‘எப்போதோ தான் கண்ட அற்புதத்தை, அன்றாடம் தனது வீட்டில் நிகழ்த்த விரும்பும் ஒரு குழந்தையைப் போலத்தான் இவ்வாழ்வு எனக்கு. நீங்கள் அமர்ந்திருக்கும் கட்டிலுக்குக் கீழே உள்ள அந்தப் பெட்டியில் சில தருணங்களை மடித்து வைத்திருக்கிறேன். அவற்றையே பூட்டிய கதவுக்கு உட்புறம் மீண்டும் மீண்டும் உடுத்திக்கொண்டு இத்தனிமையை மறைக்கிறேன்’. சொல்லி முடித்தபோது கோபால் சார் சட்டையில்லாமல் இருந்தார், அல்லது அவர் அப்படியிருந்ததை நான் முன்பே கவனிக்காமலிருந்தேனா?
அவரது அறைக்குச் சென்று பேசிக்கொண்டிருக்கும் அளவுக்குக் கோபால் சார் எப்போது பொருட்படுத்தத்தக்க ஒருவராக மாறினார் என்பது தெளிவாக நினைவிலில்லை. ஆனால் மூன்று மாதங்களுக்குமுன்பு அவர் முதுகலை விடுதி காப்பாளராகப் பணியில் இணைந்தபோது கரீம் சார், ‘இவரு சரிப்பட்டு வரமாட்டாரு. வார்டன்னா ஒரு இது வேணாமா? பசங்க ரூமுக்கு வெளியில பவ்யமா நின்னுக்கிட்டு அட்டெண்டென்ஸ் எடுக்குறாரு சார்’ என்று என்னிடம் சொன்னது நினைவிலிருக்கிறது. இந்த விடுதியில் நிறைய மாணவர்களும் என்னைப்போலக் கல்யாணமும், காலாவதியும் ஆகாத சில ஆசிரியர்களும் இருக்கிறோம்.
கோபால் சார் தொடர்ந்தார் ‘அந்தப் பெட்டியின் இடதுபக்க மூலையில் ஒரு டைரியும், அதற்கு எஞ்சிய முத்தங்களின் அகராதி என்றொரு பெயரும் வைத்திருக்கிறேன். அதன் நிறம் வெப்பம். அதில் நான் முழுமையாக இறங்க முடியாமல் போனமுத்தங்களைத் தேதி வாரியாகக் குறித்து வைத்திருக்கிறேன். காரணம் அவை ஒன்றல்ல இரண்டல்ல, ஒரு பட்டியல். ஒரு பள்ளிக்கூடக் குமாஸ்தாவாகத்தான் வாழ்வைத் தொடங்கினேன். வேலைக்குச் சேர்ந்த புதிதில் எதுவுமே விளங்கவில்லை, பழகியது போலிருந்தது பக்கத்து இருக்கையிலிருந்து வந்த பெண் வாடைதான். மதிய இடைவேளையில் தனது வெக்கையை உருட்டி உருட்டி சோறாக என் தட்டில் வைத்தாள். நானும் எந்தவித கூச்சமுமில்லாமல் அதையெடுத்து என்னுடலிலிருந்து நீளும் யாவைக்கும் உண்ணக் கொடுத்தேன். பணியாளர் அறையில் நாங்கள் மட்டும் தனித்திருந்த வேளைகளில், தனதுநரம்பு நாற்காலியிலிருந்து சாய்ந்து கைகளை உயர்த்தி அவள் சோம்பல் முறித்தது நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போனது. அவள் ஆசிரியை, இரண்டு பெண் பிள்ளைகளுக்குத் தாய் என்பதெல்லாம் என்னை வந்தடைய ஒவ்வொருமுறையும் பார்வையற்றவனின் முதுகையே தேர்ந்தெடுக்கின்றன’.
‘ஏற்கனவே முத்தங்களுக்குப் பழகியிருக்கிறோம் என்றாலும், அன்றைய மாலை வேளையில் அனைவரும் கிளம்புவதற்காகக் காத்திருந்து மிகவும்பொறுமையாக மற்றுமொரு முத்தத்திற்குத் தயாரானோம். கைகளால் எனைப் பற்றாமல் முத்தமிடு என்றாள். கண்களைக் கட்டி விளையாடும் குழந்தையைப் போலக் காற்றில் விரல்களை அசைத்து ஒரு முத்தத்தின் மூலம் அவளுள் இறங்கினேன். ஈர உதடுகளோடு பிரிந்தபோது எங்கிருந்தோ பறந்து வந்த பெரும்பறவையின் இறகென ஒரு ஓவியம் எங்கள் பின்னால் தொங்கிக்கொண்டிருந்தது. அதில் அருவமான வனமிருகங்களிரண்டு ஒன்றையொன்று விழுங்குவது போல வரையப்பட்டிருந்ததைப் பார்த்தேன், அல்லது அப்படித்தான் என் கண்களுக்குத் தெரிந்தது. அவள் பதறிப்போய் ‘ப்ரீத்தி உன்னைக் கம்ப்யூட்டர் லேப்ல தானே இருக்கச் சொன்னேன்’ என்றாள். ப்ரீத்தி அவளது இரண்டாவது மகள். அச்சிறுமியின் உடல்மொழி காட்டிய திசையில் மேலும் (அங்கே படிக்கும்) இரண்டு சிறுவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். எதை எதையோ பொறுக்கி தேர்ந்தெடுத்து அடுக்கி இயல்பை உண்டாக்க நான் தான் முயன்றுகொண்டிருந்தேன். அவள் அவர்களோடு அவ்வளவு இணக்கமாக நிதானத்துடன் கிளம்பினாள். ஒருகணம் தற்கொலைக்குத் தூண்டியது என்னை நோக்கிய அவளது நிறை புன்னகைதான். அன்றிரவு உறக்கமில்லை, அடுத்தநாள் பள்ளிக்குள் அனுமதியில்லை, பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தேன். அவள் பள்ளிக்குள்தான் இருந்தாள், கோபமெல்லாம் ஒன்றுமில்லை அந்தந்த நேரங்களில் தேவைப்பட்டது பருகிக்கொண்டோம், அவ்வளவுதான்.’
‘அதன்பிறகு உள்ளூரில் புணர சில உடல்கள் கிடைத்தன. இருப்பினும் பள்ளி பணியாளர் அறையை விடுத்து நான் விரிய முயன்ற போதெல்லாம், வானம் அச்சுறுத்தும் வகையில் தனது நிறங்களை மாற்றிக் கொண்டே இருந்தது. அன்றைய நிறம் விரிசல், துணைக்கு இருந்தவள் என்னிலிருந்து நீங்கி தூரத்தில் ஒரு லென்சைக்கொண்டு என் தொட்டி மீனை விடிய விடியத் துரத்திக்கொண்டிருந்தாள். மூன்று மாதங்கள் கழித்துப் பின்னிரவில் வந்த இன்னொருத்தியிடம், ‘அசையத் தொடங்கியதுமே என்னிடுப்பு உறைந்து விடுகிறது. நீயாவது ஏதாவது செய்யேன்’ என்று கெஞ்சினேன். அவள் ‘முத்தமிடும்போதே தோன்றியது. உன் எச்சிலில் ஏனோ தண்டனையின் ஈரம்’ என்றாள். கிளம்புவது வரைக்கும் அவளது கால்களை முத்தமிட்டுக் கொண்டிருந்தேன். அவள் எரிச்சலில் ‘சீ கண்டாரொலி கால நக்கி’ என்றாள். ‘கொஞ்சநேரம் கொஞ்சநேரம் என்று சொல்லிக்கொண்டிருந்தது ஒன்று தான் அந்த நேரத்தில் எனக்குப் பேராறுதல்’.
விடுதியில் ஒருநாள் இரவுணவுக்குப் பிறகு கோபால் சாரின் அழுகுரல் கேட்டது. ஒரு கைப்பந்து மைதானம் அளவிற்கு இடைவெளி, அதைச்சுற்றி செவ்வக வடிவத்தில் அடுக்கப்பட்டிருக்கும் மூன்றடுக்கு ரயில் பெட்டிகளைப் போலத்தான் இருக்கும் விடுதியின் சி ப்ளாக். இரண்டாவது மாடியிலிருந்த போதும் கூட அவரது அழுகை தெளிவாகக் கேட்டது. நான் கீழிறங்கிப் போவதற்கு முன்பே, மாணவர்கள் தங்கள் அறைகளுக்கு வெளியே நின்றிருந்தனர். அவர்களில் ஒருவன் ‘கோபால் சாரை அடிச்சுட்டாங்க’ என்றான்.
‘யாரு பசங்களா அடித்தது?’
‘இல்லை. கரிம் சார் தான் அறைஞ்சுட்டாரூ.’
பெண்ணழகின் உச்சங்களை வாசித்திருக்கிறேனே ஒழிய அறிந்தவனில்லை. ஒரு ஆண் சுற்றியிருப்பவர்களின் பிரக்ஞையின்றித் தேம்பித் தேம்பி அழும்போதே அவனது உச்ச அழகு வெளிப்படுகிறது என்பதை அன்றறிந்தேன். கோபால் பேரழகன்.
அதன்பிறகு கோபால் சாரைபற்றி நிறையப் பேசினார்கள். நிறையக் காயங்கள் அவர் முகத்தில் புதிது புதிதாகத் தோன்றி மறைந்தன. என் மாணவன் ஒருவன் ‘அவரு ராத்தரியில இங்க இருக்கறது கிடையாது சார். வெளியில ஏதோ வேல நடக்குது’ என்றான். ‘ஹாஸ்டல்ல புரோட்டா போட்டுட்டா போதும், தலைவரு மலுமிச்சம்பட்டிக்கி சரக்கு சாப்பிட கிளம்பிட்ராரூ’ என்றான் இன்னொருவன். வெள்ளை சட்டை மட்டும் தான் உடுத்துவார், நல்லநிறம். மனக்கசப்பில் இருக்கும் பெரிய இடத்துப் பிள்ளைக்குண்டான தோரணை. தொடர்ச்சியாகக் கவனித்தபோதுதான் தெரிந்தது, படிக்கட்டுகளுக்கு மேலிருக்கும் தடுப்புச்சுவருக்காக அவர் ஒருபோதும் குனிவது கிடையாது. இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும் ஒன்று மிதமிஞ்சிய போதை, இல்லையென்றால் பார்வை குறைபாடு.
ஒருநாள் கருக்கலில் என் அறைக்கு வெளியே நின்றுகொண்டிருந்தார். ‘எங்க அப்பா செத்துட்டாரு சார். நா போயிட்டு வந்தர்றேன். ஒரு ரெண்டு நாளைக்கு ஹாஸ்டல பாத்துக்கோங்க’ என்றார். எனக்கு வித்தியாசமாகப்பட்டது அதை அவர் சிரித்துக் கொண்டே சொன்னதுதான். சோகப்புன்னகை என்றெல்லாம் வர்ணிக்க மனம் விரும்பியது. நிச்சயம் அது புன்னகை அல்ல, ஒரு பெருஞ்சிரிப்பு.
சொன்னபடியே இரண்டுநாளில் விடுதிக்குத் திரும்பினார். அவரை மீசையில்லாமல் எதிர்பார்த்திருந்தேன், அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. திருத்தமாக வந்து சேர்ந்திருந்தார். இழவு விசாரிக்கத் தான் அவர் அறைக்குச் சென்றேன்.
‘என் தகப்பனாரின் சொல் ஊரில் உரத்து ஒலித்துக்கொண்டிருந்த காலமொன்றிருந்தது. தன்னை முன்னிறுத்தி எனக்கு ஒரு பெண்ணைக் கட்டி வைத்தார். நல்லவள்தான் ஆனால் அழகியென்று சொல்லுவதற்கில்லை. அவள் மீதேறியபோதெல்லாம் எனக்குத் தோன்றியவை இவை. அவளுடல் விஷமேறியதுபோலக் குளிர்ந்து கிடக்கிறது, அல்லது அவள் நாள்பட்ட நோய்க்குச் சிகிச்சைக்காக நீட்டிக் கிடக்கிறாள், இல்லையெனில் ஆட்டத்திற்கும் அவளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, ஆழ்துயிலில் சொப்பனத்திலிருந்து அவளோடிருக்கும் என்னைக் காண்கிறாள்’. பல வருடங்கள் கல்வி நிறுவனங்களில் வேலை செய்ததால் ஒரு வாத்தியாரின் உடல்மொழியில் கடினமான ஒரு சூத்திரத்தை விளக்குபவர் போலப் பேசிக்கொண்டிருந்தார் கோபால்.
‘ஊரில் ஒருநாள் காலையில் கூட்டாளியின் மனைவி புற்றுநோயில் இறந்துபோனதாகச் சேதி வந்தது. நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் குடும்பத்தின் சார்பாக அப்பாதான் போவார். அன்று ஏனோ எனக்குக் கிளம்பிப் போகவேண்டும் போலிருந்தது. அங்கே நண்பனைப் பார்த்து இழவு கொடுத்தேன். அந்த இடத்து வாசனையிலேயே இருக்க மனம் விரும்பியது. இறந்தவளின் பாதங்கள் நோக்கிய திசையிலிருந்து எனக்கொரு அழைப்பு வந்தது. எழுந்து அவ்வுடல் முழுமையாகத் தெரியுமிடமாகத் தேர்ந்தெடுத்து நின்றுகொண்டேன். உயிரற்று இருந்தபோதும்கூட ஒரு பெண்ணுடலால் இயக்க முடிந்த சாத்தியத்தை என்னுள் உணர்ந்தேன். ஒரு விக்ரகத்தைக் கண்டு அழும் பக்தன், மலையுச்சியை அசையாமல் கண்டமர்ந்திருக்கும் சித்தன், இவர்களைப் போலத்தான் அசைவற்றுக் கிடக்கும் அந்த உடலோடு ஒரு அலைவரிசையில் இணைக்கப் பட்டிருந்தேன். ஒரு இழவு நாளில் அவ்வுடல் ஆதிசேஷனைப்போல என் ஆண்மையைக் கடைந்து கடைந்து கண்டெடுத்துத் தந்தது. அந்த மீட்சியில் தூரத்திலிருந்த போதும் கூட என் உச்சத்திலிருந்தேன்’.
‘வீட்டிற்குத் திரும்பி ஒரு நான்கு நாட்கள் தாக்குப்பிடித்தேன். மறுநாள் இரவு ஒரு பாயில் என் மனைவியைக் கிடத்தினேன். இரண்டு குடங்களில் தண்ணீரை அவள்மீது ஊற்றினேன். தலைமயிரையும் பின்னங்கழுத்தையும் கழுவினேன். பாதங்களின் அழுக்கை மனதார நீக்கினேன். அந்தச் சுத்தத்தின் இச்சையில் அவற்றை முத்தமிட்டேன். அவளது வயிற்றுச் சிராய்ப்பு நிறத்திலிருந்தது அவ்வறை, வெளிச்சம் வேண்டி மஞ்சள் பூச அவளது ஆடைகளைக் களைந்தேன். அழுத்தித் தொட்டால் நொறுங்கும் வெண்சாம்பலின் மீது இழைப்பதுபோல, அவ்வுடலில் மஞ்சள் பூசினேன்.
ஒரு வேலியென அவளைச்சுற்றி பன்னீர் தெளித்து, ஊதுபத்தி கொளுத்தி வைத்தேன். நெற்றிக் குங்குமமும், பிணமென அலங்கரித்த உடலின் பெருமூச்சும், ஏறியடங்கும் வயிறும்தான் எனக்கான ஓல அழைப்பு. வழக்கத்திற்கு மாறாக அவளுடலின் சூடு என்னுள் பரவியது.
மண்டியிட்டு மலைக் கோயிலேறும் பித்தனென மெதுவாக முன்னகர்ந்து அவளையசைத்தேன். ஒவ்வொரு அசைவிலும் தண்டனையின் கொப்பளங்கள் உடைந்து அதன் சீழ் விந்து நிறத்தில் வெளியேறின. பாயை நீங்கி அவளது கைகளைக் கோர்த்து வயிற்றில் வைத்தேன், மூன்றுமுறை சுற்றி வந்தேன், தலைகுனிந்து வணங்கினேன்’.
‘மறுநாள் விடியலிலிருந்து அவளென் முகம் பார்ப்பதைத் தவிர்த்தாள். மூன்றாவது நாளில் தூக்கில் தொங்கினாள். நான் செய்ததையே அவளுக்குத் திரும்பச் செய்தார்கள், அதற்கு முழுமனதாகத் தன்னை ஒப்புக்கொடுத்துக் கிடந்தாள். என் உடலிலிருந்து நீள வாய்ப்பிருந்த யாவும் உதிர்ந்து பொசுங்கின. வெள்ளைத் துண்டைப் பற்றிக்கொண்டு இழவுப்பெற நீட்டிய கைகளில் மீண்டும் கொப்பளங்கள். அதன் பிறகு ஊரில் என்னைச் சில ஆண்கள் குனியவும் மண்டியிடவும் அழைத்தார்கள். கைக்கு வந்த சொத்துக்களைத் தம்பிகளுக்கே விற்றேன். ஊரை நீங்கி பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. தகப்பனின் முகத்தைக் கடைசியாகப் பார்க்கவே ஊருக்குச் சென்றேன், எத்தனையோ முறை பார்த்தும் பிணமாகக் கிடந்தது என் அப்பனின் சாயலில் இல்லை, அந்த ஊரும்தான்’.
இதைக் கோபால்சார் சொல்லிமுடித்தபோது கிட்டத்தட்ட இடைவெளியே இல்லாமல் அவரருகே அமர்ந்திருந்தேன். அவர் வர்ணித்த சவக்களையைப் போலவே அவரது முகமும் மினுங்கியது. கைகளைப் பற்றினேன், தோளில் சிறிதுநேரம் சாய்ந்திருந்தேன், பிறகு அவர்தான் என் பின்னந்தலையை வருடி தன்பக்கம் திருப்பி என் உதடுகளில் முத்தமிட்டார்.
கல்லூரி விடுதிகளுக்கெனச் சில விதிமுறைகள் உண்டு. அதன்படி மாணவர்களுக்குப் பிறகே விடுதி பணியாளர்கள் உணவருந்த வேண்டும்(ஆசிரியர்கள் விதிவிலக்கு). அன்று காலை காந்திபுரம் வரைக்கும் செல்லவேண்டியிருந்ததால் சீக்கிரமே தட்டை எடுத்துக் கொண்டு உணவறைக்குச் சென்று காத்திருந்தேன். கோபால் சாரைக் காணவில்லை. அன்றைய அட்டவணைப்படி தோசை, நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே அருகில் ஒரு தட்டுடன் வந்தமர்ந்தார் கோபால். அதில் இரண்டு லட்டுகள் இருந்தன. ஒன்றையெடுத்து என் தட்டில் வைத்து ‘வெள்ளன எந்திரிச்சி கோயிலுக்குப் போயிட்டு வந்தேன் சார், நல்ல பசி’ என்றார்.
கல்லூரிகளில் தங்களது அதிகாரத்தை அவ்வப்போது ருசிக்க நினைப்பவர்கள், யாருக்கும் சொல்லாமல் விடுதிக்குள் ரோந்து வருவது உண்டு. முதலில் பேராசிரியராகச் சேர்ந்து மாணவ சேர்க்கை இல்லாத காரணத்தால் அங்கேயே விடுதி உணவு ஒப்பந்தத்தை எடுத்து நடத்திவந்த முரளிக்கும் ‘ரவுண்ட்ஸ்’ போக ஆசை வந்ததில் பெரிய தவறொன்றும் கிடையாது. சிக்கலே கோபால்சார் அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்தது தான்.
கோபாலைப் பார்த்து ‘ஏன் சார் பசங்களுக்கு முன்னாடி தட்டத் தூக்கிக்கிட்டு வந்து ஒக்காந்து இருக்கிறீர்கள்? கொஞ்சம் பொறுத்து சாப்பிட்டா ஆவாதா?’ என்றார்.
இவர் சிறிதும் யோசிக்காமல் ‘நான் திங்கிற இந்த ரெண்டு தோசையில தான் உங்குடி முழுகி போயிரப் போவுதா?’ என்று சாப்பிடுவதை நிறுத்தி எழுந்து நின்றார்.
அந்த ஆள் எங்கள் மேஜையருகே வந்து கோபாலை அறையத் தொடங்கினார். தன் ஈரக்கையால் ஆன மட்டும் தடுத்துப் பார்த்தும் பயனில்லை. ‘கணக்க முடிச்சிவிட்றா’ என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்த கோபால் சார் ஒரு கட்டத்தில் கைகழுவும் இடத்தில் வழுக்கி விழுந்தார். ‘கணக்கு கேக்குது நாயி’ என்று காரி உமிழ்ந்தார் முரளி. பசங்களும் நாங்களும் இதையெல்லாம் வேடிக்கை மட்டும் பார்த்தோம்.
கோபால் சார் எழுந்து விடுவிடுவெனத் தன் அறைக்குச்சென்று தனது பெட்டியை எடுத்துக்கொண்டு யாரையும் நிமிர்ந்து கூடப் பார்க்காமல் விடுதியை விட்டு நீங்கினார். பலமுறை முயன்றும் அவரை அதன்பிறகு தொடர்புகொள்ள முடியவில்லை.
இன்னும் இரண்டு மாதங்களில் எனக்குத் திருமணம். பெண், வாழப்பாடி பக்கம்.