பொதிகைச்சித்தர் பக்கங்கள்

வெட்டவெளி

பகிரு

17. சிறியனவே சிந்திப்போம்

‘சிறியன சிந்தியாதோர்
‘பெரிதினும் பெரிதே’ கேட்கட்டும்
சிறுதெய்வம் பரவாதோர்
‘பெருநெறியே பிடித்தொழுகட்டும்’
சிறியனவே சிந்திப்போம்;
சிறுதெய்வம் சிறுதானியம்
சிற்றிதழ் சிறுசூழல் சிறுபான்மை
சிற்றின்பமும் மற்றாங்கே
பனுவலின்பப் பரவசமாய்
சிறியனவே சிந்திப்போம்’

சீறியாழ், சிற்றிலக்கியம், சிறுகதை, சிற்றிதழ், சிற்றெழில் (Minimalism) எனவருங்கால் ‘சிறு’எனும் முன்னொட்டு வடிவவகைமையிற் சிறிய அளவினதான என்றே பொருள்படும். சிற்றின்பம், சிறுதெய்வம், சிறுதானியம் என்கையிலும் முறையே நீடிக்கும், வழங்கும், பயிர்ச்செலவு எல்லைகள் குறித்த சிறுவாரி என்பதான வரையறையே.

சிறுதெய்வங்களுக்கு குறிப்பிட்ட எல்லையின் காணியாட்சி. சிறுதானியங்களுக்கு குறைந்த நீராதாரமே போது மான சிறுவாரிப் பயிர்ச்செலவு. சிறுதொழில், குறுந்தொழில், கைத்தொழில் இவற்றின் முன்னொட்டுக்களும் வழங்கெல்லை புழங்கு முதலீடு இரண்டையும் குறித்தனவே. எனவே இங்கெல்லாம் சிறு எனில் சிறிய அளவினதான எனக்கொள்ளாமல் ‘சிறுமை’ எனும் இழிவுபடுத்தலாக மயங்கலாகாது. இவ்வாறு பிறழ உணர்ந்த திரிபாலேயே சிற்றிதழ் சேகரிப்பாளர் தி. மா. சரவணன் சிற்றிதழ் என்னாமல் சீரிதழ் எனவும், சிறுதெய்வம் என்னாமல் கொலையில் உதித்த தெய்வங்கள், எனவே ஆய்வறிஞர் ஆ.சிவசுப்பிரமணியனும் ‘நாட்டார் தெய்வம்’ எனவே கவிஞர்கள் வெய்யிலும் மௌனன்யாத்ரிகாவும் கையாள வலியுறுத்துவராயினர். மேனாட்டிலும்கூட ‘சிறுகதை எனில் தவறான பெயரீடே (Misnomer) என்பாரும் உளர். அடிக்கும் படிகள், படிக்கும் வாசகர் இருவகையிலும் எண்ணிக்கை, இடுமூதலீட்டளவு, தனிச்சுற்றுக்கு மட்டும், விதிக்கப்பட்ட ‘பல்பிணிச்சில்வாணாள்’ எல்லை என்றிவை யாவற்றையுமே அகப்படுத்தியதே சிற்றிதழின் ‘சிறு’ எனும் முன்னொட்டாகும். கால்நூற்றாண்டைக் கடந்தும் 333 இதழ்கள் மாதந்தவறாது அறப்பிடிவாதி சரவணனால் வெளிக்கொணரப்பட்டும், மரணத்தருவாயிலும் இதழாசிரியரால் தொகுக்கப்பட்டு, கணவரைப் பறிகொடுத்த கையறுநிலை அவலச்சூழலிலும் கூட, கூடுதலான பக்க இறுதிமூச்சாக, சௌந்தரவதனாவால் வெளிக்கொணரப்பட்ட ‘சௌந்தரசுகன்’ சிற்றிதழ் வரலாற்றிலேயே புறனடையாக ஒரு தனியாக வீற்றிருப்பதாகும்.

அஃக்

‘பஞ்சம் பிழைக்கப் பட்டணம் போகிறேன்’ என்றறிவித்து தருமமிகு சென்னைமாநகரில் மனவெளியில் தொலைந்து போன சாதனையாளன் ‘அஃக்’ பரந்தாமனை மறக்க இயலுமா? சிற்றிதழ் என்றாலே நிறுவனமாக இறுகிப்போகா - நிறுவன எதிர்ப்புத்தன்னமை வாய்ந்த சோதனைத் தேடலான எதிர்நீச்சல் மாற்றிதழ்களை மட்டுமே குறிப்பதாகும்.

புதுமைப்பித்தனின் நிறைவேறாக் கனவுகளில் ஒன்று அவர் நடத்த விரும்பிய சோதனை எனுமிதழ் முயற்சி. அவர் காலத்திற்குப்பின் சோதனை எனும் பெயரில் நா.காமராசன் இதழை வெளிக்கொணர்ந்தார்.

‘மணிக்கொடியின் மனப்பான்மைப் புரட்சி. வாழ்க்கையிலும் சமூகத்திலும் புரட்சி. புராணமித்யேவ நசாது சர்வம் (பழமையானது) என்பதனாலேயே எதுவும் சிறந்தது என்பதற்கில்லை என்று காளிதாசன் சொன்னதுதான் அதன்கொள்கை. இதுதான் கு.ப.ரா. முன்னிறுத்தும் மணிக்கொடிக் கொள்கை.’ ‘சுவடு தெரிகிற இடத்திலே செல்ல மறுத்து, புதுத்தடம் போட்டுக் கொண்டு இலக்கியத்தின் எல்லைகளைச் சற்று விரிவடையச் செய்ய முயன்றவர்களைத்தான் சோதனைக்காரர்கள் என்று சொல்லலாம்.’ இதுதான் சி.சு. செல்லப்பா நடத்திய ‘எழுத்’தின் மூலவாசகமாக இடம்பெற்றிருந்த கநாசுவின் வாக்கு. ‘இதுநாள் வரையில் / பாத மிதியாத் தளங்களின் மீதும் / கன்னிச்சுவடுகள் பதிப்போம் - இனி / எதிர்வருநாளில் / பதிந்து பதிந்தவை பாதைகளாகப் / புதுயுகத் தடங்கள் விதிப்போம்.’ இதுதான் நான் நடத்திய ‘முனைவன்’ காலாண்டிதழின் மூலவாசகமும்.

‘சிறுபத்திரிகை இயக்கம் என்பது அடிப்படையில் மாற்றுக்கான இயக்கமே. மாற்றுகளை அறிமுகப்படுத்தி உரையாடல் நிகழ்த்திய இதழ்களையே சிறுபத்திரிகைகள் என்று கூறமுடியும்’- வீ. அரசு (சிறுபத்திரிகை அரசியல் ப-37)

‘The Little Magazine’ என்றொரு ஆங்கில இலக்கியச் சிற்றிதழும் வெளியானது. ‘Poetry’ என்றொரு ஆங்கிலக் கவிதைச்சிற்றிதழும் ‘Poetry foundation’ எனும் அமைப்பின் சார்பில் வெளியானது. தொடர்ந்து வருவது குறித்து அறியேன். ஆங்கில இலக்கியக் கையேடு ஒன்று ‘சிற்றிதழை’ எவ்வாறு வரையறுக்கிறது எனக் காண்போம்.

‘‘Little magazine : A term used to designate literary journals of small circulation very limited capital and usually quite short lives dedicated to the foesteering of avant garde aesthetics ideas and to publishing experimental poetry and prose - William Flint Jhrall Addision Hiffard (a hand book to literature -p 203)

சிற்றிதழ் வரலாறென்பது மாறி மாறி கையளிக்கப்பட்ட ஒரு தொடரோட்டமே. தீவிர முனைப்பு, சோதனைத்தேடல், ஆவணப்பாடு, பன்முகப்பரிமாணம் ஆகியவை சிற்றிதழ்களின் ஆக்கக்கூறுகள் என்றால், தன்முனைப்பு, மேட்டிமை மனோபாவம், குறுங்குழுவாதம், பாவனைப்போலிமை, சமரசப்போக்கு ஆகியவை அவற்றின் நோய்க்கூறுகள் எனலாம். இதழாசிரிய மாற்றமும், சில இதழ்களின் செல்நெறி மாற்றத்திற்குக் காரணமாயிற்று. ஆதிவெள்ளி முளைப்பு எனப்பட்ட மணிக்கொடி முதலாக இவ்விருவேறு கூறுகளும் காணக் கிடப்பனவே. வரா, ராமையா, பரா என மூவர் ஆசிரியத்துவத்திலும் வெளியான மணிக்கொடி (1) பத்திரிகையாளர் பங்களிப்பு, சீர்திருத்த நோக்கு (2) சிறுகதைச் சிறப்பிதழ், சோதனைத்தேடல் எனத் தொடர்ந்து மூன்றாம் காலகட்டத்தில் சென்று தேய்ந்திற்றுச் சீரழியலாயிற்று. ‘காலச்சுவடோ’ சுரா ஆசிரியத்துவம் வரை சிற்றிதழாகவே வெளிவந்து கண்ணன் பொறுப்பில் இடைநிலை இதழாக உருமாற்றம் அடைந்தது. கொல்லிப்பாவை முதற்கட்டத்தில் ராஜமார்த்தாண்டன், ராஜகோபாலன் என்ற இருவர் ஆசிரியத்துவத்திலும் காத்திரமாக வெளிவந்து ராஜகோபாலன் மட்டும் தனித்து பொறுப்பேற்ற பின் பின்னடைவாயிற்று. இத்தொடர்பிலான மேலதிகப் புரிதல்களுக்கு என் கருமை செம்மை வெள்ளையைக் கடந்து நூலிற்காண்க.

அண்மையில் ‘சிறுபத்திரிகைகளின் களம் மாற வேண்டும்’ எனும் தலையங்கத்தை (14.07.18) ‘இந்து தமிழ் திசை’ முன்வைத்தது. அதன் மீதான எதிர்வினைகளை கண்ணன் ‘இந்துவிலும்’ ‘காலச்சுவட்டிலும்’ முன்வைத்தார்.

வெகுஜன இதழ்கள், சிற்றிதழ்கள் எனும் வகைமை பாட்டிற்கும் இடைமைப்பட்ட இடைநிலை இதழ்கள் ( Middle Magazine ) எனவும் ஆய்வேடுகள் (Research Journals ) எனவும் வகைப்படுத்தலாம். புலமை, சமூகவிஞ்ஞானம், ஆராய்ச்சி, நா.வா.வின் ஆராய்ச்சி, புதிய ஆராய்ச்சி மேலும், சிற்றேடு, மாற்றுவெளி, இடைவெளி, அகம்புறம், பெயல், பிறழ் ஆகியவை ஆய்வேடுகள். இவை தவிர இதழ்கள், மலர்கள் இரண்டின் கூறுகளுடனும் வெளி வரும். தொகைநூல்கள் தனியே விதந்தோதத் தக்கனவாம். ‘வினோதரமஞ்சரி, குருஷேத்திரம், சுயம்வரம், வீடு, திரட்டு, பறை, தமிழ்க்கொடி, தமிழி’ ஆகியவை தொகை நூற்கள். கோணங்கியின் ‘கல்குதிரை’யையும், வைகறையின் ‘சாளர’த்தையும் தொகைநூல் வரிசையின் பாற்படுத்தலாம். இடைநிலை இதழ்களில் ‘அந்திமழை’மட்டும் வித்தியாசமாக மாதாமாதம் வெவ்வேறு பொருளை மய்யமாகக்கொண்டு வெளியாகும் தொகை நூல் தன்மையும் கொண்டதே. இதழ்கள் போலாது தொகைநூல்கள் என்பன தொகுப்பாசிரியரின் தெரிவிலும், தொகுப்பாசிரியர் கேட்டுப் பெறுவனவாகவும் அமைவனவாம்.

இடைநிலை இதழ்கள் தொடக்கி வைத்த அவற்றிற்கு மிகவும் நெருக்கமான கலாச்சாரம் இன்றைய சிற்றிதழ் களின் பண்பு மாற்றத்திற்கு காரணம். அவற்றின் உள்ளடக்க விஷயத்தில் ஒரு காலத்தேக்கத்தை அடைந்து விட்டன என்பது ‘இந்து’ தலையங்கக் குற்றச்சாட்டாகும். இது ஒரு பகுதி உண்மையே. சிற்றதழ்களின் தொடரோட்ட விளைவாக உருவான சந்தை மதிப்பை வணிகார்த்தமாக அறுவடை செய்யுமுக இடைநிலை இதழுக்கும் வெகுசன நாளேட்டிற்கும் இடையே ஏற்பட்ட போட்டியின் வெளிப்பாடுகளாகவே இந்துவின் தலையங்கத்தையும் கண்ணனின் எதிர்வினைகளையும் இனம் காண்கின்றேன். மட்டுமல்லாமல் நாளிதழின் ஆசிரியப் பொறுப்பிலிருந்தவர்களிடையே ஏற்பட்ட மாற்றத்தினால் இந்து தமிழ்த்திசையில் காலச்சுவட்டின் கை ஓங்கியிருந்த நிலையில் இருந்து தாழ்வு ஏற்பட்டதாகவும் இருக்கலாம்தான். இவ்வாறு சிற்றேட்டு இயக்கத்தின் பயன்பாடுகளை சுவீகரிக்க இயலும் முயற்சி எண்பதுகளிலே காணக்கிடப்பதே. எண்பதுகளில் சிட்டி - சிவபாதசுந்தர இரட்டையர் மணிக்கொடி பொன் விழா நடத்தினர். விழா ஏற்பாட்டாளர் பெயர்களில் செல்லப்பா பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆனால் அவர் ஏற்காமல் புறக்கணித்து விழா நிகழ்வில் உள்ளிருந்தபடி வேலைநிறுத்தம் செய்தார். மணிக்கொடி பொன்விழா பற்றி பேசவந்த சத்தியகங்கை பகீரதன் சம்பந்தா சம்பந்தமில்லாமல் தமக்கும் கல்கிக்குமான அந்நியோன்ய வாழ்வைப்பற்றிக் கதை அளந்தார். கல்கியின் வாரிசுகள் அரங்கைக் கேலிக்கூத்தாக்குவதாக பிரபஞ்சனும் நானும் குறுக்கிட்டோம். இரட்டையர் கல்கி இல்லையேல் மணிக்கொடி இல்லையென வக்காலத்து வாங்கி வந்தனர். இத்தகு சீரழிவின் தொடக்கம் வ.ரா. ஆசிரியத்துவத்தில் இருந்த மூன்றாம் கட்ட மணிக்கொடியிலேயே தொடங்கியாயிற்று.

இதன் பின் சிறுகதை பொன்விழா நடத்திய சி.சு.செல்லப்பா நிகழ்வில் சாண்டில்யனையும் இணைத்திருந்தார். சிறுகதை பொன்விழாவில் சாண்டில்யன் போன்ற பிரகிருதிக்கெல்லாம் என்ன வேலை? என நான் குறுக்கிட்டேன்.

சிற்றிதழ்களால் எதையும் சாதிக்க முடியாதெனவும், சிற்றிதழ் எதற்கு பார்ப்பானத் திட்டவா எனவும் சிற்றிதழ்களின் காலம் முடிந்துவிட்டது எனவும் காலகதியில் குரல்கள் எழுந்ததும், எழுவதும் உண்மைதான். இத்தகு குரல்கள் வண்ணநிலவன், மாறன், அசோகமித்திரன் தரப்பிலிருந்து நேற்றும், காலசுப்பிரமணியன் தரப்பிலிருந்து இன்றும் எழுப்பப்பட்டுள்ளன. சிற்றிதழ்களின் தொடக்கக் காலத்தில் நவீனத்துவமும் பார்ப்பனியமும் கைகோத்தே ஊடாடின. காலகதியில் புதிய கருத்தாக்க அறிமுகங்களும் உரையாடல்களும் பார்ப்பனரல்லாதார்களால் நடத்தப்பட்ட சிற்றிதழ்களில் முன்னெடுக்கப்படலாயின. அவற்றின் விளைப்பயனாய் இலக்கியத் தளத்தில் பெண்ணிய விளிம்புநிலைப் பிரதிகள் முக்கிய பேசுபொருட்களாயின. பார்ப்பன எழுத்தாளர் பீடங்களை ஆட்டங்காண வைத்தன. பல்வேறு நிலப்பரப்பின் புதுப்புது எழுத்தாளர்களின் சிறந்த இலக்கியப் பிரதிகள். இந்த வயிற்றெரிச்சலின் வெளிப்பாடே அசோக மித்திரன் கூற்றென எடுத்துரைத்தார் ஷோபாசக்தி.

‘தமிழகத்தில் நவீனத்துவ இலக்கியப் பின்னடைவு என்று ஒன்று இருந்தால் அதற்கு ஒரு முக்கியக் காரணம் பார்ப்பனர்களின் ததியோன்ன (தயிர்சாதப்) பிரக்ஞை என்பதை சொல்லவேண்டும்’ என்றார் ராஜன்குறை. திராவிட இயக்க எதிர்நிலைப்பதிவுகள் இனக்குழுவாகப் பார்ப்பன சக்திகளிடமிருந்து மட்டுமல்லாமல் மேட்டிமை மனோபாவ வெளிப்பாடாகப் ‘படிகள்’ தமிழவன் தரப்புகளிலும் வெளிப்படலாயின.

மாறுதலைத் தேடும் சிற்றிதழ் மரபின் மாறி மாறி கையளிக்கப்பட்ட தொடரோட்டத்தூடே ஊடறுக்கும் குறுக்குசால்களாக குறுக்கிடலாயின மாரீச இடைநிலை இதழ்கள். இடதுசாரி எதிர்ப்பும், இனக்குழுவாதமும், வணிகார்த்தமும் கைகோத்து சிற்றிதழ் மரபின் பங்களிப்புகளுக்கு ஏற்பட்ட சந்தை மதிப்பைக் கணிசமாக அறுவடை செய்யத் தலைப்படலாயின. பெரு முதலீட்டாளர் குடிசைத்தொழிலை நசிக்கச்செய்வது போல் சிற்றிதழ் முயற்சிகளைச் சீரழிக்கலாயின.

‘நாய் விற்ற காசைக் குரைக்கச் செய்வதுதான் மாற்றுப் பதிப்பகம்’ என்பதுதான் காலச்சுவடு கண்ணனின் நவீன பரிமேலழக வியாக்கியானம். இத்தகு புரிதல்களின் வெளிச்சத்தில் காணத்தலைப்பட்டால் ‘இந்து தமிழ்திசை’யின் தலையங்கமும் கண்ணனின் எதிர்வினையும் பேசி நிற்பனவற்றைக் கடந்து உள்ளவாறு உட்கிடைகளை இனங்காண இயலும்.

இப்போதும் கேட்கும் இன்னும் சில குரல்களையும் அவற்றின் உட்கிடை உள்நோக்கங்களையும் இனங்காணத் தலைப்படலாம்.

சிறுபத்திரிகைகளின் காலம் முடிந்துவிட்டது என்பதால்லயம்சிறுபத்திரிகையை சில ஆண்டுகளாக கொண்டு வரமுயன்றும் கைகூடாமல் இப்போது தொகுப்பு நூல்வரிசையாக கொண்டு வருகிறேன். தொடர்ந்து இவ்வாறு தொகுப்பாகவேலயம்என்பதைத் தொடர நினைத்துள்ளேன். இது சாத்தியமாகிறதா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்’ - காலசுப்பிரமணியம். ‘தமிழி’ - நவீன இயக்கத் தொகுப்பு ஜனவரி 2018.

இதழாக வெளிக்கொணர்வதைக் காட்டிலும் இலக்கியத் தொகைநூல்களாக வெளிக்கொணர்வது விற்பனைக்கு வாய்ப்பாக அமையும் என்பது சந்தைப் படுத்தல் தந்திரோபயம் என்கிற வரையில் அத்தகைய அணுகுமுறை சரியானதே. ஆனால் காத்திரமான சிற்றிதழ் பங்களிப்பாளராகிய காலசுப்பிரமணியமே கூட, சிற்றிதழ்களின் மரண அறிவிப்புச் சொல்லாடலைப் பாவிக்க நேர்வதேன் என்பதே கேள்வி. இது குறித்து இறுதியில் காணலாம். இதற்கு முன் ஏனைப் பிற குறுக்கீடுகள்:

இன்றைய விமர்சனநோக்கு உலகம் முழுக்க மாறி வருகிறது. அய்ரோப்பாவில் இன்று வணிக, இடை நிலைப்படைப்பாளிகளை நுணுக்கமாக ஆராய்ந்து நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் இந்த நிலை விரைவில் தோன்றும்.’ - ஆர். அபிலாஷ் (தீராநதிஜுலை 2018).

இலட்சியவாதத்தின் மரணத்தோடு சிறுபத்திரிகை இயக்கம் மரித்துவிட்டது. இன்று அசலான சிறுபத்திரிகைகள் இல்லையென நம்புகிறேன். இன்று இணையம்தான் நவீன சிறுபத்திரிகை உலகம். நான் ஒரு இடைநிலை மரபில் தீவிரமாக இயங்க இயலும் எழுத்தாளன்’ - ஆர். அபிலாஷ். (உயிர்எழுத்துசெப் 2014).

இத்தகைய அபிலாஷின் அபிலாஷைகளையும், நம்பிக்கைகளையும் சிற்றிதழாளரும் ஏற்கமாட்டார்கள். ‘நெட்டிசன்’களும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். நவீன இலக்கியப்படைப்பாளிகளை மதிப்பிடச் சொன்னால், குழம்பி தவித்து நழுவி வழுவி சொல்வேன் என்னும் அவரே பாலகுமாரனைத் தாமென்றும் மதிப்பிட்டதில்லையென பம்மிப் பதுங்குவானேன்? இடைநிலை படைப்பாளிகளை ஆராயும் எழுத்தேதும் இந்தியாவில் இதுவரை இல்லையா? ஏனில்லாமல்?

இதோ உதாரணங்கள்: (1) பாக்கியராஜின் திரைக்கதைகளில் தொன்ம மீட்டுருவாக்கம் குறித்து ‘இனி’ இதழில் ‘பாப்பண்ணன் மகன்’ எனும் புனைப்பெயரில் எம்.டி.முத்துக்குமாரசாமியின் மதிப்பீடு

(2) முனைவர் தேவதத்தாவின் பாலகுமாரன் நாவல்களில் ஆணாதிக்கம் பற்றிய மணிக்கொடி பொன்விழா கருத்தரங்க ஆய்வுக் கட்டுரை

(3) தமிழ் வணிக எழுத்தின் சமூக இலக்கிய அடிப்படைகள் எனும் ஜெயமோகனின் ‘காந்தள்’ இதழ் கட்டுரை

(4) ப்ராய்டு - லெக்கானியப் பார்வையில் சமூக, அரசியல் பிரதிகள் கதைகள், கவிதைகள், பாடல்கள் எனும் கா.செல்லபாண்டியனின் காத்திரமான மனஅலசல் ஆய்வுநூல்.

மிக அருமையான படைப்புகளை இலக்கிய உலகிற்கு அளித்திருக்கும் அவரே (அயர்லாந்தில் ஜான் பால் வில்டப்ளின்) ‘பெஞ்சமின் பிளாக்என்ற பெயரில்க்ரைம்நாவலும் எழுதுகிறார்.’

அது அங்கே நிகழ்கிறது.’ ‘இதை எங்கள் ஊரில் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்என்றேன்.

இதில் ஒரு தவறும் இல்லையே என்றார் ஜான்’.

தமிழில் மட்டும்தான் சிற்றிதழ் சூழல் கலைத் தரமானது. ஜனரஞ்சகம் சற்றுக்குறைவானது எனப் பெரிய மாய்மாலம் இருக்கிறது. அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்பதே உண்மை.’ - இந்திரன் (குங்குமம் 24.8.2018).

இவ்வாறே ரவி சேஷையாவின் ஜனரஞ்சக இதழ்ப் பங்களிப்பு குறித்த தம் முகநூற்பதிவிலும் எழுதி செல்கின்றார்கலை விமர்சகர்இந்திரனும் கூட.

இதழியம், இலக்கியம் ஆகிய துறைகளில் கலைத்தரம், ஜனரஞ்சகம் என்பது மாய்மாலம் எனும்  கலை விமர்சகர் ஓவிய விமர்சனத்திலும் இவ்வாறே பாப்லோ பிகாசோ கலைத்தரம், ஜெயராஜ் ஜனரஞ்சகம் என்பது மாய்மாலம் என்பாரா? எழுத்துத்துறையில் ஜனரஞ்சகத்தை தூக்கிப்பிடித்த கல்கிதானே சங்கீதத்துறையில் ஜனரஞ்சகம் புகுத்தப்பட்டபோது கடுமையாக எதிர்த்தவர். எழுத்துத்துறையில் மக்கள் தமிழான பேச்சுத் தமிழை வலியுறுத்திய கி.ராஜநாராயணன்தானே கர்நாடக சங்கீதம் காஞ்சிப்பட்டு, நாட்டார் இசை, சுங்கடிப்புடவை என தராதர நிர்ணயப்படுத்தினார். இத்தகைய இரட்டை நிலைப்பாடுகள் மாய்மாலம் ஆகாவா? இந்திரன் குறிப்பிடும் பெஞ்சமின் பிளாக்கின் மர்மநாவல்கள் எத்தகையனவோ நான் வாசித்தறியேன். இத்தொடர்பில் இந்திரன் மதிக்கும் அம்பர்த்தோ எகோவின் பார்வைகளுக்கூடாக இதுகுறித்து அணுகலாம். இத்தாலி இலக்கியப் பண்பாட்டின் ஒரு பகுதியாகத் துப்பறியும் நாவல்களை அங்கீகரிக்கும் எகோ அவரை பொறுத்தவரை அவைதாம் ஒரு நாட்டின் இலக்கிய உற்பத்தியின் குறிகாட்டி என்பதாக இனம் காண்கிறார். கல்விப்புலம்சார் எழுத்தோ, ஒரு நாவலோ மிக நல்ல ஒரு பத்தி எழுத்தோ இவற்றிற்கிடையே அவருக்கு யாதொரு வேறுபாடுமில்லை. ஒரு வேலைத்திட்ட ஈடுபாட்டோடு ஈடுப்பட்டால் அப்பணியை அதிவிருப்பமாக ஆற்ற முடியும் என்பதே அவர் நிலைப்பாடு.

‘ஒரு பக்கம் மொழியின் மிகவும் உயர்நிலைப் பண்பாடாகிய பரிசோதனை இலக்கியத்திலும், கலையிலும் விருப்பார்வத்துடன் இருந்தேன். மறுபக்கம் தொலைக்காட்சிகளையும், சித்திரக்கதைகளையும், துப்பறியும் கதைகளையும் விரும்பினேன். இவ்வாறு வேறுபட்டிருப்பது சாத்தியமா என என்னை நான் கேட்டுக்கொண்டேன். பண்பாட்டின் வேறுபட்ட தளங்களைச் சீராக்க விரும்பியே குறியியலுக்குத் திரும்பினேன். மக்கள் தொடர்புச் சாதனங்களில் உருவாக்கப்படும் எதுவுமே கூட ஒரு பாடப்பொருளாக அமையும் என்ற புரிதலுக்கு வந்தேன்’. அம்பர்த்தோ எகோ (அம்பர்த்தோ எகோ நேர்காணல்கள் ப-41 தமிழாக்கம்: ரபேல் வின்சென்ட்பால்)

எகோவின் விருப்பார்வங்கள் வேறுபட்டிருந்த போதிலும் மொழியின் மிகவும் உயர்நிலைப்பண்பாடாகிய பரிசோதனை இலக்கியம் கலை என்பவற்றை அவர் விதந்தோதியே சிறப்பிக்கிறார் என்பது இங்கே மனங்கொள்ளத்தக்கதாகும்.

இன்று இணையம்தான் நவீன சிறுபத்திரிகை  உலகமென்பதன் மூலம் அபிலாஷ்  இரண்டையுமே சரியாக இனங்காணவில்லை என்பது புலனாகி விடுகின்றது. இணையப் பயன்பாடு எவ்வாறு கையாளப் படவேண்டும் என்பது குறித்த எகோவின் பார்வை இத்தொடர்பில் முகாமையானதாகும்:

நான் மிகவும் சமநிலையுடன் இயங்கும் இணைய உலாவி. எனக்குத் தேவையான சிலவற்றைத் தேடுவதில் நான் இணையத்தில் உலாவுவேன். வெறும் ஆர்வத்துடன் 10 அல்லது 15 நிமிடம் மட்டும்தான் உலாவுவேன். ஓர் இரவு முழுவதையும் மனப்பிறழ்வுள்ள போதையேறியவர் போன்று நான் இணையத்தில் கழிக்கமாட்டேன். (-85)’.

சமூகம் எங்களுக்கு பண்பாடு என்ற பொறிமுறையின் ஊடாக எவற்றை நினைவில் வைத்திருக்கவேண்டும், எவற்றை மறக்கவேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது. பண்பாடு வடிகட்டியாய் இருக்காவிட்டால் அது பொருளற்றதாயிருக்கும். வடிவமற்ற கட்டற்ற இணையம் தன்னளவில் எப்படியிருக்கிறதோ அப்படி பொருளற்ற தாகி இருக்கும்.’ - அம்பர்த்தோ எகோ ( - 73).

மக்கள் தொடர்புச் சாதனங்களால் உருவாக்கப்படும் எதுவுமே கூட ஆய்வுக்கு ஒரு பாடப்பொருளாக இருக்குமென்ற புரிதல்களுடன் பண்பாடு என்ற பொறி முறைக்கூடாக காத்திரமாக அணுகத் தலைப்படுகின்றார் அவர். இவ்வாறு இயங்கவல்ல அவரின் ‘The name of the rose’ எவ்வாறு இலக்கியமாகின்றது என்பதில்தான் அதன் சிறப்பே தவிர ‘அது மர்மநாவல் மட்டுமே’ எனும் தலைகீழ்புரிதலால் அல்ல. எனவே எந்த ஜானரில் எழுதுவது என்பதைப் பொறுத்ததல்ல தராதர நிர்ணயங்கள். எந்த ஜானரில் எழுதப்பட்டபோதிலும் அது இலக்கியமாக பரிமாணித்துள்ளதா? இலக்கியப் போலியா என்பதே இங்கான கேள்வியாகும்.

சிற்றிதழ்களிலும் அபத்தங்களும் சமரசங்களும் ஊடாடிக் கிடக்கலாம். இடைநிலை, வணிக இதழ்களிலும் காத்திரமான படைப்புகளும் காணக்கிடக்கலாம். இவ்வாறான போதிலும், வரிப்புணர்மிக்க படைப்பூக்கமான எழுத்துக்கலைஞர்களின் விருப்ப ஆர்வமான வெளியீட்டு சாதனத்தெரிவென்பதில் மாற்றுத் தேடலின் சிற்றிதழ்களே முன்னுரிமைத் தெரிவாக இங்கு மட்டுமல்ல அயலகத்திலும் காணக்கிடக்கின்றன. அண்மையில் முஜிப் ரஹ்மான் கூடத் தாம் பிரபல இதழ்களில் எழுதுவதே இல்லை எனத் தம் முகநூற்பதிவில் முன் வைத்துள்ளார். அயலகப்பதிவையும் காண்போம்:

‘Thousand of pages experimental poetry fiction and criticism were published in the little magazines in their heyday. but these delits were more than off set by the fact that James Jayce, T.S.Eliot, Sherwood Anderson, Ernest Hemingway, William Faulkner, Edgarlee Masters, Ezra pound, Hart Crane, L.L Cummings, Edmund Wilson, New Critics, Gertrude stein, Thornton Wilder, Jhon crowe Ramson and Allen tate, among many authors found in the pages of the little magazines their first sympathetic publication media'

இன்னொரு கோணத்தில் ஜெயமோகன் கூடதமிழ் வணிக எழுத்தின் சமூக, இலக்கிய அடிப்படைகள்என்றொரு கட்டுரையை முன் வைத்துள்ளார். இத்தொடர்பிலான அவர் பார்வைகளை மட்டுமிங்கே ஒத்துறழ்ந்து நோக்கலாம்.

‘ஒரு பிரம்மாண்டமானதோர் மன இயக்கத்தில் தேவை கருதி, அச்சில் வெளியான சிறுபகுதியே, வணிக எழுத்து. சுயபோகம் செய்பவன் சுவரில் ஒட்டி வைத்துள்ள கவர்ச்சி நடிகையின் படம் போல, அது அவன் மனதில் ஒரு வடிவமே. ஆனால் தேவை கருதி எதிர்முனையாக மாற்றப்பட்ட ஒரு சிறுபகுதி. இதன் காரணமாகத்தான் தான் வாழ்ந்த சமூகத்தின் கூட்டு நனவிலி மனத்தை (Collective Unconscious) ஆராய விரும்பிய அன்டானியோ கிராம்ஸி சீரிய படைப்புகளை தவிர்த்து வணிக எழுத்தை கச்சாப்பொருளாக எடுத்துக்கொண்டார்’

‘வணிக எழுத்து உச்சக்கட்ட மனநிலைகளை தவிர்த்து விடுகிறது. சகஜமான மனநிலைகளின் சமூகப்பொதுமைகள் மட்டுமே அதற்கு அக்கறை. கலாச்சாரத்தின் சகஜமான சலனங்கள் பற்றி ஆராய சமூக ஆய்வாளர்கள் வணிக எழுத்தைக் கருவியாகக் கொள்ளலாம். ஆனால் ஒரு கலாச்சாரத்தின் உச்சக்கட்ட உத்வேகங்களின் சாரமாகிய இலக்கியமே முதன்மையும், கவனமும் பெறவேண்டும்.’

‘இன்று ஒரு சமூகத்தில் வணிக எழுத்தைத் தவிர்ப்பது என்பது சாத்தியமேயல்ல. அந்தளவு ஒரு விரிவான ஒரு சமூக பங்காற்றல் அதற்கு உள்ளது. வணிக எழுத்திற்கு எதிராக ஆரம்பகாலத்தில் விமர்சனங்கள் முன்வைத்த கோபம் பழங்கதை. ஆனால் ஆரோக்கியமான இயக்கம் உடைய ஒரு சமூகம் ஒருபோதும் தன்னில் நடக்கும் மையமான கலாச்சார செயல்படாக வணிக எழுத்தைக் காணாது. எந்த சிறிய உலகுக்குள் நடைப்பெற்றாலும் இலக்கிய செயல்பாடே கலாச்சாரத்தின் மூச்சுக்காற்று’ - ஜெயமோகன் (காந்தள்: 1-1994 கார்கூதிர்).

தமிழில் இவ்வாறு நிகழாமல் வணிக எழுத்தின் முதல்நிலை மாதிரிகளே சீரிய படைப்புகளாகக் கொள்ளப்பட்டன என்கிறார்.

இவ்வாறு வணிக எழுத்தையும், சீரிய இலக்கிய எழுத்தையும் விதந்தோதி இனம் காணும் வரையிலும் சரிதான். முகநூற்பதிவொன்றில் ஜெயமோகனை வாசிப்பதில் மேற்கொள்ளவேண்டிய எச்சரிக்கையாக ஒரு பதிவை (யமுனா ராஜேந்திரனோ, ராஜன்குறையோ என்பதாக ஒரு ஞாபகம்) வாசிக்க நேர்ந்தது. சரியாகத்தானே இருக்கின்றது எனப் பின்தொடர்கையில் சட்டென ஒரு கொண்டைஊசி வளைவு திருப்பம்போல் எதிர்த் திசையில் செலுத்தி விடுவார் என்னுமாப்போல, ஒரு பகுதி உண்மையை முன்வைத்து நம்பகத்தன்மையை ஏற்படுத்தியபின் அப்புறமாக வளையும் நெளிவு சுழிவுகளாக.

‘வணிக எழுத்தின் மூன்று கட்டங்களாக கல்கி, ஜெயகாந்தன், சுஜாதா என வரையறை செய்து கொள்ளலாம். மூவரும் அறிஞர்கள். மூவருமே தமிழில் நிகழ்ந்த மூன்று முக்கிய சமூக அலைகளின் விளைவுகள். சுதந்திர போராட்டம், மார்க்சியக் கண்ணோட்டம் அறிமுகமாதல், விஞ்ஞான விளைவியல (Empiricism) பார்வை அறிமுகமாதல்.’

‘ஜெயகாந்தனை தமிழின் மிகச்சிறந்த இலக்கிய ஆசிரியர்களின் பட்டியலிலும் சேர்க்கலாம். அடுத்த படியாக கல்கியையும் சுஜாதாவையும் சேர்க்கலாம். இவர்களில் சுஜாதா சமூகவியலின் பலம் இல்லாமல் முழுக்கக் கற்பனைநேர்த்தியின் பலத்தில் நிற்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டவர். எனவே தமிழ் வணிக எழுத்தில் மிகச்சிறந்த கதைத்தொழில் நுட்பத்திற்கு அவரே உதாரணம். இதில் சீரிய படைப்பிலக்கியத்திலும் அவருக்கு இணையாக அசோமித்திரனை ஓரளவு கூறமுடியும்.’ - ஜெயமோகன். இதற்கூடாக பகுதி உண்மை. கொண்டை ஊசி வளைவு, பின்னடைவு, உண்மைக்கு புறம்பான இடைச்செருகல், அதிர்ச்சி மதிப்புத்தீர்ப்பு என வளையும் நெளிவு சுழிவுகளை இனம் காணும் வேலையை வாசகர்க்கே விட்டு வைத்துவிடுகிறேன்.

சிற்றிதழ்களின் மரணஅறிவிப்புச் சொல்லாடல் மீண்டும் மீண்டும் எழுப்பப்படுவதே இவற்றின் கதியை உணர்த்தப் போதுமானதாகும். இடைமைப் படைப்பாளி அபிலாஷை விட்டுவிடலாம். கலைவிமர்சகர் இந்திரனும், ‘லயம்’ காலசுப்பிரமணியமும்கூட இவ்வாறு பாவிப்பதேன்? இங்கு சிறுதெய்வங்கள் சில அவற்றை வழிபடுவோர் சமூக மேம்பாடடைந்த பின் கோவில் தெய்வங்களாக மேனிலையாக்கம் பெறும் கதைகளே மனதிற் பளிச்சிடலாகின்றன. சிற்றிதழ்ச் சூழல் நிலைப்பாட்டிலிருந்து தடம் மாறி மய்ய நீரோட்டத்தில் கலந்திட துடிப்பதன் வெளிப்பாடே இவை எனலாம்.

பிரேமிளுக்கென்றே ஒரு காலசுப்பிரமணியம் வாய்த்ததென்பது பிரேமிளுக்கு வாய்த்த பெரும்பேறே. பிரேமிள் வாணாட்காலத்தில் ஒரு புரவலராகவும் பிரேமிள் காலத்திலும், அவர் காலமான பின்னரும் அவர் நூல்களை உரிய குறிப்புகளுடன் மிக அருமையாக தொகுத்து வெளியிட்ட தொகுப்பாசிரியராகவும் இயங்குவது காலசுப்பிரமணியத்தின் அருங்கொடையே. இவ்வாறே தம் நூலகத்தையும், நூல்களின் காப்புரிமத்தையும் கால சுப்பிரமணியத்திற்கே பிரேமிள் வழங்கியதும் ஒரு அற்புத நிகழ்வே. ‘லயம்’ இதழாசிரியர், வெளியீட்டாளர், தொகுப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர், அரிய நூல்களை ஆவணக் காப்பகங்கள்தோறும் தேடிக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்த கூடியவர் என்கிற வகையிலும் அவருடைய பணிகள் குறிப்பிடத்தக்கனவே. மறுப்பக்கமாக பிரேமிள் பேணி நின்ற அறப்பிடிவாதம் ஏதும் இவரிடத்தில் அறவே கிடையாது. உதாரணத்திற்கு அவருடைய ஒரு வாக்குமூலம்:

தினமலர் ஒரு இலக்கிய பத்திரிகை நடத்த முன் வந்ததாகக் கூறி (ஒரு இதழ் தயாரித்து மாதிரி காட்ட) நண்பர் அழைத்ததால் சென்று 20நாட்கள் மட்டும் (யாரையும் காணாத தனி இடத்தில்) தங்கி வேலை முடிந்த உடனே திரும்பிவிட்டேன். திட்டம் கைவிடப்பட்டு இதழ் வெளிவரவில்லை’.

இது அவருடைய 26.10.2015 தேதிய முகநூற்பதிவாகும். பிரேமிளின் ஆறு தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா நிகழ்த்தப்பட்ட முறையும் பிரேமிள் ஏற்கக்கூடியதாக இல்லை. பிரேமிள் மரணப்படுக்கையில் இருந்தபோது தைரியமுள்ளவர்கள் அவருக்கு உதவலாம் என்றெழுதினார் மா.அரங்கநாதன் ‘முன்றிலில்’. இன்றோ அவ்விழாவில் நீதியரசர் மகாதேவன் (மா. அரங்கநாதன் மகனார்) தலைமையேற்றார். வாணாட்காலமெல்லாம் பிரேமிளோடு முரண்பட்ட ‘தமிழினி‘ வசந்தகுமார் நூல் வெளியீட்டிலும் சந்தைப்படுத்துதலிலும் காலசுப்பிரமணியத்திற்கு உறுதுணையானார். இவை யாவும் காலகதியில் பிரேமிளுக்கு ஏற்பட்ட வெற்றியா? காலசுப்பிரமணியத்திற்கு ஏற்பட்ட தோல்வியா? வெற்றியா? முன் எப்போதைக்காட்டிலும் சிற்றிதழ் சிறு சூழல் பங்களிப்புகளின் தேவை இன்றியமையாக் காலச்சூழலே இன்றைய சூழல் என்பதுதான் எம்மனோரின் துணிபாகும்.

சிற்றிதழ்களே உண்மையான இயக்கங்கொள்ளும். இவ்வித இயக்கம் அதிகார மையமெனச் சுருங்குகிற நடுநிலை இதழ்களுக்கும் கூடுவதில்லை. நடுநிலை இதழ்களை களையெடுத்து சிற்றிதழ் தலையெடுக்கின்றது. உண்மையில் இப்போது சிற்றிதழ்களின் காலம்’ - வியாகுலன் - (பவளக்கொடி:5).

பத்திகள், மதிப்புரைகள், பல்சுவைக் கட்டுரைகள் மலிந்த இடைநிலை இதழ் சூழலின் மலட்டுத்தன்மை எந்த படைப்பூக்கத்திற்கும் இடம் தருவதில்லை. படைப்பை முன்வைத்து கூறிய விவாதங்களை நாம் முற்றிலுமாக இழந்துவிட்டோம்’.

இன்று சிறுபத்திரிகை மரபில் கிளைத்து எழுந்த பல்வேறு முரண்பட்ட கருத்துநிலைத் தரப்புகளுக்குள் ஒரு சமரசநிலை ஏற்பட்டிருப்பதுபோலத் தோன்றுகிறது. இது கருத்தியல் ரீதியான ஒரு அறிவியக்கத்தின் வழி நிகழ்ந்த சமரசப்புள்ளி அல்ல. வெறுமனே அதிகாரத்தைத் துய்ப்பதற்கும், சந்தை விழைவுகளுக்கும் ஒன்றை ஒன்று ஊடுருவாத, குறுக்கிடாத, விசாரணைப்படுத்தாத பரஸ்பர மௌன சமரசமே அதாவது ஒன்றின் இருப்பை அனுமதிப்பது ஊக்குவிப்பதன் வழி தனது இருத்தலையும் பாதுகாத்துக்கொள்வது’ - பிரவீன் (புறனடை 1).

பச்சையாக கூறுவதனால் இது சந்தர்ப்பவாத சமரசக் கூட்டணியே. ( a marriage of convenience). ‘கலைவிமர்சகர்’இந்திரனையும், ‘லயம்’ காலசுப்பிரமணியத்தையும் நோக்கி கூற விரும்புவதெல்லாம் இதுதான். எந்த வழியில் இயங்கப்போகிறீர்களோ அது உங்கள் தெரிவு. ஆனால் அதை நியாயப்படுத்தும் முகமாக சிற்றிதழ்களுக்கு முரண் சான்றிதழ் வழங்க நீங்களுமா என்பதுதானது. ஒற்றை இதழே வெளிவந்தபோதிலும் கூட தஞ்சை ப்ரகாஷின் ‘குயுக்தமும் சாளரமும்’ ‘காந்தளும்’ ‘புறனடையும்’ குறிப்பிடத்தக்கனவே. புறனடையின் ஆசிரியர் குழுவில் இருந்த பிரவீனே இப்போது பிரவீன் பஃறுளியாக இடைவெளி ஆசிரியர் குழுவில் இயங்குகின்றார். (புறனடையில் ஆர்.அபிலாஷும் இருந்தவர்தான்).

சனரஞ்சக இலக்கியச் சித்தாந்தத்தின் அடிப்படை என்பதும் வாசக எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படக்கூடியதுதான். அதுதான் அதன் மகாமந்திரம் என்பார் பிரேமிள். இச்சமன்பாடு ராஜாஜி போட்டுவிட்டப் பாதைதான் என்பார் தமிழவன். ‘கல்கியை ஜனரஞ்சக எழுத்தாளர் என்னும்போது நல்ல இலக்கியப் படைப்பிற்கு வாசக எண்ணிக்கை இருக்கக் கூடாதா என்ற கேள்வி எழக்கூடும். இங்கு நாம் கல்கியை இனம் காண்பது அவருக்கு பின்னால் இருந்த வாசகர்களின் கூட்டத்தை வைத்தல்ல. இக்கூட்டத்தைக் கவர அவர் கையாண்ட மலிவான தந்திரங்களை வைத்துதான்’- வேதசகாயகுமார் (தமிழ்ச் சிறுகதை வரலாறு:1).

வணிகம் என்றாலே நுகர்வியம் சார்ந்ததுதானே. வணிக எழுத்தின் அடிப்படைகளை அந்த ஜானரிலும் ஜாம்பவானானவர் வாயிலாகவே காண்போமே:

வணிக அடிப்படையில் உற்பத்தி செய்யப்படும் கேளிக்கை எழுத்திற்கு இருக்கக்கூடிய பொதுவான இரண்டு இயல்புகள்:

(1) அது வாசகன் விரும்பும் கருத்து நிலைப்பாட்டை மேற்கொள்ள முயன்றபடி இருக்கும்.

(2) அதன் அழகியலாக்கம் அச்சுவார்ப்புத் தன்மை கொண்டதாக இருக்கும். நுகர்பொருளின் இயல்புகள்தானே இவையிரண்டும்.‘ - ஜெயமோகன் (காந்தள்:1).

இத்தொடர்பில் மேலதிகப் புரிதல்களுக்கான முன் நிபந்தனை சனரஞ்சகம் (Popular) என்பதற்கும் வெகுசனக் கவர்ச்சி (Populistic) என்பதற்கும் விதந்தோதி கண்டாக வேண்டிய வேறுபாடேயாகும்.

‘சனரஞ்சக'வாதத்துக்கும் (Popular) 'சனவிருப்பு'(Populistic)வாதத்துக்குமான வேறுபாட்டை இன்னும் தான் நமது எழுத்தாளர்களும், பத்திரிகை ஆசிரியர்களும் நன்கு விளங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை.’- கார்த்திகேசு சிவத்தம்பி (மணிக்கொடி காலம்: முற்றுப்புள்ளிகளும், காற்புள்ளிகளும்..ப.33).

1892இல் அமெரிக்காவில் கட்சி ஒன்று தோற்றுவிக்கப்பட்டபோது அதனை ஜனநாயகக் கட்சியிலிருந்து வேறுபடுத்தக்கூடிய ஒரு பெயரைத் தேடினர். அப்போது தான் தி ஓவர்மாய்யெர் என்பவரால் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டப் பெயர்தான் ‘பாப்புலிசம்’ என்பதாகும்.

ரசியாவின் நரோத்னிக்குகள் இந்தியாவின் காந்தியம் இவற்றை முன்வைத்து வெஹாரோஸ் மற்றும் தமிழகத்தின் திராவிட முன்னேற்றக்கழகத்தை முன்வைத்து ஏ. கேதின் இருவரும் எழுதிய நூல்தான் ‘வளர்முக நாடுகளில் பாப்புலிசம் நேற்றும் இன்றும்’.

‘பாப்புலிசம் இரண்டு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. எந்தவொரு அரசியல் அளவுகோலின் முன்னரும் ஓங்கி நிற்கும் மக்களின் சித்தம் மற்றும் எந்தவித இடைநிலை அரசியல் நிறுவனங்களுமின்றி வெகுஜனங்களுடன் தொடர்பு கொள்ள தலைவர்க்குள்ள நாட்டம்’ - எ.ஷில்ஸ் (வளர்முக நாடுகளில் பாப்புலிசம் ப.15).

‘தனிப்பட்ட ஒரு தலைவரின் கவர்ச்சிகரச் செல்வாக்கு அவர் மட்டும் மக்களோடு நேரடித்தொடர்புகொண்டு அவரது கட்சியை நடத்துவது என்பது சில பத்தாண்டுகளுக்கு முன்பு வெகுசனத்துவம் (Populism) எனப் புரிந்து கொள்ளப்பட்டது.’ - ந. முத்துமோகன். (மார்க்சியக் கட்டுரைகள்; ப.935).

இத்தகைய தனிப்பட்ட ஒரு தலைவரின் செல்வாக்கில் வேரூன்றக் கூடிய வெகுசனத்துவக் கவர்ச்சி அரசியல் (Populistic Politics)தானே தமிழக அரசியலின் விதியை எழுதிச் செல்வதாகின்றது. வெகுசனத்துவக் கவர்ச்சித் தொடர்பில் திராவிடக் கட்சிகளை மட்டுமே விமர்சித்து விட்டு காந்திய வெகுசனத்துவக் கவர்ச்சியைப் பொறுத்தவரை காந்தி, பொம்மை குரங்குகளாகிவிடுவதும் இங்கே கண்கூடே. சனரஞ்சக எழுத்தின் ஆராதனையாளர் வெகுசனத்துவக் கவர்ச்சி எழுத்தையும் சனரஞ்சக எழுத்தெனவே சாதிப்பர்.

தீவிர இலக்கியப் படைப்பாளிகள் சனரஞ்சக இதழ்களில் பங்கேற்கையில் அவர்களுக்கான சுதந்திரம் எந்த அளவிற்கு அனுமதிக்கப்படும் என்பது கேள்விக்குரியதே. கந்தறுக்கோலமாகத் தணிக்கைச் செய்யப் படுகையில் இங்கென் எழுத்தை சிரைத்தவன் எவன் எனக் கேட்கும் திராணி ஜெயகாந்தனுக்கு இருந்ததுபோல் எத்தனைப் பேருக்கு வாய்க்கும்?

கனவுத்தொழிற்சாலை உற்பத்தியான கதாநாயகர் மத்தியில் இருந்தே தமிழக முதல்வருக்கு தவங்கிடக்கும் பிம்பச்சிறைத் தன்னிலைகளால் வெகுசனத்துவக் கவர்ச்சி அரசியலே இங்கு தொடர்கதை ஆவதில் வியப்பேதுமில்லைதானே?.

‘கொள்கைன்னாலே தலைசுத்திக் கண்ணைக் கட்டும் ரஜினியின் ஆன்மிக அரசியல் ‘மனிதன் பாதி மிருகம் பாதி’ ‘manimal மிருதன்’ ‘உத்தமவில்லனின் நடுமத்தி நாயக அரசியல்’ அடக்கியே வாசிக்கும் பணிவுத்திலகமான தளபதி விஜய்-ன் ஒரு விரல் அரசியல் இதுகளுக்கு தத்துவார்த்தப் பின்புல ஜாக்கிகளாக காந்தியத் தமிழருவி மணியன், முற்போக்குப் பேருரையாளர் பாரதி கிருஷ்ணகுமார், எப்போதும் அவரைப்போலவே நிறைய பேருக்கும் கதைக்கரு தோன்றக்கூடிய ‘பக்கா மாஸ்’ இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மும்மூர்த்திகளுக்குமே காவி அரசியலையே வெவ்வேறு ஜானரில் வெளுத்துக்கட்டி மூர்த்திகரணமாக திரை உரையாடலை அருளிச்செய்யும் மகா ஜாம்பவானாக நம்ம குமரிப்பேராசான். ஆசான் சீட கோடிகள் மேலான கவனத்திற்கு. இடைப்பிறவரலாய் ஜஸ்ட் ஸ்மால் பிரேக்.

திரைத்துறையைப் பொறுத்தவரை ஜெயமோகன் சாதாரண மனிதர். ஒரு எழுத்தாளர் என்ற அளவில் அவருடைய எந்தச் சொல்லுக்கும் அங்கே பெரிய மதிப்பிருக்காது’ - இது இந்து டாக்கீஸ் குறுக்கீடு - செல்லப்பா (இந்து தமிழ்த் திசை 2.11.18).

திருட்டு மாங்கனிகளே தித்திக்கும் திரைக்கதை வரலாற்றில் ஒரு திடீர் திருப்புமுனை என்றால் அது பாலச்சந்தர் மீது என்.ஆர்.தாசன் ஒரே ஒரு ரூபாய் மட்டும் இழப்பீடாகக் கேட்டுத் தொடுத்த அறிவுக் களவு வழக்கே. ‘அபூர்வ ராகங்கள்’ படத்திற்காக மட்டுல்லாமல் பாலசந்தரின் திரைக்கதை யாவுமே களவாடல்களே. பணம் பறிக்கும் நோக்கின்றி பாலச்சந்தர் அறிவுக் களவைத் தடுத்து நிறுத்தவே வழக்கென ஆதாரபூர்வமாய் நிறுவி வழக்கை வென்றெடுத்தார் சிற்றிதழாசிரியருமான சிகரம் ச.செந்தில்நாதன். திருட்டே என குற்றம் நிரூபணமாகி கதைத் திருட்டே எனவும் ஒரு ரூபாயோடு வழக்குச் செலவையும் சேர்த்து வழங்கவேண்டுமென தீர்ப்புரைக்கப்பட்டது. வழக்கு விவரங்களும் வாத தரப்புகளும் கூட மற்றொரு சிற்றிதழில் வெளியாயிற்று. வருண் ராஜேந்திரன் ‘செங்கோல்’ கதைத் திருட்டே ‘சர்க்கார்’ எனும் விவகாரத்தில் கதைத் திருட்டே எனப் பாக்கியராஜின் நேர்மையினால் அவர் பாதிப்புகளுக்கு ஆளாக நேர்ந்தது. இந்த விவகாரத்தில் வழமைபோலவே ஆசான் அறிவுக்களவாளி (Plagiarist) ஏ. ஆர். முருகதாஸ் பக்கமே வக்காலத்து வாங்கிவந்தார். மட்டுமல்லாமல் வருணுக்கு நியாயம் வழங்கப்பட்டபோதிலும் வருண் பெற்றது நோக்குக்கூலி என நக்கலடித்தார். பின் வழமைபோலவேப் பதிவில் நீக்கவும் செய்தார். வருண் பெற்றது நோக்குக்கூலி எனில் ஆசான் பெற்றதற்கு என்ன பெயர்? என வளரி (பூமராங்) எய்தவன் மீதே மீளப்பாய்ந்தது. ஆசான் அமைதியாய் இருந்திருக்கலாம் என்கிறார் இளங்கோகிருஷ்ணன் தம் முகநூற்பதிவில். வணிக எழுத்தின் சமூக, இலக்கிய அடிப்படைகள் பற்றிய தம் கட்டுரையில் கல்கியின் அறிவுக்களவுகள் குறித்து கள்ள மவுனம் சாதித்து அவரையும் அறிஞர் எனக் கொண்டாடுகிறவர்தானே ஆசான். ஆசான் எந்த காலத்தில் இளங்கோ அமைதியாய் இருந்தார்? இவ்விவகாரத்தில் பாக்கியராஜிக்கு பாராட்டுக்களும் ஆசானுக்கு கண்டனங்களும் சமூக ஊடகங்களில் எதிரொலித்திடலாயின.

இவ்வளவிற்குப் பின்னாலும் ஆசான் வலதுசாரியாய் இருந்தாலென்ன? என்னே அவர் படைப்பாளுமை, மொழியாளுமை வேறொருவர்க்கு வாய்த்திடாத இவற்றையெல்லாம் பேசாத விமர்சனம் எல்லாம் விமர்சனமாகுமா? ஆசானை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம் புறக்கணித்துவிட முடியாது என்பாரும் உளர். புறக்கணித்துவிடமுடியாமல் கண்டனம் புரிவதும் பொருட்படுத்துவதன் அறிகுறியே என்பதவர் தரப்பு. படைப்புகள் குறித்த விமர்சனங்களும் எம்மானோராலேயே ஏலவே வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறெல்லாம் ஆசானுக்கு வக்காலத்து வாங்கி ஆஜராகுபவர் தரப்புகளில் எங்கேயேனும் ஆசானின் எண்ணற்ற அவதூறுகளில் யாதொன்றிற்கேனும் கண்டனம் இருந்ததுண்டா? வலதுசாரி என்பதற்கு அப்பாலான பாசிசக்கூறுகளும், நேர்மையின்மை என்பதற்கும் அப்பாலான கயமையுமே ஆசானின் பண்புகளாகவும் பாடுகளாகவும் இருப்பதே விமர்சனங்களுக்கான காரணியாகும். ஆதிக்க சக்திகளை அரவணைத்தும் பாதிக்கப்பட்டத் தரப்புகளைப் புறக்கணித்தும் இயங்கலாகும்அதிகாரத்திற்கு ஒத்தோடியேஆசான் எனில் ஆசானுக்குஒத்தூதிகளேஆசானின் சீடகோடிகள் யாவும்.

கயமையின் ஆதாரப்புள்ளி சுயநலமாகும். ஆனால் சுயநலம் விளிம்பில் நிற்கிறது. கயமையோ மையத்தில் இருப்பது கண்டயறிவது கடினம். அது தன்னை தானே இனம் காட்டும்போதுதான் அறிய முடியும். தெய்வங்களின் கயமை, அரசுகளின் கயமை, மதங்களின் கயமை, தத்துவங்களின் கயமை, தனி மனிதன் கயமை எனப் பரந்துப்பட்ட தளங்களில் இந்த மன அமைப்பு இயங்குவது’. - ரமேஷ் பிரேதன் (அவன் பெயர் சொல்.64).

பலரைப் புணர்த்தும் இருட்பாவைக்கு உண்டு என்றும் கணவர்க்கும் தோன்றா கற்பு’ - உமாபதி சிவாச்சாரியார் (‘திருவருட்பயன்’).

ஆணவமலமாகிய இந்தப் பெண் கணவனாகிய தன்னைப் பற்றி நிற்கும் ஆன்மாவுக்கு தன்னைக் காட்டாமல் இருப்பார்’ - கு. வைத்தியநாதன் (சைவச் சித்தாந்த கொள்கைகளும் அவற்றின் குறியீட்டு மொழியும்).

‘மனிதன் தன் உயிரைக்கூட மாய்த்துக்கொள்ள முடியும். ஆனால் அகந்தையை அழிப்பது அவ்வளவு எளிதன்று. அகந்தை எல்லா மயக்கத்திற்கும் காரணமாகின்றது என்பதை மார்க்ஸ் தெளிவாக விளக்கி இதனையே ‘பொருளுக்கு அடிமையாதல்’ ( ‘ஆப்ஜெக்ட் பாண்டேஜ்’) எனக் குறிப்பிடுகின்றார். இதன் வடிவங்கள் பல. தனிசொத்து, சுயநலம், குறுகிய தேசியவாதம், குழு மனப்பான்மை, சாதிவெறி போன்றவைகளனைத்துமே பொருளுக்கு அடிமையாதலின் பல்வேறுவகைப்பட்ட வெளிப்பாடுகளே. அகந்தை தற்பெருமையாகவும், போலி கௌரவமாகவும் வெளிப்படும். இது மனமுவந்து மக்களுக்கு ஊழியம் செய்வதற்குப் பெருந்தடை’ - ‘சத்தியமங்கலம்’ எஸ். நாகராசன் (‘கீழை மார்க்சியம்...’).

இத்தகு புரிதல்களின் வெளிச்சத்திற்கு ஊடாக நோக்கத் தலைப்படுகையில்தான் ஆசானின் ‘சுயரூப சொரூபம்’ விளங்கித் தோன்றிடலாகின்றது. ஆசானின் மொழி ஆளுமையும் படைப்பாளுமையும் நிலை பேறான அறத்தையே வலியுறுத்துவனவாயிருக்க மாறாக அவரின் கைங்கர்ய மார்க்கமோ வர்ணாசிரம தர்மத்தையும் காவிப்பாசிசத்தையும் காபந்து பண்ண மடிதற்று முந்துறுவதாகின்றது. இத்தொடர்பிலான மேலதிகப் புரிதல்களுக்கு ஜனவரியில் என்.சி. பி.ஹெச் வெளியீடாக வெளிவர உள்ள (தொகுப்பாசிரியர்கள்: யமுனாராஜேந்திரன் - வே. பிரபாகர்) ஜெயமோகன் ‘இந்துத்துவப் பாசிசத்தின் இலக்கிய முகம்’ நூலிற் காண்க.

‘எவ்வளவு அழகாக படமெடுத்தாடுகின்றது ஆதிசேசன்’ என்கிறீர்கள். இல்லை என்று சொல்ல வரவில்லை நாங்கள். ஆன்மிகத்தின் மீது கட்டியெழுப்படும் பாசிசமது என்பதனாலேயே எச்சரிக்கின்றோம். மிகமிக அபாயகரமான நச்சரவம் அதுவே தானென’.

சிற்றிதழ் மனோபாவம் இலக்கியத்தை வளர்க்கவில்லையென மறுதலிக்கும் ஆத்மார்த்தி தம் முகநூல் பக்கமே தாம் நடத்தும் சிற்றிதழ் என்கிறார். சிற்றிதழுக்கென பரிட்சை, கோர்ஸ் எதாவது இருக்கா என்கிறார். அவர் மக்களுக்கு அருகாமையில் இருக்கிறாராமாம். ‘பேசும் புதிய சக்தி செப்டம்பர் 2018’ அருகாமையில் என்றால் தொலைவில் என்றே பொருள். ஆமாம் ஆத்மார்த்தி மக்களுக்கு அருகாமையிலேயே தாங்கள் இருக்கின்றீர்கள். முகநூலிலேயே வீற்றிருங்கள். ஆனந்த விகடனின் சிறந்த சிற்றிதழுக்கான விருது பெற்ற சிவ. செந்தில்நாதனின் இடைவெளி சார்பிலான ஏற்புரையே ஆத்மார்த்திகளுக்கு போதுமான பதிலாகும். விளிம்பு நிலை, தீவிரம், தனித்துவம், பிடிவாதம், பொதுப்புத்திக்கு எதிரான போர்க்குணம் ஆகியவையே சிறுபத்திரிகையின் விழுமியங்கள். தமிழில் நவீன பிரக்ஞையைக் கட்டமைத்தது சிற்றிதழ் இயக்கமே. கடந்த நூற்றாண்டின் எல்லா தீவிர அறிவியக்கமும் சிற்றிதழ் வெளியில்தான் நிகழ்ந்தன. இன்று வெகுசன கேளிக்கை வெளிகள் பெருகி படைப்பூக்கமும் சாரமான கண்டுபிடிப்பு மிக்க எழுத்தும் மூச்சுத் திணறடிக்கப்பட்டுள்ள நிலையில் சிற்றிதழ்களே மீட்சிக்கான வழி. விகடன், தடம் பிப்ரவரி 2019

‘பெரிதினும் பெரிதும் கேட்போர்’ மய்ய நீரோட்டத்தில் ஒத்தோடியே கதிமோட்சம் அடையட்டும். ‘சிறியனவேச் சிந்திக்கும்’ ‘மறுத்தோடி’களான எம்மனோர்க்கு எதிர்நீச்சலே எம் விதிமார்க்கம் என பிரகடனப்படுத்துகின்றோம்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2019 Designed By Digital Voicer