வாழ்வெனும் பொய்யும் மெய்யில்லா உலகமும் டர்கரின் Realm of the Unreal

சிபி சக்கரவர்த்தி செல்வராஜ்

பகிரு

Cibe Chakravarthy 2

“அந்த நாட்களில், குழந்தைகள் நாங்கள், பெரியோர்க்கு ஒப்பாய் கருதப்படாது, மட்டு மரியாதையின்றி நடத்தபட்டோம்; ஆனால் எனது அபிப்ராயத்தில், பெரியோர்களோ, குறிப்பாக அனைத்து வகையான அறிமுகமில்லாதவர்களோ, யாராக இருப்பினும் எனது கால் தூசிக்கும் கீழானவர்கள்.”

“இவ்வுலகினும் பெரிதாய் நான் கருதுவது குழந்தைகளை  மட்டுந்தான்.”

- என்ரி டர்கர் (1892-1973)

இவ்வாசகங்கள், இளைஞர்கள், பெரியவர்கள், சமூகத்தின் முதியவர்கள் என சமூகத்தின் எந்த வளர்ந்த மனிதர்களோடும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத, என்ரி டர்கர் எனும் கலைஞரின் நாட்குறிப்பிலிருந்தவை.

குழந்தைகள் என்றால் அவருக்கு உயிர், அதீத பற்று; அதீதமென்றால், தத்து குழந்தை வேண்டி விண்ணப்பிக்குமாறு அவரைத் தூண்டும் அளவுக்கு அதீதம். (அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட தகவல் இங்கு தேவையில்லை.)

குடும்பம் என்று எதுவுமிருக்கவில்லை, வெகுசிலர் என்பதே அதிகம் போல, விரல் விட்டு எண்ணக் கூடிய மனிதர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை வைத்திருந்தார் டர்கர். எளிதாக மக்களிடையே ஜன ரஞ்சகமாக உலாவர, அவரிடம் ஓரிரு சூத்திரங்கள் மட்டுமே இருந்தன. அவற்றில் ஒன்று, அந்தந்த நாளின் வானிலை நிலைய அறிக்கையைப் பற்றியும், நிலவிவரும் வானிலை பற்றியும் சிலாகிப்பது. இவ்வாறு சமூகத்தின் விளிம்பின் முனையிலிருந்து கொண்டு தத்துக் குழந்தைக்கு விண்ணப்பித்திருந்தார் அந்தத் துறவி.

Cibe Chakravarthy 1

மேலும், மிகவும் வறியவரான டர்கர், மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக ஓர் அத்தக் கூலியாய் நிரந்தரமில்லாத ஜீவனம் செய்து வாழ்ந்து வந்தார். அவர் ஒரு தீவிர ரோமன் கத்தோலிக்கரும் ஆவார்.

இதுதான் அன்றாட வாழ்வு டர்கர் மீது செலுத்திய ஒளியின் பிம்பம்.

ஆனால் இவையெல்லாம் தாண்டி, அவரது அடுக்குமாடி குடியிருப்பின் வாடகை அறைக்குள், அவருக்கென்று தனியாக ஒரு உலகம் பரந்து விரிந்திருந்தது - அவற்றை பீடித்திருந்த மாய மந்திர சக்திகளும், துர்சக்திகள் உட்பட.

டர்கரின் படைப்புலகம் குறித்த விவாதங்கள், விமர்சனங்கள் என எதிலிருந்தாவது தொடங்க வேண்டுமென்றால், எப்பொழுதும் வெகுஜனத்தின் கண்ணை உறுத்தும், டர்கரின் ஓவியங்களில் ஆதிக்கம் செலுத்தும் ஆண்குறி வளர்ந்த, குட்டிப் பெண்களிலிருந்துதான் தொடங்கவேண்டும். அதைப்போல, பெண்குழந்தைகள் மீதிழைக்கப்படும் அநீதியும் அதை விஞ்சும் அதீதமான, வன்முறையும், குரூரச் சித்திரவதைகளையும் புறக்கணிக்கமுடியாது.

முதற்கண் பார்வையாளர்கள் சிலருக்கு இதன் விகாரம் மட்டுமே தெரியும். படைப்பாளியின் மன நிலை மீது சிறு சந்தேகமும், குரூரத்தின் மறைவில், கலைஞனின் வக்கிரம் இருப்பதாகவும் தோன்றும்.

இவ்வகை, எதார்த்தம் நீங்கிய உலகைக்கண்டு, சமகால கலைபடைப்புகளே கொஞ்சம் தள்ளிதான் நிற்கும்.

Cibe Chakravarthy 3

இவற்றை கடந்தே, டர்கரின் பரந்த தனியுலகத்தை புரிந்துகொள்ள முடியும்.

ஆனாலும் டர்கர் மிகவும் கைதேர்ந்த ஓவியரோ, கோடுகளில், வண்ணங்களில் நிபுணத்துவம் பெற்றவரோ கிடையாது. அது அவருக்கும் தெரிந்திருந்திருக்கக்கூடும் அதனால்தான் அவர் அதிகமாக வித்தைகளையும், தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி படைப்புகளை உருவாக்கினார்.

இன்றைய கலை ஆர்வலர்கள், சேகரிப்பாளர்கள் யாவருக்கும் அவரது வித்தையில் புலப்பட்ட டர்கரின் சாமர்த்தியம், மெய்சிலிர்க்க வைக்கிறது.

செய்தித்தாள்கள், விளம்பரங்கள், வண்ணங்கள் தீட்டும் ஓவியப்புத்தகங்கள் மேலும் குப்பைகளில் அவருக்கு கிடைக்கும் மதிப்பற்ற பொருட்கள், என அவற்றில் கிடைக்கும் உருவப்படங்கள் யாவையும் சேகரித்துகொள்வார். அவற்றை தடமெடுத்து உருவங்களை கொலாஜ் ஆக கோவைக்கலையாக (Collage) உருவாக்குவார்.

இவ்வாறு சுவரோவியங்கள் போல, (Murals), ஒட்டு காகித டேப்களைக்கொண்டு இணைத்து, எட்டு அடி நீளம்கொண்ட ஓவியங்கள் பலவற்றை படைத்துள்ளார்.

சில நேரங்களில் அந்த கோவை படைப்புகளுக்காக, சரியான உயர அகல விகிதத்துக்கு உருவங்களை பெரிதாக்க, ஒரு சாதாரண மருந்துக்கடை நகலக இயந்திரத்தில், பல புகைப்பட நூதனங்களைப் புரிந்திருக்கிறார்.

(யோசிக்க: இவ்வாறு செய்வதற்கு மூன்று டாலர்கள் வரை செலவு ஆகும். ஆனால், டர்கரின் வாரக்கூலியே இருபத்தி ஐந்து டாலர்கள்தான். அவரது படைப்பு கோருகின்றவற்றை அரும்பாடுபட்டாவது பூர்த்தி செய்ய வேண்டும் எனும் கடப்பாடு உள்ளவராக இருந்திருக்கிறார்.)

இவற்றை கடந்து, நம் கண்ணில் புலப்படுவது ஒரு கலைஞன் மட்டுமே - வெகுஜன மைய நீரோட்டத்திலிருந்து விலகி, எந்த கலையறிவு பின்புலமும் சாராது, கருத்துகள், விமர்சனங்களுக்கு செவி மடுக்காது (அவர் படைப்புகள் வாழ்நாள் முழுவதும் படைப்புகள் வெளிவராதவை என்றாலும், முடித்து வைத்த படைப்புகளின் தரத்தை சோதித்து பார்க்க விரும்பும் ஆசையையே இங்கு நாம் நோக்கவேண்டும்), கலைபடைப்புகளுக்கு மட்டுமே நேர் செய்ய நினைத்த, என்ரி டர்கர் எனும் சுயாதீனக்கலைஞன் மட்டுமே முன்னுக்கு வருகிறார். (Outsider Artist)

மரித்தபோது அனாதையாக முதியோர் இல்லத்தில் கிடந்தவருக்கு, இப்பொழுது, அமெரிக்க சட்டப்படி மொத்தம் ஐம்பது வாரிசுகள் உரிமைகோருகின்றனர். சொத்துரிமைக்கோரி நடப்பாண்டில், மாகாண நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Cibe Chakravarthy 4

டர்கர் முதியோர் இல்லத்திற்கு செல்லும் முன்னர், அவரது வாடகை வீட்டின் பொறுப்பை முழுக்க முழுக்க வீட்டு உரிமையாளருக்கே (நேத்தன் லெர்னர், கியோகோ லெர்னெர் தம்பதியினர்) விட்டு சென்று விட்டார்.

வீட்டை சுத்தப்படுத்த முயன்ற நேத்தனுக்கு அங்கிருந்த கலைபடைப்புகளைக் கண்டு தூக்கிவாரி போட்டது.

படைப்புகளை இனங்கண்டு, நாட்டார்கலை மைய ஆர்வலர்களுக்குக் கொண்டு சென்றது லெர்னர் தம்பதியர்கள்தான்.

“அவரது பாரம்பரியத்தை ஏந்திசெல்லும் உரிமை எங்களுக்கு மட்டுமே உண்டு என்பதை உரக்க சொல்லவே இந்த வழக்கு” எனக் கூறுகிறார் டர்கரின் தூரத்து சொந்தக்காரர் க்ரிஸ்டன் சாடவ்ஸ்கி. “அவரது வாழ்நாள் படைப்புகளை வேற்றாள் சொந்தம் கொண்டாடிவந்திருக்கிறார் என்பதே எங்களுக்கு மிகுந்த வேதனை - தவறையெல்லாம் சரி செய்ய வேண்டிய கட்டாயம் எங்களுக்கிருக்கிறது.”

மைக்கேல் போன்ஸ்டீல் எனும் டர்கரின் ஆய்வாளர் கூறும்போது, “லெர்னர் தம்பதியினர் எப்பொழுதும் முழு உரிமைதாரராக இருக்க முடியாது என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால், ஒருவகையில் வாரிசுதாரராகக் கோரும் உரிமைகூட அந்தத் தம்பதியினருக்கு இருக்கிறது. கலை படைப்புகளை, அவற்றின் அந்தஸ்தை இனம் காணும் கலைகண்கள் எல்லோருக்கும்  இருக்காது.”

உயில் என்று எதுவும் எழுதாதவரையில், லெர்னர் தம்பதியினர் தரப்பு வாதம் சட்டப்படி செல்லுபடி யாகாதுதான். ஆனால் குப்பையை ஒதுக்க சென்ற, வீட்டு உரிமையாளருக்கு அவையாவும் கலை படைப்புகளாக தோன்றியதுதான் நிதர்சனம்.

அவரது கலைபடைப்புகளைப் போல அவரது 15000 பக்க நாவலோ, 5000 பக்க சுயவரலாறோ அல்லது பத்துவருட வானிலை அறிக்கை குறிப்பேடுகளோ இதுவரை வெளியிடப்படவில்லை.

அதற்கான எந்த ஒரு வாய்ப்பும் இருப்பதாகவும் தெரியவில்லை. மேலும் டர்கர் அறையில் தொட்டதெல்லாம் பொன்னாகிக் கொண்டிருக்கின்றன. சுயாதீனக்கலைகளை அங்கீகரிக்காத அருங்காட்சியக அறங்காவலர்கள் கூட, இன்று அவரது படைப்புகளுக்கு பெருமதிப்பு வைத்து  பின்தொடர்கின்றனர்.

Cibe Chakravarthy 5

1997இல் மிக முக்கியமான, அமெரிக்க நாட்டார் கலை அருங்காட்சியகம் ஒன்றில் டர்கர் முதன்முதலில் இடம் பிடித்தார். அதிலிருந்து தொடங்கிய விவாதங்களைப் பேசும் நியூயார்க் டைம்ஸ் கட்டுரை மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஓவியக் கலை ஞராக மட்டுமல்லாது நாவலாசிரியராகவும் வலம் வந்த டர்கர் ஏன் டோல்கியேனின் காதல் மொழியில் பேசவில்லை என்று டர்கரின் இதிகாச நாவலை பற்றிய மற்றொரு நியூயார்க் டைம்ஸ் கட்டுரையும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

டர்கரின் விசிறிகள், அவரைப்போன்ற தனிமை வாதகலைஞர்களின் கூற்று (Reclusive Artists)  டர்கர் குறித்த, மைக்கேல் தெவொஸ் கட்டுரையிலிருந்து :

ஒரு வழியாக, அவர் சிறிதும் சட்டை செய்யாத வெகுஜன சந்தையை டர்கர் சேர்ந்துவிட்டார். அவரது கலைகளை அருங்காட்சியகங்கள் கொள்ளட்டும். இவர் சைக்கோவா இல்லை அப்பாவியா என்று மேதாவிகளும், கருத்து சொல்பவர்களும், டர்கரை குறுக்குவெட்டாக மனோரீதியான தளத்தில், கூராய்வு செய்யட்டும். ஆனால், டர்கரை மட்டும் நாங்கள் வைத்து கொள்கிறோம். எங்களிடையே வாழும், அனாதை யாய் திரியும், சுயாதீன அறிவுஜீவிகளுக்கானவர் டர்கர்.

டர்கர் படைப்புகள் குறித்த ஆவணப்படங்கள், வாழ்க்கை வரலாறு மற்றும் அருங்காட்சியக விவரங்கள்:

1977இல் டர்கரின் படைப்புகள் ஹைட் பார்க் கலைமயத்தில் (Hyde Park Art Centre)  காட்சிப் படுத்தபட்டது.

2008, Intuit : The centre for Intuitive & Outsider Art in Chicago, டர்கரின் வீட்டு அறைகளையும், பொருட்களையும், அருங்காட்சியகப்படுத்தி, நிரந்தர அருங்காட்சியகமாகத்  தொடங்கியது.

Museum of Everything, ஜேம்ஸ் ப்ரெட் (James Brett) சுயம்பு (Self-taught artists) கலைஞர்களுக்கான நகரும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தினார்.

2010, American Folk Art Museum “ The Private collection of Henry Darger ” டர்கரின் சேகரிப்புகளை காட்சிப்படுத்தியது.

டர்கரின் வாழ்க்கை வரலாறு :

Jim Elledge : Henry Darger, The Throwaway boy - The Tragic life of an Outsider Artist

டர்கர் குறித்த ஆவணப்படம்:

The Realms of the Unreal - 2004, Documentary on Darger.

டர்கர் படைப்புகள் காணக் கிடைக்கும் அருங் காட்சியகங்கள் :

Hyde Park Art Centre

American Folk Art Museum 1990s

Intuit : The centre for intutitive and outsider art on chicago.

Museum of Modern Art, New york

Art Institute of Chicago & Smithsonian

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer