பார்வதிபுரம் - டூ - பார்வதிபுரம்
இரண்டு பேர் இருக்கையில்
இடது ஓரம் அமர்ந்தபடி
சுமாரான வேகத்தில்
சென்றுகொண்டிருக்கும்
பேருந்தின் வலது ஜன்னல் வழியே
வேடிக்கை பார்க்கிறாள்
பேரணி மாபெரும்
எதிர்ப்பு அரசியலை மதவாதம்
என அட்சரங்கள்
சட்டகம் சட்டகமாக
பின்னோக்கி நகர்வதை
நேராக்கி விளங்கிக்கொள்கிறாள்
உஷ்ணம் தணிக்க
நொங்கு சர்பத் அருந்தும்
வாலிபனைக் கடக்கையில்
அடித்தொண்டை வறட்சியை
எச்சில் விழுங்கி சமாளிக்கிறாள்
விட்டு விட்டு
காக்கிக்குயில் சீட்டியடிக்கையில்
தென்னைகள் சூழ்ந்த
தாமரைக்குளத்தில்
மூழ்கியெழுந்து
ஜன்னல் காற்றில்
கேசத்தை உலர்த்துகிறாள்
ஒவ்வொரு நிறுத்தமாக
நின்று
ஊர்ந்து
நின்று
போகும்
இந்த சர்க்குலர் பஸ்
என்றைக்காவது
பேரிளம் ஜங்ஷனிலிருந்து
பேதையூருக்கு
சென்றுவிடாதா என
அனுதினமும் ஏறியிறங்கி
ஏறியிறங்கிச் சலிக்கிறாள்
நாராயணீ.