மரணம் அருந்தும் ஒரு கோப்பை லெமன் டீ
எக்காலத்திலும் நிகழக்கூடிய
மரணத்திற்கு அளிக்க
உவந்தேகியிந்த
உடலைத் தூக்கி
சுமந்துகொண்டு திரிகிறேன்
திரைகளின் மறைவிலிருந்து
வெளிவரும் உண்மைகளின் வெளிச்சத்தில்
பூப்பெய்துகிறது மரணம்
உடைந்து சிதறும்
யதார்த்தம் தவிர்த்த
பொய்மை கணங்களின்
குருதிகளற்ற கண்ணீரின் வெம்மையில்
தனக்கான ஒரு கோப்பை
லெமன் டீயைத் தயாரித்து
அருந்தி மகிழ்கிறது மரணம்
எனது உடலின் மீதமர்ந்தவாறு
அனைவரும் சமமென்றுரைத்து.
வழிவிட்டுக் காத்திருத்தல்
சுகானுபவம் தந்த தித்திப்பில்
ஓய்வைத் தழுவிக்கொண்ட சொற்களை
நீர்மை துளிர்க்கும் பாலைநிலத்தில்
தேடி அலைகிறேன்
சிதறுண்டு போயின
உனதும் எனதும் ஆன சொற்கள்
காட்சிப்படுத்திய கணங்களில்
வரியொலி தவிர்த்து
அவற்றை விவரிப்பது குறித்து
மாற்றிச் சிந்திக்கையில்
தோற்றுவித்து விடும் பிரச்சினைதனை
வேறு ஒரு மொழி உற்பத்தியாகி
கடலின் இனிப்பில்
கரைந்து போன நாட்களின் பொழுதுகளில்
மீளவும் ஞாபகம் செய்து
உயிர் கொள்கின்றன சொற்கள்
நிகழும் பேரின்ப
பெரு அமைதியில்
வழிவிட்டுக் காத்திருக்கிறார்
கட உள்.
கனவுகளைச் சுமக்கும் புத்தன்
கரைந்தொழுகும் காலம்
கடத்திச் சென்று காணாமல் ஆக்கிவிடும்
எந்தன் கனவுகளைத்
துரத்தியோடிச் சென்று தொடர்வதில்
நிகழ்கிறது
சில நிசப்தங்கள்
வழுவமைதி ஒழுகல்களின்றி என்னில்
புத்தன் கல்லைச் சுமந்தான்
கற்கள் கூடி சுமந்தன புத்தனை
நான் சுமக்கிறேன்
ஒரு கல்லை
ஒரு புத்தனை
என்னில் நிகழும் சில கனவுகளை.