அவை அத்துணையும் ஒரே அடியாக ஒதுக்கித் தள்ளிவிட்டு அவர்களுடனே வேலைக்குச் செல்லும் சங்கடத்தை தவிர்க்கத்தான் பஞ்சு மில்லுக்குச் சென்றாள். காலையில் அரசரடி ஸ்டாப்பில் இருந்து முகவூர் எல்.எஸ்.எஸ்ஸில் ஏறிக்கொள்வாள். இராசபாளையத்தில் இருந்து தளவாய்புரம் வரும் வண்டி, பின் முகவூர் வந்து திரும்பி அரசரடி ஸ்டாப்புக்கு வர ஒரு கிலோமீட்டர்தான். சிலநேரம் விறுவிறுவென்று நடந்து முகவூரிலேயே ஏறிக்கொள்வாள். ஏலேகால் முகவூர் எல்.எஸ்.எஸ்ஸை விட்டால் வண்டி பிதுங்க ஆள் ஏத்தி வரும் தெம்மலை பி.ஆர்.சி.தான். கொத்துவேலைக்கு ஏறிய ஆட்கள் தொடங்கி, பாலிடெக்கினிக் படிக்கும் மாணவர்கள் வரையில், இடியவும், பிடியவும் சகித்தவாறே பதினோரு கிலோமீட்டரைக் கடக்கவேண்டும்.

தையலினூடே வாசலை ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு மகேசிடம் “இந்த முப்புடாதி பய எதும் பேச்சு குடுத்தா பதில் சொல்லாத பொறுக்கி நாயி! எவ கெடப்பானு அலயுது” என்றாள். பண்டலை மளமளவென்று பிரித்து, பாவாடைத் துணி மூட்டையை எண்ணி, ஆறுக்கு ஆறு, எட்டுக்கு எட்டு என்று பாட்டுவாரியாகப் பிரித்து, கண்டுயெண்ணி நாடா பிரித்து பதிவாள் வீடுகளுக்கு, ஒரு சுருக்குப்போட்டு தள்ளிக்கொண்டிருந்தான் முப்பிடாதி.

3

பாய்ஸ் ஸ்கூல் காம்போண்டு தாண்டியவுடன்தான் கேல்ஸ் ஸ்கூல் காம்போண்டும். கால்பந்து மைதானத்தை ஒட்டி நடக்க எட்டு, ஒன்பதாம் வகுப்பு கிளாஸ் சன்னல்களைப் பார்க்க முடியும். சில சமயம், மிகச் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் செவ்வாய்க்கிழமை மதியம் நாலாவது பாடவேளையும் வியாழனன்று கடைசி எட்டாவது பாடவேளையும் பந்து காம்போண்டு தாண்டி கேல்ஸ் ஸ்கூலில் வந்து விழும். ஒன்பதாப்பில் சூட்டிக்கானவன் ஒருவனுடன் லாவகமாக பந்தை எத்தித்தள்ளியவன் என்ற முறையில் முப்புடாதியும் சேர்ந்துதான் கேல்ஸ் ஸ்கூலுக்குப் போவார்கள். பனியனும் அரை டவுசருமாக புழுதிபடிந்த தன் அடர்புருவங்களுக்குக் கீழ் உள்ள முட்டைக்கண்ணை உருட்டியபடி முப்புடாதி நிற்பதை முத்து வகுப்புப் பிள்ளைகள் பார்க்கும் போது சிரிப்பு தாங்கமுடியாது.

விளையாட்டு வாத்தியாருக்குப் பயந்து டவுசர் பைகளில் ஒளிந்துகொண்ட கலர் பேண்டுகளும், கருப்பு வயரும் முப்பிடாதியின் வலது, இடது மணிக்கட்டுக்கு ஏறியிருந்தது. போன வருடம் கவராயம் கொண்டு வலது கையில் கிழித்தெழுதிய பெயர் இம்முறை அதைக்கொண்டே அழிக்கப்பட்டு இருந்தது. அதற்கு முந்திய பங்குனிப் பொங்கலில்தான் உடுப்புகளில் இளவட்ட வாடை அடித்திருந்தது. ஒரு வகையில் அது அவன் முதலில் பசி வாடை அறிந்த காலமும் கூட! இளமை அரும்ப, பால் பிடித்திருந்த உயிரூட்டத்தின் பசி. உலகம், உறவு என அத்துணையிலும் நிறைந்து தளும்பக் காத்திருந்த பசி. பலர்போல முப்புடாதிக்கும் தீவிரம் கொண்டுவரும் பருவம் அதுவாகவே இருந்தது…

3.1

பூக்குழி பார்க்க வாகான இடமென்றால், இன்னவீடு, இன்ன கடையென்று எந்தக் கணக்கும் கிடையாது. அதிலும், எளந்தாள் வீடென்றால் சொல்லத் தேவையில்லை. ‘ஏலமாட்டாதவன் பொண்டாட்டி எல்லாத்துக்கும் மதினி’ சொந்தவீட்டுத் தோரணையில் புதுசட்டைப் போட்டுக்கொண்டு பதினாலு பதினஞ்சு வயசு பயலுகள் எல்லாம் சரசரவென பிறத்தியார் வீட்டில் நுழைந்து, ஏறி மாடி அடைவது வாடிக்கை. உயிரை குடுத்த சாமிக்கு மயிரையாவது கொடுப்போம் என்பதாக பத்தி பெருக்கெடுத்து ‘மாரியாத்தாளுக்கு படி போடுங்க’ என்று வாசல் வரும் பக்தர்களுக்கு இல்லையென்று சொல்லாது வழங்க தாழம்பூ பத்திக்கட்டு எல்லோர் வீட்டிலும் இருக்கும். அப்படி பத்தி ஏற்றிய வீடொன்றின் மாடியில் ஏறும்போதுதான் தவச்செல்வம் திடீர் என்று விரைத்தபடி கண்கள் நிலைகுத்த நின்றான். அவனறியாமலே சிறுநீர் கழித்திருந்தான்.

“ஏலே என்ன, என்னல ஆச்சு” என்ற கூச்சலுடன் முப்புடாதியும் மாரியும் அவனைக் கீழே இழுத்து வந்தனர். கீழே தாழம்பூ பத்தி தவிர்த்து வேறு வாடையும் அடித்தது கெறக்கமான வாடையை வேர்வையில் நனைந்த கதம்பப் பூ தந்தது. வைத்த கண் எடுக்காமல் முப்பிடாதியைப் பார்த்தபடி முத்து நின்று கொண்டிருந்தாள். அந்த அறை நிறைந்த வாசம் அவனுடன் நள்ளிரவு வரையிருந்தது. உடலில் அணு ஒவ்வொன்றும் அடைப்புடைப்பட்டு அருவி வந்து விழுந்ததுபோல சட்டென குளித்தடங்கிய நொடி அவனுடலில் மிதமான பனம்பால் வாடை அடித்தது. அவன் நினைவு சரியென்றால் அன்றிரவே அவன் கைலி முதல்முதலாய் கறைபட்டுக்கொண்டது.

3.2

அரிதலான உருவமாக ஸ்கூலை ஒட்டிய சுப்பையா கோயில் மலையில் யாரோ ஏற, பிள்ளைகள் கூடி அதை சுட்டிக்காட்டிய மறுநொடியே சொல்வாள்.

“முப்புடாதிதான், கைய எவளோ எட்டபுடிச்சு ஏறுததப் பாத்தாலே தெரியல மூதேய் மாடு மாதிரி ஆயிருச்சு, வெளிய போட்டுவரன்னு கேட்டுட்டு வந்து இங்க ஏறிக்கிட்டு இருக்காங், காலைல வெளிக்கு இருக்கலையானு கேட்டு அவுக வாத்தியார் ரெண்டு போடு போட்டாத் தெரியும் ரவுடிநாயி” என்று வாய்க்குள்ளேயே முத்து முனகிக் கொள்வாள். இன்று நேற்று என்று இல்லை. அன்று கோயில் கொடைக்கு குட்டி குருமாலுமாக குடும்பவாரியாக கொட்டகை போட்டுத் தங்க, பொட்டுபொடிசுகள் எல்லாம் ராத்திரிக்கு கதை கேட்க புன்னையாபுரத்து பாட்டியைச் சுற்றிப் படுத்துக்கொண்டார்கள்.

“எங்க ஊருக்கு மேக்குட்டு நம்ம சாஸ்தா கோயில் மாணிக்கு முந்தல்னு ஒன்னு இருக்கு. அங்க ஒரு கொறத்தி இருந்தாளாம். அவ அழகினா அழகி அப்படி ஒரு அழகி. நெதமும் மலையில இருந்து சுள்ளி பெறக்கிட்டு வரபோறப்ப ஒரு ராசா அவள பாத்துக்கிட்டே இருந்துருக்கான். ஆகா நல்ல புள்ளையா இருக்காளே இவள நம்ம தூக்கிட்டு போயிர வேண்டியதுதான்னு நெனச்சுருக்கான்”

“எதுக்கு அவள கொண்டு போணும்”

“ம்… வாட புடிக்கத்தான்! அவ மலமேல மஞ்சள் அரைச்சு குளிப்பா. அந்த வாடைக்கு கெறங்கி அவள கொண்டு போவ வந்துருக்கான்! முருவம் கதைய கேளு பேசாம”

அரட்டி கதையைத் தொடர்ந்தாள். மலையடியில் காடு பரப்பிக்கொண்டு இருந்த ஆதிபுத்திர கொண்ட அய்யனார் கோயிலின் கொல்லூரணி தாமரைக்கு மணமில்லாததாலேயே கதை கேட்ட முப்பிடாதிக்கு அன்று கனவில் அரைத்த மஞ்சள் வாசம் அடித்தது. அதைக் கலைத்ததுபோல மறுநாள் காலை கதம்பப்பூ வாடை அடித்தது. குளித்தவுடன் வரும் தெளிந்த வெள்ள வேர்வை மேல் பூசிய மஞ்சளில் படர, கதம்பச்சரம் வைத்து வெறித்தபடி நின்றாள் முத்து.

“என்னத்தான் லூசு கணக்க மொனங்கிகிட்டே கெடக்க”

“உனக்கும் மஞ்சள் வாடை அடிச்சதா” என்றுதான் கேட்க நினைத்து இருந்தான். ஆனால் கேட்டது என்னமோ,

“உங்புருசன் காணமாம். அதுதான் புலம்பிக்கிட்டு இருந்தேன்”

மூக்கை விடைத்துக்கொண்டு முட்டைக்கண்ணை அவள் உருட்டும்போதெல்லாம் வலிய வலிய முப்புடாதி வந்து சொன்னான்,

“போச்சு போ… உங்புருசன் கெடைக்கமாட்டான்” என்று.

அன்றைக்கு இருந்தே திட்டுதான்.

3.3

தளவாய்புரத்தில் கொமந்தாபுர மாணவர்களுக்கு என்று ஒரு தனி மவுசு உண்டு! நண்டு சுண்டுமாக இருப்பவர்கள் கூட சுழிவான கபடிக்காரர்கள் என்பதே அது. அந்தப்பெயரை உயிர்ப்போடு வைக்க ‘கலைமணி’ கபடிக்குழு இருந்தது. முப்பிடாதிக்கு வருஷத்தொடக்கத்தில் இருந்த பந்தாட்டம் விளையாட்டு சுணங்கிப் போனதற்கும் நாளும் பொழுதும் உடம்பு முறுக்கேறி வந்ததுக்கும் பெரும் பங்கு ‘கலைமணி’க்கு உண்டு. பத்தாம் வகுப்பு விடுமுறை நாட்களில் முப்புடாதி, முத்து உட்பட பேருவாதி பதின்ம வயது தாண்ட உள்ளவர்கள், ஊரில் உள்ள பாவாடைக் கடைகளில்தான் வேலை பார்த்தனர். வேலை பார்த்து வீட்டுக்குக் கொடுத்தது போக மீதமானவற்றை செலவு செய்யும் இடமாக ‘முத்துமுடி கடை’ அல்வாவும், ‘கண்ணாடிக்கடை’ மீல்மேக்கரும் மட்டும் இருந்துவிடவில்லை. பதின்வயதுப் பரபரப்பும் உத்தியோகம் தந்த புருசலச்சனமும் வேறு ஒரு செலவுக்கு வகை பார்த்திருந்தது. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என்று வந்திறங்கிய வாழ்த்தட்டைகளை ஆற அமர ‘நதியா கவரிங்கில்’ வாங்கிவிட்டு மறுநாள் மாலை செவக்காட்டு முக்கிலும், சொசைட்டி தெரு வளைவிலும், புத்தூர் விலக்கிலும் கணநேரத்தில் கைமாத்திவிட்டு நகரும்போது காலையில் இங்கிலீஸ் வாத்தியாரிடம் வாங்கிய அடியும், மதியம் கணக்கு வாத்தியாரிடம் வாங்கிய அடியும் போன மாயம் தெரியாது.

அடுத்த கட்டமாக காதலர் தினத்தன்று ஆர்ட்டின் போட்ட பொம்மையோ அல்லது ஒயிட் மெட்டலில் ‘லவ்’ என்று எழுத்து இடம் பெற்ற கீச்செயின்களோ பரிசளிக்கப்படும். சைக்கிள் பூட்டுக்களை கழுகுப்பார்வை பார்த்தபடி கீச்செயினைத் தேடுபவர்களும் அதை உணர்ந்த விதமாக சாவியை ஒருமுறை பார்த்தபடி விரியும் குறுஞ்சிரிப்பும் கீச்செயின் கண்ணில் பட அரும்பு மீசையை கடித்து புருவம் உயர்த்தி தோழமைகளுடன் பகிர்ந்த முகமலர்வையும் ‘சாமி அன்கோ’ கடைவரையில் பார்க்கலாம்.

சில காலம் தள்ளி, கால்களில் செம்புழுதி படிய, ஜீவாநகர் தாண்டி தாவணியும் பப்புக் கை வச்சி எம்பிராய்டர் போட்ட சட்டையும் பூப்போட்ட பாவாடையுமாக சம்படத்தில் பழையதும், சுண்ட இருந்த காய்கறி வெஞ்சனமும் சுமந்து வரும் கன்னிமார்களுக்கு அந்த நினைப்பு மட்டுமே ஆசுவாசம்.

வெள்ளி செவ்வாய்களில் காலை முதலே பரிதவிப்பு கொண்டு பணிச்சொனங்கை உதறியபடி ஓட்டமும் நடையுமாய் மாலையில் வீடந்தவர்கள் வழிந்தோடிய வேர்வையை நீர்கொண்டு அலசி, ஈர உடல் வாசத்தோடு மாரியம்மன் கோவிலுக்கு ஓடி, சன்னதி சுத்தி புற்று மண்ணோடு இட்ட மஞ்சள் திலகத்தை மெல்ல அழித்தபடி தேங்கிய வேர்வை புருவமயிர்களுக்கு மடைமாற இடமும், வலமும் மாறி மாறி நடக்கும் முந்தானைத் துடைப்பை மீறி மஞ்சள் சாயமேறிய திரவம் நாடி விளிம்பில் திரண்டு பெருக உடலெங்கும் கூச்சத்தோடு நோக்குவார் நோக்க கிளம்பும் நாணச் சிரிப்புகள் அத்தனையுமே அந்த ஆசுவாசத்துக்கு அஸ்திவாரம்தான்.

4

மதியம் வரையில் தைத்த எட்டுப்பார்ட் பாவாடைகளை எண்ணி அடுக்கிவிட்டு சாப்பாட்டுக்கு கூரைச்சாய்ப்புக்குள் ஒதுங்கிக்கொண்டனர். வந்த கத, போன கத, சோறு கொழம்பு, தொடுகறி பரிமாற்றங்கள் முறையாக நடந்து கொண்டிருந்தது. பெரும்பாலும் ஆண்கள் சாப்பாட்டுக்கு சைக்கிள் மிதிச்சு வீடு சென்று திரும்புவார்கள். முப்புடாதி மட்டும் ஜெர்சி அடிப்பவர் சிலருடன் சேர்ந்து சாப்பிடுவான். அந்த அறையை பக்கவாட்டில் கடந்து கைகழுவச் செல்லும் பெண்களை அரைச் செங்கல் கனத்தில் ஆறு ஸ்பீக்கர், சைனா போன் ஒவ்வொருவர் கடக்கும் போதும் முப்புடாதி மனதுக்கு ஏற்ப வசனம் படித்தபடியே இருக்கும். சிலசமயம்,

‘போங்கடீ பீத்த சிறுக்கிகளா’

‘சரியான லம்பாடி பொம்பளையா இருப்பா போல’ போன்ற வசனங்களும் அரிதாக

‘நான் கொண்ட ஆசையெல்லாம்
நான்காண்டு ஆசைதான் 
உறங்கும் பொழுது ஒலிக்கும் அடி 
உன் கொழுசின் ஓசைதான்’ 

என்ற பாடலும் வரும். அறையில் மாரிராஜ், மெல்ல வெளியே எட்டிப்பார்த்துவிட்டு

“இந்த பெருசு பண்ணுத சோலிய பாத்தியா?” என்றான். தனது பையில் இருந்து சிகரெட்டை வெளியே எடுத்துக்கொண்டே முப்புடாதி

“எந்த பெருசு” என்றான்.

“பெரியாளு மாப்ள! நம்ம கதிர் அண்ணாச்சி மாம்ஸ்! திக்கும் திக்கும் ஒரு பொம்பளயாளச் சேத்துக்கிட்டு இல்லாத கள்ளச் சோலியெல்லாம் பாத்துக்கிட்டு இருக்காரே!” சரவணன் குனிந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“ஏய் பொம்பளயாளா திரியுதுக இன்னியேரம் போய்க்கிட்டு! நம்மளா இருந்தாலும் பரவால்ல!”

“ஆமா! அந்தானைக்கு இவளுகளுக்கு ஒன்னுமே தெரியாது பாரு!”

என்ற முப்பிடாதி, சரவணன் சட்டைப்பையில் இருந்து தீப்பட்டியை எடுத்தபடி ரெண்டு சட்டைபட்டனை திறந்துவிட்டான். கலைமணி கபடிக்குழு உடைய வார்பிடிப்பில் தசை அங்கங்கு கட்டுதட்டியேறி இருந்தது. மார்பில் சுருள், சுருளாக வளர்ந்து இருந்த மயிர்காட்டினூடே இடதுபுறம் பச்சைகுத்தி பின்னர் சிகரெட் கங்கினால் அந்த பெயர் அழிக்கப்பட்டும் இருந்தது.

அவன் கெடக்கான் மாப்ள, நீ இங்க கேளு! என்று சம்மணம் போட்டு அமர்ந்த மாரி,

“பெருசு ராணா டார்க் முறுக்குக் கம்பி ஏதும் வச்சுருக்கோ என்னவோ! எல்லா வயசு பொம்பளகளையும் வளைச்சுக்கிட்டு திரியுதே! அது, பாதாம், முந்திரினு திங்காம்ல முப்புடாதி, அதுதான் பெருசு தெனவெடுத்துத் திரியுது!”

முப்புடாதி சிகரெட்டைப் பத்தவைத்தபடி புருவம் உயர்த்தி மாரியைப் பார்த்து

“உனக்கு தெரியுமோ” என்றான்.

“ஆமா! வன்னியராசு அண்ணாச்சி கடையில நிக்கும்போது பலசரக்கு வாங்க பெருசுதான வரும்”

என்று சொல்லும்போது மாரிக்கு புரிந்திருக்க வேண்டும். முப்புடாதி கேட்ட தொனி, சரவணன் வாயைப் பொத்திச் சிரித்துக்கொண்டான். தன் தலையில் அடித்தவாறு மாரி ஒரு கும்புடு போட்டு முப்புடாதியிடம் “போதும் ராசா!” என்றான். ‘ம்… ம்!…’ என்று சிரிப்பை முகத்தில் காட்டாமல் முப்புடாதி தொடர்ந்தான்.

“அதுக்கில்ல மாப்ள! நீவாட்டுல முறுக்கீட்டு, திருக்கிக்கிட்டுனு சொல்லுததப் பாத்ததும் நான் கூட பெருசு உன் கைலதான் விளக்க கொடுத்து உக்கார வைச்சுருப்பாரு போலனு நெனச்சன்”

என்றதும், மாரி முப்புடாதி முதுகில் அடித்தபடி சிரித்தான்.

“பின்ன! அந்தக் கெழட்டு ஆத்மாவ புடிச்சுக்கிட்டு, அப்புடியே அவுக கம்பெடுத்து சுத்தீட்டா எல்லாவளும் மயங்கி விழுந்திருவாளுக! ஏதோ பாவப்பட்ட கழுதைக காச ஏதும் குடுப்பான்னு வருதுக அத புடிச்சுகிட்டு”

என்ற முப்புடாதி, சிகரெட்டை இழுத்து ஊதியவாறு மெல்லச் சிரித்தபடி,

“பெருசுகிட்டனா! வேலப்பாடும் கம்மி”

எனும்போது கூடுதலாக ஒரு சிரிப்புச்சத்தம் மெலிதாகக் கேட்க, சட்டென்று முப்புடாதி எழுந்து சன்னல்புறம் வரும்போது முத்து வேகமாக உள்ளே ஓடிக்கொண்டு இருந்தாள். எழுவதற்கு முயன்ற மாரியிடம் யாரும் இல்லை என்று கையைக்காட்டிவிட்டு பின் அங்கு நின்றுகொண்டு மீதம் உள்ள சிகரெட்டையும் புகைத்தான்.

4.1

மாய்ந்து மாய்ந்து தைப்பவர்களுக்கு மட்டுமல்ல ஊரார் அனைவருக்குமே அதீத கொண்டாட்டத்தையும் அதற்குப்பின்னான ஓய்வையும் தரவல்லது தீபாவளி விடுமுறையோ, தைப்பொங்கலோ அல்ல! மாரியம்மனுக்கு ‘பூ’ வளர்த்து மூன்று நாளைக்கு மொத்த ஊரையே விழாக்கோலம் கொள்ள வைக்கும் பங்குனிப்பொங்கல்தான். ஊருடைய நான்கு முகப்பிலும் பொடி பல்பு சீரியல் செட் போட்ட முப்பதடி மாரியம்மன் நொடிக்கு நொடி கைகளில் கரும்பும் நெல்லும் வைத்திருப்பவளாக, சிம்மவாகினியாக மாறி மாறி காட்சி தந்துகொண்டிருந்தாள். மூணாவது நாள் காலை ஐஞ்சு மணிக்கே பூவிறக்க அடுத்த அரைமணி நேரத்தில் பரிசுக்கு குலுக்கல். ஆறுமணிக்கெல்லாம் ஊர் பெரு உணவு கொண்டு ஓய்வுகொள்ளும் மலைப்பாம்பு போல சுருண்டு முடங்கிவிடும்.

பங்குனிப் பொங்கலுக்கு மறுநாள் பெரிய வேலைகள் எந்த பாவாடைக் கடைகளிலும் இருந்திருக்கவில்லை. நேற்று உடுத்திய புது உடுப்பை கழட்ட மனதில்லாதவளாக தன் மாமா வீட்டுக்கு முத்து வந்துகொண்டிருந்தாள். மூன்று கோவிலிலும் விடிய விடிய மாரியம்மனுக்கு வளர்த்த ‘பூக்குழி’ மேகத்தைச் சுரக்க வைக்க, மழை பிடித்திருந்தது. மழைக்கு முப்புடாதி வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த முத்துவுக்கு, தன்னையே யாரோ பார்ப்பது போலப்பட அடிக்கடி வீட்டின் உள்ளே எட்டிப்பார்த்தபடியே இருந்தாள். சன்னல் வழியாக தெறிக்கும் மழை, மெல்ல ஈரம் பரப்பியபடி இருக்க, அருகில் அடுக்கியபடி இருந்த பாவாடை பண்டல்களை நெருங்கிய ஈரத்தைப் பார்த்ததும், அதை இடம் மாற்ற ஆள் இல்லாததை அறிந்து உள்ளே வந்தாள்.

தன் மீது குவியும் பார்வையை முத்து உணர்வதற்குள் முப்பிடாதி பின்புறமாக முத்துவை அணைத்திருந்தான். அவளுடைய வனப்பான திரட்சி கொண்ட உடல்வாகாக அதற்கு பிடி கொடுத்து இருந்தது. முத்து விலக விலக பிடி இறுக்கமடைந்துகொண்டேபோனது முகப்பில் மெல்ல நிழலாடிய உருவத்தை கவனித்த முத்து முப்பிடாதியின் கையைக் கீறி விலகினாள்.

“எவ கெடப்பானு அலயுத நாயி! கைய தூர எடு முதல்ல”

“ஏ! என்னத்துக்கு இப்ப கத்தற? அப்படி என்ன நடந்து போச்சு” என்றவாறே முத்துவின் கையை இறுக்கிப் பிடித்தான்.

“உனக்கு அரிப்பெடுத்துப்போயிருந்தா உன் வீட்டு பொம்பளயாளுக கிட்ட போகவேண்டியதான” கண்ணு செவக்க கையை ஓங்கிய முப்பிடாதி, முத்து கன்னத்தில் அறைந்த பின்புதான் முத்துவுடன் மகேசும் வாசலில் நின்றிருந்தது தெரிந்தது.

மறுமுறை கையை ஓங்கியவன் மகேசைப் பார்த்ததும் சுவற்றில் அறைந்தான். என்னக்கா? என்னக்கா? என்று புரியாதவளாக சத்தம் கேட்டு உள்ளே வந்த மகேசு முழித்தாள். “ஒன்னும் இல்ல மகேசு” என்று கண்ணீரைத் துடைத்தபடி முத்து எழுந்துகொண்டாள். வெளியே மழை பிரித்துக்கொண்டிருந்தது.

“கூட்டுப்போ! பெரிய யோக்கியச்சியாட்டம்”

“இந்தபாரு நீ ஒன்னும் எங்க அக்கா யோக்கியத்த நொட்ட வேண்டாம்” என்று மகேசு சொல்லி முடிக்கும் முன்பே முத்து அவளை நிறுத்தி ஒன்னும் பேசாத மகேசு போ! பேசாம, என்றாள். உக்கிரம் கூடியபடி இருளோடிய வானில் கோடை இடி அலறியபடி இருந்தது.

“வெளிய போடி மொதல்ல, அப்படியே உங்கொக்காகிட்ட ஏன் பஞ்சுமில்லு வேலைக்கு போவாம நின்னான்னு கேளு”

முத்து, முப்பிடாதியை முறைத்தபடி “போதும் நீ பண்ணது எல்லாம்” என்று தலையில் அடித்துக்கொண்டு அழத்தொடங்கினாள்.

“உனக்கு அழச்சொல்லியா தரணும் மில்லு சூப்பர்வைசர் கூப்பிடும்போது இளிச்சு இளிச்சு போகத்தெரிஞ்சது? பின்ன இந்த அரிப்பெடுத்தவங்கிட்டதான கண்ணீர் வடிச்சுகிட்டு நின்ன? அப்ப மட்டும் நாங்க வேணுமோ?”

பேசுவதற்கு வாயெடுத்த மகேசை “நீ ஒன்னும் பேசாத மகேசு! பேசாம போ புள்ள!” என்றவாறு கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மகேசை அழைத்தபடி வெளியேறினாள்.

மறுவாரமே முப்பிடாதி வீட்டில் இருந்து முத்துவை பெண் பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் போனதுதான் தாமதம் என்று மகேசு விண்ணுக்கும் மண்ணுக்கும் குதிக்கத் தொடங்கினாள். முத்துவின் அம்மா கையில் வைத்து இருந்த நாடா பண்டலை மகேசு மேல் எறிந்துவிட்டு,

“அப்பா இல்லாம அனாதரவா இந்த ரெண்டு முண்டைகளையும் எப்படி கரைசேப்பனோனு நான் மலைக்காத நாள் உண்டா? அப்படி என்னடி குறைய கண்ட? நீயா கட்டிக்கிறப்போற?”

“இப்ப அவ சொன்னா சரிதான? கேட்டுக்கோ உம்மவகிட்ட” என்று முத்துவை பார்த்தபடி அவளருகே அமர்ந்தாள். முத்து, மகேசு முதுகில் விளையாட்டாக தட்டிவிட்டு “எனக்கு சம்மதம்தான்மா” எனக்கூறி சமையல் வேலையில் மும்முரமானாள். சம்மதம் சொல்லும்போது முத்துவின் முகத்தில் மலர்ந்த சிரிப்பு கொடுத்த அதிர்ச்சி மகேசை மறுவார்த்தை பேசவிடாமல் செய்தது.

திருமணத்திற்குப் பின்பு முத்து தன் அம்மாவீட்டுக்கு வரும் போதெல்லாம் முத்து முகத்தில் இருக்கும் பூரிப்பு, மகேசை தொடர்ந்து வியப்பில் ஆழ்த்தியது.

“எப்படிக்கா? அவர உனக்கு உண்மையாவே புடிக்குமா” என்று அடிக்கடி முத்துவிடம் கேட்டுக்கொண்டே இருந்தாள். முத்து தன் வழக்கமான சிரிப்புடன் மகேசு தலையில் தட்டிவிட்டு போ புள்ள! என்ற பதிலுடன் சென்றுவிடுவாள். அந்தச்சிரிப்பு அவளிடம் வெகுநாட்களாக தங்கிவிட்ட சிரிப்புதான்.

“பிரில் பாவாடையா குடுத்தீகன்னா தங்கமாப்போகும்” என்று கேட்டு எட்டு பார்ட் பாவாடைத்துணிகளில் பிரில் வைத்து தைத்துக் குடுத்தாள். பிரில் வைத்த பாவாடை தைக்க கூடுதலாக 25 பைசா.

“அங்கன வேண்டாம் வீட்டுல போட்டு தைச்சுக்கிடட்டுமா அண்ணாச்சி” என்று முத்து கேட்க, பவர் மிசினை வீட்டில் போட்டுக்கொடுத்திருந்தார் முதலாளி. “சூட்டிக்கான புள்ள எங்கனாலும் கொறையாம தைக்குமென்று” அவருக்குத் தெரியும். போக அது வழக்கத்தில் உள்ள முறைதான்.

“மகேசு, இன்னைக்கு சாந்தி தியேட்டர்ல அவுக தலைவர் படம் போட்டுருக்காகன்னு வெள்ளன வான்னாக! படத்தப் பாத்துட்டு ஆனந்தா ஓட்டல்ல புரோட்டா சாப்ட்டுதான் நைட்டு வருவோம். நான் போய்ட்டு வாரேன்”னு சொல்லும்போது கூட மகேசுக்கு வியப்பு அடங்கவில்லை. முப்புடாதி வண்டியில் உற்சாகமாக முத்துவை ஏத்திக்கொண்டு கிளம்பிய பயணம் கிருஷ்ணாபுரம் தாண்டும் முன்னரே முடிந்திருந்தது. முப்பிடாதிக்கு தன்னுசார் இல்லை. முத்துவுக்கு கொஞ்சம் விழிப்பு இருந்தது. இருவரையும் இலந்தோப்பு மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். அவனுக்கு நினைவு திரும்பும்போது முத்து இருந்ததுக்கான சுவடே இல்லாமல் போயிருந்தது.
வலது காலில் விழுந்த அடி அவனை தவங்கியபடி நடக்கப்பணித்து இருந்தது. பேச்சில் முன்பு இருந்த சவுடாலோ கேலியோ இல்லை.

5

தான் குடித்தனம் போன வீட்டில் இருந்தான் முப்பிடாதி. கடந்த பத்து நாட்களாக அவன் உடல் நோவின் ருசி கண்டுவிட்டது. “அவன அவன் போக்குல கொஞ்ச நாளைக்கு விடு, ஓயாம போய் நோண்டிக்கிட்டே இருந்தா அதே நெனவாதான் இருக்கும்” என அவர் போக்கில் இருந்த அப்பாவின் செயல்தான் ஒரே ஆறுதல். தினமும் அவன் அம்மா மட்டும் வந்து சாப்பாடு கொடுத்து ஒரு வேளை சாப்பாட்டைப் போராடி சாப்பிட வைத்து கொண்டிருக்க இந்த நான்கு நாட்களாக கதவை திறந்து சாப்பாட்டை மட்டும் வாங்கிக் கொண்டிருந்தான். இன்று காலையில் அம்மாவுக்கு பதிலாக மகேசு கொண்டு வந்தாள்.

இங்க எதுக்கு வார? என்று வேண்டா வெறுப்பாக கேட்டான். அவள் அவனைக் கண்டு கொள்ளாதவளாக போய்க் கொண்டிருந்தாள். எழுந்து வேட்டியைக்கட்ட முயன்றவன் தடுமாற மகேசு ஓடிவந்து பிடிக்கும் முன்பு சுதாரித்துக் கொண்டவன் போல சுவரை பிடித்துக்கொண்டு வேண்டாம் என்பது போல மகேசிடம் கையைக் காட்ட,

“உங்கள ஏதும் தொந்தரவு பண்ணுதனா? எம்பாட்டுக்கு வாரன் போறன் உங்களுக்கு என்ன வலிக்குது”

“போன்னா, தூர போ நாயே அதவிட்டு வியாக்கியன மயிறு பேசிக்கிட்டு உனக்கு வாய்ல சொன்னா புரியாதா”. வெரட்டி கத்த கண்கள் இருண்டு கொண்டு வந்தது தன்னுசார் வந்து தலையை குலுக்கிக்கொண்டான். எந்த பதட்டமும் இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்த மகேசு,

“எல்லாம் தெரிஞ்சுதான் வாரேன், பஞ்சு மில்லுல நீங்களும் வேலைக்குச் சேந்தது. அக்கா வயத்துல உசுரோட தயங்கி நின்னப்போ அந்த சூப்பர்வைசர அடிச்சது அதுக்காக ஒரு நா முழுக்க போலிஸ் ஸ்டேசன்ல வாரவன் போறவன்கிட்டெல்லாம் அடிப்பட்டது. உங்க வேல போனது”.

முறைத்தபடி இருந்த முப்புடாதியின் கண்களில் மெல்ல திரவம் படரத் தொடங்கியது. நாற்காலியில் அமர்ந்து ஒரு நிமிட மௌனத்திற்கு பின்னர் “முத்து சொன்னாளோ” என்றான்.

“அவ உடம்புல தங்குன மூச்ச இத சொல்லத்தான்
புடிச்சு வைச்சு இருந்தா”

5.1

கைவீக்கமெடுத்து விண்விண்னென்றது. நிச்சயமாக நேற்று தரையில் அடித்ததால்தான். கையில் தோல் தடித்து பளபளத்துக்கொண்டு மோலிமேடை மறைந்திருந்தது. தசைகள் காய்ந்து தளர்ந்துகொள்ள வயிறு கவ்விப்பிடிப்பது போல இருந்தது முப்பிடாதிக்கு, அந்த வாடையைத் தவிர்த்து அவன் அனுமதியில்லாமல் வந்தது மகேசு மட்டும்தான். எப்படி வந்தாள் என்கிற ஓர்மை துளி கூட நினைவில் வரவில்லை.

“கேக்கா பாரு, சொல்லு உங்தங்கச்சிகிட்ட பஞ்சுமில்லுல நல்லா விழுந்து பெறக்கி வேல ஓடுச்சுனு” அன்று கடுங்கோவத்தில் கத்தியதை இன்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். அதை… “அத மனசுல வச்சா சொன்னா?” நேற்றைக்குப்போலவே குரல் உளறியது.

ஒட்டியும் வெட்டியும் முத்து பேசிய வார்த்தைகளே இரைச்சலெடுத்துக் கொண்டிருந்தது. அவ்வப்போது வந்த தன்னுசார் எல்லாம் அவள் பேசியது கூட முத்துவின் குரல் என்றே உணர்த்தியது. நொசநொசத்துக்கொண்டு இருந்த இடது கையில் ஒருமுறை கண்களைத் துடைத்துக்கொண்டான். வலுவத்தனையையும் கூட்டி எழுந்தமர்ந்தான். “நாங் வாரேன்” என்று கதவடைக்கும் சத்தம். சந்தேகமே வேண்டாம் முத்துவின் குரலேதான். தடுமாறி எழுந்து சுவர் பிடித்து நடந்து கதவருகே சென்று பார்த்தான். நேற்றைக்கு போலவே கதவு உள்புறமாக தாழ் இடப்பட்டிருந்தது. கதவைத் திறக்கவும் சுருள் சுருளாக அடர்ந்த கருந்திட்டுக்கள் கண்முன் விழுந்து பின் தெளிவான தெரு நேற்றைக்கு போலவே வெறிச்சோடிக்கிடந்தது. கதவடைக்க, அதுபோலவே வீடும் ஆள் அரவமற்றுக்கிடந்தது. சாவித் துவாரத்தில்இருந்து வரும் காற்றுக்கு ஒதுங்கி மறைந்து வந்து ஒரு மூளையில் மறுபடியும் படுத்துக்கொண்டான்.

5.2

சன்னல் நூலாம்படையை நைத்தவாக்கில் இழுத்துச் சாத்தியிருந்தது. மூளையில் ஒரு வாரமாக கொட்டிக்கிடந்த சோற்றில் ஈ மொய்த்துக் கிடந்தது. மூட்டுக்கிடையில் கைகோர்த்து முனங்கியபடி சுருண்டு கிடக்கத்தொடங்கிய முப்புடாதி இப்போது அந்த வாசத்துக்கு நடுங்கி தலையணையில் முகம் புதைக்கவில்லை. அது கொஞ்சம் எட்டித்தான் கிடந்தது. உடல் முன்பு போல குறுகி சுருண்டும் கிடக்கவில்லை. அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக, அவனை நோக்கிப் பொங்கி வந்த வேர்வை ஊறிய கதம்பப்பூ மணத்திற்கு தன்னை முழுதளித்திருந்த அவனுக்கும் தளத்திற்கும் இடையில் வேர்வையும், வாந்தியும் இன்னபிற கறைகளும் படிந்து அடையடையாய் இருந்த முத்துவின் பிரில் பாவாடை தரைவிரிப்பாக இருந்தது.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2019 Designed By Digital Voicer