ரசா எனும் பிரபஞ்சவெளியின் நாயகன்

சிபி சக்கரவர்த்தி

பகிரு

தனது எண்பதாண்டு கலைவெளிப் புழக்கத்தை, நவீனக்கலை பாணியென (Modernism) ஊர்ப்புறங்கள், நகர்ப்புறங்கள், கிராமங்கள், நகரவீதிகள் என நிலப்பரப்புகளிலும், தற்கால பாணியென (Contemporary Art) வடிவவியல் உருவங்கள் நிறைந்த பண்பியல் வெளிப்பாட்டிமை மற்றும் குறியீட்டியலிலும் (Abstract Expressionism & Symbology) கடந்தவர் எஸ் எச் ரசா எனும் சையத் ஹைதர் ரசா (S H Raza aka Syed Haider Raza).

இவ்விரு பாணிகள் மட்டுமே ரசாவின் அடையாளமெனச் சுருக்க முடியாது, ஏனெனில் செறிந்த கலைஞர்கள், தங்களது சமகாலத்திய பாணிகளைப் பற்றிய அறிவுப்பரிசோதனைகளைக் கண்டிப்பாகக் கடந்திருப்பர், எனில் இது ஒரு கலைஞன் தனது தனிப்பண்பாய், தனி முத்திரையாய், ஒரு பாணியை வகுத்துவைக்கும் இயல்பு மட்டுமே எனப் பொருள்கொள்ளுதல் கட்டாயம், தராசில் வைத்து, நிறை குறை பார்க்கும் நோக்கம் பிழையானது.

இதோடு, வெற்று அழகுணர்ச்சியினைக் கிளப்பும், எழிலொழுக, கிளர்ச்சியூட்ட வடிக்கப்படும் (Infatuation to aesthetics) நிலப்பரப்பு ஓவியங்களுக்கு இடங்கொடாது, மனமெனும் பிரபஞ்சத்தினுள் புதுப்பிம்பத்தைச் சமைக்கும் எந்தவொரு நிலப்பரப்பு ஓவியமும், ரசாவின் தன்மை கொண்டேயிருக்கும். ஏனெனில் ரசா எனும் மாஸ்டர், ஒரு வாத்தியார், ஒரு முன்னோடி, அந்தப் பாணியில் வேரூன்றியவர்.

ரசாவை குறிக்கும் போது வால்டெமெர் ஜார்ஜ் (பாலிஷ் - பிரெஞ்சு கலை அறங்காவலர், விமர்சகர்) (Waldemar George, Polish French Art Critic) “கண்ணிமைவில், காரணமின்றித் தொடர்பறுந்து போகும், பிம்பங்களை ரசா வெறுமனே உள்ளீடு செய்வதில்லை, படைப்பதுமில்லை. இதுபோன்ற பல பிம்பங்கள் எண்ணமெனும் வடிகாற் சுழலில் (Annihilation via Vortex) ஒன்றன்பின் ஒன்றாய் இழுத்துசெல்ல, அவற்றிலிருந்து சிதறும், சிதைந்த துண்டுகளுக்குச் சிறகுகள் கொடுத்து, உருமாற்றித் தனது நிலப் பரப்புகளில் உலவவிடுகிறார் ரசா. இதன் இலக்கியத்தன்மையே அவரிடம் ஒரு மாஸ்டரை கைகாட்டுகிறது.”

இருந்தும் கற்றுக்குட்டியானவர்களுக்கும், ஒரு வகையில் ஓவியங்களை வாசிப்பவர்களுக்கும் (ஓவியங்களைப் பார்த்து, அதைப்பற்றி இணையக் குறிப்புகள் கொண்டு ஆழம் பார்ப்பவர்கள், உதா: இக்கட்டுரையாளர்), ரசா ஏன் நிலப்பரப்பெனும் வடிவவியலெனும் நேர்கோடுகள், முக்கோணங்கள், வட்டங்கள், சக்கரங்கள், பிந்து (Bindu) திலகங்கள் (பொட்டு) என ஒரு ஓழுக்கமான வரையறை சட்டகத்தினுள் தன்னை நிறுவிக்கொண்டார்? எனும் கேள்வியிருத்தல் அவசியம். (அவ்வாறில்லையெனில், உங்களது கவனம் இவற்றின் மேலில்லை அல்லது உங்களது நுகர்வுத்தன்மையில் பழுதிருக்கலாம்)

ஏனெனில் நேர்கோடுகள், வட்டங்கள், முக்கோணங்கள் போன்ற வடிவவியல் சாத்திரப்பின்னணி கொண்டவையாவும், சட்ட திட்டங்களைப் போன்றவை, அவற்றுள் எங்கே புலனாகும் இலக்கியச்சிந்தனைகள், கற்பனைகள் மற்றும் கவித்துவங்கள்?கோர்ட்டில் கவிதைக்கு என்ன வேலை? சுருக்கமாக சட்டத்தில் ஏது கவித்துவம், நேர் கோடுகளில் என்ன கற்பனை?

மேலும் தன்னுணர்வு கொண்ட மனிதர்களிடமும், மனிதத்தன்மையிலும் பொதிந்துள்ள முகப் பாவங்களையும், வக்கிரங்களையும் ஏனையவற்றையும் தாண்டி நிலப்பரப்பில் அப்படி என்ன எதார்த்தங்கள், கலைத்தன்மைகள் காணக் கிடைத்துவிடப்போகின்றன?

மனிதர்களைத் தவிர வெகு சில உயிர்களுக்கும் மட்டுமே, ‘தான்’ என்பது புலப்படும், ஆக்டோபஸ்கள் நிலைக்கண்ணாடிகளில் தங்களைக் கவனிப்பதாகக் கூறப்படுகிறது, அதே நேரம், நாய் பூனைகளோ பதறுகின்றன. ஆதலால்தான் மனிதத்தன்மையினை நாம் வளர்ப்புப் பிராணிகளுக்குத் தத்துகொடுக்கிறோம், அவற்றுக்கென ஒரு சுயத்தை நாம் வடிவமைத்து, அந்தக் கோட்பாடுகளுக்குள் அவற்றைப் பழக்குகிறோம், பசுவெனில் அமைதி, காளையெனில் வீரம், நாயெனில் நன்றி, மனிதனெனில், இவை யாவும், இவற்றைத்தாண்டியும் - மனிதத்தன்மை நேர்கோடுகள், வட்டங்கள், மீன்முள் (Herringbone) போன்ற உருவ விசை சீர்மைகள் (Symmetry) சூத்திரங்கள் யாவும் கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்கக்கூடியதாகவும், இவையெலாம் வடிவவியல் மற்றும் கட்டிட சாத்திர பொறியாள நிபுணர்களுக்கே உரித்தானதென (கட்டுரையாளருக்குத் தோன்ற), எவ்வாறு இத்தளத்தில் தனது பாணியை நிறுவி, தற்காலக் கலைப்பண்பாட்டு (Contemporary art in India) தொடர்பை அநேகமாக மூன்று தசாப்தங்களுக்கு முன்னரே ஏற்படுத்தினார் ரசா.

இதற்கு மேலாக, இதனை நான்கு தசாப்தங்களுக்கு முன்னராக வால்டெ மெர் ஜார்ஜ் கணித்துள்ளார். ஐரோப்பிய அமெரிக்கக் கலை சூழலில் நிலவிய, தற்காலக் கலைப்பண்பாட்டை (Contemporary Art) இந்தியாவுக்கு, ஏன் ஒட்டுமொத்த தெற்காசியாவிற்கே கட்டியிழுத்து வருபவர் ரசாதான் என்று 1960 -இல் ஜார்ஜ் எழுதியுள்ளார்.

(வால்டெமெர் ஜார்ஜ், இரண்டு உலகப்போர்களுக்கிடைபட்டக் காலத்தில் இயங்கியவர், நியோ ஹ்யுமானிஸம் (Neo Humanism- நவயுக மனிதத்துவம்) பக்கம் சென்றவர், உலகப்போர் மேகங்கள் சூழ்ந்திருந்த நேரத்தில், முசோலினி ஹிட்லர் உடன்படிக்கைக்கு முன்னர், சோவியத், பிரெஞ்சு சோசலிச, லிபரலிச கொள்கைகள் மீதான விரக்தியில், சர்வாதிகாரிகளுக்குக் கீழ் கலை பண்பாடுகள் பேணி பாதுகாக்கப்படும் எனும் வித்தியாசமான நம்பிக்கையில், முசோலினியை சந்தித்து இது குறித்துப் பேசியவர் ஜார்ஜ். இடது சாரி சிந்தனைப்பள்ளிகளின் கலைபடைப்புகள் இவருக்கு இனித்ததா கசந்ததா எனும் சந்தேகத்திற்குச் செல்லாது, ரசாவின் கலைப்படைப்பு குறித்தான இவரது கணிப்பை மட்டுமே நாம் பிரித்து வைத்துக்கொள்ளுதல் அவசியம்.)

ரசா, இந்திய சுதந்திர வேட்கையின் நவீன கலைவடிவ பண்பாட்டின் அடித்தளம் அமைத்தவர். எம் எப் ஹுசைன், எப் என் சௌசா, எஸ் எச் ஆரா ஆகியோருடன் இயைந்து களமாடியவர், முற்போக்குக் கலைஞர்கள் குழுவின் (Progressive Artists Group, PAG) அடிப்படை நிறுவனர்களில் ஒருவர்.

பீஏஜி (PAG) ஏழெட்டு ஆண்டுகளே புழங்கினாலும், ஒரேயொரு அருங்காட்சியே அரங்கேறினாலும், அதனுள் வாய்த்திருந்த பன்மைத்துவம் பழுதுபடாமல் இருந்ததெனலாம். பின்னால் நிறுவப்பட்ட தில்லி தேசிய அருங்காட்சியக அரங்கம், லலித்கலா அகாதெமி இந்தக் கோட்பாடுகளை ஓரளவுக்குச் சுவிகரித்துக்கொண்டன. இம்முற்போக்கு கலைக்குழுமத்தின் அக்கினிகுஞ்சுகளானவர்கள், புது இந்தியாவின் போக்கினை, பிரிவினைவாதத்தினை, வர்க்க சுரண்டல்களை, வேலையின்மை, பசி, பஞ்சம் யாவையும் ஓவியங்களில் படையலாக வைத்துக்கொண்டிருந்தனர். கலைப்பண்பாட்டினை மத அரசியல் சாயங்கொண்டு ஒடுக்கப் பழகிக்கொண்டிருந்த நேரம், மார்க்ஸிய பிடிப்புள்ள சௌசாவின் பெருந்தனக்காரனும் பராரியும் (The Tycoon and the Trump) கிஷன் கண்ணாவின் காந்தியின் மரணச்செய்தி (News of Gandhiji's death) ராம்குமாரின் வேலையில்லாதவர்கள் (Unemployed Graduates) என ஏனையோர் மனக்கொந்தளிப்புகளைச் சாயத்தில் ஏற்றிக்கொண்டிருந்தவேளை, ரசா தனது படைப்புகளில் நிலப்பரப்புகளுடன் வழக்காடிக்கொண்டிருந்தார். குழு கலையவும் கலைஞர்கள் பலரும் நாட்டை விட்டு வெளியேறவும் சரியாக இருந்தது.

ரசா பிரெஞ்சு கலைப்பள்ளி இக் கொலெ டெ பாரீஸ் (Ecole de Paris) சென்றார். எல்லை பிரிவின் போது, அவரது அண்ணன் குடும்பத்தினருடன் அவரது மனைவி பாத்திமா பாகிஸ்தான் தஞ்சம் புகும்போது கூட, இந்தியாவைப் பிரியாதவர், பிரெஞ்சு மண்ணில் தனது அநேக வாழ்நாளைக் கழித்தார். இதற்கு ஒரு காரணம் அவரது பிரெஞ்சு மனைவி ஜேனைன் மோங்கிலாத் (அவரும் ஓவியர், கலைஞர்) என்றால், மற்றொன்று ஐரோப்பிய அமெரிக்கக் கலை உலக மேடை. ஆனால் அவ்வபோது இந்தியா வந்து கொண்டேதான் இருந்தார், மண்ணுடனான தொடர்பு தொடர்ந்திருந்தது. மனைவி காலமான பின்பு மீண்டும் இந்தியா வந்தடைந்தார், ரசா பவுண்டேசன் தொடங்கி, கலை பரிவர்த்தனையிலேயே இருந்தார்.

எவ்வாறெனினும் ரசா தனது சமகால நண்பர்கள், கலைஞர்களைவிடத் தனி அந்தஸ்துகளை, அடையாளங்களைப் பிரெஞ்சு மற்றும் இந்திய அரசுகளிடமிருந்து சம்பாதித்தார். கடுந்தொந்தரவுக்கு ஆளாகியிருந்த ஹுசைன், சௌசா போன்றோர் நாட்டை விட்டு வெளியேறியது நிழல்திரையில் ஓட, எதார்த்தமாய் நோக்குகையில், ஒருவேளை ரசா ஒரு அகாதெமிக்காக (Academic & Studious), அதீத துறைசார்போக்கு, பற்றுகொண்ட, அங்கிங்கெனாதபடிக்கு ஒரு முதல் பெஞ்சு மாணவனாக வந்து போகிறாரா?

ரசாவின் நிலப்பரப்புகள் கனநேரமும் எரிந்து கொண்டேயிருக்கின்றன (Raza's burning landscape). ரசாவின் கிராமங்கள், எதார்த்தத்தின் சிறுதுளியைக் கூடச் சேர்த்திராதவையென வால்டெமெர் குறிப்பிடுகிறார். ஐம்பது அறுபதுகளில் ரசா படைத்த நிலபரப்புகள் அநேகம் கிராமங்கள் தாம்.

“ரசாவின் கிராமங்கள் நிலத்தின் ஆதரவை விடுத்து மேலெழுந்து, குளிர்ந்த கிரணங்கள் பாயும் மாய இரவினூடே, பயணிக்கின்றன; நிலத்தின் அதிர்வில் வீடுகள் பிளவுற்று, நிலைகுலைகின்றன; தேவாலயங்களோ மேகமெனும் மெத்தை வழியே கீழிறங்கிகொள்கின்றன.

அந்தியோ, அதிகாலையோ மங்கொளி பல வண்ணக்கூறாக வானகூடத்தின் கூரையெங்கிலும் சிதறிப்பரவுகின்றன; புனிதர் அப்போலினேயரின் (St Appolinaire) சந்நிதி மொசைக் தரை போல, தேவத் திருவுருவம் தெரியும் வண்ணக்கண்ணாடி ஜன்னலோ அல்லது லிமோஜஸ் நகரத்தின் படிகம் பூசிய பீடமோ போலப் பிரகாசமாகத் தெரிகின்றன; துளித்துளிப் பொலிவுகளாக அவ்வானமெங்கும் விண்மீன்கள் தெரிகின்றன; விலையுயர்ந்த ரத்தினக்கற்களால் பதிக்கபெற்ற புனிதப்பேழையைப்போல மினுக்கின்றன."

மெய்யடர்த்தியோ, ஏன் எடையையேக்கூட உணர இயலாத, யாவும் மிதவையாய் தோன்ற, எவ்வளவு செறிவான வண்ணங்களை அடிநாதமாய் ஏற்றிருந்தாலும், மெய்ப்பொருள் என்றொரு உணர்வைத் தரவில்லை என்கிறார் வால்டெமெர்.

ரசாவின் சாயத்தட்டில், பல வண்ணங்களின் நிழல்கள் தோற்றுவிக்கப்படுகின்றன, ஒன்றன் பின் ஒன்றாகத் ஊறி உருவாக, கலைஞனின் நேர்த்தியால் அவை அவற்றுக்கான கால நேரத்தில் சமைக்கப்படுகின்றன.

உலோகங்கள் குலைந்துருகி சேரவும், தகித்துக்கொண்டிருக்கும் நிலக்கரியின் இண்டு இடுக்குகளிலிருந்து நெருப்பு நாக்கை நீட்டிக்கொண்டு இருக்கவும், பாக்ஸைட் கனிமங்களடங்கிய பாறைகள் மேடுகள், வார்வாராகச் சீரான இடைவெளியில் கேன்வாஸில் தோன்றுகின்றன. கேன்வாஸ் விநோதமாக ஒரு வித மதப்புக்குள்ளாகிறது.

சில படைப்புகளைக் காணும் நொடியினில், ஒரு வித துர்நாற்றத்தை மனதின் நாசிக்குள் ஊதிவிடுகின்றன. அது கந்தகக் கசப்பு, எரிமலை குழம்புகளிலிருந்தும், நிலக்கரியிலிருந்தும் வருவது.

சிலதில், வானத்திற்கும், வட்டமாக அமைந்த பாறை மோடுகளுக்கும், சரியான தூரத்திலுள்ள, மையமான கிராமத்தை நோக்கி, மலைச்சரிவுகளில் கிளம்பிய காட்டுத்தீ, படையெடுத்து வருகிறது.

பனியும் பளிங்குமாய்த் தோன்றும் ஒரு நிலப்பரப்பில் சட்டெனக் கல்வாரி மலைகள் சிலுவை மரங்களோடு எழுகின்றன. கொடும் வெளிச்சத்தைப் பாய்ச்சி பிரளய வானத்தைத் துண்டாட, மேகங்களில் விழும் பிம்பங்கள் கலவரப்படுகின்றன.

லாபிஸ் லஸூலியின் (Lapiz Lazuli) கருநீலத்தை ஏந்திய வானங்கள் சட்டென, சுட்டெரியும் சிகப்புக் கிரணங்கள் பாய, ஒரு மாயவுணர்வெழுச்சியை உண்டாக்குகிறது.

ஒரு வானத்தில் சூரியனாகப்பட்டது, துருவ ஒளிச் சிதறலாகவே, இடறிய அழகாக இயங்குகின்றது.

ஒரு கிராமத்தின் வானத்தில், மனித குலத்தின் துக்கங்களை நோட்டமிட்டு வரும் சிதிலமடைந்த தேவாலய கோபுரத்தின் உச்சியிலிருக்கும் சிலுவையும் அதைச் சுற்றிப் பூசப்பட்ட தங்க மஞ்சள் சாயம், சிலுவை வானத்தை, தேவனைப் பார்ப்பதாகத் தோன்றுகிறது. இதேபோல மருட்சி நிலையே ரசாவின் முக்கியப் படைப்பான வில்லே ப்ராவின்சாலெ-யிலும் (Ville Provencale) (1956) நீடிக்கிறது. கலை விமர்சகரும், கலைவரலாற்று எழுத்தாளரும் ஆன யசோதரா டால்மியா, அனலில் தகிக்கும் நிலமாக அதனைக் குறிப்பிடுகிறார்.

ஐம்பதுகளில், தெற்கு பிரான்ஸ் எங்கும் திரிகிறார் ரசா, ஆங்காங்கே சட்டென்று வரும் இடைக்காலத்திய பிரெஞ்சு கிராமங்களை அதிசயிக்கிறார். தொகுப்பு வீடுகளும், வெள்ளை வெளெரெனத் தேவாலயங்களும், வட்ட சப்பட்டைக்கற்களைக் கொண்டு பாவப்பட்டிருக்கும் தெரு வீதிகளும் குறிப்பாக, மர மேஜைகளும் நாற்காலிகளும் என இடைக்காலக் கலை வரலாற்று வகுப்பறைக்குள் நுழைந்ததாக உணர்கிறார்.

காலமுத்திரையில்லாத காலவேளையில், மனிதர்கள் வாசம் செய்யாதது போலத்தோன்றும் கிராமத்தில், கொளுத்தும் கதிரவனின் கிரணங்கள், இடையே ஊடு பாவும் பிரளயமாகத் தோன்றுகிறது.

கிடத்தப்பட்ட ஒரு பூ மாலையெனக் கிராமத்தின் வீடுகள், சில பழுப்பு மஞ்சளில் மினுமினுக்க, சில சிகப்பாய் கொதிக்க, சில மண்பாண்டக்காவியில், சில கருநீலம் என அலையலையாய் வீடுகள் பரந்து, நிலத்திலிருந்து மேலெழும்பி மிதவைப்போலத் தோன்றுகின்றன. செப்பமிடப்படாத சிகப்பு நிறமேந்திய நிலமும், மேலெழுந்த செடிகொடிகளின் பச்சையும், கரித்தோய்ந்த மோடுகள் கூறும் மினு மினுப்புமென நிலப்பரப்பை தயாரித்துள்ளார் ரசா.

யாவும் துயிலிலிருப்பது போலவும், விண் நெடுக வளர்ந்த விமானங்கள், உயிர்களின் குறியீடாகவும் தெரிகின்றன. பிரெஞ்சு மண்ணின் லே பிளாஸ்டிக் சென்ஸ் (ஞெகிழொழுங்கு அல்லது ஞெகிழ்வார்ப்பு நுட்பம்) ரசாவை பின் தொடர, தடம் பார்க்க என்னும் எவரும் எதிர்கொள்ளும் ஒற்றைச் சொல், லெ ப்ளாஸ்டிக் சென்ஸ் எனும் ஞெகிழொழுங்கு அல்லது ஞெகிழ்வார்ப்பு நுட்பம் (Le Plastique Sens). ப்ரெஞ்சு மண்ணையெட்டிய பின்பே ரசா இம்பாஸ்தோவிற்கு (Impasto) கேன்வாஸின் மீது தடிமனாக, திண்மையுள்ள, களிம்புபோலச் சாயத்தைப் பூசுவது, கிட்டதிட்ட சாயத்தை வார்ப்பது இதற்கென்று பெலெட் கத்திகளும், தூரிகை பழக்கமும் உண்டு.

ரசாவின் நிலங்களும் வானங்களும் தனித்தனியமைப்பு கொண்டவை. வார்ப்புகளில் ஊற்றப்பட்ட ஞெகிழி குழைமத்தைப்போல, ரசா தடம் எடுத்து, அச்சு வைத்த பாதைகளிலே, மேடு பள்ளங்கள், மோடுக்கள், பாறைகளென, வண்ணச்சாயங்கள் ஓடி உறைநிலையடைபவை. வானமோ ஒரு மிதவையாய் நிலங்களின் மேல் தோன்றுவன, ஊடாய் ஒளிச்சிதறல்களிருக்கும், மினுக்மினுகென்றும் விண்மீன்கள் தோன்றும். பிரளயங்கள் வானத்திலும் நிலத்திலும் தோன்றும்.

வித்தை ப்ரெஞ்சு மண்ணிலிருந்தாலும், கரு எனும் கச்சாபொருள் இந்தியத் தன்மைக்கொண்டது. இந்து மதப் பிரபஞ்சவியலில், மீமெய்யிலலில் அதீத ஈடுபாடு கொண்டவர் ரசா. அவருக்கு ரில்கே, அஞ்யேயா போன்றவர்களின் எழுத்துகளும், காந்தியின் ஆசிரம ஒழுக்கத்திலும் மத்தியபிரதேசக் காடுகளில் அவரது இளம்பருவ நாட்களும், வனாந்தரத்தின் இருளும், காட்டுயிர்களின் ஒலியும், அன்றைய ஆதிவாசிகளின் பேச்சொலியும், விடியலின் பரவசம் என நீளும் பட்டியல்.

மேலும் ராஜஸ்தான் ஜைன ஓவியங்கள், பஹரி நுண்ணோவியங்களிலிருந்து அவர் வண்ணங்களின் தன்மைகளை உணர்ந்தார். ரசாவின் நிலப்பரப்புகள் ஞெகிழத்தன்மையை உட்கொள்ளத்தொடங்கிய தசாப்தத்தில், அவரது ஓவியப்பண்பாடு பண்பியலுக்குள்ளும் குறியீடுகளுக்குள்ளும் நுழையத்தொடங்கியது எனலாம். அவரது பரிணாமங்களின் முக்கியமான ஆஜ் (Aaj) லா டெர்ரெ (La Terre) அதன் தடங்களாகும்.

ரசாவின் மீமெய்யியல் (Raza's Metaphysics)

பின்னாளில் அவர் கையாண்ட பிந்து (Bindu), பொட்டு, மத்தியபிரதேச வகுப்பறை சுவரில் வரையப்பட்ட வட்டம் தான் எனக் கூறுகிறார் ரசா. ரசாவின் இந்த முன்னெடுப்பு, பின் வரும் பல கலைத் தலைமுறைகளுக்கு வகுப்பறைப்பாடமெனில் அது மிகையில்லை.

பேரண்டவியலின் பரிமாணங்களை, உயிர், உடல், பொருள் (ப்ராகிருதி, புருஷ்) எனும் கோட்பாடுகளை, தோன்றல், மறைதல், நிலம், நீர், ஆகாயம், நெருப்பு எனும் விந்தைகள் என மீமெய்யிலில் திளைத்த ரசா உள்ளிருந்து வெளிப்படுத்தியதே தற்கால ஆசியக்கலை சமூகத்திற்குப் பாடத்திட்டமாகும்.

ரசா நினைவு உரை ஒன்றில் தத்துவவியல் பேராசிரியர் நவ்யோதி சிங் (Prof. Navjyothi Singh)“இரு பரிமாணம் கொண்ட கேன்வாஸின் மேற்பரப்பில் பரிமாணங்களைத்தாண்டி பரந்து கிடக்கும் படைப்பானது, ஓவியனின் சித்த ஆகாசமே, (Chitha Akash, Chitha) பார்வையாளன் பார்ப்பதும் அந்த மனவெளியைத்தான், அது பல கதவுகளும், ஜன்னல்களும் கொண்டனவாம். சித்தத்தின் ஆகாசமெனப்படும் அந்தப் பேரண்டவெளியில் ஓவியன் பிம்பத்தை, எந்தக் கோணத்திலும் எம்முகவாட்டத்திலும் படைக்கலாம், அதை ஒரு பார்வையாளன் எவ்விதமாகவும் பிரித்துப் பார்க்கமுடியும்” என அவரும் ரசாவும் கருத்துப் பரிமாறிக்கொண்டதாக நினைவுக்கூறுகிறார்.

பலவாறாகப் பரிணமித்துக் கொண்டிருக்கும் மனிதத்தன்மையினையும், அருகாமையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் நாடகமெனும் பொய், மாய எதார்த்தத்தினையும் உதறிவிட்டு, பேரண்டத்தினுள் எட்டிப்பார்க்க எவ்வாறு தோன்றியது கலைஞனுக்கு?

ஆனால் ஒரு கடிகாரத்தை அக்கக்காய் பிரித்துப்படித்தால், அது, கடிகாரத்தினைப் படித்ததாகாது எனும் சொலவடை ஒழுங்கின்மை கோட்பாட்டியலில் உள்ளது.

உசாத்துணை:

1. https://criticalcollective.in/CC_ArchiveInner2. aspx?Aid=68&Eid=141 

2. https://www.sothebys.com/en/articles/s-h-raza-theburning-landscape 

3. https://auctions.pundoles.com/lots/view/1-54AP9M/ portrait-of-s-h-raza 

4. https://www.sothebys.com/en/articles/three-of-a-kindsayed-haider-raza 

5.https://hyperallergic.com/477316/the-progressiverevolution-modern-art-for-a-new-india-asia-societymuseum-2/ 

6. Swasthi , Raza Foundation Newsletter No.01, 2017 

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer