பறக்க ஆயத்தமாகும் பறவைகள்

பபத் ரீசியா ஹைசுமித்
தமிழில் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்

பகிரு

மொழியாக்கச் சிறுகதை

தினமும் காலையில் கடிதம் ஏதாவது அவளிடமிருந்து வந்திருக்கிறதா என்று பார்ப்பது டானின் வழக்கம். ஒருவேளை, அவளுக்கு நேரம் இருந்திருக்காது என்று நினைத்துக்கொள்வான். அவள் செய்ய வேண்டிய காரியங்களையெல்லாம் மனத்திரையில் ஓடவிட்டுப் பார்ப்பான். ரோமிலிருந்து பாரீசுக்கு அவளது உடமைகளைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அப்படி ஒரு முடிவை எடுக்கும்முன் பாரீஸில் அவள் பார்த்து வைத்திருக்கக்கூடிய அடுக்கு மாடிக் குடியிருப்பில் குடியேறவேண்டும். அவனுடைய கடிதத்தால் ஈர்க்கப்பட்டு பதிலளிக்க நேரம் கிடைக்கும்முன் இன்னும் கொஞ்சம் நாட்கள் தனக்குக் கிடைத்திருக்கும் புதுவேலையைச் செய்ய நினைத்திருக்கலாம். இவை எல்லாவற்றையும் செய்து முடிக்கத் தேவைப்படும் நாட்களை கணக்கிட்டு நீட்டித்துப் பார்த்து அந்த நாளும் முடிந்து போய்விட்டது. மேலும் மூன்று நாட்கள் ஓடிவிட்டன. இன்னும் அவளிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை.

“ஒரு முடிவுக்கு வர அவள் காத்திருக்கிறாள்” என்று சொல்லிக்கொண்டான். மேலும், “நினைத்ததை எழுதுவதற்கு முன் அவள் எப்படி உணர்கிறாளோ அதைப்பற்றி உறுதியான முடிவுக்கு வரவேண்டும் என நினைப்பது இயல்புதானே” என்று நினைத்தான்.

ரோசாலின்ட்-ஐக் காதலிப்பதாகவும், அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கடிதம் எழுதி பதிமூன்று நாட்கள் ஆகின்றன. குறுகியக்காலத் தொடர்பு என்ற கோணத்தில் அது கொஞ்சம் அவசரமான முடிவாக இருக்கலாம். ஆனால் தான் எவ்வித அழுத்தமும் தராமல் நினைத்ததை அப்படியே தெரிவித்த வகையில் அது ஒரு நல்ல கடிதம்தான் என்று டான் நினைத்தான். எப்படிப் பார்த்தாலும், ரோசாலின்டை இரண்டு ஆண்டுகளாக அறிவான். அதாவது, இரண்டு ஆண்டுகளுக்குமுன் அவளை நியூயார்க்கில் சந்தித்தான். அவளை மீண்டும் கடந்த மாதம் அய்ரோப்பாவில் பார்த்தான். அவள் மேல் காதல் கொண்டவன் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். அய்ரோப்பாவிலிருந்து மூன்று வாரங்களுக்கு முன் திரும்பியதிலிருந்து தன் நண்பர்களில் ஒரு சிலரைத்தான் சந்திக்க அவனுக்கு நேரமிருந்தது. ரோசாலின்ட்டுக்கும் அவனுக்குமான திட்டங்கள் குறித்து சிந்திக்கவே அவனுக்கு நேரம் சரியாக இருந்தது.

ரோசாலின்ட்டுக்கு தொழிற்சாலை வடிவமைக்கும் வேலை. அய்ரோப்பாவை அவளுக்குப் பிடித்திருந்தது. அவள் அய்ரோப்பாவில் வசிக்க விரும்பினால், அங்கேயும் ஓர் இடத்தை ஏற்பாடு செய்து கொடுக்க அவனால் முடியும். இப்பொழுது, அவனது பிரஞ்சு மொழியும் ஓரளவு முன்னேறியிருந்தது. அவன் பணியாற்றும் டிர்க்ஸன் அன்ட் ஹால் எனும் பொறிஞர்கள் ஆலோசனைக் குழுமத்துக்குப் பாரீசிலும் ஒரு கிளை உள்ளது. எல்லாம் சுலபமாக முடிந்துவிடும். அவனுக்குத் தேவை ஒரு விசா மட்டுமே. புத்தகங்கள், தரைவிரிப்புகள் எனச் சில பொருட்கள், பிறகு அவனது ஒலிப்பதிவுக்கருவி, சில உபகரணங்கள், வரைவதற்கான கருவிகள் என சிலவற்றை எடுத்துக்கொண்டு புறப்பட வேண்டியதுதான். தன் மகிழ்ச்சியின் முழு அளவை இன்னும் கணக்கிட்டு முடியவில்லை என்று டான் நினைத்தான்.

ஒவ்வொரு நாள் நகரும்போது, அற்புதமான இயற்கைக்காட்சி மறைந்திருக்கும் திரை சற்றே உயர்வதுபோல் உணர்ந்தான். முழுவதுமாக அதைப் பார்க்க முடியும் நேரத்தில் ரோசாலின்ட் அவனுடன் இருக்கவேண்டும் என விரும்பினான். உண்மையில், அந்த இயற்கைக் காட்சியைக் காண நம்பிக்கையோடு மகிழ்ச்சியாக முன்னேறுவதில், ஒரே ஒரு விஷயம்தான் இப்பொழுது தடையாக இருக்கிறது. அவனுடன் எடுத்துச் செல்ல அவளிடமிருந்து ஒரு கடிதம் கூடக் கிடைக்கவில்லை என்பதே அது.

மீண்டும் ரோமுக்குக் கடிதம் எழுதி, உறையின் மீது “தயவு செய்து உரிய முகவரிக்கு அனுப்பி வையுங்கள்” என்று இத்தாலிய மொழியில் குறிப்பிட்டான். தற்சமயம் பாரீசுக்கு அவள் வந்திருக்க வேண்டும். பரவாயில்லை. கடிதம் ஏதாவது வந்தால் அனுப்பவேண்டிய முகவரியை நிச்சயமாக ரோமில் கொடுத்திருப்பாள். மேலும் இரண்டு நாட்கள் கழிந்தன. இன்னும் கடிதம் எதுவும் வரவில்லை. கலிபோர்னியோவில் இருக்கும் அவனுடைய அம்மாவிடமிருந்து ஒரு கடிதம், உள்ளூர் மதுபானக்கடையின் விளம்பரம், முதற் கட்டத் தேர்தல் குறித்த அறிவிப்பு மாதிரி ஏதோ ஒன்று, இவைதான் வந்திருந்தன. மெலிதாக சிரித்தான். பிறகு அஞ்சல்பெட்டியை சாத்திப் பூட்டிவிட்டு வேலைக்குப் புறப்பட்டான். கடிதம் எதுவும் இல்லை என்பதைப் பார்த்ததும் அவன் சோகமடையவில்லை. உண்மையில் அவனுக்கு ஏற்பட்டது, ஒருவித வேடிக்கையான அதிர்ச்சி. அவனுக்குக் கடிதத்தை அனுப்பாமல் மேலும் ஒரு நாள் காக்க வைத்து, செல்லமாக அவனை ஏமாற்றி விளையாடுவது போல் உணர்ந்தான்.

பிறகு அவன் கடக்க வேண்டிய அந்த ஒன்பது மணி நேரம். அதாவது ‘சிறப்பு அஞ்சல் சேவை’ பற்றிய சீட்டு ஏதாவது வந்துள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள மீண்டும் வீடு திரும்பும் அந்தக் கால இடைவெளி, அவன்மீது பெரும் சுமையாக இறங்கியது. திடீரென சோர்வாகித் துவண்டுபோனான். ‘சிறப்பு அஞ்சல் சேவை’ மூலமாக ரோசாலின்ட் கடிதம் எழுதப் போவதில்லை. அதுவும் இந்தச் சூழ்நிலையில். அடுத்த நாள் காலை வரை காத்திருப்பதைத்தவிர வேறு வழி இல்லை. மறுநாள் காலை பெட்டியில் கடிதம் ஒன்று இருப்பதைப் பார்த்தான். அது கலைவிழா ஒன்றின் அழைப்பிதழ். அதை சுக்குநூறாகக் கிழித்து கைகளில் வைத்துக் கசக்கினான். அவனது அஞ்சல் பெட்டிக்கு அடுத்ததாக இருந்த பெட்டியில் மூன்று கடிதங்கள் இருந்தன. நேற்று காலையில் இருந்தே அவை அங்கு இருப்பது நினைவுக்கு வந்தது. தன் பெயருக்கு வந்த தபால்களை எடுக்க ஆர்வம் காட்டாத அந்த டியுசன்பெரி யாராக இருக்கும்?

அலுவலகத்தில் அன்றுகாலை அவனுக்கு ஒரு யோசனைத் தோன்றியது. அது அவன் உற்சாகத்தைத் தூண்டியது. ஒரு வேலை அவளது கடிதம் தவறுதலாக அவன் பெட்டிக்குப் பக்கத்தில் இருக்கும் அந்தப் பெட்டியில் போடப்பட்டிருக்குமா? அஞ்சல் ஊழியர், வரிசையாக உள்ள அத்தனை பெட்டிகளையும் திறப்பது வழக்கம். ஒரு முறையாவது வேறு ஒருவரது கடிதம் அவனுடையப் பெட்டியில் இருந்திருக்கிறது. அவன் நல்லதே நடக்கும் என எதிர்பார்க்கத் தொடங்கினான். அவளும் தன்னை விரும்புவதாகக் கடிதத்தில் எழுதியிருப்பாள் என்று நம்பினான். எப்படி எழுதாமல் போவாள்? ழுவான் லெ பேன் பகுதியில் அந்த அளவுக்கு அவர்கள் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்திருக்கிறார்கள். அவளுக்குக் கேபிள் மூலம், “ஐ லவ்யு, ஐ லவ்யு, ஐ லவ்யு” என்று தெரிவிக்கலாம். இல்லை. தொலைபேசியில் பேசுவது நல்லது. ஏனெனில் அவளது கடிதத்தில் பாரீஸ் முகவரி இருக்கும். அவளது அலுவலக முகவரிக்கூட இருக்க வாய்ப்பு உண்டு. எனவே அவளை எங்கே தொடர்புகொள்வது என்பது அவனுக்குத் தெரிந்துவிடும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க்கில் ரோசாலின்டைச் சந்தித்தபோது, இரண்டு அல்லது மூன்று முறை அவர்கள் இருவரும் உணவகத்துக்கும் நாடகத்துக்கும் சென்றுள்ளனர். பின்னர், அடுத்தடுத்த அழைப்புகளை அவள் ஏற்காததால், அவனைவிட அதிகமாக யாரையோ அவள் விரும்புகிறாள் என்று அவன் நினைத்தான். அந்த நேரத்தில் அவனுக்கு அது பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால், அவளை ழுவான் லெ பேன் பகுதியில் சந்தித்தபோது நிலைமை முற்றிலுமாக மாறி இருந்தது. இரண்டாம் சந்திப்பில் காதல் மலர்ந்திருந்தது. அதுவரை அவளுடன் பழகிய ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும் கேன் படவிழாவுக்குச் சென்றபோது அவர்களுடன் போகாமல் அவனுடன் ழுவான் லே பேனில் தங்கியபோது அது தெளிவாகியது. இருவருமாகச் சேர்ந்தார்போல் ஐந்து நாட்களை முழுமையாகக் கழித்தனர். டான் அவளிடம், ‘ஐ லவ் யு’ என்று சொல்ல, ரோசாலின்ட்டும் திருப்பி அதை ஒரு முறை சொன்னாள். ஆனால் அவர்களிடம் எதிர்காலத் திட்டம் எதுவும் இல்லை. மீண்டும் எப்பொழுது சந்திக்கலாம் என்பதைப் பற்றிக்கூடப் பேசவில்லை. எப்படி அவன் இவ்வளவு முட்டாளாக இருக்கமுடியும்?

அவளுடன் சேர்ந்து உறங்க விருப்பம் என்பதையாவது சொல்லி இருக்கலாம். மாறாக, அவனது உணர்வுகள் அப்பொழுது அதைவிடவும் முக்கியமாக இருந்தன. விடுமுறை காலத்தைக் கழிக்கும்போது எந்த ஜோடியாக இருந்தாலும் ஏதாவது நடந்துவிடும். காதல்வயப்படுவதும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதும் வேறு கதை. அவள் நடந்துகொண்ட விதத்தைக் கவனித்தபோது அவளும் அப்படியே உணர்ந்திருந்தாள் என்று நினைத்தான். ரோசாலின்ட் அமைதியானவள், கருத்த முடி, சிரித்த முகம். அதிக உயரமில்லை. ஆனால், உயரமாக இருப்பதைப் போல் தோன்றுவாள். அவள் அறிவாளியாக இருந்தாள். எனவே, எந்த முட்டாள்தனமானச் செயலையும் செய்ய மாட்டாள். அவளிடம் உணர்ச்சிவயப்படும் செயல் எதுவும் இல்லை என்பதை டான் உணர்ந்தான். அவனும், யாரிடமும் உணர்ச்சி வயப்பட்டு எதையும் கேட்டதில்லை.

திருமணம் என்பது சில காலம் சிந்தித்து முடிவுசெய்ய வேண்டிய விஷயம். சில வாரங்கள், மாதங்கள் ஏன் வருடங்கள்கூட யோசிக்க வேண்டிய விஷயம். திருமணம் செய்துகொள்ள அவளிடம் விருப்பம் தெரிவிக்கும் முன், ழுவான் லே பென்னில் கழித்த ஐந்து நாட்களுக்கும் அதிகமான காலம் அதைப்பற்றிச் சிந்தித்ததாக உணர்ந்தான். அவனைப் பொறுத்தவரை, ரோசாலின்ட் பார்னஸ் ஒரு வலிமையானப் பெண் அல்லது பெண்மணி (அவளுக்கு இருபத்தியாறு வயது, அவனுக்கு இருபத்தி ஒன்பது). அவனும் அவளும் பார்க்கும் வேலையில் பல பொதுவான அம்சங்கள் இருக்கின்றன. இருவரும் சந்தோஷமாக வாழ அனைத்து வாய்ப்புகளும் உள்ளன என்றும் நினைத்தான்.

அன்று மாலை, அந்த மூன்று கடிதங்களும் இன்னும் டியுசன்பெரியின் பெட்டியிலேயே கிடந்தன. அஞ்சல் பெட்டிகளின் எதிரில் இருந்த எண் பட்டியலில் டியுசன்பெரியின் எண்ணைத் தேடிக் கண்டுபிடித்து அழைப்புமணியை அழுத்திக்கொண்டிருந்தான். ஒரு வேளை அவர்கள் உள்ளே இருந்து, தபாலை எடுத்து செல்ல வராமல் இருக்கலாம். பதில் இல்லை. டியுசன்பெரி அல்லது டியுசன்பெரி குடும்பத்தினர் வெளியேபோய் இருக்கின்றனர் என்பது தெளிவானது. பெட்டியைத் திறக்க அங்குள்ள மேற்பார்வையாளர் அவனை விடுவாரா? நிச்சயமாக மாட்டார். மேலும், அவரிடம் சாவிகளும் இருக்காது. அங்கு கிடந்த கடிதங்களில் ஒன்று அய்ரோப்பாவில் இருந்து வந்த வெளிநாட்டுத் தபால் போல் இருந்தது. அப்பெட்டியின் மழமழப்பான முன்பக்க உலோக வாயிலில் ஒரு விரலை விட்டு திறக்கப் பார்த்தான். பெட்டி திறக்கவில்லை. அவனது சாவியைப் போட்டு திருப்பிப் பார்த்தான். பூட்டுக்குள் ‘லடக்’ என்ற சத்தம். மறை நகர்ந்து பெட்டி அரை அங்குலம் திறந்தது. அதற்கு மேல் திறக்க மறுத்தது. அவனது வீட்டுச் சாவிகள் இருந்தன. அதில் ஒன்றை எடுத்து அந்தப் பெட்டிக்கும் பித்தளையிலான சட்டத்துக்கும் இடையில் வைத்து அதை லீவராக பயன்படுத்தினான். கடிதங்களைத் தொடப் போதுமான அளவு அந்தப் பித்தளைச் சட்டம் கொஞ்சம் வளைந்து கொடுத்தது. கடிதங்களை எடுத்துக் கொண்டு முடிந்த அளவு பித்தளைச் சட்டத்தை நேராக்கினான். சோதித்துப் பார்த்ததில், எந்தக் கடிதமும் அவனுக்கானது இல்லை. திருடனைப் போல் அவற்றை நடுங்கியபடியே பார்த்தான். பிறகு அதில் ஒன்றை எடுத்து தன் கோட் பையில் போட்டுக்கொண்டதும், மற்றவற்றை வளைந்திருந்த பெட்டிக்குள் தள்ளிவிட்டான். அதன் பின் குடியிருப்புக் கட்டடத்துக்குள் நுழைந்தான். மின்தூக்கிகள் ஒரு மூலையில் காணப்பட்டன. அவற்றில் ஒன்று காலியாக இருப்பதைப்பார்த்தான். அதில் ஏறி மூன்றாவது மாடிக்குத் தனியாக வந்து சேர்ந்தான். அவனது குடியிருப்பின் கதவைச் சாத்தியபோது இதயம் வேகமாகத் துடித்தது. அவன் ஏன் அந்தக் குறிப்பிட்ட கடிதத்தை எடுத்தான்? அதைத் திருப்பி வைத்துவிடப் போகிறான். சந்தேகமில்லை. யாரோ ஒருவரிடமிருந்து வந்த கடிதம் போல இருந்தது. ஆனால் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தது. நீல நிறத்தில் அழகான கையெழுத்தில் இருந்த முகவரியைப் பார்த்தான். ஆர்.எல்.டியுசன்பெரி… உறையின் பின்புறம் இருந்த முகவரியையும் பார்த்தான்.

எடித் டபில்யு. விட்கோம்ப், 717, கார்பில்ட் டிரைவ், ஸ்திரேன்டன்.

உடனடியாக, அது டியுசன்பெரியின் காதலியாக இருக்கவேண்டும் என்று நினைத்தான். சதுர வடிவில் இருந்த உறையில் இருந்த அக்கடிதம் கனமாக இருந்தது. இப்பொழுது அதை இருந்த இடத்தில் போடவேண்டும். சேதமான அந்த அஞ்சல் பெட்டி? விடுங்கள். அதிலிருந்து எதுவும் களவுபோகவில்லை தானே. அப்புறம் என்ன?

ஓர் அஞ்சல் பெட்டியை உடைப்பதென்பது முக்கியமான குற்றம் தான். ஆனால் பெட்டியை நிமிர்த்திக்கொள்ளட்டுமே. எதுவும் திருடு போகாதவரை, அது என்ன அவ்வளவு பெரிய விஷயமா? சலவைக்குப் போட அவன் கோட் ஒன்றை எடுத்துக்கொண்டான். கூடவே அந்த டியுசன்பெரியின் கடிதம். ஆனால், கையில் எடுத்ததும் அதில் என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. தன் செய்கைக்கு வெட்கப்பட நேரமில்லாமல் நேராகச் சமயலறைக்குப் போய் தண்ணீரைக் கொதிக்க வைத்தான். ஆவியில், கடித உறை அழகாக சுருட்டிக்கொண்டது. டான் அமைதிகாத்தான். கடிதத்தின் மூன்று பக்கங்களும் முழுமையாக, இரு புறமும் எழுதப்பட்டிருந்தன.

“அன்பே” என்று தொடங்கியிருந்தது. “உனக்கு எழுதியே ஆக வேண்டும் எனும் அளவுக்கு நீ இல்லாத வெறுமையை மிகவும் உணர்கிறேன். உண்மையில் எப்படி உணர்கிறாய் என நீ முடிவு செய்துவிட்டாயா? நம் இருவருக்கும் எல்லாம் மறைந்து போகும் என்று நினைப்பதாகச் சொன்னாய். நான் எப்படி உணர்கிறேன் என்று உனக்கு தெரியுமா? அந்தப் பாலத்தின் மீது நின்று பெனிங்டன்னில் வெளிச்சம் வருவதை கவனித்துகொண்டிருந்தோமே! அதேபோல்தான் இப்பொழுதும் உணர்கிறேன்...”

கடிதம் முழுவதையும், நம்பமுடியாமல் ஆனால் ஆர்வத்தோடு படித்தான். அந்தப் பெண், டியுசன் பெரி மீது காதல் பைத்தியமாக இருந்தாள். அவள் எதிர்பார்ப்பதெல்லாம் இவனிடமிருந்து ஒரு பதில், ஒரு சைகை. அவர்கள் ஒன்றாகச் சென்று வந்த வெர்மோன்டில் உள்ள நகரத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தாள். அங்கே சந்தித்துக்கொண்டார்களா அல்லது அங்கு பயணம் சென்றார்களா என்று தெரியவில்லை என்றும் எழுதியிருந்தாள்.

கடவுளே, இப்படி ஒரு கடிதத்தை ரோசாலின்ட் தமக்கு எழுதமாட்டாளா என்று நினைத்துப்பார்த்தான். இந்த விஷயத்தில், டியுசன்பெரி அவளுக்கு எழுதமாட்டான் என்பது தெளிவாகத் தெரிகிறது. வந்திருக்கும் கடிதத்தைப் பார்த்தால், அவர்கள் கடைசியாகச் சந்தித்துக்கொண்ட பிறகு டியுசன்பெரி எழுதியிருக்கமாட்டான் என்பது தெரிகிறது. கடிதத்தைப் பசை போட்டு ஒட்டி, பத்திரமாக அதைத் தன் சட்டைப் பையில் டான் போட்டுக்கொண்டான். கடைசி பத்தி மட்டும் அவன் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருந்தது.

“மீண்டும் உனக்கு எழுதுவேன் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், இப்பொழுது எழுதி விட்டேன். நான் நேர்மையாக இருந்தாகவேண்டும். ஏனெனில் நான் அப்படித்தான்.”

தானும் அப்படித்தான் என்று டான் நினைத்துக் கொண்டான். அந்த பத்தியில் மேலும் எழுதப்பட்டிருந்த வாசகம் : “ஞாபகம் இருக்கிறதா? அல்லது மறந்துவிட்டாயா? என்னை மீண்டும் பார்க்க விரும்புகிறாயா அல்லது விருப்பமில்லையா? உன்னிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை என்றால் எனக்குத் தெரிந்துவிடும். என்றும் அன்புடன் எடித்.” முத்திரையில் தேதியைப் பார்த்தான்.

கடிதம் ஆறு நாட்களுக்கு முன் அஞ்சலிடப்பட்டிருந்தது. எடித் விட்கோம்ப் எனும் அப்பெண்ணின் நிலையை நினைத்துப் பார்த்தான். இந்தத் தாமதம் சகஜம்தான் என்று தனக்குள் சமாதானம் சொல்லியபடி நாட்களை நகர்த்திக் கொண்டிருப்பாள் என நினைத்தான்.

ஆறு நாட்கள். நிச்சயமாக இன்னும் அவள் எதிர்பார்த்துக் காத்திருப்பாள். பெனின்சுலாவில் உள்ள ஸ்கிரான்டனில், இந்நேரம் நம்பிக்கையுடன் காத்திருப்பாள். டியுசன்பெரி எத்தகைய மனிதன்? கசானோவா போன்றவனா? புதிதாய் முளைத்தத் தொடர்பைத் துண்டிக்க விரும்பும் திருமணமான மனிதனா? டான் வசிக்கும் கட்டிடத்தில் அவன் சந்தித்த ஆறு அல்லது எட்டு பேரில் டியசன்பெரி யாராக இருக்கும்?

காலை 8.30 க்கு வேகமாக வெளியேறும் தொப்பியில்லாத ஓரிரு நபர்களா? ஹாம்பர்க் தொப்பியுடன் மெதுவாக நகரும் அந்த ஆளா? உடன் வசிப்பவர்களைக் கவனிப்பதில் அதிக அக்கறையைக் காட்டாதவன் டான். ஒரு கணம் யோசித்துப் பார்த்தான். அந்தப் பெண்ணின் தனிமையையும் அசைக்கமுடியாத நம்பிக்கையையும் அவனால் உணர முடிந்தது. நம்பிக்கையின் கடைசித் துடிப்புகளை அவனது உதடுகளிலேயே உணர முடிந்தது. ஒரே வார்த்தையின் மூலம் அவளை சந்தோஷமடைய வைக்கமுடியும். அதாவது, டியுசன்பெரியால் முடியும்.

“சண்டாளா,” என முணுமுணுத்தான். கோட்டை வைத்துவிட்டு, மேசையை நோக்கிப் போனான். ஒரு தாளை எடுத்து, “எடித், நான் உன்னை நேசிக்கிறேன்” என்று எழுதினான். தெளிவாக அந்த வாசகம் எழுதப்பட்டிருப்பதைப் பார்க்க விரும்பினான். ஏற்கனவே சரியாக முடித்துவைக்கப்படாமல் இருந்த ஒரு முக்கியமாக பிரச்சினை இதன் மூலம் முடித்துவைக்கப்படுவதாக அவன் நினைத்தான். எழுதிய கடிதத்தை டான் கசக்கி குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தான். பிறகு, படிக்கட்டுகளில் இறங்கி, கடிதத்தை பெட்டியில் போட்டுவிட்டு, கையிலிருந்த கோட்டை சலவைக்கு கொடுத்தான். செகன்ட் அவென்யு முழுதும் வெகுதூரம் நடந்து சோர்ந்து போனான். ஹார்லெமின் முடிவு வரும்வரை நடந்துகொண்டிருந்தான்.

அதன்பின் ஒரு பேருந்தில் ஏறினான். பசி எடுத்தது. ஆனால், என்ன சாப்பிடுவது என்று தெரியவில்லை. வேண்டுமென்றே அவன் சூன்யத்தை எண்ணினான். இரவு கடந்து, அடுத்த கடித சேவையை கொண்டுவரும் காலை வரட்டும் என காத்திருந்தான். ரோசாலின்ட்டைப் பற்றி தோராயமாக நினைத்து வைத்தான். ஸ்கரேன்டனைப் பற்றியும் நினைத்தான். தங்கள் உணர்ச்சிகளின் காரணமாக இவளைப்போல் மக்கள் இப்படிக் கஷ்டப்பட வேண்டி இருக்கிறது. என்ன பரிதாபம்! ஏனெனில், ரோசாலின்ட் அவனை மிகவும் சந்தோஷமடைய வைத்திருந்த போதிலும் இந்த மூன்று வாரமும் சித்ரவதைதான் என்பதை அவனால் மறுக்கமுடியாது. ஆமாம். இன்றோடு இருபத்தி இரண்டு நாட்கள் இப்படி இருந்ததற்காக இன்று இரவு வினோதமான அவமான உணர்வு ஏற்பட்டது. வினோதமான அவமானமா? அதை எதிர் கொண்டால் அதில் எதுவும் வினோதம் இல்லை. அவளை ஒருவேளை இழந்துவிட்டோம் என நினைத்துதான் வெட்கப்பட்டான். ழுவான் லெ பென்னிலேயே உறுதியாக அவளிடம், தான் அவளை நேசிப்பதோடு திருமணம் செய்துகொள்ளவும் விரும்புவதாகச் சொல்லியிருக்கவேண்டும். அப்படிச் சொல்லாததால் இப்பொழுது அவளை இழந்திருக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சிந்தனையே அவனைப் பேருந்தில் இருந்து இறங்க வைத்தது. அத்தகைய மோசமான, பயங்கரமான சாத்தியக்கூற்றை மனதிலிருந்து ஓட்டவும், விலக்கிவைக்கவும், உடலிலிருந்தே நீக்கவும் நடந்துகொண்டிருந்தான். திடீரென அவனுள் ஒரு யோசனைத் தோன்றியது. அது வெகுதூரம் செல்லவில்லை. பெரிதாக இலக்கு எதுவும் அதற்கில்லை. ஆனால், அன்று மாலைக்கான ஒரு திட்டம். வீட்டுக்குத் திரும்பும் வழியில் அதைப் பற்றி யோசித்துப் பார்த்தான். கடைசியாக வந்த கடிதத்தை டியுசன்பெரி படித்திருந்தால் விட் கோம்புக்கு என்னதான் எழுதுவான் என்று கற்பனை செய்து பார்த்தான். அவளைக் காதலித்துதான் ஆக வேண்டும் என்றில்லை. அவளை மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற அக்கறையுடன் டியுசன்பெரி பதில் எழுதியிருப்பான். அந்தக் கடிதத்தை எழுத அவனுக்கு சுமார் பதினைந்து நிமிடம் தேவைப்பட்டது. இவ்வளவு நேரம் மௌனமாக இருந்ததற்குக் காரணம் அவள் குறித்து தனக்கு ஏற்பட்ட உணர்வுகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருந்ததுதான் என்று குறிப்பிட்டான். அவளிடம் ஏதாவது தெரிவிப்பதற்கு  முன் அவளைச் சந்திக்க விரும்பியதாக எழுதினான். எனவே, அவள் எப்பொழுது தன்னைப் பார்க்க முடியும் என்றும் கேட்டான். டியுசன் பெரியின் தொடக்கப் பெயர் என்ன என்று நினைவுக்கு வரவில்லை. (அதை அவளது கடிதத்தில் பயன்படுத்தியிருந்தாள்) ஆனால், உறையின்மீது ஆர்.எல். டியுசன்பெரி என இருந்தது மட்டும் ஞாபகத்தில் இருந்தது. எனவே, சாதாரணமாக ‘ஆர்’ என்று கையொப்பமிட்டான்.

அந்தக் கடிதத்தை எழுதிக் கொண்டிருந்தபோது, உண்மையில் அதை அவளுக்கு அனுப்பவேண்டும என்ற திட்டம் அவனிடம் இல்லை. பெயரிடப்படாமல், தட்டச்சு செய்து அனுப்பப்பட்ட எழுத்துகளைப் படித்தபோதுதான் அதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். அவளுக்குச் செய்யக் கூடிய குறைந்தபட்ச உதவியாக அது இருக்கும் என்று நினைத்தான். மேலும், எப்பொழுது நாம் மீண்டும் சந்திக்கலாம்? என்று கேட்பதால் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஆனால், உண்மையில் இது பயனற்றது. போலியானதுதான். டியுசன் பெரி அக்கறை காட்டவில்லை என்பதும், காட்டப் போவதில்லை என்பதும் தெளிவாகிறது. இல்லையென்றால், ஆறு நாட்களைக் கடக்கும்படி விட்டிருக்க மாட்டானே. விட்ட இடத்திலிருந்து டியுசன்பெரி அந்த நிலைமையைத் தொடரவில்லை என்றால், பொய்யானதொரு நிலையை நீட்டிக்கிறான் என்று பொருள். ‘ஆர்’ என்ற எழுத்தை உற்றுப்பார்த்தான். தான் எதிர்பார்ப்பதெல்லாம் எடித்திடமிருந்து ‘ஆம்’ என்ற சந்தோஷமான ஒற்றைச் சொல் மட்டுமே என அவனுக்கு தெரியும். ஆகவே, கடிதத்தின் அடியில், “பி.கு : உன் பதிலை டிர்க்சன் அன்ட் ஹால் சேனின் பில்டிங், நியூயார்க். என்ற முகவரிக்கு அனுப்பு” என்ற குறிப்பையும் தட்டச்சு செய்தான். எடித் பதில் எழுதினால், எப்படியும் அக்கடிதம் இவனுக்குக் கிடைத்துவிடும். இன்னும் சில நாட்களுக்குள் அவள் பதில் எழுதவில்லையென்றால், டியுசன்பெரி அவளுக்கு பதில் கடிதம் எழுதிவிட்டதாக அர்த்தம்.

அல்லது, எடித்திடம் இருந்து கடிதம் வந்தால், எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுலபமாக, தானே இந்த விஷயத்தைக் கையாளலாம் - கையாளவேண்டும். கடிதத்தை அஞ்சலில் சேர்த்தபின் அதிலிருந்து முழுமையாக விடுதலை பெற்றது போன்ற உணர்வைப் பெற்றான். ஒரு வகையான நிம்மதியும் கிடைத்தது. நன்றாகத் தூங்கி விழித்தபோது கீழ்தளத்தில் உள்ள அஞ்சல் பெட்டியில் அவனுக்காக ஒரு கடிதம் காத்திருக்கும் என்ற நம்பிக்கையோடு எழுந்தான். அங்கே ஒரு கடிதமும் காணப்படவில்லை (ரோசா லின்டிடம் இருந்தும் கடிதம் வரவில்லை, தொலைபேசி கட்டண ரசீது மட்டும் இருந்தது) என்றதும் அதிர்ச்சி கலந்த ஏமாற்றமும் ஏற்பட்டது. மேலும், இதற்குமுன் அப்படி ஒரு சோர்வை அவன் அனுபவித்ததில்லை. இப்பொழுது ஏன் அவனுக்குக் கடிதம் வரவில்லை என்பதற்கு எந்தக் காரணமும் அவனுக்குப் புலப்படவில்லை. ஸ்கரேன்டனிலிருந்து வந்த கடிதம் அடுத்த நாள் காலை அலுவலகத்தில் காத்திருந்தது. வரவேற்பு மேசையின் மீது கிடந்த அக்கடிதத்தைப் பார்த்தவன் அதை எடுத்துக்கொண்டான். அந்த நேரத்தில் வரவேற்பாளர் தொலைபேசியில் மும்முரமாக பேசிக்கொண்டிருந்தததால் அவளிடமிருந்து எந்தக் கேள்வியும் எழவில்லை. அவனை அவள் கவனிக்கவேயில்லை. “அன்பே” என தொடங்கியது கடிதம். படிக்கும் போது அதில் உள்ள உணர்ச்சிப் பிரவாகத்தை தாங்கிக்கொள்ள கஷ்டப்பட்டான். எனவே, அவன் வேலை பார்க்கும் பொறியியல் துறையில் பணியாற்றும் யாராவது இப்படி படிப்பதைப் பார்த்து விடுவதற்கு முன்பாகக் கடிதத்தை மடித்து வைத்தான். தன் சட்டைப் பையில் அக்கடிதம் இருப்பது பிடித்தும் இருந்தது பிடிக்காமலும் இருந்தது.

கடிதம் வரும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று தனக்குள் சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால் அது உண்மையில்லை என்பது அவனுக்குத் தெரியும். ஏன் அவள் எழுதாமல் இருக்கவேண்டும்? அடுத்த வார இறுதியில் எங்காவது இருவரும் ஒன்றாகப் போகலாம் என அவள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாள் (டியுசன்பெரியும் ஓய்வாகத்தான் இருந்தான்). இவனே நேரத்தையும் இடத்தையும் முடிவு செய்யும்படி கேட்டிருந்தாள். வேலையில் ஈடுபட்டபடியே, அவளைப் பற்றி யோசித்துப் பார்த்தான். ஸ்கிரேண்டனில் இருந்தாலும், ஒற்றை வார்த்தையால் இயக்கக் கூடிய தீவிரமான, துடிப்புள்ள முகமற்ற அப்பெண்னை மனக்கண்ணில் பார்த்தான். என்ன வேடிக்கை இது! இவனால் பாரீசில் உள்ள ரோசலின்ட்டிடமிருந்து ஒரு பதிலைப் பெற முடியவில்லை! ”கடவுளே” என முணுமுணுத்தவன் மேசையை விட்டு எழுந்தான். யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் அலுவலகத்தைவிட்டு வெளியேறினான். ஏதோ ஆபத்தான ஒரு விஷயத்தைப் பற்றி அப்பொழுதுதான் யோசித்துப் பார்த்தான். ரோசா லின்ட் இவ்வளவு காலமும் அவனை விரும்பவில்லை, எப்பொழுதும் விரும்பப் போவதுமில்லை என்பதைச் சொல்லத் திட்டமிட்டிருக்கிறாள் என்ற அவனுக்குப் பட்டது. இந்த எண்ணத்தை அவன் மனதிலிருந்து நீக்க அவனால் முடியவில்லை. இப்பொழுது, இதுவரை கற்பனை செய்து வைத்த அவளது மகிழ்ச்சியான, புதிர் நிறைந்த அல்லது ரகசியமாகத் திருப்தியடைந்த முகம் மாறிப்போனது. எல்லாவற்றையும் முறித்துவிடக்கூடிய அக்கடிதத்தை எழுதும் அருவருப்பான வேலையில் அவள் ஈடுபட்டிருப்பதுபோல் தெரிந்தது.

அதை நாகரீகமாகத் தெரிவிக்கக்கூடிய வார்த்தைகளுக்காக அவள் யோசனையில் ஆழ்ந்திருப்பதாக அவன் உணர்ந்தான். இத்தகைய எண்ணம் அவனை மிகவும் பாதிக்கவே, அன்று மாலை எந்த வேலையும் ஓடவில்லை. அதைப் பற்றி நினைக்க நினைக்க, அவனுக்கு அவள் எழுதுவதுவதற்கோ, எழுதலாம் என்று எண்ணியிருப்பதற்கோ வாய்ப்புகள் குறைந்து கொண்டிருந்தன. அப்படி ஒரு முடிவினை எடுக்க அவள் என்னென்ன படிகளைக் கடந்திருப்பாள் என்பதைத் துல்லியமாக அவனால் ஊகிக்க முடிந்தது. அவன் இல்லாமல் கழித்த அந்தக் குறுகிய கால இடைவெளியில், அவள் வேலையில் ஈடுபட்டபடியே, பாரீசில் உள்ள தன் நண்பர்களுடன் கழித்த நேரத்தில் அவன் இல்லாமல் ஏதாவது ஒரு விஷயம் நிறைவேறியிருக்கும். அவளைப் பற்றி அவனுக்குத் தெரியும். இரண்டாவதாக, அவன் அமெரிக்காவிலும் அவள் அய்ரோப்பாவிலும் இருக்கும் சந்தர்ப்ப சூழ்நிலை அவளைப் பாதித்திருக்கும். ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக, அவனை அவள் உண்மையில் விரும்பவில்லை என்பதைக் கடைசியில் கண்டுபிடித்திருப்பாள். இது மட்டுமே உண்மையாக இருக்க வேண்டும். காரணம், தாங்கள் அக்கறைகொண்டு உள்ளவர்களுக்குக் கடிதம் எழுத யாரும் இவ்வளவு காலம் கடத்தமாட்டார்கள். சட்டென எழுந்து நின்று கடிகாரத்தை முறைத்துப் பார்த்தான். அதனுடன் சண்டைபோடுவதுபோல் அதைப் பார்த்தான்.

இரவு 8.17. செப்டம்பர் 15.

அவனது பதற்றமான உடல் மீதும் நடுங்கும் கைகளின் மீதும் காலத்தின் முழுச் சுமையையும் தாங்கிக் கொண்டிருந்தான். அவனது முதல் கடிதம் எழுதப்பட்டு இருபத்தி ஐந்து நாட்கள், இவ்வளவு மணி நேரங்கள், இவ்வளவு நிமிடங்கள்…

இந்தச் சுமையிலிருந்து நழுவிய அவனது மனம் ஸ்கிரேன்டனில் இருக்கும் பெண்ணைக் கவ்விக்கொண்டது. அவளுக்கு ஒரு பதில் எழுத வேண்டியது தன் கடமை என்று அவன் நினைத்தான். அவளது கடிதம் முழுவதையும் மீண்டும் ஒரு முறை படித்தான். உணர்வுப்பூர்வமாக மிகவும் கவனமாகப் படித்தவன், இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சில வாக்கியங்களில் ஒன்றிப்போனான். அவளுடைய நம்பிக்கையின்மை மீதும் ஊசலாடும் அவளது காதல் மீதும் அவ்வளவு அக்கறை கொண்டவன் போல் காட்டிக்கொண்டான். ஏறக்குறைய அது அவனுடய சொந்தக்காதல் போலவும் இருந்தது. இங்கோ ஒருத்தி, சந்திக்கக்கூடிய இடத்தையும் நேரத்தையும் தெரிவிக்கும்படி இவனிடம் மன்றாடிக்கொண்டிருக்கிறாள். துடிப்பும் ஆர்வமும் கலந்திருக்கும் இவள் தனக்கே கைதியாக இருப்பவள். இவள் பறக்க ஆயத்தமாக இருக்கும் ஒரு பறவையைப் போன்றவள். திடீரென தொலைபேசி நோக்கிச் சென்றவன் ஒரு தந்தியை அனுப்பினான்.

“கிரான்ட் சென்ட்ரல் டெர்மினல், லெக்சிங்டன் அருகில், வெள்ளி மாலை 6 மணிக்கு என்னைச் சந்திக்கவும். அன்புடன் ஆர்.”

நாளை மறு தினம் வெள்ளிக்கிழமை. வியாழக்கிழமையும் கடிதம் எதுவும் வரவில்லை ரோசாலின்ட்டிடமிருந்து. அவளைப் பற்றிக் கற்பனை செய்து பார்க்கும் அளவு இப்பொழுது அவனுக்குத் துணிச்சலோ உடல் பலமோ இல்லை. அவனுள் இருப்பதெல்லாம், அவள் மீது கொண்ட அன்பு மட்டுமே. மலைபோல் அசைக்க முடியாத மங்காத காதல் அது. வெள்ளிக்கிழமை காலை, அவன் எழுந்ததும் ஸ்கிரேன்டனில் உள்ள பெண்ணை நினைத்துப் பார்த்தான். அவள் இன்று காலை எழுந்து தன் உடமைகளைப் பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டிருப்பாள். அல்லது வேலைக்குச் செல்வதாக இருந்தால், நாள் முழுவதும் டியுசன்பெரியின் கனவு உலகில் அவள் சஞ்சரித்துக்கொண்டிருப்பாள்.

அவன் தரைத்தளத்துக்குப் போனபோது அவனது பெட்டியில் சிவப்பு, நீல வண்ண விளிம்புடன் வெளிநாட்டுத் தபால் இருப்பதைப் பார்த்தான். அப்பொழுது அவனுக்கு மெல்ல ஏற்பட்ட அதிர்ச்சி வலிக்கவே செய்தது. பெட்டியைத் திறந்து, அந்த நீளமான மெல்லிய கடித உறையை வெளியே எடுத்தான். கைகள் நடுங்கவே சாவிகள் தவறி காலடியில் விழுந்தன. தட்டச்சு செய்யப்பட்ட கடிதத்தில் பதினைந்து வரிகள் மட்டுமே இருந்தன.

“டான், உன் கடிதத்துக்குப் பதில்போட இவ்வளவு நாள் ஆனதற்கு மிகவும் வருந்துகிறேன். என்ன செய்வது. இங்கு ஒன்றன்பின் ஒன்றாகப் பல விஷயங்கள். இன்றுதான் ஓரளவு எல்லாம் சரியாகி வேலையை ஆரம்பித்தேன். முதலில் ரோமில் தாமதமானது. மின்பழுது பார்ப்பவர்களின் வேலைநிறுத்தம், அது இது என்று பல காரணங்களால் இங்கு குடியிருப்பைச் செப்பனிடுவது பெரிய தலைவலியாக இருந்தது. டான்! நீ ஒரு தேவதூதன். எனக்கு அது தெரியும். அதை நான் மறக்கவும் மாட்டேன். கடற்கரையோரம் நாம் கழித்த நாட்களை மறக்கவும் மாட்டேன்.

ஆனால், திடீரென இங்கேயோ வேறு எங்காவதோ திருமணம் செய்துகொள்வதற்காக என் வாழ்க்கைப் பாதையைச் சட்டென மாற்றிக் கொள்ள இயலாது. கிறிஸ்துமஸுக்கு என்னால் அமெரிக்கா வர வாய்ப்பில்லாத அளவுக்கு இங்கு வேலை அதிகமாக இருக்கிறது. நீயும் ஏன் நியூயார்க்கிலிருந்து குடிபெயர்ந்து இங்கு வரவேண்டும்? கிறிஸ்துமஸ் நேரத்தில் அல்லது இக்கடிதம் கிடைப்பதற்குள் உன் எண்ணங்கள் கொஞ்சம் மாறியிருக்கக்கூடும். சரி, மீண்டும் எனக்குக் கடிதம் எழுதுவாயா? இது உன் மகிழ்ச்சியைக் குறைத்துவிடாது அல்லவா? எப்பொழுதாவது மீண்டும் நாம் இருவரும் சந்தித்துக்கொள்ள முடியுமா? அதுவும் ழுவான் லெ பேனில் தற்செயலாக நிகழ்ந்ததுபோல் அற்புதமாக அமையுமா?

”ரோசாலின்ட் கடிதத்தைப் பைக்குள் போட்டுக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான். அவனது எண்ணங்கள் குழப்பம் நிறைந்தவையாக இருந்தன. சிதறடிக்கப்பட்ட படைக்குக் கிடைக்கும் தெளிவற்ற கட்டளைகள்போல், காலம் கடப்பதற்கு முன் இறக்காமல் இருக்கவும் சரணாகதி அடைவதைத் தவிர்ப்பதற்குமான அமைதியான மரண விசும்பல்களாக அவை இருந்தன. ஓர் எண்ணம் மட்டும் தெளிவாகவும் நேராகவும் அவனுக்குத் தோன்றியது. அதாவது அவளை அவன் பயமுறுத்திவிட்டான். கட்டுப்படுத்த இயலாமல் முட்டாள்தனமாக தன் மனதில் பட்டதை ஒப்புக் கொண்டதுதான் அது. தான் எடுத்துவைத்த அடுக்கடுக்கான எதிர்காலத் திட்டங்களே அவனுக்கு எதிராக அவளைத் திருப்பியிருக்கின்றன. சொன்னதில் பாதியை மட்டும் அவன் சொல்லியிருந்தால், அவளை அவன் எவ்வளவு காதலித்தான் என்பதைத் தெரிந்து கொண்டிருப்பாள். ஆனால், அவனோ குறிப்பிட்டுச் சொல்லியிருந்தான். அவனது கடிதத்தில், “அன்பே உன்னை நான் ஆராதிக்கிறேன். கிறிஸ்துமஸூக்கு நீ நியூயார்க் வரமுடியுமா? இல்லையென்றால் நான் பாரீசுக்கு வருகிறேன். நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீ அய்ரோப்பாவில் வசிக்க விரும்பினால், அங்கேயே வீடும் ஏற்பாடு செய்கிறேன். நான் மிக எளிதாக…” என எழுதி இருந்தான்.

என்ன ஒரு முட்டாளாக அவன் நடந்துகொண்டிருக்கிறான்! நேர்ந்துவிட்ட தவறைத் திருத்துவதில் அவன் மனம் ஏற்கனவே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அதற்குள் அடுத்தக் கடிதத்தைப் பாசத்தோடு இயல்பாக அமைக்கும் வேலையில் அது ஈடுபட்டிருந்தது. அக்கடிதம் அவள் முடிவெடுக்கக் கொஞ்சம் அவகாசம் தரக்கூடியதாக இருக்கும். இன்று மாலையே அக்கடிதத்தை கவனமாக எழுதிவிடுவான். நினைத்ததை அது சாதித்துவிடும். அன்று பிற்பகல், சற்று முன்னதாகவே டான் அலுவலகத்தைவிட்டு வெளியேறினான். வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது, மாலை 5 மணியாகி சில நிமிடங்கள் கடந்திருந்தன. ஸ்கிரேன்டனிலிருந்து வரும் பெண், கிரான்ட் சென்டரலில் 6 மணிக்குக் காத்திருப்பாள் என்பதைக் கடிகாரம் அவனுக்கு நினைவூட்டியது. ஏன் என்று தெரியவில்லை. இருந்தாலும் அவளைப் போய்ப் பார்க்கவேண்டும் என்று நினைத்தான். நிச்சயமாக அவளிடம் அவன் பேசப்போவதில்லை.

சொல்லப்போனால், அவளைப் பார்த்தாலும் அவனால் அடையாளம்கூட கண்டுபிடிக்க முடியாது. எனினும் ஒரு ஸ்திரமான, லாவகமான காந்தம் போல் அந்தப் பெண்ணைக்காட்டிலும் கிரான்ட் சென்டிரல் அவனை ஈர்த்தவண்ணம் இருந்தது. உடைகளை மாற்றத் தொடங்கினான். இருப்பதிலேயே சிறந்த கோட்டை எடுத்துப் போட்டுக்கொண்டான். ‘டை’கள் இருந்தது. பேழையில் தயங்கிய விரல்களால் தேடி, அடர்த்தியான நீல நிற டையைத் தேர்ந்தெடுத்தான். பலவீனமாகவும் நிதானம் குறைவதாகவும் உணர்ந்தான். தன் நெற்றியில் துளிர்த்த குளிர்ந்த வேர்வைத் துளியைப் போலவே ஆவியாகிக் கரைந்து போவது போல் உணர்ந்தான். அவன் இறங்கி நாற்பத்தியிரண்டாம் தெருவை நோக்கி நடந்தான். டெர்மினலின் லெக்கிங்டன் அவென்யூ நுழைவாயிலில் இரண்டு அல்லது மூன்று இளம் பெண்களைப் பார்த்தான். அவர்களில் யாராவது ஒருத்தி எடித் விட்கோம்ப்பாக இருக்கவேண்டும். அவர்கள் ஏதாவது தலைப்பெழுத்துக்கள் பொரித்த பொருட்களை எடுத்து வருகிறார்களா என்று கவனித்தான். ஆனால் அப்படி எதுவும் அவர்களிடம் இல்லை. பிறகு, அவர்களில் ஒருத்தி, தான் பார்க்கக் காத்திருந்தவனைச் சந்தித்தாள். சட்டென, கருப்புநிறக் கோட்டும் மிலிட்டரி பின் வைத்த கருப்பு பெரெட் அணிந்திருந்த அந்த வெள்ளைக்காரப் பெண்தான் எடித் என்று அவன் உறுதியாக நம்பினான். ஆம். அகலமாக இருந்த அவளது வட்டமான விழிகளில் பரபரப்பு தெரிந்தது. காதலித்த ஒருவன் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒருவரைத் தவிர வேறு யாரிடமும் அத்தகைய பரபரப்பு இருக்காது. அவளுக்கு இருபத்தி இரண்டு வயது இருக்கலாம். திருமணமாகதவளாகவும், துடிப்பும் நம்பிக்கையும் சேரக் காத்திருப்பவளாகத் தெரிந்தாள். நம்பிக்கை, அதுதான் அவளிடம் கவர்ந்த்து. மேலும் அவளிடம் ஒரு சிறிய சூட்கேஸ் இருந்தது. வார இறுதி நாட்களைக் கழிக்க போதுமான அளவில் அது இருந்தது. சிறிது நேரம் அவள் அருகில் நின்று பார்த்தான். ஆனால் அவனை அவள் கண்டு கொள்ளவேயில்லை. அங்கிருந்த பெரிய கதவுகளின் வலப்பக்கமும் உட்புறமும் நின்று அவ்வப்பொழுது முட்டி மோதும் கும்பலைக் கவனிக்க அங்குமிங்கும் நகர்ந்துகொண்டிருந்தான். வாயிற்புறத்தின் வெளிச்சத்தில், அவளது வட்டமான கூந்தலின் பளபளப்பும், சோர்வான கண்களில் ஆவலும் தெரிந்தன. ஏற்கனவே 6.35 ஆகியிருந்தது. நிச்சயமாக, அது அவளாக இருக்க முடியாது என்று நினைத்தான்.

பிறகு திடீரென அவனுக்குச் சலிப்பு ஏற்பட்டது. தன்னை நினைத்தே ஒரு வகையான அவமானம் ஏற்பட்டது. ஏதாவது சாப்பிடலாம் அல்லது ஒரு கப் காபியாவது அருந்தலாம் என்று மூன்றாவது அவென்யு வரை நடந்து சென்றான். ஒரு காபிகடைக்குள் நுழைந்தான். செய்தித்தாளை வாங்கியவன் பரிமாறுபவன் வருவதற்குள் திறந்து புரட்ட ஆரம்பித்தான். ஆனால் பரிமாறும் பெண் வந்தபோது, அவனுக்கு எதுவும் இப்பொழுது தேவை இல்லை என்பதை உணர்ந்து மெல்லிய குரலில் வருத்தம் தெரிவித்து எழுந்தான். வந்த இடத்துக்கே திரும்பிப் போய் அந்தப் பெண் இன்னும் அங்கு இருக்கிறாளா என்று பார்க்கலாம் என்று நினைத்தான். அவள் அங்கு இருக்கக் கூடாது என எதிர்பார்த்தான். ஏனெனில் அவளுடன் ஒரு மோசமான விளையாட்டில் அவன் ஈடுபட்டிருந்தான். அப்படி அவள் இன்னும் அங்கு இருக்க நேர்ந்தால் அது ஒரு விளையாட்டு என்பதை அவளிடம் தெரிவித்துவிட வேணடும். அவள் இன்னும் அங்குதான் இருந்தாள். அவளை அவன் பார்த்ததும், தன் சூட்கேசை எடுத்துக்கொண்டு தகவல் மேசையை நோக்கி நடந்தாள். அங்கு வட்டமடித்துவிட்டு மீண்டும் அவள் திரும்பி வருவதையும் கதவுகளுக்குப் பக்கத்தில் அதே இடத்தில் நிற்பதையும், பிறகு ஏதோ ராசியில்லை என்பதுபோல் காத்திருக்கும் இடத்தை அடுத்த பக்கத்துக்கு மாற்றுவதுமாக இருப்பதையும் கவனித்தான். அவளது அழகிய கண் இமைகள் இப்பொழுது பதற்றமான கோணத்தில் காத்திருந்தன. சித்ரவதைக்குள்ளான காத்திருப்பும், ஏறக்குறைய நம்பிக்கையற்ற எதிர்பார்ப்பும் அவற்றில் தெரிந்தன.

ஆனால், இன்னமும் ஒரு நம்பிக்கைக்கீற்று மீதம் உள்ளதாக அவன் நினைத்தான். சாதாரணமாக அதுதான் பலமான அம்சம். தனக்குக் கிடைத்தவற்றிலேயே உறுதியான எதார்த்தம் அதுவாகத்தான் இருக்கும் என உணர்ந்தான். அவளைக் கடந்து சென்றான். இப்பொழுது அவள் அவனைப் பார்த்தாள். பிறகு உடனடியாக அவனுக்கு அப்பால் பார்வையைச் செலுத்தினாள். லெக்கிங்டன் அவென்யூவைத் தாண்டியுள்ள வெற்றிடத்தை உற்றுப் பார்த்தபடி இருந்தாள். அவளது வட்டமான இளம் விழிகளில் நீர் கோர்ப்பதை அவன் அவதானித்தான். கைகளைப் பாக்கெட்டுகளில் விட்டபடி முகத்துக்கு நேராகப் பார்த்து அவளைக் கடந்து சென்றான். அவனை எரிச்சலுடன் அவள் பார்த்தாள். அவன் புன்னகை செய்தான். அவளது பார்வை அவனை நோக்கித் திரும்பியது. அதில் அதிர்ச்சியும் நம்பிக்கையின்மையும் நிறைந்திருந்தன. அவன் சிரித்துவிட்டான். அது அவன் உள்ளிருந்து சட்டென எழுந்த சிறு புன்னகை. ஆனால் அழுதுகூட இருக்கலாம் என நினைத்தான். மாறாக சிரித்திருக்கிறான், அவ்வளவுதான். அந்தப் பெண் என்ன நினைக்கிறாள் என்பது அவனுக்குத் தெரியும். அவனுக்கு அது துல்லியமாகத் தெரியும்.

“மன்னிக்கவும்” என்றான்.  அவள் வெறித்துப் பார்த்தாள். அவன்மீது செலுத்திய பார்வையில் புதிர்கலந்த வியப்பு இருந்தது. “மன்னிக்கவும்” என்று அவன் மீண்டும் சொல்லிவிட்டு திரும்பிநடக்க ஆரம்பித்தான். திரும்பிப் பார்த்தபோது, நம்பிக்கையிழந்த குழப்பத்தோடு ஏறக்குறைய பயத்தோடு அவள் அவனை உற்றுநோக்குவதைக் கவனித்தான். பிறகு அவள் வேறு எதையோ பார்த்தாள். திடீரெனத் தோன்றும் தலைகளைப் பார்க்க முன் காலால் எம்பி தலையை உயர்த்தி கண்களால் துழாவினாள். கடைசியாக அவளிடம் அவன் பார்த்தது அவளது ஜொலிக்கும் கண்கள். அவற்றில் உறுதியான ஆனால் அபத்தமான, தன்நிலையிழந்த நம்பிக்கை காணப்பட்டது. லெக்கிங்டன் அவென்யுவைத் தாண்டி நடந்தபோது அவன் அழுதுவிட்டான். இப்பொழுது அவனது கண்கள் சரியாக அந்தப் பெண்ணின் கண்கள் போன்றே இருந்தன என்பது அவனுக்குத் தெரியும். அதாவது, தளராத நம்பிக்கை நிறைந்து ஜொலிக்கும் கண்கள். தன் தலையைப் பெருமிதத்துடன் நிமிர்த்தினான். இன்று இரவு ரோசாலின்ட்டுக்கு எழுதவேண்டிய கடிதம் பாக்கி இருந்தது. அதை அவன் எழுதத் தொடங்கினான்.

பத்ரீசியா ஹை சுமித் (1921 - 1995) அமெரிக்காவில் பிறந்தாலும் வாழ்வின் பெரும் பகுதியை அய்ரோப்பாவில் கழித்த பெண் எழுத்தாளர். அவர் அதிகமாக மர்மம் கலந்த புதினங்களையும் கதைகளையும் எழுதியவர். உளவியல் ரீதியான பதற்றம், குற்றமனம், மனோநிலைகள் எனப் பல்வேறு அம்சங்களை அவரது புனைவுகளில் உணரலாம். Poised to Fly (1970) என்னும் இக்கதை, அவரது Eleven (1994) என்ற கதைத் தொகுப்பில் உள்ளது.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer