ரிஷாப் பண்டின் ஆட்டம்

சு. வெங்குட்டுவன்

பகிரு

மூன்றாவது டெஸ்டை இந்திய அணி டிரா செய்தது குறித்துத் தந்தியில் செய்திக் கட்டுரை வெளியாகி இருந்தது. ஐந்தாவது நாளில் ரிஷாப் பண்ட் ஆடிய ஆட்டத்தை அந்தக் கட்டுரை வெகுவாகச் சிலாகித் திருந்தது. நான்காவது நாள் ஆட்டத்தைப் பற்றிய நேற்றைய செய்தியில் கிட்டத்தட்ட அனைத்து நாளிதழ் களுமே இந்திய அணி ஜெயிப்பதற்கு வாய்ப்பேயில்லையெனக் கூறியிருந்தன. கைவசம் மூன்றே விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு பந்துவீச்சுக்குச் சாதகமான கடைசி நாளில் நானூறு ஓட்டங்களையெடுத்து வெற்றி பெறுவது சாத்தியமேஇல்லை என்றும் சமன்செய்வதும்கூட முடியாத காரியமே என்றும் யூகங்களை வெளிப்படுத்தி இருந்தன. லோகுவுக்கும்கூட அப்படித்தான் தோன்றியது. ஆனால் ஏழாவது மட்டையாளராக இறங்கிய ரிஷாப் பண்ட் நம்பமுடியாத வகையில் ஆடி இருந்தார். இலக்கை அடைய சொற்ப ரன்களே தேவைப்பட்ட நிலையில் ரிஷாப் எதிர்பாராதவகையில் ரன்அவுட் ஆகிவிடப் போட்டி சமனில் முடிந்திருந்தது.

நாளிதழைப் புரட்டியவாறு கடைக்கு உட்புறம் மையப்பகுதி நாற்காலியில் அமர்ந்து லோகநாதன் தேநீரை அருந்திக்கொண்டிருந்தார். அவரது கவனம் அவ்வப்போது ஜெயபாலின் மீதும் சென்று சென்று மீண்டபடியிருந்தது. ஜெயபால் பேக்கரிக்கு முன்னா லிருக்கும் பெட்டிக்கடைக்கு அருகில் நின்றவாறு டீயை உறிஞ்சிக் கொண்டிருந்தார். பாடாவதி ஆகிவிட்ட ஒரு பழைய டிவிஎஸ் பிப்டியில் தினமும் இந்த நேரத்திற்கு ஜெயபால் வந்துவிடுகிறார். அங்கிருந்தபடியே டீயைச் சொல்லிக் குடித்துவிட்டு காசுகுடுக்க வரும்போது மூன்று உளுந்து வடைகளையும் வாங்கி பார்சல் கட்டிக்கொண்டுபோய் மொபட்டின் டேங்க் கவருக்குள் வைத்து விடுகிறார். பிறகு பெட்டிக்கடையில் ஒரு கட்டுப் பத்தாம் நெம்பர் பீடி வாங்கி அதிலொன்றை உருவி அங்கேயே நின்றபடி புகைத்துவிட்டு அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்.

லோகநாதன் சற்று நேரத்திற்குமுன் உளுந்து வடையைச் சாப்பிட்டபடியே முகநூலில் உலாவி கொண்டிருந்தார். ரிஷாப் பண்டின் ஆட்டம் குறித்தான பதிவொன்று தட்டுப்பட்டது. நேற்றைக்கு முழுவதுமே சமூக வலைதளங்களையெல்லாம் ரிஷாப்புதான் ஆக்கிரமித்திருந்தார். பத்துமணிநேரத்துக்கும் மேலாக நின்று விளையாடிய ரிஷாப் பண்ட் கூடுதலாக இன்னும் பத்தே நிமிடங்கள் நின்றிருந்தால்கூடப் போதும். அணியை ஜெயிக்க வைத்திருப்பார் என்றும்  ரிஷாப்பின் வரலாற்றில் மிக முக்கியமான இன்னிங் ஸான இது கிரிக்கெட்டின் வரலாற்றிலேயும் மிகமிக முக்கியமான இன்னிங்ஸாக மாறிப்போயிருக்கும் என்றும் அந்த முகநூல் பதிவில் குறிப்பிடப் பட்டிருந்தது.

சுவர்போல நின்று சிக்ஸரும் போருமாக விளாசிக் கொண்டிருந்தவர், பந்து பீல்டரின் கைக்குப் போய் விட்டதுகூடத் தெரியாமல் ஒத்தை ரன்னுக்கு ஓடி ரன்அவுட் ஆனதைப் பற்றி என்னத்தைச் சொல்ல? என்றும் அந்தப் பதிவர் அங்கலாய்த்திருந்தார். பொதுவாகக் கிரிக்கெட்டில் வெற்றி தோல்விகளை ஆட்டத்திறமைகள் மட்டுமல்ல அதிர்ஷ்டமும் தீர்மானிக்கிறது என்பார்கள். பத்துமணி நேரத்துக்கும் மேலாக அனுக்கிரகம் புரிந்த அதிர்ஷ்டம் கடைசிப் பத்து நிமிடங்களுக்கு முகம் முழிக்காது போய் விட்டதே என்றவாறு அந்த முகநூல் பதிவு நீண்டு கொண்டிருந்தது. பதிவின் ஓரிடத்தில் இடம் பெற்று இருந்த சில வரிகள் சட்டென்று இழுத்துப் பிடித்துக்கொண்டது. வாழ்வின் புதிரான போக்குகளையும் பெரிய மாற்றங்களுக்குக் காரணமாக மாறிவிடுகிற  சிறிய கணங்களையும் பற்றியெல்லாம் யோசிக்க வைத்தது. பொதுவாக லோகு இவ்விதமாக யோசிப்பவர் கிடையாதுதான். அவருடைய சிந்தனைத்தள மானது ஒரு சராசரி மனிதனுக்குரிய லௌகீகங்களால் ஆனது. ‘நூலளவுக்கும் குறைவான நூலளவு ஏமாந்த தால் மலையளவுக்கும் பெரிதான மலையளவு கை நழுவிப் போய்விட்டதே’ என்பதுதான் அந்த வரிகள். சாதாரண லோகுவை சிந்தனையாளர் லோகுவாக அவ்வரிகள் மாற்றியது. அதற்குக் காரணம் அவர் ஜெயபாலை கண் பார்வைக்குள் வைத்துக்கொண்டு மேற்படி வரிகளைப் படிக்க நேர்ந்ததால்கூட இருக்கலாம்.

லோகுவுக்கும் ஜெயபாலுக்கும் பரஸ்பரம் பரிச்சியம் உண்டாகி இருபது வருடங்களுக்குமேல் ஆகிறது. ஆனாலும், பெரிதாகப் பேசிக்கொண்ட தில்லை. அப்போது லோகு ஒரு பனியன் கம்பனி யில் டெய்லராக இருந்தார். இப்போது இரண்டு பனியன் கம்பனிகளுக்கு முதலாளியாக இருக்கிறார். பணம் சேர்ந்ததுமே உடம்பு பெருத்துவிட்டது. முக்கியமாக வயிறு பெருத்துவிட்டது. குருதியில் கொழுப்பும் இனிப்பும் சேர்ந்துவிட்டதாக மருத் துவர்கள் கூறினார்கள். காலையில் எழுந்ததுமே ஸ்போர்ட்ஸ் ஷூவும் பெர்முடாஸ் டிரவுசரும் டீசர்ட் பனியனுமாகச் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஆறு கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருக்கும் நால் ரோட்டிற்கு வந்துவிடுகிறார். வந்த இடத்தில்தான் இன்றைக்கு ஜெயபாலைப் பற்றியும் வாழ்க்கையப் பற்றியும்  சிந்தித்துக்கொண்டிருக்கிறார்.

கடந்த ஆறுமாத காலமாகத்தான் ஜெயபால் மறுபடியும் கண்ணில் படுகிறார். அதற்குமுன்பு வெகு வருடங்கள் அவர் ஊரில் இல்லாதவராக இருந்தார். ஏழு கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருக்கும் ஊரைச் சேர்ந்தவரான ஜெயபால் லோகுவுக்குச் சோமுவின் மூலமாகத்தான் அறிமுகமானார். பனியன் தொழிலைவிட்டு விலகி சோமு அப்பொழுது பர்னிச்சர் கடை ஆரம்பித்திருந்தான். சோமுவின் ஊர் லோகுவின் ஊருக்கு வடக்கே இரண்டு கிலோ  மீட்டர்களுக்கு அப்பால் இருந்தது. உண்டான விலையிலிருந்து கூடுதல் விலை நிர்ணயித்துக் கடனுக்குப் பொருட்களைக் கொடுப்பதும் தவணைத் தொகையை வாரத்தில் ஒருநாள் வாடிக்கையாளரின் வீட்டிற்கே சென்று வசூலிப்பதுமாகச் சோமுவின் வியபார முறைமை இருந்தது.

எட்டுத் திசைகளிலும் சுமார் முப்பது கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வாடிக்கையாளர்கள் இருந் தனர். வேலையில்லாத நாட்களில் லோகுவும் சோமுவுடன் லைனுக்குப் போவதுண்டு. வாய்க்கால் பாதைகள், கிளுவைகள் மருங்கமைந்த இட்டேறிகள்,பஞ்சாயத்து ரோடுகள், எருக்கலைகளும் ஆவாரைகளும் பூத்துக் கிடக்கும் கொறங்காடுகளுக்குள் போகும் ஒற்றையடிப் பாதைகள் என வசூலின் பொருட்டு சோமு போய்வருகின்ற வழித்தடங்கள் அபாரமான அழகுடையவை. அவரது வாடிக்கையாளர் குடும்பங்களில் ஒரு குடும்பமாக ஜெயபாலின் குடும்பமும் இருந்தது.

பத்திரிக்கையில் வெளிவந்திருந்த சிக்ஸர் அடிக் கும் ரிஷாப் பண்டின் புகைப்படத்தை ஒருகணம் உற்றுநோக்கிய லோகநாதன் மறுபடியும் ஜெயபாலைக் கவனிக்க ஆரம்பித்தார். காலை நேரத்திற்கேயுண்டான பரபரப்புகளுடன் நால்ரோடும் நால் ரோட்டின் கடைகளும் அதன் மக்களும் இயங்கிக் கொண்டிருக்க இவைகளுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்பதைப்போல ஜெயபால் அவர்பாட்டிற்கு நின்றபடி அவர்பாட்டிற்குத் தேநீரைஉறிஞ்சிக்கொண்டிருந்தார்.

போய் ஒரு புன்சிரிப்பைப்போட்டு ‘அப்புறம் நல்லாயிருக்கீங்ளா ஜெயபால்.. சௌக்கியம்தானே..?’ எனக் கேட்கலா மென்றும் தோன்றியது. கேட்பதாக இருந்தால் நீண்ட இடைவெளிக்குப்பிறகு இதே டீக்கடைக்கு முன்னால் ஜெயபாலைச் சந்திக்க நேர்ந்த அந்த முதல் நாளிலேயே கேட்டிருக்கவேண்டும். இத்தனை நாட்களாக யாரோ எவரோபோல உன்னையெல்லாம் எனக்கு ஞாபகமே இல்லை என்பது மாதிரி நடந்து கொண்டுவிட்டு திடீரென இன்றைக்குப்போய்ப் பெயர் சொல்லி விளித்து நலம் விசாரிக்கச் சங்கடமாகவும் இருந்தது.

‘என்ன ஜெயபாலு ஊருக்கே வந்துட்டாப்லயா..? தினமும் காலைல நால்ரோட்ல தட்டுப்படறாப்ல..?’ சில மாதங்களுக்கு முன்பு தற்செயலாக நிகழ்ந்த சந்திப்பொன்றில் லோகு சோமுவிடம் கேட்டார். சோமுவின் பர்னிச்சர் கடை இரண்டு மூன்று கிளை களுடன் இப்போது பெரிய நிறுவனமாக வளர்ந்து விட்டது. மிகவும் பிஸியான வியபாரியாகிவிட்ட அவனை முன்பு போலெல்லாம் அடிக்கடி சந்திக்க முடிவதில்லை.’

‘அப்படீன்னுதான் நானும் கேள்விப்பட்டே னுங்ண்ணா.. எனக்கும் பெருசா டச்சுக் கெடையாது. எங்காச்சும் குறுக்கமறுக்கப் பார்த்தா ரெண்டுவார்த்தை பேசிக்கிறதோட சரி... குண்டடத்தில் வாடகைக்கு வீடு பார்த்து வந்துட்டாப்லைனு தகவல்’ என்றான். ‘இங்க அவரோட அண்ணந்தங்கச்சியெல்லாம் பண்ணையத்தைப் பங்கி கறால் பண்ணிக்கலாம்னு இருப்பாங்களாட்டயிருக்குது. தனக்கான பங்கை குடுக்காம ஏமாத்தி எழுதிக்குவாங் களோங்கிற சந்தேகத்துல இங்கயே வந்துட்டாப்ல போல’ என்றும் கூறினான்.

ரிஷாப் பண்டிற்கு வாய்த்தது போலவே ஜெயபாலுக்கும் ஒரு நாள் வாய்த்தது. அந்த நாளின் பகல்முழுவதும் பொழுதெறங்கி இரவு எட்டு மணிவரைக்கும் ஜெயபாலுக்கு அதிர்ஷ்ட தேவதை அனுக்கிரஹம் புரிந்துவந்தாள். அன்றைக்கு நடந்த பைனலில் ஜெயபால் பின்னி பெடலெடுத்திருந்தார். அந்தப் போட்டியானது ஊரே கூடி திருவிழாவை யொட்டி ஊருக்கு வந்திருந்த ஒறம்பரைச் சனங் களெல்லாம் கூடி பலத்த கரவொலிகளையும் விசிலொலிகளையுமெழுப்பியபடி பார்த்து ரசிக்க உள்ளூர் குளக்கரை மைதானத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் வாசுகியும் இருந்தாள். எட்டுமணியளவில் வெற்றிக்கோப்பையும் கையுமாக அரங்க மேடையிலிருந்து ஜெயபால் இறங்கி வந்த சமயம் தான் அதிர்ஷ்டதேவதை தன் மூஞ்சியைத் திருப்பிக் கொண்டிருந்திருக்கவேண்டும். மேலுமொரு பத்து நிமிடங்களுக்கு அவள் தனது அருட்பாலிப்பை நீட்டித்திருந்தாளேயாயின் - சோமு கூப்பிட்டது ஜெயபாலின் காதில் விழுந்திருக்கும். இவர்கள் இருக்கும் திசைநோக்கி அவரும் வந்திருப்பார். வந்திருப்பின் நிலைமையே வேறு. தள்ளிக்கொண்டு  ஓடி ஸ்டார்ட் செய்யும் நிலையிலிருக்கும் பழைய டிவிஎஸ் பிப்டியில் இப்படிச் சுற்ற வேண்டியிருந்திருக்காது.

ஞாயிறு தவிர வாரத்தின் எல்லா கிழமைகளிலும் சோமுவுக்கு லைன் வசூல் இருக்கும். ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு ஏரியா எனப் பிரித்து வைத்திருப்பான். திங்கட்கிழமை லைனில் ஜெயபாலின் ஊரும் ஏனைய பிற ஊர்களும் இடம் பெற்றிருந்தன. அந்த லைனிலிருக்கும் மற்ற ஊர்களையெல்லாம் பார்த்துவிட்டு ஏதேனும் ஹோட்டலொன்றில் மதிய உணவை முடித்துக்கொண்டு வரும் வழியில் ஜெயபாலின் ஊருக்கு வந்து அங்குள்ள பிற வாடிக்கையாளர்களை எல்லாம் பார்த்துவிட்டுக் கடைசியாகத் தோட்டத்திற்குள்ளிருக்கும் ஜெயபாலின் வீட்டிற்கு வந்து சேருவார்கள். வெயிலில் அந்தியின் சிவப்பு கூடிக் கொண்டிருக்கும்.

பனிரெண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் ஜெயபாலின் தங்கை நித்யா பள்ளிச் சீருடை யிலிருந்து நிலம்தொடும் பூக்கள்போட்ட பாவாடைக்கும் தொளதொள டீசர்ட் அல்லது ரவுண்ட்நெக் பனியனுக்கும் மாறி கழுவப்பட்ட முகத்தில் பூசப்  பட்ட பவுடரோடு காணக் கிடைப்பாள். நீளவாக்கில் இரண்டாக மடித்த ஈரிழைத் துண்டை மார்புக்குமேலெ கழுத்தாடையாகச் சுற்றியபடி அவள் வலம்வரும் காட்சியானது அவ்வளவு அழகாக இருக்கும். ‘தனக்கு ஒரு ஐந்து வருடங்கள் குறைவாக இருந்து அல்லது இந்தப் பொண்ணுக்கு ஒரு ஐந்துவருடங்கள் அதிக மாக இருந்திருந்தால் ஒரு கல்லை விட்டுப் பார்த்திருக்கலாமே’ என லோகுவுக்குத் தோன்றுவதுண்டு.

அந்தத் திங்கட்கிழமை லைனில் மனதைக் கவரும்விதமாக மற்றொரு பெண்ணும் இருந்தாள். வாசுகிதான் அவள். வாசுகியும் ஜெயபாலின் ஊர்தான். ஊர் முகப்பிலேயே விஸ்தீரணமான தோட்டமும் தோட்டத்தின் குபேரபாகத்தில் மிகப்பெரிய கான்கிரீட் வீடும் அவளுக்கு இருந்தது. நித்தியாவைவிடவும் ஐந்தல்ல குறைந்தது ஏழு வருடங்களுக்காவது மூத்திருப்பாள். இரண்டு டிகிரிகளை முடித்துவிட்டு அய்ந்தாறு வருடங்களுக்கும் மேலாக மணவாளனுக்காகக் காத்திருக்கும் முதிர் கன்னி. அம்சமான அழகி. முப்பதை நெருங்கிக்கொண்டிருந்த லோகுவுக்குச் சோடிபோட சரியான வயதுதான். ஆனால், வயதுப்பொருத்தம் இருந்தால் மட்டும் போதுமா என்ன? மாப்பிள்ளைகள் கிடைக்காததால் அல்ல. வந்த மாப்பிள்ளைகள் யாரையுமேவாசுகிக்குப் பிடிக்காததால்தான் கல்யாணம் தள்ளிப் போகிறதே தவிர மாப்பிள்ளைகளுக்கு வாசுகியைப் பிடிக்காததால் அல்ல என்று சோமு கூறினான்.

‘அதெல்லாம் பெரிய எடம் அத்தனை சொத்துக்கும் ஒரே வாரிசு உங்களுக்கெல்லாம் ஏணி வெச்சாலும் எட்டாது ஏதாவது முயற்சி கியற்சி பண்ணி என் பொழப்புல மண்ணைப் போட்றாதீங்க இங்க எல்லாருத்துகிட்டயுமே எனக்குனு ஒரு நல்லபேரு இருக்குது’ என்பது அவனது கூற்றின் உள்ளர்த்தமாகவும் இருந்தது.

ஜெயபாலுக்கு ஒரு அண்ணனும் இருந்தார். அவர் முழுநேர விவசாயி. இவர்கள் போய்ச்சேருகின்ற நேரத்தில் இரவு மார்க்கெட்டுக்குப் போகயிருக்கும் காய்கறிகளை மூட்டை பிடித்துக்கொண்டோ கறவை களுக்குத் தவிட்டுத் தண்ணீர் காட்டிக்கொண்டோ இருப்பார். அந்த நேரத்துக்கெல்லாம் ஜெயபாலின் அப்பாவும் கொறங்காட்டிலிருந்து செம்மறிகளை ஒட்டிக்கொண்டு வந்திருப்பார். பட்டியிலடைப்பதற்கு முந்தைய அந்தி மேய்ச்சலுக்காகத் தோட்டத்தின் எதாவதொரு பகுதியில் ஆடுகளை மேயவிட்டபடி நொச்சி விளாரும் கையுமாக நின்று கொண்டிருப்பார். ஜெயபாலின் அம்மாவும் எதையாவது செய்து கொண்டிருப்பார். சாயுங்கால நேரத்துக்கான தேநீரைத் தயாரித்துக் கொண்டிருப்பதும் உண்டு. அப்படியான சந்தர்ப்பங்களில் இவர்களுக்கும் ஒரு டம்ளர் கிடைக்கும்.

சிலசமயம் ஜெயபாலும் வீட்டிலே இருப்பதுண்டு. அப்போது அவர் திருப்பூரிலிருக்கும் பனியன் கம்பனியொன்றிற்குக் கட்டிங் மாஸ்டராகப் போய்க்கொண்டிருந்தார். போகும்போதோ திரும்பி வரும்போதோ எதிர்முட்டுப் போடநேர்ந்தால் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் ஜெயபாலின் அப்பா வோடு சம்பிரதாயமான நல விசாரிப்புகளுடன் சற்று நேரம் உரையாடுவதைச் சோமு தவறவிடக் கூடாத சம்பிரதாயமாகவே கடைபிடித்து வந்தான். வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத் தாரிடத்தில் வியபாரம் தாண்டியும் ஒரு நல்லுறவை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதைச் சோமு திட்டமாக வைத்திருந்தான். அவ்விதம் செய்வது வியாபார  வளர்ச்சிக்கு  உதவும்  என்றும் நம்பினான்.

ஜெயபாலின் அப்பாவுக்குத் தன் மூத்த மகனைப் பற்றிய கவலைதான் அதிகமுமிருந்தது. ‘வயசு இருபத்தியெட்டு முடியப்போகுதுங் தம்பி...  படிக்காமப் போயிட்டான். பத்தாததுக்கு ஒரு தொழிலுக்கோ ஏவாரத்துக்கோ போகாம காட்டைக் காத்துட்டே கெடக்கறான். இந்தக் காலத்து புள்ளைங்க எல்லாமே படிக்க ஆரம்பிச்சிட்டுதுக.. தனக்கு வரப்போறவனும் தன்னைவிட அதிகம் படிச்சு நெழலான உத்தியோகத்திலியோ தொழில் வியபாரத்திலியோ இருக்கோணம்னு கண்டிசன் போடுதுகளாமா... பொட்டப்புள்ளைய வூட்லவெச்சிக்கிட்டு பையனுக்குக் பார்க்கறதுக்கும் யோசனையாத்தான் இருக்கு’ என்கிற ரீதியில் ஜெயபாலின் அப்பா சோமுவிடம் தன் மனக்கிடக்கைகளைப் பகிர்ந்துகொள்வதுண்டு.

அந்த வாரம் ஜெயபாலும் வீட்டிலே இருந்தார். லோகு முதன்முதலாக ஜெயபாலைப் பார்த்தது அன்றைக்குத்தான். வெள்ளை முண்டா பனியனும் லுங்கிவேட்டியுமாகத் துணிதேய்த்துக் கொண்டிருந்தார். வெள்ளை முழுக்கைச் சட்டையும் புளூகலர் ஜீன்ஸ் பேண்ட்டும்தான் பிடித்தமான உடைகள்போல. சிமெண்ட்சீட் போட்ட வாசல் பந்தலுக்குக் கீழ் மர மேசையின்மேல் தனியாக வெள்ளை முழுக்கைச் சட்டைகளாகக் கிடந்தது. வாசலுக்கு வெளிப்புறமிருந்த களத்தின் கொடிக்கயிற்றில் தனியாகப் புளூகலர் ஜீன்ஸ்களாகக் காய்ந்து கொண்டிருந்தது.

விளைந்த மூங்கிலை இரண்டாகப் பிளந்து நேராக நிறுத்தியதைப் போன்ற உடல்வாகு ஜெயபாலுக்கு. சற்றே உயரம் குறைவான நடிகர் ரகுவரனைப் போல இருந்தார். சின்னவயது ரகுவரன். கையிலும் காலிலும் தோளிலும் மார்பிலும் ரோமப்படர் வென்பதே சிறிதுமில்லை. உருவிவிட்டதைப்போல மின்னின.

‘இவுரு லோகண்ணன். பக்கத்து ஊர்க்காரரு. பனியன் கம்பனில டெய்லரா இருக்கார். நான் பனியன் கம்பனிக்குப் போன காலத்துல அண்ணந்தான் எனக்குத் டெய்லரிங் கத்துக்குடுத்த குரு. இன்னிக்கு லீவுனு வூட்ல உக்காந்திருந்தாரு பொழுது போகட்டும் வாங்கனு தூக்கிப் போட்டுட்டு வந்துட்டேன்’ என்கிறவிதமாகச் சோமு ஜெயபாலுக்கும் அவருடைய அம்மா அண்ணனுக்கும் லோகுவை அறிமுகப்படுத்தி வைத்தான்.

ஜெயபாலைப் பார்த்தவுடனே லோகுவுக்குப் பிடித்துப் போய்விட்டது. நிறையப் பேசவேண்டு மென்றும் தோன்றியது. ஒரே தொழிலைச் சார்ந்தவர்கள் வெளியிடத்தில் புதிதாக அறிமுககையில் தங்கள் துறைசார்ந்து உரையாடிக்கொள்ள நிறைய இருக்கும்தானே? தொழில்சார்ந்த விசயங்களைப் பேசப்பேச ஒரு புரிதல் உருவாகி வெறுமனே தெரிந்தவர் எனும் நிலைமாறி நட்பு உருவாகவும் பலப்படவும் வாய்ப்புகள் இருக்கிறதுதானே? அன்று அப்படியெதுவும் நடக்கவில்லை. சோமு அறிமுகப்படுத்தியதும் ‘அப்படியா, சரி, நல்லது’ என்பது போலச் சிறு புன்னகையையும் சிறு ஆமோதிப்பின் தலையாட்டலையும் பிரதிபலித்த ஜெயபால் அவர் பாட்டுக்கு துணி தேய்க்க ஆரம்பித்துவிட்டார்.  ஆனால், அவரது அம்மாவும் அண்ணனும் முதல் சந்திப்பிலேயே நிறையப் பேசினார்கள். வந்து நிற்கும் புதிய மனிதனை ஒரு விருந்தினரை உபசரிப்பதுபோல உபசரித்து அவன் குடும்பம் அவன் பின்னணி பற்றியெல்லாம் அவனிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளும் ஆவல் அவர்களுக்கு நிறைய இருந்தது.

‘கட்டிங் மாஸ்டர்னா லோக்கல் கம்பனீல வெட்றீங்ளா? இல்ல, எக்ஸ்போர்ட் கம்பனீல வெட் றீங்ளா? பீஸ் ரேட்டுக்கா? ஷிப்டுச் சம்பளத்துக்கா?’ என்றெல்லாம் லோகுவிடம் நிறையக் கேள்விகள் இருந்தன. தவணைத் தொகையைப் பெற்றுக்கொண்டு குறிப்பேட்டில் எழுதிக் கொடுத்த பிறகு ஒரு டீ குடிக்கும் நேரம் அங்கே அமர்ந்திருந்தார்கள். அந்த நேரத்துக்குள் மற்றவர்களிடம் உரையாடியபடிக்கே அவ்வப்போது ஜெயபாலிடமும் மேற்படியான கேள்விகளையெல்லாம் லோகு கேட்க முனைந்தார். ஒன்றிரண்டு கேள்விகளிலேயே நிறுத்தியும் கொண்டார். ஒரு நல்ல உரையாடலை வளர்த்தெடுக்க வேண்டுமெனும் நோக்கத்துடன் கேட்கப்படும் அன்பின் விளைவுக் கேள்விகளுக்குக்கூட மிசின் மாதிரி ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு தன்பாட்டுக்கு தன் வேலையைப் பார்த்துக்கொண் டிருப்பவரிடம் மேற்கொண்டு என்னத்தைக் கேட்பது?

அன்று வரும்வழியில் லோகு தன் அபிப் பிராயத்தைப் பகிர்ந்துகொள்ளவும் சோமுவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ‘சேச்சே... நீங்க நெனைக்கிற மாதிரி மண்டைக்கனம் புடிச்ச ஆளெல்லாம் கெடையாதுங்ண்ணா. அந்தாளு சுபாவமே அதான். ஊட்டுச் சனத்துக கிட்டக்கூடப் பெருசா பேசிக்க மாட்டாரு. அவுரு பாட்டுக்கு தானுண்டு தன்னோட வேலையுண்டுனு இருக்கற டைப்புன்னு வெச்சுக் கங்களேன். நானும் பெருசா பேசிக்கறதில்லை. ஏதாச்சும் கேட்டாருன்னா அதுக்குப் பதில் சொல்ற தோட சரி. ஆளு சைலண்ட் பார்ட்டியா இருந்தாலும் ஊருக்குள்ள வளுசப்பசங்ககிட்ட இவுருக்குனுனொரு செல்வாக்கு இருக்குது. கிரிக்கெட் டீமுக்கு கேப்டன் கோயில் கமிட்டில இளைஞரணித் தலைவர்னு ஆளுமையான ஆளுதான்.’ அன்றைக்குத் திரும்பிவருகையில் சோமு மற்றொரு விசயத்தையும் கூறியிருந்தான். ‘இது எந்தளவுக்கு உண்மைன்னு தெரியாதுங்ண்ணா... இவுரு கூடவே வெகுநாளா வேலைக்குப் போயிட்டிருக்கற ஒருத்தர் எனக்குத் தெரிஞ்சவரு, அவுரு சொன்னது. ‘ஆளு பொம்பளை விசயத்துல மன்னனாமா...’

அதுசமயம் வாய்ப்புக் கிடைக்கும்போதெல் லாம் லோகு சோமுவோடு எல்லாக் கிழமை லைன் களுக்கும் போய்க்கொண்டிருந்தார். உடன் பணிபுரிந்த நண்பர்கள் இருவரோடு சேர்ந்து தனியாக ஒரு பனியன் கம்பனியைத் துவங்கும்வரை அந்தப் பயணம் தொடர்ந்தது. மேற்படியான காலகட்டத்தில் இவர்கள் போகும்போது ஜெயபாலும் வீட்டிலேயிருந்த சமயங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். எல்லாச் சந்திப்புகளிலும் ஜெயபாலிடமிருந்து வெளிப் படுவது அதே சலனமில்லாத ஒரு சிறு புன்னகையும் ஒற்றை வார்த்தையில் பதில்களும்தான். அவர் பாட்டுக்கு இருப்பார். அவரது சுபாவமே அது தான் என்பதால் லோகுவும் பெரிதாகப் பேச முயற்சிப் பதில்லை. ஆனால், அவரது அண்ணன் அப்பா எல்லாம் நன்கு பழக்கமாகிவிட்டார்கள். இன்றைக்கும் எங்காவது தடம்வழிகளில் காணநேர்ந்தால் சில வார்த்தைகளாவது பேசாமல் போவதில்லை.

‘நம்மகூடப் பேசறதுக்கே இவ்வளவு யோசிக்கிறானே...? ஙொய்யாலே... இவனெப்படீடா பொம்பளை விசயத்துல மன்னனாக இருக்க முடியும்? ஒருவேளை சோமான் கேள்விப்பட்டதாகச் சொன்னதெல்லாம் பொய்யாக இருக்கலாமோ...’ என்றும் லோகுவுக்குத் தோன்றியதுண்டு. ‘பேசினா லென்ன? பேசாவிட்டலென்ன? பற்றியும் சுற்றியும் கொள்ளும்படியான உடல்வாகு இவனுக்கு. எந்தக் கொடியும் பற்றிக்கொள்ளவும் சுற்றிக்கொள்ளவுமே விரும்பும்’ என்றும்  நினைத்துக்கொள்வார்.

மஹா சிவராத்திரியைத் தாண்டியதும் சிவனை விட்டுவிட்டுச் சனங்கள் சக்தியைக் கொண்டாடத் துவங்கி விடுகிறார்கள். பங்குனி சித்திரை இரண்டுமே ஆசைதீர அம்மன்களைக் கொண்டாடி மகிழும் மாதங்கள்தான். இங்கே இந்த மாதங்களில் சாட்டுப் பொங்கல்களின் குலவைச் சத்தத்தை, தீர்த்தக் காவடிகளின் கொட்டும் முழக்கை, கொம்பின் ஓசையை, படுகளமெழுப்பும் உடுக்கைப் பாடல்களை, ஊர்தோறும் நிறைந்திருக்கும் வழியெல்லாம் அமர்ந் திருக்கும் காளிக்கும் மாரிக்கும் கன்னிமார்களுக்கும் படையிலடாமல் இருந்துவிட முடியுமா என்ன? அந்த எட்டுக்குச் சலிக்காமல் ஒவ்வொரு ஊரின் கோவில் விசேசங்களுக்கும் நிறைவு நாளில் நடக்கும் இரவு நிகழ்ச்சிகளுக்கும் சோமு போய்க்கொண்டிருந்தான். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெறவிரும்பும் ஒரு பிஞ்சுநிலை வியாபாரி அவர்களின் யாதொரு அழைப்பையும் புறக்கணிக்க முடியாதுதானே? கூடாதும்தானே? சூழ்நிலையை அனுசரித்துச் சில நிகழ்ச்சிகளுக்கு லோகுவும் போய்க்கொண்டிருந்தார். அப்படிப் போனதில் ஒன்றுதான் அந்த ஆடல்பாடல் கலை நிகழ்ச்சியும். ஜெயபாலின் ஊரிலே நடந்தது.

இவர்கள் போய் சேர்ந்தபோது இரவு அன்ன தானம் முடிவுறும் தருவாயிலும் இன்னிசைக் கச்சேரி ஆரம்பிக்கப்போகும் தருவாயிலும் இருந்தது. கடந்த ஒரு வாரமாக நடைபெற்றுவந்த கோவில் சாட்டையொட்டிய பல்வேறு நிகழ்வுகளுக்கு நிதி அளித்தவர் களையும் வெவ்வேறு வகைகளில் துணைபுரிந்தவர்களையும் குறிப்பிட்டு விழா மேடையில் உள்ளூர்பிரமுகரொருவர் நன்றி நவின்றபடியிருந்தார். விழாப்பந்தலில் ஊர்ச்சனம் முச்சூடும் சுற்றமும் நட்பும் சூழ அமர்ந்திருந்தனர். மையப்பகுதிக்குச் சற்று மேபுறமாகச் சில நாற்காலிகள் காலியாகக்கிடந்தன.

லோகுவும் சோமுவும்போய் அமர்ந்து கொண்டனர். ஊர் அறிந்த வியாபாரி அல்லவா? ‘வாங்க.. வாங்க..’ ‘இப்பதான் வர்றீங்களா..?’ ‘அன்னதானம் இன்னும் நடந்துட்டுத்தானிருக்கு.. சாப்பிடலீன்னா போயி சாப்பிட்டுட்டு வந்துருங்க..’ என்கிற ரீதியில் உபசாரமொழிகள் அணிவகுத்தன. அவைகள் வருகின்ற திசைகளை நோக்கி தலையைத் திருப்பிப் பணிவும் புன்சிரிப்புமாகச் சோமுவும் பதில் சொல்லியபடி அமர்ந்திருந்தான்.

‘மத்தியானம் மேட்ச் பார்க்க வர்லியாட்ட யிருக்குதுங் சோமு.. கண்டிப்பா வருவேன்னு சொல்லீருந்தீங்ளே..’ என்றொரு குரல். பரிச்சியமான குரலாக இருக்க லோகுவும் திரும்பிப் பார்த்தார். வாசுகிதான். நேர் பின்வரிசையில் இரண்டு நாற்காலி களுக்குக் கிழ புறமிருந்த மூன்றாவது நாற்காலியில் அமர்ந்திருந்தாள். ‘ஒரு ஆர்டரு சம்பந்தமா பல்லடம் வரைக்கும் போக வேண்டீதாப் போயிருச்சுங் வாசுகி.. அதான் வரமுடியாமப் போயிருச்சு..’ என்று காரணத்தைக் கூறிய சோமு ‘இன்னிக்கு உங்க ஊரு டீமு குள்ளக்காளிபாளையம் டீமை வெச்சுச் செஞ்சுட்டாங்க போல..’ என்றான். வாசுகியின் பிரகாசமான முகம் மேலும் வெளிச்சமடைந்ததைப் போலப் பட்டது. ‘பின்னே எங்க பசங்க இன்னிக்குப் பின்னியெடுத்திட்டாங்களாக்கும்’ என்றாள்.

எட்டு அணிகள் பங்குபெற்ற நாக் அவுட் போட்டியில் பைனல் வரைக்கும் வந்திருந்த இரண்டு அணிகளுக்கும் பரிசுகள் அறிவிக்கப்பட்டது. முதலில் குள்ளக்காளிபாளையம் அணிக்கு ரன்னர் கப்பும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. அடுத்ததாக வின்னர் கோப்பையை வென்ற ஜெயபாலின் அணி மேடையேறியது. உள்ளூர் அணி என்பதால் பார்வையாளர்கள் பகுதியில் விசிலும் கைதட்டலும் பட்டையைக் கிளப்பின. வாசுகியே அறியாத வண்ணம் லோகு வாசுகியை அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

மேன் ஆப் தி மேட்ச் ஜெயபாலுக்கு வழங்கப் பட்டது. மேன் ஆப் தி சீரியலும் அவருக்குத்தான். பதினைந்து ஓவரில் நூற்றியிருபது ரன்களைச் சேசிங் செய்தால் வெற்றி எனும் இலக்குடன் இறங்கிய அணி மூன்று ஓவருக்கே ஐந்து விக்கட்டுகளை இழந்து இருபத்தியேழு ரன்களோடு தடுமாறியதாம். ஆட்டம் காலி, தோல்வி நிச்சயம் என்றுதான் எல்லோரும் நினைத்தார்களாம். ஆனால், ஆறாவது விக்கெட்டுக்கு இறங்கிய ஜெயபால் அடித்து நொறுக்கி மூன்று பந்துகள் மீதமிருக்கவே வெற்றியை வசமாக்கினார் என்றும் இது உண்மையிலேயுமே ஒரு கேப்டன் இன்னிங்ஸாக்கும் என்றும் ஆட்டநாயகன் விருது வாங்கும் சமயம் ஜெயபாலைக் குறித்துச் சிறு புகழ்உரையை மைக்கிலேயே நிகழ்த்தினார்கள். கோப்பை களும் கையுமாக ஜெயபால் யாரையோ பற்றி யாரோ புகழ்கிறார்கள் நமக்கென்ன என்பது போல நின்றுகொண்டிருந்தார். இந்தாளிடம் இப்போது ஏற்புரையாற்றச் சொல்லி மைக்கை நீட்டினால் எப்படி இருக்கும் எனும் யோசனை உதிக்க லோகு வுக்குப் புன்னகை அரும்பியது. ஏதோ தோன்றி யவராகத் திரும்பி பின்வரிசையில் அமர்ந்திருக்கும் வாசுகியை நோக்க அரும்பிய புன்னகை அற்றும் போனது. போகத்தானே செய்யும்? சோமுவுக்கு ஜாடைகாட்டினார். திரும்பிப் பார்த்துவிட்டு நம்பமுடியாத ஆச்சர்யத்துடன் லோகுவின் காதில் கிசுகிசுப்பாகக் கூவினான். ‘அடங்கொய்யால... என்னண்ணாயிது இப்படிப் பார்க்குது? வுட்டா போயி தூக்கீட்டெ போயிரும் போலயிருக்குதே...’

ஆடல்பாடல் நிகழ்ச்சி ஆரம்பமாகியிருந்தது. பார்வையாளர்களுக்கான பந்தலையொட்டியே கிழ புறத்தில்தான் அன்னதானப் பந்தலும் அமைக்கப் பட்டிருந்தது. குறுக்கே தெனந்தடுக்குகளை வரிசை யாக நிற்கவைத்துக் கட்டிய தடுப்பும் இருந்தது. அதன் காரணமாக அன்னதானக் கூடத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள் அங்கே என்ன நடக்கிறது என்பதை இங்கே இருப்பவர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. அன்னதானமெல்லாம் முடிவுக்கு வந்து இளைஞர் அணியினரின் தண்ணிதானம் சத்தமில்லாமல் நடை பெற்றுக் கொண்டிருப்பதாகச் சோமுவுக்கும் லோகு  வுக்கும் தோன்றியது. ஸ்டேஜையொட்டியே நேர் கீழ்புறத்தில் ஆட்டக் கலைஞர்களுக்கான மேக்கப் ரூமும் அமைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் பந்தலுக்கு வடகிழக்காவும் அன்னதானப் பந்தலுக்கு வடமேற்காகவும் மேக்கப் ரூமுக்கு நேர் தென்புற மாகவும் இருக்கின்ற பகுதியில் பேருக்கு சில நாற்காலிகளைப் போட்டுக்கொண்டு அமர்வதும் எழுவதும் முக்கால்வாசி விளக்குகள் அணைக்கப் பட்ட அன்னதானப் பந்தலுக்குள் போவதும் வருவது மாக இளைஞர் அணியினரின் புழக்காட்டங்கள் இருந்தது. அத்தனை அமளி துமளிகளுக்கு நடுவி  லும் ஜெயபாலின்மேல் ஒரு நிதானம் நிலவியது. உழவு நடக்கும் காட்டில் வயிற்றிலே தீயை வைத்துக் கொண்டதைப்போலத் தாவித் தாவிப் படைக்கால் மண்புழுக்களைப் பொறுக்கிக்கொண்டிருக்கும் புழுதிக் குருவிகளுக்கு நடுவே மிகுந்த அமைதியோடு இரை யெடுத்தப் படியிருக்கும் கொக்கின் நிதானம்.

இவர்கள் இருவரும் மேடையில் நிகழ்ந்து கொண்டிருந்த ஆடல்பாடலில் ஜெயபால் மீது ஒரு கண்ணையும் வாசுகியின் மீது மறுகண்ணையும் வைத்த  படி அமர்ந்திருந்தனர். வாசுகி தனது பௌதீகமான மற்றும் அபௌதீகமான அனைத்துக் கண்களையும் ஜெயபாலின் மீதே வைத்தபடி அமர்ந்திருந்தாள். ஒரு தாக்கம் இல்லாது போய்விடுமா என்ன? ஏதோ தோன்றியதுபோல் அவரது கிடையிலிருந்தபடியே ஜெயபாலுவும் அவ்வப்போது இங்கே திரும்பிப் பார்ப்பதும் பின் ஒன்றும் விளங்காதவராக அங்கே திரும்பி ஆடலைக் காண்பதுமாக இருந்தார். ‘கூப்பிட  லாமாங்ண்ணா..

உங்களுக்கொண்ணும் பிரச்சனையில்லையே?’ என்றான் சோமு.

“தாராளாமா கூப்டு. எனக்கென்ன பிரச்சனை?”

“இல்லே... உங்களுக்கு இதுமேல ஒரு நோட்டம் இருக்கலாம்னு ரொம்ப நாளாவே ஒரு டவுட்எனக்கு. அதுதான் எதுக்கும் ஒரு வார்த்தை கேட்டுக்கிலாமேன்னு கேட்டேன். இப்ப மட்டும் அந்தாளு இங்க வந்து ஒரு விசுக்கா இதுமுட  கண்ணைப் பார்த்துட்டான்னு வெய்யுங்க...  சீமெண்ணைல நனைச்ச பழைய துணிமேல தீக்குச்சிய ஒரசிப்போடற மாதிரிதான். கபக்குன்னு பத்திக்கும்.”

“நம்முளுக்கு நோட்டமிருந்து என்ன பிரயோசனம்? நம்மமேல அதுக்கு நோட்டமிருக்கோணமே.. நடை முறைக்கு வாய்ப்பில்லாத நோட்டத்தை வெச்சிக்கிட்டு என்ன செய்ய? அதுமுட தகுதிக்கு நானெல்லா அது மண்ட எடத்தைக்கூடப் பார்க்க முடியாது. கூப்டுட்ரு... பத்தராப்ல இருந்தா பத்திக் கிட்டுப் போகட்டும்”

சைகை காட்டினால் தெரிந்து கொள்ளும் தூரம்தான். ஜெயபால் திரும்பிப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் ‘இங்க வாங்க தல... வந்துட்டுப் போங்க...’ எனும் விதமாகச் சோமு கைச்சாடை காட்டினான். தெரிந்து கொள்ளாமல் போனதைப்பற்றி என்ன சொல்வது. விதி என்றுதான் சொல்லவேண்டும். அதிர்ஷ்ட தேவதை மூஞ்சியைத் திருப்பிக்கொண்டாள் என்று தான் சொல்லவேண்டும். ‘அண்ணா போதும்னு தோணுதுங்ண்ணா.. தண்ணியுங்கூட மூணுதடவை தான் தாட்சண்யம் காட்டுமாமா. நாலஞ்சுதடவை  சாடை காட்டியும் இந்தாளுக்கு ஒறைக்கலை. மண்ணு மாதிரி பார்த்துட்டு அவம்பாட்டுக்கு மூஞ்சியைத் திருப்பிக்கிறான். எல்லாரும் என்னை ஒரு மாதிரியா பார்க்கறாப்ல தோணுது.’ என்றான் சோமு. மணி நள்ளிரவு பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. வெளியூர் ஆட்கள் ஒவ்வொருவராகக் கிளம்பிக் கொண்டிருந்தனர். இவர்களும் புறப்பட்டனர்.

சில நாட்கள் சென்றிருக்கும். காலையுணவை உண்டு விட்டு லோகு கம்பனிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். இதைச் சொல்வதற்கென்றேசோமு வந்திருப்பான்போல. வந்ததும் வராததுமாக விசயத்தை ஆரம்பித்தான். “உங்களுக்குத் தெரியு மாங்ண்ணா... ஜெயபாலு எஸ்ஸாயிட்டாரு...”

“என்னடா சொல்றே..? வாசுகிய கூட்டீட்டா..?”

“அதையக் கூட்டீட்டு ஓடீருந்தாத்தான் பிரச்சனையே இல்லையே. அந்த டேன்ஸ்குரூப்பைச் சேர்ந்த ஒரு புள்ளையவாமா. புள்ளையுங்கூடக் கெடையாது. பொம்பளை. அவ ஏற்கனவே ரெண்டுபேருத்தைக் கட்டி இப்போ ரெண்டு பேருககூடயும் இல்லாம தனியா இருக்கறாளாமா.. எட்டு வயசுல ஒரு பொண்ணும் இருக்குதாமா அவுளுக்கு... ரெண்டும் எஸ்ஸாயிருச்சு”

“அடக் கருமமே... இவுனுக்கேண்டா புத்தி இப்படிப் போச்சு?”

“ஊருபூராமே இப்படித்தாண்ணா பேசிக்கிறாங்க. இருக்கற எடம் தெரியாம இருக்கற பையன். இப்படிப் பண்ணிப்போட்டானே... நம்பவே முடியலையேனு”

“அவுங்க ஊட்டுக்குப் போயிருந்தியா...?”

“போகாம இருப்பனா..? அங்க ஒருத்தரையும் கண்ணுலயே பார்க்கச் சகிக்கலை. எழவு வுழுந்த வூடுமாதிரி இருக்குது”

“மொதல்லயேகீது பழக்கம் இருந்துருக்குமோ.? மொதச்சந்திப்புலயே இந்தளவுக்குப் போயிட்டாங் கங்கிறதை நம்பவே முடியலை. அதுலயும் ஒரு மாதிரி கெத்தான ஆளு இப்படிப் பண்ணீட்டாருங்கிறதை நம்பவே முடியலை”

“மொதல்லயெல்லாம் எந்தப் பழக்கமும் இல்லியாமா... அன்னிக்கு நைட்டு பங்ஷனப்போ பார்த்துக்கிட்டதுதான். எப்படியோ செட்டாகி அது இந்தளவுக்குப் போயிருச்சு.”

“கரும்மடா எல்லாம். ரெண்டுபேரும் எங்க இருக்கறாங்கனு ஏதாச்சும் தெரியுமா? ஜெயபாலு ஊட்லயும் மத்த சொந்தக்காரங்களுமெல்லாம் என்ன முடிவு எடுத்திருக்கிறாங்க?”

“அவுங்க அப்பாவும் அம்மாவும் ஆகவே  ஆகாதுன்னு தலை முழுகீட்டாங்களாமா... நெருங்குன பங்காளிக நாலஞ்சுபேரு அந்தப் பொம்பளை யோட அட்ரஸை கலைக்குழு மேனேஜர்கிட்ட வாங் கீட்டுப்போயி பார்த்துருக்கிறாங்க. திண்டுக்கல்லுக்கு அந்தப் பக்கம் எங்கியோ மலங்காட்டுக்குள்ள இருக்குதாமா அந்த ஊரு. அவுளுக்குப் பணத்தைக்கீது கொடுத்து ஒதுக்கியுட்டுட்டு இவனைக் கூட்டீட்டு வந்துரலாம்னு போயிப் பேசிப் பார்த்துருப்பாங் களாட்டயிருக்குது. வந்தா கூட்டீட்டுப் போயிக்கங்கனு சொல்லீட்டு குடிசைக்குள்ள போயிட்டாளாமா அவ. நடந்தது நடந்துபோச்சு என்னை இப்படியே உட்ருங்கன்னு கையெடுத்துக் கும்புடறானாமாம் இவன். மறுபடியும் பேசறதுல பிரயோசனமில்லைனு எல்லோரும் வந்துட்டாங்களாம்”

இதெல்லாம் நடந்து இருபது வருடங்களாகி விட்டது. மீளவே முடியாத துக்கம் என்று எதுவுமில்லை. எழவு வீடு மாதிரி அன்றைக்குக் காட்சியளித்த ஜெயபாலின் வீட்டில் அதற்குப் பிறகு இரண்டு கல்யாணங்கள் நடந்துவிட்டது. எல்லோருமே நன்றாகத்தான் இருக்கிறார்கள். இன்னமும் அவர்மீது அவர்களுக்குக் கோபமோ வருத்தமோ இருப்பதற்கு வாய்ப்பில்லையென்றே தோன்றுகிறது. இருந்தும் இத்தனை காலத்துக்குப் பிறகும் சேர்த்துக்கொள்ளாமல் ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் என்னவாக இருந்துவிட முடியும்?

பெரிய மலைகளையே விழுங்கிப் படுத்திருக்கும் நடுக்கடல் அமைதியின்மேல் சிறிய கல்லொன்று விழுந்தாலும்கூட அதற்குரிய ஒரு சலனம் அந்த நேரத்திற்கு உருவாகவே செய்கிறது. பிறகு கடல் மறுபடியும் அமைதியாகி விடுகிறது. அரூபமான மனிதமனமும் ஒருவகையான நடுக்கடல் அமைதி தான். சின்னஞ்சிறியதையும் ஏற்றுக்கொள்ளாமல் சலனமுறும். பென்னம்பெரியதையும் விழுங்கிவிட்டு அமைதி கொள்ளும். லோகு நினைத்துக்கொண்டார். ஜெயபாலின் பெற்றோர் அவர் இல்லாமல் வாழ்ந்து பழகிவிட்டார்கள். அண்ணனும் தங்கச்சியும் ஜெய பாலுக்குப் போகவேண்டிய சொத்தையும் தாங்களே அனுபவித்துப் பழகிவிட்டார்கள்.

வாசுகியை அவள் பெற்றோர் மிக வசதியான இடத்திற்குக் கட்டிக் கொடுத்தார்கள். தற்போது அது மிகமிக வசதியான இடமாக வளர்ந்துவிட்டது. பல தொழில்களைச் செய்யும் வாசுகியின் கணவர் பனியன் கம்பனியும் வைத்திருக்கிறார். டைரக்ட் எக்ஸ்போர்ட். லோகுவின் இரண்டு பனியன் கம்பனிகளையும் சேர்த்து நிறுத்தினால் அவர்கள் கம்பனியின் கணுக்கால் உயரத்திற்கு வரலாம். மூலைக்கு மூலை கணவர் வாங்கிப் போட்டிருக்கும் சொத்துக்களைப் பரிபாலனம் பண்ணுவதற்காக வாசுகியும் மூலைக்கு மூலை தனது கறுப்பு இன்னோவா காரில் போன படியும் வந்தபடியும் இருக்கிறாள். கடந்த சில மாதங்களில் எங்கேனும் தடம் வழியில் பழைய பாடாவதி டிவிஎஸ் பிப்டியை கறுப்பு இன்னோவா எதிர்கொண்டிருக்குமா என்று தெரியவில்லை. அப்படி எதிர்கொண்டிருந்தால் கண்ணாடிகள் ஏற்றப்பட்ட கறுப்பு இன்னோவாவுக்குள் என்ன நடந் திருக்கும் என்றும் தெரியவில்லை. ஜெயபால் ஓடிப்போனசெய்தியை சோமு வந்து சொன்னதும் சட்டென்று அந்தரங்கத்தில் ஒரு ரகசிய இன்பம் ஊற்றெடுத்ததை லோகு இப்போது நினைத்துக் கொண்டார். சிரிப்பாய் வந்தது. கூடவே வரும் இன்பமென்றும் எதுவுமில்லை.

கோல்டு கிங்ஸ் சிகரெட் ஒன்றைப் பெட்டிக் கடையில் வாங்கிப் பற்றவைத்துக் கொண்ட லோகு சலூன் கடைக்கு முன்னால் போடப்பட்டிருந்த மரப் பெஞ்சில் வந்து அமர்ந்துகொண்டார். நால்ரோட்டின் காட்சிகளை வேடிக்கை பார்த்தவாறு புகையை ஊதிக்கொண்டிருந்தார். பேக்கரிக்கு முன்னால் கடைரோட்டில் நின்ற இவருடைய சைக்கிளுக்குச் சற்றே மேபுறமாக ஜெயபாலுவின் மொபட்டும் நின்றது. பேக்கரிக்குள்ளிருந்து வெளிப்பட்ட ஜெயபால் உளுந்துவடைப் பார்சலைக் கொண்டுபோய் வண்டி யின் டேங்க் கவருக்குள் வைத்துவிட்டு பெட்டிக்  கடைக்கு வந்தார். தலைமுடி மீசையெல்லாம் பாதிக்குப் பாதி நரைத்துவிட்டது. ஆனாலும், அந்த உடல்வாகும் முகமும். அவை இன்னும் அப்படியே  தான் இருக்கிறன. பார்த்தும் பார்க்காதவராக லோகு சாலையைக் கவனித்தபடி புகையை ஊதிக்கொண்  டிருந்தார் ஜெயபாலும் பார்த்தும் பார்க்காத மாதிரித் தான் போய்க்கொண்டிருக்கிறார். ஆனால், அதில் தன்னுடையதைப் போன்ற பாவனை இல்லை. திட்டமிடல் இல்லை. மிகவும் இயல்பாக இருக் கிறது. யாரென்றே தெரியாத ஒருவரைக் கடந்து  போகும் இயல்பு. ஒருவேளை நம்மை உண்மையாகவே அவர் மறந்துவிட்டார்தானோ என்னவோ. இப்படியெல்லாம் யோசனைகளை ஓடவிட்டுக் கொண்டிருந்த லோகு சட்டென்று எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு காதைத் தீட்டிக் கொண்டார். பீடியை  பற்ற வைத்தபடியே ஜெயபால் பெட்டிக்கடைக்காரரிடம் வினவிக்கொண்டிருந்தார். ‘நேத்து ரிஷாப் பண்டு பின்னியெடுத்திட்டானாட்ட இருக்குது...?’

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer