The Fragrance of Guava
Conversations with Gabriel Garcia Marquez by Plinio Apuleyo Mendosa

Plinio Apuleyo Mendosa
மொழியாக்கம்: பிரம்மராஜன்

பகிரு

7. Waiting

Plinio Apuleyo Mendosa

(மார்க்வெஸ்-மென்டோசா உரையாடல் நூலில் சில அத்தியாயங்களில் உரையாடல்கள் இல்லை என்பது முக்கியத் தகவல். அதை மென்டோசாவே தன் சொந்த விவரணையில் எழுதியிருக்கிறார்.)

7. காத்திருப்பு

லினோடைப் யந்திரங்கள் நிற்பட்டிருக்கவும்தரைத் தளத்திலிருந்த ரோட்டரி அச்சு இயந்திரங்களிலிருந்து துயரமிகு மூச்சுத்திணறலும் தேம்புதலும் உயர்ந்தெழுந்துகொண்டிருந்த சமயத்தில், இரவு அடுத்த இரவாகப் பரன்கியாவிலுள்ள எல் ஹெரால் டோவின் 1 வெறுமையான எடிட்டோரியல் அலுவலகங்களில் பணி புரிந்தவாறு, அவர் அந்த முதல் நாவலை ஒரே மூச்சில், ஒரு மௌனமான வெறியில்எழுதினார். காலி டெஸ்க்குகளின் மீதாகக் கூரையிலிருந்து காற்றாடிகள் வெப்பத்தைச் சமாதானப்படுத்த பயனற்று முயன்றவாறு சுழன்றன. க்ரீமன் தெருவிலிருந்த2 மதுபான விடுதிகளிலிருந்து உரத்த, கரகரப்பான இசை காற்றில் மிதந்து வந்தது. களைத்துப் போய் ஆனால் பளிச்சென்ற விழிப்புடன், மெக் கோந்தோவின் பாத்திரங்களும் படிமங்களும் அவரதுதலையில் இன்னும் வேகமாய்ச் சுழன்றுகொண்டிருக்க, கேப்ரியல் தட்டச்சு யந்திரத்திலிருந்து எழுவதற்கு ஏறத்தாழ விடியற்காலம் ஆகியிருக்கும். புதிய தாய் எழுதிய பக்கங்களை அவர் ஒரு தோல் உறையில் போட்டுவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியே வருவார். வெளியே, அவர் சதுப்பு நிலங்களின் வெதுவெதுப்பான வாசனையிலும் பழக்கத்திற்கு ஆளான வகையில் நகரத்தில் ஊடுருவிப் பரவி யிருக்கும் அழுகிய பழங்களின் வாசனையை சுவாசிப் பார். ஏதோ ஒரு மதுபான விடுதியின் வாசலுக்குள் ஒரு குடிகாரன் தடுமாறிச் செல்வான். கைப்பிரதிகளைத் தனது கைக்கடியில் வைத்துக்கொண்டு, கேப்ரியல் இரவின் அந்த நேரத்தில் பிச்சைக்காரர்கள் மற்றும் குப்பைகளைத் தவிர அது வெறிச்சோடியிருக்கும் பிளாஸா சான் நிக்கொலஸை3 கடந்து,நோட்டரிகள் இருந்த அந்தத் தெருவின் கோடிக்குவேசியர் ‘விடுதிக்குச்’ செல்வார். ஒவ்வொருஇரவும், ஒன்றரை பெசோவுக்கு ஒரு வித்தியாசமான அறை (அல்லது இன்னும் சரியாகச் சொல்லப் போனால், வேறு வேறு காம்ப் கட்டிலும் மெல்லிய அட்டைப் பிரிப்பாலான சுவர்களும்) அவருக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

அந்தச் சூழ்நிலையில்தான், அவரது முதல் நாவ லான இலைப்புயல் பிறந்தது. அது மெக்கோந்தோ வின் ஏக்கம் மற்றும் பாழ்பட்டநிலை அனைத்தையும் ஏற்கனவே வெளிப்படுத்திய சக்தி வாய்ந்த புத்தகமாக இருந்தது. அப்புறம் லத்தீன் அமெரிக்காவில் அவருக்குத் தகுதியான வகையில் ஒரு பெயரை ஏற்படுத்தியிருக்கவும் வேண்டும். ஆனால் அது நிகழ்ந்தவிதம் இப்படி அல்ல. அங்கீகாரம், புகழ், அல்லது ஒரு நல்ல புத்தகத்தை - அல்லது அவரது விஷயத்தில் நான்கு நல்ல புத்தகங்கள் - எழுதியபோது ஒவ்வொரு எழுத்தாளரும் எதிர்பார்க்கும் வெகுமதி என்று நீங்கள் அழைக்க விரும்பும் எதுவும், மிகப்பல வருடங்கள் கழித்து, முதலில் போனஸ் அயர்ஸிலும், பிறகு லத்தீன் அமெரிக்காவிலும், அப்புறம் இறுதியாக உலகின் பிற பகுதிகளின் ஊடாகவும் அவரது ஐந்தாவது புத்தகமான ஒரு நூறு ஆண்டுகளின் தனிமை, அவரே ஆச்சரியப்படும்படி சூடான கேக்குகள் போல விற்கத் தொடங்கியது வரைக்கும் வரவில்லை.

இதற்கிடைப்பட்ட காலத்தில் காத்திருப்பு  நீண்ட தாகவும்  கடினமானதாகவும் இருந்தது. அவர் பொறுமையுடன் காத்திருந்தார், ஒருவேளை ஒரு வகையான வெறுப்புடன் இருக்கலாம், இருப்பினும் தவிர்க்க இயலாத பிரச்சினைகளாலும் சந்தேகங்களாலும்அவர் முற்றுகையிடப்பட்டிருந்தார்.

இலைப்புயல் வெளியிடப்படுவதற்கு முன் ஐந்து வருடங்கள் கடந்திருந்தன. அவர் தன் புத்தகத்தை அளித்த ஒரு சில வெளியீட்டாளர்கள் தொடக்கத்தில் அதில் எந்தவிதமான ஈடுபாடும் காட்டவில்லை. ஸ்பானிய விமர்சகரும், எடிட்டோரியல் லோசாதா4வின் ஆலோசகரில் ஒருவருமான கில்லர்மோ த டோரே 5, ஒருவகையான கவித்துவ ஈர்ப்பினைத் தவிர, அதை ஒரு நாவல் என்று சிபாரிசு செய்யும் படியான எதையும் அவர் அதில் காணவில்லை என்ற ஒரு சுரீரென்ற குறிப்புடன் நிராகரித்தார். தவிர ஒரு பொறுப்பினை தனதாக எடுத்துக்கொண்டு அதைஎழுதிய எழுத்தாளர் வேறு ஒரு தொழிலை மேற்கொள்ளுமாறு கடமைப் பற்றுடன் சிபாரிசும் செய் தார். இந்தச் சமயத்தில், பொகோட்டோ செய்தித்தாளான எல் எஸ்பேக்டேடரில்6 மார்க்வெஸ் ஒருநிருபராகப் பணியாற்றத் தொடங்கியிருக்கவும்  இலைப்புயல் நாவலை தன் சொந்த செலவில் நண்பர்களின் உதவியுடன் பொகோட்டாவின் ஒரு சுமாரான அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடவும் செய்தார்.

உள்ளூர் புத்தக மதிப்புரைகள் நன்றாக அமைந்திருந்த போதிலும், எல் எஸ்பெக்டேடரில் கேப்ரியல் எழுதிக்கொண்டிருந்த கட்டுரைகள் பெற்றதைவிடக் குறைவான கவனத்தையே அது பெற்றது. அந்தச் செய்தித்தாளின் பதிப்புகளில் அவரது ‘கப்பல் தகர் வடைந்த கடலோடியின் பயணம்’7, அல்லது சைக்கிள் ஓட்டும் சேம்ப்பியனின் வாழ்க்கை பற்றிய தொடர் போன்றவை உடனடியாக விற்றுத் தீர்ந்தன.

ஆக ‘எல் எஸ்பெக்டேடர்’ அவரை ஐரோப்பா விற்குத் தங்களது நிருபராக அனுப்பி வைத்த அச்சமயத்தில் கேப்ரியல் கொலம்பியாவில் ஒரு பிரபல மான பத்திரிகைக்காரராக இருந்தார், ஆனால் அவர்இன்னும் அறியப்படாத எழுத்தாளராகவே இருந் தார். 1955ஆம் ஆண்டின் குளிர்காலத்தின் போது அவர் சென்று சேர்ந்த குஸாஸ் சாலை 8 யிலிருந்த ஹோட்டல் டி பிளான்டர்ஸ் 9 விடுதியின் பெண் உரிமையாளரைப் பொறுத்தவரை கேப்ரியல் வெறும்‘ஏழாவது மாடியிலிருந்த பத்திரிகைக்காரர்’ 10 என்ப தாகவே இருந்தார் - ஹோட்டல் உரிமையாளர் எப் பொழுதெல்லாம் கேப்ரியலின் புகைப்படத்தைப் பத்திரிகைகளில் பார்க்கிறாரோ அப்பொழுதெல்லாம்  இன்னும்  இருக்கிறார்.

இந்தச் சமயத்தில்தான் நான் அவரைச் சந்தித்தேன்.  ரிஷப ராசி உச்சநிலையில் அவரது வாழ்க்கையைப் பிடித்திருந்தது இப்போது, ஆனால் அந்த நாட்களில் தனது உள்ளுணர்வின் ராடாரால் வழிநடத்தப்பட்ட ஒரு பாதுகாப்பற்ற மீனராசிக்காரராய் இருந்தார். அவர் ஒல்லியாகவும் ஒரு அல்ஜீரிய தேசத்தவரைப் போலவுமிருந்தார் - அது உடனடியாக அவர் மீது போலீசாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தவும் அல்ஜீரி யர்களையே கூடக் குழப்பவும் செய்தது. புனித மிஷல்அகலநெடுவீதியின் 11 நடுவில் அவரை நிறுத்தி அவரி டம் அரேபிய மொழியில் உரையாடுவதை வழக்கமாகக்கொண்டிருந்தார்கள். மூடுபனியும் கல்பாவப் பட்ட பெருங்கடலாகவும் இருந்ததான அந்த பாரிஸ்நகரில், மொழியைப் பற்றிய எந்த அறிதலுமற்று, தன் திசையைக் கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருந்த போது நாள் ஒன்றுக்கு மூன்று பாக்கெட் சிகரெட்டு கள் வீதம் பிடிக்கும் பழக்கத்தில் இருந்தார். அல்ஜீரி யாவில் அப்பொழுது போர்க்காலமாக இருந்தது, பிரேஸன்ஸின் 12 முதல் பாடல்கள் வந்திருந்த, மெட் ரோக்களிலும் நுழைவுவழிகளிலும் காதலர்கள் வெறித்தனமாய் முத்தமிட்டுக்கொண்டிருந்த காலமாக இருந்தது. புதாபெஸ்ட்டுக்கு முன்பு, அந்தநாட்களில் நாங்கள் ஒரு ‘வெஸ்ட்டர்ன்’ 13 திரைப்படத்தைப் பார்ப்பதைப்போல அரசியல் உலகைப் பார்த்தோம். நல்லவர்கள் சோஷலிஸத்தின் ஒரு பக்கமும், கெட்டவர்கள் இன்னொரு பக்கமுமிருப்பதை யும் பார்த்தோம்.

நீண்ட காலத்திற்கு முன்பல்ல, நாங்கள் குஜாஸ் 14 சாலையில் அவர் வசித்துவந்த மோட்டு மச்சறைக்குத் திரும்பச் சென்றது. சோர்போர்ன் கடிகாரம் இன்னும் மணி நேரத்தை அடித்து அறிவிக்கும் ஆனால் அங்கே ஆர்ட்டிசோக் 15 விற்பவர்கள் இனியும் காலைத் தெருக் களைத் தம் துயரார்ந்த கூவல்களால் நிறைக்காதலத்தீன் குடியிருப்புப் பகுதியை நோக்கி ஜன்னல் திறக்கிறது.

கேப்ரியல் இந்த அறையில், சூடாக்கும் ரேடி யேட்டருக்கு சாய்த்து தன் முழங்கால்களை வைத்த படி அமர்வார், அவரது காதலி மெர்ஸிடஸின் புகைப்படம் கண்பார்வை உயரத்தில் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கிறது, ஒவ்வொரு இரவும் விடியும் வரை எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் எழுதத் தொடங்கிய அந்த நாவல் பிறகு தீவினைக் காலத்தில் 16 என்றாயிற்று, ஆனால் தொடங்கிய சமயத் திலேயே அவர் அதை நிறுத்த வேண்டிதாயிற்று.ஒரு பாத்திரம், தன் உள்நாட்டுப் போர் ஓய்வூதியத்தொகைக்காகப் பயனற்று காத்துக்கொண்டிருந்த ஒரு வயோதிகக் கர்னல், தனக்கென இன்னும் கூடுத லான இடத்தைத் தரும் பொருட்டு இடையீடு செய் தார் - ஒரு புத்தகம் (அளவுக்கு). கேப்ரியல்அந்தப் புத்தகத்தை எழுதினார். கர்னலுக்கு யாரும் எழுதுவதில்லை நாவலை தீவினைக்காலத்தில் நாவலுக்கான வழியைச் சரி செய்யும் பொருட்டுப்பாதியும், அவரது தினசரி பதற்றங்களை இலக்கியத்தின் வழியாகப் பேயோட்டுவதற்காகவும் பாதியும் எழுதினார். அவரது புத்தகத்தில் உள்ள பாத்திரத்தைப் போல் அவரது அடுத்த நேர உணவுஎங்கிருந்து வருகிறது என்பதை என்றுமே அறியாதிருந்தார். அவருமே கூட எப்பொழுதும் ஒருகடிதத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தார், அது என் றுமே வந்து சேராதிருந்த, பணத்துடன் கூடிய ஒரு கடிதம்.

ஈக்கோல்ஸ் 17 தெருவிலிருந்த ஒரு கபேயில் நாங் கள் சேர்ந்து வாசித்த லா மாண்  18 என்ற செய்தித் தாளின் ஒரு மூன்று வரி செய்தியின் மூலமாய் அவரது பணப்பிரச்சினைகள் தொடங்கின - கொலம்பியாவில் ஆட்சியில் இருந்த சர்வாதிகாரியான ரோஹாஸ் பினிய்யா 19 கேப்ரியலின் செய்திப் பத்திரிகையான ‘எல் எஸ்பெக்டேடரை’ மூடிவிட்டிருந்தார். ‘அது அவ்வளவு மோசமாக இருக்காது’ என்றார் கேப்ரியல். ஆனால், நிஜத்தில் அது அப்படித்தான் இருந்தது. அவ ரது கடிதங்களுடன் காசோலைகள் வருவது நின்றுவிட்டது. மேலும் ஒரு மாதத்திற்குப் பிறகு அவரால் ஹோட்டலுக்குப் பணம் தர இயலவில்லை.பிரேஸன்ஸ் தொடர்ந்து தன் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார், இளம் காதலர்கள் மெட்ரோக்களில் தொடர்ந்து முத்தமிட்டுக்கொண்டார்கள், ஆனால் பாரிஸ் அவருக்கு அதே பாரிஸாக இருக்க வில்லை. சூடான உணவும் நெருப்பின் அருகில் ஓரிடமும் ஒருவருக்கு எண்ணத் துணியவியலாத அற்புதங்களாக ஆன, பல்வேறு லத்தீன் அமெரிக்கர்கள் அறிந்திருந்ததுபோல, ஒரு கீழ்த்தரமான, குளிரில் உறையும் அறைகளையும்  கிழிந்த குளிராடைகளை யும்  கொண்ட  கடினமான   நகரமாக   ஆனது.

பரன்கியாவில் அவரது வறுமை காட்சித் தன்மையான ஒரு பக்கத்தினைக்கொண்டிருந்தது. மேலும் எப்படியிருந்த போதிலும் ஒப்புநோக்கக் கூடியதாய் இருந்தது - அவருக்கு எல்லா இடங்களிலும் நண்பர்கள் இருந்தனர், அவருடைய ஹோட்டலுக்கு அந்த வேசியர் மற்றும் காவலாளியின் ஆச்சரியத்திற்குள்ளாகும்படி கவர்னரே கூட ஒரு காரை அனுப்பி வைப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தார். கரீபியன் பிரதேசம் மனிதத்தன்மை மிக்கது. முதுசொல் சொல் வது போல் ‘இரண்டு பேர் சாப்பிடும் இடத்தில் மூவராலும் சாப்பிட இயலும்’. இதற்கு மாறாகப் பாரிஸ்வறுமைக்குத் தன் இதயத்தைக் கடினமாக்கிக் கொண்டுவிடுகிறது. மெட்ரோவில் ஒரு காசுக்காகஅவர் கையேந்த வேண்டி வந்தபோது கேப்ரியல் இதை மிக நன்றாகவே புரிந்துகொண்டிருந்தார். அவர்அதைப் பெற்றார், ஆனால் அதை வெடுவெடுப்பான விதத்தில் அவர் கையில் போட்ட அந்த மனிதன் அவரது  விளக்கத்தைக்  கேட்கக்  காத்திருக்க வில்லை.

கேப்ரியல் ஒரு முறை சொன்னார், மற்ற எல்லா வற்றையும் மிஞ்சிவிடக்கூடிய அளவுக்கு அவர்வாழ்ந்த ஒவ்வொரு நகரமும் அவர் மனதில் ஒரு தூக்கலான ஒரு சித்திரத்தைச் செதுக்கியிருக்கிறது என்று. பாரிஸ் பற்றிய அவரது சித்திரம் மிகவும் துயரமான ஒன்று. “அது ஒரு நீண்ட இரவாக இருந் தது, காரணம் எனக்கு உறங்குவதற்கு எந்த இட மும் இருக்கவில்லை. பெஞ்சுகளின் மேல் அமர்ந்து தூங்கிவிழுந்தபடி, மெட்ரோ ரயிலின் நெருப்புத் தாங்கும் குறுக்குச் சட்டத்திலிருந்து கடவுள் கிருபையுடன் வெளியே அடித்த நீராவியால் என்னைக் கதகதப்பாக்கிக்கொண்டும், போலீஸ்காரர்கள் என்னை ஓர் அல்ஜீரியன் என்று நினைத்து அங்கிருந்து தள்ளி விடுவார்கள் என்பதால் அவர்களைத் தவிர்த்தவாறும் நான் நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தேன். திடீரென விடியலில் செய்ன் நதி ஓடுவதை நிறுத்தியது, வேக வைக்கப்பட்ட காலிபிளவரின் வாசனைமறைந்தது. அப்புறம் ஒரு கணம் ஒளிர்வு மிகுந்தஇலையுதிர்காலச் செவ்வாய்க்கிழமை மூடுபனியில் ஒரு காலியான நகரத்தில் உயிர் வாழ்ந்துகொண் டிருந்தவன் நான் ஒருவன் மட்டுமேவாக இருந் தேன். அப்பொழுதுதான் அது நிகழ்ந்தது. நான்பாண்ட் செய்ன்-மிஷலைக் 20 கடந்து சென்றுகொண் டிருந்தபோது, ஒரு மனிதனின் காலடி ஓசைகளைக் கேட்டேன். நான் மூடுபனியின் ஊடாய், அவன் ஒருஅடர்த்தியான ஜாக்கெட் அணிந்து, பாக்கெட்டு களில்  திணித்த கைகளுடன், அப்பொழுதுதான்வாரிய தலைமுடியுடன் இருந்த அந்த நொடியில் பாலத்தைக் கடக்கும்போது அந்த மனிதனின் வெளிர்ந்த முகத்தைப் பார்த்தேன். அவனது எலும்பான முகத்தை ஒரு வினாடி கவனித்தேன். அவன் அழுதுகொண்டிருந்தான்.”

அவரது இரண்டாவது புத்தகமான கர்னலுக்கு யாரும் எழுதுவதில்லை இந்தக் காலகட்டத்தின்  குழந் தை. ஆனால் எந்தக் கதவுகளையும் அது அவருக் கும் கூடத் திறந்துவிடவில்லை. மஞ்சள் நிறத்தாளில் தட்டச்சுச் செய்யப்பட்ட கைப்பிரதியின் நகலை நான் கொஞ்ச காலத்திற்கு  வைத்திருந்ததை  நினைவு கூர்கிறேன். நான் அதை அவர்கள் வெளியிட உதவியிருக்க முடிந்திருக்கக்கூடிய மிக முக்கியமான மனிதர்களிடம் காட்டினேன், ஆனால் அவர்கள் அதன்இலக்கியக் குணாம்சங்களைப் பற்றி அறியாதவர் களாய்த்  தோன்றினர்.

பாரிஸ் வருடங்களுக்குப் பிறகு, காரகாஸில்பத்திரிகை நிருபர்களாய் நாங்கள் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் கேப்ரியல் தொடர்ந்து இரவிலும் ஓய்வு நேரங்களிலும் எழுதிக்கொண்டிருந் தார். அவர் அப்பொழுது எழுதிக்கொண்டிருந்த புத்தகம் பெரிய அம்மாவின் இறுதிச் சடங்கு 20 ஆனால் எவர் ஒருவரும் காரகாசுக்கு எதிர்பாராதுவந்துவிட்டிருந்த அந்தப் பத்திரிகை நிருபருக்குப்பின்னாலிருந்த சிறந்த எழுத்தாளனை இன்னும்கண்டுகொண்டிருக்கவில்லை. புலம்பெயர்ந்தவர்களின் நகரமான, விண்ணை முட்டும் கான்க்ரீட் சாலை களுக்கும் கண்ணாடிக் கட்டிடங்களுக்கும் பின்னால்அதற்கொரு ஆன்மா இல்லாதிருந்த, வெற்றியானது மில்லியன் கணக்கான பொலிவார் பணத்தில்அளக்கப்படும் காரகாஸிற்கு 21, ஏற்கனவே புனிதப்படுத்தப்படாத திறமையைத் தேடுவதற்கு நேரமில்லை. இன்றைய கார்சியா மார்க்வெஸ்ஸின் மீது அளவுக்கு மிஞ்சி குணத்துடன் இருக்கும்காரகாஸ் ஆனது. அந்தக் காலகட்டத்தில் மெலிந்த,நிலைகொள்ளாத, முப்பத்தி மூன்று வயதான, அவ்வளவு அற்புதமான கட்டுரைகளை எழுதிவிட்டு ஆனால் பயனின்றித் தன் கதைகளைச் செய்தித்தாள் களின் போட்டிகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்த நிருபரை  அறிந்திருக்கவில்லை.

இந்தக் காத்திருத்தல் பிறகு பொகோட்டோவில் தொடர்ந்தது. அவரும் நானும் சேர்ந்து க்யூப செய்தி ஏஜென்சியான ப்ரென்ஸா லட்டீனாவின் உள்ளூர் அலுவலகத்தை நடத்திக்கொண்டிருந்தபோது அவர் இன்னும் இரவில் எழுதிக்கொண்டிருந்தார் (தீவினைக்காலத்தில் நாவலுக்குத் திரும்பியிருந்தார்). அந்த சமயத்தில்தான் அவரிடம் அதன் எடிட்டர்கள் அனுமதி கேட்கவோ அல்லது பணம் எதுவும் தரவோ செய்திருக்காத ஒரு இலக்கியப் பத்திரிக்கையில் கர்னலுக்கு யாரும் எழுதுவதில்லை வெளிவந்தது. அத்தனை வெளியீட்டாளர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு கையெழுத்துப் பிரதியை அச்சிடுவதென் பதே ஒரு தாராளமான அங்கீகாரம்தான் என அவர்கள் உண்மையிலேயே எண்ணினார்கள். உள்ளூர்விமர்சகர்கள் அதை நன்கு ஏற்றுக்கொண்டனர், வாஸ்தவமாக, குறுகிய காலத்திற்குப் பிறகு அவர்கள் ‘எஸ்ஸோ கொலம்பியானா’ 22 என்ற எண்ணெய் நிறுவனத்தினால் GF ஆதரவு செய்யப்பட்ட ஒரு தேசிய விருதைப் பெற்ற தீவினை காலத்தில்நாவலை  வரவேற்றதைப்  போன்று.

எவ்வாறாயினும், அது ஒரு எளிமையான வெற்றி.குறைந்த எண்ணிக்கை அளவிலான பிரதிகள் மட்டுமே அச்சிடப்பட்டன, ராயல்ட்டி மிகவும் குறைந்த பட்சமாய் இருக்கவும் புத்தகங்கள் உள்ளூரிலிருந்த சிறிய வட்டத்திலான வாசகர்களை மட்டுமே எட்டவும் செய்தது. அவரது நெருங்கிய நண்பர்கள் வட்டத்தைத் தவிர கொலம்பியாவுக்கு வெளியிலும் நாட்டின் உள்ளேயும் எவருமே கார்சியா மார்க் வெஸ்ஸைத் தெரிந்திருக்கவில்லை, அவர் ஆகிருதி மிக்க ஒரு எழுத்தாளர் என்பதைவிடப் பிரதேச இலக்கியத்தின் சிறந்த வியாக்கியானக்காரர் என்றே எண்ணப்பட்டார். பொகோட்டா நகரம் மேல் வர்க்க மனிதர்களை அவர்கள் அணியும் உடைகளை வைத்தும் அவர்களின் குடும்பப் பெயர்களை வைத்தும்எடை போட முனைகிறது, மேலும் அதற்கு அவரதுகடற்கரையோரப் பிரதேசத்துப் பூர்வீகத்தை, அவரது கட்டை தாடியையும் சிவப்பு சாக்ஸையும்முள்கரண்டிகளுக்கும் மீன்வெட்டும் கத்திகளுக்கு மிடையிலிருந்த வேறுபாட்டினையும் டிஸர்ட் 23 கத்திகளுக்கும் முள்கரண்டிகளுக்குமிடையிலிருந்த வித்தியாசத்தையும் தெரியாத அவரது இயலாமையையும் கூட அசட்டை செய்ய  இன்னும்  தயாராக  இல்லை.

கொண்டிருத்தலுக்கும் இருத்தலுக்குமான வினைச் சொல்லினை லத்தீன் அமெரிக்கப் பூர்ஷ்வாக்கள் குழப்பிக்கொள்கின்றனர் என, ஒரு நல்ல காரணத் துடன் இது அடிக்கடி சொல்லப்படுகிறது. நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதைவிட நீங்கள் எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்களோ அதுதான் பொருட்படுத்தலுக்கு உட்படுகிறது. கேப்ரியலுக்கு அதே மாதிரியான அந்த ஹோட்டல்களில் தங்கி, அதே மாதிரியான ரெஸ்டாரென்ட்டுகளில் லாப்ஸ்டர்களைச் சாப்பிட்டுக்கொண்டு - அவர்களைப் போன்றோ அல்லது அவர்களை விடச் சிறப்பான முறையிலோ - மதுவின் சரியான வெப்பநிலையை, வெண்ணெய்களின் வகை வரிசைகளை, நியூயார்க், பாரிஸ் மற்றும் லண்டனில் காண்பதற்கான இடங் களையும் பாராட்டுவதற்கு முடிந்தபோது, அவருக் கான கதவுகளை அவர்கள் திறந்தார்கள், அவர்களின் விஸ்கியை அருந்த அவர் ஒப்புதல் செய்ததை ஒருமரியாதையாக எடுத்துக்கொள்ளவும் ஒரு நூறு ஆண்டு களின் தனிமை நாவலின் ஆசிரியரின் இடதுசாரிக் கண்ணோட்டங்களையும் பிடல் காஸ்ட்ரோவுக்கான அவரது ஆதரவினையும் அவர்கள் கண்டும் காணாமலும்  விட்டுவிடவும்  கூடச்செய்தார்கள்.

ஆனால் அந்த நாட்களில் அல்ல. இன்னும் அல்ல.வெளியிடப்பட்ட அவரது புத்தகங்களுக்கு அப்பாற்பட்டும் (வேராகுரூஸ் பல்பலைக்கழக வெளியீட்டின் வாயிலாகப் பெரிய அம்மாவின் இறுதிச்சடங்கு வெளியிடப்பட்டிருந்தது எண்ணிக்கையை நான்காக ஆக்கியிருந்தது) காத்திருப்பு கூடுதலாய் சில ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. ப்ரென் ஸாலட்டீனா பத்திரிகையால் அவர் நியூயார்க்குக்கு அனுப்பப்பட்டபோது, பகல்நேரத்தில் பத்திரிகையாளனாகவும் இரவுநேரத்தில் அவரது ஹோட்டல் அறையில் எழுத்தாளனாகவுமான இரட்டை வாழ்க்கை தொடர்ந்தது. பலவிதங்களில் அது அவருக்குச் சிரமமான ஒரு காலகட்டமாய் இருந்தது. அவருக்கு ஒரு மனைவியும்மகனும் இருப்பதையும் அவர்கள் தாக்குதலுக்குஆளாகக் கூடுமென எச்சரித்த நியூயார்க்கிலிருந்தபுலம்பெயர்ந்த கியூப நாட்டவர்களிடமிருந்து அவருக்குத் தொலைபேசி மிரட்டல்கள் வர ஆரம்பித்திருந்தன. ஏதாவது தாக்குதல் வந்தால் சமாளிக்க, அவர் எழுதும் சமயத்தில் கை எட்டும் தூரத்தில் ஒரு இரும்புத் தடியை எப்போதும் வைத்திருந்தார். இதற்கிடையில் கியூபாவுக்கு உள்ளே ‘பிரிவினைவாதத்தின் வருடம்’ என்றழைக்கப்பட்டது தொடங்கி யிருந்தது. அரசின் நிறுவனங்களில் முக்கியமான பதவிகளைப் பழைய கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தினர்கள் பிடிக்கத் தொடங்கினர். ப்ரென்ஸா லட்டீனாஒரு குறிப்பிட்ட பரிசாக இருந்தது. பத்திரிகைஏஜென்சியின் இயக்குநரான தனிநபர் வசீகரமும் நேர்மையும் கொண்ட இளம் ஜோர்ஜ் ரிக்கார்தோ மேஸெட்டி24 அவர்களை எதிர்க்கவும் அப்புறம் அவரது பதவி பறிபோனவுடன் அவரது புரட்சிகரத் தீவிரத்தையும் பிரிவினைவாத கம்யூனிசத்தை நிராகரிப்பையும் பகிர்ந்துகொண்ட எங்களைப் போன்றோரும் அவருடன் சேர்ந்து ராஜினாமா செய்தோம். கேப்ரியலும்  அதைத்தான் செய்தார்.

(எனக்கு அந்த நிகழ்வு கியூபப் புரட்சிக்கு ஒரு இடையூறான திசைமாற்றமாக இருந்தது. கேப்ரியல் அதை அவ்வாறு பார்க்கவில்லை. அதன் வழியில் ஏற்பட்ட ஒரு விக்கல் என்று அவர் உணரவும் கியூப அரசின் மீதிருந்த உற்சாகத்தைக் குறையாமல் பார்த்துக்கொண்டார் என்றே நினைக்கிறேன், முன் நிபந்தனையற்ற ஏற்பினை அவர் கியூப அரசிற்கு அப் பொழுதுமோ அல்லது பிறகுமோ அளிக்கவில்லை என்றாலும் கூட.)

அவரது ராஜினாமா அவரை நியூயார்க்கில் வேலையோ அல்லது திரும்புவதற்கான டிக்கட்டோ இல்லாமல் ஆக்கியது. ஏதோ ஒரு அபத்தக் காரணத்தின் பொருட்டு - அவரது அபத்தங்களுக்கு ஒரு விதமான உள்மறைந்த, தூய உள்ளுணர்வுபூர்வமானதர்க்கம் இருந்தபோதிலும் - அவரது பாக்கெட்டில்இருந்த மகத்தான தொகையான ஒரு நூறு டாலர்களைச் செலவழித்து (அவரது முழு முதலீடு) அவர்தனது மனைவியையும் மகனையும் மெக்ஸிகோ வுக்குப் பேருந்தில் அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.

மெக்ஸிகோவில் அவரது முதல் வேலையை, ஒரு பெண்கள் பத்திரிகையில் துணை ஆசியரியராகப் பணி ஏற்ற அன்று அவரது காலணியின் அடிப்பாகம் கழன்று விழுந்துகொண்டிருந்தது. பத்திரிகையின் சொந்தக்காரர், அவர் ஒரு பிரபல திரைப்படத் தயாரிப் பாளரும் கூட, ஒரு மது அருந்தும் நிலையத்தில்சந்திக்க ஏற்பாடு செய்திருந்தார். கேப்ரியல் முதல் ஆளாக அங்கே போய்ச் சேர்வதென்றும் கடைசி ஆளாகக் கிளம்பிச் செல்வதென்றும் - அவரதுவாயைப் பிளக்கும் ஷ¨வின் நிலைமையை மறைப் பதற்கு வேண்டி - உறுதிகொண்டிருந்தார். அத்தனை வருட எழுத்திற்குப் பிறகும் அவர் அவரது முதல் நாவலை எழுத அமர்ந்தது போன்ற மிகத்துல்லியமான  அதே  நிலைமையில்   தன்னைக்  கண்டார்.

நான் வசித்துக்கொண்டிருந்த பரன்கியாவுக்கு அவர் மேற்கொண்ட பயணங்களின் ஒன்றின் போதிலா அல்லது நான் மெக்ஸிகோவுக்குச் சென்றஒரு பயணத்தின் போதிலா என்று என்னால் சரியாக ஞாபகப்படுத்த முடியவில்லை, அவர் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு நாவல் பற்றி என்னிடம் கூறினார். ‘அது ஒரு போலேரோ போன்றதும்’ என்றார்அவர். (போலேரோ என்பது லத்தீன் அமெரிக்காவின் மிக உண்மையான இசையாகும். அது அளவுக்கதிகமாகச் சென்ட்டிமென்டலாகத் தோன்றலாம்ஆனால் அது தீவிரமாகவும் கேலியாகவும் இருக்கக்கூடியது நகைச்சுவையுணர்வினாலும் கூடவாகும்,‘அதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை புரிந்து கொள்ளக் கூடாது’ என்ற ஒரு அர்த்தத்திலும் நகைச்சுவையுணர்வு கூடியும் அதை லத்தீன் அமெரிக்கர்களான நாங்கள் மட்டுமே புரிந்துகொள்ளமுடியும். அது போர்ஹெஸ்ஸின் பெயரடைச் சொற்கள் போன்றது). ‘இன்று வரை’ என்றார் அவரது விரல்களை மேஜையின் மேல் வைத்து அவற்றினை அதன் மையத்திற்கு நடத்திச் சென்றார், “நான் எனதுநாவல்களில் மிகவும் பாதுகாப்பான வழிகளையே எடுத்திருக்கிறேன். நான் எந்தப் பாதுகாப்பின்மை களையும் மேற்கொண்டதில்லை. இப்பொழுது நான்விளிம்பினை ஒட்டி நடக்கவேண்டியிருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது.” மேலும் அவரது விரல்கள் மேஜையின் விளிம்பினைச் சுற்றி நிலையுறுதியற்று தள்ளாடி நடந்தன. “இதைக் கவனியுங்கள். புத்தகத்தில் உள்ள ஒரு பாத்திரம் தன்னைத் தானே சுட்டுக்கொள்ளும்போது, இறந்த மனிதனின் தாயாரைக் கண்டுபிடிக்கும்வரை அவனது ரத்தம்நகரைச் சுற்றிலும் மெல்லிய இழையாகச் சொட்டிச்செல்கிறது. முழுப் புத்தகமுமே அப்படித்தான்  இருக்கிறது, உன்னதமானவற்றுக்கும் சாதாரணமானவற்றுக்கும் இருக்கும் ஒரு கத்திமுனை இடை வெளியில், ஒரு ‘போலேரோ’வைப் போல. பிறகு அவர் மேலும் கூறினார்: “ஒன்று இந்தப் புத்தகம் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் அல்லது நான் என் மூளையைச் சிதற அடித்துக்கொள்வேன்.”

வாஸ்தவமாக, அவர் ஒரு நூறு ஆண்டுகளின்தனிமை நாவலைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந் தார். அவர் எழுதி முடித்த சிறிது காலத்திற்குள் அந்தக் கைப்பிரதியைப் படித்தபோது நான் ஒரு குறிப்பை அவருக்கு எழுதினேன் இது சந்தேகமே இன்றி மிகப்பெரிய திருப்புமுனை என. அடுத்தத் தபாலிலேயே அவரது பதில் வந்தது. “இன்றிரவு என்னால் எளிதாக உறங்க இயலும் இப்போது உங்கள் கடிதத்தைப் படித்துவிட்டேன். என்னுடைய முக்கியப் பிரச்சினை ஒரு நூறு ஆண்டுகளின் தனிமை நாவலை எழுதுவதாய் இருக்கவில்லை, அவர்களது கருத்துக்களை நான் மதிக்கும் என் நண்பர்களை நேர்கொள்ளும் பெரும் சிரமத்தை சந்திப்பதில் இருந்தது. எதிர்வினைகள் நான் நம்பியதை விடக் கூடுதல் சாதகமாய் இருந்தன. அவை யாவும் பொய்னஸ் அயர்சிலுள்ள  எடிட்டோரியல் சூடாமரிக்கானா  25வின் எதிர்வினையால் சுருக்கமாய்த் தெரிவிக்கப்படுகிறது - முதல் பதிப்பில் அவர்கள் 10,000 பிரதிகளை வெளியிட ஒப்புக்கொண்டிருந்தார்கள். அப்புறம் இரண்டு வாரங்களுக்குப் பிறகு அச்சகத்தாரின் மெய்ப்புபிரதிகளைத் துறைவல்லுநர்களிடம் காட்டிய பின் எண்ணிக்கையை  இரண்டுமடங்காக்கினார்கள்.

இலைப்புயல் நாவலை எழுதியவாறு கேப்ரியல் விடியலைக் காண்பதை வழக்கமாகக்கொண்டிருந்த பதினைந்து வருடங்களுக்கு முன்னர்த் தொடங்கிய நீண்ட காத்திருப்பானது, முடிந்தது.

குறிப்புகள்:

1.எல் ஹெரால்டோ (ஹெரால்ட்)

கொலம்பியாவின் பரன்கியா நகரத்திலிருந்து வெளிவந்துகொண்டிருந்த உள்ளூர் செய்தித்தாள். ஹெரால்ட் என்று பெயர். யுவான் பெர்னான்டஸ் ஓர்த்தேகா, லூயி எடுவடுவர்டோ மேனட்டோஸ் லினாஸ், அல்பர்த்தோ புமரெஹோ, வெங்கோசியா ஆகிய மூவரால் இது 1933ஆம் ஆண்டுத் தொடங்கப் பட்டது. கொலம்பிய கரீபியப் பிரதேசத்தில் விற்பனையில் மூன்றாவது இடம் பிடித்தது.

2. கால் தல் கிரிமென் (Calle Del Crimen)

பரன்கியா நகரில் உள்ள குற்றங்களின் தெரு.

3. பிளாஸா சான் நிக்கொலஸ் (Plaza San Nicolas)

பரன்கியா நகரத்தின் மையத்தில் அமைந்திருக் கிறது. சான் நிக்கொலஸ் தேவாலயத்திற்கு எதிரில்தான் பிளாஸா அமைந்திருக்கிறது.

4. எடிட்டோரியல் லோசாதா (Editorial Losada)

1938ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மரபான அர்ஜன்டீனிய வெளியீட்டு நிறுவனம். மிகுவெல் ஏஞ்சல் அஸ்த்துரியாஸ் மற்றும் பாப்லோ நெரூதா போன்ற நோபல் விருது பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டிருக்கிறது. மதிப்பு மிக்க வெளியீட்டு நிறுவனமாய் விளங்கி வருகிறது.

5.கியர்மோ த டோரே (Gillermo de torre)(1900-1971)

கியர்மோ த டோரோ அர்ஜன்டீனிய கவிஞர், விமர்சகர், மற்றும் கட்டுரையாளர். தாதாயிஸத்தின் அங்கத்தின் மற்றும் ஜெனரேஷன் 27 இன் அங்கத்தினர். ஜெனரேஷன்27 இன் பிற அங்கத்தினர்கள்  Guillen Pedro Salinas, Rafael Alberti, Federico García Lorca, Dámaso Alonso, Gerardo Diego, Luis Cernuda, Vicente Aleixandre, Manuel Altolaguirre and Emilio Prados.  ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ்ஸின் மைத்துனர். அவரது ஐரோப்பிய பயணங்களில் பலஇலக்கிய முன்னணிப்படை இயக்கங்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். ஆட்டோமேட்டிக் கவிதைகள் எழுதுவதில் ட்ரிஸ்ரின் ஸாரா மற்றும் போர்ஹெஸ்ஸ¨டன் இணைந்து செயல்பட்டார். லோசாதா வெளியீட்டு இணைநிறுவனராகவும் அதன்இலக்கிய ஆலோசகராகவும் பணியாற்றினார்.

6.எல் எஸ்பேக்டேடர்  (El Espectador (meaning "The Spectator")

த ஸ்பெக்டேட்டர் என்ற அர்த்தத்தைக் கொண்ட கொலம்பியாவின் தேசிய நாளிதழ். 1887ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. 1915ஆம் ஆண்டிலிருந்து பகோட்டா  நகரிலிருந்து  வெளியிடப்படுகிறது.

7. கப்பல் தகர்வடைந்த கடலோடியின் கதை (The Story of a Shipwrecked Sailor, 1955)

1955ஆம் ஆண்டுப் பதினான்கு நாட்கள் தொடர்ச்சி யாக எல் எஸ்பெக்டேடர் செய்தித்தாளில் வெளிவந்த மார்க்வெஸ்ஸின் புனைகதையல்லாத விவ ரணைப் படைப்பு. பின்னர் 1970ஆம் ஆண்டுப் புத்தக மாக வெளிவந்தது. இதன் முழுத் தலைப்பே முழுக்கதையையும் சொல்லிவிடும்படி அமைக்கப் பட்டிருக்கிறது: The Story of a Shipwrecked Sailor: Who Drifted on a Liferaft for Ten Days Without Food or Water, Was Proclaimed a National Hero, Kissed by Beauty Queens, Made Rich Through Publicity, and Then Spurned by the Government and Forgotten for All Time. இந்தக் கதைக் கருக்களை டேனியல் டீஃபோலிருந்து ஹோஸே சாரமாகோ (த ஸ்டோன் ராஃப்ட்) வரை பலர் பயன்படுத்தியிருக்கின்றனர்.

8. குஸாஸ் சாலை

(Hôtel de Flandre) (Hôtel de Flandre)

ஹோட்டல் த பிளான்டர் விடுதி இந்த வீதியில் இருந்தது.

9. ஹோட்டல் டி ஃபிளான்டர  (Hôtel de Flandre)

ஹோட்டல் த பிளான்ட்ர. இந்த விடுதிக்கு மிகப் புராதனமான வரலாறும் பெருமையும் உண்டு. பிரான்சின் சோர்போன் பல்கலைக்கழகத்திற்கு நேர் எதிரில் அமைந்துள்ளது. பிரெஞ்சுப் புரட்சியின் போது மூடியிருந்தது. ஆர்தர் ரைம்போ அங்கொரு அறையில் (1872) தங்கியிருந்தது பற்றிய குறிப்பு உள்ளது. ஹங் கேரியக் கவிஞர் நிக்கலோஸ் ரேட்நோட்டி 1937 லிருந்து 1939வரை இந்த விடுதியில் தங்கியிருந்தி ருக்கிறார். 1956 மற்றும் 1957ஆம் வருட காலங்களில் மார்க்வெஸ் தீவினைக் காலத்தில் நாவலையும் கர்னலுக்கு யாரும் எழுதுவதில்லை நாவலையும் இதில் தங்கியிருந்தபோது எழுதினார். 1984ஆம் ஆண்டுக்குப் பிறகு இதன் பெயர் ஹோட்டல் திட்ராய் காலேஜ் (Hotel Des Trois Colleges) என மாற்றப் பட்டுள்ளது.

10. “ஏழாவது  மாடியிலிருந்த  பத்திரிகைக்காரர்”

“le journaliste du septieme etage”

11. புனித மிஷல் பாலம் (Pont Saint-Michel)

புனித மிஷல் என்ற இடத்தையும் சைன் நதியையும் இணைக்கும் பாலம்.

12. ழார் பிரேஸன்ஸ் (Georges Charles Brassens (1921-1981)

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாடகர், பாடலாசிரியர் மற்றும் கவிஞர். பலவிதமான லிரிக் குரல் பாணிகளை ஒன்றிணைத்துப் பாடிப் புகழ்பெற்றவர். போருக்குப் பிந்திய முக்கியமான பிரெஞ்சுக் கவிஞ ராகக் கருதப்படுகிறார். பல இலக்கியத்தன்மை வாய்ந்த கவிதைகளைப் பாடலாகப் பாடிய பெருமைஇவரைச் சேரும். (குறிப்பாக லூயி அரெகன், விக்டர் ஹியூகோ, பிரான்ஸ்வா விலோன் போன்ற படைப்பாளர்களின் கவிதைகள் இவரால் பாடப் பட்டன)

13. ‘வெஸ்ட்டர்ன்’ (Western)

பத்தொன்பதாம் நூற்றாண்டிறுதியிலும் 20ஆம்நூற்றாண்டின் தொடக்கத்திலும் உருவான புதினவகை மை. பழங்கால மேற்கின் பாணியில் அமைந் திருந்த மேற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஒரு அம்சம் இதில் உள்ளது. நாடோடிகளாகத் திரிந்தலையும் மாட்டுக்காரப் பையன்கள் (கௌபாய்ஸ்) அல்லது துப்பாக்கி சுடுவதில் திறமைமிக்கவர்களைப் பற்றிய கதைகளாக இருந்தன. இவர்கள் விளிம்பகன்ற அல் லது நடுப்பகுதி உயரமான ஸ்டெட்ஸன் தொப்பிகளை அணிந்திருப்பார்கள். கழுத்தில் கைக்குட்டை கள், காலில் குதிமுள் பூட்சுகள், தோலால் ஆன கோட்டுகள் சகிதமாய்க் காணப்படுவார்கள். இந்தப்பாத்திர வரிசையில் கௌபாய்கள் தவிரச் செவ்விந் தியர்கள், ஸ்பானியர்கள், மெக்ஸிக தேசத்தவர்கள், கொள்ளைக்காரர்கள், சட்டத்தை நிலைநாட்டும் அலு வலர்களும் இடம் பெற்றனர். இவர்கள் மீண்டும் மீண்டும் இடம்பெறுவது உண்டு. வெஸ்டர்ன் என்பது மிகப் பிரபலமான ஹாலிவுட் திரைப்பட வகைமையாக 1960களில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் வெஸ்ட்டர்ன்கள் 1930களிலேயே அரங்கம் நிறைந்த ரசிகர்களைக் கண்டது. கிளாஸிக்கல் வெஸ் ட்டர்னில் தொடங்கி இதில் பல துணை வகைமைகள் உருவாக்கப்பட்டன. துணை வகைமைகளில் பிரதானமாவை ‘ஸ்பேகட்டி வெஸ்ட்டர்ன்’ அல்லது ‘மேக்கரோனி வெஸ்ட்டர்ன்’.

14. ரூ குகாஸ் (Rue Cujas)

மார்க்வெஸ் பாரிஸில் தங்கியிருந்த விடுதிக்குச் செல்லும் தெருவின் பெயர்.

15. ஆர்ட்டிசோக் (Artichoke)

திசில் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவர இனம். இதன் விரியா மொட்டுத்திரள்கள் உணவாகப் பயன்படுகின்றன. பிரெஞ்சு ஆர்ட்டிசோக் என்றும் குளோப் ஆர்ட்டிசோக்  என்றும்  அழைக்கப்படுகிறது.

16. தீவினைக் காலத்தில் (In Evil Hour)

1962ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மார்க்வெஸ் ஸின் நாவல். அவர் பாரிஸ் நகரில் வாழ்ந்தபோது எழுதப்பட்ட இந்த நாவலுக்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு  திஸ் ஷிட்டி டவுன் (This Shitty Town). நாவல் களம் ஒரு பெயரற்ற கொலம்பிய கிராமம்(அ) நகரம். இதில் இடம் பெறும் சில பாத்திரங்களும் சூழ்நிலைமைகளும் ஒரு நூறு ஆண்டுகளின் தனிமை நாவலில் மீண்டும் வருகின்றன. நாவல் வெறும் 20 நாட்களில் நடந்து முடிவதால் தீவினைக் காலத்தில் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதன் முதல் பதிப்பு மார்க்வெஸ்ஸால் நிராகரிக்கப்பட்டது.

17. ரூ த ஈக்கோல்ஸ் (Rue De Ecoles-Paris)

பாரிஸ் நகர அமைப்பின் ஐந்தாவது துணை வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சந்துத் தெரு.

18. லா மாண் (உலகம்)

மதியத்தில் வெளிவரும் பிரெஞ்சு தேச செய்தித் தாள். ஹ¨பெர் பெவ் மெரி என்பவரால் நிறுவப்பட்டது. நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாள் போல வெறும் செய்திகளை மட்டும் வெளியிடாமல் லாமா குறிப்பிட்ட நிகழ்வுகள் பற்றிய பொதுக்கருத்துப் பதிவுகளை வெளியிடுகிறது.

19. ரோகாஸ் பினிய்யா  Gustavo Rojas Pinilla (1900-1975)

குஸ்தாவ் ரோகாஸ் பினிய்யா கொலம்பியாவின் ராணுவஜெனரலாக இருந்தவர். கொலம்பியாவின் 19வது ஜனாதிபதியாக 1953ஆம் ஆண்டிலிருந்து 1957ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். 1940களில் கொலம்பியாவில் நிகழ்ந்த லா வயலன்சியா என்று பெயர்பெற்ற உள்நாட்டுப் போரை அடக்கி யதால் பெயர் பெற்றார். அவரது ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு நிலவியதால் 1957இல் பதவி விலகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1961இல் மீண்டும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வி யடைந்தார்.

20. பெரிய அம்மாவின்  இறுதிச் சடங்கு

1962ஆம் ஆண்டு வெளிவந்த மார்க்வெஸ்ஸின்சிறுகதைத் தொகுப்பின் தலைப்பு(க்கதை). தலைப்புக் கதை தவிர இதில் சில முக்கியமான சிறுகதைகள் இடம் பெற்றன. இத்தொகுதியில் உள்ள கதைகளுக்கும் ஒரு நூறு ஆண்டுகளின் தனிமை நாவலுக்கும் நிறையத் தொடர்புகள் உள்ளன.

21. கராகாஸ்

வெனிஸூயெலாவின் தலைநகர் மற்றும் அந்த நாட்டின் மிகப்பெரிய நகரமாகும்.

22. எஸ்ஸோ கொலம்பியானா

ஒவ்வொரு வருடமும் பத்திரிகைத்துறையில் சாதனை செய்தவர்களுக்கு எஸ்ஸோ என்ற தனியார் எண்ணெய் நிறுவனம் ஒரு விருதை ஏற்பாடு செய்திருந்தது. அமெரிக்காவில் வழங்கப்படும் புலிட்ஸர் விருதை முன்மாதிரியாகக்கொண்டு 1955ஆம் ஆண்டுநிறுவப்பட்டதாகத் தெரிகிறது. இதன் தற்போதைய பெயர் எக்ஸான்மொபில் ஜெர்னலிசம் அவார்ட் என்பதாகும். பிரேஸிலில் உள்ள எஸ்ஸோ நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. விருதுகளில் தேசிய மற்றும் சர்வ தேச பிரிவுகளும் அடங்கும்.

24. ஹோர்ஹே ரிக்கார்தோ மேஸெட்டி

(Jorge Jose Ricardo Masetti Blanco (31 May 1929)

கியூப செய்தி ஏஜன்சியான பிரென்ஸா லேட்டினா வின் முதல் இயக்குநர். பிரென்ஸா லேட்டினா நின்ற பின் அர்ஹெந்தீனிய கெரில்லா அமைப்புகளின் தலைவராக ஆனார். இத்தாலியிருந்து புலம்பெயர்ந்த பெற்றோருக்குப் பிறந்தவரான மேஸெட்டி ஷே குவராவால் அதிகம் மதிக்கப்பட்டவராகவும் அவரால் முக்கியப் பொறுப்புகள் அளிக்கப் பட்டவருமாக இருந்தார். சால்ட்டா பிரதேச காடுகளுக்குள் கெரில்லாவாக அவர் நுழைந்த பிறகு 24 ஏப்ரல் 1964 லிருந்து அவரைப் பற்றி எந்தத் தகவலுமில்லை.

25. எடிட்டோரியல் சூடமரிக்கானா (Editorial Sudamericana)

அர்ஹெந்தீனியர்களாலும் ப்யோனஸ் அயர்ஸில் தங்கிவிட்ட ஸ்பானியர்களாலும் 1939ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தென்னமெரிக்க வெளியீட்டு நிறுவனம். நிறுவனர்களில் சில முக்கியமான ஆளுமை கள்: விக்டோரியா ஒகேம்ப்போ, ஆலிவெரியோ கிரிரோன்டோ, கார்லோஸ் மேயர். ஒரு பதிப்பு நிறு வனத்தை நிர்வாகம் செய்த அனுபவம் இல்லாததால் கருத்து வேற்றுமைகள் நிலவின. நண்பர்களின் புத்தகங்களைத் தங்களின் சொந்த நிதியில் வெளியீடு செய்துவிட்டு அமைப்பிலிருந்து

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer