பழனிவேல் தியாகராஜனின் வாதங்களின் முக்கியத்துவம்!

பாலசுப்ரமணியம் முத்துசாமி

பகிரு

Balasubramaniam

இயற்பியல் பாடத்தில் நாம் இருவகை விசைகளைப் பற்றிப் படித்திருக்கிறோம். ஒன்று மைய விசை (Centripetal force) இன்னொன்று மைய விலக்கு விசை (Centrifugal force). ஒரு கயிற்றின் நுனியில் ஒரு கல்லைக் கட்டி, இன்னொரு நுனியைப் பிடித்துக்கொண்டு சுற்றுவதைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம்.

கயிறு சுழற்றுகையில், வேகம் குறைந்து விட்டால் கயிறு தொய்வடைந்து, கல் கையை நோக்கி வந்து விடும். வேகம் அதிகரித்தால், கயிற்றின் நுனியில் கட்டப்பட்டிருக்கும் கல் தெறித்துவிடும். இரண்டு விசைகளும் சரிசமமாகச் செயல்படுகையில், ஒரு சீரான வட்டத்தில் தொய்வில்லாமல் கல் சுற்றிவரும்.

கூட்டாட்சி என்பதற்கான சரியான உவமை இதுவாகத்தான் இருக்கக் கூடும். விடுதலைப் பெற்ற 75 ஆண்டுகளில், இந்தியா என்னும் ஜனநாயகத்துக்குப் பல சோதனைகள் வந்துள்ளன. ஆனால், இந்தியா ஒவ்வொன்றையும் கடந்து ஓரளவு நிலையான ஜனநாயகமாக முன்னேறி வந்துள்ளது என்பதை நாம் அறிவோம். இதற்கான காரணங்கள் பல இருந்தாலும், அதிகாரத்தை மையப்படுத்தி ஏதேச்சதிகார நாடாகமாற்ற முயன்ற ஒவ்வொரு முயற்சியும் இதுவரை மக்களால் முறியடிக்கப்பட்டிருக்கிறது. பிரிவினைவாதங்கள், நேரு போன்ற மாமனிதரின் ஜனநாயகத்தன்மை கொண்ட அணுகுமுறையால் வெல்லப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில், இந்தியா அத்தனை பிரச்சினைகளுக்குமிடையில், ஒரே நாடாக இருந்து வந்துள்ளது.

இந்தியாவின் பரப்பளவு 32.9 லட்சம் சதுர கிலோமீட்டர்கள். மக்கள் தொகை 140 கோடி.  இந்திய அரசியல் சட்டம் அங்கீகரித்துள்ள மொழிகள் 22.  அது தவிர, இந்தியாவில் 122 பெரும்மொழிகளும் 1599 சிறுமொழிகளும் இருப்பதாக இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்புக் கூறுகிறது. 1947 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் இந்தியாவை விட்டு விலக முடிவெடுத்த பின்னர், இந்தியாவில் உள்ள பெரும்பாலான பகுதிகள் இந்திய நாட்டுடனும், கிழக்கிலும் மேற்கிலும் உள்ள பகுதிகள் பாகிஸ்தானுடனும் இணைந்து இரு பெரும் நாடுகளாக  உருவெடுத்தன.

இந்தியா விடுதலை பெற்ற காலத்தில், மேற்கத்திய அரசியல் பார்வையாளர்கள் இந்திய ஜனநாயகம் 10-15 ஆண்டுகள்கூட நிலைத்து நிற்காது என ஆருடம் கூறினர்.  நேரு இறந்த பின்னர் நடந்த தேர்தலிலும், பின்னர் அவசர நிலைக்காலத்திலும், இதே ஆருடங்கள் மீண்டும் ஒலித்தன. அத்தனையையும் பொய்யாக்கி விட்டு, இன்றுவரை இந்தியா ஒரு ஜனநாயக நாடாக விளங்கிக்கொண்டிருக்கிறது.

இந்தியாவோடு ஒப்பிடுகையில், ஆப்பிரிக்கா பத்து மடங்கு பெரியது (3.03 கோடி சதுர கிலோமீட்டர்கள்).  மக்கள்தொகை இந்தியாவைவிடக் குறைவு (121 கோடி). பேசப்படும் மொழிகள் 1200 - 2000 வரை எனச்சொல்லப்படுகிறது. பல மொழிகளுக்கு லிபிகள் இல்லை. மொத்தம் 54 நாடுகளாகப் பிரிந்து இருக்கிறது.

பொருளாதார அலகில் ஆப்பிரிக்கக் கண்டமும், இந்திய நாடும் கிட்டத்தட்ட ஒரே அளவில் உள்ளன. ஆனால், வணிகம் மற்றும் அரசியல் தளங்களில், இந்தியா பெருமளவு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக உருவாகியுள்ளது. 54 நாடுகளாகப் பிரிந்து இருப்பதால், ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள தனிநாடுகள் ஒப்பீட்டில் பெரும் அரசியல் சக்தியாக மாறவில்லை. இதுதான் இந்தியா ஒரு நாடாக ஒன்றிணைந்ததன் வெற்றி.

இந்தியா ஒன்றாகி, அதற்கான அரசியல் சட்டம் வகுக்கப்பட்ட போது, இவ்வளவு பரந்துபட்ட மொழிகளும் கலாச்சாரமும் கொண்ட ஒரு பூகோளப் பகுதி ஒரே நாடாக இருத்தல் பற்றிய பயம்அனைவரிடமும் இருந்தது.  இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என அரசியல் சட்டம் சொன்னாலும், அரசியல் அதிகாரங்கள் ஒன்றிய அரசிடம் கூடுதலாக இருந்ததற்கு இந்த அடிப்படை பயம்தான் காரணம்.   அந்தப் பயமே, இந்திய அரசியல் சட்டத்தின் 356 போன்ற பிரிவுகள் உருவாகக் காரணமாக அமைந்தது. இந்திய நாட்டின் அரசியல் சட்டத்திற்கு எதிராகவோ அல்லது சட்டம் ஒழுங்கு குலையும் போதோ, இந்தப் பிரிவைப் பயன்படுத்தி, மாநில அரசுகளைக் கலைக்கும் அதிகாரத்தைஅரசியல் சட்டம் ஒன்றிய அரசுக்கு வழங்கியுள்ளது.

அரசியல் சட்ட உருவாக்க விவாதங்களில் பல முறை இந்த அதிகார மையப்படுத்துதல் விவாதிக்கப் பட்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம், ஒன்றிய அரசுக்கு மாநில அரசைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொடுத்திருந்தாலும், நிதித் துறையில், மிகத் தெளிவான வரையறைகளைக் கொடுத்திருந்தது. தத்தம் வரையறைகளுக்குள் வரிகளை விதித்துக் கொள்ளும் இறையாண்மை கொண்ட சம உரிமை கொண்ட அரசு அலகுகள் என ஒன்றிய அரசையும் மாநில அரசுகளையும் குறித்து அம்பேத்கர் கூறி இருக்கிறார். பல உச்சநீதி மன்றத் தீர்ப்புகளும் இதை உறுதி செய்திருக்கின்றன.

ஆனால், தில்லியை மையமாகக் கொண்ட ஒன்றியஅரசுகள் தொடக்கம் முதலே, தில்லிதான் இந்திய அமைப்பின் அதிகாரத் தலைநகர் என்னும் மன நிலையில் செயல்பட்டு வந்துள்ளன. இந்தியை தேசியமொழி ஆக்கும் முயற்சி அதில் முதன்மையானது. அதை மூர்க்கமாக முன்னெடுக்கும் முயற்சி தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.

அவசர நிலைக்காலத்தில், ஒன்றிய அரசு, பாராளு மன்றத்தில் உள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி, மாநிலங்களின் கீழ் இருந்த கல்வித் துறையை மாநில / மத்தியப் பொதுப்பட்டியலுக்குமாற்றியது. இதனால் கல்வி மீதான ஒன்றிய அரசின் பிடி இறுகத் தொடங்கியது.

அதேபோலத் தொடக்கத்தில் மிகவும் கவனமாகப்பயன்படுத்தப்பட்ட அரசியல் சட்டத்தின் 356ஆவதுபிரிவு ஒரு காலத்தில், ஒன்றிய அரசுக்கு எதிரான கட்சிகளின் ஆட்சிகளைக் கலைக்க என அரசியலாக மாறியது. 1991ஆம் ஆண்டுக் கர்நாடக மாநில அரசு கலைக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதி மன்றம், மாநில அரசுகளைக் கலைப்பதற்குப் பல்வேறு விதிகளை உருவாக்கி, ஒன்றிய அரசுக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்தது.

ஆனாலும், மாநிலங்களின் மீதான மேலாதிக்கத்தை அதிகரிக்கும் முயற்சிகள் நேரிடையாகவும், மறை முகமாகவும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. சில சமீபத்திய எடுத்துக்காட்டுகளைக் கீழே காண்போம்:

1.    வேளாண்மை மாநில அரசின் கீழ் வரும் துறை. ஆனால், அதைப் பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு நிறைவேற்றியது.

2.    துறைமுகங்கள் பொதுப்பட்டியலில் இருந் தாலும், நடைமுறையில், பெரும் துறைமுகங்கள் ஒன்றிய அரசின் நிர்வாகத்திலும், சிறு துறைமுகங்கள் மாநில அரசின் நிர்வாகத்திலும் இருந்து வருகின்றன. பாஜக அரசின் 2021 ஆண்டுத் துறைமுகச் சட்டம்,  எல்லாத் துறைமுகங்களையும் ஒன்றிய அரசின் கீழ் கொண்டுவரத் திட்டமிடுகிறது.

3.    மருத்துவத் துறை மாணவர் சேர்க்கைக்கு மையப்படுத்தப்பட்ட ‘நீட்’ தேர்வு போல, மற்ற துறைகளுக்கும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிடப் படுகின்றன.

4.    நிதிக் குழுவின் பரிந்துரையின் பேரில், மாநிலங்களுக்கு அளிக்கப்படும் நிதியை, ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு மட்டுமே செலவு செய்ய அனுமதி என்னும் இறுகிய விதிகள்.

5.    புதிதாக அறிமுகப்படுத்த உள்ள மீன்வள மசோதா, கடற்கரை வாழ் மீனவர்களின் உரிமையைப் பறிக்கிறது என மீனவர்கள் ஏற்கனவே எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள்

இது போன்ற அணுகுமுறை மாநில அரசுகள், தங்கள் மாநிலத்திற்கேற்ப திட்டம் வகுக்கும் சுதந்திரத்தை, அதற்கேற்ப நிதி ஒதுக்கும் உரிமையை முற்றிலுமாக மறுதலிக்கிறது. இது போன்ற மையப் படுத்தும் திட்டங்கள் வகுக்கப்பட்டு நிறைவேற்றப் பட்டால், மாநிலங்கள் தங்கள் சுதந்திரத்தை இழந்து வெறும் கௌரவ உள்ளாட்சி அமைப்புகளாக மாறிவிடுவார்கள்.

2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர், பாஜக மிக நுட்பமாகத் திட்டமிட்டு எதிர்க்கட்சிகள், ஊட கங்கள், நீதித்துறை இவை மூன்றின் பங்களிப்பைக் குறைத்திருப்பதை அரசியலைக் கூர்ந்து கவனிப் பவர்கள் அனைவரும் உணர்வார்கள்.  இவை பாஜகவின் வெற்றி என்பதைவிட, ஜனநாயகத் தூண்களின் தோல்வி என்றே சொல்ல வேண்டும்.

தேசிய அளவில், எதிர்க்கட்சித் தலைவர் எனும் இடத்தில் ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது. காங்கிரஸ்தன் உட்கட்சிப் பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு, அடுத்து ஆட்சியைப் பிடிக்கும் தீவிரம் இல்லாத கட்சி போலத் தோற்றமளிக்கிறது.  எரிபொருள் விலைஉயர்வு, வேலைவாய்ப்பின்மை, சிறு/குறு தொழில்கள்முடக்கம், வேளாண் சட்டங்கள் என மிகமிக அருமை யான வாய்ப்புகளைப் பாஜக அள்ளி வழங்கினாலும், ஒரு நாள் அடையாளப் போராட்டத்தை மட்டும் நடத்திவிட்டுக் காங்கிரஸ் தன் கடமை முடிந்தது என விலகிவிடுகிறது.

உழவர்கள் தாங்களே முன்னின்று போராடி, 700 உயிர்களைப் பலிகொடுத்து, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டியிருந்தது. அது தாங்கள் செய் திருக்க வேண்டிய போராட்டம் என்பதைக் காங்கிரஸ்இன்றுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை. இதைத் தாண்டி மம்தா, கம்யூனிஸ்ட்போன்ற எதிர்க்கட்சிகளும் தலைவர்களும் மக்களுக்காக என்ன பிரச்சினை களைக் கையில் எடுக்கிறார்கள் என்பதைப் பொதுமக்கள் அறிந்திருக்கிறார்களா எனில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஊடகங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எமர்ஜென்சியை நினைவுறுத்தும் வகையில் பெரும் பாலான ஊடகங்கள் தவழ்கின்றன. பாஜகவை நிலை நிறுத்தவென்றே அவற்றில் பல,  எதிர்க்கட்சிகளை மட்டுமே கேள்வி கேட்கின்றன.

கட்சிகளைக் கவிழ்க்க, எம்.எல்.ஏக்களைக் கவர,சிபிஐ, ஈ.டி என்னும் மத்திய நிறுவனங்கள் பயன்படுத்தப்படுவது மிக இயல்பாகிவிட்டது, பாஜக வையும், மோதியையும் எதிர்க்க நினைக்கும் எந்த அரசியல்வாதிக்கும், அவர்கள் செய்த ஊழல் தொடர்பான பயங்கள் இருப்பதால் எவரும் பெரிதாக எதிர்க்கத் துணிவதில்லை.

இந்தநிலையில்தான், பிடிஆர் என்னும் வழக்கமான அரசியல் பின்னணி இல்லாத ஒருவர் எழுந்து வருகிறார். தான் ஏற்றிருக்கும் துறை பற்றிய அறிவும், உலகளாவிய அனுபவமும், நல்ல பேச்சுத் திறனும் கொண்டவர். கேட்கும் கேள்விகளுக்குப் பதில்களில் தரவுகளை முன்வைத்து வாதிடக் கூடியவர். அவர் அகில இந்திய அரசியலுக்குப் புதிய முகம் என்பதாலும், ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்பதாலும், அவர் குரலுக்குப் பெரும் வரவேற்பு உள்ளது.

சமீபத்தில், ‘த வயர்’ இதழுக்காக, கரண் தாப் பருடனான பிடிஆரின் நேர்காணல் அரசியல் தளங் களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நேர் காணலின் முதல் கேள்வியிலேயே அண்ணாவின் ‘தனிநாடு கோரிக்கையை’ கண்ணி வெடியாக வைத் திருந்தார் கரண். பிடிஆர் அந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், அதன் பின்னால் உள்ள சித்தாந்தம் என்ன என்பதை ஒரு விரிவான தளத்தில் வைத்துப்  பதிலளித்தார்.

அதே போல மாநில உரிமைகள், நட்டாவின் ஒரு கட்சி ஆட்சி என்னும் பல கேள்விகளுக்கு மிகவும் தெளிவாகப் பதில் சொன்னார்.  இந்தித் திணிப்பு பற்றிய கேள்விக்கு அண்ணாவை மேற்கோள் காட்டிச் சொன்ன பதில் சரியாக இருந்தது என்றா லும், ஆங்கிலம் எப்படித் தமிழ்நாட்டின் முன் னேற்றத்துக்கு உதவியது என்பதைச் சொல்லி, இந்திமாநிலங்களும் ஆங்கிலம் படித்தால் நல்லது எனச்சொல்லியிருக்கலாம் என்பதைத் தவிரக்  குறை  காண முடியாத  நேர்காணல்.

அண்ணாவுக்கு அடுத்தப் படியாக, தம் கட்சியின் சித்தாந்தத்தை நல்ல ஆங்கிலத்தில் எடுத்துரைக்கும் தலைவர்கள் திமுகவில் இன்றுவரை இல்லை என்னும் உண்மை, பிடிஆரின் நேர்காணலைக் காண்கையில் மிகத்  தெளிவாகத் தெரிகிறது.

1962 ஆம் ஆண்டு அண்ணா பாராளுமன்றத்தில் திராவிட நாடு கேட்ட போதும், பின்னர்ச் சீனப் போர் காலத்தில் அதைக் கைவிட்ட போதும் ஆற்றிய உரைகள் மிக முக்கியமானவை. ஆனால், அக்காலத்தில் ஜவஹர்லால் நேரு என்னும் பெரும் உலகத் தலைவர் அவருக்கு எதிரில் நிற்கையில், அவரின் ஆளுமையின் வெளிச்சத்தில், அண்ணாவின் குரலும் கொள்கையும் எடுபடாமல் போயின.

ஆனால், இன்றிருக்கும் பிரதமர் நேரு அல்ல. தன் நிர்வாகத் திறனாலோ, கொள்கைகளாலோ தன் இருப்பை நிலைநிறுத்திக் கொண்டவரல்ல. அவருக்கு எதிரில் யாருமே இல்லாத ஒரு வெற்றிடம் இருக்கிறது. இந்தச் சூழலில், மிகத் தெளிவாக, நல்லஆங்கிலத்தில் கோர்வையாக, சரியான நேரத்தில், பிடிஆர் வழியாகக் கூட்டாட்சிக்கானக் குரல் எழுந்திருக்கிறது. வெற்றிடம் என்பதால், பிடிஆர் குரல் இன்று நாடு முழுவதும் எதிரொலித்திருக்கிறது.

பாதுகாப்பு, வெளியுறவு, பன்னாட்டு வர்த்தகம் போன்ற தளங்களில் மையப்படுத்தப்பட்ட சக்தி யாகவும், மாநில நிர்வாகம், கல்வி மருத்துவம், வேளாண்மை போன்ற தளங்களில் தன்னாட்சி பெற்ற மாநிலங்களின் கூட்டமைப்பாகவும் இந்தியா தன்னை மாற்றிக் கொள்வது, இந்தியாவை வலுவான ஜனநாயக நாடாக்கும். அமெரிக்கா போன்ற உலகின்வெற்றிகரமான ஜனநாயக நாடுகள் இந்த அமைப்பைத்தான் பின்பற்றுகின்றன.

எனவேதான் அந்த இலக்கை நோக்கி மிகவும் வலுவாக எழுந்துள்ள பிடிஆரின் குரல் முக்கியத்துவம் பெறுகிறது.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer