நான் சொற்களில் விழிக்கிறேன்
நான் சொற்களில் இருக்கிறேன்
சொற்களில் இறக்கிறேன்
மேலும்
பிறரின் சொற்களிலிருந்து விழிக்கிறேன்.
கவிதை
கவிதை தொடங்குவதில்லை
ஆகவே அது முடிவதுமில்லை
துரதிர்ஷ்டவசமாக கவிதை
ஒன்றுக்கும் இரண்டுக்குமிடையில்
இரண்டுக்கும் முடிவின்மைக்குமிடையில்
முடிவின்மைக்கும் சுழியத்துக்குமிடையில்
சுழியத்துக்கும் மைனஸுக்குமிடையில்
ஏமாற்றிக்கொண்டிருக்கும் ஒரு வஸ்து
எனில் கவிதை
ஓரிடத்தில் இருந்துகொண்டு
இல்லாததைப் பிரதிமிக்கிறது
அவ்வாறே
ஒன்றுமற்றவையிலிருந்து ஒன்றுமில்லாததைப் பிரிக்கிறது
எனவே கவிதை
ஒரு வெற்றுக்கோப்பையிலிருந்து
வெடிமருந்தைத் தயார் செய்கிறது
நிலவின் புருவத்தில் இருந்துகொண்டு
கிழட்டுச் சூரியனின்
மீசையை வரைகிறது
எப்போதும் அது
மொழியாதவற்றின்
உள்ளேயான பாய்ச்சலுடன் இயங்கிக்கொண்டிருப்பது.
உலகம் சாளரத்தருகில் வந்து நின்றபோது..
நான் அண்ணாந்து பார்த்தபோது
உலகம் சாளரத்தருகில் வந்து நின்றது
அது ஒரு காகம்
தன் கண்ணாடிக் குகையிலிருந்து
கத்திக் கரைந்துகொண்டிருந்த ஒரு மாலை நேரம்
ஒரு பந்தைக் கையிலெடுத்து உலகின் முகத்தில் வீசினேன்
அது தன்னையே சுருட்டி திருப்பி வீசியது
இப்படியே நாங்கள் இரவு முழுதும் விளையாடிக்கொண்டிருந்தோம்
காலையில் சொன்னபோது
யாரும் அதை நம்பத் தயாரில்லை
அங்கே நானும்
அந்த முட்டாள் பந்து மட்டும்
எப்போதும்போல் உருண்டுகொண்டிருந்தது
நீள்துயில்
படுத்திருக்கும் வேளையில்
என் தந்தை உண்ணமாட்டார்
அவருக்கு அவ்வாறு உண்ணவும் பிடிக்காது
புரையேறிவிடும் என்பதாக இருக்கலாம்
அவர் கல்லறைக்கு முன்பு நான் காத்திருக்கிறேன்
நீள்துயிலிலிருந்து அவர் எழுந்துகொள்வதற்கு
நிலவின் நெடி இரவைக் கீறிச் செல்கிறது.