வடிவு

சிவசித்து

பகிரு

1

மழைக் கோப்புக்கான முறுக்கு வெயில்தான். பொட்டுத்தூத்தல் விழுந்தாலும் நிலம் இளகிக்கொடுத்திருக்கும். மண் இறுக்கம் குறையாமல் இங்கு மகசூல் ஏது? பிசுக்கு வியர்வை முதுகை நமநமக்க “ஏ பாக்கியங் இங்கன லேசா சொறியேங்” என அவள் கிட்டத்தில் போய்த் திரும்பி நின்றாள் வடிவு. எரிச்சல் வரத்தான் செய்தது பாக்கியத்திற்கு, பெயருக்கு ‘பரட்டு பரட்டு’ என ரெண்டு இழுப்பு இழுத்து வெடுக்கென்று ‘போ’ என்றாள். கருமாயத்திலும் மினுக்கம் கொடுக்கும் என்பதை மெய்யாக்கும் தோற்றம் வடிவுக்கு, கடுங்கோடையில்தான் காய்ப்பும் காய்க்கிறது. திரும்பிப் போனவளை பார்த்தபடியே நின்ற பாக்கியம் தனக்குள் நினைத்துக்கொண்டாள்.

கஞ்சிச்சட்டியைத் தொறந்ததுதான் தாமதம், பாக்கியத்தைப் பார்த்துத் தொடர்ந்தாள் வடிவு, “வெளிக்குப் போற எடத்துல வீங்கிட்டு, வலி உயிர் போவுது பாக்கியங் லேசா முக்கீட்டேங் ஒரே ரத்தக்காடுதாங்” அருகிலிருந்த பொம்பளை ஆட்களோடு அமர்ந்திருந்த பாக்கியம் மொணமொணத்துக் கொண்டே போனாலும் தோராயமாக வடிவுக்குக் கேட்க முடிந்தது.

“எடுக்காத எடுப்பெடுத்தா... இது மட்டுமா வரும்” வடிவு சிரித்துக்கொண்டாள். சிரிக்கிறாள் என்றதும் பாக்கியத்துக்கு ஏன் மேலும் மேலும் தன் சீரழிவை வடிவே தேடுகிறாள் என்று ஆங்காரம் கூடியது. அழுத்திச் சொன்னாலாவது அந்த மட்டில் அடங்குவாள் என மீண்டும் அதையே சொன்னாள். வார்த்தை ஒன்றும் வலியெடுக்காது என்ற எளிய உண்மை இப்போது வடிவுக்குப் பிடிபட்டிருந்தது.

தூக்குவாளியின் மூடியைக் கழட்டிச் சோற்றை மூடியில் போட்டுக்கொண்டு சாப்பிடத் தொடங்கினாள். ஒரு பார்வை பூவரசின் கொப்பில் தொங்கியத் தொட்டிலில் இருந்தது. ஒவ்வொரு வாய்க்கும் கண்ணத்து மட்டில் விண்விண்ணென்றுத் தெறிப்பு! ரெண்டு நாளாக உப்புக்கல் உமி ஒத்தடம் கொடுத்தும் ஒன்றும் தேவலையான பாடில்லை.

ஒவ்வொரு வாய்ச்சோற்றுக்கும், சோற்றை மெல்லத் தொறக்கும்போது, வலிக்கு, வாய் ஒருவடியாகக் கோணத் துவங்கியது. மொகரக்கட்டை என்ன லச்சணத்தில் இப்போதிருக்கும் என்றெண்ணும்போது வடிவுக்கு உதடுப் பிதுங்கி சிரிப்பு வந்தது.

“மூதேய்... என்னத்துக்குத்தாங் சிரிப்பாளே” (எப்படித்தான் சிரிக்காளோ?) என்றனர் தங்களுக்குள். இதே ஆள்கள்தான், “ரெண்டாள் பாட, ஒரு பொம்பயளா பாத்தாலும் சிரிச்ச மொகமா பாக்க வடிவ விட்டா ஆளு கெடயாது” என்றும் சொன்னார்கள். எத்தன முறை இங்கு உள்ளவர்கள், “கொஞ்சம் கெறக்கமா இருக்கே” எனும்போது “வெலகுக்கா” என்றபடியே தன் தலைச் சுமையோடு அவர்கள் விறகுக் கட்டையும் சுமந்திருப்பாள். இப்போது மட்டும் என்ன வேதனையில் கொஞ்சம் குன்னி நடந்தாலும் உடலூக்கம் வடிவுக்குச் சுண்டவில்லை.

இப்போது வெறகு வெட்டுச் சோலி கிடையாது. மக்காச்சோள அறுப்புத்தான். வேலை முடிந்து, கொண்டு வந்த கஞ்சியை உண்டு கிளம்பலாம் என்பது எண்ணம். பாவாடை நாடாவைச் சுருக்கு இழுத்து தளர்த்திக்கொண்டு கொறச்சோற்றை விழுங்கத் தொடங்கினாள் வடிவு. அவதி அவதியென்று நாலு வாய் அவக்கென்று அள்ளி முழுங்கும் சோலி எல்லாம் வடிவிற்குக் கிடையாது. அப்படியள்ளித் தின்று எந்த ரயிலை மறிக்கப்போகிறோம். ஆற அமர ஒரு கும்பா சோற்றைத் திங்கவேண்டும். உடம்பு வலிக்கப் பாடு பார்க்கவேண்டும். உடம்பு நோவ பாடுபார்த்தால் சாமத்தில் தூக்கம் கெடாது என்ற எண்ணம் வடிவுக்கு. “திங்கதுக்குத் தக்கன கறிமப்பு” என்றால் மேலும் சில வாய் போட்டுக்கொள்வாள். இப்போது அப்படி ஒன்றும் திங்க முடியாதுதான். “செஞ்சுட்டு செருப்படி படுவது” போலத் தின்று பின் நொம்பலப்பட முடியுமா!

காட்டை ஒட்டிப்போகும் கண்மாய் கரையை உரசி உருளும் வன்னியரசு சைக்கிளில் விக்கும் முறுக்கு, காரச்சேவு, கொய்யா உள்ள தகரப்பெட்டியை ஒரு பார்வைப் பார்க்கும்போது மறுபார்வை குழந்தை தொட்டிலையும் பார்த்தது. அதே வேளையில் கை சுருக்குப்பையைத் தடவியது. அதுதான் செய்ய வேண்டும் என்பதுபோல எழுந்தவள் மறு கை உயர்த்திக் காற்றில் துடுப்பு போட்டு

“ஏண்ணே, இந்தா வாரேன்” என்றாள்.

“பதறாம வா, எதுக்கு வேகு வேகுனு ஓடியார? நின்னுட்டுத்தான இருக்கேன்”

சோற்றுக்கையோடு வந்தவளை பார்த்ததும் வெஞ்சனப் பாட்டுக்கு வாங்க வந்திருப்பாள் என ஊகித்தபடி டப்பாவுக்குள் இருந்து ஒரு கரண்டி ஊறுகாயை எடுத்து இலையில் மடித்து நீட்டினார். “ஊகூம்” என்று தலை உதறி, “சாப்டேங்... வேற என்ன இருக்கு என தகர டப்பாவைக் குனிந்து பார்த்தாள் உயரம் அப்படி! சோற்றுக்கையைத் துடைத்துக்கொண்டு “பாக்கியம் ஒனக்கு எதும் வேணுமா” எனும்போது கூட்டத்தின் சலசலப்பு நின்று மீண்டும் இயல்பானது. பாக்கியம் பதில் சொல்லவில்லை வெறுமனே” தலையசைத்து வெறித்தாள்.

அடுத்த நொடி அடிவயிற்றில் தீ வைத்தது போல சுரீர் என்றிருந்தது பாக்கியத்திற்கு. வடிவு தன் சுருக்கில் இருந்து பணம் எடுத்து நீட்டிக்கொண்டிருக்கும்போது கரிவலவந்தநல்லூர் பால்வண்ண நாதர் கோயில் நேற்றிக்கடன் போட்ட சுருக்கு பையது.

ஏ... முண்ட என்ன சோலி பாக்க நீயி...” தன்னை மீறி தலையில் அடித்தபடி பாக்கியம் கேட்டே விட்டாள். பாக்கியம் கேட்டதெல்லாம் வடிவை எட்டவில்லை என்றாலும் கம்மிய குரலில் “அதிகப் புடிச்ச முண்ட நீ சீரழியதும் இல்லாம புள்ளைக்கு நேத்திக்கடன் போட்ட காசுல வாங்கி அது தலையிலவும் மண்ண கொண்டாந்து போடனுமாக்கும்” என்று பாக்கியம் சொல்லி முடிக்கத்தான் செய்தாள்.

வடிவு தொட்டிலை நெருங்கும்போதே தாய் வாடையெடுத்து குழந்தைக் கொஞ்சிச் சினுங்கியது “வாரங் வாரங்” எனச் சொல்லும்போது நெஞ்சு அடைக்கத்தான் செய்தது வடிவுக்கு. மேலக்கரையில் உள்ள காட்டின் இடப்பக்கம் பெத்துராசு நாயக்கர் கரும்புக்காடு அதன் நடுவில் ஒத்தப்பிரிப்பாதையாக நீண்டு காடு-களத்தை ஊடறுத்துப் போகும் ஆற்றுப்பாதை, அதையொட்டிய சுழிவில் சச்சமுக்கமாக அமைந்த கரும்புக்காடு பெத்துநாயக்கர் ஒருவருக்குத்தான். இப்போது ஆள் தவங்கிப்போனார். மகன் ராசு வருகை கொஞ்ச நாட்களாகவே குறைந்திருந்தது.

ராசுவின் நினைவு வரும்போது நடு மார்பில் ஒட முள் ஏறியதுபோல இருந்தது. வத்தலாகச் சிவந்த கண்களில் நீர் தடம் தொலைத்திருக்க, உள்ளெழுந்த வேக்காட்டை அமர்த்தவேண்டிய மட்டுக்கு காற்றை இழுத்து கூட்டை நிறைத்தாள். உடம்பு வெடப்பு கூட மார்பு புடைத்தது.

வடிவு குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டாள். கரும்புக்காட்டில் மோட்டார் ஓடும் சத்தம். காலை கரண்டுதான். இப்போது எல்லாம் கேசவன்தான் வந்து போகிறான். ராசு வீட்டுக்காரியின் தம்பி முறையானவன். கூறு கணக்கில்லாமல் தொழிலில் இறங்கி “வேவரிக்கு வியாபாரம்” செய்து நொடித்த கையோடு இங்கு வந்து ஒட்டிக்கொண்டிருக்கிறான். ராசு கிணற்றடியில் உள்ள பம்பு செட்டில் குளித்துத் துவட்டிக்கொண்டே வெளியே நின்றான் கேசவன்.

கேசவனைக் கண்டதும் தன்னறியாதொரு எளக்கார பிசுக்கு வடிவிடம் சுரந்தது. சில சமயம் சம்மந்தமே இல்லாமல் யாரோ ஒருவர் சாயலை இன்னொருவர் பூசிக் கொள்கிறார்கள். கேசவன் கூட இப்போது சந்திரனுடைய சாயலைப் பூசிக்கொண்டு நிற்பது போலவே வடிவு பார்வைக்குப்பட்டது. கேசவனும் எட்டத்தில் நின்றாலும் இவளைப் பார்த்துவிட்டான்.

நட்டாம நின்றவள் அதே வெடப்பில் சேலை மாராப்பை விலக்கி அவள் குழந்தையை மார்புக் காம்பில் வாய்பதிய அழுத்தி பிடித்தப்படி நின்றாள். நீச மூச்சு ஒவ்வொன்றும் பெரும்போக்குப் போய்க்கொண்டிருந்தது.

“பலவட்ட முண்ட! வந்துட்டா, என்னப்பாரு எங் இதப் பாருனு” வடிவைப் பார்த்த உடன் மேலும் நிலை தடுமாறியவன் எசக்கற்றுப்போய் இருந்தான். அதற்கு மேல் வார்த்தை அவனுக்கு வரவில்லை. வேகமாக வண்டி நிறுத்தியிருந்த மேடுக்கு நடக்கத் தொடங்கினான்.

“பொண்டுவசட்டி பயலுகளும் கறிக்கு அலையுதானுக, அது கெடைக்கலங்கவும் யோக்கியன் வேசம் போடுதானுக” என வடிவு உதடு முணுமுணுத்துக் கொண்டது. கேசவனைப் பார்க்கப் பார்க்கக்கூடவே சந்திரனும் அவனைப் போலவே ஓட்டமும் நடையுமாகக் கழண்டுபோன காட்சி கண்முன் விரிய, வந்த வௌமெல்லாம் நெஞ்சி நிறைந்து பொங்கி பாலாக உறுவதுபோல குழந்தை குடிக்க குடிக்கச் சூடேறிப் பொங்கியது. விழுந்தடித்து ஓட்டமும் நடையுமாக வாப்பாரியபடிப் போன கேசவன் வண்டி கரைமேடைத் தாண்டி போகும்வரை பேய்ச்சிரிப்பு சிரித்தவளுக்கு வாய் ஓயவில்லை.

2

சோற்றுச்சட்டிச் சிதறிக்கிடந்த இடத்தில் பதறிப்போய் கோமதி நின்றுகொண்டிருந்தாள். மதியக்கஞ்சிதான் சிதறியிருக்கிறது. சந்தேகமே வேண்டாம் வடிவுடையதுதான். ‘மோசம் போச்சே’ என்ற உண்மை புலப்படும்போது கோமதிக்குக் கண் இருட்டியது. மதியம் மூன்று மணிக்கு மேல் உள்ளாற்றுக்கு மேற்கே விறகு வெட்டிவிட்டு வீடு வரவேண்டியவள் இன்று சாயங்காலம் மணி ஆறான பின்னும் வராததால் தேடியலையும்படியானது.

“எத்தேய்... இந்தா நடந்து போச்சுல்ல ஒன்னு கெடக்க ஒன்னு நடக்கும்னுதான நானும் தலதலயா அடிச்சுக்கிட்டேங். ரோட்டுல போறவ குடும்பம்னா எப்புடியும் போனு விட்டுத் தொலயலாங். கழுதய நம்ம இந்த வீட்டுல பொண்ணக் கட்டீருக்கமேனுதாங்” என்றான் சந்திரன்.

“யய்யா... யய்யா யாருய்யா இருக்கா எங்களுக்கு உங்கள விட்டா” கோமதியின் வார்த்தைகள் அழுகையோடு சேர்ந்து வந்தது.

“அதானத்த வேலயப் போட்டு ஓடியாந்துருக்கு, இல்லன்னா எங்கன ஓடினானு தேடு தேடுனு தேடியலையனும்னு எனக்கென்ன நேத்திக்கடனா சொல்லுங்க”

“எடுத்த எடுப்புலயே இப்புடி சொல்லுதீகளேய்யா... நீங்களே இப்புடிச் சொன்னா ஊர் என்ன சொல்லும்”

“ஊர மூட ஒலமூடியா? நாங் சொல்லித்தாங் தெரியனுமாக்கும் புதுசா...”

“விட்டெறிஞ்சு பேசாதீகய்யா...! பரமா வளந்த புள்ள! துடுக்கா ரெண்டு வார்த்த மொறனு யார் கிட்டவும் பேசுவாளே ஒழிய வேண்டாத செயல் ஒன்னும் செஞ்சுக்கிரமாட்டா... ஆம்பள இல்லாதக் கொறைக்குதான்யா உங்கள தேடக்கூட்டியாந்தேங், ஏம்புள்ளைக்கு என்னாச்சோ, யாரும் என்னமுஞ் செஞ்சுருப்பாங்களோனு நெனச்சாலே” கோமதிக்கு முடிக்க முடியவில்லை.

“ஏத்தே... அப்படி ஒன்னுமில்ல, பதறாதீக”

“அதுக்கில்லைய்யா இந்த ஒரு தடவ எனக்கு வேற போக்கில்ல நல்லபடியா அவ வந்துட்டா... ஒரு நாளும் உங்க மறவுல வாழ்ந்து போகுற நிலம வராதுய்யா... அது ஒன்ன நெனச்சு மலஞ்சுராதிக”

“செரி செரி ஒரே வாக்குல நீங்களும்! அக்கற இல்லாமயா... நாங் மேக்க ஒரு எட்டு பாத்துட்டு வாரேன்” என்றபடி சந்திரன் நடக்கத் தொடங்கினான்.

மண்ணோடு சிதறிக்கிடந்த சோற்றைப் பார்க்கும் போது கோமதிக்கு மனதோடு சில சம்பவங்களைக் கிளறச் செய்தது. வடிவுக்கு மூத்தவளான “ராணி”யைக் கட்டிய புதிதில் கூட பேச்செல்லாம் தேனாக இருந்தது.

“எங்கிட்டோ உள்ள ஆளுங்க நெனப்பெல்லாங் வேண்டாங், எந்த ஒன்னுக்கும் என்னய யோசிக்காம கூப்புடலாங்” என சந்திரன் சொன்னபோது கோமதிக்கு நிம்மதியாகத்தான் இருந்தது. அந்த நிம்மதிக்கு ஆயிசு ரெண்டே ஆண்டுகள்தான்.

“எனக்கொன்னும் இல்ல... இது எதுக்குடா கொறவுள்ள கழுதயக் கட்டியதை, வேற ஒரு புள்ளயக்கட்டி நான் கண்ண மூடங்குள்ளயும் பேரம் பேத்திய காட்டுடானு எங்க ஆத்தாக்காரிதாங் ஒரே பாட்டா படிக்கா... எனக்கென்னன்னாத்தே... எங்கிட்டாப்பட்ட புள்ளியவோ கட்டிக் கூட்டியாந்து இவளுகளுக்குள்ள வழக்குத் தீத்துக்கிட்டே காலந்தள்ளுததுக்குப் பதிலா இவ இளையவளே கட்டுனா ஒன்னு கூடுனாலும் கொறஞ்சாலும் புள்ளகுட்டினு ஆனாலும் விடுதலாத் தெரியாது. ஒரு எண்ணந்தாங் வேற ஒன்னுமில்ல. ஒரு சொல்லுக்குச் சொல்லி வக்கேங்” என்றோர் முறை சந்திரன் நீட்டி முழங்கியபோதுதான் முதல் முறையாகக் கெதுக்கென்றிருந்தது கோமதிக்கு, அவள் மனம் போலவே வீடும் குழப்பத்தில் இருளும்போது வடிவைக் காணோம் என்ற தகவல் வெளியே வரத்துவங்கியது.

கோமதியும், மற்றவர்களும் அடுத்த கட்டத்தை யோசிக்கும்போது விடிந்திருந்தது, வடிவும் வீடு வந்திருந்தாள்.

3

ராசு இப்படிச் செய்வான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. துடுக்காக வடிவிடம் அவ்வப்போது பேச்சுக் கொடுத்ததுண்டு என்பதைத் தவிர வேறு எந்த நினைப்பும் யாருக்கும் வந்தது கிடையாது. சட்டென பிளசர் கார் ஒன்று பாதையில் வந்து மறித்துச் சோற்றுச்சட்டி கீழே விழுந்து சிதற வண்டியில் ஏற்றும் வரையில் வடிவுமே கூட எதிர்பார்த்திருக்க வாய்ப்புகள் குறைவுதான் என்றே தோன்றுகிறது.

“ஏடி என்ன” என வீடு வந்தவளிடம் கோமதி மிரண்டு போய்க் கேட்டபோது “ராசு அத்தாங் கூட்டு போனாக” என்பதைத் தாண்டி அவளிடம் பதில் எதுவும் வரவில்லை. உறவில் முறைதான் என்றாலும் வசதி கூடிப்போய் இருக்கும் இருக்கப்பட்ட கைகள். வடிவும் கோமதியும் கூட ஒரு சமயம் ராசு காட்டுக்கு வேலைக்குச் சென்றதுண்டு.

“யாருடி கூலி வாங்குனவ கையப்புடிச்சு குடும்பம் நடத்தக் கூப்புடுவ... அவுக தெனவுக்கு நம்மளா ஆளு? இப்படி நம்ம தலயிலயா விழுவனும்” என்ற கோமதி அழுகையோடு மேலும் தொடர்ந்தாள்.

“நாங்தான் அன்னைக்கே சொன்னனே, யாரு கேட்டா... நாங் ஏதோ விகல்பமா பேசுதம்கமாரி ராணி கூட சடச்சுக்கிட்டா” என்ற சந்திரன் லேசாக ஒரு பார்வை வடிவைப் பார்த்தான். குத்துக்காலிட்டு உக்காந்திருப்பவள் அவனைப் பார்த்ததும் முகத்தை ஒரு திருப்புத் திருப்பினாள். அதில் உள்ள இளப்பத்தைக் கண்டடையாத அளவுக்கு கூறு மழுங்கவில்லை. அதையும் மீறி வடிவின் திமிறிய மார்பு கெறக்கம் குடுத்தது.

ராசுவும் வடிவும் கலந்த காட்சி நொடிப்பொழுதில் கண் முன் நிழலாட ஒரு வெட்டு வெட்டி இழுத்தது சந்திரனுக்கு, தன்முன் இத்துனை இறுக்கமாக இருக்கும் வடிவின் முகம், லயிப்பில் சிணுங்குவது போல போல நினைக்கையில் நிராசையால் ஊறிய எச்சிலை முழுங்க மனமின்றி துப்பிவிட்டு தொடர்ந்தான்.

“போர வார ஆளு தோதுக்கு இழுக்க இங்கன ஆளுருக்குனு என்ன எழுதியா போட்ருக்கு” சந்திரன் சொன்ன கையோடு மேலும் ஒரு முறை வடிவைப் பார்த்தான். எந்தப் பாதிப்பும் இல்லாததுபோல வடிவு இருந்தது, மேலும் ஆத்திரத்தைக் கூட்டியது.

“இப்படி இஷ்டத்துக்குப் போற போக்குல அலயுத குடும்பத்துக்குள்ள நாங் பொழங்க முடியாது. நாளைக்கு ஒரு பய எங்கிட்டயே வந்து இது எப்பிடியினு கட்டுக்குத்தகையா? இல்ல வாரக்கூலியானு கேப்பாங். நாங் அதுக்கு தரவு பேசி முடிக்கவா?” இந்த முறை வடிவைச் சுட்டே தீரவேண்டும் என அழுத்திக் கூறினான். நிமிர்ந்து ஒரு பார்வை மட்டும் பார்த்தாள். அதிலுமே அவன் வேண்டியது கிடைக்கவில்லை.

“இவளோ பேசுதாங்கல்ல, இனி நீங்களாச்சி மாமா, நீங்க பாத்து நல்லது செஞ்சு விடுங்கனு சொல்லு, இல்ல நான் என்ன செய்ய மாமா, இப்புடி ஆய்போச்சேனாச்சும் சொல்லு” எனச் சொல்லிக்கொண்டே வடிவு முதுகோடு ஒரு அடி போட்டாள் கோமதி.

வடிவிடம் விசும்பல் தோன்றியதேயன்றி அழுகை வந்ததாகத் தெரியவில்லை. அடிபுடியாக இவ்வளவு பேச்சு நடந்து கொண்டிருக்கும்போது பாக்கியம் மட்டும் அருகில் நெருங்கிக் கேட்டாள், “ஏ புள்ள, நீ என்னடி இப்புடி ஏத்தமெடுத்து உக்காந்திருக்க. இவளோ பேச்சு நடக்கு ஒரு வார்த்த சொல்ல மாட்டிக்க” என்றாள்.

“என்ன சொல்லனும்? இப்புடி நடந்திருக்கே அவன என்னனு கேக்கம்னு சொல்ல ஒரு ஆளில்ல, கொண்டு போய் என்ன செஞ்சாங் எப்புடி ஓடியாந்தனு கேக்க நாதியில்ல, ஒரு நா பொழுது முழுக்க காங்கலயே தின்னயானு கேட்டாளா? ஆத்தாக்காரி அவளா முந்திக்கிட்டு பறி குடுத்துட்டு வந்துட்டயேனு வாப்பாருதா, அக்கா புருசன் பறிபோச்சோனு பதருதாங். எனக்கு எல்லாமே தெரியும் பாக்கியம்” எனும் போது வடிவுக்கு அழுகை கண் நிறைந்தது. அடித்தொண்டைக் குரலிலேயே மேற்கொண்டு தொடர்ந்தாள். “அந்தாளு இழுத்துட்டுப் போனாரு, ஒரு நாளு ராத்திரி பூராவும் அடச்சு வைச்சுட்டாரு, ஒன்னும் நடக்கல வேனுங்கமட்டும் அழுது தீத்துட்டேன். என்ன நெனச்சானோ தெரியல காலைல கதவத்தொறந்தாங். அழுது ஒன்னும் ஆவப்போறதுல்ல, அதுவும் நல்லதுதாங் இனி போயும் என்னத்தையும் போய் நீ மாத்தி மறிக்க முடியாது. யோசிச்சுக்கோ ஓம்பிரியந்தாங். போறியா இல்ல இருந்து போறியானு கேட்டாங். எனக்கு அழுவதாங் வந்துச்சு. சரி போனு சொல்லிட்டு ஒதுங்கி நின்னுட்டான். வேற ஒன்னும் நடக்கல”

“அதயாவுது சொல்ல வேண்டியதான வடிவு” பரிதாபமாகக் கேட்டாள் பாக்கியம்.

“ஏஞ் சொல்லனும்? எங்க அக்கா புருசன் கிட்ட ஏங் யோக்கியத்தக் காட்டுததவிட அவன் பேசப் பயப்புடுத ஆளுக கூட உண்டுமாங்க பேரு தேவல” எனும்போது சட்டென கண்ணீர் வந்தது வடிவுக்கு, வந்த வேகத்தில் துடைத்துக்கொண்டாள்.

4

“டுப்பு டுப்பு டுப்பு” என்ற சத்தம் ஒரு நொடி படபடவென்று வந்தது. உடன் வேலைக்கு வந்த கூட்டத்தில் யாருக்கும் அந்த சத்தம் படபடப்பைத் தரப்போவதில்லை வடிவைத்தவிர. பாக்கியம் குருவு சொல்வதை சிரத்தையில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். அவரவர் அவரவர் பாடில் கவனத்தைக் குவித்திருந்தாலும் கூட சத்தம் வந்த திசையை வடிவு நிமிர்ந்து பார்த்தாளேயானால் எல்லோரும் தன்னைக் கொத்தித் தின்னும் பார்வையால் குதறியே விடுவார்கள் என்ற எண்ணத்தைத் தாண்டி பார்க்கவேகூடாது என்ற வைராக்கியத்தோடு தலை நிமிராமல் இருந்தாள். எத்தனை முறை இந்தச் சத்தம் கேட்காதா என ஏங்கியிருக்கும் மனம்.

தற்செயலாக நிமிர்வது போல எத்தனை முறை நிமிர்ந்து பார்த்திருப்பாள். “அவனுக்குக் கல்யாணமாகி பத்து வயசுல பய ஒருத்தங் இருக்கானே அவங்கூட மறுகலாம்னு மனசுல நெனச்சுக்கிட்டுத் திரியாத” என்றொருமுறை வடிவின் அம்மா திட்டிக் கொண்டிருக்கும்போது கூட தெருமுனையில் வண்டிச் சத்தம் கேட்டு மனம் குளிராட்டத்தானே செய்தது.

இது எதுவுமே சரிப்படாது என்ற நினைப்பு வந்தவுடன்தான். தெளிச்சுப் பார்த்து ஒரு சீக்காளியைச் சந்திரன் துப்பில் கட்டி வைத்தாள் கோமதி. “இவம்னா... நம்ம கைக்குள்ள உள்ளவங் எந்த இழுப்புக்கும் சரிம்பாங். உங்களுக்கும் ஒரு வகையில தம்பி மொற, நாளைக்கு என்ன ஒன்னுன்னாலும் ஏ தம்பி, அக்கா சொல்லுதம்ல்லனு உரிமையா சொல்லிக்கிடலாங். நடந்தது போனதுன்னு எதயுமே ஒழிச்சு மறச்சு சொல்லவேண்டியதில்ல, இங்கவா இதாங் கத, நீயாச்சு எங்களுக்குனு சொன்னாப் போதும் குளுந்துபோவாங்” என சந்திரன் சொல்லும் போது கோமதிக்கும் சரியென்றே பட்டது.

ஒரு பாடாக ஆளும் பேருமாகச் சேர்ந்து கல்யாணத்தை முடித்து வைத்திருந்தார்கள். “எலேய்.. இத எடுறா, இங்க வந்து நில்லுடா” என ஒவ்வொரு முறை புருசனை விரட்டி வேலை சொல்லும்போது அவளைத் தன் பிடியில் நிறுத்திவிட்டதாகவே சந்திரனுக்கு ஒரு நினைப்பு. “ஆட்டும் ஆட்டும் அண்ணாச்சி” என வடிவு புருசன் பதில் சொல்லும் போதும் ‘எப்படி என் முறுக்கு’ என்பது போல வடிவை ஒரு பார்வை பார்த்துக்கொள்வான். அதே நேரம்தான் சந்திரனுக்கும் ராணிக்கும் ரெட்டைப்பிள்ளை பிறந்தது. வடிவு புருசனுக்கும் சீக்கு முத்தியது.

வடிவு மட்டுமிருக்கும் ஒருநாள் தவம் கிடந்தது போலக் காத்திருந்து சந்திரன் வீட்டுக்கு வந்தான். வந்த தொனியும், பார்த்த பார்வையுமே அவன் வந்த கோப்பை உணர்த்தியது.

“என்ன வடிவே”

“மாமா” என்றவள் சட்டென “அவுக இப்பம்தாங் வெளிய போனாக, வந்துருவாக எதுவும் அவுகட்ட சொல்லணுமா” என்றபடியே எழுந்து நின்றாள்.

“ஏந்தா, அவனத்தாங் பாக்க வரணுமா உன்னயப் பாக்க வரக்கூடாதா” என்றவன் சிரித்துக்கொண்டே “ஆறான் நம்பர்” பீடிக்கட்டில் இருந்து ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தான்.

“............”

“சரி எப்புடி இருக்க? நல்ல வச்சுக்கிடுதானா ஒன்னய அவங்?”

“ம்ம்ம்... வீட்டுல அக்கா, புள்ளைக எல்லாங் நல்லாருக்காகளா?”

“புள்ளக நல்லா இருக்குக, நெறமெல்லாங் என்னயப்போல வெளுப்புத்தாங் கழுதய கொணமும் அதே கணக்காத்தாங்” என்றவன்

“ம்ம்ம்...” என கண்ணை மூடி அதைத் தானே உணர்ந்ததுபோல தலையாட்டிக்கொண்டு தொடர்ந்தான்.

“ஒங்கக்காக்காரிதாங் புள்ள பெத்த பெறவு ஆளு கெட்டழஞ்சு கணத்தும் போயிட்டா...”

“இந்தா போனதும் வாரம்னுட்டுத்தாங் சொல்லிட்டுப் போனாக” என்றவள் ஒருமுறை வெளியே எட்டிப் பார்த்தாள்.

“அவனா” என்றவன் சிரித்தபடியே மறு பீடியை எடுத்தான். பின்

“அவங் பலரசம் பாண்டிய தொயங்கட்டிக்கிட்டே திரியுதாங். இன்னைக்குத் தொண்டைய நனைக்க ஏங்கிட்டதாங் சில்ரய தேத்திக்கிட்டுக் கௌம்புதாங். எந்நேரமும் பொகச்சல் இதுல வடிப்புப் போட்டுக் குடிமப்பு வேற! நீ அதே போலயே இருக்கயே, பய சுதாரிச்ச ஆளு கெடயாது போலயே”

இம்முறை கொஞ்சம் சத்தமாகவே சிரித்தான்.

“சரி மாமா அவுக வந்ததும், நீங்க தேடியாந்தீகனு சொல்லுதேங்”

“ஏத்தா அவனத்தாங் அடிக்கொரு மொற பாக்கேனே”

நெறய தடவ சாராயங் குடிச்ச கையோட வண்டியேறி நம்மள பாக்க அவனே வந்துருவாங் ஒன்னயப்பத்திதாங் ஒரே ஆவலாதி”

“..............”

“நானே ஆஞ்சு ஓஞ்சு வாரேங், இவ கொழுத்துப் போயி ஏம்மேல காலத்தூக்கிப் போடுதாங்....” சிரித்துக்கொண்டே,

“அட கூறு கெட்ட கழுத இது நமக்குள்ள நெறக்கத விட்டுட்டு, நல்ல வேல ஊரக்கூட்டி கொட்டடிக்காமவிட்டானேனு நெனச்சேங்”

“..................” வடிவுக்கு உடல் சூடாகிப்படபடத்தது.

“அன்னைக்குச் சொன்னதுதாங் என்ன தோதுக்குனாலும் நானாச்சு ஒனக்கு, அவன ஒரு ஒப்புக்கு வச்சுக்கோ. ஏற்கனயே சொகங்கண்டவ எத்தன நாளைக்கு வானத்தப் பாத்துக்கிட்டே தண்ணிய மண்டிக்கிட்டு இருப்ப” என்றவன் வடிவு கையைப் பிடித்தான். வெடுக்கென்று உதறிவிட்டு,

“இது நல்லதுக்கில்ல கௌம்புங்க” என்றாள் வடிவு.

“ஏ... யாத்தா நீ அந்தானைக்குல நெம்ப பண்ணாத” என்றவன் மேலும் கையை இறுக்கிப் பிடித்தான்.

“தூர எடும்யா கைய” என்ற வடிவு திமிறி நிமிர்ந்தாள்.

“என்னடி யோக்கிய மயிறுமாறி ஏறி பேசுத... உம் புருஷனுக்கு ஓங் தெனவடக்கத் துப்பில்லனு அவனே சொல்லுதாங். ஓங் அரிப்புக்கு ஊராங்கிட்ட ஒறவாடி தீத்துக்கிடலாம்னு மனசுல கணக்குப் போடுதியோ.”

“அப்படி தேவன்னா உம்ம ஒத்தாச ஒன்னும் வேண்டாங் வெளிய போ மொதல்ல”

“வா - போனு சொல்லுத முண்ட! அன்னைக்குப் பெருசா என்னத்தையும் பாத்துட்டங்கதுனால இந்தப் பேச்சு வருதோ? இங்கயும் பாரு அப்பத்தான தெரியும்” என்றபடியே வேட்டியை அவிழ்த்தான் சந்திரன்.

அதே வேகத்தில் வடிவைச் சுவரோடுத் தள்ளினான்.

“இந்த பாரு நீ எங்கிட்ட வந்துட்டுப் போனது வாஸ்தவம்தான்னும் சொல்லுவேன். ஒன்னுத்துக்கும் ஏலாத ஆம்பள. உன்னக் கட்டிக்கிட்டு எங்கிட்டுக்கூடி எங்கக்கா புள்ளயப் பெத்தாலோனு தெரியலனும் ஊரெல்லாம் சொல்லுவேங். நாங் பாத்து ஒத்துக் கிட்டாத்தானய்யா நீ ஆம்பள? நீ செய்ததச் செய் ஆம்பள” வடிவு முறைத்தப்படி வெடப்பாக நின்றாள். சந்திரன் ஒரு நொடி வெலவெலத்துப் போனான்.

ஒரு நொடி அவளைப் பார்த்தவனுக்கு, எண்ணத்தில் முன்பு இருந்த வலு தனக்கு இப்போதுத் தானாக உருகுவது தெரிந்தது. வடிவை விட்டு விலகி மின்னல் வேகத்தில் சந்திரன் வெளியே நடக்கத் தொடங்கினான். வடிவு ஏனோ அதை யாரிடமும் சொல்லவில்லை. அதே வேளையில் சந்திரன் பல மாதிரிச் சொல்லியிருக்கிறான் என்பதை,

“இந்தா பாரு ஓங் கூறுபாடு தெரிஞ்சுதாங் நான் கட்டிக்கிட்டேன். இந்த வாழ்க்க கெடச்சதுக்கு ஒனக்கு நன்றி இருக்கனும். எனக்குத் துரோகம் பண்ண நெனச்சா வம்பா நீதாங் சீரழிஞ்சு போவ... சாமியிருக்கு அவளோதாங், நாங் சொல்லுவேங். அண்ணாச்சி நல்ல மனுசனா இருக்கங்கண்டு ஓங் இழுப்புக்கு வர்ல, வேறவம்னா ஆத்தோட போற தண்ணிதான்னு அள்ளிக் குடிச்சுருப்பாங்” என நாலு வார்த்தைக்கு ஒரு இருமல் இருமியபடி போதையில் தினமும் வடிவு புருசன் உளறும்போது தெரிந்துகொண்டாள்.

அப்படியொரு இரவைக் கடந்த காலையொன்றில் அழுக்குத் துணியள்ளிக்கொண்டு வடிவு வெளியே வந்தாள். காலைக்கரண்டுதான் பம்புசெட்டு ஓடும் துவைத்துக் குளித்து வரலாம் என்ற கணக்கில் ஒரு ஈய வாளியில் துணியள்ளி வந்தாள். ஊரடிக் கிணற்றில் கூட்டம் அதிகமாகவே இருக்கும் என்ற எண்ணத்தோடு மறுகாட்டுக்குப் போக எண்ணித்தான் நடந்தாள். டுப்பு டுப்பு டுப்பென்ற சத்தத்தோடு ராசு வண்டிக்கடந்து போகவும்தான் நடையை ராசு காட்டுப்பக்கமாக எட்டி விட்டாள். மோட்டார் ஓடிக்கொண்டிருந்தது, வண்டி வேலிப்படலை ஒட்டி நின்றுகொண்டிருந்தது. வேற்றாள் யாரும் வந்து துவைக்கவில்லை. வடிவு ஒரு பார்வை ராசைத் தேடிப் பார்த்தாள். உள்ளவரைக்கும் தண்ணி பாய்கிறதா என்று பார்க்கப்போயிருக்க வேண்டும்.

வடிவு துவைப்பைப் பிடித்தாள். முந்திய நாள் பெய்த மழையால் எப்படியும் மோட்டர் ரொம்ப நேரம் ஓடப்போவது கிடையாது என்ற எண்ணம் ஒரு புறம் வந்தது.

ஒரு எட்டுப் பார்த்து மோட்டாரை அமத்த வேண்டியதுதான் என்ற நினைப்போடு ராசு வருகையில் வடிவு துவைப்பை முடிக்கும் தருவாயில் இருந்தாள். “யாரு தொவைக்கது” என்று சோப்புத்தண்ணியைப் பார்த்தபடியே கேட்டவன் “நாங்தாங்” என்ற பதில் வரவும் நிமிர்ந்து ஆளைப் பார்த்தான். முந்திக்கொண்டு எதுவும் சொல்லவோ செய்யவோ இல்லாமல் சரியென்று தலையசைத்தான்.

“தண்ணி கடைசி வரைக்கும் பாஞ்சுருச்சு, பதறாம தொவச்சு முடி, மோட்டர அதுக்கப்பறம் வேணும்மான அமத்து தேங்”

கடைசித் துணியை ஒரு பிழி பிழிந்துகொண்டே “முடிஞ்சது அவளோதாங்” என்றாள்.

“சரி அப்ப கௌம்புதயா” எனும்போது சினேகமான சிரிப்போடு கொஞ்சம் ஏக்கமும் வெளிப்பட்டது ராசுவிடம்.

“இல்ல இன்னைக்குக் கொஞ்ச நேரம் இருந்துட்டே போறேங்” என்றவளை எங்க இன்னொரு முறை சொல் எனும் தொனியில் ஒரு பார்வை பார்த்தான் ராசு. புரிந்துகொண்டவளாக அதையே திருத்தமாகச் சொன்னாள் வடிவு. பெய்த மழைக்கும் ஓடிய மோட்டருக்கும் மண்ணெல்லாம் ஈரம்தான்.

5

வைராக்கியத்தோடு வெறுப்பும் கூடியிருந்தது. இப்போது வடிவுக்கு, உச்சந்தலையில் இடியை வாங்குவதுபோல தன்னை நெருங்கிக்கொண்டிருக்கும் டுப்பு டுப்பு வண்டிச்சத்தம் கிட்டத்தில் வர வர மனம் இருளாடியது. எல்லாமே இந்தச் சத்தத்தைத் தொடுத்து வந்ததுதான். கொஞ்சம் முன்பு முகம் முறித்துச் செல்லும் குருவு கூட, ஒரு காலத்தில் வடிவை அவ்வளவு தாங்கியிருப்பாள். ஒரு காலம் என்பது ஓராண்டாகச் சுருங்கிக்கூட போகுமா என்றும் தோன்றியது.

“இன்னைக்கி மதியத்தோட போட்டா, வெளிய ஒரு சோலியா அவுகளோட போவனும், நாங் கேட்டாலும் அண்ணே சரினுதாங் சொல்லும். இருந்தாலும், நமக்குத்தாங் நீ இருக்கியே சம்பளத்த ஒங்கிட்டயே வாங்கிட்டு ஒரே ஓட்டமா ஓடிட்டு வந்துருவேன்” என குழைந்து பேசிய குருவுதான் இன்று குமட்டைக் கோணிக்கொண்டு போகிறாள். சரி அவள் யோக்கியத்தைக் காட்ட அவளுக்குத் தெரிந்த ஒரே வழி.

காரவீட்டு லட்சுமிப்பாட்டி கூட வீடெடுத்துக் கட்டியது கூட யாரோடோ இருந்த தொடுப்பின் விளைவாகத்தானாம். அப்படி ஒன்றும் இங்கு அள்ளிக் கட்டவில்லை. ஏதோ இந்த மட்டில் இதுகள் மத்தியில் கொஞ்சம் செல்வாக்கு இருந்தது.

“எலேய் ஏறி ஒரு அனப்பு காத்தோட விட்டம்னா காதுல இருக்க ஊலயெல்லாம் வெளிய தள்ளீரும்”, என்ற ராசுவின் ஒரு வரிக்குச் சந்திரனிடத்தில் எவ்வளவு செல்வாக்கு இருந்தது.

சட்டென “டுப்பு - டுப்பு” வண்டி வடிவைக் கடந்து போனது. வேறு யாரோ புது ஆள் வண்டி. இன்னொரு முறை டுப்பு - டுப்பு சத்தம் கேட்டால் இதே வைராக்கியத்தில் இருக்க முடியுமா? இயலாமல் போகவும் வாய்ப்பு உண்டு, இயலாத குறைக்குத்தானே உயிர் சுமக்கும்படியானது. தாயும் பிள்ளையுமாக செத்தொழிந்த கதை எத்தனை கேட்டதுண்டு. அப்படியே ஆனாலும்தான் என்ன? என்று எண்ணம் வலுக்கத்தான் நேத்திக்கடன் போட்ட காசை எடுத்தாள். தான் செய்ய இயலாததை தெய்வம் செய்து பலி ஏற்கட்டும். அதுக்கு ஏது பாவக்கணக்கெல்லாம்.

“எனக்கு யோகமோ - அதிஸ்டமோ இருக்கானு தெரியல, ஆனா அத்தன தொரதிஸ்டத்தையும் தூக்கிச் சொமக்கத் தெம்பிருக்கு” என்று கல்யாணம் ஆன புதிதில் பாக்கியத்திடம் வடிவு சொன்னாள். அதுவும் வாஸ்தவம் ஆனால் இதுக்கேது தெம்பு. ஒவ்வொரு முறை கொள்ளைக்கு ஒதுங்கும்போது பீச்சிக்கொண்டு வருகிறது ரத்தம். தினமும் போன ரத்தத்திற்குக் கணக்கே கிடையாது. இருந்து முடித்து அழுத்திக் கழுவும்போது கண்ணீர் ஓடத்தான் செய்தது. இனியும் கடத்த முடியாது என்ற எண்ணம் வலுத்த போதுதான்

“ஆறான் நம்பர்”

வண்டியேறி சங்கரன் கோவில் ஆஸ்பத்திரிக்குப் போனாள். அது என்ன பொருள்காட்சிபோல இத்தனை பேர் முன்னால் சொல்லவோ, காட்டவோ கூச்சம். அதுதான் இவ்வளவு முத்திவிட்டிருந்தது. டாக்டர் கிட்டத்தில் போய் பக்குவமாய்ச் சொல்ல வழியில்லை, வாசலில் நின்றபடியேதான் சொல்ல முடிந்தது. பின்னாடி நின்றவர்கள் எல்லோருமே ஆம்பளயாட்கள்.

“வெளிய போவும்போது ரத்தமா போவுது சார்”

“வீக்கம் எதுவும் இருக்காம்மா?”

“இருக்கு சார்”

“வீக்கம் அதுவா உள்ள போகுதா, இல்ல தள்ளுனாத்தாங் போகுதா?”

“தள்ளுனாத்தான் சார் போவுது” என்றதும் நர்ஸ்சை அனுப்பி தனியறை ஒன்றில் பார்க்கச் சொன்னார்.

“என்னக்கா இவளோ தூரம் ஆக விட்டுருக்கீங்க. வேதன ரொம்ப இருக்குமே” என்ற நர்சை ஏனோ அவ்வளவு பிடித்திருந்தது வடிவிற்கு. பதினெட்டு வயதிருக்கலாம். காத்தாடிக்குக் கீழ் வேலை. சரி மகராசி நல்லாருக்கட்டும் என ஒரு நொடி மனதில் நினைத்துக்கொண்டாள். ஆப்பரேசன் செய்தே ஆகவேண்டுமாம். தொகை மூவாயிரத்தி ஐநூறு ஆகுமாம்.

அப்புறமும் கொஞ்சநாள் அளந்து திங்கவேண்டும் போல. இப்போதே ஊறுகாயோ, வதக்கிய சின்ன வெங்காயமோ கூட சேர்க்க முடியாது. நல்லெண்ணெ ரெண்டு கரண்டி ஊற்றி சோற்றோடு வெறவி எவ்வளவுதான் தின்றுவிட முடியும். தொடுகறி காரமாக இருந்தால் கூட சோறைக் “கொண்டா - கொண்டா” என வயிறு கேட்கும். வயிறே கேட்டாலும் குடுக்கவும் முடியாது. “கடுகு” இத்தீனி உள்ளே போனாலும் கொள்ளைக்கு முடுக்குகிறது - ரத்தம் - வலி - அழுகைதான்.

6

“பாக்கியம், இன்னா போனதும் வாரேன்” என்றாள் வடிவு. வாய் வீக்கம் இன்னும் வடிவுக்கு முழுதாகக் குறையவில்லை.

“இந்தச் சர்பத் கடக்காரங்கிட்ட ஒத்த ஐஸ்கட்டி வாங்கி ஒத்தனம் குடுக்கக்கூடாதா?” என்று சொல்ல வாயெடுத்தவள்,

“வேல முடிஞ்சு போச்சுல்ல, எல்லாரும் கௌம்பீருவாகளே” என்று மட்டும் சொன்னாள்.

“அதுக்குள்ள வந்துருவேங்” என்றாள் வடிவு. உடனே என்ன நினைத்தாளே “வர்றதுக்குள்ளாட்டியும் எல்லாரும் கௌம்பீட்டா நீயும் கௌம்பீரு” என்றாள்.

“சரி” என்பது போல பாக்கியமும் தலையசைத்துக் கொண்டாள்.

“இது நல்லதுக்கில்ல இவளே, நீ இல்லாட்ட வேற ஒருத்தினு அவுக போவலாம், நீ அப்புடி போவ முடியுமா? ராசண்ணே வீட்டு அக்கா என்னைக்குமில்லாம ரெண்டு மூணு தடவ கேசவன் கூட வண்டியேறி காட்டுக்கு வந்ததெதுக்குனு பாக்க? நான் சொல்லித்தாங் தெரியனுமாக்கும் ஒனக்கு! கையும் களவுமா புடிக்கத்தாங், அவுக மகாராசன் அவுகள ஒன்னுஞ் சொல்லமாட்டாக! உனக்குத்தாங் வௌக்கமாத்தடி விழுவும் பாத்துக்காக” என மூன்று மாதம் முன்பே பாக்கியம் சொல்லியிருந்தாள். ராசு காட்டுப்பக்கம் வருவதைக் குறைத்ததும் இந்த மூன்று மாதமாகத்தான். பாக்கியத்திற்கு வடிவு பத்திக்குறையுண்டே தவிர வெறுப்புக் கிடையாது. இருந்தும் இவளுக்கு விழுந்த பேச்சை அவளும் வாங்கும்படியாகிவிட்டது. உறவெல்லாம் பேச்சுக்குப் பதறத்தான் செய்யும், உருத்துதான் மறுவட்டமும் வரும். ராசுக்குத் தன்னிடம் உள்ளது உருத்தல்லவா! என்ற எண்ணம்தான் வடிவுக்கு அப்போது.

மேக்கே உள்ள புதர் நோக்கி நடந்தாள் வடிவு. கொஞ்ச நேரம் அடக்கிப் பார்த்தாள். போய் தொலைந்த பின் வரும் காந்தலும் கடுகடுப்பும் வேண்டுமா இந்த ஈன வாழ்க்கை எனச் சொல்லாமல் சொல்லும். வேண்டியெல்லாம் வழி பிறக்காதென்றான பின்புதான் ராசுவிடம் கேட்டாள்.

“சாயங்காலமா வந்து வாங்கீட்டுப் போ” என்ற ராசு வேகமாக நடந்துவிட்டான். கொஞ்ச நாளாக வீட்டிலும் முடுக்கம் “பாவம்” என்று எண்ணிக் கொண்டாள். சாயங்காலம் ஆள் எங்குமே தென்படவில்லை என்ற பின்தான் ஒன்பது மணியைப் போல ராசு வீட்டுப் பக்கமாக வந்தாள். ஜன்னலை ஒட்டித்தான் படுத்திருப்பான். அந்தப்பக்கம் ஆள் இருப்பதாகத் தெரியவில்லை. காலையில் பார்க்கலாமா என்ற எண்ணம் வந்தது. இருந்தும் என்னமோ முன்னைப்போல ராசுவைப் பார்க்கவும் முடிவதில்லையே...

வாசல் பக்கம் அழிப்பாச்சிய கதவு உண்டு, அது தாண்டிய வராண்டாவின் முன் எரியும் மின் விளக்கு எரியவில்லை. அதற்கு அடுத்த ரூம் கதவு முழுவதுமாக சாத்தி வைக்கவுமில்லை. வாசல் அருகே நின்று சத்தம் குடுக்கலாமா என்ற நினைப்போடு பார்க்க அடர்த்தியான இருட்டு மட்டுமே தெரிந்தது. இருட்டுக்கே உண்டான மௌனம்.

“வீல்...!” என்றொரு சத்தம். ஒரு நொடி நடு நெற்றியில் இருந்து தாடைவாரையில் மின்னல் வெட்டியது போல இருந்தது வடிவுக்கு. வாய் பேச முடியாதோர் வலி பொறுக்காது அலறியது போல இன்ன வார்த்தை என்று கூறயியலாத மொழியில் துடித்தலறியபடி முகம் பொத்திக்கொண்டு தரையில் வடிவு விழுந்தாள். சில நொடிகளுக்குக் கண்ணை விரியத் திறக்க வராதோ எனப் பதறும்படியிருந்தது.

“ம்மா... ம்மா...” என்று அலறும்போதுதான். நான்கு வீடுகள் தள்ளி “அலைகள் நாடகத்தின் அதிரடியான கடைசி வாரக் காட்சிகளைக் கண்டுகழித்துக் கொண்டிருந்தோர் காதுகளில் கேட்டிருக்கவேண்டும். ஒவ்வொருவராக வெளியே வரும்போது ராசு வீட்டு முற்றத்திலும் விளக்கு எரிந்தது. வடிவு தடுமாறி எழுந்து நிற்கும் போது “திட்”டென முகத்தோடு அடித்த இரும்புப்பூட்டு அருகில் கிடப்பதைக் கண்டாள். அந்த மாயத்தில் விழுந்தது நாலு வௌக்குமாத்து அடி.

“காட்டுக்கும் கம்மாய்க்கும் ஒதுங்குன முண்ட, இன்னைக்கு வீட்டுக்கு ஏறி வருத அளவுக்கு ஆயிப்போச்சு என்ன! நீ வருவனுதான இருந்தேன்” என்றபடி இன்னொரு வௌக்குமாத்தடி விழுகும்போதுதான் எரிந்ததும் அடிப்பதும் ராசு வீட்டுக்காரிதான் என்பது கண்முன் தெரிந்தது.

“கேசவா, அந்த நாயப் புடிச்சுக் கதவோட சேர்த்துக்கட்டு” என்றதும் காத்திருந்தவன் போல எங்கிருந்தோ வந்த கேசவன் ஓடிவந்து வடிவு முடியைப் பிடித்து,

“பலவட்டர நாயி, ஊர்ல ஆம்பள யாரும் இல்லையோ, இங்கனதாங் நோங்குது என்ன” என்றபடியே எழுப்பினான். முகவாயின் வேதனை ஒரு புறம் உயிர்போக, மீதி உயிர் மயிர் வழியே போவது போல இருந்தது.

“க்கா... க்கா...” என்று வாயெடுத்தவளுக்கு வாயில் வேறு வார்த்தை வரவில்லை.

“இவ... யாரு யாருக்கு நாயி அக்கா? மொற கொண்டாடி வாரியோ? இவ... இவ கூட ஒரு முண்ட வருவாளே பாக்கியம்னு அவ இவளுக்குத் தூது. குடும்பத்த சீரழிக்கதுக்கு தெனைக்கு ஒரு ஆளு வேற. எனக்கென்ன தெரியாதுன்னு நெனச்சுட்டு இருக்கியோ நாயி! இன்னைக்கு ஊர் கூடி நாயம் சொல்லட்டும், பெறவு அவ போற திக்கம் போவட்டும்”

“எம்மா ஏ தாயி! உனக்கு சங்கடந்தாங் இல்லங்கல, என்னத்தயோ இல்லாதப்பட்ட கழுத செஞ்சுருச்சு, பெரியாளுக கண்டிச்சுவிடுதோம். நீ உள்ள போ...” என்றார் சங்கரன் தாத்தா.

“அப்புடி சொல்லாதிக மாமா... தோளுக்கு வளந்துட்டான் பய, நாளைக்கோ நாள மறுநாளோ மக பெரிய மனுசியாயிருவா, தாங் பெறப்பென்ன - குடும்பமென்ன- வாங்குன பேரென்ன இந்த வேலைய அவுக தரத்துக்குச் செய்யலாமா? சரி நடந்து போச்சு, கழுதய அந்த மட்டுல விடுங்கனு அனைக்கட்டி ரெண்டு புள்ளயோட நானும் சேர்ந்து செத்துப் போவோம்னு சொல்லி அவர ஒரு வசத்துக்குக் கொண்டாந்தா... இந்த முண்ட சாமத்துல வீடு தேடி வாராளே என்னனு சொல்ல நானு”.

ராசு வீட்டுக்காரி ஒரு குமுறு குமுறிவிட்டு மூச்சிறைத்தாள். பாக்கியம் கூட்டத்தில் நின்றிருந்தாள் என்றாலும் உள்ளுக்குள் துடித்தாலும் அவள் பெயரும் அடிபடத் தயங்கி நிற்கும்படி ஆகிவிட்டது. கேசவன் வடிவு கையைப் பிடித்துக் கட்டப் போனான்.

“எப்பா நீயுந்தாங் என்ன, பேசிக்கிட்டுத்தான இருக்கு?” என்றார் தாத்தா.

“மாமா நாங் நெறயா பொறுத்துட்டேங், இத்தன நாள்ல வீட்டுச் சொல் ஒன்று வெளிய விட்டுருப்பனா சொல்லுங்க”

“நாங் அத இல்லனு சொல்லலயே”

“பின்ன, இன்னைக்கு ஒரு முடிவு தெரியனும்.இல்லனா ஏங் குடும்பம் சீரழிஞ்சு போவும் அது நடக்கனும்னா பெரியவுக நீங்களே சொல்லுங்க”

“என்னம்மா நீ” என்றவருக்கு என்ன சொல்ல எனத் தெரியவில்லை. கையைக் கட்டியக் கையோடு கேசவன் பேசினான்.

“பொழுது அடஞ்சு கூதக்காத்து வீசும்போது தேடுது ஒனக்கு என்ன?”

“நாங் அதுக்கு வர்லக்கா” ராசு வீட்டுக்காரியைப் பார்த்தபடி தீனமானதொரு குரலில் வடிவு சொன்னாள்.

“மறுபடி அக்கா - நொக்கானு இழுத்தைன்னா பாரு, ஒங்கக்காள அக்கானு கூப்புடு. அவளுக்குப் புருசங் ஒரு பய இருக்காம்ல, அவங்கிட்ட போய் நில்லு”

“......................”

“இங்கிட்டு சிக்குனத பெறக்கிட்டு போலாம்னு வந்துருக்கா களவாணி நாயி” என்றபடியே கேசவன் வடிவை அடிப்பதுபோல கை ஓங்கினான்.

“அப்புடியெல்லாங் சொல்லாதிகக்கா” வலிக்கு அழுகிறாளா, வார்த்தைக்கு அழுகிறாளா என்று தெரியாதபடி வடிவு அழுதுகொண்டிருக்கிறாள். தன்னை வடிவு சட்டை செய்யாதது கேசவனை உசுப்பேற்றியது.

“என்னத்த அப்ப களவாங்க வந்த” என்று மறுபடியும் கேட்டான். வடிவு அதற்கும் ராசு வீட்டுக்காரியைப் பார்த்தபடியே,

“உதவி கேட்டுத்தாங் வந்தேங்.... திருடிப் பொழைக்க நாங் ஆளில்ல” என்றவள் தேம்பிக்கொண்டே, அதே மூச்சில், “அவுகதான் உதவி செய்யதம்னு வரச் சொன்னாக, செய்ததும் செய்யாததும் உங்க பிரியந்தாங்... அவுக கிட்ட ஒரு வார்த்த கேட்டுப்பாருங்க, அவுகளே சொல்லுவாக” வடிவு ஏக்கத்தோடு சொன்னாள்.

“ஆமத்தா அவுகளவும் கூப்புடுவா ஒனக்கு, அது ஒன்னுதாங் செய்யல நானு, என்னமும் இருந்துட்டுப் போவுது. இத்தோட இந்த சோலிய வுட்டுட்டுப் போயிரு, வேற ஒரு தரம் பாத்தேம்னு வை...!” என்றவள் கேசவனைப் பார்த்து,

“அவள அவுத்துவிடுறா” என்றாள்.

“இந்தப் பழியோட நாங் போவலக்கா என்னய கொன்னாலும் சரி, நான் திருட ஒன்னும் வர்லக்கா” என வடிவு சொல்லும்போதுதான் கேசவனுக்கு வர்ம இடம் புடிபட்டது. சரி அங்கயே மறுபடி அடிப்போம் என்ற எண்ணத்தோடு,

“ஏ... களவாணி முண்ட என்ன பசப்புதியோ மவளே, போலீஸ்ல எழுதி வச்சம்னு வையி, வம்பா சீரழிஞ்சு சாவ” என்றான்.

வடிவு பார்வை அப்போது கதவிடுக்கில் நிலை குத்தி நின்றது. அடுத்த நொடி கேசவனை ஒரு பார்வை பார்த்தாள், கண்ணிப்போய் இருந்த முகத்தில் வௌம் மட்டுமே இருந்தது. கேசவனுக்கு வாய் வரவில்லை. கேசவன் கைக்கட்டை அவுக்கும்போது வடிவு கேசவனைப் பார்த்துச் சொன்னாள்.

“இந்தா பாரும் அவுசாரியா அம்பலத்துக்கு ஏறுனாலும் களவாணிங்க பேரு வாங்குதவ நாங் இல்ல தெரிஞ்சுக்கோரும்” என்று சொல்லி சேலை முந்தானையால் அடிபட்ட இடத்தைப் பொத்தியபடி திரும்பி நடந்தாள்.

7

இன்னும் சற்று நேரத்தில் அந்த கடுகடுப்பை விட பயங்கரமான வேற ஒரு கடுகடுப்பு வரும் என்பது அவள் அறிந்ததே. வலி உயிர் போகிறது என்கிறார்கள். அப்புடியே போனால் கூட தேவலை என்றானது. ஒரு - ஒரு முறை வெளியே ஒதுங்கும்போது வெயிலில் புழு சுருளுவதுபோல சுருண்டு அழும்படியாகிறது. மேற்கே புதருக்கு மேல்புறம் கொஞ்சம் தண்ணி உண்டு. கழுவ குத்தவைத்து எழும்போது வெளியே வேர் தள்ளி நோவு உருக்கியது. பல நாள் ரெத்தப்போக்கு வேறு, கன்னக்கடுப்பு ஒரு புறம் என எல்லாம் சேர பல்லைக்கடித்தபடி கண்ணீர் கழுவி வேரை உள்ளே தள்ளியபோது லேசாக மயக்கம் வருவதுபோல இருந்தது. “ஆன முடியாமல்” அங்கயே விழுந்தாள்.

கோடை என்றாலும் முறுக்கு வெயிலுக்கு கருமேகம் திரண்டு இருந்தது. சில்லு வெட்டாக வடிவு மனதுக்குள் ஒரு கலங்கிய காட்சி நிழலாடியபடியே இருந்தது. இப்போது மறுபடி மறுபடி அதுவே நினைவில் வந்து மோத மோத கலங்கியவை தெளிவாகத் தெரிந்தது. கதவிடுக்கு வழியே தான் கண்ட காட்சி கட்டில் ஓரமாகத் தொங்கப்போட்டது போல சலனமே இன்றி இருந்த ராசுவின் கால்கள்.

ஒரு எட்டு கூட நடந்ததைத் தடுக்க முன்வராத கால்கள். மறுநொடியே மீண்டும் திட்டென அறைந்த பூட்டும் தெளிவு கலைந்த இருட்டும் கவ்வியது. வடிவு துடித்து எழுந்தாள். எங்கோ வனாந்திரத்தில் அம்மணமாகக் கிடப்பது போன்ற உணர்வு அவளுக்கு, பெருமூச்சு விடும்போது வேர்த்து மார்பெல்லாம் நனைந்திருந்தது. தூரத்தில் தீனமான அழுகுரல் வந்து நிக்கவும்தான் குழந்தை நியாபகம் வந்து பதறிப்போனாள்.

இயலாமை இன்ன மட்டுமில்லாமல் தின்ன, “பெறந்தே கொல்லுதே பாவம்” என தலையில் அடித்துக்கொண்டாள். ரெண்டு நாள் முந்தி நடந்த கேவலத்தைத் தானும் புள்ளையும் சுமக்கவேண்டுமோ தெரியாது.

“ஏங் உயிர நாங் மாச்சுக்கிடுவேங், எம்புள்ளய நாங் கொன்னுக்கிட மாட்டேங், சாமி கொன்னுரு கொன்னுரு கொன்னுரு... நான் கொன்னுகிடமாட்டேங் சாமி நீயே கொன்னுரு” எனப் புத்தி கலங்கியவள் போல புலம்பியபடி எழுந்தவள் நாலு எட்டு கூட வைத்திருக்கமாட்டாள். அதற்குள் உசார் வந்தவள் போல,

“எம்புள்ளய நானே கொல்லச் சொல்லுதனே சண்டாள முண்ட நாஞ் சாவனும் நாந்தாங் சாவுனம்” என்றவள் மாரில் ஓங்கி அடித்துக்கொண்டே தொட்டில் உள்ள திசை நோக்கி ஓடி வந்தாள். இப்போது சத்தமில்லை. எவ்வளவு நேரம் கிடந்தோம் என்றும் தெரியவில்லை என்பது கூடுதல் குழப்பம் கொடுக்க கால்கள் தடுமாறியபடியே இருந்தது.

“ஐயோ ஏம்புள்ள” என பேய் அலறல் அலறிக்கொண்டு வடிவு ஓடிவரும்போது ஏகதேசம் எல்லோருமே போய் விட்டார்கள். ஒற்றை ஆளாக பாக்கியம் மட்டும் நின்றுகொண்டிருந்தாள். திடுக்கிட்டு எட்டி குழந்தை உறங்கிக்கொண்டிருந்த தொட்டிலைப் பார்த்தாள். குழந்தை உறங்கிக்கொண்டிருந்தது. ராசு தொட்டிலை ஆட்டிக்கொண்டிருந்தான். ஆளைக் கண்டதும் ஓடி வந்தவள் கால்கள் பின்ன அங்கேயே விழுந்தாள். கப்பி, கசடு, கேடு, அழுக்கு, இழுக்கு என சகலத்தையும் கழுவிச்செல்லும் மாமழை வெறி கொண்டு வடிவையும் கழுவத் தொடங்கியது.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer