யதார்த்தனுள்ளிருந்து கலையாடும் ஆத்தை

முகிலன்

பகிரு

நூல் மதிப்புரை 

நானும் மகளும் சந்தைக்குச் சென்றிருந்தபொழுது வயது முதிர்ந்த மூதாட்டியொருத்தி இலந்தம் பழங்களைச் சணல்பையில் விரித்து விற்றுக்கொண்டிருந்தாள். கருவேப்பிலைக்கட்டுகள் ஆயிரம் விற்றுத்தீர்ந்தால் ஒரு கூறு இலந்தைகள் விற்றுத்தீரும்போல. கிழவியின் தோல்சுருக்கங்களைப் போல பழங்கள் வாடியிருந்தன. கூறொன்றை வாங்கிப் பையில் திணித்துக்கொண்டேன். கொஞ்சூண்டு பழங்களை வாயில் போட்டுக்கொண்டு மகளுக்கும் பழம் ஒன்றை ஊட்டிவிட்டேன். வாயில் திணித்த மறுநொடியே பழம் பிதுக்கிக்கொண்டு வெளியேறிவிட்டது. நாவிற்கு ஒப்பவில்லைபோலும். ஏன் துப்பிவிட்டாய் என்றதற்கு,

“பழம் கசக்குது” என்றாள்.

“பழம் புளிக்கிறது” என்று சொல்லத் தெரியாதவள்.

அவளுக்குப் பிடிக்கவில்லை. எனக்குப் பிடித்திருக்கிறது. எனக்கு ஏன் இலந்தை என்றென்றும் பிடித்திருக்கிறது?

இலந்தை விற்றவள் என் பாட்டியை நினைவு படுத்தியிருந்தாள். கிழவியின் குழைந்த மார்புக்குள் உடல் புதைத்துக் கடந்த குளிர் பருவங்களையும், இரவுகளையும், ஒற்றைக்கண்ணன்களையும் நினைக்கச் செய்துவிட்டாள். அருகிலேயிருந்தும் சென்றுசேரமுடியாத ஊரை, காட்டோடையோரம் நின்றிருந்த இலந்தை மரத்தை, (ஒற்றை இலந்தை மரத்திற்காய் ஓடும் சிற்றோடை என்றும் சொல்லலாம்) முதல் பழத்தைப் பறித்துக் கொடுத்த ஏழூர்க்காளை, காட்டோடை மீன் குஞ்சுகளை என்று நினைவில் ஆழ்ந்து கிடந்ததையெல்லாம் மேலெழும்ப வைத்துவிட்டாள்.

இலந்தைப்பழம் என்றென்றைக்கும் எனக்குள் புளிப்பதில்லை. ‘எல்லோருக்கும் இலந்தைகள் இனித்துவிடுவதில்லை.’ ஒற்றை ஆப்பிளுக்கு பின்னால் பத்து இலந்தைகள் மறைந்து கிடக்கின்றன. இலந்தைகளை உணரும் இதயங்கள்தான் ஆப்பிளுக்குள் உறைந்திருக்கும் காஷ்மீர்ச் சூழலை உணரமுடியுமென்று நம்புகிறேன். யதார்த்தனின் நகுலாத்தை நாவல் என் உள்ளங்கைகளுள் குவிந்திருக்கும் இலந்தைகள். குழந்தைகள் சிற்றோடையில் பழைய கிழிசல் சேலையை நீரில் உள் நுழைத்து எடுக்கும்போது பிஞ்சுக் கைகளில் அள்ள அள்ளத் துள்ளும் மீன்குஞ்சுகள் போல யதார்த்தனின் நாவல் நதியெங்கும் அத்தனை கலைச்சொற்கள்.

மீன் குஞ்சுகளைப் பாலிதீன் பைகளிலோ, சிமெண்ட் தொட்டிகளிலோ அல்லது கண்ணாடிக்குப்பிகளிலோ சேகரம் செய்வதைப்போல, அக்கலைச்சொற்களைச் சேகரித்துக்கொண்டேன். பாத்திமாறுக் சானா அவர்களுடைய முன்னட்டை ஓவியம் மொத்த நாவலையும் எப்படி பிரதிபலித்திருக்கிறது அல்லது மொத்தத்தையும் எப்படி பிரதிபலிக்க முயன்றிருக்கிறது என்பதனை, நாவல் வாசிப்பின் மூலமே உணரமுடியும். கீரிப்பிள்ளை மேட்டிற்கு விலக்கான சர்ப்பங்கள் ஏன் ஓவியத்தில் இவ்வளவு விரவிக் கிடக்கின்றன?

சர்ப்பங்கள் புகுந்த நிலமாகிப் போனதன் குறியீடா இல்லையா எனத் தெரியவில்லை. சர்ப்பங்கள் நிறைந்த வாழ்வாகவே நிலம் மிஞ்சிப்போகிறது. கீரிப்பிள்ளை மேடு, ஆத்தை நின்ற மடுவான கீரிக்குளம், கீரிக்குளத்து வான் கதவுகள், வன்னி நிலத்து காட்டுயிர்களான மான், மரை, கலட்டியான், கூழைக்கிடாய், தட்டான்கள், மந்திகள், கீரிக்குளத்தையும் நகுலாத்தை நிலம் காக்கும் சிறு தெய்வங்கள், குளத்திற்கான கதைகள், நிலத்திற்கான கதைகள், சிறுதெய்வங்களின் மீதான ஊரின் மூத்த பெண்களான வள்ளியத்தை ஆட்சி, பூவரசாட்சி, அன்னம்மாள் என்று நீண்ட கிழவிகளின் வாய்வழிக் கதைகள், சக்கடத்தான் கதை, வேட்டைக்காரனின் துவக்கிற்கொரு கதை என்று ஊரும் நாவலும் கதைகளால் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. அம்மா சாமியாடுவாளென்று எனக்கு நீண்ட நாட்களாகவே தெரியும். தொடர்ந்து கவனித்துக் கொண்டுதான் வந்திருக்கிறேன்.

அமாவாசையன்றோ, முழு நிலவன்றோ சனங்கள் கூடுவார்கள். அவள் எனக்கு அந்நியளாகிவிடுகிற தருணங்கள் அவை. சிறுதெய்வங்களிடம் கேட்பதற்கும் பெறுவதற்கும் சனங்களிடம் ஏதோ ஒன்று உள்ளிருந்து இயக்கிக்கொண்டே இருக்கிறது. ஏதோ ஒரு பலகீனம் என்பதைத் தாண்டி வேறெதையும் நான் இன்னும் உணர்ந்திருக்கவில்லை. சிறுதெய்வங்களின் வாக்குகளின்றிச் சனங்களால் இவ்வாழ்வை நம்பிக்கையுடன் கடக்க முடிவதில்லை. பெருந்தெய்வங்கள் நம்மிலிருந்து வெகுதூரத்தில் இருக்கின்றன. நாம் சிறுதெய்வங்களோடும், சிறுதெய்வங்கள் நம்மோடும் காலம் காலமாய் உரையாடிக் கொண்டிருக்கிறோம். பெருந்தெய்வங்களிடம் உரிமை கொண்டாட முடியாமல் போவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்தப்புரிதல் மனதிற்கு மனம் நிச்சயம் வேறுபடவே செய்யும், ஆனால் பொதுவான மனநிலையில் சிறுதெய்வங்களின் மீது நமக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. சிறுதெய்வங்களின் வாக்குகளை எளிதாக நம்மால் நம்ப முடியும். நம்பிக்கை முறியும்பொழுது அவர்களை வசைபாடவும் பின் அவர்களின் மீதான கோபத்தை இயல்பாக ஒரு சூடம் கொழுத்தியோ தேங்காய் உடைத்தோ கடந்து போக முடியும். சிறுதெய்வங்கள் நம் மூதாதையர்கள் என்பதிலிருந்து இந்த உரிமை நம்மை அவர்களோடு மிக நெருக்கமாக வைத்திருக்கிறது. சாமியாடுதல் என்ற சொல்லிற்கு மாற்றாக கலையாடுதல் என்ற சொல்லை யதார்த்தன் எனக்கு அறிமுகம் செய்கிறார். காலத்திற்கும் ‘அம்மா கலையாடுபவள்’ என்ற சொல்லே நினைவில் இருக்கும்.

வேட்டைக்காரன் வாழ்வு முறை, மனோநிலை, வேட்டையில் அவனடையும் ஓர்மம், வாழ்வோடு வாழ்வாகிப்போன அவன் சக்கடத்தான்கள், வேட்டைத் துவக்குகள், வேட்டை மறுப்பு காலத்திற்குப் பிந்திய வேட்டைக்காரன் மனோநிலையென அழகாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நாவல் பாத்திரமான காங்கேசன் கட்டியிருந்த பச்சை நிற பெல்ட், நீண்டகாலமாக மனதிற்குள் உறுத்திக் கொண்டே இருந்தவொன்று. சிறுபிள்ளைப் பருவத்தில் பத்துப் பதினைந்து வேட்டை நாய்கள் ஊரைச் சுற்றிக்கொண்டே இருந்திருக்கின்றன.

அவைகள் பெரும்பாலும் குரைத்துப் பார்த்ததில்லை. ‘வாயடிக்கிற நாய் வேட்டைக்காகாதுதான்’ என்கிற பழமொழி மிகச் சரியானதுதான். எங்கள் குடிசைக்குப் பக்கத்துக் குடிசை வேட்டைக்கார கிழவன் என்றோ காலமாகிவிட்டான். எப்படி இறந்தான் எப்பொழுது இறந்தான் என்றெல்லாம் கேட்டறியும் மனோநிலையை இப்பெருநகர வாழ்வும் இயந்திரத்தனமான வேலைகளும் மனோரீதியாக அனுமதித்திருக்கவில்லை. கிழவனின் புலிமீசை இன்னமும் நினைவில் நிறைந்திருக்கிறது.

வேட்டை நேரங்கள் போக மற்ற நேரங்களில் எல்லாம் அவன் சிரித்துக்கொண்டே இருந்தது மட்டும்தான் அதிகமாகத் தேங்கிக் கிடக்கிறது. வேட்டைக்காரன் இடுப்பை அணைத்திருக்கும் பச்சை பெல்ட் வெறும் சாரத்தை மட்டும் அணைத்துக்கொள்வதற்கானது மட்டுமல்ல... குறுங்கத்தி ஒன்றை எப்பொழுதும் சுருகியே வைத்திருந்தான். பாதைகளில் குறுக்கே அவனைச் சந்திக்க நேரிடும் பொழுதெல்லாம் ஒருவித போலி பயத்தை உருவாக்கிச் சிரித்துக்கொண்டே செல்வான் பல நேரங்களில் அவனைப் பூனைமீசைப் பூச்சாண்டி என்றுதான் எண்ணத் தோன்றியது. ஆறு வயதிற்கு மேலாகும் வரை நான் எந்த உடுப்பும் பெரிதாக அணிந்திருக்கவில்லை.

சக்கடத்தானின் குட்டிகள் உடுப்புகளோடா திரியப்போகுதுகள். அவ்வப்பொழுது தனக்குப் பசிக்கிறது எனக் கூறி கத்தியை வைத்துக்கொண்டு காதறுக்கப் போவதாகவோ குடல் அறுக்கப் போவதாகவோ பகடி சொல்லி சிரித்துக் கடப்பான். அவனை நான் மீண்டும் பார்த்தது இந்நாவலில்தான். அந்தக் கிழவன் பெயர் கூட இன்றுவரைத் தெரியவில்லை. அவன் பெயரும் சின்ராசனாகவோ சின்னானாகவோ இருக்கக் கூடும். சமீபத்தில் ஊருக்குப் போயிருந்தபோதுதான் கிழவி வழிமறித்தாள். ‘கருச்சாமி நல்லாருக்கியா சாமி?’ என்றாள்.

‘ப்பு’ உச்சரிப்பில் என்றும் இருந்ததில்லை. யதார்த்தனின் மொழியில் சொல்வதென்றால், ஏதோவொரு ஆத்தையின் குரல். ‘வேட்டைக்கிழவனின் கிழவி’ ‘புருசன் போய்விட்டான்’ பிள்ளைகளும் போய்விட்டார்கள் விசனப்பட்டாள். வேட்டைக்காரனின் பிள்ளைகளிலொருவன் ஏதோவொரு பெருநகரத்தின் கட்டிட உச்சியில் வண்ணம் பூசிக்கொண்டிருந்த போது கீழே விழுந்து முடங்கிப்போனது நினைவில் வந்தது. ‘நானும் உன் பிள்ளை தான் கிழவி, என மனதிற்குள் மட்டும் சொல்லிக்கொண்டு, ஒரு வெற்றிலைப்பாக்கு கூட வாங்கித் தராமல்தான் கடந்து வந்தேன். கீரிக்குளத்தின் ‘வான்கதவுகள்’ மற்றும் அவ்வொலிச் சொல் என் முன்னால், பூமிக்கும் வானுக்குமான அரூபத் தடுப்பை ஏற்படுத்திவிட்டிருந்தது. கீரிக்குளமும் அதன் வான்மதகுகளும் எண்ணற்ற கதைகளைத் தேக்கி வைத்து யதார்த்தனிடம் கையளித்திருக்கின்றன. கீரிப்பிள்ளை மேட்டின் வளத்தைக் குறிப்பிடும் பொழுது, காக்கை வதன கீரிகுளத்தின் வெகுதூரத்திலிருந்து அதனை நோக்கியவாறு காத்து நிற்கிறான். மாரியில் காக்கை வதனன் கால்வரை தண்ணீர் ஏறி நிற்கிறது.

தண்ணீர் இறங்கிப் பயிர்கள் மஞ்சள் பூத்துச் சரிந்து அறுவடைக்குத் தயாராகும்போது காக்கை வதனன் பழுப்பு நிறத்திற்கு மாறி நிற்கிறான். ‘மாரியில் பச்சை, கோடையில் மஞ்சள்’ ‘பருவத்தின் நிறம் அவனுக்கு’ என்கிறார் யதார்த்தன். சிறுதெய்வத்திற்கு இவ்வலங்காரமே பெரும படையல் எனத் தோன்றுகிறது. நாவல் முழுவதும் ஆங்காங்கே பாலுறவு சார்ந்த உரையாடல்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. நகுலாத்தை வளைவின் தட்டான்களும் குரங்குகளும் மந்திகளுமே பாலுறவுக் கதைகளை வைத்திருக்கின்றன. முகம் சிதைந்த தட்டானின் பாலுறவு காங்கேசனை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.

நீதனுமொரு முகம் சிதையாதத் தட்டான்தான். பாலுறவில் வரம்பு, முறை, மரபு சார்ந்த கட்டுப்பாடு என்பதெல்லாம் யதார்த்த வாழ்வில் சாத்தியமில்லைதான். விதிவிலக்குகள் இருக்கலாம். ஒருபாலுறவு, வேறு சில வழக்கத்திற்கு மாறான பாலுறவுகள் என்பதெல்லாம் புரிந்துகொள்ளாமலும் உணர்ந்துகொள்ளாமலும் புறக்கணிக்கப்படுவது, இழிவுபடுத்தப்படுவதெல்லாம் மனப்பக்குவத்தின் போதாமைகளே... குழந்தைப் பருவம் முடிந்து உடல் பாலியல் மாற்றங்களை உணரத் தொடங்கும் பொழுதே பெண்பிள்ளைகளோ ஆண்பிள்ளைகளோ தங்கள் பாலுறவு வழிமுறைகளைக் கண்டடையத் தொடங்கிவிடுகிறார்கள். சிறுபிள்ளைகளான வெரோனிக்கும் தாமரைக்குமான பிரியம், அன்பு, காதல், காமம், இதை நமக்கு அறியத் தருகிறது. ஒருபாலுறவு வெறும் உடல் தேவைக்கானதாக மட்டும் இருக்கவில்லை. ஒரு மனம் இன்னொரு மனதை முழுமையாக நம்ப வேண்டியிருக்கிறது.

இந்த ஆழமான நம்பிக்கைகளே வளர்ந்து வளர்ந்து பிறகு பிரியங்கள் முரண்கள் வாதைகள் உடற்கலப்பு என்றெல்லாம் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. வெரோனி மற்றும் தாமரைக்கிடையிலான உறவுமுறை மிக அழகாக நாவலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒருபாலுறவுக் காதலை இவ்வளவு நேர்த்தியாக சொல்லிச் செல்லும் நூல்கள் மிகக்குறைவென்று எண்ணுகிறேன். ஆண் தன்பாலுறவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான எல்லா சூழலையும் சமூகம் கடைவிரித்து வைத்திருக்கிறது. பெண்களுக்கான பாலியல் தேவைகள், அதுவும் ஆண்துணை இழந்தவர்க்கு எல்லா வழிகளும் பெரும்பாலும் மரபு, ஒழுக்கம் போன்ற விலங்குகளால் கட்டப்பட்டுவிடுகிறது. இத்தாகம் ஏதேனுமொரு வழியில் தீர்க்கப்பட வேண்டியிருக்கிறது, பூர்த்தி செய்யப்படவேண்டியிருக்கிறது. இவ்வுறவு முறைகளைத்தான் பொதுப்புத்தியில் கள்ளத் தொடர்பு என்ற அருஞ்சொல்லை உருவாக்கி உபயோகித்து, முடிந்தவரை இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. நிர்மலாவிற்கும் புலேந்திரனுக்கும் உடற்தேவைகளைத் தாண்டியதொரு பிணைப்பு தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

இருவருக்குமான கடந்தகாலக் காயங்களுக்கு மாறி மாறி மருந்து தடவிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இருவருக்குமான உரையாடலில் நிர்மலா அடிக்கடி இறந்த கணவனைப் பற்றி கேட்கிற கேள்வி, ‘நீ அவரை ஒன்றும் செய்யவில்லை தானே?’ புலேந்திரன் ஏதேனும் செய்திருப்பானா வென்பதெல்லாம் கதையாசிரியனுக்கு மட்டுமே தெரியும். அவளால் ஒருபோதும் மறைந்த கணவனை நினையாமல் இருக்கமுடிவதில்லை. தம் பிள்ளைகளால் புரிந்துகொள்ள முடியாத அல்லது அவர்களுக்கு விளங்க வைக்கமுடியாத உறவுத்தேவைகளிவைகள். கைக்குழந்தையுடன் உறங்கிக்கொண்டிருக்கிறாள் தமயந்தி. நீண்ட தனிமை தன் தாகம் தீர்க்கப்படாத பொழுதுகளில் மனவழுத்தத்தின் புதைகுழிக்குள் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைப் புதைக்கத் தொடங்கிவிடுகிறது. பாலியல் வறண்ட தனிமை கொலை செய்யவோ, தற்கொலைக்கோ தூண்டுவது அடிக்கடி கேள்விப்படுகிற செய்திகள்தான். சிறுவன் சாரங்கன் பூனைபோல் பதுங்கி தமையத்தின் அறைக்குள் நுழைகிறான். அசையாமல் கண்மூடிப் படுத்துக் கிடக்கிறாள்.

வந்தவனவளின் பின்னால் படுத்துக்கொள்கிறான். பிரமையோ இதுவெனச் சந்தேகிக்கிறாள். ஆனால் உருவத்தை நம்பாமலிருக்க முடியவில்லை. அடிவயிற்றில் நெரி கண்டதுபோல் நுணுகி வலிக்கிறது. வியர்வை வாடை எழும் இவள் பின்கழுத்தின் மென்மயிர்களுக்கு இடையில் அவனுடைய நாசி அழுத்தி முகர்கிறது. இருவுடல்கள் வியர்வையால் வழுக்கித் திரும்புகின்றன. பாயிலிருந்து குளிரும் வெறுந்தரைக்கு உடல்கள் இணைந்து நகர்ந்தன. ஒரு கொலையோ தற்கொலையோ நீட்டிக்கப்படும் தருணங்களிவை. மசாலாக்கண்ணியும், பார்வை பார்க்கிற கிளியும், பூசை செய்பவருமான கிளியன்ரிக்கும் (கிளி என்பதை விட கிளியன்ரி என்பதே பிடித்திருக்கிறது) அட்சயனுடனான சந்திப்புகள், உரையாடல்கள் யதார்த்தத்தின் மொழியில் அப்படியே பதிவு செய்வதைத் தவிர வேறு சொற்றொடர்கள் பொருத்தமாகத் தோன்றவில்லை.

“உனக்கு மீசையெல்லாம் முளைச்சிட்டு எண்டே நம்பேலாம கிடக்கு, நீ சிப்பைப் பொத்திப் பிடிச்சுக்கொண்டு சிப்புக்குப் பட்டிட்டு எண்டு வீறிட்டது, நேற்றுமாரி எல்லோடா கிடக்கு, உண்மையாகவே வளர்ந்திட்டியோடா?” என்கிறாள். அட்சயனை ஏகத்துக்குச் சீண்டுகிறாள். சிப்பு விசயத்தைக்கூட ஞாபகத்தில் வைத்திருக்கிறாள். “சாப்பிடேன்”

“இல்லை வேணாம்.”

“எனக்கு பசிக்குதடா, ஒவ்வொரு நாளும் தனியாத்தானே சாப்பிடுறன், இண்டைக்கு என்னோடு சாப்பிடேன்?”

“என்ன சாப்பாடு?”

“சோறுதான். இண்டைக்கு மரக்கறி.”

சோற்றைக் குழைத்து உருட்டி முதல் பிடியை ஏந்தினாள். அட்சயன் ஆ... என்று சோற்றை வாங்கினான். அவள் இரண்டாவது வாயை நீட்ட,

“நீயும் சாப்பிடன் அன்ரி” கிளியன்ரி தன் குழந்தைத்தனத்துடன் கேட்கிறாள்,

“எனக்கு ஆர் தீர்த்ததி விடுற”

அப்படியொரு குழந்தைத்தனமான கேள்வியை இதுகாருமவன் கேட்டிருக்கவில்லை. எதிர்பார்த்திருக்கவுமில்லை. கைகள் அனிச்சையாக சோற்றைக் குழைத்து அவளுக்கு ஊட்டுகிறான். பரஸ்பரம் புதிதாகப் பார்க்கும் பார்வைகளில் சொல்லப்படாதச் சொற்களுக்குப் பஞ்சமில்லை. வெளியில் குரல் கேட்டது. கோயிலுக்கு வந்தவர்கள் யாரோ அழைத்தார்கள.

“ஓம் வாரன்” கடைசி சோற்றை இவனுக்கு நீட்டும்போது,

“காணுமோ இன்னும் குலைக்கட்டோ” என்கிறாள்.

பசித்ததுதான்.

“இல்லை காணும் கூப்பிட்டீனம்” என்கிறான்.

“அவையளை விடு உனக்குக் காணுமோ?”

“ஓம் வடிவாகக் காணும்.”

அவளுக்குக் காணுமோ என்று கேட்க நினைக்காத மனதை அவள் இவன் கைகளை, சோறு குழைத்த அதே பாத்திரத்தினுள் வைத்துக் கழுவும்போதுதான் கடிந்துகொண்டான். இவன் வாயைத் துடைக்கும்போது தலையைக் கோதி ஒருமுறை நெற்றியில் முத்தமிட்டு அனாயாயசமாக கூடாரத்தை விட்டு வெளியேறினாள். முத்தம் நெற்றியில் அழிபடாமல் கிடக்கிறது. வெறுமனே அவனை அங்கேயே விட்டு விட்டுச் சென்றாள். கிளியன்ரியை நாவலாசிரியர் கிளிப் பிள்ளையாக மாற்றிய தருணங்களிவை.

இரண்டு காதல் கதைகள் எனக்கு முக்கியமாகப்படுகிறது. மார்கழிக்கும் திகழ்கசீரனுக்குமான காதல் உறவு மற்றும் கவிதாவிற்கும் சின்ராசனுக்குமான காதல் உறவு. மார்கழி ஒரு தண்டனையின் பொருட்டு இயக்கத்தின் மருந்தகப்பிரிவில் பணி செய்கிறாள். வெரோனிடம் பகிர்ந்துகொள்ளப்படும் அவள் காதலும் பகிர்ந்துகொள்ளாமல் போன ரகசியங்களும் என்றென்றும் வாதைகளாய் வடுக்களாய் வாசகனுக்குள் படிந்துவிடுகின்றன. கலீல் ஜிப்ரான் காதல் கடிதங்களை என்றைக்கோ வாசித்தது ஞாபகத்திற்கு வருகிறது. ஜிப்ரானும் மேரிஹஸ்களும் என்றைக்கும் பார்த்துக்கொண்டதில்லை என்பதாக நினைவு. கடிதத்திற்கும் மறு கடிதத்திற்கும் மாதக்கணக்கான இடைவெளிகள். அவ்விடைவெளிகளின் நீளம் மனதாலும் அளக்கமுடியாது. மாதக் கணக்கில் பதில் கடிதத்திற்குக் காத்திருக்கவேண்டும் என்பதால் என்னவெல்லாம் எவ்வளவு எல்லாம் பகிர்ந்துகொள்ளமுடியுமோ பகிர்ந்தார்கள். மேரிஹஸ்களின் கடிதத்திற்குக் காவிய வரிகளைப் பதிலளிக்கிறான் ஜிப்ரான். மார்கழிக்கான சூழல் அப்படி இருந்திருக்கவில்லை.

உலகிலேயே ஒன் வேர்ட் ஆன்சர் பரீட்சைக்குப் பதில் எழுதுவதைப் போலப் பதில் வருகிறது திகழ்கசீரனிடமிருந்து. தனக்குத் தெரிந்த விருப்பத்தைக் கடிதமாக வரைந்து கடிதத்திலும் வரைந்து அனுப்பி வைக்கிறாள். திகழ்கசீரனிடமிருந்து வெகுசில வரிகளும் இரண்டு அன்பளிப்புகளும் வந்து சேர்கின்றன. உலகில் யாரும் அளித்திராத அன்பளிப்புகள். ‘ஒன்று சயனைடு குப்பி’ ‘இன்னொன்று ஒரு ஜோடி பாக்கெட் உடைக்காத பெரிய எவரடி பேட்டரி’ உச்சபட்ச காதல் பரிசுகள் வேறென்னவாக இருந்திருக்க முடியும். அன்பளிப்புகளைக் கைகொள்ளமுடியாத மார்கழி வன்னி நிலத்தின் ஏதோவொரு திசையில் நடுகல்லாய் நிலைத்திருக்கிறாள்.

“அவள் கரும்புலியல்லோ”

இப்பொழுதெல்லாம் ஐஸ் விற்பவர்களை அடிக்கடி பார்க்க முடிவதில்லை. உடைந்த தகர டப்பாக்கள், காலி மதுப்புட்டிகள் என குப்பைமேடு குப்பை மேடாய் தேடிக்கொண்டு ஐஸ்காரன் கால்களைச் சுற்றி திரிந்ததெல்லாம் அவன் சைக்கிள் சக்கரம் போல் ஞாபகம் வெளிகளில் சுற்றிக்கொண்டே இருக்கிறது. விதவிதமான பழங்களை அறிந்தவனுக்குத் தான் அறிந்திராத ஐஸ் பழத்தை அறிமுகப்படுத்துகிறார் யதார்த்தன். குழந்தை பருவத்தில் செல்லாக் காசுகளைக் கொடுத்து அடம்பிடித்து வெரோனியும் தாமரையும் கொஞ்சல் மொழியில் கெஞ்சி ஐஸ்காரனை என்றென்றும் ஐஸ்பழந்தரும் மரமாக மாற்றிவிடுகிறார்கள். (மரியாள் கையளித்த உண்டியல் காசுகள் என்றென்றைக்கும் செல்லுபடியாகும், மரியாளுக்கு முன்னால் அவனொரு தேவதூதன்) சாதிய வன்கொடுமைகள் பற்றிய அரசியலை நாவலின் பாத்திரங்களே தனித்துப் பேசுகின்றன.

தீவிர சாதிய மனோநிலை கீழ்ப்பட்டத்திலிருந்து தலைமைகள் வரை பரவலாக இருந்திருக்கிறது. நூலாசிரியரன் பாத்திரங்கள் ஆங்காங்கே விமர்சனம் செய்துகொண்டே இருக்கின்றன. காடு கழனி வைத்து வாழ்ந்த தோட்டக்காட்டான் முத்துசாமியைச் சாதிப்பெருமித சனங்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. பத்துப் பதினைந்து வெள்ளாளர் செட்டு இளைஞர்களால் முத்துசாமி இழுத்துவரப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு சகட்டுமேனிக்குச் சந்தியில் வைத்துத் தாக்கப்படுகிறான். சாதியத்தின் கைகள் பெரும்பாலும் நம் கழுத்தை நேரடியாக நெரிப்பதில்லை. நம் கைகளாலேயே நெருக்கிக்கொண்டு கொலையுற வைக்கிறது. தங்கள் குடிகளான பஞ்சமர்களின் மூலம் அவன் முகத்தில் சிறுநீர் கழிக்க உத்தரவிடப்படுகிறது. திருக்கைவாளால் அடிபட்டு வெடித்துப் பிளந்து கிடந்த முத்துசாமியின் முதுகில் ஒவ்வொருவரும் சிறுநீர் கழிக்கிறார்கள். சிறுவர்களும், ஏன் புடவை சுற்றி பிடித்திருக்க வெள்ளாளசெட்டி பெண்களும் சிறுநீர் கழிக்கிறார்கள் அமிலம் ஊற்றப்பட்ட புழுவாய் முத்துசாமி துடிக்கிறான்.

“சிறுநீரைவிடவா அமிலம் ஒரு மனிதனை, மனிதத்தைக் கொன்றுவிட முடியும்?” முதுகிலும் முகத்திலும் சிறுநீர் கழிப்பவர்களின் மலர்ந்த உறுப்புகள் (மர்ம உறுப்புகளென்று சொல்ல என்ன இருக்கிறது) இன்னும் சீழ்பிடிக்காமலேயே இயங்கிக்கொண்டிருக்கிறது. சுவர் விளம்பரப் பதாகைகளின் முகங்களில் சிறுபிள்ளைகள் சிறுநீர் பீய்ச்சி விளையாடுவதை வேடிக்கை பார்ப்பதைப்போல சமகால சமூகமும் கடந்துதான் போய்க்கொண்டு இருக்கிறது. இன அடையாள அரசியலையும் கம்யூனிசத்தின் மீதான இயக்க நிலைப்பாட்டு அரசியலையும் சண்முகம் மற்றும் தோழர் அருமரும் தங்கள் இயல்பான மொழியில் கதைக்கிறார்கள்.”

“இனவாதம் எண்டுறதும் பொருளாதாரத்தாலையும் மத அமைப்புகளாலையம் கட்டப்பட்ட ஒன்றுதான் சண்முகம் இனவாதத்தை அளிக்கிறது எண்டுறது பொருளாதார சமத்துவம் நோக்கின புரட்சியாளைதான் சாத்தியம். விடுதலைப் போராட்டம் எண்டுறதுலைறது சிங்களவனைச் சுடறது என்ற நிலையிலை எல்லாத்தையும் வளர்த்துவிட்டிருக்கிறியள். கடைசியில் சுடுறதோடத்தான் முடியும். விடுதலைக்கான உலகத்தின்ர கனவைத் தனிய நின்று காணேலாகாது, விளங்குதோ”

இந்த உரையாடல்களை நிகழ்த்தியிருக்காத, நிகழ்த்திய உரையாடல்களைக் கேட்க செவி கொடுக்காத காதுகளால் இழந்து நிற்பது எத்தனை எத்தனை உயிர்கள். சண்முகத்திற்கும் அருமர் மீதான அபிப்பிராயம் எல்லாம் “ஒரு தோழமாருக்கும் இயக்கத்தைப்பிடிக்காது”. அருமர் ஒரு தோழர். நச்செள்ளையாகிவிட்டவளான வெரோனிகா தான்செய்த குற்றமொன்றுக்காக இவளுடைய பொறுப்பாளரால் விசாரிக்கப்படுகிறார்.

“லெப்டினன் நச்செள்ளை, களத்தில் ராணுவ உடல் ஒன்றைக் காலால் உதைத்திருக்கிறீர்கள். மானுட அறத்தின் படியும் அமைப்பின் நடைமுறைகளின்படியும் அது தவறான நடத்தை, அதனால் உங்கட மூண்டு மாதம் நீங்கள் மெடிக்சில் பனிஸ்மென்ட் செய்யவேண்டியிருக்கும். ஏதாவது ஆட்சேபனை இருந்தால் சொல்லலாம்.”

"அவங்கள் எங்களை ஆக்களின்ர பொடிய எடுத்தால், கீரிக் கிழிச்சி, நிர்வாணமாக்கி ரோடு ரோடா கட்டி இழுத்துச் சிதைச்சுத்தான் எங்களிட்ட தாரங்கள்".

நச்செள்ளை முடிக்க முதல் அருகில் இருந்த தளபதி இவளை இடைமறித்து,

“இஞ்ச பாரும் பிள்ளை, நாங்கள் ராணுவம் இல்லை. நாங்கள் விடுதலைப்போராளிகள். ஒரு ராணுவ எதேச்சதிகார கட்டமைப்புக்கும் விடுதலைக்காகப் போராடுகிற எங்களுக்கும் இதுதான் வித்தியாசம், அதாலை நீங்கள் இந்த விசயத்தைச் சரியாய் விளங்கிக்கொள்ள வேணும், விளங்குதோ”

“அப்ப என்னை விருப்பம் இல்லாமல் பிடித்துக்கொண்டு வந்து இயக்கத்தில சேத்தது எந்த மானுட அறத்தில் வரும்”

இப்படியான பிள்ளைகளின் கேள்விகளுக்கு யாரிடமும் பதிலில்லை. அச்சுதனை இழந்த மழைக்கிளவிகள், துணைகளை இழந்த நிர்மலாக்கள், தமயந்திகள், துயிலுமில்லத்தில் உறங்கும் தாமரைகள், வெரோனிகள், செந்தழல்கள் என பெண்களும் பெண்களின் வலிகளாலும் தியாகங்களாலும் இயக்கங்கள் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன. கீரிப்பிள்ளை மேட்டின் எல்லா உயிர்களும் சிற்றெறும்புக் கூட்டமாய் நந்திக்கடல் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். கடலை நோக்கிய பயணத்திற்குக் கரைகள் இல்லையா?. கடல்மணற்பரப்பில் சுவடுகளானார்கள். நந்திக்கடல் கடற்கூதலைச் சுவடுகளின் மீது வீசிக்கொண்டேயிருக்கிறது...

‘ஆத்தை அவள் படலையிலேயே வீற்றிருக்கிறாள்.’

கீரிக்குளத்தின் வான் கதவுகளின் அருகில் இருந்து எவ்வியின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

“அம்மான் கண்”

சிறுதெய்வங்களின் மீது எல்லா உரிமைகளும் உண்டுதானே? எவ்வியின் பொருட்டும் சனங்களின் ஆன்மாக்களின் பொருட்டும், ஆச்சியின் யானைக்குட்டி கோபச் சொல்லான அதே வார்த்தையை நானும் பயன்படுத்திக்கொள்கிறேன்.

“அறுதல் வேசை ஆத்தை பிள்ளைகளை மன்னிப்பாள்.” கனகையாச்சி குரல் நடுங்கப் பாடுகிறாள்,

“காடும் பெண்டெல்லோ 
கண்டீரோ என்ரையாத்தை! 
நீரும் பெண்டெல்லோ 
கண்டீரோ என்ரையாத்தை! 
நானும் பெண்டெல்லோ 
கண்டீரோ என்ரையாத்தை! 
பெண்டாக 
இறக்கி நின்றாய் என்ரையாத்தை! 
பூமிப்பெண்டோடு 
கலந்துபோனாய் என்ரையாத்தை! 

“உங்களுடைய வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதைக் காட்டிலும் நீங்கள் எதை நினைவு கூருகிறீர்கள் எப்படி நினைவுகூருகிறீர்கள் என்பதே முக்கியம்” என்கிற காபிரியல் கார்சியோ மார்க்வெஸ்ஸின் கூற்றை, யதார்த்தன் தன் நகுலாத்தை மூலம் முழுமைப்படுத்தியுள்ளார்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer