கேள்விகள் நிறைந்த அதிசய சிகரெட் ஒன்றை
காலமெனக்கு பரிசாக அளித்தது
பேராவல் தாங்காது அந்தச் சிகரட்டைப் பற்ற வைத்தேன்
முதல் புகையை உள்ளிழுத்தபின் நான் லாஸ் ஏஞ்சலில் நின்றிருந்தேன்
பழரசம் வரவைக்கும் கைகள் இதுதானே? எனக் கேட்டு
கன்னி ஒருத்தி என் உள்ளங்கையில் முத்தமிட்டாள்
புகையை வெளிவிட்ட போது என் வலது கை துண்டிக்கப்பட்டு இருந்தது
இரண்டாவது முறை நான் புகையை உள்ளிழுத்த போது
கதகதப்பேற்படுத்தும் விறகுத்தீயின் முன்பு
ஆதி மனிதர்களோடு ஆடைகளற்று அமர்ந்திருந்தேன்
குகைச் சுவற்றில் உள்ள படங்களைச்சுட்டிக் காட்டி
இவை புரிகிறதா? என அவர்கள் வினவினர்
என்ன படம் என நான் உற்றுப் பார்த்தபோது
நான் ஒரு தெருவோரத்தில் அமர்ந்திருந்தேன்
என் விழிகள் களவு போயிருந்தன
மூன்றாவதாகப் புகையை உள்ளிழுக்க எத்தனித்த போது
சிகரெட் பாதியில் அணைந்திருந்தது
எனக்கு உதவுவதற்காகப் பக்கத்திலிருந்த பால்ய நண்பனொருவன்
அதைப் பற்ற வைத்து எனக்குக் கொடுத்தான்
இருவரும் நஞ்சை நிலத்தின் மாமரம் ஒன்றின் முன்பு நின்றிருந்தோம்
மாங்கனி ஒன்றைப் பறித்து உண்ட நான்
மாங்காய் ஏன் இவ்வளவு புளிக்கிறதென அவனிடம் வினவினேன்
யாரோ உலுக்கியதில் புகையை நான் வெளிவிட்ட போது
எங்கள் வீட்டு மாமரம் என் நண்பனை முழுவதுமாய் விழுங்கியதாய்
அனைவரும் பேசிச் சென்றனர்
நான்காவது முறையாக நான் சிகரெட்டை உள்ளிழுத்தபோது
நான் ஒரு கோட்டை வாசலில் நின்றிருந்தேன்
ராஜ பரிவாரங்களோடு வந்த என் நண்பன்
எனக்கு ஏனடா அந்தச் சிகரெட்டை கொடுத்தாய்?
எனக் கேட்டு மலர் மாலை ஒன்றை அணிவித்தான்
மறுநாள் என் வீட்டில் நீண்ட நாக்கினால் தூக்கிட்டு தொங்கும்
என் கையில் இன்னும் அணையாமலிருக்கும் சிகரட்டை
ஊரார் அதிசயத்துடன் பார்த்துச் சென்றனர்.