நடிகர்திலகம்

ச.இராகவன்

பகிரு

முற்குறிப்பு: இதை ஒழுங்குபடுத்தி வாசிக்க விரும்புபவர்களுக்காக இலக்கமிடப்பட்டுள்ளது.

1

மெயின்றோட்டோட ஓரஞ்சாறு பரப்பில சொரியல் காணியொண்டு இருந்தது. அந்தக் காணியில நடிகர்திலகத்தின்ர தாய்க்காரி உலகநாயகிக்கும், இன்னும் மூண்டுபேருக்கும் பங்கிருந்தது. அந்த மூண்டு பங்குகாரரில வாள்வெட்டுத் துரையனும் ஒராள். அவன்தான் அப்ப ஊருக்குள்ள பெரிய சண்டியன். அவனோட ஆரேனும் தனகினால் வீடுபுகுந்து வெட்டிப்போடுவான். அதால அந்தக் காணியைப் பங்குபிரிச்சு எல்லைபோடுறதுக்கு ஒருத்தரும் வெளிக்கிடேல்ல. காணி முழுக்கப் பத்தை பறுகு வளர்ந்து காடுபத்திப்போய்க் கிடந்தது.

நடிகர்திலகத்தின் தகப்பன் போல்ப்பிள்ளை ஒருக்கால் இந்தக் காணிக்கு எல்லைபோட்டு அடைப்பம் எண்டு வெளிக்கிட்டார். இரண்டு கூலிக்காரரைக் கொண்டு போய்ப் பத்தையள வெட்டித் துப்பரவாக்கத் தொடங்கக் கொஞ்சநேரத்தில துரையன் வாளோட வந்திட்டான்.

“ஆரைக் கேட்டடா காணிக்குள்ள கால் வைச்சனியள்?” எண்டு அவன் உரப்பின உரப்பல்ல, பத்தையள வெட்டிக்கொண்டு நிண்ட இரண்டுபேரும் பின்னங்கால் பிடரியில இடிக்க ஓடிட்டாங்கள். போல்ப்பிள்ளை வெல வெலத்துப்போனார். வீட்டை வந்து மனிசிக்காரிக்கு நடந்த சங்கதியைச் சொன்னார்.

“அந்த அழிவானோட தனகிப்போட்டு நாங்கள் நிம்மதியாய் இருக்கேலுமே? அது காணி போனால் போகட்டும்” எண்டவ மனிசன்காரனை அமத்திப் போட்டா.

இப்பிடியே காலம் போச்சுது. அதுக்குள்ள நடிகர்திலகமும் இயக்கத்தின்ரை நாடகங்களில் நடிக்கத் தொடங்கிப் பேமஸாகிட்டார். அந்தமூட்டம் ஒருநாள் ஏரியாப் பொறுப்பாளர் மாயவன் தற்செயலாய் நடிகர் திலகத்தைச் சந்திச்சாப்போல சுகநயம் விசாரிச்சிட்டு, “எங்கையேனும் ஒரு வெறுங்காணி இருந்தாச் சொல்லுங்கோ. புதுசாய் வாற பொடியளுக்கு ஒரு பயிற்சி முகாம் அமைக்கவேண்டியிருக்கு” எண்டு நடிகர் திலகத்தின்ர காதில போட்டார். நடிகர்திலகத்துக்கு படக்கெண்டு ஒரு மின்னல் வெட்டிச்சுது.

“அண்ணை! உந்த மெயின்றோட்டோடயிருக்கிற காணியை நீங்கள் பாவிக்கலாம். எங்களுக்கும் அதுக்குள்ள பங்கிருக்குது. அதோட இன்னும் மூண்டு பேருக்கும் பங்கிருக்கு. அதிலயும் இரண்டு பேர் பிரச்சினையில்ல. ஒராள் கொஞ்சம் சண்டித்தனத்துக்கு வருவார். அந்தாளை நீங்கள் சமாளிச்சியளெண்டால் விசயம் சரி”

அதைக் கேட்டுப் பொறுப்பாளரும் தலையாட்டிப் போட்டு, “சரி. வேற இடத்திலயும் பாக்கிறன். சரி வராட்டில் நீங்கள் சொன்ன இடத்தைப் பாப்பம். தகவலுக்கு நன்றி” எனச் சொல்லிவிட்டுப் போனார்.

அதுக்குப் பிறகொரு ரண்டுமூண்டு மாதமாய்ப் பொறுப்பாளரும் பயிற்சி முகாமுக்கு இடந்தேடிக் களைச்சுப்போனார்.

“இன்னுமிடமெடுக்கேல்லையா? இன்னுமிடமெடுக்கேல்லையா?” எண்டு மேல்மட்டத்திலையிருந்து தொடர்ந்து பிறசர் வந்துகொண்டிருந்தாப்போல பொறுப்பாளரும் வேறைவழியில்லாமல் நடிகர்திலகத்தைக் கூட்டிக்கொண்டு போய்க் காணியைப்பாத்திட்டு, ரண்டு பொடியளைப் பிடிச்சுத் துப்பரவாக்கிறதுக்கு விட்டுட்டுப் போனார்.

விசயத்தைக் கேள்விப்பட்டுத் துரையன் அண்டைக்கும் வாளோட வந்து “ஆரைக்கேட்டடா காணிக்கை கால் வைச்சனீங்கள்?” எண்டு உரப்பின உரப்பலில துப்பரவாக்கிக்கொண்டு நிண்ட பொடியள் ரண்டும் ஓடிப்போய்ப் பொறுப்பாளரிட்ட நடந்ததைச் சொன்னாப்போல, ஏற்கனவே பயிற்சி முகாமுக்கு இடங்கிடைக்கேல்ல எண்ட கடுப்பில இருந்த பொறுப்பாளருக்குக் கோபம் தலைக்கேறியது.

துப்பரவாக்க வந்த பொடியளுக்கு “நீங்கள் நாளைக்குக் காலைல வாங்கோ. ஒரு பிரச்சினையுமிருக்காது” எண்டு சொல்லியனுப்பிட்டு நடிகர்திலகத்தைக் கூப்பிட்டு வாள் வெட்டுத்துரையனைப்பற்றி விசாரிச்சார்.

அப்பதான் ஆள் டெயிலியா மைம்மலுக்கை வயல் வெளித் தவறணைக்கு போய்வாற தகவல் கிடைச்சுது. பொறுப்பாளர் வோக்கியை எடுத்து மேலிடத்துக்குத் தகவலைச் சொன்னார். அண்டைக்குப் பொழுது படேக்குள்ள வயல்வெளித் தவறணைக்குக் கள்ளடிக்கப் போன வாள்வெட்டுத்துரையன், “இண்டைக்கு இரண்டு பேர் என்னட்ட வெட்டுவாங்கியிருப்பினம் நல்லவேளை ஓடிட்டினம்” எண்டு தன்ரை வீரப்பிரதாபங்களையெல்லாம் அங்கையிருந்த கூட்டாளிமாருக்கெல்லாம் அளந்துபோட்டு ஒரு எட்டு எட்டரை மணிக்கு வெளிக்கிட்டார். நல்ல கச இருட்டு.

தட்டித்தடவி மெயின்றோட்டிலை வந்து மிதக்கேக்குள்ள றோட்டடில ஏதோ வாகனம் நிக்கிற மாதிரியிருந்தது. என்ன ஏதெண்டு நிதானிக்கிறதுக்கிடையில வாள்வெட்டுத்துரையனுக்குப் பிடரியில ஒரு தட்டு விழுந்தது. ஆள் அதை எதிர் பார்க்கேல்ல. சுள்ளெண்டு கோபம் பத்திச்சுது.

“ஆரடா எனக்குமேல கைவைச்சவன்” எண்டு உரப்பி வாய்மூடேல்ல, முகத்தைப்பொத்தி இன்னொரு அடி விழுந்தது.

“நீயென்ன பெரிய சண்டித்தனப்பூழலோ? ஏறடா பிக்கப்பில” எண்டொரு குரல் உறுக்கின உறுக்கலில வாள்வெட்டுத்துரையனுக்கு வெறி முறிஞ்சிட்டுது. ஆரோ ஒருத்தன் துரையனின்ர சாறத்தை உரிஞ்சு கையளப் பின்னுக்குக் கட்டிட்டு பிடரியில பிடிச்சு பிக்அப்புக்குள்ள தள்ளிவிட, ஆள் கமல குண்டலமாய் விழுந்தார். பிக்அப்பு உறுமிக்கொண்டு வெளிக்கிட்டுது. உள்ளுக்க வைச்சும் ஆளுக்குக் கண்மண் தெரியாமல் அடிவிழத் தொடங்கிட்டுது.

அடுத்தநாள் காலமை முதல்நாள் வந்து திரும்பிப்போன இரண்டு பொடியளும் வந்து காணிமுழுக்க வெட்டித் துப்பரவாக்கிப்போட்டுப் போனாப்போல, காணியைச் சுத்திக் கிளிக்கூடுமாதிரி ஆளுயரத்துக்குத் தகரமடிச்சுப் பொறுப்பாளர் பயிற்சிமுகாமைத் தொடக்கினார்.

கொஞ்சக்காலம் வாள்வெட்டுத் துரையனைக் காணேல்லையாம் எண்டு பரபரப்பாய்க் கதைச்ச சனம் பிறகு ஆளை மறந்திட்டுது.

2

ஊருக்குள்ள நடிகர்திலகம் வழமையாகச் சில வீடுகளுக்குப் பின்னேரங்களில் போய் வருவார். அந்த வீடுகளைத் தவிர்த்து வழமைக்கு மாறாக வேறு ஏதேனும் வீட்டுக்குப் போய்வந்தால், அந்த வீட்டிலுள்ள எவரையோ இயக்கம் கிட்டடியில மண்டையில போடப்போகுதெண்டு எதிர்பார்க்கலாம். இதுக்கெல்லாம் தெள்ளத்தெளிவான ஆதாரங்கள் இருக்கு. நடிகர்திலகம் ஒருநாளும் போகாத பொலிஸ் வேலுப்பிள்ளை வீட்டுக்கு ஒருநாள் பின்னேரம் போய்வந்தார். மறுநாள் பின்னேரம் பொலிஸ் வேலுப்பிள்ளை முச்சந்திப் பிள்ளையார்கோவிலடியில் சைக்கிளில் வந்துகொண்டிருக்கும்போது இயக்கம் மண்டையில் போட்டது.

இது நடந்து ஒருமாதம் கழித்து நடிகர்திலகம் வழமைக்கு மாறாக ஒருநாள் பின்னேரம் புரோக்கர் சின்னத்துரை வீட்டுக்குப் போய்வந்தார். அவர் அந்த வீட்டுக்குப் போய்வந்து ஒரு கிழமைக்குள் புரோக்கர் சின்னத்துரையின் கடைசிப்பொடியன் வசந்தனை சாவகச்சேரி ரோட்டில் வைத்து இயக்கம் மண்டையில் போட்டது. இந்தச் சம்பவம் நடைபெற்று மூன்றுமாதம் கழித்து ஒருநாள் பின்னேரம் நடிகர்திலகம் வழமைக்கு மாறாக புறக்டர் பாலசிங்கம் வீட்டிற்குப் போய்வந்தார். அன்றிரவே புறக்டர் பாலசிங்கத்தை அவற்றை வீட்டுவாசலில் வைத்து இயக்கம் மண்டையில் போட்டது.

இத்தொடர் அசம்பாவிதங்களுக்குப் பிறகு ஊர்ச் சனங்கள் நடிகர்திலகம் தங்களது வீடுகளுக்கு ஒருபோதும் வந்துவிடக்கூடாதெனத் தத்தமது குலதெய்வங்களுக்கு நேர்த்தி வைக்கத்தொடங்கினர்.

3

அவரது முழுப்பெயர் டேவிட் திலகநாயகம்போல். பெற்றார், உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள், அறிந்தவர், தெரிந்தவரெல்லாம் அவரைத் ‘திலகம்’என்று செல்லமாக அழைப்பர். புலிகள் இயக்கத்தின் கலைபண்பாட்டுக்கழகம் தயாரித்து மேடையேற்றிய நாடகங்களிலெல்லாம் திலகம் தொடர்ந்து பிரதான பாத்திரமேற்று நடித்துவந்தார். இதனால் புலிப்பிரமுகர்கள் சிலர் அவரை ‘நடிகர்திலகம்‘ என்றழைக்க, அப்பெயரே பின்னாள்களில் நிலைத்துவிட்டது.

4

சீற்ரீப்பீறைவர் பொன்னுத்துரைக்கு உன்னப்பார் என்னப்பார் எண்டு மூண்டு பெம்பிளைப் பிள்ளையள். மூண்டுபேருக்குமிடையில ஒண்டுரண்டு வயதுதான் வித்தியாசமிருக்கும். மூத்தவள் மஞ்சுளாவுக்கும், புறக்ரர் நல்லையாவின்ர கடைசிப்பொடியன் சுதாகருக்கும் காதல். பெட்டை உயிருக்குயிராய்க் காதலிக்க, பொடியன் உடலுக்குடலாய்க் காதலிக்க விசயங் கைமீறிப் போட்டுது. பெட்டை ஒருநாள் பொடியனுக்கு முன்னால “இரண்டு மாதமாய் எனக்குச் சுகமில்லாமல் வரயில்லை”எண்டு கண்ணைக் கசக்கினாள். அதுக்குப் பிறகு பொடியன் நைஸாக் காய்வெட்ட வெளிக்கிட்டான். அப்பதான் பெட்டைக்கும் அவனோட உள்நோக்கந்தெரிஞ்சுது.

பெட்டையும் வேற வழிதெரியாமல் தாய்க்காரியிட்ட மெல்லமாய் விசயத்தைச் சொன்னாள். அதைக் கேட்டோண்ண மனிசி வெலவெலத்துப் போச்சு. “எடி நாசமறுப்பாளே! உனக்குப் பின்னாலை இரண்டு குமர் இருக்குதுகள். நீ இப்பிடிக் குரங்காட்டமாடிப்போட்டு வந்தால் நாளைக்கு ஆரடி அதுகளைக் கட்ட வருவான்? கொப்பன் அறிஞ்சால் கொலைசெய்யப் போறானடி” எண்டு மனிசி ஒப்பாரி வைக்கத் தொடங்கிட்டுது.

தகப்பனுக்கு விசயம் தெரிஞ்சோண்ண தாய்க்கும், மகளுக்கும் உழக்குழக்கெண்டு உழக்கிப்போட்டு வேறவழியில்லாமல் புறக்ரர் நல்லையா வீட்டுக்குப் போனார். அங்கேபோய் பக்குவமாய் விசயத்தைச் சொன்னதுதான் தாமதம், நல்லையா எகிறத்தொடங்கிட்டார்.

“உன்ரை பெட்டைய ஊர்மேய விட்டுப்போட்டுக் கடைசியில என்ரை பொடியனே பிள்ளைப்பதிவுக்கு நிக்கிறது? என்ன ஐஸே உம்மட கதை? முதல்ல வெளியில போமைஸே. கெற்றவுட்”

பொன்னுத்துரையருக்கு நல்லையரையும், மோன் காரனையும் கிடத்திப்போட்டு உழக்கவேணும்போலயிருந்தது. எண்டாலும் குமர்ப்பிள்ளையின்ர விசயம் சந்தி சிரிக்காமல் நிதானமாய் நடக்கவேணுமெண்டதால குனிஞ்ச தலை நிமிராமல் வீட்டைவந்து நல்லையரிலயிருந்த ஆத்திரம் முழுக்க மனிசியிலயும், மகளிலயும் தீத்துப்போட்டு வெளிக்கிட்டுச் சுந்தரமூர்த்தியிட்டப் போனார். அவன் பொன்னுத்துரையோட வேலைசெய்யிற பொடியன். அவனுக்கு நெளிவு சுழிவெல்லாம் தெரியும். இயக்கத்தில கொஞ்சம் செல்வாக்கு இருக்கு.

பொன்னுத்துரையர் சுந்தரமூர்த்தியைத் தனியக் கூட்டிக்கொண்டுபோய் ஆதியோடந்தமாய் விசயத்தைச் சொன்னார். டொக்ரர்மார், சட்டத்தரணிமாரிட்ட மட்டுமில்ல அலுவல் கேட்டுப்போறவனிட்டயும் உண்மையை மறைக்கக்கூடாதெல்லோ. எல்லாத்தையும் தலையாட்டிக் கேட்ட சுந்தரமூர்த்தி, “துரையண்ணை! புறக்ரர் நல்லையருக்கு இயக்கமட்டத்திலயும் நல்ல செல்வாக்கிருக்கு. அவையளுக்கு இடைக்கிடை இவர் சட்ட ஆலோசனையும் வழங்கிறவர். அதால உங்கட விசயத்தைக் கத்தி மேல நடக்கிறமாதிரித்தான் டீல் பண்ணவேணும். எதுக்கும் நாளைக்குக் காலமை நான் உங்களுக்கு ஒரு நல்ல முடிவாச் சொல்லுறன்” எண்டு சொன்னான். பொன்னுத்துரையருக்கு தாய்க்கும், மகளுக்கும் இன்னொருக்கால் உழக்கவேணும் போலிருந்தது.

அடுத்தநாள் சுந்தரமூர்த்தி பொன்னுத்துரையரை நடிகர்திலகத்திட்டக் கூட்டிக்கொண்டு போனான். முதல்ல பொன்னுத்துரையருக்குத் தன்ர பிரச்சினையை நடிகர்திலகத்திட்டச் சொல்லத் தயக்கமாய் இருந்தது. சுந்தரமூர்த்திதான் “துரையண்ணை! நடந்ததையெல்லாம் மறைக்காமல் இவரிட்டச் சொல்லுங்கோ. அப்பதான் பிரச்சினையை வெட்டுறதுக்கு இவருக்கு ஈஸியா யிருக்கும்” எண்டு ஏவினான். பொன்னுத்துரையரும் நடந்ததையெல்லாம் நடிகர்திலகத்திட்டச் சொன்னார். அவரும் தலையாட்டித் தலையாட்டிக் கேட்டுப்போட்டு “சரி பாப்பம்” எண்டு சொன்னார்.

அடுத்தநாள் பின்னேரம் ஒருநாளுமில்லாத திருநாளாக புறக்ரர் நல்லையா வீட்டுக்கு நடிகர்திலகம் போனார். நடிகர்திலகம் தங்கட வீட்டு கேற்றைத் திறந்து வாறதைக் கண்டோண்ண புறக்ரர் நல்லையா வின்ர மனிசிக்காரி வெலவெலத்துப்போனா.

“இதென்ன உந்தச் சவம்விழுவான் வீட்டுக்குள்ள வாறான்? என்ர அத்துளு அம்மாளாச்சி! நீதான் எணை என்ர குடும்பத்தைக் காப்பாற்றவேணும்” எண்டு பதகளிக்கத் தொடங்கிட்டா. அந்தநேரம் தகப்பன், மகன் ரண்டுபேரும் வீட்டிலயில்ல. நடிகர்திலகம் வந்து வீட்டு முத்தத்தில நிண்டு “சுதாகர்! சுதாகர்!” எண்டு கூப்பிட்டார்.

இவ வெளியில வந்து “அவர் வெளில போகிட்டார் தம்பி. ஏதும் முக்கியமான அலுவலோ?” எண்டு கேட்டா. அதுக்கவர் “இல்லையில்லைச் சும்மா வந்தனான். சுதாகரைச் சுகம் விசாரிச்சதாய்ச் சொல்லுங்கோ” எண்டு சொல்லிட்டுப் போகிட்டார்.

“ஒருநாளும் வராதவன் இண்டைக்கு வந்திட்டுப் போறானே! என்ர பிள்ளையைப் பலி குடுக்கப் போறனே!”

எண்டு தகப்பனும், மகனும் பொழுது படேக்குள்ள வீட்டுக்குள்ள காலடிவைக்க அந்த மனிசி ஒப்பாரி வைக்கத் தொடங்கிட்டுது. நடிகர்திலகம் தன்ரை வீட்டுக்கு வந்திட்டுப்போனதை அறிஞ்சவுடனையே புறக்ரர் நல்லையாவுக்கும், மகனுக்கும் நாடி விழுந்திட்டுது. ஊர்முழுக்க “புறக்ரர் நல்லையா வீட்டுக்கு நடிகர்திலகம் போனதாம்” எண்டு பரபரக்கத் தொடங்கிட்டுது.

அடுத்தநாள் விடிஞ்சதும் புறக்ரர் நல்லையா மகனைக் கூட்டிக்கொண்டு நடிகர்திலகம் வீட்டை போய் “தம்பி! என்ர மகன் செய்தது பிழைதான். நீங்கள்தான் ஏதும் பாத்துச் செய்யவேணும்” எண்டு அழாக்குறையாக மன்றாடினார்.

“அதுக்கு இங்கை ஏன் புறக்ரர் வந்தனீங்கள்? எங்க பிழை நடந்ததோ அங்கைதானே போய் அதைத் திருத்தவேணும்” எண்டு நடிகர்திலகம் சொல்ல, தகப்பனும் மகனும் ஒரேயோட்டமாய் ஓடிப்போய்ப் பொன்னுத் துரையின்ர கால்ல விழுந்தினம்.

5

நடிகர்திலகம் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமான சிநேகிதன் எண்டு ஊர் முழுக்க நம்பினதுக்குக் காரணம், நடிகர்திலகத்தின்ர வீட்டுவரவேற்பறையில் தொங்கிக் கொண்டிருந்த இரண்டு போட்டோக்கள்தான். ஒரு போட்டோவில் நடிகர் திலகத்துக்குப் புலிகள் இயக்கத்தலைவர் விருதுக்கேடயம் வழங்குகிறார். மற்றதில் நடிகர்திலகமும், புலிகள் இயக்கத் தலைவரும் அருகருகே மிக நெருக்கமாக அமர்ந்திருந்து அளவளாவிச் சிரித்துக்கொண்டிருக்கின்றனர். மீடியம் சைஸில் பிறேம் போட்டுத் தொங்கவிடப்பட்டிருந்த இந்த இரண்டு போட்டோக்களையும் பார்த்த ஊர்ச்சனங்கள் தமிழீழக் காவல்துறையாலும், தமிழீழ நீதிமன்றத்தாலும் தீர்க்கமுடியாத கணக்கு வழக்குகளையெல்லாம் நடிகர் திலகத்தால் தீர்த்துவைக்கமுடியுமென நம்பினர்.

6

புலிகள் இயக்கத்தால் ‘குயின்ஸ்’ எனச் செல்லமாக அழைக்கப்பட்டு வந்த குயின்ரன் இயக்கத்துக்கு ஆள் சேர்க்கிறதிலயிருந்து, பங்கர் வெட்டுறது வரைக்கும் முன்னுக்கு நிப்பான். ஏரியாப் பொறுப்பாளர் இருந்திருந்திட்டு “குயின்ஸ்! நாளைக்கு ஒரு கண்டனப் பேரணிக்கு ஒரு நூறு றூற்றியம்பதுபேர் வேணும்” எண்டு கேப்பார். அவனும் மறுக்காமல் கிறுக்காமல் “அண்ணை! நாளைக்கு இரண்டு பஸ்ஸைக் கொண்டாங்கோ. நான் ஆக்களைத் தாறன்” எண்டுட்டு, மறுநாள் சொன்னமாதிரியே பிசகாமல் செய்வான். ஏரியாவுக்குள்ள இருக்கிற இளவட்டங்களை பங்கர்வெட்ட. சிரமதானம் செய்யவெண்டு இயக்க பேசுகளுக்குக் கூட்டிக்கொண்டு போவான். பிறகு அந்த இளவட்டங்களுக்கெல்லாம் குழையடிச்சு இயக்கத்துக்கு அனுப்பிப்போடுவான். இதால அவனுக்கு இயக்க மேல்மட்டத்தில நல்ல செல்வாக்கிருந்தது. இந்தச் செல்வாக்கில கண்ணுக்குக் குளிர்ச்சியான பெட்டையளயெல்லாம் மடக்கி மடக்கி அலுவல் நடத்திக் குயின்ஸ் ஊருக்குள்ள ஒரு பேமஸ்ஸான பொம்பிளைக்கள்ளனாய் வந்திட்டான். அவன் கடைசியாய் எக்கவுண்டன் கனகநாயகத்தின்ர ஏகபுத்திரி மலர்விழியை மடக்கிறதுக்கு வெளிக்கிட்டான். அந்தப் பெட்டை மசியேல்ல. ஒருநாள் பெட்டை ரியூசன் முடிஞ்சு சைக்கிள்ள வரேக்குள்ளை குச்சொழுங்கைக்குள்ள மறிச்சு “எடியே! நீ என்னை லவ் பண்ணேல்லயெண்டால் உன்ர கொப்பனைச் சுடுவன்” எண்டு ஒரு வெருட்டு வெருட்டினான். பெட்டை உண்மையில பயந்துதான் போச்சுது. வீட்டை போன உடனை அழுதழுது தகப்பனிட்டை நடந்ததைச் சொல்லிச்சுது. அதைக் கேட்டாப்போல அந்தாள் வெலவெலத்துப் போச்சுது.

அந்தாளுக்கு முதல்ல என்ன செய்யிறதெண்டு தெரியேல்ல. கடைசியாய் ஒவ்வீஸ் பியோன் வேலுப்பிள்ளையிட்ட இதைப்பற்றிக் கதைக்கேக்குள்ள, அவன் நடிகர்திலகத்தைக் கைகாட்டி விட்டான். மறுநாள் ஒவ்வீசுக்கு லீவு போட்டுட்டு எக்கவுண்டன் நடிகர்திலகத்திட்டப் போனார்.

எக்கவுண்டன் சொன்னதையெல்லாம் தலையை ஆட்டியாட்டிக் கேட்ட நடிகர்திலகம் வழமைபோலச் “சரிபாப்பம். நீங்கள் போட்டு வாங்கோ” எண்டார். எக்கவுண்டன் வந்து பியோன் வேலுப்பிள்ளையிட்ட நடந்ததைச் சொன்னார்.

“அந்தாள் அப்பிடித்தான் சொல்லும். நீங்கள் வொறி பண்ணாதேங்கோ. எல்லாம் சரிவரும்” எண்டு வேலுப்பிள்ளை சொல்லிட்டுப் போகிட்டான்.

அந்தமூட்டம் சர்வதேச மகளிர்தினம் வந்தது. இயக்கப்பெட்டையளின்ர பொறுப்பிலதான் எல்லாம் நடத்திறதெண்டு ஏற்பாடு. ஒவ்வொரு ஏரியாவிலயிருந்தும் குறைஞ்சது ஐம்பது பொம்பிளையளயெண்டாலும் நிகழ்வுக்குக் கொண்டுவரவேணுமெண்டு ஏரியாப் பொறுப்பாளர்மாருக்கு மகளிர் பிரிவிலயிருந்து ஓடர் வந்தது. ஏரியாப் பொறுப்பாளர் குயின்ஸைக் கூப்பிட்டு விசயத்தைச் சொன்னார்.

“அதுக்கென்ன? நீங்கள் பஸ்ஸைக் கொண்டாங்கோ. நான் ஆக்களைத் தாறன்” எண்டு குயின்ஸ் சொல்லிப் போட்டுப் போனான். நிகழ்வு நடக்கிற அண்டு பின்னேரம் பஸ் வந்து சந்தியில நிக்கக் குயின்ஸ் ஐம்பது பொம்பிளையளைச் சொல்லிவைச்ச மாதிரிக் கொணந்திட்டான். பொறுப்பாளர் அப்பிடியே பூரிச்சுப்போனார்.

அந்தளவு பொம்பிளையளையும் பஸ்ஸில ஏத்தி நிகழ்வு நடக்கிற கோப்பாய் கிறிஸ்ரியன் கொலிச்சுக்குக் கொண்டுபோச்சினம். குயின்ஸ்சும் கூடப்போனவன். இரவிரவாய் நிகழ்வு நடந்தது. இடையில யொருக்கால் எஞ்சின் பிழைப்பட்டுக் கறண்ட் கட்டாச்சுது. பிறகு எஞ்சின் திருத்திக் கறண்ட் வந்தாப்போல இயக்கப் பெட்டையளெல்லாம் பரபரப்பாய் ஓடித்திரிஞ்சினம். கூட்டிவரப்பட்ட பொம்பிளையளெல்லாம் மேடைக்கு முன்னால குழம்பிப்போயிருந்தினம்.

“எதிர்பாராது ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகின்றோம். தொடர்ந்து ‘தாயகம் காத்த தங்கையர்’ நாடகம் இடம்பெறவிருக்கிறது” என நிகழ்வின் தலைவி மேடை யில் தோன்றி அறிவிக்க, நிகழ்வு சுமுகமானது. கொஞ்ச நேரத்தால ஒரு நம்பர் பிளேட் இல்லாத வாகனம் வந்து நிண்டுது. அதுக்குள்ள ஆரையோ கண்ணைக் கட்டினபடி ஏத்திச்சினம். அடுத்தகணம் அந்த வாகனம் போகிட்டுது. நிகழ்வு தொடர்ந்தது.

விடிஞ்சாப்போல ஏரியாப் பொறுப்பாளர் கூட்டிக் கொண்டு வந்த பொம்பிளையளை பஸ்ஸிலை ஏத்திப் போட்டுக் குயின்ஸைத் தேடிப்பாத்தார். ஆளைக் காணேல்ல. அப்ப ஒரு இயக்கப்பிள்ளை வந்து “அண்ணை! உங்களை ஒருக்கால் பெரியக்கா கூட்டி வரட்டாம்” எண்டு சொல்லிச்சுது. பொறுப்பாளர் அந்தப் பிள்ளைக்குப் பின்னால இழுபட்டுக்கொண்டு போனார். அப்ப மகளிர்பிரிவுக்குப் பொறுப்பாயிருந்த எழிலரசியை இயக்காக்கள் எல்லாம் பெரியக்கா எண்டுதான் கூப்பிடுறவை. பொறுப்பாளர் அவவைத் தேடிக்கொண்டு போகேக்குள்ள அவ சில இயக்கப் பிள்ளையளோட நிண்டு ஏதோ சீரியஸாய் டிஸ்கஸ் பண்ணிக்கொண்டிருந்தா. பொறுப்பாளரைக் கண்டுட்டுக் கதைக்கிறதை டப்பெண்டு நிப்பாட்டிட்டா. அங்க நிண்ட இயக்கப்பிள்ளையள் திரும்பிப் பொறுப்பாளரைப் பாத்தினம்.

“இங்க வாரும். அந்தக் குயின்ரன் எண்ட ஆள் உம்மட ஏரியாவா?” பெரியக்கா பொறுப்பாளரைக் கேட்டா.

“ஓமக்கா. அவர் ஏரியாவில என்ர செயற்பாடுகள் எல்லாத்துக்கும் உறுதுணையாயிருக்கிற ஆள்” எண்டு பொறுப்பாளர் சொல்லி முடிக்கிறதுக்கிடையில பெரியக்கா கடுப்பாகிட்டா.

“உம்மட்ட நானென்ன கரெக்ரர் சேட்டிபிக்கற்றே கேட்டனான்? அந்தாள் ராத்திரி எங்கட பிள்ளையொண்டில கைபோடேக்குள்ள கையும் மெய்யுமாய்ப் பிடிச்சிருக்கிறம். ஆளை விசாரணைக்கெடுத்திருக்கு. உம்மையும் விசாரணைக்குக் கூப்பிட வேண்டியிருக்கும்” பெரியக்கா சொல்லச் சொல்லப் பொறுப்பாளருக்கு அஞ்சும்கெட்டு அறிவுங்கெட்டுத் தலை விறைச்சுது.

குயின்ரனின்ர விசயத்தைச் சூசைதான் டீல் பண்ணினவர்.

“இயக்கப்பிள்ளைகளோட சேட்டை விடுகிறதெண்டது எங்கட இயக்கத்துக்கு விடுக்கப்பட்ட சவாலாய்த் தான் பாக்கவேண்டியிருக்கு. இது எங்கட தன்மானப் பிரச்சினை. சும்மா பணிஸ்ற்மன்ற் குடுக்கிறது இதுக்குச் சரியான தீர்வாயிருக்காது. நாளைக்கு மற்றாக்களுக்கு இது ஒரு துணிவைக் குடுக்கும். சனங்களும் கண்டபடி கதைக்க வெளிக்கிடும். அதால ஒரு கதையுமில்லாமல் ஆளை மண்டையில போடுங்கோ” எண்டு சொல்லிப் போட்டுப் போகிட்டார்.

குயின்ரனை மண்டையிலபோட்ட அடுத்தநாள் எக்கவுண்டன் நடிகர்திலகத்தைச் சந்திக்கச் சீர்வரிசையோட தன்ர காரில போனார். வீடு பூட்டிக்கிடந்தது. தொடர்ந்து இரண்டுமூண்டுநாள் போனவர். அப்பவும் நடிகர்திலகத்தின்ர வீடு பூட்டித்தான் கிடந்தது.

7

யாழ்ப்பாணம் இயக்கக் கட்டுப்பாட்டிலயிருந்த காலத்திலயும் சரி, பிறகு ஆமிக் கட்டுப்பாட்டிலிருந்த காலத்திலயும் சரி மாறாத செல்வாக்கோட இருந்த ஒரேயாள் நடிகர்திலகம்தான். 1996இல் இயக்கம் யாழ்ப்பாணத்தைவிட்டு வன்னிக்குப் பாஸாகேக்குள்ள இயக்கத்துக்கு வால்பிடிச்ச ஆக்களெல்லாம் வன்னிக்கு இழுபட்டினம். ஆனால் நடிகர்திலகம் மட்டும் இருந்த இடத்தைவிட்டு அசையேல்ல. அவரின்ர மனிசிக்காரிகூட நல்லாப் பயந்துபோனா.

“என்னப்பா? இயக்கத்தோட திரிஞ்சாக்களெல்லாம் வன்னிக்கு வெளிக்கிடினம். நீங்கள் நோமலாய்த் திரியிறியள். அதுகும் ஒரேயொரு ஆம்பிளைப்பிள்ளையை வைச்சுக்கொண்டு...”

“போடி விசரி! நானெங்கை இயக்கத்தோட திரிஞ்சனான்? நான் எதுக்குப் பயப்பிடோணும்? உனக்குப் பயமாயிருந்தால் பொடியனையும் கூட்டிக்கொண்டு வன்னிக்குப் போ. நான் இங்கதானிருப்பன். என்ன சிக்கல் வந்தாலும் எனக்குச் சமாளிக்கத் தெரியும்” எண்டு சொல்லிப்போட்டு நடிகர்திலகம் தன்ர அலுவலைப் பாக்கப் போகிட்டார்.

“இந்த நாசமறுப்பான் ஒருத்தரின்ர சொல்லுங்கேளான். என்ன கோதாரியெண்டாலும் நடந்து துலையட்டும்” எண்டு மனிசிக்காரியும் விட்டிட்டா.

ஆமி ஊருக்குள்ள வந்த கொஞ்சநாளில நடிகர் திலகத்தைப்பற்றி ஆரோ முறையாய்ப் போட்டுக் குடுத்திட்டாங்கள். ஒருநாள் கொமாண்டர் லறி விஜயறட்னா பட்டாளத்தோட நடிகர்திலகத்தின்ர வீட்டுக்கு முன்னால பிக்கப்பில வந்து இறங்கினான். ஊரிலையிருந்த சனமெல்லாம் “இண்டைக்கு நடிகர் திலகத்தின்ர குடும்பம் துலைஞ்சுது” எண்டுதான் நினைச்சதுகள்.

நடிகர்திலகத்தை அரஸ்ற் பண்ணிக்கொண்டுபோய் நல்ல சாத்துக்குடுத்து விசாரிக்க வேணுமெண்ட நோக்கத்தில வீட்டுக்குள்ள வந்த லறி விஜயறட்ணா, அங்கே வரவேற்பறையில் மீடியம் சைஸில் தொங்க விடப்பட்டிருந்த பண்டாரநாயக்க, சிறிமாவோ, சந்திரிக்கா ஆகியோரது மார்பளவு போட்டோக்களைப் பார்த்து பிறேக்கடித்ததுபோல நின்றான். அப்ப கசுவலாய் வாறமாதிரி நடிகர் திலகம் தன்ர மனிசி, மகனோட வந்தார்.

“திலகநாயகம் யார்?” எண்டு லறி விஜயறட்ணா அவனைப் பாத்துக் கேட்டான்.

“நான்தான் ஸேர்” நல்ல பணிவோடு நடிகர்திலகம் பதில்சொன்னார்.

“உம்மை எல்ரீரீ லீடர் பிரபாகரனோட கூட்டாளி என்று பலரும் சொல்றாங்களே. உண்மையா?” லறி விஜயறட்ணா அடுத்த கேள்வியைப் போட. அதுக்குப் பிறகு நடந்ததுதான் க்ளைமக்ஸ். நடிகர்திலகம் “சற்றுப் பொறுங்கள்” என்று லறி விஜயறட்னாவிடம் சொல்லி விட்டு, ஓர் அறைக்குள் நுழைந்து மூன்று புகைப்படங்களை எடுத்துவந்தார்.

“இதைப் பாருங்கள்” என லறி விஜயறட்னாவிடம் ஒரு படத்தைக் கொடுத்து விளக்கமளித்தார். “எனது தந்தையார் மதவாச்சியில் கடைவைத்திருந்தார். அப்போது நான் அங்கிருந்த சிங்களப் பாடசாலையில்தான் படித்தேன். பாடசாலைமட்டத்தில் நடந்த பேச்சுப்போட்டியில் ‘புத்தபிரானின் பஞ்சசீலக்கொள்கைகள்’ என்னும் தலைப்பில் பேசி முதற்பரிசு வாங்கினேன். சங்கைக்குரிய நிர்மலானந்ததேரர்தான் எனக்குப் பதக்கமணிவித்து முதற் பரிசை வழங்கினார். அப்போது எடுத்ததுதான் இந்தப் புகைப்படம்”

மற்றைய இரண்டு புகைப்படங்களையும் அடுத்ததாக லறி விஜயறட்னாவின் கையில் கொடுத்து, “இவற்றுக்கு நான் உங்களுக்கு விளக்கமளிக்க அவசியமேற்படாது” என்றார். லறி விஜயறட்னா அந்த இரண்டு புகைப்படங்களையும் பார்த்தான். ஒன்றில் நடிகர்திலகம் மேன்மைதங்கிய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் நின்று சிரித்துக்கொண்டிருந்தான். மற்றதில் தலைவர் பிரபாகரன் நடிகர்திலகத்துக்கு விருதுக்கேடயம் வழங்கிக்கொண்டிருந்தார்.

ஆந்த மூன்று போட்டோக்களையும் பார்த்துவிட்டு லறி விஜயறட்னா அடுத்த கேள்வியைக் கேட்பதற்கிடையில் நடிகர்திலகம் திரும்பவும் சிங்களத்தில் மிகுந்த பணிவுடன் பேசத்தொடங்கினார்.

“உங்களுக்கு யாரோ சிலர் சொன்னதைப்போல புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு கூட்டாளியாக இருந்திருந்தால் நான் குடும்பத்தோடு புலிகளின் பின்னால் வன்னிக்கல்லவா போயிருக்கவேண்டும்?

நான் ஒரு சாதாரண தமிழ்க்குடிமகன். நடிப்பிலே ஆர்வமுள்ளவன். புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இப்பிரதேசமிருந்த காலத்தில் தங்களது மேடை நாடகங்களில் என்னை நடிக்க அழைத்தார்கள். அதை என்னால் மறுக்கமுடியவில்லை. நான் நடிக்க மறுத்திருந்தால் அவர்கள் எனக்குத் துரோகிப்பட்டத்தைத் தந்திருப்பார்கள். எனவே ஒரு நிர்ப்பந்தத்தின் பேரிலேயே அவர்களது மேடைநாடகங்களில் நடித்தேன். என் நடிப்பைப் பாராட்டிய புலிகள் இயக்கத் தலைவர் எனக்கு விருதுக்கேடயம் வழங்கினார். அன்றுதான் நான் அவரை முதலும் கடைசியுமாகப் பார்த்தேன். பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி தொடர்பான பிரச்சினைபற்றிக் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதிச் செயலகத்துக்குச் சென்றிருந்தபோது மாண்புமிகு ஜனாதிபதியுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்தது. இதை வைத்து என்னை மாண்புமிகு ஜனாதிபதியின் நெருங்கிய கூட்டாளியென்று சொல்லமுடியுமா? எனது தந்தையார் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தொடக்ககால ஆதரவாளர் என்பதால் வரவேற்பறையில் இம்மூன்று புகைப்படங்களும் தொங்க விடப்பட்டுள்ளன. மற்றும்படி அதற்கு வேறெந்த விசேட காரணமும் கிடையாது. புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்தகாலத்தில் இந்த வரவேற்பறையில் இன்னுமொரு புகைப்படமும் தொங்கியது. அது சற்று நேரத்தின்முன் நீங்கள் பார்த்த புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் நான் விருதுக்கேடயம் வாங்கும் புகைப்படந்தான். தங்களது தலைவரிடமிருந்து யாராவது விருதுக் கேடயம் வாங்கும்போது புகைப்படமெடுத்திருந்தால், அதைப் பிறேம்போட்டு வீட்டுச்சுவரில் தொங்க விட வேண்டுமென்பது புலிகள் இயக்கத்தின் எழுதப்படாத சட்டம். அதை என்னால் மீற முடியாமைக்கு மனம் வருந்துகின்றேன்”

நடிகர்திலகம் இலக்கண சுத்தமான சிங்களத்தில் வெளிப்படையாகப் பேசியதில் லறி விஜயறட்னா நெகிழ்ந்துபோனான்.

“நாம் இனி நல்ல நண்பர்களாக இருப்போம்” என நடிகர்திலகத்தைக் கட்டியணைத்துவிட்டு, அவரைக் கைதுசெய்து கொண்டுசெல்லும் முயற்சியில் முற்றும் மனம் தளர்ந்தவனாய் வெறுங்கையோடு தனது படைவீரர்களை அழைத்துக்கொண்டு நடிகர் திலகத்தின் வீட்டைவிட்டுப் புறப்பட்டான். நடிகர் திலகத்தைக் கைதுசெய்து கொண்டுசெல்லும் கண்கொள்ளாக் காட்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஊர்ச்சனம் ஏமாந்துபோச்சு.

8

குயின்ரனை இயக்கம் விசாரணைக்கு எடுத்திருந்தமூட்டம் அவனை ஏரியாப் பொறுப்பாளர் ஒருக்கால் சந்திக்கேக்குள்ள, “உறண்டல் நாயே! ஏன்ரா இப்பிடிக் கேவலங்கெட்ட வேலை பாத்தனீ? உன்னால நான் இயக்கத்துக்குள்ள மொக்கயீனங்கெட்டுத் தலை குனிஞ்சு நிக்கிறன்” எண்டு வெப்பியாரப்படேக்குள்ள, “அண்ணை! என்னைப் பேசாதேங்கோ. நான் பொம்பிளைக்கள்ளன்தான். மறுக்கேல்ல. ஆனால், அண்டைக் கிரவு நடந்த சம்பவத்துக்கும், எனக்கும் சிவசத்தியமாய் ஒரு தொடர்பும் இல்லை. என்னை ஆரோ திட்டமிட்டு மாட்டிவிட்ட மாதிரியிருக்கு. நான் என்னதான் தலை கீழாய் நிண்டாலும் ஒருத்தரும் என்னை நம்பமாட்டியள் எண்டு தெரியும்” எண்டு அடிக்குரலால வாக்குமூலமொண்டு குடுக்க, “பொத்தடா வாயை” எண்டு உறுக்கிப்போட்டு ஏரியாப் பொறுப்பாளர் திரும்பி வந்திட்டார். அதுக்குப்பிறகு குயின்ரனை மண்டையில போட்டாப்பிறகுதான் பாத்தவர்.

குயின்ரனைப்பற்றி நல்லாய்த் தெரிஞ்சாக்கள், “அவன் இயக்கப்பிள்ளையில கைபோடுறளவுக்கு மொக்கனில்ல. அவனை ஆரோ நல்லாத் திட்டம்போட்டு மாட்டிவிட்டிருக்கினம். இதுக்குள்ள நிச்சயமாய் நடிகர் திலகத்துக்குப் பங்கிருக்கும்” எண்டு கதைச்சினம். அவ்வளவுதான்.

9

“உன்ரை கொப்பனை உவன் நடிகர்திலகம்தான் இயக்கத்தைக்கொண்டு மண்டையில போடுவிச்சவன்” எண்டு சொல்லிச் சொல்லியே வாள்வெட்டுத்துரையனின்ர மனிசிக்காரி தன்ர மகனை நடிகர்திலகத்துக்கு ஒரு பெருமெதிரியாக வளர்த்துவந்திருந்தா. பொடியன் இளந்தாரியாய் வந்தமூட்டத்தில இயக்கம் வன்னிக்குள்ள தானிருந்தது. யாழ்ப்பாணத்தில ஆமியோட சேர்ந்து மாற்றியக்கங்களும் செல்வாக்கோட இயங்கிச்சுது. வாள்வெட்டுத்துரையனின்ர பொடியன் இப்பிடியொரு மாற்று இயக்கத்தோட சேர்ந்து முன்னாலையும், பின்னாலையும் திரிஞ்சு ஒரு செல்வாக்கான ஆளாய் வந்திட்டான். எப்பிடியாவது நடிகர்திலகத்தைப் போட்டுத் தள்ளவேணுமெண்டு பிளான் பண்ணிக் கொஞ்சக்காலம் நடிகர்திலகம் போறவாற இடங்கள், நேரங்காலமெல்லாம் பக்காவாய் நோட் பண்ணிக் கொண்டு வந்தான்.

இந்தச் சங்கதி நடிகர்திலகத்துக்கு எப்பிடியோ தெரிஞ்சிட்டுது. ஆனால், நடிகர்திலகம் மெயின்ரோட்டில யிருக்கிற கேம்ப் கொஃஅஆஆஆஆஆஆஆ ஆமாண்டர் ஜெயவிக்கிரமவை நோட்பண்ணத் தொடங்கினான். பொழுது படேக்குள்ள ஒரு ஆறு ஆறரைமணிக்கு கொமாண்டர் ஜெயவிக்கிரம கேம்பிலயிருந்து ஒரு முக்கால் சைக்கிள்ள வெளிக்கிட்டு முச்சந்தியிலயிருக்கிற சென்றிப் பொயின்ற்ருக்குப் போவான். பிறகு அங்கயிருந்து ஒரு ஏழு ஏழரைக்குத் திரும்பிக் கேம்புக்கு வருவான். இது அநேகமாய் ஒவ்வொரு நாளும் நடக்கிற சங்கதி. இப்பிடிப் போய்வரேக்குள்ள கொமாண்டர் ஜெயவிக்கிரம ஒரு டாக் ப்ளு ரீசேட்டும் பச்சை ட்றவுசரும்தான் போட்டிருப்பான். இதையெல்லாம் வலு உன்னிப்பாய்க் கவனிச்ச நடிகர்திலகம் தானும் டாக் ப்ளுவில ரீசேட்டும், பச்சை ட்றவுசரும் போட்டுத் தன்ர சைக்கிள்ள வாள்வெட்டுத்துரையனின்ர பொடியன் கண்ணில படத்தக்கதாய் முச்சந்திக்குப்போய் அங்க நிக்கிற சிநேகிதங்களோட தனக்குத் தெரிஞ்ச அரசியலைக் கதைச்சுப்போட்டு நல்லா இருட்டினாப்போல திரும்பிவருவான். இப்பிடி நடிகர்திலகம் திரும்பிவரேக்குள்ள அவனை மண்டையில போட வேணுமெண்டு வாள்வெட்டுத்துரையனின்ர பொடியன் பிளான் பண்ணினான்.

அண்டைக்கும் பின்னேரம் நடிகர்திலகம் வழமையாப் போடுற டாக் ப்ளு ரீசேட்டும், பச்சை ட்றவுசரும் போட்டுக்கொண்டு சைக்கிளில வெளிக்கிட்டான். சாதுவாய்க் கடைக்கண்ணால நோட்டம் விடேக்குள்ள, வாள்வெட்டுத்துரையனின்ர பொடியன் சைக்கிள்ள பின்தொடர்ந்து வாறது தெரிஞ்சுது.

‘ம்...! மச்சான் இண்டைக்கு ஏதோ பெரிய பிளான் பண்ணுறார்போல’ எண்டு நினைச்சுக்கொண்டு ஒரு சலனமுமில்லாமல் முச்சந்திக்குப் போனான். நல்லாய் இருட்டும் வரைக்கும் அங்க நிண்ட ஆக்களோட சமகால அரசியல் கதைச்சான். கொஞ்சநேரத்தால கொமாண்டர் ஜெயவிக்கிரம சைக்கிள்ள வந்து முச்சந்திச் சென்றிப்பொயின்ரில நிண்ட ஆமிக்காரரோட கதைச்சிட்டுத் திரும்பிப்போகேக்குள்ள நடிகர்திலகமும் தன்ர சைக்கிளை எடுத்துக்கொண்டு அவனுக்குப் பின்னால போனான். அப்பிடியே போய் முதலாவது குச்சொழுங்கைக்குள்ளால சைக்கிளைத் திருப்பினான். கொமாண்டர் ஜெயவிக்கிரம நேர்றோட்டால போனான்.

வாள்வெட்டுத்துரையனின்ர பொடியன் நடிகர்திலகம் வழமையாய்ச் சைக்கிள்ள வந்து திரும்புற சந்தியில வானோட ரெடியாய்ப் பூவரசமரத்துக்குப் பின்னால மறைஞ்சு நிண்டான். றோட்டில ஆள் வாற அசுமாத்தம் தெரிஞ்சுது. மெல்லமெல்ல வெளியே வந்தான் ஆள் கிட்டடிக்கு வந்தோண்ண பக்கெண்டு றோட்டுக்குப் பாஞ்சு வாளை ஒரு ஓங்கு ஓங்கிறதுக்கிடையில ஆள் விலத்திட்டுது. அவனும் சளைக்காமல் வாளைத் திரும்பவும் ஓங்கிக்கொண்டோட அடுத்தடுத்து இரண்டுதரம் வெடி பறிஞ்சுது. வாள் தெறிச்சு நழுவ, துரையன்ர பொடியன் றோட்டில குப்புற விழுந்தான்.

அடுத்தநாள் ‘வாள்வெட்டுத்துரையனின்ர பொடியனை ராத்திரி ஆமி சுட்டுதாம்’ எண்டு ஊர்முழுக்கப் பரபரப்பாயிருந்தது. ‘அவன் மற்றப்பாட்டியெல்லோ? அவனையேன் ஆமி சுட்டது?’ எண்டு விசயந் தெரிஞ்ச சிலர் கேள்வியெழுப்பிச்சினம்.

‘படையினர்மீது மறைந்திருந்து தாக்குதல் நிகழ்த்த முற்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை’ என்ற தலைப்பில பேப்பரிலையும் நியூஸ் வந்தது. வாள்வெட்டுத் துரையனின்ர பொடியன் சேர்ந்தியங்கின மாற்று இயக்க ஆக்களையும் ஆமி அரெஸ்ற் பண்ணிக்கொண்டுபோய் விசாரணை நடத்திச்சுது.

“துரைராசா மனோகர் தன்ர தகப்பனை புலிகள் இயக்கம் கடத்திக் கொண்டுபோய்; கொலை செய்ததால புலிகள் இயக்கத்தைப் பழிவாங்கிறதுக்காக எங்கட கட்சியில சேர்ந்தியங்கப்போறன் எண்டுதான் வந்து சேர்ந்தவர். மற்றும்படி அவரைப்பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது சேர்” எண்டு அந்த மாற்று இயக்க ஆக்கள் அழாக்குறையாச் சொல்லிச்சினம்.

“இனி இந்த ஏரியாவுக்குள்ள உங்கட கட்சி அலுவலகம் இருக்கக்கூடாது” எண்டு கொமாண்டர் ஜெயவிக்கிரம அடிக்காதகுறையாய்க் கடும் ஓடர் போட்டான். அதோட அந்த மாற்று இயக்கக்காரர் பின்னங்கால் பிடரியில அடிபடக் கட்சி அலுவலகத்தை மூடிப்போட்டு ஓடிட்டினம்.

10

நடிகர்திலகத்தைப்பற்றி ஊருக்குள்ள நிறையக் கதையள் உலாவிக்கொண்டிருக்கு. அதுகளில் இருக்கிற உண்மை, பொய்யைப்பற்றி ஒருத்தருக்கும் தெரியாது. அதைப்பற்றி ஒருத்தரும் இதுவரைக்கும் கேள்வி எழுப்பிறேல்ல. நடிகர்திலகத்தைப்பற்றி ஒருத்தர் கேள்விப்பட்டதை மற்றவருக்குச் சொல்லி, அவர் இன்னொருத்தருக்குச் சொல்லி இப்பிடியே கதையள் சுழன்றுகொண்டிருக்கு. நடிகர்திலகத்தை நேரடியாகக் கேட்டால் மட்டும்தான் இந்தக் கதைகளில் இருக்கிற உண்மைபொய் தெரியவரும். நடிகர்திலகம் எங்கே? அவரை எப்பிடிச் சந்திக்கிறது எண்டு கேட்டால் அதுக்கும் ஒருத்தருக்கும் தெரியாது. ஆனால், அதுக்குமொரு கதையிருக்கு.

நடிகர்திலகத்தின்ர தமக்கையொருத்தி கமலநாயகி யெண்டு மல்லாவியில இருந்தவ. அவவுக்கு எழில்வாணியெண்டொரு பெட்டை. தகப்பன்காரன் கந்தையாப் பிள்ளையெண்டு மல்லாவி யூனியனில ஜீயெம்மாயிருந்தவர். அவர் முதலே மோசம் போட்டார். தாயும், மகளும்தான் மல்லாவியிலயிருந்தவை. சண்டை மும்முரமாய் நடந்துகொண்டிருக்கேக்குள்ள இயக்கம் ஆட்பிடிப்பில எழில்வாணியைக் கொண்டுபோட்டுது. பிறகு தாய்க்காரியும் புதுக்குடியிருப்பில இடம்பெயர்ந்திருக்கேக்குள்ள ஷெல் விழுந்து செத்திட்டா. சண்டை முடிஞ்சாப்போல கொஞ்சக்காலம் எழில்வாணி தடுப்பு முகாமிலயிருந்தவள். அவள் வெளியில வந்தாப்போல மனிசியையும், பொடியனையும் கனடாவுக்கு அனுப்பிப் போட்டுத் தனிக்கட்டையாயிருந்த நடிகர்திலகம்தான் அவளைக் கூட்டியந்து தன்னோட வைச்சிருந்தவர். அப்பதான் இந்தப் புலனாய்வுக்காரரின்ர தொல்லை ஆரம்பிச்சுது. நடுச்சாமத்தில போனெடுத்துக் கண்ட படி கதைப்பாங்கள்.

“அங்க வா! இஞ்ச வா! என்னோட படுக்கவா!” எண்டு ஒரே தொல்லையாயிருந்தது. அவளும் பொறுக்க முடியாமல் ஒருநாள் விசயத்தை நடிகர்திலகத்திட்டச் சொல்லியிருக்கிறாள்.

“இனி அவங்களாரும் ரெலிபோன் எடுத்து அங்க வா! இங்க வா! எண்டு கூப்பிட்டால், நீங்கள் கூப்பிடுற இடங்களுக்கெல்லாம் வந்தால் ஆராவது பாத்துப் பிறகு ஊருக்குள்ள சொல்லி விசயம் பரவினால் வெட்கமாய்ப் போயிடும். அதால எங்கட ஊரில இருக்கிற மணிக் குருக்கள் வீட்டடிக்குப் பொழுபட்டாப்போல வாங்கோ. ஒரத்தரும் காணமாட்டினம் எண்டு சொல்லி நைசாக் கதை. மிச்சத்தை நான் பாத்துக்கொள்ளுறன்” எண்டு நடிகர்திலகம் எழில்வாணிக்குச் சொல்ல, அவளும் ரெலிபோனெடுத்தவனோட நைஸாகக் கதைச்சு அவனைப் பொழுதுபட்டாப்போல மணிக்குருக்கள் வீட்டுக்கு வர வைச்சிட்டாள்.

மணிக்குருக்கள் ஏதோவொரு வாய்ப்புக் கிடைச்சுக் குடும்பத்தோட கனடாவுக்குப் போட்டார். அதுக்குப் பிறகு அவரின்ர வீடு வெறும் வீடாய்க் கிடந்தது. இந்தச் சண்டையெல்லாம் முடிஞ்சு வடக்கில வசந்தம் வந்தாப்பிறகு பலரும் கள்ளப்பொம்பிளையளைக் கொண்டுவாற இடமாய்ப் போச்சுது. அதால எழில்வாணி மணிக்குருக்கள் வீட்டை வரச்சொன்னவுடனை புலனாய்வுக்காரன் நம்பிட்டான். அவன் வந்து மணிக்குருக்கள் வீட்டுக்கு முன்னாலயுள்ள சந்தியில நிண்டு எழில்வாணிக்குக் கோலெடுத்தான். அவளும் நடிகர்திலகம் சொல்லிக்குடுத்தபடியே “நான் குருக்கள் வீட்டுக்குள்ளதான் நிக்கிறன். வாங்கோ” எண்டு சொன்னாள். அவனும் காஞ்சமாடு மாதிரிப்போனான்.

மறுநாள் காலமை அந்தப் புலனாய்வுக்காரனை குற்றுயிரும் குலையுயிருமாய் ஆமிக்காறர் வந்து தூக்கிக் கொண்டு போனாங்கள்.

அதுக்குப்பிறகு ஊர் பரபரக்கத் தொடங்கிட்டுது. அடுத்தநாள் மத்தியானம் ஆமிக்காறர் வந்து நடிகர்திலகத்தின்ர வீட்டை றவுண்டப் பண்ணிப் பாத்தாங்கள். வீட்டில ஒருத்தருமில்லை. வெறும் வீடாய்க் கிடந்தது. அக்கம்பக்கமெல்லாம் பிரட்டியெடுத்து விசாரிச்சாங்கள். ஒருத்தருக்கும் ஒண்டும் தெரியேல்ல.

இப்பவும் சிலர் கதைக்கினம், ‘நடிகர்திலகம் கனடாவுக்குப் போட்டார்’ எண்டு. இன்னும் சிலர்’ இல்லையில்லை. அவர் இந்தியாவில நிக்கிறார்’ எண்டு சொல்லினம். எல்லாம் ஒரே மர்மமாயிருக்கு.

11

நடிகர்திலகத்தை முன்பின் தெரியாதாக்கள் அவரைப் பற்றின கதையளக் கேட்டோண்ண, ஆள் எப்பிடி யிருப்பார் எண்டு தெரிஞ்சுகொள்ள ஆசைப்படுவினம். அவரோட தோற்றத்தை விளங்கப்படுத்தினால் ஒவ்வொருத்தர் ஒவ்வொருவிதமாய் ஊகிப்பினம். அதால எல்லோருக்கும்; தெளிவாக விளங்கிறமாதிரிச் சொல்லுறதெண்டால், அவர் இளமையில நடிகர் சுருளி ராஜனைப்போலயிருப்பார். கடைசிக்காலத்தில அதாவது அவர் மர்மமாய் மறைஞ்சுபோன நேரத்தில நடிகர் டத்தோ ராதாரவி மாதிரியிருந்தார். சினிமா நடிகர்களை எடுத்துக்காட்டி விளக்கினால் ஆருக்கும் ஈஸியாய் விளங்கும்தானே.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2019 Designed By Digital Voicer