தேசியத்திற்குப் பாதை சமைக்கும் திராவிட மாடல்

2014-க்குப் பின்னர்த் தேசிய அரசியலில் ஏற்பட்ட ஜனநாயக நெருக்கடி 2019ல் கொள்கை அளவில் ஒத்த கருத்துள்ள அரசியல் கட்சிகள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியாக ஓர் அணியில் திரள வலுவான காரணமாக அமைந்தது. காங்கிரஸ் கட்சியே அதிகாரப்பூர்வ முடிவை வெளியிடாத நிலையில் ஸ்டாலின் அவர்கள் ராகுல்காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். விசிக, இடதுசாரி கட்சிகள், மதிமுக எனத் தானாக முற்போக்குச் சக்திகள் ஓரணியாகச் சேரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வாக்குவங்கி அடிப்படையிலும் இது திமுகவிற்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுத்தது. சிறுபான்மையினர் வாக்குகள் சிதறாமல் அவற்றை அணிதிரட்டி திமுக 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அதே கூட்டணியுடன் தனது வெற்றியை உறுதிசெய்தது. இப்படியாகப் பத்தாண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் திமுக ஆளும் கட்சியாகத் தமிழகத்தில் வெற்றிபெற்றுள்ளது.

பெண்களுக்கான போக்குவரத்தை இலவசமாக்கியது, பல விமர்சனங்களுக்கு இடையிலும் கொரோனா பேரிடரைத் திறம்படக் கையாண்டு அதனைக் கட்டுக்குள் கொண்டு வந்தது, தமிழருக்கு அரசு பணிகளில் முன்னுரிமை வழங்கும் வகையில் சில அரசியல் திருத்தங்களை மேற்கொண்டதென ஆரம்பகாலத் திமுகவின் பணி வாக்களித்தோரைத் திருப்தி செய்யும் விதமாகவே அமைந்தது. திராவிட மாடல் என்னும் பதம் ஒரு அரசியல் ஆயுதமாக மாற்றப்பட்டது. இதற்கெல்லாம் அணி சேர்க்கும் வகையில் நிதி அமைச்சராக ஸ்டாலின் அமைச்சரவையில் பொறுப்பேற்ற பழனிவேல் தியாகராஜன் அவர்கள் ஆட்சியின் மகுடமாகப் பார்க்கப்பட்டார். ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒன்றிய அரசுக்கு எதிராக அவர் எழுப்பிய கேள்விகளும், விமர்சனங்களும் தேசிய அளவில் கவனம் பெற்றன. திராவிட முன்னேற்றக்கழகத்தின் உயிர்நாதமாக முழங்கப்படும் சமூகநீதியின் பால் பற்றும், தெளிந்த அறிவும் பெற்றவராக எந்த நேர்காணலிலும் அவரால் அனாயசமாகத் தரவுகளுடன் பதில்கூற முடிகிறது. அவர் வலியுறுத்தும் கூட்டாட்சித் தத்துவத்தின் அவசியம் குறித்துச் சென்ற மணல்வீடு இதழில் வெளியான பாலசுப்ரமணியம் முத்துசாமியின் கட்டுரையும் வெளிப்படுத்தியிருந்தது.

எனினும் இவையெல்லாம் ஒரு நல்ல மாற்றத்திற்கான தொடக்கங்களாக இருக்குமென எண்ணியிருந்த சமயத்தில் திமுக மீண்டும் கலைஞர் தலைமையிலமைந்தது போலவே தனது அசலான சுயரூபத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது. எதிர்கட்சியாக இருந்தபொழுது எந்த எட்டுவழிச் சாலைக்கு எதிராகக் குரல் கொடுத்ததோ ஆட்சிக்கு வந்ததும் அதற்கு நேர் எதிரான முடிவைதனது நிலைப்பாடாக வெளிப்படுத்தியுள்ளது. இதிலிருந்தே திமுகவின் சாயம் வெளுக்கத் தொடங்கியதெனக் கூறலாம். மேலும் மாணவர்களின் கல்விக்காக அரசால் நடத்தப்படும் கல்வி தொலைக்காட்சியின் CEOவாக வலதுசாரி ஆதரவுகொண்ட ஒருவரை நியமிக்க முன்வந்தது அதன் மீதான மற்றொரு கறை. இல்லம் தேடிக் கல்விமீது வைக்கப் பட்ட குற்றச்சாட்டு என அதன் கொள்கைகள் பல இடங்களில் வழுக்கத் தொடங்கின. வெறும் இரண்டே ஆண்டுகளில் அதுவும் வெற்றிப் பெற்ற முதல் தேர்தலிலேயே உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கி திமுக எப்போதும் ஒரு குடும்பநலனுக்கான அரசியல் கட்சிதான் என்பதை எந்தத் தயக்கமும் இல்லாமல் நிரூபித்துள்ளது. இதற்குமேலும் திமுகவை வெறும் சமூகநீதி என்ற வாயளவிலான சமாதானத்திற்காக மட்டுமே வலதுசாரிய அரசியலுக்கெதிரான ஆயுதமாக உயர்த்திப்பிடிக்க முடியாதென்பது தெளிவாகியுள்ளது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க அரசு நிர்வாகம் சார்ந்த அளவில் இந்த திராவிட மாடல் அரசின் செயல்பாடு என்னவாக இருக்கிறதென்பதையும் சில நிகழ்ச்சிகள் மூலம் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடலின் மேற்பூச்சுக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து நம்பி வாக்களித்த சாமான்யனின் காலடிகளில் உதிரத் தொடங்கியுள்ளது. அதில் பி.டி.ஆர்.க்கும் பங்கிருப்பது கசப்பான உண்மையாகும்.

அரசுப் பணிகளை எடுத்துக்கொள்வோம். எந்தவித ஒழுங்குமுறையுமின்றி நடைபெற்ற ஆவின் மற்றும் போக்குவரத்துத்துறை சார்ந்த பணிநியமனங்கள் இனி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறுமெனச் சொல்லப்பட்ட அறிவிப்புகள் ஆரம்பத்தில் சில நம்பிக்கையைத் துளிர்விடச் செய்தன. ஆனால் இந்த ஆண்டு வெளி ஆகியிருக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் கால அட்டவணை போட்டித் தேர்வை எதிர்நோக்கியிருக்கும் பல்லாயிர கணக்கானோரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குறைந்தது வருடத்திற்கு முப்பது, முப்பத்தைந்து தேர்வுகள் மூலம் பத்தாயிரத்திற்கும் அதிகமானோரைத் தேர்வு செய்யும் ஆணையம் இவ்வருடம் வெறும் இரண்டாயிரம் பணியிடங்களுக்கான பத்து, பதினைந்து தேர்வுகளை மட்டுமே நடத்தத் திட்டமிட்டுள்ளது. பெரும் எதிர்ப்பிற்குப் பின் பேருக்கு இரண்டு தேர்வுகளைச் சேர்த்துள்ளது. மேலும் தூய்மைப் பணியாளர்களின் பணிநிரந்தரம் கோரிய போராட்டம், இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டமெனத் தொடர்ந்து அரசுப் பணிக்காகவும் அரசு ஊதியத்திற்காகவும் போராட வேண்டிய சூழலே நிலவுகிறது. கௌரவ விரிவுரையாளர்களின் சம்பளத்தை ஒப்பிடும்போது கூலித்தொழிலாளியின் ஒருநாள் வருமானம் அதிகமாக இருக்கிறது. கல்வியை முன்னுதாரணமாகக் கூற வேண்டிய ஆசிரியர்களே கல்வி பெற்றதற்கான தண்டனையை அனுபவிப்பது போலதான் இன்றைய அரசு நிர்வாக மேலாண்மை உள்ளது. பொருளாதாரம் பற்றிய பிடிஆரின் வாதங்களில் வெளிப்பட்ட கோபமும் நியாயமும் இதுபோன்ற நிலைமையைச் சீர் செய்துவிடுமென்ற நம்பிக்கையை விதைத்தன. ஆனால் தப்பித் தவறி அரசு கஜானாவிலிருந்து பொது மக்களுக்குக் கசிந்துகொண்டிருந்த சொற்ப தொகைகளையும் நிறுத்திவிடும் வண்ணமே அவரின் கறாரான செயல்பாடுகள் உள்ளன. எதற்கெடுத்தாலும் கொரோனா காலப் பேரிடரையும் கடந்த ஆட்சியின் சீர்கேட்டையும் காரணமாகக் கூறுவதே அமைச்சர்களின் பதிலாக இருக்கிறது.

வெறும் வாக்காளனின் சாதாரணப் புலம்பலாகவும் விமர்சனமாகவும் மட்டுமே இதனைச் சுருக்கி அணுகமுடியாது. பிஜேபி வெளிப்படையாகவே தனது பொருளாதாரக் கொள்கையாக அறிவித்துக்கொள்ளும் 'minimum government' என்னும் ஆபத்தான பெரும் முதலாளிகளுக்கு ஆதரவான தனியார்மய சார்பையே திராவிட மாடலும் மறைமுகமாகத் தழுவுகிறது. நம்ம ஸ்கூல் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளைப் பேணுவதற்கான பொறுப்பைத் தனியாருக்குத் திறந்து விடுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் மீதான அரசின் தார்மீகக் கடமைகளை மெல்ல மெல்ல கைகழுவுவதே இன்றைய நவீன பொருளாதார வளர்ச்சியாக உலக நாடுகளால் முன்வைக்கப்படுகிறது. இது கல்வியையும் வேலைவாய்ப்பையும் தனி மனிதனின் பலத்திற்கும் வலுவிற்கும் உட்பட்ட சவாலாகவே விட்டுவிடுகின்றன. அமைச்சராகப் பதவியேற்ற சில நாட்களுக்குள்ளாகவே தனியார் வேலை வாய்ப்பு முகாமொன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளும் உதயநிதி “அரசால் அனைவருக்கும் வேலை வழங்க முடியாது” என இறுமாப்பு பொங்க கூறுகிறார்.

இதில் பிடிஆரின் செயல்பாட்டிற்கு வருவோம். கடந்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முதலாக நிதி பற்றாக்குறையினைச் சில சதவீதங்கள் குறைத்துக் காட்டியது மட்டுமல்லாமல் அரசின் வருவாயைப் பெருக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். தொடர்ந்து கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற ‘லீக்கேஜ்’களைச் சரிசெய்ய முயன்றார். மேலும் மத்திய அரசையும் அதன் சார்பு ஊடகங்களையும் திறமையாகக் கையாண்டார். ஜிஎஸ்டி கவுன்சிலில் தமிழ்நாட்டின் எதிர்ப்பை வலுவாகப் பதிவு செய்தார். அரசுக்குப் பொருளாதார ஆலோசனை வழங்குவதற்கு நோபல் பரிசு பெற்ற வல்லுனர்கள் அடங்கிய திட்டக்குழு ஒன்றையும் அமைத்து மாநிலத்தின் பொருளாதார மேம்பாட்டில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இவையெல்லாம் வாக்களித்த மக்களுக்கு ஒரு அரசியல்வாதி செய்ய வேண்டிய அடிப்படைக் கடமைகள்தான். ஆனால் இதனைத் தாண்டி பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்துவோமெனத் திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த வாக்குறுதியினை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி வரும் அரசு ஊழியர்களின் கோரிக்கைக்குச் செவி கொடுக்கவும் தக்க பதில் தரவும் மறுத்து வருகிறார். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியும் உரிய முறையில் வழங்கப்படாமல் தாமதப்படுத்தப்பட்டது. இதிலும் அரசு ஊழியர்களின் போராட்டத்திற்குப் பிறகுதான் ஒரு தீர்வு எட்டப்பட்டுள்ளது (முழுவதும் நிவர்த்திச் செய்யப்பட்டுவிட்டதா என்பது தெரியவில்லை).

குரூப் ‘சி’ மற்றும் ‘டி’ போன்ற அரசு கீழ்நிலைப் பணிகளுக்கான காலிப் பணியிடங்கள் ‘Out Sourcing' மூலம் நிரப்பப்படுமென அரசாணையில் குறிப்பிட்டு இருந்தது கண்டனங்களுக்கும் விமர்சனத்திற்கும் ஆளாகி உள்ளது. ‘Out Sourcing' என்பதன் மூலம் தற்போதிருக்கும் வெவ்வேறு அரசுப் பணியாளருக்கு ஆன தேர்வாணையங்களை அரசு என்ன செய்யத்திட்டமிட்டுள்ளது என்பதும் கேள்விக்குறி ஆகிறது. இந்த குரூப் சி மற்றும் டி பணிநிலைகளில் ஏராளமான பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர் அதிக அளவு பயனடைந்து வருகின்றனர். இன்று அது பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் இந்த ‘Out Sourcing' முறையில் வடமாநிலத்தவர் வேலைபெறும் அபாயமும் இருப்பதை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும் வெறும் பொறுப்பு தலைவருடன் சொற்ப ஊழியர்களைக் கொண்டு பெயரளவில் நடத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

அரசு ஊழியர்கள் நடத்திய பிரதிநிதித்துவ மாநாட்டில் அரசு ஊழியர் சங்கத் தலைவர் அன்பரசு ‘அத்த கூலிக்கு ஆளெடுக்க முயலும் இவர்களைக் கார்ப்ரேட் மாடல் என்று கூறாமல் எப்படிக் கூறுவதெனக் காட்டமாக விமர்சித்துள்ளார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது தற்போதைய திமுக அரசும் அரசு பணிகளையும், அரசு ஊழியர்களுக்குச் செய்யப்படும் செலவினங்களையும் தேவையற்ற நிதிச்சுமையாகக் கருதுவதாகவே தோன்றுகிறது. இப்படியாக அரசு ஊழியர்களின் கசப்பைச் சம்பாதித்துக்கொள்ளும் வண்ணமே பிடிஆரின் நடவடிக்கைகள் உள்ளன. ஆனால் இவை எந்த 'mainstream media' அல்லது மாதத்திற்கு ஒரு முறையாவது நேர்காணல் செய்யப்பட்டுவிடும் Youtube சேனல்களிலோ கேள்வியாக எழுப்பப்படுவதில்லை. அரசியலும் பொது மக்களின் அன்றாடமும் இருவேறு பாதைகள் போல பிளவுபட்டுள்ளதே இம்மாதிரியான மந்ததன்மைக்குக் காரணமெனலாம். மக்களுக்கான நலத்திட்டங்கள் சரியான பயனாளர்களைச் சென்று சேரும் வகையில் இருக்கவேண்டுமெனப் பல நேர்காணல்களில் நிதி அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக முதியோர் உதவித்தொகை பெறுவதில் செய்யப்பட்டிருக்கும் சில திருத்தங்கள் பயனாளர்களைப் பாதிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. அதே போன்று கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருந்த நகைக்கடன்கள் தள்ளுபடியிலும் இப்படியான சில அதிருப்திகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் தொடர்ந்து மேம்பாலங்கள் அமைப்பது, புதிய கட்டிடங்கள் திறப்பது என்பன போன்ற செலவினங்கள் தடையின்றிச் செய்யப்படுகின்றன.

இதனையெல்லாம் தொகுத்துக் காணும்போது குறுகியகாலச் செலவினங்கள் அல்லது ஒரு முறை மட்டும் செய்யவேண்டிய செலவினங்கள் போன்றவை தடையின்றிச் செயல்படுத்தப்படுகின்றன. அல்லது எதிலெல்லாம் அரசியல்வாதிகளும் அவர்களது பினாமிகளும் லாபமீட்ட வாய்ப்பு உள்ளதோ அத்திட்டங்களெல்லாம் எவ்வித இடையூறுமின்றி நடந்தேறுகின்றன. ஆனால் நீண்டகாலச் செலவினங்களைக் கோரும் மக்களின் எதிர்காலம் சார்ந்த முடிவுகள் மொத்தமாகக் கிடப்பில் போடப்படுகின்றன. அலட்சியமாகக் கையாளப்படுகின்றன. பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற நிதி அமைச்சரின் நடவடிக்கைகள் இப்படிதான் அமைந்துள்ளன. பாஜகவின் ‘minimum government’ என்பதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. மருத்துவச் சேவையைச் சிறப்பான முறையில் செயல்படுத்த விரும்புவதாகக் குறிப்பிட்டு வரும் அதேவேளையில் அதற்கான செவிலியர்கள் ஒப்பந்த முறை அடிப்படையிலேயே பணியமர்த்தப் படுகின்றனர். எதையும் தரவுகளுடன் மட்டுமே செயல்படுத்த வேண்டுமென நினைக்கும் அவரின் எண்ணம் நடைமுறையில் அதன் பயனாளர்களுக்கு ஏற்படுத்தும் சிக்கலைக் கணக்கில் கொள்வதாகத் தெரியவில்லை. எந்தவித விவாதமுமின்றிக் கடந்த அதிமுக ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் ஐம்பதினாயிரத்திலிருந்து இரட்டிப்பாக்கப்பட்டு ஒரு லட்சமாக உடனடியாக உயர்த்தப்பட்டது. ஆனால் கொரோனா பேரிடரில் திமுக வலியுறுத்திய ஐயாயிரம் ரூபாய் உதவித்தொகையைத் தர, சென்ற ஆட்சியாளர்களுக்கும் மனம் வரவில்லை.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடனான சந்திப்புக் குறித்து நேர்காணலொன்றில் பகிரும் பிடிஆர், அவரின் பொருளாதார நடவடிக்கைகளை அவ்வளவு வியந்து பாராட்டி உரைக்கிறார். இதன் வழியாகவும் பிடிஆரின் பொருளாதாரக் கொள்கைச் சார்புகளை ஓரளவுக்கு ஊகித்துக்கொள்ளலாம். அதே நேர்காணலில் சில துறைகளில் தனியாரின் தலையீட்டைத் தவிர்க்க முடியாதெனவும் கூறுகிறார். மக்களுக்கு இன்னும் ஏராளமான திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியதுள்ளதென எல்லா நேர்காணல்களிலும் ஏதாவது ஒரு திட்டம் குறித்துப் பேசிவரும் பிடிஆரின் செயல்பாடுகள் களத்தில் வேறுவிதமாகவே எதிரொலிப்பதை எப்படிப் புரிந்துகொள்வது. இந்தியாவையொட்டி உலகமயமாக்கல் கொள்கையினைத் தழுவி எந்த நாடுகளெல்லாம் வெறும் தேசியவாதத்தின் மூலம் தங்கள் பாசிச ஆட்சியதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டனவோ அவையெல்லாம் இன்று ஒன்றன்பின் ஒன்றாகப் பொருளாதாரப் பெருமந்தத்தைச் சந்தித்து உலக அரங்கில் திவாலாகும் நிலைமையை எட்டியுள்ளன. அருகிலிருக்கும் இலங்கையும், பாகிஸ்தானுமே சிறந்த உதாரணங்களாக நமது கண்முன் நிற்கின்றன. கொரோனா பேரிடருக்குப் பிறகு சிறு நிறுவனங்கள் தொடங்கிச் சர்வதேச அளவில் கிளைபரப்பி வணிகம் செய்யும் பெரும் நிறுவனங்கள் வரை அனைத்தும் பெரிய அளவில் பணியாளர்களை lay off செய்து வருகின்றன.

இப்படியாக அடுத்தச் சில நூற்றாண்டுகளுக்கு எந்த மீட்சியும் கண்ணுக்குத் தெரியாதவாறு பொருளாதாரக் கொள்கைகள் நம்பிக்கையின்மையையும் பெரும் அச்சத்தையும் சோர்வையும் அளிக்கக் கூடியதாக இருக்கும் சூழலில் குறைந்தபட்சம் மாநில அளவிலாவது தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய ஒரு பொருளாதாரச் சீரமைவுத் தேவைப்படுகிறது. பொருளாதார நன்மைகளைப் பெரும் முதலாளிகளுக்கும் அதன் வீழ்ச்சிகளைப் பொது மக்களுக்கும் பகிர்ந்தளித்துவிட்டு அதை மேற்பார்வை செய்யும் இடைத்தரகராக மட்டுமே ஒரு அரசு என்பது சுருங்கிவிடுதல் கூடாது. உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்காத மூலதன குவிப்பிற்கு எதிரான ஒரு பொருளாதாரக் கொள்கையே அரசையும் அதன் மக்களையும் பாதுகாப்பதாக அமையும். ஆனால் மாநிலத்தில் தொடர்ந்து கோலோச்சிய இரு திராவிடக் கட்சிகளாலும் இனி அப்படியான சமூகநலன் மிக்கக் கொள்கைகளை வகுப்பதற்கும் அதில் பயணிப்பதற்கும் இயலாதென்பது வெளிப்படையாகியுள்ளது. இயல்பாகவே இத்தகைய சலிப்பினால் தோன்றும் மாற்று அரசியலுக்கான ஏக்கம் பாஜகவிற்கே சாதகமாக அமையும் வகையில் களச்சூழலானது கனிந்து கொண்டிருக்கிறது. வலதுசாரிய அலையைத் தனது வியூகங்களால் எதிர்கொள்ள முடியாமல் எப்படிக் காங்கிரஸ் தள்ளாடி இன்று பாதாளத்தில் வீழ்ந்திருக்கிறதோ திமுகவும் அப்படியான ஒரு நசிவைச் சந்திப்பதற்கான நிமித்தங்களாகத்தான் இச்செயல்பாடுகளைப் பார்க்கவேண்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *