ஒவியர் குறிப்பு : ஃப்ரான்சிஸ் நியூட்டன் சௌசா

Francis Newton Souza

பகிரு

Fn Souza 1

எஃப் என் சௌசா 1924-இல் கோவா, சாலிகௌவில் பிறந்தார். இளம்வயதில் தந்தையை இழந்த இவர், சின்னம்மையின் கோரப்பிடியிலிருந்து வாழ்வைப் போராடிப் பெற்றவர், அது முதல் எந்தவொரு மரபையும், வழக்கத்தையும் தேமே என்று பின் பற்றாமல், சுயாதீனமாக, தனக்கான ஒரு வழியில் வாழத்  தொடங்கினார்.

மும்பை சர் ஜே ஜே கலைக்கல்லூரியில் பயின்று வந்தபோது, இந்திய விடுதலை போராட்டங்களில் கலந்துகொண்டதற்காக, கல்லூரியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.

1947-இல் எஸ்.எச்.ரஜா (SH Raza), எம்.எப்.ஹுசைன் (MF Hussain), கே.எச். ஆரா (KH Ara) ஆகியோருடன் இணைந்து முற்போக்கு கலைஞர்கள் PAG (Progressive Artists Group) எனும் குழுவினைத் தொடங்கினார்.

(இதனை முன்வைத்து இவர்கள் வழி வந்த பல படைப்புகள் குறித்து, மணல்வீட்டின் சென்ற இதழில் இந்திய நவீனத்துவத்தின் அக்கினிக்குஞ்சுகள் எனும் கட்டுரை வந்துள்ளது.)

அதீதக் காட்டம் கொண்ட ஓவியங்களை மென்மேலும் உசுப்பிவிடும் வகையில், தலைப்புகளையும், அடிக்குறிப்புகளையும், கூர்மையாகப் பயன்படுத்தும் தெளிவுகொண்ட ஞானியாவார் சௌசா. எந்தவொரு வரையறையுமில்லா சௌசாவின் பாணி, காண்போரின் சிந்தனையைத்  தூண்டி, மனதில் ஆழமாகப் பதிவன. அவரது தொகுப்புகளில் வழக்கமாக வலம் வரும் பாணிகள், சாயல்கள் எனப் பல உள்ளன.

உறைநிலையிலுள்ள வாழ்வின் நொடிகள், நிர்வாணநிலை, நிலப்பரப்புகள், கிருத்துவ சின்னங்கள் என யாவும் பெரும் மன பிரளயத்தின் சிக்கி உருக்குலைந்த  சிதிலமடைந்த  தன்மையில்  காணமுடியும்.

வழமையாய் போன அலுப்பூட்டும் பொது மரபு களையும், அற்பமான அன்றாட வாழ்கையையும், மறுதலிப்பதும் சாடுவதுமே சௌசாவின் ஓவியங்களின்  முக்கிய  பண்பாக  காணமுடிகிறது.

சௌசாவின் கலைத்திறனும் படைப்புத்தளமும் பல்வேறு கலை பள்ளிகளின் சாராம்சங்களைச் சார்ந்து வருகின்றன. பூர்வீக கோவாவின் நாட்டார் கலை வடிவங்கள், மறுமலர்ச்சி கால ஓவியக் கலை பண்பாடு, கத்தோலிக்க தேவாலய கிருத்துவ மத அபிமானம் மேலும் பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஐரோப்பிய நிலவெளி பிரதேசங்கள் மற்றும் நவீனத்துவ ஓவியக்கலையின் புதிய முன் னெடுப்புகள் என அவரது ஓவியங்களின் சாராம்சம் நீள்கிறது. குறிப்பாக, குழப்படிகளுக்கு பஞ்சமில்லாத ஆண் பெண் உறவுகளில், அவர்தம் பாலுறவில் தோன்றும் மனக்கசப்புகள், உராய்வுகள் ஆகியவற்றை சௌசாவின் ஓவியங்களில் காணலாம்.

46 Wrappers

அளவாகவே கோடுகளை பயன்படுத்தினாலும், வடிவங்களும், உருவங்களும் நேர்த்தியாகவும் சமரசமாகவும் இருக்கும் மேலும் சௌசாவின் உருவங்கள்குறுக்கும் நெடுக்குமாய் பின்னியுள்ள கோடு களிலேயேக் காணப்படும்.

1949இல் லண்டன் சென்ற சௌசா அங்கு தனக்கென்றொரு அடையாளத்தை உருவாக்கத் தொடங்கினார். ஒரு வருடத்திலேயே, தனது படைப்புகளை தனியரங்கில் காட்சிபடுத்திவிட்டார் மேலும் அவரது சுயவரலாற்று கட்டுரை ‘புழுவின் நிர்வாண நிலை’ யினை (Nirvana of a Maggot) வெளியிட்டார்.

1967இல் நியூயார்க் சென்று குகென்ஹெய்மர் சர்வதேச விருதினை வாங்கிய பின்பு அங்கேயே குடிபுகுந்தார். உலகளாவிய மிகவும் பிரசித்திப்

பெற்ற அரங்கங்களில் அவரது ஓவியங்கள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கின்றன.

லண்டன் டேட் கேலரி, புது தில்லி நவீன ஓவியங்களின் தேசிய அரங்கம், பாரீஸ் க்ரூஸ் கேலரி ஆகியவற்றில் இவரது ஓவியங்கள் காட்சிபடுத்தப் பட்டிருக்கின்றன.

சௌசா 2002 மார்ச் மாதம் காலமானார்.

இவரது படைப்புகள் கொண்ட அரங்கங்கள்,
  • Gallery Creuze, Paris, 1954;
  • Arts 38, London, 1975 & 1976,
  • Bose Pacia Modern, New York, 1998
  • Francis Newton Souza Rare Works: 1965-2001,,
  • Galerie 88 Kolkata.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer