கிடை நாய்
எங்கே கட்டி வைத்திருக்கிறாய்
கிடை நாயை?
கட்டவிழ்த்துவிடு
உன் மூதாதை தடம் பதித்த
மேய்ச்சல் நிலம் செந்நரிகள் சூழ
குதறப்பட்டுக் கிடக்கிறது
எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்
கிடை மேய்க்கும் கம்பை?
இதோ குள்ள நரிகள் சூழ
கிடை மாடுகள் புனைந்து வைத்திருந்த நிலமெங்கும்
நரியின் பல் தைத்த
தந்திர வேலிகள் உள்ளன
நரிகள் உன் குட்டியையும் கன்றையும் தூக்கிக்கொண்டு ஓடியபோது
கோவம் வந்ததா உனக்கு?
நரியைக் கொன்று பல்லெடுத்து மாட்டிக்கொண்டாயே!
உன் நிலம் பறிபோகின்றபோது
மட்டும் ஏன் இந்த மௌனம்!
மூதாதையான குலதெய்வத்தை அழை
மருளாட்டம் மறந்துவிட்டதா
சலங்கையைச் சீர் செய்து கட்டிக்கொள்
கொம்பூதச் சொல்
கிடைக்காளைகள் எக்காளமிடட்டும்
முறுக்கேறிய உடம்பை வளைத்து நெளித்து ஆடு
இவ்வுலகம் உன் நெளிவுகளில் ஆடட்டும்.
கண்மாயைத் தொலைத்த
நத்தைகள்
வெறுங்கூடாகிய பின்
எங்கள் விளையாட்டுக்குக்
கிடை ஆடுகள் ஆகிப்போயின
குட்டி நத்தைகள் இளங்குட்டிகளாகின
பெருத்த நத்தை கிடாய்களாகின
சற்றே மின்னிய நத்தைகள்
பெட்டை ஆடுகளாகின
அப்பா தொலைத்த
கிடை ஆட்டு மந்தையை
இப்படித்தான்
என் சட்டைப் பையில்
வைத்திருந்தேன்.
அப்பா இல்லாத கிடை
இரவின் அணுக்கம் கூடியிருக்கும்
தூரத்தில் நாய் ஊளையிட்டால் கூட
நரி என்று அடிமனது பிதற்றும்
ஆடுகளுக்கு எந்தப் பயமும் இருக்காது
கரும்புத் தோகை அசைந்தால்
உயிரில் சுனை பிடுங்கும்
ஆனால் ஆடுகள்
துணையாய் இருக்கும்
அந்தியில் தோன்றும் நிலா
நடுச் சாமத்தில் மறையும்
வளர்பிறை நாளில்
அப்பா ஒருநாள் ஊர் போய்த் திரும்புவதற்கே மூச்சு முட்டுகிறதே
அமாவசை நாட்களிலும் பிறை நாட்களிலும் அப்பாவுக்கு
எத்தனை நாள் மூச்சு முட்டியிருக்கும்
இருந்தாலும் இந்த இருள்
எங்களின் தாய்.