அனார் கவிதைகள்


பகிரு

உள்ளும் மௌனத்தின் புறமும்

தன்னை ரகசியமாகக் கருதாத
ஒரு ரகசியம் இருந்தது…
பல்லாயிரம் ரகசியங்களுக்குள் மறைந்து,
இருண்ட அறையில் விழும்
துண்டு நிலவு வெளிச்சம்போல
பளிச்சென்று…
நம் ரகசியப் பூனைக்குட்டி…
உனது கைகளுக்குள் ஓடிவரும்போது நிலா
எனது கைகளுக்குள் ஓடிவரும்போது சூரியன்
என் மடிந்த உள்ளங்கைக்குள்ளே
ரகசியத் தானியங்கள் இருக்கின்றன
பழக்கப்பட்ட ராஜாளி
என் மணிக்கட்டில் வந்தமரும்…
சிலந்தி இழுத்த நூலிழைக் கோட்டினில்
நிறுத்திவிட்டிருக்கின்றாய்
வறண்ட நாவை
கோடை வாட்டிச் செல்கிறது
சிவப்பு நிறம்
உடலின் உள்ளேயும் வெளியேயும்
தேங்குகிறது… பீறிடுகிறது…
கனவு…
ரயில் என விரைந்துவந்து
என் மீது ஏறிச் செல்கிறது
கேட்பதெல்லாம் பாதியை…
அல்லது
பாதியின் அரைப்பகுதியை
அரைப் பகுதியின் மீதியை…
மீதியில் எஞ்சுவதை…
அல்லது
தீர்ந்துபோனதின் தடத்தை…
இருந்தது என்பதன் நினைவை.

குறிச்சொற்கள்