வண்ணப்பெண்ணின் புடவை சரசரப்பு போல பெய்துகொண்டிருந்த மழையில் யாரோ ஒரு சிறுவன் தன் தந்தையுடன் நடந்து சென்றான். அவன் தலையில் சிறிய மஞ்சள் குடையை மாட்டியிருந்தான். அவன் அந்தக் குடையை அவ்வப்போது கைகளால் பற்றி குதூகலித்தான். அந்தக் குடை அவனை மழையிலிருந்தும் நாளை வெயிலிருந்தும் காக்கும். குடை என்பது தலைக்கு மேல் தற்காலிகமாய் ஒரு கூரை. அங்கங்கே சின்னச்சின்ன நீர் குட்டைகள்.
மெடிக்கல்ஸூக்கு வெளியே ஸ்டூலில் அமர்ந்திருந்த கண்ணபிரான் அந்தச் சிறுவனையும் அவனுடைய தந்தையையும் பார்த்துக்கொண்டே இருந்தான். மின்சாரம் நின்றிருந்தது. உள்ளே சுழல் நாற்காலியில் பரதன் அமர்ந்திருந்தார். கார்மேகங்களிலிருந்து மெல்ல கதிரவன் எட்டிப் பார்த்தான். மெடிக்கல்ஸீன் கண்ணாடிக் கதவுகளில் பட்டுத் தெறித்த மாலைக் கதிர்களில் அமானுஷ்யம் குடிகொண்டிருந்தது. பரதனின் கண்ணாடி ப்ரேம் மஞ்சள் ஒளியில் ஜ்வலித்தது. திரை விலகுவதுபோல மழை மெல்ல ஓயத் துவங்கியது. பரதன் மெடிக்கல்ஸின் அறைக்கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார். அருகிலிருந்த பிளாஸ்டிக் குடத்திலிருந்து தண்ணீரைக் குவளையில் எடுத்து முகத்தை அலம்பினார். வெண்ணிறக் கர்சீப்பை எடுத்து முகத்தை அழுத்தித் துடைத்து கண்ணாடியை மாட்டிக்கொண்டார். தான் சென்று விஜயனைச் சந்தித்து வருவதாகக் கண்ணபிரானிடம் சொன்னார். அவன் தலையசைத்தான். வண்டியைக் கிளப்புகையில் அவனைப் பார்த்து நல்ல ஷர்ட் என்றார். கண்ணபிரான் புன்னகைத்தான்.
கண்ணபிரான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் மெடிக்கல்ஸூக்கு வேஷ்டியும் முழுக்கை சட்டையும் அணிந்து வருவான். பரதன் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை. பின்னர் அவனை ஒரு முறை நாள் ரோட்டிலிருந்த பரணி டெக்ஸ்டைல்ஸூக்கு அழைத்துச் சென்று பேண்ட் சர்ட் பிட்டுகளை எடுத்து அருகிலிருந்த நாகா டெய்லர்ஸிடம் தைக்கக் கொடுத்தார். முழுக்கை சட்டையெல்லாம் அணியத் தேவையில்லை என்று சொன்னார். அது வயதான தோற்றத்தை அளிக்கும் என்றார். மேலும் கோடுகள் போட்ட சட்டைகளைவிட பெரிய சதுரங்கள் கொண்ட சட்டைகளை அணியச் சொன்னார். சட்டைகளை எடுக்கும்போதே சோபையான வண்ணங்களைத் தவிர்த்தார். கை கடிகாரம் ஒன்றை வாங்கிக்கொடுத்தார். அடிக்கடி மொபைல் போனை எடுத்து நேரம் பார்ப்பதையும் வீடியோக்கள் பார்ப்பதையும் தவிர்க்கச் சொன்னார். யாரைச் சந்தித்தாலும் மென்புன்னகையோடு பேசச் சொன்னார். செருப்பு அணிவதற்குப் பதிலாக ஷூ அணியக் கட்டாயப்படுத்தினார். தினமும் ஷூவைப் பிரஷ்ஷால் பாலிஷ் செய்யச் சொன்னார். வெளியிடங்களில் ஷூவில் அழுக்கு படிந்துவிட்டால் துணி அல்லது கிடைத்தால் வாழைப்பழத்தோலைக் கொண்டு நன்கு துடைக்கச் சொன்னார். அவரே ஒரு முறை செய்தும் காட்டினார். ஒருபோதும் பொது இடங்களில் ஷூவைக் கழற்றிவிட்டு வெறும் சாக்ஸூடன் இருக்கக்கூடாது. காலையில் ஷூ அணிந்தால் இரவு வீட்டுக்குச் சென்றுதான் ஷூவைக் கழற்றவேண்டும் என்றார். ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் சார் என்று சொன்ன கண்ணபிரானைப் பரதன் என்றே சொல்லவேண்டும் என்று கட்டளையிட்டார். மேலும் ஒரு முறைக்கு மேல் ஒரு உரையாடலில் எவர் ஒருவரையும் சார் என்று சொல்லக்கூடாது என்றார். அது யாராக இருந்தாலும் ஒரு சார் போதும் என்றார். கண்ணபிரான் பரதனிடம் வேலைக்குச் சேர்ந்த ஆரம்ப நாட்களில் அடிக்கடி டீ குடிப்பான். மேலும் அருகிலிருந்த ஹோட்டல்களில் காலை மதியம் இரவு என்று உண்டான். பரதன் அவனைச் சமைத்து உண்ணச் சொன்னார். மதியத்திற்குக் கடைக்குச் சாப்பாட்டை எடுத்து வரச்சொன்னார். வீட்டுக்குச் சென்று உண்டு வந்தாலும் தவறில்லை என்றார். அதிகம் டீ காபி குடிப்பதற்குப் பதிலாக வெந்நீரில் எலுமிச்சை கலந்து தேவைப்பட்டால் கொஞ்சம் டீத்தூள் கலந்து குடிக்கச் சொன்னார். அதற்காகக் கடையில் ஒரு கெட்டில் வாங்கி வைத்தார். தொலைந்துபோன காலத்தை நினைத்துக்கொண்டு வருந்துவதை தவிர்க்கச் சொன்னார். சென்றது இனி மீளாது என்றார். எவரிடமும் தலை குனிந்து பேசக்கூடாது, இளிக்கக்கூடாது என்றார். இளிப்பது வெட்கத்தின் வெளிப்பாடு. காதலிக்கும் பெண்ணைத் தவிர வேறு யாரிடமும் வெட்கப்படத் தேவையில்லை என்றார். கண்ணபிரான் அரைக்கைச் சட்டை அணிந்து இன் செய்துகொண்டான். ஷூ வாட்ச் அணிந்துகொண்டான். தினமும் சவரம் செய்தான். அவரைப்போல அவன் மீசையை மழிக்கவில்லை. காலை ஏழு மணிக்கு அவன் மெடிக்கல்ஸைத் திறந்தால் இரவு பத்து மணி வரை இருப்பான். பரதன் ஒன்பது மணிக்கு வருவார். அடிக்கடி கட்சி தொடர்பான வேலைகளுக்காக வெளியில் சென்றுவிடுவார். மாலையில் சிறிது நேரம் இருப்பார். வேறு வேலை எதுவும் இல்லையென்றால் அவரும் மெடிக்கல்ஸிலேயே இருப்பார். வாடிக்கையாளர்களிடம் அதிகம் பேசத்தேவையில்லை, அதே நேரத்தில் பேசாமலும் இருக்கக்கூடாது என்பார். ஒருமுறை வந்த வாடிக்கையாளர் அடுத்தமுறை வரும் போது அவர் சென்றமுறை எதற்காக வந்திருந்தார் என்பதை நினைவில் வைத்து அதை கேட்கவேண்டும், அவர்களின் குடும்பத்து உறுப்பினர்கள் யாருக்காவது உடல் நிலை சரியில்லாமல் இருந்திருந்தால் தற்சமயம் எப்படி இருக்கிறது என்று விசாரிக்க வேண்டும், அதே நேரத்தில் தேவையின்றி அவர்களை அதிக கேள்விகளும் கேட்கக்கூடாது, அவர்கள் மீது உண்மையான அக்கறை நமக்கு உண்டு என்பதை நாம் உணர்த்தினால் போதுமானது, உண்மையான அக்கறையும் இருக்கவேண்டும் என்று அவனுக்கு அவர் வகுப்பு எடுத்தார்.
பயிலப் பயில நுண்ணறிவு கொண்ட இயந்திரம் சொற்கிடங்கிலிருந்து சூழமைவுக்குப் பொருத்தமான வாக்கியங்களை உருவாக்குவது போல பயின்று பயின்று தன்னைத் தகவமைத்துக்கொண்டான் கண்ணபிரான். அவன் பிறருடன் பேசும்போது இளிப்பதை முதலில் பிரக்ஞைப் பூர்வமாகத் தவிர்த்தான். தலையை ஒரு பக்கம் சாய்த்து சொறிந்துகொள்வதை நிறுத்தினான். மெல்ல அந்தப் பழக்கங்கள் பொருந்தாத பழைய சட்டைகள்போல அவனை விட்டு விலகின. அவன் கச்சிதமாகக் கூர்மையாக இனிமையாகப் பேசினான்.
நால்ரோட்டின் முனையில் அமைந்திருந்தது விஜயனின் ஸ்ரீகிருஷ்ண பவன். ஹோட்டலுக்குள் சாலையிலிருந்து இரண்டு மூன்று படிகள் இறங்கிச் செல்லவேண்டும். பெரும்மழை வந்தால் ஹோட்டலுக்குள் நீர் புகுந்துவிடும். ஆனால் அப்படி பெரும் மழை வந்ததுமில்லை. ஹோட்டலுக்குள் நீர் புகுந்ததுமில்லை. தூறல் குறைந்திருந்தாலும் அதிகக் கூட்டம் இல்லை. இரண்டு மூன்று பேர் காபி குடித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு தந்தை தன் மகளுக்குத் தோசையைக் கிள்ளி ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தார். அடிக்கடி அவளது வாயைத் துடைத்துவிட்டார். தலையை வருடினார். தண்ணீர் புகட்டினார்.
யசோதையின் கிருஷ்ணன், கோகுல கிருஷ்ணன், முரளிகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், கோவர்தன கிருஷ்ணன், வேங்கடகிருஷ்ணன் என்று பல்வேறு கிருஷ்ணனின் வரை படங்கள் சுவர்களில் மாட்டப்பட்டிருந்தன. மறுபக்க நீலவண்ணச் சுவரில் கிருஷ்ணன் விஜயனுக்கு குருஷேத்திரத்தில் அருளிய கீதா உபதேசத்தின் ஓவியம்.
“என்ன இன்னிக்கு மழை பெய்யுதேன்னு நினைச்சேன். வாராது வந்த மாமணியா ஹோட்டலுக்கு வந்திருக்கீங்க” என்று கல்லா அருகில் நின்ற பரதனைத் தன் கேபினிலிருந்து வெளியே வந்த விஜயன் வரவேற்றான்.
“எப்படி இருக்கீங்க விஜயன்”
“நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க. பத்மா மேடம் எப்படி இருக்காங்க”
“நல்லா இருக்காங்க”
“என்ன சாப்பிடுறீங்க”
“இல்ல உங்களப் பாக்க வந்தேன்”
“ஓ... அப்படியா... வாங்க உள்ளே போலாம். முருகா இரண்டு கப் காபி கேபினுக்கு அனுப்பு. காபி குடிப்பீங்க இல்ல பரதன். நான் இந்த நேரத்துல பொதுவா பேட்மிட்டன் விளையாட போயிடுவேன்.”
“தெரியும். இன்னிக்கு மழையா இருக்கு. போய் இருக்கமாட்டீங்கனு நினைச்சுதான் வந்தேன்.”
“பரதன் கணக்கு தப்பாதுதான். உட்காருங்க.”
குளிரூட்டப்பட்ட அறை. விஜயன் எப்போதும் ஹோட்டலில் தனக்கென்று அமைத்துக்கொண்ட கேபினில்தான் அமர்ந்துகொள்வான். அங்கிருந்து கொண்டு அனைத்தையும் கவனிப்பான். மாலைகளில் அவன் புதிதாகத் துவங்கிய கிளப்பில் பேட்மிண்டன் விளையாடுவான். எப்போதும் வெள்ளை வேஷ்டி சட்டை நெற்றியில் குங்குமத் தீற்றலுடன் இருப்பான். காபி கொண்டுவந்து வைத்துவிட்டு சென்றான் முருகன்.
“சொல்லுங்க பரதன்”
தான் கட்சியில் முழு நேர ஊழியராக மாற முடிவு செய்திருப்பதால் ஜீவா மெடிக்கல்ஸைக் கண்ணபிரானுக்கு கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் அதனால் கண்ணபிரான் பெயரிலேயே டிரக் லைசன்ஸூக்கு விண்ணப்பிக்க எண்ணியிருப்பதாகவும் அதற்கு ரெண்ட் அக்ரிமெண்ட்டைக் கண்ணபிரான் பெயருக்கு மாற்றவேண்டும் என்றும் முன்னுரைகள் ஏதும் இல்லாமல் கூறினார்.
“புல் டைம் பார்ட்டி மெம்பர் ஆகப் போறீங்களா”
“ம்”
“புல் டைம் பார்ட்டி மெம்பர் எல்லாம் வேறு தொழில் நடத்தக்கூடாதுங்கற கட்டுப்பாடெல்லாம் இன்னமும் உங்க கட்சில மட்டும்தான் இருக்கு பரதன்”
“அது நம்ம கட்சி இல்லையா விஜயன்.”
“சாரி. நம்ம கட்சிதான். காபி குடிங்க பரதன் ஆறிப்போகுது. காபி கொட்டையைச் சிக்மகளூருலயிருந்து நேரடியாவே வரவழைக்கிறேன். இங்கேயே வறுத்து அரைக்கிறோம். இங்க காபி குடிக்க மட்டுமே காலைலையும் சாய்ந்திரமும் ஒரு கூட்டம் வரும்”
தலையாட்டிய பரதன் சுவற்றில் தொங்கவிடப்பட்ட நாகராஜனின் படத்தைப் பார்த்தார். இது நாகராஜன் இல்லையா விஜயன் என்று கேட்டார். திரும்பி படத்தைப் பார்த்த விஜயன், ஆமாம், இது ரொம்ப வருஷமா இருக்கே. நீங்க இங்க வந்ததில்லைன்னு நினைக்கிறேன் என்றான்.
“வந்திருக்கேன். கேபினுக்கு வந்ததில்லை.”
“ஓ...ஆமாம் பரதன். நாகராஜன் பெரியப்பாதானே எனக்கு எல்லாமே. இன்னிக்கி நான் ஒரு ஆளா இந்த ஊருல இருக்கறதுக்குக் காரணமே அவருதானே. இந்த இடமே அவரதுதானே.”
“தெரியும். அவரு உங்க சொந்த பெரியப்பா இல்ல, இல்ல விஜயன்.”
“ஆமாம். உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். நானும் என் தம்பியும் அப்படியே கூப்படப் போயி நிறைய பேரு அப்படி நினைச்சிக்கிட்டாங்க. நான் எட்டாம் கிளாஸ் படிக்கறப்போ எங்க நைனா இறந்துட்டாரு. நிலம் பதினாறு ஏக்கர் இருந்துச்சு. மணக்குப்பம் எங்க ஊரு. திருக்கோயிலூர்ல இருந்து திருவெண்ணெய்நல்லூர் போற வழியில இருக்கு.”
“தெரியும். அந்த ஊருக்கெல்லாம் நிறைய முறை போயிருக்கேன். உங்க அப்பாவும் நாகராஜனும் ஒண்ணா படிச்சாங்க இல்ல.”
“ஆமாம். நைனாவும் நாகராஜன் பெரியப்பாவும் அண்ணாமலையில ஒண்ணாதான் பி.ஏ. படிச்சாங்க. முதல்ல பெரியப்பா விழுப்புரத்துல தான் ப்ராக்டீஸ் பண்ணாரு. அப்போ நைனாவுக்காக ஒரு நிலத்தகராறு கேஸூ கூட ஜெயிச்சு கொடுத்தாரு. ரொம்ப நல்ல சிநேகம். நைனா செத்துப்போனப்பறம் சின்ன நைனா எங்களுக்கு உதவல. அவரு பக்கத்துல எடை யாருன்னு ஒரு கிராமத்துல கம்பத்துகாரங்க வீட்ல பொண்ணு எடுத்தாரு. அப்பறம் அவங்க வீட்டோட போயிட்டாரு. எங்க சொத்தை வேற பறிக்கப் பாத்தாரு. அங்க நல்ல ஸ்கூலும் இல்ல. எங்க அம்மா நாங்க நல்லா படிக்கனும்னு பெரியப்பாவை வந்து பாத்தாங்க. பெரியப்பா பசங்க இங்க தங்கி ஸ்கூலும் காலேஜூம் படிக்கட்டும்னு சொல்லிட்டாரு. தனு பெரியம்மா கிட்டக்கூட அவரு எதுவும் கேட்கல. தனு பெரியம்மா எங்களை அவங்க பசங்க மாதிரியே பாத்துக்கிட்டாங்க. அவங்க பையன் பாலனுக்கும் எங்களுக்கும் எந்த வித்யாசத்தையும் அவங்க காட்டினதில்லை. ஒரு நாளு கூட சாப்பாடு விஷயத்துல பண விஷயத்துல முகம் சுளிச்சதில்லை. பெரியப்பா ஜவஹர் ஸ்கூல்ல சேத்தாரு. அப்புறம் காலேஜ் படிச்சேன். நான் ஹோட்டல் ஆரம்பிக்கலாம்னு நினைச்சப்போ அவருதான் இந்த இடத்தைக் கொடுத்து நடத்திக்கச் சொன்னாரு. முன்னாடி இங்க ஒரு மெஸ்ஸூம் இரண்டு மூணு கடையும் இருந்துச்சு. அப்படியே எல்லாத்தையும் இணைச்சு ஹோட்டலை ஆரம்பிச்சேன். பெரியப்பா இருக்குற வரைக்கும் அவருகிட்ட வாடகையை ஒண்ணாந்தேதின்னா கொடுத்துடுவேன். இப்போ பெரியம்மாகிட்ட கொடுத்துடறேன். நானே அப்பப்போ வாடகையை ஏத்தி பத்திரத்தைப் புதுப்பிப்பேன். என் தம்பி இன்ஜினியரிங் முடிச்சுட்டு நல்ல வேலையில இருக்கான். இதுக்கெல்லாம் அவருதான் காரணம். எனக்கு இந்த ஹோட்டலுக்கு அவரு பேரு தான் வைக்கனும்னு ஆசை. அவருதான் கூடவே கூடாதுன்னு சொல்லிட்டாரு. இந்த இடத்தை என் பேருக்கு விலைக்குக் கொடுத்துடுங்கனு கேட்கனும்னு நினைப்பேன். ஆனா கேட்க இதுவரைக்கும் தைரியம் வரல.”
“நீங்க சொல்ற பல தகவல்கள் எனக்குத் தெரியும். ஆனா இவ்வளவு விவரமா இப்போதான் தெரியுது.”
“பெரியப்பாவ பாக்க நீங்க வருவீங்க இல்ல.”
“ஆமா. அப்போ கடலூர் செயின்ட் ஜோசப்புல பியெஸ்சி கெமிஸ்ட்ரி படிச்சுட்டு இருந்தேன். வக்கீலுக்குப் படிக்கலாம்னு ஒரு எண்ணம் வந்ததுக்குக் காரணமே அவருதான். அவருக்குப் பேரே லேபர் லாயர்தான். முழுக்க முழுக்க கட்சிக்காரங்க கேஸ் தான் எடுப்பாரு.”
அவன் பேசிக்கொண்டிருக்கையில் ஒருவன் வந்து அரிசி மூட்டைகள் வந்திருப்பதாகவும் குடோன் சாவி வேண்டும் என்றும் கேட்டான். சாவியை எடுத்துக் கொடுத்தவன் குடோன் மிகச் சிறியதாக இருப்பதால் நிறைய பொருட்களை வாங்கி வைக்க முடியவில்லை என்று பரதனிடம் சொன்னான். அடிக்கடி வாங்க வேண்டியிருக்கிறது என்றும் புலம்பினான். தலை அசைத்து மௌனமாக இருந்தார் பரதன்.
“நீங்க சொன்ன விஷயம் செஞ்சிடலாம் பரதன். நீங்க போன்லையே சொல்லியிருக்கலாம்”
“நேருல வந்து சொல்றதுதானே முறை.”
“சரிதான். நீங்க வந்ததும் நல்லதாப் போச்சு. உங்களைப் பாத்து ரொம்ப நாள் ஆச்சு. அந்தப் பையன் உங்க கிட்ட வேலை செய்றாரா.”
“மூணு வருஷமா எங்கிட்ட வேலை செய்றாரு. அதுக்கு முன்னாடி கொஞ்ச வருஷம் பெங்களூருல்ல வேலையில இருந்தாரு. அவருக்கு அங்க சரியா வரல. அவருக்கு போன வருஷம்தான் கல்யாணம் ஆச்சு.”
“உங்களுக்குத் தெரிஞ்சப் பையனா இருக்கறது ஒண்ணு போதும் பரதன். நாளைக்கே கூட செஞ்சிடலாம். உங்கக் கடையில ஒருத்தரு கொஞ்சம் சதை பிடிச்சாப்புல இருப்பாரே. அவரா பரதன்”.
“ஆமாம்... அவரு தான்.”
“ஓகே டன். நான் ரெண்டு மூணு தடவை அவரப் பாத்திருக்கேன். பேரு தெரியாது. மாத்திரலாம் பரதன்.”என்று சொல்லி மேஜையைத் தட்டினான்.
“நல்லது விஜயன்”
“இதுக்குப் போயி என்ன பரதன். ஆமாம் கட்சில எதாவது போஸ்டிங் கொடுக்குறாங்களா” என்று தலையை முன்பக்கம் கொண்டு வந்து கேட்டான்.
“மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்.”
“நல்லது. கடலூர்லயா?”
“ஆமாம்”
“அப்போ நீங்க அங்க போயிடுவீங்களா”
“இல்ல பத்மாவுக்கு இங்கதானே ப்ராக்டீஸ். நெய்வேலி கோர்ட் விருத்தாசலம் கோர்ட். இப்போதைக்கு இங்கதான். நான்தான் போயி வருவேன். பின்னாடி பார்க்கலாம். நான் வரேன் விஜயன்” என்று சொல்லி எழுந்துகொண்டார். வாங்க என்று சொல்லி பரதனை வாசல் வரை வந்து வழி அனுப்பினான் விஜயன்.
திரும்பிய விஜயன் ஹோட்டல் கல்லா அருகில் கீழே சிதறிக் கிடந்த பில்களைப் பார்த்து உடனே பெருக்கச் சொன்னான். ஈரமாக இருந்த வாசலைத்துடைக்கச் சொன்னான். விரிந்த நிலையில் வாசலை அடைத்துக் கிடந்த இரண்டு மூன்று குடைகளை அப்புறப்படுத்தச் சொன்னான். டேபிள்களில் அப்படியே இருந்த காபி டம்ளர்களை எடுக்கச் சொல்லி கத்தினான். நேராக இருந்த நாற்காலிகளை எடுத்து மறுபடியும் நேராகப் போட்டான். யாரும் ஒழுங்காக வேலை செய்வதில்லை என்று சத்தம் போட்டுக்கொண்டே கேபினுக்குள் சென்றான்.
விஜயன் தாரிக் அலி என்பவரிடமிருந்து சில வருடங்களுக்கு முன்னர்தான் பரதனின் கடையிருந்த காம்ப்ளெக்ஸை வாங்கினான். அந்த வருடத்தில் இரண்டு கிரௌண்டில் இடம் வாங்கி கிளப் ஒன்றை ஆரம்பித்தான். ஊரில் இருக்கும் பணக்காரர்கள் சந்தித்துக்கொள்ள ஒரு இடம் இருக்கவேண்டும் என்ற எண்ணம் விஜயனுக்கு இருந்தது. மேலும் இது நல்ல லாபத்தைத் தரும் என்றும் அவன் எண்ணினான். விஜயன் காம்ப்ளெக்ஸை வாங்கிய புதிதில் அங்கிருந்த நான்கு கடைகளிலும் வாடகை வாங்கச் செல்வதுண்டு. பின்னர் அனைவரும் ஜிபேயில் பேடிம்மில் வாடகை செலுத்தத் தொடங்கிய பின்னர் செல்வதை நிறுத்திக்கொண்டான். கடை காம்ப்ளெக்ஸ், பின்னால் இருந்த ஆறு வீடுகள் ஆகியவற்றைச் சேர்த்து மொத்தம் இருபது செண்ட் நிலம். காம்ப்ளெக்ஸின் மாடியில் ஒரு கழிப்பறை மட்டும் இருந்தது. அவனுக்கு காம்ப்ளெக்ஸின் முதல் மாடியிலும் கடைகளைக்கொண்டு வரவேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த இடத்தில் ஒரு குடோன் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமும் அவனுக்கு இருந்தது.
மழை பெய்திருந்ததால் வெக்கையாக இல்லை. வேம்பின் கிளைகள் காற்றில் மெல்ல நடனமிட்டன. இரவின் இறுக்கத்தைக் கலைக்கும் வகையில் குடித்திருந்த ஒருவர், “நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாத்தியே” என்று உச்சஸ்தாயியில் உருகியவாறு தெருவில் நடந்து சென்றார். கண்ணபிரான் தோசை வார்த்து தக்காளி வெங்காயம் வதக்கி சட்னி செய்து வாசலில் அமர்ந்து சாப்பிட்டான். நான்கு இல்லங்கள் இருந்த லைன் வீடு. மற்ற இல்லங்களில் வெளி விளக்குகள் அணைந்திருந்தன. நான்கு வீட்டுக்கும் சேர்த்து கழிப்பறைகளும் குளியலறைகளும் கடைசியில் இருந்தன.
திருமணமாகி அவன் அவனது மனைவியை அந்த வீட்டுக்குத்தான் அழைத்து வந்தான். அந்தப் பெண்ணுக்கு அந்த லைன் வீடு பிடிக்கவில்லை. கண்ணபிரானையும் பிடிக்கவில்லை. வீடு சிறித்து இருக்கிறது. கண்ணபிரான் பெருத்து கருப்பாக எருமைமாடு போல இருப்பதாகச் சொன்னாள். ஏதோ பி.பார்ம் படித்திருப்பதாகச் சொல்லி கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள். ஆனால் ஒரு மெடிக்கல்ஸில் வெறும் மாதச் சம்பளத்தில் இருப்பவனுக்கு எப்படித் தன்னை தன் குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்கலாம் என்று பிலாக்கணம் பிடித்தாள். எப்போது கண்ணபிரான் அருகில் சென்றாலும் வயிற்று வலி, உடல் சோர்வு என்று சொல்லி ஒருக்களித்துப் படுத்துக்கொள்வாள்.
கல்யாணமான இரண்டாவது மாதத்தில் ஊரில் தோழியின் திருமணத்திற்குச் செல்வதாகச் சொல்லிச் சென்றாள். இரண்டே நாளில் திரும்புவதாகவும் சொன்னாள். சென்று ஒரு வருடத்திற்கு மேல் கடந்து விட்டது. நேரில் சென்று அழைத்தால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வருகிறேன் என்பாள். பல ஞாயிற்றுக்கிழமைகள் கடந்துவிட்டன. பரதன் இவை அனைத்தையும் அறிந்திருந்தார். அவர் ஒரு முறை அவள் வீட்டுக்குச் சென்று அந்தப் பெண்ணிடம் பேசிப் பார்த்தார். அவளுக்குப் புகார் என்று ஒன்றும் இல்லை என்பதை அவர் புரிந்து கொண்டார். ஆனால் அவளுக்குக் கண்ணபிரானைப் பிடிக்கவில்லை. பிடிக்காததற்கும் அவளிடம் காரணங்கள் இல்லை. அவள் திரும்ப வரக்கூடும் என்று அவர் அவனிடம் சொன்னார். வராமலும் போகக்கூடும். உனக்கென்று நிலையான வருமானத்தையும் கௌரவத்தையும் உருவாக்கிக்கொண்டால் அவள் வரக்கூடும். அதே நேரத்தில் அவளுக்காக என்று இல்லாமல் உனக்காக உருவாக்கிக்கொள் என்றார். அதை எப்படி உருவாக்கிக்கொள்வது என்று கண்ணபிரானுக்குத் தெரியவில்லை.
பரதன் அவன் பெயரில் மெடிக்கல்ஸை மாற்றிக்கொடுப்பதால் அது சாத்தியமாகும் என்று எண்ணினார். அவருக்குப் பல காலமாக முழு நேர ஊழியராகச் சென்று விடவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. சட்டம் படித்தவர் அதன் பின் ப்ராக்டீஸ் செய்யாமல் இருந்தார். ஒரு தொழில் இருந்தால் கட்சி வேலைகளையும் செய்யலாம் என்று ஒரு வருட டிப்ளமோ வகுப்பு படித்து மெடிக்கல்ஸை ஆரம்பித்தார். தன் ஆதர்ச நாயகனான ஜீவானாந்தத்தின் பெயரில் கடைக்கு ஜீவா மெடிக்கல்ஸ் என்று பெயர் சூட்டினார். அவர் அந்த மெடிக்கல்ஸைத் தொடங்கி பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டன. கண்ணபிரான் வந்து மூன்று வருடங்கள் சென்றுவிட்டன.
பரதன் கண்ணபிரானின் ஆளுமையில் வெகுவான பாதிப்பைச் செலுத்தினார். அவனைத் தினமும் காலையில் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யச் சொன்னார். அவர் வில் போன்ற உடலைக் கொண்டிருந்தார். இறுக்கமான கச்சிதமான உடல். வலுவான உடல் இருந்தால் வலுவான உள்ளம் அமையும் என்று கண்ணபிரானிடம் அவர் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். யார் வந்தாலும் சென்றாலும் எது நடந்தாலும் ஒரு நாளின் அட்டவணை மாறக்கூடாது என்பார். தினமும் பேப்பர் படிக்கச் சொன்னார். ஆங்கில நாளிதழ்கள் வாசிக்கவேண்டும் என்று அவனுக்கு அறிவுறுத்தினார்.
முந்தைய நாள் மழை பெய்த சுவடே தெரியாமல் மறுநாள் காலை தீயருவிபோல கொட்டிக்கொண்டிருந்தது வெயில். சுபமுகூர்த்த தினம் என்பதால் மெடிக்கல்ஸூக்கு எதிரிலிருந்த லக்ஷ்மி திருமண மண்டபத்தில் பட்டுச்சேலைகளிலும் பட்டு வேஷ்டிகளிலும் சீமாட்டிகளும் சீமான்களும் அங்கிங்கும் இங்கங்கும் பரபரத்துக்கொண்டிருந்தார்கள். மணப்பெண்ணும் மணமகனும் பிளக்ஸ் போர்ட்டில் புன்னகைத்தார்கள். கண்ணபிரான் ஏழு மணிக்கெல்லாம் மெடிக்கல்ஸைத் திறந்து வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அருகிலிருந்த மளிகைக் கடை எட்டுமணிக்கும் கூரியர் கடை ஒன்பது மணிக்கும் திறக்கும். பறவை எப்போது அமரும் எப்போது பறக்கும் என்பதை கணிக்க இயலாதது போலவே சிமெண்ட் கடைக்காரர் கடையை எப்போது திறப்பார் எப்போது மூடுவார் என்பதை அறிய இயலாது. மணப்பெண்ணுக்குத் தலைவலி என்று சொல்லி ஒருவர் கண்ணபிரானிடம் மாத்திரைகள் வாங்கிச்சென்றார். ஊரின் பணக்காரர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். ஏதோ பெரிய வீட்டுத் திருமணம் என்று எண்ணிக்கொண்டான். ஒரு கறுப்பு நிற ஹூண்டாய் க்ரேட்டா கார் வந்து மெடிக்கல்ஸ் முன் நின்றது. விஜயன் காரிலிருந்து இறங்கினான். மெடிக்கல்ஸை நோக்கிச் சென்றான். கண்ணபிரான் எழுந்து கடையில் இருந்து வெளியே வந்தான்.
“நீங்க தானே கண்ணபிரான்”
“ஆமாம் சார்”
“இங்கே எதிர்தாப்புல ஒரு கல்யாணம். நம்ம ராஜன் கார்ப்பரேஷன் இருக்குல்ல. அவங்க பொண்ணு கல்யாணம். நான் போய்ட்டு வந்துடேறன். வண்டி இங்கேயே இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றார். எப்போதும் காலை ஆறு மணியிலிருந்து ஏழு ஏழரை மணி வரை நடை செல்வார் பரதன். அவர் வீடு இருந்த கெங்கைகொண்டான் பகுதியிலிருந்து ஜெயப்பிரியா திரையரங்கைத் தாண்டி நால்ரோடு வழியாக மந்தாரக்குப்பம் பஸ் ஸ்டாண்டுவரைச் சென்று ஒரு சுற்று சுற்றிவிட்டுத் தன் வீட்டுக்குச் செல்வார். சில நாட்கள் பேருந்து நிலையத்துக்கு அருகிலிருந்த கட்சி ஆபிஸூக்குச் சென்று நாளிதழ்களை வாசித்துவிட்டுத் தன் சகாக்கள் எவரேனும் இருந்தால் அளாவிவிட்டுத் திரும்பி விடுவார். பரதனுக்கு நடை என்பது அடிப்படையில் பராக்குப் பார்ப்பதற்கான ஒரு ஏற்பாடு. பூங்காக்களில் அவர் ஒரு போதும் நடை செல்ல மாட்டார். சாலை என்பது விநோத நடனங்கள் நிகழும் மேடை என்று சொல்வார். அன்று ஒரு பாலத்தின் அருகே நடை சென்று கொண்டிருக்கையில் எதிரிலிருந்த புற்றுக்கோயிலில் ஒரு பெண் பால் ஊற்றுவதை கவனித்தபடியே கடந்தார்.
நாகங்களை வழிபடுவது எப்போதும் நம் மரபில் இருக்கிறது. தமிழகத்தில், தென்னிந்தியாவில், இந்தியாவில், தென்கிழக்கு ஆசியாவில் நாக வழிபாடு உள்ளது. பௌத்தம் போன்ற பிரிவுகளில் நாகார்ஜூனரின் வரைபடங்களில் நாகத்தைப் பார்க்க முடிகிறது. மகாவிஷ்ணு நாகத்தின் மீது துயில் கொள்கிறார். சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்களின் வழிபாட்டிலிருந்த நாகத்தை ஆரியர்கள் தங்கள் தெய்வங்களுடன் இணைத்தனர் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. குண்டலினி போன்ற யோக முறைகளில் கூட சக்தியின் குறியீடாக நாகம் வருகிறது. விவேகானந்தர் ராமகிருஷ்ண மடத்திற்காக உருவாக்கிய சின்னத்தில் நாகம் இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் வேறு எந்த விலங்கை விடவும் ஊர்வனவை விடவும் பறவையை விடவும் நாக வழிபாடு இந்திய மக்களிடம் அதிகம் காணப்படுகிறது. நம்மூரில் பக்ஷிராஜன்களை விட நாகராஜன்கள் அதிகம் இருக்கின்றனர். நாகராஜனைப் பற்றி விஜயன் அத்தனை தீவிரமாகப் பேசியது ஆச்சரியம் அளிக்கிறது. விஜயனுக்குள் எப்போதும் ஒரு வணிகனின் கணக்கு மட்டுமே இருக்கும் என்று நினைத்தால் அவனுக்குள் இப்படியான நன்றியுணர்வு கூட இருக்கிறது. ஆச்சரியம்தான். மனிதர்கள் எத்தனையோ அடுக்குகளிலானவர்கள். எந்த அடுக்கு எப்போது வெளிப்படும் என்பது மட்டுமே நிச்சயமற்றதாக இருக்கிறது. தனு அம்மையாரைப் பார்த்து பல காலம் ஆகிறது. சென்று பார்க்கவேண்டும். சிந்தித்துக்கொண்டே மாடிப் படிகளில் ஏறி வீட்டுக்குச் சென்றார். அவரது மனைவி பத்மா நாளிதழ்களை வாசித்துக்கொண்டிருந்தார்.
வெற்றிலை மென்றவாறு கார் கதவைத் திறக்கச் சென்ற விஜயன் கண்ணபிரானைப் பார்த்துக் கடை நோக்கிச் சென்றான். விஜயன் வருவதைப் பார்த்த கண்ணபிரான் ஒரு மடக்கு நாற்காலியை எடுத்து வெளியில் வைத்தான். தனக்கும் ஸ்டூலை எடுத்து வெளியில் போட்டான். உட்காருங்க சார் என்றான். கண்ணபிரான் நன்கு சவரம் செய்திருந்தான். பெரிய பெரிய சட்டங்கள் கொண்ட ஆரஞ்சு நிற அரைக்கை சட்டையை அணிந்திருந்தான். ஷூ நன்கு பாலிஷ் செய்யப்பட்டிருந்தது.
“பரதன் இல்ல”
“பரதன் ஒன்பது மணிக்கு மேல வருவார்”
“என்ன முதலாளியைப் பேர் சொல்லி கூப்பிடுறீங்க” என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.
“அவருதான் அப்படி கூப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தினாரு”
“ம்.”
“நீங்க எந்த ஊரு”
“எனக்கு எடையாருன்னு திருக்கோயிலூர் திருவெண்ணெய்நல்லூர் ரோட்டுல இருக்குற ஊர் சார்” எடையார் என்றவுடன் விஜயனின் காதுகள் பெரிதாகின.
கண்கள் விரித்த விஜயன் இதைப்பற்றி தன்னிடம் பரதன் முந்தைய தினம் ஒன்றும் சொல்லவில்லையே என்று தன் ஆச்சரியத்தைப் பகிர்ந்து கொண்டான். பரதனை எப்படித் தெரியும் என்று விசாரித்தான். ஒருமுறை சட்டமன்றத் தேர்தலுக்குத் திருவெண்ணெய்நல்லூருக்குப் பிரச்சாரத்துக்கு வந்தவர் அன்றிரவு தன் பக்கத்து வீட்டிலிருந்த தோழரின் வீட்டில் தங்கினார். அப்போது பேசிக் கொண்டிருக்கையில் தான் பி.பார்ம் படித்தவன் என்பதை அறிந்து கடைக்கு ஆள் தேவை வர இயலுமா என்று கேட்டார். அப்படி வந்துசேர்ந்தேன் என்று சொன்னான்.
“உங்களுக்கு எடையாருல சுப்புராயுலுவைத் தெரியுமா”
“பெருமாள் கோயில் பக்கத்துல கம்பத்துக்காரரு வெள்ளை அம்பாஸிடர் காரு வைச்சிருந்தாரே, அவரா”
“ஆமாம்.”
“உங்களுக்கு அவரு எதாவது சொந்தமா”
“என் சொந்த சித்தப்பா. நான் மணக்குப்பம்தான்”
“அப்படியா. பரதன் சொல்லலையே சார். அவங்கதான் எங்க முதலாளிங்க. அதாவது ஆண்டைங்க. எங்க அப்பா காலம் வரைக்கும் அப்படித்தான் இருந்துச்சு. அவரு புள்ளதான் இந்த ஆண்டை அப்படிங்கறது எல்லாம் இனிமே வேணாமுன்னுட்டார். நீங்க எங்களுக்குக் கடன்பட்டவங்க இல்ல, நாங்களும் உங்களுக்குக் கடன்பட்டவங்க இல்லன்னு சொல்லிட்டாரு. என் தம்பி படிக்கலை, அவங்க கொள்ளிலதான் வேலைக்குப் போறான். ஏதாவது வீட்டு வேலை இருந்தா செய்வான். இப்ப தான் சார் தோணுது, உங்களுக்கு அப்படியே சுப்புராயலு ஐயா ஜாடை”
“பரதன் இப்போ எங்க இருப்பார்”
“வீட்ல”
“சரி. எனக்கு நேரமாச்சு. நான் கிளம்புறேன்.”
“சரி சார். ரெண்ட் அக்ரிமெண்ட்டை இன்னிக்கி சாய்ந்திரம் ஹோட்டலுக்குக் கொண்டு வரலாமா”
“வாங்க அதுக்கென்ன, நேத்தே பரதன்கிட்ட பேசினதுதானே” என்று சொல்லிக்கொண்ட நாவைச் சுழற்றி பற்களில் சிக்கிக்கொண்ட பாக்கைத் துப்பிவிட்டு காரை நோக்கிச் சென்றான்.
லாரி ப்ரோக்கர் ஷெட்டின் மேல் மாடியிலிருந்தது பரதன் குடியிருந்த வீடு. விஜயன் காரைக் கொண்டு வந்து நிறுத்துகையில் ப்ரோக்கர் ஷெட் திறக்கப்படவில்லை. பத்மா கேஸ் கட்டை மடித்து அட்டைப்போட்டு கட்டிக்கொண்டிருந்தார்.
“வாங்க விஜயன். உட்காருங்க.”
“எப்படி இருக்கீங்க மேடம்”
“நல்லா இருக்கேன்”
“போன வாரம் கோர்ட்டுக்கு வந்திருந்தீங்களா. உங்களைப் பாத்தேன். பேசனும்னு நினைச்சேன். அப்பறம் உங்களைப் பாக்க முடியல”
“ஆமாம் மேடம். கடைப் பசங்க நைட் ஹோட்டலைக் கிளீன் பண்ணிட்டு தண்ணீ பேரல்களை வெளியவே வைச்சுட்டாங்க. அதுக்கு கேஸ். பைன் கட்டிட்டு வந்தேன்” பத்மாவின் புருவங்கள் இன்னும் கீழே இறங்கவில்லை என்பதை கவனித்த விஜயன் வக்கீல் நமச்சிவாயம்தான் எடுத்துக் கொடுத்தாரு என்று சொன்னான். சரி என்பது போல தலையசைத்தார் பத்மா. நெற்றியில் பெரிதாகப் பொட்டு வைத்திருந்தார். வெண்ணிற பருத்தி புடவை அணிந்திருந்தார். கைகளில் கழுத்தில் எந்த அணிகலனும் இல்லை.
“ப்ராக்டீஸ் எப்படி இருக்கு மேடம்”
“பரவாயில்ல. விருத்தாசலமும் போறதால இப்ப கொஞ்சம் ஓகே.” என்று சொல்லி கேஸ் கட்டுகளின் மீது கேஸ் நம்பரை எழுதினார். விஜயன் தன்னைப் பார்க்க வரவில்லை பரதனைப் பார்க்க வந்திருக்கிறார் என்பதை புரிந்துகொண்ட பத்மா,
“பரதன், விஜயன் வந்திருக்கிறார் பாருங்க” என்று அமர்ந்த இடத்திலிருந்தே சற்று குரல் உயர்த்திச் சொன்னார். தனக்கும் பத்மாவுக்குக் காபி போட்டு எடுத்து வந்த பரதன் விஜயனிடம் ஒரு கப்பை நீட்டி நான் அப்பறம் குடிச்சுக்குறேன் என்று கொடுத்தார். விஜயன் மறுக்காமல் வாங்கிக்கொண்டான். விஜயன் கண்ணபிரானைப் பார்த்ததையும் பேசியதையும் சொன்னான். முந்தைய தினம் பரதன் ஹோட்டலில் கவனித்ததுபோல பொருட்களை வைக்க அதிக இடம் இல்லாததால் அந்த மெடிக்கல்ஸ் இருக்கும் இடத்தையே குடோனாக வைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் சட்டென்று தோன்றியதாகச் சொன்னான். பரதன் குடோனுக்கு மாற்று ஏற்பாடுகளைப் பரிசீலிக்கலாம் என்று கூறிய போதும் விஜயன் உறுதியாக சொன்னதையே திரும்பச் சொன்னான். குடோன் தான் பிரச்சினையா இல்லை வேறு எதாவது பிரச்சினையா என்பதைப் பரதனால் அறிய முடியவில்லை. கண்ணபிரான் ரெண்ட் அக்ரிமெண்ட்டை எடுத்துக் கொண்டு வந்துவிடக் கூடும் என்பதால் நேரில் சொல்லிவிடலாம் என்று வந்ததாகச் சொன்னான். இதைவிட நல்ல இடத்தில் மெடிக்கல்ஸூக்கான இடம் நிச்சயம் கிடைக்கும் என்றும் சொன்னான். பரதன் அதன் பின் பேசுவதை தொடர விரும்பவில்லை.
விஜயன் பரதனிடமும் பத்மாவிடமும் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினான். விஜயனின் முகத்தில் தெரிந்த பதற்றமும் அவசரமும் பரதனைக் குழப்பியது. குடோன் தான் வைக்கவேண்டும் என்றால் முந்தைய தினமே சொல்லியிருக்கலாம். எப்போதாவது சிமெண்ட் கடையைத் திறக்கும் சின்னத்துரையைக் காலிச் செய்யச் சொல்லி அங்கு வைக்கலாம். ஏன் நல்ல வணிகம் நிகழும் கடையை இடம் மாற்ற வற்புறுத்தவேண்டும். புதிய இடத்திற்கு கடையை மாற்றினால் பழைய வாடிக்கையாளர்கள் வராமல் போகக்கூடும். அதுவும் கண்ணபிரானுக்கு மாற்றிக்கொடுக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் இது அவசியமற்றதாகப் பரதனுக்குத் தோன்றியது. அதில் ஏதோ உள்நோக்கம் இருக்கலாம் என்றாலும் என்ன உள்நோக்கம் இருக்கும் என்று அறிய இயலவில்லை. எப்போதும் போல ஒன்பது மணிக்கு கடைக்குச் சென்ற பரதன் கண்ணபிரானிடம் விஜயனுடன் நடந்த உரையாடல் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். கண்ணபிரானிடம் வீனஸ் கம்யூட்டர் சென்டருக்குச் சென்று பத்திரம் வாங்கி ரெண்ட் அக்ரிமெண்ட்டைத் தயாரிக்கச் சொன்னார். அதற்கான தரவுகளையும் முந்தைய பத்திரத்தின் நகலையும் கொடுத்தார். கண்ணபிரான் திரும்ப வந்தப் பின்னர் பத்திரத்தைச் சரி பார்த்தார். அனைத்தும் சரியாக இருக்கிறது, விஜயனுக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்கிறதாம் அதனால் பத்திரத்தை அடுத்த நாள் அல்லது அதற்கும் அடுத்த நாள் கொண்டு வரச்சொல்லி குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார் என்று சொன்னார். கண்ணபிரான் மேற்கொண்டு எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் அவன் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. அதை கவனித்த பரதன் தான் ஒருவரைச் சந்திக்கவேண்டும் என்று மட்டும் சொல்லி வெளியே கிளம்பினார்.
தனு அம்மையாரின் இல்லம் முன் இருந்த சிறிய கணபதி கோயிலில் இரு பெண்கள் நின்றுகொண்டிருந்தார்கள். வாசலில் வி.என்.இல்லம் என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. மா, கொய்யா, வாழை, தென்னை மரங்கள் சூழ இருந்தது இல்லம். செம்பருத்தியும், ரோஜாவும், மல்லியும் பூத்திருந்தன. கதவு திறந்திருந்தது. வெளியே இருந்த திண்ணையில் ஒரு வயோதிகர் படுத்திருந்தார். தனு அம்மையார் இருக்கிறாரா என்று தெரியவில்லை. காலிங் பெல் எங்கு இருக்கிறது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. பரதன் திண்ணையில் அமர்ந்தார். அந்த இரு பெண்களில் ஒருத்தி பரதனை நோக்கி வந்தாள். யாரைப் பார்க்கணும் என்று விசாரித்தாள். தனு அம்மையாரைப் பார்க்கவேண்டும், பரதன் என்று சொல்லுங்கள் என்றார். உள்ளே சென்ற பெண் பரதனை உள்ளே வரச்சொல்லி அழைத்தாள். தாழ்வாரத்தில் ஒரு சாய்வான மர நாற்காலியில் அமர்ந்திருந்தார் தனு. பார்த்து வருடங்கள் கடந்துவிட்டதை இருவரும் சொல்லிக்கொண்டனர். பரதன் ஒரு மழை நாளின் இரவில் ரேஷன் அரிசி கடத்தப் படுவதை நாகராஜனிடம் வந்து சொன்னதை நினைவு கூர்ந்தார் தனு. அப்போது நாகராஜன் தன் ராஜ்துத் வண்டியில் பரதனை ஏற்றிக்கொண்டு வடலூர் சபை அருகே டெம்போவை மடக்கி பிடித்ததைச் சொல்லிச் சிரித்தார்.
“நீங்க அப்போ அடிக்கடி வருவீங்க இல்லையா. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. நீங்க லா படிச்சிட்டு ப்ராக்டீஸ் பண்ணலைன்னு அவருக்கு வருத்தம் சொல்லியிருக்கார். உங்களுக்குக் கட்சில போஸ்டிங் கொடுத்திருக்கிறதா சொன்னாங்க. சொல்லுங்க, என்ன விஷயம்.”
பரதன் நிகழ்ந்தவற்றைச் சுருக்கமாகச் சொன்னார். தனு விஜயன் அவ்வாறு நடந்து கொள்பவன் இல்லையே என்று மறுத்தார். இந்த வீட்டில் நாகராஜன் இருந்தபோது எத்தனையோ பிள்ளைகள் உணவருந்தியிருக்கிறார்கள். எத்தனையோ பிள்ளைகளுக்கு ஒரு விடுதி போல இந்த வீடு இருந்திருக்கிறது. அவர்களோடு விஜயன் பழகியிருக்கிறான். ஒன்றாக உண்டு உறங்கியிருக்கிறான். ஆனால் வேறு எந்தக் காரணமும் இருக்க வாய்ப்பில்லை என்று பரதன் நிகழ்வுகளைத் தொகுத்து மறுபடியும் கூறுகையில் தனுவாலும் அதை ஏற்காமல் இருக்க முடியவில்லை.
“என்ன செய்யலாமுனு சொல்றீங்க” என்று கேட்டார்.
“தெரியலை. என்னால இதை வேற மாதிரியும் அணுக முடியும். இன்ஜங்க்ஷன் வாங்க முடியும். ஆனா விஜயன் இங்க வளர்ந்தவரு. அதான் உங்களை ஒரு முறை பாத்து பேசிட்டு போகலாமனு நினைச்சேன்.”
“நான் ஒரு தடவை விஜயன்கிட்ட பேசிப்பாக்குறேன். நீங்க ஒரு இரண்டு மூணு நாளு இந்த விஷயத்தை அப்படியே விட்டுடுங்க.”
தனு அம்மையாரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த போதும் அந்த வயோதிகர் அங்கேயே படுத்திருந்தார். திண்ணைக்கு முன்னர் வேய்ந்திருந்த கூரையால் வெயில் தெரியவில்லை. அந்த இரு பெண்கள் பரதனின் வண்டியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பரதனைப் பார்த்ததும் இறங்கி ஓடினர்.
வாடகை கொடுத்து இரண்டு மூன்று நாட்கள்தான் ஆகின. அதற்குள் தனு பெரியம்மா ஏன் அழைத்தார் என்று விஜயனுக்குப் புரியவில்லை. அதுவும் அன்று மாலையே கட்டாயம் வந்து சந்திக்கவேண்டும் என்று சொன்னதும் ஆச்சரியம் அளித்தது. அவர் அப்படி அழைத்ததே இல்லை. பரதன் பெரியம்மாவிடம் ஏதேனும் சென்று பேசி இருப்பாரா என்று நினைத்தவாறு அவரது வீட்டுக்குச் சென்றான். தனு உடல் மெலிந்து சாய்வு நாற்காலியில் சுருண்டிருந்தார். விஜயன் அருகில் வந்து அமர்ந்த போதும் தனு அவனிடம் முகத்தைக் காட்டவில்லை.
“பெரியம்மா வரச் சொல்லியிருந்தீங்க”
தனுவின் தங்கை மகள் ஒரு டம்ளரில் தண்ணீர் வைத்துவிட்டு சென்றாள். அவளிடம் ஏதாவது கேட்கலாம் என்பதற்குள் அவள் ஏதோ ஒரு அறைக்குள் மறைந்துவிட்டாள். டிவியில் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தன.
“பெரியம்மா வரச் சொல்லியிருந்தீங்க” என்று மறுபடியும் சற்று சத்தமாகச் சொன்னான் விஜயன்.
“எனக்கு காது கண்ணு புத்தி எல்லாம் நல்லாத்தான் இருக்கு விஜயா” என்று விஜயனை பார்க்காமலே சொன்னார் தனு.
“அவசரமா வரச் சொன்னீங்க” எழுந்து அருகிலிருந்த டீபாயிலிருந்த ரிமோட்டை எடுத்து டிவியை அணைத்துவிட்டு அமர்ந்தார். அவனையே சிறிதுநேரம் அமைதியாகப் பார்த்தார்.
“நான் கேக்குறதுக்கு நேரடியா பதில் சொல்லு விஜயா”
“கேளுங்க”
“பரதன் கடையில வேலை செய்யுற பையனுக்கு நீ ஏன் மெடிக்கல்ஸைக் கொடுக்க முடியாதுங்குற”
“இல்ல பெரியம்மா அங்க குடோன் வைக்கலாமுன்னு ஒரு ஐடியா வந்துச்சு. பரதன்கிட்ட நேரடியாவே அவரு வீட்டுக்குப் போயி காலையிலேயே சொல்லிட்டேன். அவரு உங்களை வந்து பாத்தாரா”
“உனக்கு குடோன் வைக்க வேற எடமே கிடைக்காதா. உனக்கு இல்லாத இடமா.”
“அதில்ல பெரியம்மா. அந்தக் கடை ரோட்டுலெயே இருக்கு. லோடு ஏத்த இறக்க வசதியா இருக்கும்.”
“அந்த சிமெண்ட் கடை”
“அந்த சின்னத்துரை காலி செய்யமாட்டான். சண்டைக்கு வருவான்”
“அப்போ வேற எந்தக் காரணமும் இல்ல”
“இல்லையே… ஏன்… யாராவது எதாவது சொன்னங்களா”
“சரி விஜயா. உனக்கு நிறைய வேலை இருக்கும். நீ கிளம்பு. அதை கேக்கத்தான் கூப்பிட்டேன்.” அதன் பின் தனு பேசவில்லை. ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்தார். விஜயன் எழுந்திருக்காமல் அப்படியே அமர்ந்திருந்தான். தனு அவனைப் பார்த்து ஏன் இன்னும் இங்கு இருக்கிறாய் என்றும் கேட்கவில்லை, போ என்றும் சொல்லவில்லை. மௌனம் ஒரு பெருஞ்சுவராக மாறி தன் முன் எழுந்து நிற்பதை உணர்ந்தான். அவனுக்கு அந்தச் சுவற்றை எப்படி உடைப்பது என்று தெரியவில்லை. அவன் மெல்ல எழுந்து எதுவும் சொல்லாமல் வெளியில் வந்தான். திண்ணையில் அமர்ந்திருந்த வயோதிகர் வாழைமரத்துக்கு அருகில் சென்று அமர்ந்து சிறுநீர் கழித்தார். திரும்ப வந்தவர் விஜயனைப் பார்த்து யாருப்பா நீ என்று கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திராமல் உள்ளே சென்றார். மா மரத்தின் இலைகள் காற்றில் கூத்தாடின. இலைகள் அத்தனையும் நாவுகளாக மாறி ஒவ்வொன்றும் ஒரு வாதத்தை முன் வைப்பதுபோல விஜயனை அழுத்தின. உரையாடல்கள் பட்சிகளின் இரைச்சலாக மாறி காதைத் துளைத்தன. ஓங்கி வளர்ந்திருந்த தென்னைகள் ஆகாயத்தின் ஆரஞ்சு கதிர்களின் ஒளியில் தங்களின் தனிமையை உரைத்தன. அவனுக்குத் தன் தலைக்கு மேல் இருந்த கூரை சட்டென்று காணாமல் போய் விட்டது போல இருந்தது. மேலே ஆகாயம் கீழே மண். விஜயன் மிகவும் தனித்துவிடப்பட்டவனாக உணர்ந்தான். அவன் அந்த தென்னைகளை மறுபடியும் பார்த்தான். அவை இப்போது ஓங்காரமிட்டன. கண்களை விலக்கி வீட்டைப் பார்த்தான். அவன் வளர்ந்த வீடு. அவனுக்கு அந்நியமாகத் தெரிந்தது. இன்று வளர்ந்த சுவர்கள் நாளை மதில்களாக மாறும். மதில்களைப் பள்ளிகளிலும் சிறைச்சாலைகளிலும் மனநலவிடுதிகளிலும் அமைக்கின்றனர். புக முடியாத வீடு செல்லமுடியாத கருவறை. கரும்பூதம் ஒன்று வானத்திலிருந்து இறங்கிவருவது போல அந்தி மங்கி இருள் சூழ்ந்தது. காரில் சாய்ந்து நின்று சாலையை வெறித்துப்பார்த்தான். வாகனங்கள் ஒளி பாய்ச்சி சீறிக்கொண்டுசென்றன. கிழக்கில் பிறை உதித்திருந்தது. உடனே வந்து ரெண்ட் அக்ரிமெண்ட்டைக் கண்ணபிரான் பெயருக்குப் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று பரதனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு காரில் ஏறி ஹோட்டலுக்குச் சென்றான்.