நாராய் நாராய்

சோ.தர்மன்

பகிரு

இந்த இருபதாண்டுகளில் அந்தக் குளத்தை அவன் முழுமையாக உள்வாங்கிக்கொண்டான் என்றுதான் சொல்ல வேண்டும். ஒருநாள் கூட அவனை ஏமாற்றி வெறுங்கையோடு அனுப்பியதில்லை குளம். குளத்தின் சகல பரிமாணங்களும் அவனுக்கு அத்துபடியாய் போயிற்று. குளத்தையும் அதைச் சுற்றிலும் புதைந்து கிடக்கும் ரகசியங்களும் அவனிடம் சேகரமாகத் தொடங்கி பல காலமாயிற்று. குளத்தைச் சுற்றியுள்ள கரையில் எங்கேயாவது ஓரிடத்தில் ஒரு கொக்கைப் போல் உட்கார்ந்து காத்திருப்பான். அவனும்கூட தன்னை ஒரு நீர்வாழ் பறவையைப் போல்தான் உணர்ந்தான்.

வற்றாத அந்தக் குளத்தில் குதூகலித்திருக்கும் எண்ணற்ற பறவைகள் அவனை எப்போதும் சந்தோஷிக்க வைத்துக்கொண்டிருந்தன. கரைகளில் தளிர்த்து செழித்திருக்கும் அடர் மரங்களில் பறவைகளின் கூடுகளும் குஞ்சுகளும் சண்டை சச்சரவுகளும் பலவித பறவைகளின் விதவிதமான ஒலிகளும் கேட்டுக்கொண்டேயிருக்கும்.

இரண்டு நாட்களுக்கு முன்னால் சாயங்காலம் கீழ மடையோரம் உட்கார்ந்து தூண்டில் போட்டுக் காத்திருந்தான். இரு கண்களும் தூண்டிலின் மிதப்பு அசைவின் மீது குறி வைத்திருந்தன. திடீரென்று பக்கத்தில்ஸ்ளப்...’ என்று தண்ணீர் சிதறும் சத்தம் பெரிய மீன்கள் ஏதாவது துள்ளியிருக்கலாம் என்றுதான் நினைத்தான். அந்த இடத்திலிருந்து வட்டவட்டமாய் அலைகள் எழும்பியதைப் பார்த்தவன் திடுக்கிட்டான். கையடக்க உருண்டையான, பந்தைப் போல் ஒரு குருவிக் குஞ்சு மரத்தின் கூட்டிலிருந்து தவறி விழுந்து, நீரில், தன் பிஞ்சுக்கால்களையும், பூஞ்சை இறக்கைகளையும் அசைத்தப்படி தத்தளித்துக்கொண்டிருந்தது. தூண்டிலை கரையில் வீசிவிட்டு வேகவேகமாக ஓடி நீருக்குள் பாய்ந்தான். இடுப்பளவுதான் தண்ணீர். இரு கையேந்தி ஒரு பூவைத் துக்குவது போல் தூக்க குனிந்த போது தன் முகத்திலும் நீர்த்திவலைகள் தெறிக்கசளார்என்ற சத்தத்துடன் பெரிய மீன் ஒன்று குருவிக்குஞ்சை நீருக்குள் இழுத்துக்கொண்டு போயிற்று. அவனால் தன் முகத்தில் ஒட்டியிருந்த நீர்த்திவலைகளைத் துடைத்துக்கொண்டு கரையேற மட்டும்தான் முடிந்தது. பறவைகளுக்கு மீன் இரையாவதைப்போல் மீனுக்கு பறவைக் குஞ்சு இரையாகிப்போனதை எண்ணி வியப்புற்றான். நெஞ்சு கனக்க தூண்டிலை கையில் எடுத்தான்.

பல தடவை இது மாதிரி குஞ்சுகளைக் காப்பாற்றி, அதன் கூடுகளைக் கண்டுபிடித்து, கஷ்டப்பட்டு மரத்தில் ஏறி மெதுவாக வைத்துவிட்டு இறங்கியிருக்கிறான். சிலநேரம் பறவைகளின் பிராண்டுதல்களையும் எதிர்க் கொண்டிருக்கிறான். கணப்பொழுதில் தன் கண் முன்னே பறவைக் குஞ்சின் உயிர் பறிபோனதை எண்ணி பல நாட்கள் வருத்தப்பட்டான். திரும்பி வந்த தாய்ப்பறவை தன் குஞ்சைக் காணாததால் பரிதவித்து புலம்பியதைப் பார்த்து மிகவும் வருத்தமுற்றான். பறவை - ஆகாயம் மீன் - பாதாளம் இரண்டையும் ஜெயிக்க பிரபஞ்சத்தால் மட்டுமே முடியும்

அவன் குளத்தின் பாஷையையும், குளத்துடன் பேசிக் கொள்ளும் முறையையும் எப்படி கற்றுக்கொண்டானோ, அதே போல் பறவைகளின் பாஷையையும், அவற்றின் பேச்சையும் உணரத் தொடங்கியபோது மிகவும்; சந்தோஷமும், ஆச்சர்யமும் அடைந்தான். புறவைகளின் களி நடனத்தையும், காதல் பேச்சுகளையும், இணைசேரும் இன்ப விளையாட்டுகளையும் அவன் ரசிக்கவும், புரியவும் தொடங்கியபோதுதான், பறவைகளுக்கேயுரிய தனி பாஷையை அவன் தெரிந்துகொண்டான். அதே போல் மரங்களும், செடிகளும், கொடிகளும் கூட தங்களுக்குள் பேசிக்கொள்ளும் பேச்சு இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டான். அதை உணர்ந்து அறிய இன்னும் இருபதாண்டுகள் தூண்டில் போட்டு தவமிருக்கவேண்டுமோ என்னமோ.

இப்போது தானே ஒரு குளக்கரை மரமாகவும், ஒரு நீர்வாழ் பறவையாகவும் அல்லது தானே அந்தக் குளமாகவும் மாறியிருப்பதை உணர்ந்தான். பொன்மாடன் என்கிற தன்னுடைய பெயர் மறைந்துபோய் குளத்தான் என்கிற பெயரே நிலைத்து பல வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. மீன் பிடிக்கிற அத்தனை உத்திகளையும் அவன் பறவைகளிடமிருந்தே கற்றுக்கொண்டான். அதுமட்டுமா, கால்கடுக்க நாள் முழுவதும் சலிக்காமல் காத்திருக்கும் பொறுமையை, கிடைத்த கணநேர பொழுதில் குறி தவறாமல் கொத்துவதையும், நழுவிச் செல்லும்போது ஏற்படும் ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவத்தையும், நிறைய, ஏராளமான இரைகள் கிடைக்கும்போது அளவான சந்தோஷத்தை வெளிப்படுத்தவும், தோற்றவர்களைப் பார்த்து புளகாங்கிதமடையாதிருக்கவும் பறவைகளே அவனுக்கு கற்றுக் கொடுத்தன. இறந்துபோன உயிர்களை உண்ணாத நீர்வாழ்பறவைகளின் பழக்கத்தை எண்ணி வியந்தான். இப்போது அவன் பறவைகளின் பேச்சையும் குளத்தின் பேச்சையும் மறுமொழியுடன் பேச முற்றாகக் கற்றுக்கொண்டான்.

அடர்ந்திருந்த சங்கச்செடிப் புதர் மறைவில் அமர்ந்து தூண்டிலை வீசிவிட்டுக் காத்திருந்தான் குளத்தான். தண்ணீர் திட்டுக்களில் ஏராளமான கொக்குகளும், நாரைகளும், கூனக்கடாக்களும் சிறகை உலர்த்திக்கொண்டிருந்தன. உள்ளான்களும், சிறகுகளும் நீள் கால்கள் தெரிய தண்ணீருக்குள் தவம் இருந்தன. அலையடிப்பில் மிதந்து முங்கி விளையாடின முக்குளிப்பான்கள். இரண்டு நாரைகள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் பேச்சு குளத்தானின் காதுகளில் அரச்சலாய் கேட்டது. கண்களை மிதப்பின் மீது வைத்துக்கொண்டு காதுகளை நாரையிடம் நீட்டுவது சங்கடமாயிருந்தது. ஆனாலும் நாரைகளின் உரையாடல் லேசாக கேட்டபடிதானிருந்தது.

“தூண்டில் போடறவங்கள ஒரு எழுத்தாளர் தவமிருக்கிறதா எழுதியிருக்காரு”

சரியாத்தான் எழுதியிருக்காரு, நம்ம ஒத்த மீனுக்கு தவமிருக்கிற மாதிரிதான், தூண்டில்காரனும் தவமிருக்கான்

அந்த எழுத்தாளர் பேரு ஒனக்கு தெரியுமா

சொல்லேன்

மா.அரங்கநாதன்

முத்துக்கறுப்பன்னு சொல்லு

அவரேதான்

இந்த உரையாடல் தன் காதில் விழுந்தவுடன் குளத்தானுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. தூண்டிலை நீட்டிக் காட்டியபடியே சத்தமாகச் சொன்னான்.

உங்களப் பத்தியும் ஒரு எழுத்தாளர் எழுதியிருக்கார் தெரியுமா

அதுதான் ஊரு ஒலகத்துக்கே தெரியுமே, நாராய்.. நாராய் பாடிய சத்திமுற்றத்துப் புலவன்

அது பழைய கத, இப்ப ஒரு போஸ்ட்மார்டனிச எழுத்தாளர் எழுதியிருக்காரு

அப்படியா அது யாரு

ஜெயமோகன்

நித்திய சைதன்ய யதியோட சிஷ்யர்தான

அவரேதான் சரியா சொல்லிட்டியே

என்னனு எழுதியிருக்காரு

ஆத்துல ஒரு பொம்பள குளிக்கா, அவளோட ஆடையெல்லாம் ஆத்தோரம் கெடக்கு, அவ கழட்டி போட்ட மார்புக்கச்ச தரையில செத்துக் கெடக்கிற கொக்கு மாதிரி இருக்குன்னு எழுதியிருக்காரு

பெண்களோட மார்புகள தாங்குகிற கச்சைனா அது எவ்வளவு பெரிய பாக்கியம், யாருக்கு கெடைக்கும், ஜெமோவுக்கு நன்றி

சரி, உங்க பேரு என்ன பேரு

எம் பேரு சத்தி, என் ஜோடி பேரு முத்து

ஆம்பள பேரு, பொம்பள பேருனு தனியா இல்லையா

பேர வச்சு என்ன ஆம்பள, பொம்பள, உருவத்த வச்சும், உறுப்புகள வச்சும்தான் ஆம்பள, பொம்பள, அதுவும் போக இந்தப் பேர்களுக்கு பின்னால ஒரு பெரிய கதையே இருக்கு

அப்படி என்ன கத, பெரிய கத

ஒனக்கு சத்திமுற்றத்துப் புலவர் தெரியுமா

இந்த நாரைகள பொண்டாட்டிட்ட தூது விட்டான

அவனேதான். அவன் தூது விட்டது யாருனு நெனைக்க, எங்க பூட்டனையும், பூட்டியயையும் தான்

ஏய்... முத்து, எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம், நூறு பேருகிட்ட கேட்டாச்சு, ஒருத்தரும் பதில் சொல்லல

“மொதல்ல பேரு சொல்லிக் கூப்பிடுறத விடு, பக்கத்துலதான என் வீட்டுக்காரர் இருக்காரு, நம்மளப்பத்தி என்ன நெனைக்கமாட்டாரு, நீ இங்க தூண்டில் போட வரல, எம் பொண்டாட்டியத்தான் பாக்க வாரனு சொல்லிருவாரு, கொஞ்சம் சந்தேகப் புத்திகாரர், மத்தபடி அப்புராணி, சரி, இப்ப கேளு, என்ன சந்தேகம்”

ஒங்க பூட்டனையும், பூட்டியையும் தூது விட்டான்ல்ல, அந்த சேதி, அவன் பொண்டாட்டிட்டப் போய் சேந்துச்சா, இல்லையா. அந்த புலவனோட வறுமை தீந்துச்சா? இல்லையா? மன்னன் பரிசு குடுத்தானா? இல்லையா? பல வருஷமா என் நெஞ்ச அரிச்சுக்கிட்டே இருக்கிற கேள்வி, யாருக்குமே பதில் தெரியல, சொல்லுங்க முத்... தெரியாம பழையபடியும் பேரச் சொல்லிட்டேன்

பரவாயில்ல, என் வீட்டுக்காரனுக்கு காது கொஞ்சம் மந்தம், மத்தபடி தங்கமான கொணம், எதுக்கும் இன்னொராட்ட உரிமையோட பேரச் சொல்லாத

சரி, அந்த சந்தேகத்த என்னால சொமக்க முடியல

“பரவாயில்ல. இதப்பத்தி யாரெல்லாம் கவலப்படணுமோ, அவங்க யாருமே கவலப்படல, ஆனா, ஒரு தூண்டில்காரன் கவலப்படுறான், தமிழ்நாட்ல இலக்கியம் எந்த அளவுக்கு சீரழிஞ்சு போச்சுனு பாத்தியா தூண்டிலு”

யாரெல்லாம் கவலப்படணும். இதுக்கும் இலக்கியம் சீரழிஞ்சதுக்கும் என்ன சம்பந்தம்

இந்தநாராய்... நாராய்... செங்கால் நாராய்’; பாட்ட எத்தன பேராசிரியருங்க உதாரணம் காட்டிப் பேசுறான், எத்தன கவிஞருங்க அப்படியே உருகுறான், அவங்க இதப்பத்தி யோசிச்சானா

சரி. அதவிடு, இப்பச் சொல்லு. சத்திமுற்றத்தான் பொண்டாட்டி புள்ளைகளோட பசி நீங்குச்சா? இல்லையா?”

முத்து நாரை சொல்லப் போகும் கதையைக் கேட்கவோ என்னவோ குளம் அமைதியாகிப் போனது. நாரைகளின் கதையென்றால் அது குளத்தின் கதையும் தானே. நாரையின்றி குளமேது? குளமின்றி நாரை ஏது? குளத்தானை நெருங்கி அருகில் வந்தன அந்த ஜோடி நாரைகள். அவை சத்திமுற்றத்துப் புலவனின் சோகக் கதையை சுமந்துத் திரிபவை.

தூண்டில மடக்கி கரையில வச்சா, நீ கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்றேன். ஏம்னா, காது என்கிட்டயும், கண்ணு தூண்டில் மிதப்பலயும் இருந்தா ரெண்டு காரியமும் உருப்படாது. செய்ற வேலையில முழுக்கவனத்தையும் வைக்கனும். குளத்துக்குள்ள நின்னுக்கிட்டு போறவார ஆளப்பாத்தா நான் பட்டினி கெடக்க வேண்டியதுதான். அப்புறம் மீனு என்கிட்ட வந்து பொண்ணு கேட்கும்.”

கோவப்படாத முத்து. இப்ப சொல்லு தூண்டில மடக்கிட்டன்

பேரச் சொல்லாத சொல்லாதன்னாலும் கேக்க மாட்டேங்க. ஓம் யோகத்துக்கு எம் புருஷன் செவிடாப் போயிட்டான். இல்லனா இந்நேரம் கதையே வேற

சரி. சொல்லு தாயி

இது பேச்சு. அதுக்காக ஓயாம தாயி, தாயினு சொல்லாத, எனக்கு ஒன்னும் அவ்வளவு வயசாகி போகல

சரி சரி. சொல்லு

“கவனமா கேளு, தூண்டிலு. கடுமையான குளிர்காலத்துல நாங்க கூட்டங்கூட்டமா கௌம்பி, வடக்கேயிருந்து தெக்க வந்திருவம். அதுக்கு வலசை போறதுனு பேரு. நீங்க பொழப்பத் தேடி வேற எடம் போறீகள்ள அதே மாதிரிதான். அப்படியான ஒரு ராத்திரி நெலா வெளிச்சத்துல எம் பூட்டனும், பூட்டியும் ஏகாந்தமா பறந்து போறாக. ராத்திரில பறக்கறது எங்களுக்கு பாதுகாப்பு, அப்புறம் வெய்யில் களைப்பு தெரியாது. திடீர்னு ஒரு சோகமான முனகல் சத்தம். நாரைகளே... ஏய் நாரைகளே, செவந்த கால் நாரைகளே, பளபளனு ஒங்க அலகு பவளம் கெனக்கா தகதகனு மின்னுது, அப்படின்னு”

“இதக் கேட்டதும் என்னோட பூட்டியும் பூட்டனும் அப்படியே சொக்கிப் போயி நின்னுட்டாங்க. அழகப் புகழ்ந்தா மயங்காதவர் உண்டா தூண்டிலு. என்னனு பாத்தா சத்திரத்து மொட்டை மாடியில ஒராள் சுருண்டு படுத்துக்கெடக்கான். வாயிலருந்து கவிதையா வருது. சுத்திமுற்றம்ங்கிற ஊர்ல ஒரு கொளம் இருக்கும். அங்க தங்கிட்டு அப்படியே ஊருக்குள்ள போனா, எப்படா இடிஞ்சு விழுவோம்னு நனைஞ்சு போன சுவரோட ஒரு வீடு இருக்கும். கூரை வீடுதான். அந்த வீட்டுக்குள்ள என் மனைவி உட்கார்ந்துக்கிட்டு பல்லி நல்ல சேதி சொல்லாதானு ஏங்கிக்கிட்டு, பசியோட, மொகட்டு வளையப் பாத்திட்டு ஒக்காந்திருப்பா. அவகிட்ட, ஒம் புருஷன் இன்னும் மன்னனைப் பாத்து பரிசு வாங்கல, குளிர் வாடையில நடுங்கி, வெற்று மேலோட, கையாலயும், காலாலயும் ஒடம்பப் பொத்திக்கிட்டு சுருண்டு பாம்பு போல படுத்துக் கெடக்கிறான்ங்கிற செய்திய மறந்திராம சொல்லியிருங்கனு சொல்றான். அவன் சொன்ன வெதத்த வச்சு இவன் ஒரு புலவன்னும், இவன் சொன்னது கவிதையின்னும் எங்க பூட்டிக்கு புரிஞ்சு போச்சு. புலவனுக்கு ஈவு இரக்கம் காட்டாதவன் நல்ல நாரையா இருக்கமாட்டான். நேரா எங்க பூட்டன இழுத்துக்கிட்டு, சத்திதுற்றத்துல புலவன் சொன்ன அடையாளத்த வச்சு வீட்டையும் கண்டுபிடிச்சாச்சு. குளிர்ந்த மண் தரையில கந்தைத் துணியவிரிச்சி ஒரு கொழந்த படுத்திருக்கு. தொட்டில்ல இன்னொரு கைக்கொழந்த பசியோட அழுகுது. சத்திமுற்றத்தான் பொண்டாட்டி தொட்டில ஆட்டிக்கிட்டு உக்காந்திருக்கா. சின்னதா ஒரு விளக்கு வெளிச்சத்துல பார்த்தா பரிதாபம். பசியில கண்ணு குழிவிழுந்து, கன்னம் ஒட்டிபோயி, எங்க பூட்டிக்கும் பூட்டனுக்கும் விருளி அத்துப் போச்சு. ஈரக்கொல கருகிப் போச்சு உடனே ரெண்டு பேருமா பேசி ஒரு முடிவு எடுத்தாங்க.”

என்ன முடிவு எடுத்தாங்க சொல்லு முத்து

ஒம் வாயில மீன் முள்ள வச்சுக் குத்துனாலும் நிய்யி என் பேரச் சொல்றத விட மாட்ட. நாங்க என்ன ஒங்கள மாதிரி மானங்கெட்டவங்கனு நெனச்சயா தூண்டிலு.”

“கவனமா இருக்கேன். இனிமே சொன்னா இறக்கையால அடி”

அந்தக் குடிசையை ஒட்டி இருந்த வேப்பமரத்திலேயே ராத் தங்கிட்டாங்க. விடிஞ்ச ஒடனே கொளத்துக்குப் போயி, நல்லமீன் பெரிய மீனாப் பிடிச்சி இங்க கொண்டாந்து பொத்துனு போட்ட ஒடனே, அந்தப் புலவனோடப் பொண்டாட்டி எட்டிப்பாத்தா ரெண்டு கெண்டையும் தரையில துள்ளுது. வேப்பமரத்த அண்ணாந்துப் பாத்தா அங்க ரெண்டு பேரும் உச்சிக் கொப்புல உட்காந்திருக்க, கையெடுத்து கும்பிட்டுட்டு ரெண்டு கெண்டையையும் வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிட்டா.”

அப்ப அவ சைவம் கெடையாது அசைவம்தான்

“இங்க கேளு தூண்டிலு. புலவருங்க, கவிஞருங்க எல்லாருமே அசைவமாத்தான் இருப்பான். யோக்கியமாவும் இருக்கமாட்டான். ஏம்னா அவன் தொழில் அப்படி. எல்லாமே தன்னால வந்து, தானா மேல விழும்போது அவன் என்ன மரமா? அதுவும் போக பசி வந்தா பத்தும் பறந்திரும்ங்கிறது சொலவட, பெறகென்ன சைவம், அசைவம். மத்தியானம் போல குழந்தைகளோட சிரிப்புச் சத்தம் கேட்டதும் எங்க பூட்டனுக்கும், பூட்டிக்கும் சந்தோசம். இப்படியே ரெண்டு நாளா மீன் பிடிச்சுப் போட்டுக்கிட்டே இருந்திருக்காக. அன்னைக்கு ராத்திரி பார்த்தா கெக்கக் கேனு பொம்பள சிரிப்பு, பாத்தா வீட்டுக்குள்ள புருஷனும், பொண்டாட்டியும் கொஞ்சி கொலாவுறாக. தீப வெளிச்சத்துல புலவனோட பொண்டாட்டி கழுத்துல தங்கமும் வைரமும் மின்னுது. கதைய எல்லாத்தையும் சொல்லியிருப்பா போலிருக்கு, விடிஞ்ச ஒடனே மரத்தடியில நின்னு அப்படியே அண்ணாந்து பார்த்து கும்பிட்டான் புலவன். சும்மாவா நாலு நாளா பொண்டாட்டி புள்ளைய காப்பாத்தியிருக்கோம்ல, அப்படியே அதே மரத்துல கூடு கட்டி நாங்களும் கொழந்த பெத்தாச்சு. எங்க பாட்டனும் பாட்டியும், பிறகு எங்க அப்பனும் ஆத்தாளும் இப்ப நானும் இவனும் இதே மரம்தான். இதே கொளம்தான். இப்ப நான் உண்டாகியிருக்கேன் கூட்டக் கொஞ்சம் பிரிச்சுக் கொடுக்கனும்.”

அதுலயிருந்து வேற ஊருக்கு போகவே இல்லையா?”

தேவையான மீன் கெடைக்குது. கூடு கட்ட பெரிய மரம் இருக்கு இதுபோக புலவனோட பாதுகாப்பு ஏம்னா அவன் பொண்டாட்டி புள்ளைகள காப்பாத்துனது நாங்கதாங்கிறத தெரிஞ்சுக்கிட்டான். அதைவிட முக்கியமான ஒரு விஷயம் அடுத்த தடவ புலவன் மன்னன்கிட்ட போனபோது பரிசு எதுவும் வேண்டாம்னுட்டு ஒரே ஒரு வரம் மட்டும்தான் வேனும்னு கேட்டு வாங்கிட்டு வந்தான்.”

வரமா. அப்படி என்ன வரம் வாங்கியாந்தான்

எத்தன இருந்தாலும் அவன் கவிஞன் இல்லையா, அறத்தோட வாழ்றவனாச்சே சாதாரண ஆளா, மன்னர்களுக்கே யோசனை சொல்றவங்களாச்சே.”

சரி சரி. என்ன வரம்னு சொல்லு

காலா காலத்துக்கும் இந்த கொளத்துல யாருமே வலைபோட்டு மீன் பிடிக்க கூடாது. கொளத்தையோ கொளத்தோட கரையிலிருக்கிற மரங்களையோ சேதப்படுத்துனா அதை ராஜ துரோகமா கருதி மரண தண்டணை. ஆனால் தூண்டில் போட்டு யார்னாலும் மீன் பிடிக்கலாம். இது புலவன் வாங்கி வந்த வரம். ஆதனாலதான் எக்கசக்கமா மீனு கெடக்கு, கரை முழுக்கத் தோப்பா மரங்க வளர்ந்திருக்கு. ஆயிரக்கணக்கான பறவைக அடைஞ்சு கெடக்கு. இந்த கொளத்தோட பேருதான் சத்திமுற்றத்துக் குளம். இப்ப நானும் இவனும் நாலாவது தல மொறையா இருக்கோம். அஞ்சாவது தல மொறைக்கு அஸ்திவாரம் போட்டாச்சு. ஆமா இவ்வளவு கதை கேட்டியே தூண்டிலு நீ யாருனு தெரியுமா?”

நான் தூண்டில் போட்டு மீன் பிடிக்கிறவன். எம் பேரு பொன்மாடன். இப்ப கொளத்தான்னு சொன்னாத்தான் தெரியும்.”

அட முட்டா தூண்டிலே நிய்யி யாருனு தெரியுமா எங்க பூட்டனும், பூட்டியும் மொத மொத அந்த புலவனோட வீட்ட கண்டுபிடிச்சாக பாத்தியா, அப்ப புலவனோட பொண்டாட்டி பசியோட கொழந்தையை தொட்டில்ல போட்டு ஆட்டிக்கிட்டு இருந்தாள்ல அந்த கொழந்ததான் நிய்யி. சத்திமுற்றத்துப் புலவனோட ஒரே நாரைப் பாட்டு மாதிரி ஒரே வாரிசு நிய்யிதான். இந்த கொளமும் ஒன்னோட கொளம்தான். ஏம்னா ஒன்னோட அப்பன் ராசாகிட்ட அந்த வரம் வாங்கிட்டு வரலன்னா, இந்த கொளத்த மூடி இந்நேரம் பிளாட் போட்டு வித்திருப்பாங்க, இல்ல பஸ் ஸ்டாண்ட் கட்டி வெக்கமில்லாம கொளத்துப் பஸ் ஸ்டாண்டுனு பேரும் வெச்சிருப்பாங்க. வரத்தால தப்பிச்சது கொளம். நிய்யும் இனிமே வாரிசு உரிமை கொண்டாடியிராத நாங்க மொத்தமா சேர்ந்தா நிய்யி கொளத்துக்கிட்ட வர முடியாது. தூண்டில மறந்து போக வேண்டியதுதான் தெரிஞ்சுக்கோ.

தான் பொன்மாடன் மட்டுமில்லை குளத்தான் என்பதும், சத்திமுற்றத்துப் புலவனின் ஒரே வாரிசு என்பதும், தன் அப்பனின் நாரைப் பற்றிய அந்தக் கவிதைதான் தன்னிடம் தூண்டிலாகி வந்திருக்கிறது என்பதையும் புரிந்துகொண்டான் குளத்தான். இது சாதாரண தூண்டில் அல்ல. இந்த குளத்தையும், அதைச் சுற்றியுள்ள மரங்களையும், ஆயிரமாயிரம் பறவைகளையும், நீர்வாழ் உயிர்களையும் காக்கும் விசித்திர ஆயுதம் என்பதை உணர்ந்துகொண்டான் குளத்தான். அதே கைகளில் தூண்டிலுடன் கம்பீரமாக கரைமேல் நடந்து செல்கிறானே குளத்தான். அவன் தூண்டில் போட்டு மீன் பிடிக்க மட்டும் செல்லவில்லை. கண்மாயையும், ஆயிரமாயிரம் உயிர்களைக் காக்கும் காவலாளியாகப் போய்க் கொண்டிருக்கிறான்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2019 Designed By Digital Voicer