சக்கரங்களில் எப்போது எது எந்தத் திசையில் கழண்டுகொள்ளுமெனத் தெரியாது யார் எப்போது எதற்காக எதில் விஷத்தைக் கலந்துவிடுவார்களெனத் தெரியாது அடுத்த அடியில் எந்தச் சர்ப்பம் சீறிக்கொண்டு நிற்குமெனத் தெரியாது எந்தக் காரணத்திற்காக எனது விரிப்புகள் பறிக்கப்படுமெனத் தெரியாது அது ஏன் வழங்கப்பட்டது என்பதும் எனக்குத் தெரியாது ஒரு நொடி அடுத்த நொடியில் மோதிக்கொள்வதற்குள் கடவுளிடம் எத்தனை முறையீடுகளைச் சொல்லி விலக்கு கேட்பது.
ஒவ்வொன்றிலும் மூழ்குவதற்கு எவ்வளவு தேவையோ அதிலிருந்து சமவெளிகளுக்குத் திரும்பவும் அவ்வளவே தேவையாயிருக்கிறது பால்நிறப் பற்களின் புன்னகைகள் அனைத்துமே வெண்மையானவை அல்ல அப்படியொரு சிரிப்பும் அதேநிறப் பற்களும் எனக்குமிருந்தன புன்னகைக்கும் சிரிப்பிற்குமான இடைவெளி பயங்கரமானது அந்தப் பயங்கரத்தின் ஊடாகதான் இரண்டின் மரணத்தையும் அறிய நேர்கிறது ஆக்கிரமிப்பு முழுதாகவே நிகழ்ந்துவிட்டதெனப் புரியவரும்போது அறிமுகம் வேண்டி நீட்டப்படும் உள்ளங்கைகளும் அதே இருட்குகைகளுக்கான வழியவே காட்டுகின்றன கண்ணிமைக்காமல் ஒரு நிமிடம் பார்க்கிறோம் எதிரே நிற்பவரின் முகத்தினை முதுகுக்குப் பின்னால் விரிந்துசெல்லும் பாதையினை அதில் உறைந்திருக்கும் நட்சத்திர பொறியினை தலைக்குப் பின்னால் மீண்டும் எழும்ப இருக்கும் ஒரு கரியநிற பறவையினை.
மாமிசம் கேட்கும் ஓநாயே ஒரு நிமிடம் நண்பனாக இரு அது மட்டும்தான் உன்னால் முடியும் அவ்வளவு தூரம்தான் என்னாலும் முடியும் மொழியின் அகர வரிசைகளைக் கண்டறிவதற்குள் அதனால் நடக்கும் அனைத்து வன்முறைகளும் தொண்ணூறு சதவீதம் முடிந்துவிடுகின்றன மின்மினிகளைச் சிறைபிடிக்கும் நேரமெல்லாம் அவை என் உள்ளங்கைகளில் குட்டி வௌவாலாக மாறிவிடுகின்றன தாராளமாகத் தேடிக்கொள்ளுங்கள் நான் போதைப் பொருட்களைப் பயன்படுத்தவில்லை சட்டைப் பையிலிருந்து நீங்களே எடுத்து இன்னும் சில பத்தாண்டுகள் என் ஏணியைச் சரிக்க எண்ணினால் மறுவார்த்தை பேசாமல் நான் கூடவே வருவேன் நிர்வாணத்தில் மச்சங்களைத் தேடி எனக்குச் சலித்துவிட்டது கைகளை உயர்த்தி வானத்தைக் கேட்கிறேன் கைகளை இறக்கி மீண்டும் திணிக்கிறார்கள் ஒரு பூமிப்பந்தை பூமியும் வேண்டாம் கைகளும் வேண்டாம் கடவுள்கள் உறையும் வானமும் வேண்டாம் கண்களை மூடிக்கொண்டு பலிபீடத்தில் தலையைக் கொடுக்க தயார் அதுவே என் கடைசித் தலையாக இருந்தால் மட்டும் போதும்.
நலம் விசாரிக்கும் போது உன் கண்களில் பசியுடனான அந்தப் புலியைப் பார்த்தேன் வேட்டையாட அவ்வளவு தயார் நிலையில் இருந்தது அதன் பூரிப்பும் மதமதப்பும் யாரையும் எளிதாக வீழ்த்திவிடும்தான் எனினும் எச்சரிக்கை நண்பா அதனுடன் ஒட்டிப்பிறந்த மற்றொரு புலி அவ்வளவு சீக்கிரத்தில் உறக்கத்திலிருந்து எழுந்திருக்காதெனினும் அதற்கும் குரோதத்தில் ஒளிரும் இரண்டு சிவப்புநிற கண்கள் நிச்சயம் உண்டு.