Two Mummies

பாத்திமா மாஜிதா

பகிரு

பாதசாரிக் கடவையைக் கடப்பதற்கான பச்சை நிற சமிக்ஞை விளக்கு ஒளிரும்பொழுது இஸ்மத் தலையை எனது பக்கம் உயர்த்தியவளாய் “மம்மி உலகத்தில் ஒருவருக்கு இரண்டு மம்மிக்கள் உண்டா?” என்று கேட்டாள்.

வலது கையை இறுகப் பற்றிக்கொண்டு கடவையைக் கடப்பதற்கு ஆயத்தமாகிகொண்டிருந்த நான், அவளது கேள்வியால் சற்று தடுமாறியவளாய் வீதியின் அடுத்தப் பக்கத்தினை அடைந்தேன். இருப்பினும் முப்பது செக்கனில் பாதையின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்தினை அடைவது போல் அவ்வளவு சீக்கிரம் அவளது கேள்வியைக் கடந்துவிட முடியாது.

வழமையாகப் பாடசாலையிலிருந்து இஸ்மத்தை அழைத்து வரும்பொழுது லண்டனை மொய்க்கின்ற இரட்டை தட்டுப் பேருந்தில் ஏறி சுவாரஸ்யமான, அதியற்புதமான உலகின் நிலவெளிகளில் தரிசித்தபடி எங்களது உரையாடல் நகர்ந்து கொண்டிருக்கும். பறவைகளின் சிறகுகளிலும், வண்டுகளின் மெல்லிய முதுகுகளின் யானையின் தும்பிக்கைகளிலும் நாங்கள் பயணித்துக் கொண்டிருப்போம். ஏன்? எதற்கு? எப்படி? என்ற அவளது கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல எனது அகராதி தயாராக இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் நான் சலிக்காமல் கண்களை வளைத்து கைகளை விரித்து நடித்துக் காட்டும்பொழுது அவளது பூனைக் கண்களால் சுருக்கியும் அகல விரித்தும் ரசித்தபடியே வருவாள்.

கரையை அடைவதற்கு நாங்கள் விரும்புவதேயில்லை. இவ்வாறு நிமிடங்கள் மணித்தியாலங்களாகக் கரைவதுண்டு. ஆனால் அன்று இஸ்மத் எழுப்பிய கேள்வி எனது சிந்தனையின் எல்லையைப் பரிசோதித்துப் பார்த்தது. பதில் சொல்வதற்கு அதிகத் தூரம் சுழியோட வேண்டியிருக்கும் என அக மனம் கூறியது. எஜமானின் கட்டளைக்கு அடிபணிய மறுக்கின்ற பாபரோ குதிரையைப் போல இஸ்மத்தின் கேள்வியை முதுகில் ஏற்றி சவாரி செய்யச் சற்று தயங்கினேன்.

மேலதிக தகவல்களை அவள் கூறட்டும் என்பது போல் மௌனமாக முகபாவனையை மாற்றி அவளது பக்கம் திரும்பினேன். இஸ்மத் மேலும் கூற ஆரம்பித்தாள். “டாவினின் மம்மி வீட்டில் இல்லையாம். வேறொரு வீட்டில் வசிக்கின்றாவாம்; இப்பொழுது புதியதொரு மம்மி வந்திருக்காவாம். அவனோட சேர்ந்து கிரிக்கெட் விளையாடும்பொழுது பந்தை நல்லா வீசுறாவாம்.

அப்போ அவனுக்கு இரண்டு மம்மிதானே” என்று கூறி முடித்தாள். “ம், இருக்கலாம்” என்ற அரைக்குறை விடையைக் கூறிக்கொண்டே வீட்டின் கதவினைத் திறந்தேன். திருப்தியற்ற அந்தப் பதிலுடன் குழந்தை உள்ளே நுழைந்தது.

டாவினும் இஸ்மத்தும் ஒரே வகுப்பினைச் சேர்ந்த நல்ல நண்பர்கள். எங்களது வீடு அமைந்துள்ள வீதிக்கு அடுத்த வீதியில் தான் டாவினின் வீடு உள்ளது. இந்த இரண்டு வீதிகளும் சந்திக்கின்ற சந்தியில்தான் பாடசாலை அமைந்துள்ளது. இஸ்மத் பாடசாலைக்குச் சென்று கொண்டிருக்கும் சில வேளைகளில் டாவினும் அவனது பெற்றோருடன் வருவான். அந்த வீதியில் நீல நிற யுனிபோர்ம் அணிந்து மாணவர்கள் செல்லும் காட்சி ஒரு சிறிய நதியைப் போன்று இருக்கும். இஸ்மத்தும் டாவினும் ஒருவரையொருவர் சந்திக்கின்ற வேளையில் ஒரு புன்முறுவலுடன் “ஹலோ” கூறி எங்களது கைகளிலிருந்து விடுபட்டு இருவரும் இணைந்து பாடசாலையை நோக்கி விரையும்பொழுது வெள்ளை நிற காலுறையும் கறுப்பு நிற பூட்சும் அணிந்த அவர்களது கால்கள் எழுப்புகின்ற சத்தமானது நதியில் துடுப்பு போடும் சத்தம் போலக் கேட்கும்.

அப்படியொரு நாளில்தான் டாவினின் பெற்றோரின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. ஆரம்பத்தில் புன்னகை மட்டுமே எங்களது உடல்மொழியாக இருந்து வந்தது. ஒரு நாள் அவனது தாய் வெலன்டினா, டாவின் நேற்று இரவு தூங்குமுன் இஸ்மத்தைப் பற்றிச் சிலாகித்துக் கூறினான் என்று கூறும்பொழுதே “இஸ்மத்தும் டாவினைப் பற்றி அடிக்கடி கதைப்பாள்”, என்றேன். பச்சை நிறமாய்ச் செழித்துச் சடைத்த ஓக் மர இழைகளில் வெயில் இழைந்து கொண்டிருக்கும் இளவேனில் காலங்களில் இஸ்மத்தினையும் காலித்தினையும் அழைத்துக்கொண்டு பக்கத்திலிருக்கும் பூங்காவிற்கு நான் போவதுண்டு. சில வேளைகளில் வெலன்டினா டாவினையும் அவனது தங்கையான சலோமியையும் அழைத்து வருவாள். குழந்தைகள் எல்லோரும் ஊஞ்சலையும் சறுக்கிகளையும் ஆக்கிரமித்துக்கொள்ள எங்கள் இருவரினதும் உரையாடல் மெதுவாக நகரும்.

ஒரு நாள் டாவினின் ஐந்தாவது பிறந்த நாளை கொண்டாட எங்கள் குடும்பத்தினை டாவினின் வீட்டிற்கு அழைத்திருந்தார்கள். டாவினுக்குப் பிடித்த சாலி அன்ட் லோலா புத்தகப் பொதியுடன் அவனது வீட்டிற்குச் சென்றோம். வெலன்டினா கடும் சிவப்பு நிற வெல்வெட்டில் குடை போன்று விரியும் நீள் சட்டையுடன் எங்களை வரவேற்றாள். கொலம்பிய நாட்டார் பாடலொன்று கோடியனின் துள்ளலான இசையுடன் வீடு முழுக்க மோதிக்கொண்டிருந்தது. “டாவினின் தந்தை எங்கே?” என்ற எனது கேள்வி முடிய முந்தியே “இதோ நான் லசண்யா செய்து கொண்டிருக்கின்றேன்” என்ற குரல் சமையலறையிலிருந்து ஒலித்தது.

வரவேற்பறையின் பக்கம் திரும்புகையில் மூன்று கதவுகளைக் கொண்ட புத்தக அலமாரிதான் முதன்முதலாகக் கண்களில் தெரிந்தது. என்னையறியாமலேயே புத்தக அலமாரிக்குப் பக்கத்தில் உள்ள சோபாவில் தொப்பென்று இருந்துகொண்டேன். பின்னர் அலமாரியை நோக்கி கூர்ந்து அவதானித்தபொழுது கார்ஸியா மார்க்ஸின் புத்தகங்கள் தெளிவாக விளங்கின. “நீ நல்லா வாசிப்பாயா?” என்று வெலன்டினாவினை நோக்கி கேட்கும் பொழுதுதான் அவள் லண்டன் ஸோஆஸ் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்துறையில் முதுகலை மாணவி என்பது தெரிந்தது.

மெல்லிய அந்த நிலவொளியின் வெளிச்சம் உடலில் பட்டுத் தெரித்துக்கொண்டிருக்கையில் கார்ஸியா மார்க்ஸின் நாவலான Love in the time of Cholera எங்களது உரையாடலை விழுங்கிக்கொண்டிருந்தது. புளோரின்டினோ - பேர்மினாவின் காதல் கதையில் மனது கிறங்கிவிட்டது. சிறிது நேரத்தில் வெலன்டினா, ஜின் குவளையுடன் சோபாவில் உட்கார்ந்து சாளரத்தின் வழியாகத் தென்பட்டதொரு புள்ளியில் உன்னித்தவளாக, முதுகினை நேராக நிமிர்த்தி முழங்கால்களை இணைத்துக் கட்டி தனது கடந்தகாலக் காதல் கதைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்துக் கொண்டிருந்தாள்.

நான் பருகிக்கொண்டிருந்த கரமல் சுவை ததும்பும் சூடான கொலம்பியக் கோப்பியிலிருந்து எழுந்த ஆவியில் அவளது காதலின் ஆன்மா மேலெழுந்துகொண்டிருந்தது. இடையிடையே ஜேம்சன் அவளது ஜின் கோப்பையை நிறைத்துக்கொண்டும் பாடல்கள் நிறைந்த ஒலித்தட்டு இழையை மாற்றிக்கொண்டும் இருந்தான். அவர்கள் இருவரும் காற்றில் புரளும் இலைகள் போல மிக இயல்பாக இருந்தார்கள். வெலன்டினா ஏதோவொரு ஞாபகத்தினை வரவழைத்தவளாய் “உன்னுடைய காதல் அனுபவங்கள்?”, என்று என்னை நோக்கிய அவளது கேள்வி முடிய முந்தியே கண்களினை சுருக்கியவாறே விரல்களைப் பிணைத்துக்கொண்டு “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை”, என்ற ஒரு பச்சைப் பொய்யை கூறும் பொழுது பக்கத்தில் இருந்த எனது கணவரின் நெஞ்சு நிமிர்ந்தது.

பிந்தியதொரு கோடை கால வெயிலில் அவளது பல்கலைக்கழக நூலகக் கட்டடத்திற்குப் பின்னால் உள்ள பரந்து விரிந்த பசுமையான புல்வெளியின் நடுவில் நின்றுகொண்டிருந்த செர்ரி மரத்தின் கீழே நாங்கள் அமர்ந்து எனது காதலின் இனிப்பான உணர்வுகளின் மெல்லிய தடங்களை ஒன்று விடாமல் அவளிடம் பகிர்ந்து கொண்டதை அன்று வேற்று கிரகவாசியைப் பார்ப்பதுபோல் என்னைப் பார்த்து அதிசயித்துக் கொண்டிருந்த அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சூரியன் கிட்டத்தட்ட அஸ்தமித்திருந்தது. வானம், அந்திப்பொழுதின் வருகையால் தெளிவற்றிருந்தது. வெலன்டினாவிற்கு என்ன நடந்தது? எங்கே போனாள்? இஸ்மத் சொல்வதெல்லாம் உண்மைதானா? கோடை கால விடுமுறையில் இலங்கை சென்று வருவதற்குள் இவ்வளவு மாற்றங்களா? அம்மா இல்லாது டாவினும் சலோமியும் எவ்வளவு கஷ்டப்படுவார்கள்? எனக்குள் நானே கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தேன். தொலைபேசியை எடுத்து வெலன்டினாவை அழைத்தேன். அவளிடமிருந்து பதில் வரவில்லை. ‘ஹாய்! நான் பிஸியாக இருக்கின்றேன். நீ நலமா? இலங்கையிலிருந்து வந்துவிட்டாயா? வருகின்ற திங்கட்கிழமை குழந்தைகளைப் பார்க்க வருவேன். அப்பொழுது உன்னைச் சந்திக்கின்றேன்’, என்று சர்வ சாதரணமாக அவளிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. ‘சரி’ என்று மட்டும் மறுமொழி அனுப்பிவிட்டு முன்னாலிருந்த தொலைக்காட்சியை உயிர்ப்பித்தேன்.

பாடசாலையிலிருந்து வந்த இஸ்மத் அன்றைய நாளின் நிகழ்வுகளை ஒப்புவிப்பதற்காக வழமையைப் போல் நீள்சாய்விருக்கையில் இருந்த அவளது தந்தையின் மடியில் ஏறி அமர்ந்துகொண்டாள். “வாப்பா டாவினுக்குப் புதிதாக ஒரு மம்மி வந்திருப்பதாக ஸ்கூலில் கூறினான். அப்படியென்றால் அவனுக்கு இரண்டு மம்மிக்கள் உண்டு தானே?”, என்று விபரிக்கத் தொடங்கினாள். எனது கணவருக்கு அவளது கேள்வி அதிர்ச்சியை அளித்தது போல் காணப்பட்டார். பின்னர் அவருடைய நிலபிரபுத்துவக் கண்கள், முன்னால் இருந்த என்னைப் பார்த்து எச்சரிக்கை செய்வது போல் பிரகாசித்தன. சற்று நேரத்தில் அவரது மனதில் வேறு ஏதோவொரு சிந்தனை வந்து விட்டது. குழந்தை சொல்லியதை முழுமையாகக் காதில் உள்வாங்கிக் கொள்ளாதவர் போல “ம்” என்றொரு வார்த்தையுடன் மேல் மாடிக்குச் சென்றுவிட்டார். பாவம் குழந்தை, அந்தச் சின்னஞ்சிறு மூளைக்குள் குழப்பம் ஆழமாக இழையோடிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தின் பின்னர்க் கால்களை மடித்து நிலத்தில் அமர்ந்துகொண்டு அவளது இளைய சகோதரனான காலித்துடன் சேர்ந்து சித்திரம் வரையத் தொடங்கினாள். இருவருக்கும் எதை வரைவதென்ற கலந்துரையாடல் நடந்தது. இறுதியில் தீர்மானித்ததிற்கிணங்க இருவரும் சேர்ந்து வீடு வரைய ஆரம்பித்தார்கள். இஸ்மத் வீட்டினை வரைந்தாள். காலித் வீட்டிற்குப் பின்னால் அழகியதொரு வானவில்லை வரைந்துகொண்டிருந்தான். அவனுக்கு ஒத்தாசையாகக் கலர் பெட்டியிலிருந்த வர்ணப் பென்சில் ஒவ்வொன்றையும் இஸ்மத் எடுத்துக் கொடுத்தபடியே “காலித், உலகத்தில் சிலருக்கு இரண்டு மம்மிக்கள் இருக்கின்றார்கள் என்பது உனக்குத் தெரியுமா?”, என்று கதையைத் தொடங்கினாள்.

வானவில்லிற்கு நிறம் தீட்டிக்கொண்டிருந்த காலித் இஸ்மத்தின் பக்கம் திரும்பி “ஓ! அப்படியா?”, என்ற போது அவனது கண்கள் பக்கத்துப் பக்கத்தில் தொடாமல் இருக்கும் இரண்டு நட்சத்திரங்கள் போல ஒளிவிட்டுக்கொண்டிருந்தன.

காலையில் இஸ்மத்தினைப் பாடசாலைக்கு அழைத்துச் செல்லும்பொழுது டாவின் தனது ஸ்கூட்டரில் முன்னால் நகர்ந்து செல்ல சலோமியின் கைகளைப் பற்றிக்கொண்டு ஒரு பெண் வந்து கொண்டிருந்தாள். கிட்டத்தட்ட வெலன்டினாவின் தோற்றத்தினை ஒத்திருந்தாள். டாவினும் சலோமியும் எப்பொழுதும் போலவே எந்த வித மாற்றமுமின்றி அப்பெண்ணுடன் சரளமாக உரையாடியபடி வந்துகொண்டிருந்தார்கள். ஜேம்சன் அப்பெண்ணின் வலது கையைப் பற்றிக்கொண்டு நடந்துகொண்டிருந்தான். மனதிற்குள் ஏதோவொரு வெற்றிடம் தோன்றுவது போலிருந்தது. உடனே பார்வையைத் தாழ்த்திக்கொண்டேன். பின்னர் அவர்களைக் கவனிக்காதது போல் பாசாங்கு செய்து கொண்டு சைக்கிளில் சென்று கொண்டிருந்த இஸ்மத்தினை நோக்கினேன். ஜேம்சன் என்னைக் கண்டதும் பெயரைக் கூறி அழைத்தான். நான் கேட்காதது போல் நடையை வேகமாக்கினேன். மீண்டும் இரண்டாவது தடவையும் அழைத்தான். இனி நடிக்க முடியாது என்பதால் திரும்பிப் பார்த்து “ஹலோ”, என்று கூறினேன். “ஹாய்! விடுமுறையெல்லாம் எப்படி? இவ அமண்டா”, என்று அந்தப் பெண்ணை எனக்கு அறிமுகப்படுத்தினான்.

 “டாவின் இஸ்மத்துடன் சேர்ந்து கேக் செய்ய ஆசைப்படுகிறான். நீங்கள் நேரம் கிடைக்கும் பொழுது அவளை வீட்டிற்குக் கூட்டி வரமுடியுமா?”, என்று முகத்தில் எந்தவொரு மாற்றமுமில்லாமல் ஜேம்சன் பேசிக் கொண்டிருந்தான். அவனுடன் என்னால் கோர்வையாகப் பேச முடியவில்லை. “சரி, பார்க்கலாம்”, என்று மட்டும் கூறினேன்.

வெலன்டினாவினை சந்திப்பதற்காக ஈஸ்ட்ஹாம் பிரதான வீதியில் அமைந்திருந்த இத்தாலி உணவகத்திற்குள் நுழைந்தேன். சமையலறைக்குள் இருந்த லோரா ஜன்னலின் வழியாகக் கைகளை அசைத்தாள்.

வெலன்டினாதான் இந்த உணவகத்தினை எனக்கு அறிமுகப்படுத்தினாள். இங்கே நிர்வாகி, சமையல்காரர் எல்லாமே லோராதான். லோராவின் மகள் கார்லோவும் வெலன்டினாவும் பல்கலைக்கழக நண்பிகள்.லோராவிடம் பிஸ்ஸா செய்வதற்கெனப் பிரத்யேகமான விறகு அடுப்பு உண்டு. அதுதான் இந்த உணவகத்தின் தனித்துவமும். என்னைப் போலவே வெலன்டினாவும் பிஸ்ஸா பிரியை. வார இறுதி நாட்களில் லோராவின் உணவகத்தில் இருவரும் அமர்ந்துகொண்டு பிஸ்ஸாவினை ருசித்தபடியே ஓரான் பார்மூக்கின் ஸ்தான்பூல்,டொனி மொரீசனின் நியூயார்க், சிமந்தா அடிச்சியின் சூக்கா என உலகின் பல இடங்களிற்கும் சென்று வருவோம். எங்களது உரையாடலுக்கேற்ப இடையிடையே லோரா இசையினை மாற்றிக்கொண்டிருப்பாள். இறுதியில் அவளது இத்தாலிய நடனத்துடன் நாங்களும் இணைந்து கொள்வோம். வழமையைப் போன்ற மனநிலை அன்று என்னிடமில்லை. உணவகத்திற்குள் கடலின் அலைகள் மேலெழுந்து அடங்குவது போல் இத்தாலிய இசையொன்று என்னை அணைத்துக்கொள்ள முயன்று கொண்டிருந்தது வெலன்டினாவின் முகத்தினை எப்படி எதிர்கொள்வது, எப்படி அவளுக்கு ஆறுதல் வார்த்தை கூறுவது என்பதை யோசிக்கையில் என்னுடைய உதடுகள் வறண்டு, இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது. தலையைக் குனிந்துகொண்டே குடித்துக் கொண்டிருக்கும் சூடான லெடே கோப்பியை வெறித்துப் பார்த்தவளாய் அமர்ந்திருந்தேன். வெலன்டினாவின் நிழல் முன்னால் நின்றது. என்றும் போலக் கண்டவுடனேயே கட்டி அணைத்துக்கொண்டாள். பிடியிலிருந்து விலகியவுடன் நேருக்கு நேர் நோக்கினேன். அவளது திடமான உடலும் செழிப்பான கன்னங்களும் மின்னிக்கொண்டிருந்தன. அவள் முகத்தில் அமைதியின்மை மற்றும் அசௌகரியத்தின் சாயல் எதுவுமில்லை. “ஹாய்! எப்படி? என்னிடம் ஏன் எதுவுமே கூறாமல் சென்றுவிட்டாய்? என்ன பிரச்சினை?” என்று உடனே விடயத்திற்குள் சென்றுவிட்டேன்.

ஒரு கணம் அமைதியானாள். பின்னர் சீஸூம் ஒலிவ்வும் கலந்த பிஸ்ஸாவினை தருமாறு லோராவிடம் கூறிவிட்டு தனது கதையைக் கூற ஆரம்பித்தாள். “நானும் ஜேம்சனும் ஒன்றாகச் சேர்ந்து வாழத்தொடங்கிப் பதினைந்து வருடங்களாகின்றன. கொலம்பியா பல்கலைக்கழகமொன்றில் நான் படித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் அவனும் நானும் காதலிக்கத் தொடங்கினோம். அவனது காதலை மதித்து நீண்டதொரு வாழ்க்கையை அவனுடன் வாழ விரும்பினேன். இருவரும் சேர்ந்து குழந்தைகள் வேண்டும் எனவும் முடிவு செய்தோம். எனது வாழ்க்கையின் எல்லா விடயங்களிலும் ஜேம்சன் முழு ஆதரவு வழங்கினான். ஆனால் சென்ற வருடத்தொடக்கத்தில் ஜேம்சனின் நடத்தைகளில் மாற்றம் ஏற்பட்டது. வேலை முடிந்து காலம் தாழ்த்தி வீடு வரத் தொடங்கினான். என்னுடன் எந்தவித களியாட்டங்களுக்கும் வருவதில்லை. சிறியதொரு விடயத்தினையும் பூதாகரமாக மாற்றி என்னுடன் சண்டையிட்டான். எங்களது உறவில் விரிசல் ஏற்பட்டது. சென்ற வருட கிறிஸ்மஸ் நாளன்று அதிர்ச்சி தரும் அந்தச் செய்தியை என்னிடம் கூறினான். அவன் ஒலிவியாவுடன் சேர்ந்து புதியதொரு வாழ்க்கையைத் தொடங்கப் போவதை அறிந்தபொழுது எனது மூச்சு ஒரு கணம் நின்றுவந்தது. கடும் விரக்தியுற்றேன். என்னால் தற்காலிகமாகவேணும் பிரச்சினையிலிருந்து விடுபடமுடியவில்லை. பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு நெஞ்சுவெடிப்பது போல் அழுதுகொண்டிருந்தேன். படிப்பு விடயத்தில் மனதை ஒருமுகப்படுத்த முடியாமலிருந்தது. தனிமையும் அமைதியும் கம்பளிப் போர்வை போல நாளுக்கு நாள் கனத்துக் கொண்டே வந்தது. எனினும் ஜேம்சனின் உணர்வினை நான் மதித்தேன். பின்னர் நானும் ஜேம்சனும் கலந்துரையாடினோம். சிறு மாறுதலுக்காகக் குழந்தைகளை ஜேம்சனிடம் ஒப்படைத்துவிட்டு ஒரு மாதகால விடுமுறையில் கொலம்பியா சென்று வர தீர்மானித்தேன். ஹீத்ரோ விமான நிலையத்தில் எனது பாடசாலைக் காதலனான ஏரியனை தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தது. இறந்தகாலத்தின் கண்களால் உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்த தீராக்காதல் புழுங்கிக்கொண்டிருந்த மனதின் வெறுமையை இன்னுமின்னும் விசிறியது. நானும் ஏரியனும் உயர்தர வகுப்பின் இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருக்கும்பொழுது காதலிக்கத் தொடங்கினோம். ஏரியன் எனது கிராமத்திற்கு அயல் கிராமத்தில் வசித்து வந்தான். கொலம்பிய உள்நாட்டு யுத்தத்தில் நாங்கள் இடம்பெயர்ந்த பொழுது எங்களது காதலும் காணாமல் போய்விட்டது. அதன் பிறகு நான் ஏரியனைச் சந்திக்கவேயில்லை. ஆனால் இன்று வரை எமது காதலின் சிதிலங்களை மனதில் சுமந்து வாழ்வதாகவும் பல இடங்களில் என்னைத் தேடி அலைந்ததாகவும் ஏரியன் கூறினான். நீரடியில் கிடக்கும் பொருட்களாய் எண்ணற்ற பிம்பங்கள் உள்ளுக்குள் அசைந்தன. என்னுள் எங்கோ ஒரு மூளையில் இருந்த குற்றவுணர்ச்சி வார்த்தைகளாக வெளிவரத் தொடங்கின. இருவரும் ஒன்றாக இணைந்து எங்களது கிராமங்களுக்குச் சென்றோம். பாசிமணியைப் போன்று மலையடிவாரத்தில் சிதறிக்கிடந்த கோப்பி விதைகளின் மேலே தலையைச் சாய்த்து எங்களது கடந்த கால வாழ்க்கையை இரைமீட்டோம். எனது மனதில் படிந்திருந்த துயரம் மெதுவாகக் கரைந்து சென்றது. ஏரியன் ஐந்து வருடங்களாக லண்டனில் வாழ்ந்து வருகின்றான். என்னுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாகவும் கூறினான். ஆனால் என்னால் உடனடியாகப் பதில் கூற முடியவில்லை. சில நாட்கள் அவகாசம் கேட்டுள்ளேன்.”

வெலன்டினா கூறி முடித்தபொழுது நன்றாக இருட்டிவிட்டது. எங்களது உணவு மேசையில் இருந்த லெவெண்டர் வாசனை கலந்த மெழுகுவர்த்தியின் திரியினை லோரா பற்றவைத்துக் கொண்டிருந்தாள்.

“நீ துணிச்சலான பெண். நல்லதொரு முடிவினை நீ தீர்மானிக்க உன்னை வாழ்த்துகின்றேன்”, என்று வெலன்டினாவிடம் கூறி விடைபெற்றேன்.

உணவகத்திலிருந்து வெளியேறும்பொழுது மழை உடைந்து பெய்யத் தொடங்கியது. ஐந்தாவது இலக்க பஸ்ஸில் ஏறி நான்காவது தரிப்பிடத்தில் இறங்கினால் வீட்டின் முன்னால் உள்ள வீதியைச் சென்றடையலாம். ஆனால் மனதில் ஏறியிருந்த தேவையற்ற எண்ணங்களைக் கரைப்பதற்கு நான் தனிமையுடன் நடந்து செல்ல ஆசைப்பட்டேன். ஒரு கணம் இருளில் மறைந்து மழையில் கரைய விரும்பினேன். எவ்வளவு இலகுவான வாழ்க்கையைக் கடினமானதாக மாற்ற நினைத்தேன் என்பதை நினைத்துப் பார்க்கையில் எனக்கு நானே வெட்கப்பட்டேன். முகத்தில் விழுந்த மழைத் தூறல்களைக் கைகளால் விலத்தியபடி நடந்தேன். இப்படித்தான் வாழ வேண்டும் என்று எனக்கு நானே வகுத்த விதிகள் ஒவ்வொன்றையும் இருளில் வெளித்தள்ளினேன்.

புகைமூட்டத்திலிருந்து விலகி வரும் ஒளிப்புள்ளி போல மனது தெளிந்து கொண்டிருந்தது. சற்று நேரத்தில் என்னுடைய கால்சட்டையின் பாக்கட்டில் இருந்த கையடக்கத் தொலைபேசி அலறும் சத்தம் கேட்டது. நடந்து போகின்ற வழியில் மரம் ஒன்றின் கீழே நின்று தொலைபேசியை வெளியே எடுத்துப்பார்த்த பொழுது வாப்பாவிடமிருந்து ஐந்து தடவைகள் அழைப்பு வந்திருந்தது. என்னவாக இருக்குமோ என்ற பதற்றத்துடன் அவர் அனுப்பியிருந்த குரல் தகவலைச் சொடுக்கினேன். “உன்னுடைய உம்மாவுடன் சேர்ந்து இனி வாழ்க்கை நடத்த முடியாது. நான் காவத்தமுனையிலிருக்கின்ற தோட்டத்திற்குப் போய் நிம்மதியாக வாழப் போகின்றேன். பிள்ளைகளாகிய நீங்கள் யாரும் எங்களது பிரச்சினையைத் தீர்ப்பதற்காக முயற்சிப்பதுமில்லை. நீங்கள் யாருமே நல்லாயிருக்க மாட்டீர்கள்”, என்று வாப்பா சாபமிட்டிருந்தார்.

உம்மாவும் வாப்பாவும் முதுமையடைந்துவிட்டாலும் அவர்களுடைய சண்டை மட்டும் இளமைப் பொலிவுடனேயே இருந்து வருகின்றது. அவர்களுக்கிடையில் நடைபெறும் பிரச்சினைகளை நினைத்துப் பார்த்த பொழுது திடீரென்று ஒரு கத்தி குத்துப் போல் மனதை வலிக்கச் செய்தது. அதிகாலைச் சூரியன் உதிக்கும் பொழுதே அவர்களுடைய விவாதமும் தொடங்கிவிடும். இருவருக்குமே விட்டுக்கொடுப்பு என்பது எட்டாத்தூரம். உம்மாவும் வாப்பாவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதாகப் பெருமையுடன் பேசிக் கொள்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை காதல் என்பது வெறும் கட்டிலில் முடிவடையும் ஒரு சங்கதி. நிரந்தரமாகப் பிரிய வேண்டும் என்பதை ஒரு நாளாவது அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. இப்படியொரு வாழ்க்கை தேவையா என்று கேட்டால் “இந்த ஆளைப் பிரிந்தால் ஊர் என்ன சொல்லும்? மறுமையில் அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்வேன்?” இப்படியான வசனங்கள் தான் உம்மாவின் பாடுபொருளாக இன்று வரையிலும் இருந்து வருகின்றது.

ஒரு தையலையாவது தெரிந்திருந்தால் இவரை வேண்டாம் என்று சொல்லிவிடலாம் என்றும் சில வேளைகளில் உம்மா புலம்புவாள். யதார்த்தமும் அதுதான். வாப்பாவின் உழைப்புதான் அதிகாரத்தினைத் தீர்மானிக்கின்றது. ஆண் என்கின்ற அகங்காரம் நிறையவே அவரிடம் உண்டு. கழுவிய துணியைச் சுருட்டி முறுக்குவதுபோல் உம்மாவின் தலைமுடியினைச் சுருட்டி அடிக்கின்ற காட்சியைப் பார்த்து வளர்ந்த பிள்ளைகளாகிய நாங்கள் மூவருமே மூன்று தேசங்களில் இருப்பதைப் போலவே தான் எங்களுக்கிடையிலான உறவும் இருந்து வருகின்றது. எல்லாவற்றினையும் நினைத்துப் பார்க்கையில் இமைத்து நிறுத்தப் பார்த்த எத்தனத்தையும் மீறி வழிந்த கண்ணீர் மழை நீருடன் கலந்தது.

இஸ்மத்தின் அறையினுள் இருந்த அழுக்குத் துணிகளைத் துவைப்பதற்காகக் கூடையில் போட்டுக் கொண்டிருந்தேன் கையில் இருந்த புத்தகத்தினை மடித்து வைத்துவிட்டு போர்வையைச் சரி செய்தபடி தூங்குவதற்காகக் கட்டிலில் ஆயத்தமாகிக்கொண்டிருந்த அவள் என்னைக் கூர்ந்து நோக்கினாள். பின்னர் மம்மி என்பவளது வேலை எவ்வளவு கடினமானது இல்லையா மம்மி? என்று பெருமூச்சொன்றினை வெளியே தள்ளிய படி கூறினாள்.

உணர்வுகளை உள்ளே இழுக்கும் அடர் ரேகைகள் ஓடும் கண்கள் அவளுக்குள் இருந்தன. பின்னர் அவளை நெருங்கி “நிச்சயமாக, மம்மி என்பவளது வேலை கடினமானதுதான்” என்றேன்.

“டாவினுடன் இன்று பாடசாலையில் விளையாடினாயா? அவன் எப்படி இருக்கின்றான்?”, என்று கேட்டேன்.

“ஆம்” என்று தலையை அசைத்தாள் இஸ்மத். “டாவினுக்கு இன்னுமொரு டடீயும் சீக்கிரம் கிடைக்கப் போகுது. உலகத்தில் சிலருக்கு இரண்டு மம்மிக்கள் மட்டுமல்ல, இரண்டு டடீக்களும் உண்டு.” என்று கூறியபடியே இரவு விளக்கினை உயிர்ப்பித்தேன்.

இப்பொழுது பட்டாம் பூச்சியின் நிழலைப் போன்று சிறியதொரு நம்பிக்கை இஸ்மத்தின் மனதில் முளைவிட்டிருக்கக்கூடும் என்று எனது மனது கூறிக்கொண்டேயிருந்தது. அவள் கன்னத்தில் நண்டுகள் ஆற்றுமணலில் உருவாக்குவது போலக் குழிகள் தோன்ற சிரித்தாள். பின்னர் பற்றி எறிந்த அந்த மெல்லிய வெளிச்சத்தினை அவளது இமைகள் அணைத்துக்கொண்டன.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer