பா.ரஞ்சித் அட்டகத்தியிலிருந்து சார்பட்டா பரம்பரை வரைக்கும் ஒரு வெற்றிகரமான வெகுசன திரைப்பட இயக்குனர். வெகுசனத்தின் மொழியில் விளிம்புநிலையினர் பிரச்சினைகளைப் பேசியவர். ரஞ்சித்தின் வருகைக்குப் பின்னர் தமிழ் வெகுசன திரைப்படச் சூழலில் விளிம்புநிலையினர் பற்றிப் பேசுவதற்குப் புதிய சந்தை உருவாகியுள்ளது என்பதே மகிழ்ச்சிக்குரியது.
மேலும், தமிழில் அதுவரை சுயாதீனப்படங்களிலும் ஆவணப்படங்களிலும் மட்டுமே பேசி விவாதித்து வந்த மாந்தர்களின் குரல்களை அழகியலுடனும் சுயமரியாதையுடனும் வெகுசனத்தளத்திற்குக் கொண்டுசென்றவர்.
வெகுசனத்தளமென்பது மையநீரோட்டத்துடன் தொடர்புடையது. ஆவணப்படங்களும் சுயாதீனப் படங்களும் மிகக் குறைந்த அளவிலான பார்வையாளர்களைக் கொண்டது. இவற்றிற்கான பார்வையாளர்கள் முன்னமே அரசியல் விழிப்புப் பெற்றவர்களாகவும் பால்புதுமையினர் பற்றிய விவாதங்களிலும் இருப்பர். வெகுசனத் தளப் பார்வையாளர்கள் அவ்வாறில்லை பெரும் மந்தையைப் போன்றது. வெகுசன ரசனை ஒழுங்கின்மையைப் போலத்தோற்றமளித்தாலும் தன்னளவில் ஒரு ஒழுங்கைக் கொண்டே இயங்குகிறது. அதனுடன் பேசுவதற்கென ஒரு மொழி இருக்கிறது. அம்மொழியில்தான் வெகுசன கலைகளைப் பேசுகின்றன.
வெகுசன திரைப்படங்கள் தன்னகத்தே வைத்திருக்கும் திரைக்கதைக்கான விதிமுறைகள், நடிகர் நடிகையர் தேர்வு, அதன் இசை வடிவம், காட்சிகளின் ஊடான பாடல்கள், விளம்பர உத்தி போன்றவையெல்லாம் அம்மொழியைச் சார்ந்தவை. இவ்வாறு கழுத்தை நெறிக்கும் காரணிகளுடனே ஒரு திரைப்படம் வெளியாகிறது. ஆக, ஒரு திரைப்படத்தைத் தீர்மானிப்பதில் வெகுசனத்தின் பங்கே பிரதானமானது. வெகுசன ரசனையைப் புரிந்து கொள்வதும் அதன் கவனத்தைக் கோரும் படங்களும் திரைக்கலைஞர்களின் பிரதான பணி. இவ்வாறான எந்தச் சிக்கல்களும் சுயாதீன திரைப்படக் கலைஞனுக்கோ ஆவணப்படக் கலைஞனுக்கோ இல்லை. அவனுக்கான சந்தை வேறு, அவனுக்கான பார்வையாளர்கள் வேறு. அவர்களின் படைப்புலகம் வேறானது. அவை வேறுவகையான விதிமுறைகளுடன் மாற்று அழகியலை பேசுபவையாக இருக்கின்றன.
அடிப்படையாக எல்லாக் கலை வெளிப்பாடுகளைப் படைக்கும்போது கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி “இது யாருக்காகச் செய்யப் படுகிறது?” என்பதே. அவ்வாறு பார்க்கையில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ வெகுசனத்தை மனதில் கொண்டு உருவானதில்லை என்றே தோன்றுகிறது. காரணம் அதன் திரைமொழியில் காணப்படும் குழப்பம்.
படம் துவங்கும்போது நாடகமாக்கல் பற்றிய புனைவு - ஆவணப்படமாக நகர்ந்தது. ஆவணப்படத்திற்கான தன்மைகளைக்கொண்டு சாதி, பால்புதுமையினர் உரையாடல்களைப் பேசுகிறது. சற்று நேரத்தில் புனைவாக முயற்சிக்கிறது. இன்னும் நேரம் சென்றபோது நாடகமாகவே நகர்கிறது. அதற்கு அப்பால் பிரச்சார மேடையாக நகர்ந்து இறுதியில் குழப்பமே அதன் மொழி என விடைபெற்றுக் கொண்டது. வெகுசன திரைப்படத்திற்கான மொழியுமின்றி, சுயாதீன படத்திற்கான மொழியுமின்றித் தன்னைத் தானே குழப்பிக்கொண்டிருக்கிறது.
பா.ரஞ்சித் தன்னளவில் வெற்றிகரமாகக் கையாண்ட வெகுசன திரைமொழியின் மறதியில் கட்டமைந்திருக்கிறது இதன் திரைக்கதை. பார்வையாளர்களுக்கு அறிவு புகட்டும் பாணியிலான உரையாடல்கள், சமூகப் பிரச்சினைகளை இருமைகளாக மட்டுமே பார்க்கத் தூண்டும் வழக்கமான (வழக்கமானதல்ல என நம்ப வைப்பதற்காகப் பால் புதுமையினர் கதாப்பாத்திரங்கள் இணைக்கப்பட்டுள்ளன) கதாப்பாத்திர சித்தரிப்புகள், துண்டு துண்டான திரைக்கதைகளின் நெகிழித்தனமான ஒருங்கிணைப்பு சுயாதீன படப் பார்வையாளர்கள் கேட்ட, பார்த்த, விவாதித்தவற்றை மீண்டும் மீண்டும் கூறும்போது வரும் சலிப்பே இப்படம். படமும் வெகுசனத்தை மனதில் கொள்ளவில்லை என்பதால் இங்குப் படம் சுயாதீன படத்தை விரும்பும் பார்வையாளர்களுக்கானது என்றே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. படம் சுயாதீனத்தன்மையும் பெறவில்லை என்பதே அதிருப்தி. உணர்வு அடிப்படையிலும் திரைக்கதை அடிப்படையிலும் படம் ஒரு தொடர்ச்சியின்மையிலேயே நகர்கிறது. வசனங்களில் காணப்படும் செயற்கைத்தன்மை மைய கதாப்பாத்திரத்தின் மீதான பார்வையாளரின் நெருக்கத்தைக் குறைத்துவிடுகிறது.
திரைப்படம் பார்வையாளனுடன் உரையாட ஏதுமின்றித் தனக்குத் தானே பேசிக்கொள்கிறது. பார்வையாளர்களுக்கு அறிவுப் புகட்டவேண்டிய பெரும் கடமை தனக்கிருப்பதாகப் படம் காட்டிக் கொள்கிறது. அதனால், திரைப்படம் தன்னை மேன்மை பொருந்தியதாகக் கருதிக்கொண்டு எதிரிலுள்ள பார்வையாளனை அறிவற்றவனாக்குகிறது.
ரெனே பாத்திரம் தன்னுள் ஏறிக்கொண்ட பக்குவமானவள் என்ற சோடனைகள் எதிரிலுள்ள ஏனைய அனைவரையும் குறை அறிவுடையவர்களாக அரசியல் சரி தன்மை தெரியாதவர்கள் என்பதாகக் கருதி அறிவுரைகளை வாரியிரைக்கிறது. இதுவே, ரெனே கதாப்பாத்திரம் பார்வையாளர்களை எரிச்சலுறச் செய்வதற்கான பிரதான காரணம்.
நாடகத்தைத் தடுக்கவரும் நபரும் நாடக நடிகரைப் போல வேடமிட்டு வந்து நிகழ்த்திவிட்டு செல்வதைப் பார்த்ததும் அவரும் நாடக குழு நபர் என நினைக்கையில், பின்னர் அவர் ஒரு அடிப்படைவாத குழுவைச் சேர்ந்தவர் என்பது தெரிகிறது. அந்தக் கதாப்பாத்திரம் கதையின் ஓட்டத்தில் இல்லாமல் திடீரெனக் கதையை முடித்து வைப்பதற்குப் பயன்படுத்துவது என்பது அபத்தம். இன்னும் ஒரு படி சென்று அர்ஜூனைத் திருத்தியது போல எதிர்பாராத திருப்பமாக அவரையும் பேசித் திருத்தியிருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும். திரைப்படம் நெடுந்தொடராகிவிடும் என்ற காரணத்தால் அம்முடிவை இயக்குனர் கைவிட்டிருப்பார் என நினைக்கிறேன்.
புதிய தலைமுறை லிபரல் அரசியல் சிந்தனைக் கொண்ட இளைஞன் காதலி ரெனேயுடன் இளையராஜா பாடல் பாடியதற்காகக் கோபப்பட்டான் என்பதே ‘அவன் போலியாகச் சாதி ஒழிப்பு பேசுபவன்’ என்பதை நிறுவ போதுமானது எனச் சித்தரித்திருப்பது எத்தனை வேடிக்கையானது.
இந்தப் படத்தில் ஒரு சுவாரஸ்யமான நல்லவிசயம் அர்ஜுன் ஒரு பட்டியலினப் பெண்ணைக் காதலிப்பதை தெரிந்த அவனின் அம்மா அவனுக்கு ஏதோ பேய் புகுந்து பேசவைக்கிறது என்கிறாள். இது ஒரு பிரமாதமான உற்றுநோக்கல். தமிழ் சமூக நெடுங் காலமாகவே காதல் உணர்வை பேய் பிடித்திருப்பதாகவே (முருகு அணங்கியதாக) கருதி வருகிறது. மரபான சமூகங்களின் காதல் பற்றி யோசனையைச் சிறு கீற்றில் காட்டிவிட்டு சென்றதே பிரமாதமானது.
‘நட்சத்திரம் நகர்கிறது’ சாதிபற்றிய உரையாடலுக்கும் மாற்றுப் பாலுறவு பற்றிய உரையாடலுக்கும் பயன்படுத்தியிருப்பது நாடகக் கலைஞர்களையும் நாடக ஒத்திகையையும். கலைஞர்கள் என்பவர்களே சமூகத்தின் விளிம்பில் இருப்பவர்கள். சமூகம் தன்பால் கொண்டிருக்கும் விழுமியங்களுக்கு அப்பால் தன்னை நிறுத்திக் கொள்பவர்கள் அல்லது நிறுத்திக் கொள்ளத் தகவமைக்கப்பட்டவர்கள்.
ஒரு சமூக மனிதனுக்கான விதிமுறைகளில் இருந்து சற்றே விலகலான தன்மையைக் கலைஞர்கள் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக ஒரு சமூக மனிதன் பாலினத்திற்கென வரையறுக்கப்பட்ட ஆடைகளை மட்டுமே பொதுவெளியில் உடுத்த இயலும் எனும்போது சடங்கு மற்றும் கலை சார்ந்தவர்களுக்கு அதில் ஒரு தற்காலிக விடுப்புள்ளது.
ஆண் பெண்ணாகவும் பெண் ஆணாகவும் உடையணியும் சாத்தியம் கொண்டவர்கள். ஆண் பெண்ணாகப் பாவனை செய்யும் சாத்தியம் பெற்றவர்கள். பெண் வேடக் கலைஞரின் பாவனைகள் சராசரி ஆண் போன்றதல்ல. அதனால், கலைஞனின் பால் ஒழுக்கம் பற்றிப் பேசுவது ஒட்டு மொத்த சமூகத்தைப் பேசுவதாகிவிடாது என்பதாகச் சமூக மனிதன் கருதுகிறான்.
‘கூத்தாடி வீட்டில் பெண்ணை எடுக்காதே’ என்று கூறும் பழமொழிகள் உங்கள் நினைவிற்கு வரட்டும். அதனால் கலைஞர்கள் முறையற்ற பால் ஒழுங்குடன் இருப்பதாகவே சமூகம் கருதுகிறது. அவ்வாறானக் கருத்தையே திரைப்படம் சமூகத்திற்கு பால்புதுமையினர் பற்றிப் பேச எடுத்துக்கொண்டு இருப்பது எந்த அதிர்வையும் ஏற்படுத்த போவதில்லை. மாறாகச் சமூகம், ‘கலைஞர்கள் அப்படியானவர்கள் என்று நான் முன்னமே சொல்யிருக்கிறேன்’ என்று பெருமை பேசிக் கொள்ளும்.
தமிழ் சினிமாவில் பால்புதுமையினர் பற்றியும் மாற்றுப் பாலுறவுகள் பற்றிய திரைப்படங்கள் குறைவுதான் அதற்காக நட்சத்திரம் நகர்கிறது அதனைப் பூர்த்திச் செய்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. எளிய மனிதர்களிடம் காணப்படும் மாற்று பால்ஒழுக்கம் பற்றிய பிரத்யேக வாழ்வையோ அழகியலையோ காட்ட முயற்சிக்கவில்லை. மாறாக, கலைஞர்கள் விசித்திரமான பாலுறவு பழக்கம் கொண்டவர்கள் எனக் காட்டியிருக்கிறது. மேலும், ஒரே படத்தில் அரசியல் அத்தனையையும் பேசிவிட்ட திருப்தியைப் படம் அடைந்திருக்கிறது.
வழக்கமாகப் பா.ரஞ்சித் படங்கள் சுயமரியாதைத் தன்மைகொண்டதாக இருக்கும். அதற்குக் காரணம் அதன் புனைவாக்கத் தன்மையில் விளிம்புநிலை சமூகம் பற்றிய நேர்மறையான, சமூகக் கட்டமைப்புக் குறித்தான பிரக்ஞையைக் கொண்டிருப்பது.
நாம் ஒரு குறிப்பிட்ட சமூகம் பற்றிய எந்தச் சொல்லாடலை வளர்த்தெடுக்கிறோமோ அதுவே பின்னர் யதார்த்தமாகச் சமூகத்தில் நிலவும். வழக்கமாக விளிம்பு நிலையினரின் இருப்பிடத்தை(சேரிகளை) காட்சிப்படுத்தும் திரைப்படங்கள் (அசுத்தமானவர்கள், ரவுடிகள், ஒழுக்கம் குறைவானவர்கள் வாழுமிடம்), பா.ரஞ்சித்தின் அட்டகத்தி முதல் சார்ப்பேட்டா வரை காட்டப்பட்ட இருப்பிடத்திற்குமான (எல்லா இருப்பிடங்களைப் போலவும் சண்டைச் சச்சரவுகளுடனும் அவர்களுக்கே உண்டான வாழ்க்கை அழகியலுடன் வாழும் மனிதர்களின் இடம்) வித்தியாசம், கதைமாந்தர் தான் அவமானப்படும் தருணங்களில் காட்டும் எதிர்வினை போன்ற காரணிகளே இந்தச் சுயமரியாதைத் தன்மையைக் கொண்டு வருகிறதே தவிர வசனங்களினால் மட்டுமே அல்ல.
இந்தக் காரணிகள்தான் வளர்த்தெடுக்கவேண்டிய சொல்லாடல்களின் சாரமாக இருக்கிறது. ஏனெனில் சமூக மையநீரோட்டத்துடன் இணைவதற்கே இச்சொல்லாடல் முயற்சிக்கின்றன.
‘நட்சத்திரம் நகர்கிறது’ தன்னுள் கொண்டிருக்கும் ஆவணத்தன்மை இந்தச் சுயமரியாதை காரணியைத் தின்றுவிடுகிறது. ஏனெனில், ஆவணங்கள் யதார்த்தத்தின் மீது கட்டமைவதாகக் காட்டிக்கொள்ளும். யதார்த்தத்தைப் பேசும் படங்கள் விளிம்புநிலையினரை குறுகச் செய்கிறது.
யதார்த்தத்தைத் திரை அப்படியே காட்டுவதாக எண்ணும் திரைப்படங்கள் (மதுரைக்காரர்கள் எப்போதும் கையில் அருவாளுடன் அலைபவர்கள்) புதிய சொல்லாடல்களை உற்பத்திச் செய்யவிடாது தடுக்கின்றன. இதனால், நம்பிக்கையை ஏற்படுத்தும் லட்சியவாத சொல்லாடலை வளர்த்தெடுக்கும் சாத்தியம் குறைவு. இங்கு யதார்த்தம் எனச் சொல்லப்படுவதும் தொடர் விவாதங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட பாதிப் பொய்கள் (பாதி உண்மைகள்).
புதிய அலை இயக்குனர்களான நாகராஜ் மஞ்சுளே, பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ் போன்றவர்கள் லட்சியவாத சொல்லாடல்களைப் பேசியதன் மூலமாகவும் வெகுசன திரைமொழியை அதற்குரிய சாத்தியம் கொண்டது எனக் காட்டியதாலும் பெரிதும் விரும்பப்படுகின்றன.
ஆனால், விளிம்புநிலை சமூகங்களின் சுயமரியாதையைக் கொல்லும் ஆவணங்களைப் பேசும் படங்களால் ஒரு போதும் இலட்சியவாதத் தன்மையைத் தர இயலாது. மேலும் மைய நீரோட்டத்துடன் இணைய விரும்பாத சொல்லாடல்கள் இனவாதத்தின் சாயலையே பெறும்.