பிரதாப ருத்ரன் கவிதைகள்


பகிரு

போர்னோ புத்தகம்

Prathaba Rudran 1
சர்ப அவதாரம் ஏற்றான்
காதலியின் கண்கண்டவன்
அண்டம் நடுநடுங்க
சூலகப் பொழுதின்
கர்ப்பகால ஓவியத்தை உடைத்தான்
கடைசிக் கண்ணியையும் இணைக்கத் தெரியா செம்படவன் 
உன் தெப்பத் தலைவன்
தந்தைக்குப் பெண் கேட்டு 
ஓம்கார சொல்வளர்த்து
வைபவப் பார்வைகள் பதட்டம் சூட  
சமுத்திர மும்முரம் அடங்க
தவளைக் காய் நடை நடந்து மூழ்கிப் போனான்
இன்றைக்கு மூன்றாம் நாள்
பார்த்து வந்த ஆறு 
இன்னமும் நகர்ந்து கொண்டிருக்க
வெந்ததும் பாரம் குறையும் மங்களமீன்கள்
அலையலைந்து நிர்வாணம் தேட
நெல்லுக்கு அல்லாமல் புல்லுக்குப் பண்ணும் குடி ஆயர்
வலம்புரியில் எழுதாதே 
உன் மஞ்சள் வானத்தை மெயில் அனுப்பு
ஓடக்காரன் பாடலில் பயணமேறி 
ஜோக்கர் பறவைகள் எச்சமிட்டால்
மரங்கள் என்ன செய்யும்
முளைக்கும் போல் பொங்கிப் பொழியும்‌ மழை
ஆன்டி-ரஸ்ட் முலாம் வேய்ந்த நுரையீரல்கள்
கள்ளியின் உதிரத்தில் முறுக்கேறி உறும
கழுவி ஊற்றிய வார்த்தைகளை
ஈரத்தில் அணுகாதே 
வழுக்குதல் தவிர்க்க இயலாது
தோரோ 
உன் ஏரிக்கரை காகிதத்தில் 
வாசம் ஏறா மழைக்காலம் இடித்து மின்ன
கொடிமுடி மலர
கண்கட்டி வித்தையில் நூற்றியொரு கலசங்கள் 
ஒன்று பெண்பால்
மாற்று உடையற்ற சயனக்கன்னி 
ஆற்றோடு போகவிடு சமுத்திரத்தை 
ஒற்றைப்படையில் 
இரவும் பகலும் அடங்கி  எழும்.

ஆப்டிக்கல் மாயை

Prathaba Rudran 2
நான்காம் வேற்றுமையில்
பிருஷ்ட முகம்
சிறுத்தைப் போல் பிம்ப
ஆப்டிக்கல் மாயை
முதல்வாத அர்த்தத்தில்
பூ விரிக்கும் தென்னம் பாலை
கிழமேல் பொதுவழியில்
தென்வடலாய் திறக்கும் தேகமனம்
பாறைகள் நிற்கும் இடைபெருவெளி
இலைகள் சிரிக்கும் சவரக்கத்தி
முகம் துடைத்துக்கொண்டவன் கந்தர்வன் 
அவன்  உறங்கா சிசு உறங்கும் கவிதை
குரல் ஏறிய பாரத்தில் சர்க்கரைக் கப்பல்
எறும்புப் புற்று வட்டங்கள் வரைய
பெருநதி வாழ்வு நகர்ந்துகொண்டிருக்கிறது

மரம் நிறையத் தங்கக் கிளிஞ்சல்கள்
ஃப்ரீஸ்டாண்ட் ஃபிரேமில்
நான் போல் நிழல் பட்ட புத்தி
நாக்கிலிருந்து தலைகீழாய் தேள் இறங்க
முகம் நோக்கிய ஆவுடை மறைக்கும் பச்சை ஆப்பிள்
மங்கல் காட்சியில் கோணம் குறைந்த கோபுரம்
ரீங்கரிக்கும் சூரியன்
மை பூசிய ஒரு ஜோடி ரெட்டைவால் குருவி
கம்பிகள் குறுக்கிடும் ஜன்னல்


கான்கிரீட் காலம்
பெயரற்று மிதக்கும் படகு
ஸ்வரம் மீறி அலையும் வயோதிகச் சமுத்திரம்
பயமும் நடுக்கமுமாய் இருக்க
உடைந்த வில் முறியாக் கரும்பு
நாரை புரியும் சௌக்கார் நடனம்
குதிரைகள் கால் பதித்த பள்ளத்தில்
விசுவாசம் அறுத்த நாய்
குளிர்கால உடையில் துணையுடன் வருகிறது மீன்கொத்தி 
யூகலிப்டஸில் சுருதி இணைக்கிறது
பீத்தோவன் தொப்பியணந்த மரம்கொத்தி 
இரட்டைக் கனவில் சுதந்திர வாசல்

நீலநிறப்பெண் இழுப்பறைகளாய் திறந்து நிற்க
செவ்வானவேளையில் மலைகள் உறங்க.

சமுத்திர சதுரங்கத்தில் எதிரி ராணி

Prathaba Rudran 3
பரிவர்த்தனை பேசும் வலதுகரம்
உயிர்பெற்று நேரத்தை எட்டாவதாக 
எட்டென்று அடிக்கிறது கடிகாரம்
கோயில்களின் நகரத்தில்
வயோதிகத்தைப் பார்சல் பண்ணும் யுவதிகள்
காலத்தை விஷமிட்டுக் கொன்று
புதைத்த இடத்தில் முளைத்த மரம்
காற்றின் திசைக்கண்டு கிளை வளர்க்க
நடுநரம்பு விரைத்து இலை மலர
நிற்கிறான் குதிரைவீரன்
சமுத்திர சதுரங்கத்தில்
துப்பாக்கித் தூக்கி வந்தாள்
குறிவைத்து நின்றாள் 
எதிரி ராணி
மானோ மயிலோ மஞ்சத்தில் குயிலோ
விருந்தினர்கள் வரவேற்கப்படுகிறார்கள் 
விருப்ப முலையலங்காரத்தில்
அலை கொண்டு பறக்கும்
நீர்க்கரையில் வியர்த்த முகம்
ஞாபகத்தில் பால்குடி உதடுகள்
கவனத்தில் மீன்பிடி வலைகள்
புல்லின் சலசலப்பை 
தாய் பாஷையில் பெயர்க்க
விளைநிலப் பாறைகளுக்கு
தடைகள் இல்லை
சிலந்தியின் நீர்மணிமாலை
முறை விடுத்து ஆளாகிவந்த சூரியக்  கபாலம்
சிரிப்பாய்ச் சிரிக்கிறது சபலத்தில்
சொல்லில் சொல் கூட
கூடா சொல்லில் புதிர் கூட
இருபத்து ஐந்தாவது வரியில்
குருட்டுக் கவிஞன் பறக்கவிட்ட
ஒற்றைக்கால் வெட்டுக்கிளி
கடவுளின் சாயலில்
சாக விரும்புகிறது விருட்சம்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer