ஒற்றைக்கை இயந்திரம்
(தங்க நகைப் பாதை என்னும் வெளியாகவுள்ள நாவலின் ஓர் அத்தியாயம்)

புதிய நாவல் 

இன்னும் விடிய நிறைய நேரமிருந்தது. சுந்தரம் கையைத் தலைக்குக் கீழ் வைத்துக் கட்டிலில் ஒருக்களித்துப்படுத்திருந்தார். அப்போது அவரை நோக்கி ராட்சத மிருகத்தைப்போல் புல்டோசர் உருண்டு வந்தது. வீட்டுப்படிகளை சக்கரத்தால் பற்றியபடி சாதாரணமாக ஏறியது. தெருக்கதவைத் திறந்துகொண்டு நீண்ட தாழ்வாரத்தில் நுழைந்தது. திரும்பி அவர் படுத்திருந்த அறைக்குள் புகுந்தது. கட்டிலை நெருங்கியதும் தயங்கியது. ஒற்றைக் கையை நீட்டி அவரை லேசாக முகர்ந்தது. மேலே கிடந்த போர்வையை இழுத்துத் தள்ளியது. அவர் உடலுக்குக் கீழே கையை விட்டுத் தூக்க முயன்றது. இரும்புக் கரம் சில்லெனப்படவும் திடுக்கிட்டு விழித்தார். கண்களைக் கசக்கிக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தார்.

எதிரில் உயர நின்றிருந்த புல்டோசரைக் காணவில்லை. ஒரு கணத்தில் மாயமாகியிருந்தது. மேலே நீண்ட பரணும், அடுக்கிய தகரப் பெட்டிகளும், குறுக்கேயுள்ள கொடித்துணிகளும் கறுத்துத் தெரியும் இருட்டான அறை. மூலையில் ஆள் நின்றிருப்பபதைப்போன்ற அலமாரி. கருந்துளை போன்ற மாடம். உயரத்தில் ஜன்னல் மட்டும் செவ்வகமாக வெளிர்ந்திருந்தது. தான் வீட்டுக்குள்தான் படுத்துக்கொண்டிருக்கிறோம் என்று புரிந்தது. வழக்கம்போல் அதிகாலையில் எழுந்து கொல்லைக்குப் போகவேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.

மீண்டும் உறங்க முயன்றார். நேற்றுதான் சுந்தரம் புல்டோசரைக் கண்டிருந்தார். அதைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் நேரில் பார்த்தது முதன்முறை. நேற்றைய செய்தித்தாளில் நாலு வழிச்சாலை போடுகிற அறிவிப்பைப் படித்திருந்தார். எந்த முக்கியத்துவமுமில்லாமல் வெளியிடப்பட்ட அரசு விளம்பரம். நீண்ட நாட்களுக்கு முன்பு அவருக்குப் பதிவுத் தபாலிலும் அறிவிப்பு கிடைத்திருந்தது. அவர் கொல்லைக்கு எதிரில் ஓடும் தேசிய நெடுஞ்சாலை அகலமாக்கப்படப் போகிறது. அவருக்குச் சொந்தமான நிலம் தேவைப்படுமளவு அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்படும். யாரும் மறுப்பு தெரிவிக்கக் கூடாது. முதலில் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவுமிருந்தது. அவருடைய கொல்லையின் ஒரு பகுதி பறிக்கப்படுவதைக் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அம்மா சுயமாகச் சம்பாதித்து வாங்கியது. அத்தாட்சியாக கரும் கடுக்காய் மசியில் கிறுக்கலாக எழுதிய பத்திரக் காகிதங்கள் பெட்டியில் பத்திரமாயிருக்கின்றன. அவர் நிலத்துக்குத் தொடர்ந்து தீர்வைக் கட்டியும் வருகிறார். அதை அபகரிக்க அரசாங்கத்துக்கு உரிமையில்லை. நேற்று மத்தியானம் வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு, வேலையாள் பெரிய முருகனுக்கும் அலுமனியத் தூக்கில் மனைவி பொன்னம்மா போட்டுத் தந்த சாப்பாட்டை எடுத்துக்கொண்டு கொல்லைக்குப் புறப்பட்டார். வழியில் மளிகைக்கடைத் திண்ணையில் செய்தித்தாள் கேட்பாரற்றுக் கிடந்தது. அதை முழுக்கப் படித்த பாவனையில் கோவிந்து சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் ஆமோதிக்கும் நாராயணன். தூரத்தில் சுப்புராயன் அமைதியாயிருந்தார். சுந்தரம் தூக்கை வைத்துவிட்டு நின்று செய்தித்தாளைப் பிரித்தார். அப்போதுதான் சாலை விரிவாக்கத் திட்ட அறிவிப்பு கண்ணில்பட்டது. முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துகளில், நடந்த பனிமலைப் போரைப் பற்றிய செய்தி. சிகரத்தின் உச்சியிலுள்ள சிறிய கூடாரமொன்றின் மங்கிய புகைப்படம். கீழே நம் படையினரின் வீர தீர சாகங்களைப் பற்றிய கதை. மற்ற பக்கங்களில் வழக்கமான கற்பழிப்பு, கொலை, கொள்ளைகள். நான்காம் பக்கமும் ஐந்தாம் பக்கம் பாதியும் முழுக்க உரிமையாளர்கள் பேரும், ஊரும், நில அளவுகளும் குறிப்பிடப்பட்டிருந்தன. சுலபமாகப் படிக்க முடியாதவாறு சிறிய எழுத்துகளிலான அச்சு. சுந்தரம் நான்காவது பாரம் தேர்ந்த கல்வியால் ஆங்கிலத்தை வாசித்தார். ஆயிரக்கணக்கான பெயர்களில் தன்னுடையதைத் தேடிக் கண்டுபிடித்தார். பேரும், பறி போகும் இடமும், சர்வே எண்ணும் சரியாயிருந்தன. செய்தித்தாளில் தன் பெயர் அச்சில் வருவது ஒருவகையில் பெருமை. இன்னும் வரிசையாக பெயர்கள், நிலங்கள். சில கொல்லைகளின் இழப்பு வெறும் ஓரிரு அடிகள்தான். வேறு சில கொல்லைகள் முழுவதுமாகப் பறிபோயிருந்தன. சுந்தரத்தால் தாங்க முடியவில்லை. இந்தச் சாலை பலருக்குச் சொந்தமான நிலத்தின் மீது போடப்படப்போகிறது. கீழே புதையப் போவது வெறும் மண்ணல்ல, உயிர். அவற்றை நம்பித்தான் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

சுந்தரம் திண்ணையில் உட்கார்ந்து மறுபடியும் அறிவிப்பை ஆழ்ந்து படித்தார். கோவிந்தும் நாராயணனும் திரும்பியும் பார்க்கவில்லை. கடைக்காரர் ராமு, விற்பனைப் பெட்டிகளில் புழுங்கல், பச்சரிசி, கேழ்வரகுகளைப் பொழுதுபோக குவித்துக்கொண்டிருந்தார். அவர்களுக்கு நெடுஞ்சாலை ஓரக்கொல்லைகள் கிடையாது. உள்ளூரில் நிலங்கள் பாதுகாப்பாயிருக்கின்றன. சுப்புராயனுக்குச் சொந்தமாக நிலமும் வீடுமில்லை. சுந்தரம் வசீகரமானத் தலைப்பை வாய்விட்டுப் படித்தார்.

“தங்க நாற்கர சாலைத் திட்ட அறிவிப்பு”

கோவிந்து தன் கனத்த தொண்டையில் அபிப்ராயம் தெரிவித்தார்.

“அதெல்லாம் நம்புற மாதிரி இல்ல. அவ்ளோ பெரிய ரோட்ட தங்கத்தால போடவே முடியாது. ரொம்ப செலவாவும்.”

நாராயணன் சிரித்தார்.

“அதுக்கெல்லாம் கணக்குப் பாக்க மாட்டாங்க. பணக்காரங்க எதையும் செய்வாங்க. ரோடு பல்லக்குல போய் வர மாதிரியிருக்கணும்.”

கோவிந்தும் சிரித்துக்கொண்டார்.

“நாலு வழி போடறதெல்லா நடக்காது. அதுக்கு ரொம்ப எடம் வேணும். இங்க கொஞ்சமும் கெடைக்காது.”

நாராயணன் “அதான் நெறைய கொல்லைங்க கெடக்குதே. எல்லாத்து மேலயும் ரோடு போடலாமுன்னு விதி. அதுக்கு ஒருவெலை தருவாங்க.”

“ரோடெல்லா சீக்கிரம் வராதுண்ணா. சும்மா பயமுறுத்தல்” என்றார் ராமு ஆறுதலாக. சுந்தரத்துக்கு நேரமானதால் சாப்பாட்டுத் தூக்குடன் எழுந்தார்.

“வேற வழியில்ல. ஊரு பேரோட தெளிவா போட்டிருக்கு. உடனே கொல்லையக் காலி பண்ணனும்” என்று சொல்லியவாறு கொல்லைக்கு நடந்தார். இரண்டு மூன்று தெருக்களைக் கடந்து ஆற்றில் இறங்கினார். ஆறு பாலைவனம்போல் வறண்டிருந்தது. உச்சி வேளையில் ஆட்களில்லாமல் கானல் ஓடிக்கொண்டிருந்தது. அங்கங்கே சோலைகள் போல் பசுமையான நாணல்கள், முட்புதர்கள். சில கிழிந்த துணிகள் மாட்டி தத்தளித்துக்கொண்டிருந்தன. எண்ணற்ற காலடிச் சுவடுகளாலான மணல் வெளி. அந்த ஆற்றுக்கு பெயர் வரக் காரணமான மணல் பாலைப்போல் வெண்மையாயிருந்தது. சிறு சங்குகளும் நத்தை ஓடுகளும் கலந்திருந்தன. ஆற்றில் எப்போதோ உருவான நீரோட்டத் தடங்கள் இன்னும் மறையாமல் வளைந்து நெளிந்து சென்றன. ஓரங்களில் காய்ந்த பாசிப் படிவங்கள் நீண்டிருந்தன. மணல் நெருப்புக் குழம்பாக தகித்தது. செருப்பு இல்லாமல் நடக்க முடியாது, சுருண்டு விழவேண்டியதுதான்.

அப்படி இறந்தவர்களைப் பற்றி சுந்தரம் இளம் வயதில் கேட்டிருக்கிறார். தூரத்தில் ஆட்கள் படுத்திருப்பதைபோல் பிணங்கள் புதையுண்ட மேடுகள் கிடந்தன. மேலே காய்ந்த மாலைகள். ஓரத்தில் ஒரு மேடு, வாடாத மாலைகளுடன், உடைந்த சட்டியுடன் புதிதாயிருந்தது. தொலைவில் ஓவியம்போல் நீலமான ஏலகிரி மலை அசையாதிருந்தது. கத்தரித்தவைபோல் விளிம்புகள் அடிவானில் கோடிட்டிருந்தன. அடுத்து தென்னைகளின் பசுங்கரை. கீழே அவர் கொல்லை நெருங்குவதைப்போல் தெரிந்தது. அவர் நடக்கையில் விலகிச் சென்றது. ஆற்றில் ஓடிக் கலக்கும் கானாற்றின் வழியாகச் சென்றார். வழியில் ஜேம்சின் குத்தகைக் கொல்லை எதிரில் வண்டியும் மாடும் தனித்திருந்தன. மாமர நிழலை மாடு சாவகாசமாக அசையிட்டுக் கொண்டிருந்தது. கானாற்றிலிருந்து குறுக்கு வழியாக கொல்லைக்குப் பின்பக்க வரப்பில் ஏறினார். வழக்கமாக கொல்லைக்குப் பின்னால் மறைந்திருக்கும் பெரிய முருகன் இல்லை. வயல்களின் தாள்களும் களைச் செடிகளின் இலைகளும் கரும்புத் தோகைகளும் உரச எதிரிலிருந்த சிறிய மோட்டார் கட்டடத்தை அடைந்தார்.

பெரிய முருகன் களத்து மூலையில் புன்னை மரத்தடியில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தார். கோயிலுக்கு நேர்ந்திருந்த புதர்த் தலை மயிரைக் கை அலைந்தது. மறு கை, குச்சியால் மண்ணில் கோடுகளை இழுத்தது. அவரும் சாலை அகலமாக்கப் படுவதற்கு விசனப்படலாம். அதைப் பற்றி உலவும் நிறைய கதைகளைக் கேட்டிருக்கலாம். சுந்தரத்தின் வருகையை உணர்ந்து சட்டென எழுந்தார். தூக்கை வாங்கிக் கொண்டு தயங்கினார்.

“இந்த ரோடு போட புதுசா ஒண்ணு வந்திருக்காம். அதுக்கு உசிரு கூட இருக்குதாம். தானா எல்லாம் செய்யுதாம்.”

அதைக் காண பெரிய முருகன் அபூர்வமாக ஆசைப்பட்டாற் போலிருந்தது. அவருக்குத் தம்பி சின்ன முருகன் சொல்லியிருக்கலாம். அவன் தோல் தொழிற்சாலை வேலைக்குப் போகாமல் ஏமாற்றிப் பார்த்துவிட்டு வந்திருப்பான். அவரும் உடனே போக விரும்பினார்.

“நேரிலப் போயி என்னன்னு பாக்கலாம்,வா.”

“கொல்லைய எப்படி விட்டுவர்றது? நீ போயி வாண்ணா” என்றுபெரிய முருகன் நெளிந்தார். தலை மயிரைச் சொறிந்தவாறு பக்கத்திலிலுள்ள தன் வீட்டுக்குச் சாப்பாட்டுடன் சென்றார். அவர் இயந்திரத்தால் குழம்பியிருக்கிறார் எனத் தெரிந்தது. சுந்தரத்துக்குச் சாலை வேலைகளுடன் மனித இயந்திரத்தையும் காணும் ஆவல். கொல்லை மேட்டைக் கடந்து நெடுஞ்சாலைக்குச் சென்றார். தூரத்தில் நகரப்பேருந்து சாய்வாக வந்தது. அவர் கை காட்டினார். நிறுத்தமில்லையென்றாலும் பேருந்து அவரை ஏற்றிக்கொண்டது.

உள்ளே கூட்டமாகத் திருவிழாவுக்குச் செல்லும் மனோபாவத்தில் கூச்சலும் கொண்டாட்டமாயிருந்தார்கள். மேலும் நிறைய பேர் ஏறிக்கொண்டிருந்தார்கள். பேருந்து நிலையத்தை அடைந்தது. அங்கிருந்து மற்றொரு பேருந்து. அதிலும் பெருங்கூட்டம் நெரிந்தது. முதல் நிறுத்தம் ரவுண்டானாவில் நின்றதும் பேருந்து பாதி காலியானது. அங்கு நான்கு பக்கம் சாலைகள் சிக்கலாகச் சந்திக்கின்றன. மேலும் பெரிதாக்கும் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. சுற்றிலும் ஆட்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். சுந்தரம் இறங்கி வீடுகளையும் கடைகளையும் இடித்துக் குவித்திருந்த சிதைவுகளின் மேல் ஏறி நின்றார். அங்கிருந்து அனைத்து இடங்களும் தெளிவாகத் தெரிந்தன.

சாலை சந்திப்பு பெரிய சர்க்கஸ் மைதானம் போலிருந்தது. நடுவில் பெரிய இயந்திரம் குனிந்து மண்ணைக் கிளறிக்கொண்டிருந்தது. நன்கு வளர்ந்த கொம்பன் யானைபோல் தோன்றியது. கால்களுக்குப் பதிலாக பருத்த சக்கரங்கள். சிறிய கண்ணைப் போன்ற காபினில் ஓட்டுநர் பையன் இயக்கிக்கொண்டிருந்தான். தும்பிக்கை எதற்கோ கான்கிரீட் இடிபாடுகளில் நுழைந்து துழாவியது. கூழாங்கல் போல் தேய்ந்த சிறிய கல்லை எடுத்துப் பார்த்து கீழே போட்டது. தன்னைவிட பல மடங்கு எடை கொண்ட பாறையைச் சுலபத்தில் தூக்கி ஓரத்தில் கிடத்தியது. நீரைக் கூட உறிஞ்சிக் குடிக்கும் என்று பட்டது. அதுதான் இரும்புகளினாலான நீண்ட கையும் வாலுமுள்ள புல்டோசர் என்று தெரிந்து கொண்டார். அவருக்கு முதலில் இனம் புரியாத பயமேற்பட்டது. அபார திறனைக் கண்டு வியப்பாய் இருந்தது. அந்த இயந்திரம் அரசாங்கத்தின் பரு வடிவம். தூரத்தில் நின்றபடி அதிகாரிகளும் ஊழியர்களும் அதை மேற்பார்வையிட்டுக்கொண்டிருந்தார்கள். மக்கள் தந்த மனுக்கள் அனைத்தையும் வாங்கி வைத்துக்கொண்டிருந்தார்கள். கூட்டம் கண்டு களித்துக்கொண்டிருந்தது. நீண்ட நேரம் நின்றிருந்த பார்வையாளர்கள் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் தம்மையறியாது அழுதார்கள். ஒருவர் வாய்விட்டு தனக்குத்தானே சொல்லிக்கொண்டிருந்தார். சுந்தரத்தின் காதில் வார்த்தைகள் தெளிவாக விழுந்தன.

“அதோ அந்த மூலையில இருக்க சின்ன எடம் எங்களது. எதிர்ப்பக்கம் திண்ணை, அப்புறமா வாசல், பின்னால அடுப்பங்கரை. இங்க நா பொறந்தேன், எம் மகன் பொறந்தான். அவனுக்குப் புள்ளைங்க இங்கதான் பொறப்பாங்கன்னு நம்பினே. ஆனா ஒரு நாளில் எல்லாத்தையும் அழிச்சாங்க. கண்ணெதிரில வீடு காணாம போச்சு. கண்டுபிடிக்க முடியாத மாதிரி கனமா ரோடு போடுவாங்க. எனக்குக் கொஞ்சம் நஷ்டஈடு வரும். அத வச்சு ஒண்ணும் பண்ண முடியாது. பழைய வாழ்க்கைய வாங்க முடியுமா? இது வாழ்ந்து வளந்த எடம். இங்கதான் தாத்தா, பாட்டி, அப்பா ஆவிங்க அலையுது. அதனால தெனம் தேடி வர்றேன். எங்குடிசைய இடிச்ச புல்டோசரு நாசமாப் போவணும்.”

அவர் குனிந்து மண்ணை அள்ளித் தூற்றினார். அவரை மற்றவர்கள் வினோதமாகப் பார்த்தார்கள். புழுதி காற்றில் கலந்தது. புல்டோசர் மேல் துளியும் படவில்லை. இன்னொருவர் பக்கத்திலிருந்தவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். புல்டோசர் மீது வைத்த கண்ணை எடுக்காமல் மற்றவர் அரைகுறையாகக் கேட்டார். அது சென்ற பக்கமெல்லாம் பார்வை தொடர்ந்தது.

“முன்ன வழி முழுக்க குட்டிக் கோயிலுங்க மொளைச்சிருக்கும். எல்லாம் சின்னச் சாமிங்க. அவங்கவங்க விருப்பத்துக்குக் கட்டினது. வெறும் கல்லு கூடயிருக்கும். மூதாதைங்க ஆயுதங்க. முக்கிய வேலையாப் போறப்ப கும்பிட்டுக்கிட்டே போவலாம். வேலை நல்லா முடியும்ன்ற நம்பிக்க வரும். திரும்பி வர்றப்ப அதுங்க தொணை. இப்ப ரெண்டு பக்கத்தையும் தொடைச்சிட்டாங்க. முகங்கள அழிச்ச மாதிரி வெறும வந்தாச்சு. எந்த ஊருன்னு கண்டுபிடிக்க முடியல. நமக்குத் தெரியாம வேற ஊரில போயி எறங்குறோம். அங்க நின்னு தெகைச்சுத் திரும்பறோம். நாம அடையாளம் இல்லாம போயிட்டிருக்கோம்.”

அவர் மிகவும் படித்தவரைப் போலிருந்தார். கண்களில் கனத்த கண்ணாடி. பிறகு சகா ஆரம்பித்தார். அப்போதும் புல்டோசரால் ஈர்க்கப்பட்டுப் பார்த்தவாறிருந்தார்.

“பெரிய கோயில இடிக்க எல்லாருக்கும் பயம். ஏன்னா, பெரிய தெய்வங்களுக்கு எப்பவும் மதிப்பு. பெரியவங்க பணம் போட்டு கோயிலுக்குன்னு இருக்க விதிங்கபடி கட்டினது. மூணு வேள பூஜை, மந்திரம் உண்டு. அத இடிச்சா தெய்வ குத்தம்னு சொல்வாங்க. புள்ள குட்டிக்காரங்க யாரும் இடிக்க வர மாட்டாங்க. அதனால சின்ன பையன்தான் புல்டோசர ஓட்டுவான். அவனுக்கு இது விளையாட்டு. எவ்வளவு பெரிய கோயிலுன்னாலும் பையன் இஞ்சின முடுக்குவான். இரும்புக் கை போயி கோயிலக் கும்பிடும். மண்டபத்துக்குள்ள நுழைஞ்சி மூலஸ்தானத்த வணங்கும். அங்க தாங்கி நிக்கற முக்கியக் கம்பத்த தொடும். அப்பிடியும் விழாட்டி பிடிச்சு அசைக்கும். கோயில் பொலபொலன்னு உதிரும். எந்திரம் சம்பந்தமில்லாத மாதிரி கையை உருவிக்கும்.”

அதைக் கேட்டு பக்கத்திலிருந்தவரால் பொறுக்க முடியவில்லை.

“இந்த ரோட்டுல ஒரு நா விடாம போறேன். எங்குல தெய்வக் கோயிலு வழியில நிக்குது. நாலு வழிங்க போட்டா முழுசா அழியும். அதக் காப்பாத்த வெளியூர் விஞ்ஞானிங்க வந்தாங்க. அவங்க அப்படியே பேத்து பின்னால தள்ளினாங்க. முதல்ல கோயில் அடித்தளத்த ஆழமாத் தோண்டினாங்க. அப்புறமா அங்குல அங்குலமா பெரிய உருளைங்களால நகத்தினாங்க. மேல கோயிலுக்கு எதுவுமாகல. முடிக்க ஒரு வருஷமாச்சு. நா தெனம் கோயில்ல சூடமேத்திப் பாத்துக் கும்புட்டு வீடு திரும்புவே. கொஞ்ச தூரத்துல மாதா கோயிலிருந்துச்சு. அவங்க ரெண்டு வழிங்க போதும்னு கோர்ட்டுல வழக்குப் போட்டாங்க. முதல்ல தடையாணை கிடைச்சது. கடேசில தீர்ப்பு வந்து இடிச்சுட்டாங்க. அத இன்னும் கட்ட ஆரம்பிக்கல.”

அவர் சட்டைப்பை நிறைய கணக்குச் சீட்டுகளோடு வெற்றிகரமான வியாபாரியைப்போல் தெரிந்தார். வேலையை விட்டுவிட்டு ஆர்வத்தால் தொலைவிலிருந்து சாலை வேலைகளைக் காண வந்திருக்கிறார். தலைகள் மறைக்கவும் சுந்தரம் வேறொரு பக்கமாகச் சென்றார். அங்கிருந்து புல்டோசர் தெளிவாகத் தெரிந்தது. அது திரும்பி நீண்ட வணிக வளாகத்தை மெதுவாக உடைத்துக்கொண்டிருந்தது. கட்டடங்களின் சன்னல்கள், கதவுகள் முன்பே பெயர்க்கப்பட்டு மூளியாக நின்றிருந்தன. மக்கள் ஒவ்வொரு பகுதி கடை சரிகையிலும் ஆரவராத்தோடு ரசித்தார்கள். அந்தச் சத்தங்களை மீறி ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார். நெற்றியில் பட்டையாகத் திருநீறு, குங்குமம். குரல் அசரீரி போல் கேட்டது.

“எங்க ஊருல ரோட்டோரம் பெரிய புத்திருக்குது. அது எந்தக் காலத்ததுன்னு தெரியாது. எங்க பாட்டன், முப்பாட்டன் சொல்லியிருக்காங்க. அதுல வயசான ராஜநாகம் குடியிருக்குது. தலையில வெலை மதிப்பில்லாத மாணிக்கக் கல்ல வச்சிருக்குது. அது சக்தி வாய்ந்த தெய்வம், அத அழிக்க நெனைச்சவங்க அழிவாங்க. அதுக்கு கட்டியிருந்த கோயில இடிச்சு ரோட பெரிசா போட வந்தாங்க. புல்டோசர ஓட்டி வந்தவன் சீட்டுலயே ரத்தம் கக்கிச் செத்தான். உத்தரவு போட்ட அதிகாரி, இஞ்சினியரு, சர்வேயரு எல்லாம் ஆக்சிடெண்டுல மாண்டாங்க. காண்டிராக்டர் பைத்தியமாயிட்டாரு. கடைசில மேலிடத்துல ஒத்துகிட்டாங்க. அங்க ஐவேஸ் வளைஞ்சிப் போவுது. புத்துக்கோயிலு மட்டும் நடுவுல தனியா நிக்குது. நாளுக்கு நாளு பக்தருங்க அதிகமா வாராங்க. அத ஒண்ணும் பண்ண முடியாது.”

அவர் சன்னதம் வந்தவரைப் போலிருந்தார். கோயில் திசை நோக்கி வணங்கினார். சுந்தரம் நம்பவும் நம்பாதிருக்கவும் முடியாது திகைத்தார். நிறையக் கதைகளைக் கேட்டு சுந்தரம் உத்வேகமுற்றார். கதை சொல்லில் பங்கேற்கும் விருப்பம் மிகுந்தது. மனதில் புதைந்தவற்றைத் தன்னையறியாது வெளிப்படுத்தினார். அனைவரும் ஆவலுடன் கேட்டார்கள்.

“எங் கொல்லை அம்மா முந்திய விரிச்சி வாங்கினது. அப்பா, அம்மா வடக்கேயிருந்து வந்தவங்க. அங்கதான் நம்ம ஆத்தின் மூலமிருக்குது. இங்க ஓடி வருது. இருந்தும் அது வறண்ட பூமி. வெத்தலை, கேவுருதான் வெளையும். அங்க பெரிய பஞ்சம் வந்ததாம். மண்ண விழுங்கி சனங்க உயிர் வாழ்ந்திருக்காங்க. அவங்களுக்கு யாரும் உதவல. எல்லாரும் குடும்பம் குடும்பமா தோணின எடங்களுக்கு பொழைக்கப் போயிருக்காங்க… கடைசியா எங்க அப்பா, அம்மாவோட லட்சுமின்ற பசு மாட்டோடு ஆத்து வழியாவே நடந்திருக்கார். எங்க போறதுன்னு தெரியாது. இங்க வந்து கரையேறியிருக்காங்க. ஊரு பச்சையா கண்ணுலபட்டிருக்குது. கொஞ்ச நாளில அப்பா செத்துட்டார். அவருக்கு நோயி, ஏக்கம் ஏதோ ஒண்ணு… லட்சுமியும் செத்திருக்குது. என் அம்மா தோச, பணியாரம் சுட்டு வித்து வாழ்ந்திருக்கா. பெரிய பண்ணைக்காரங்க ரெட்ட மாடு கட்டிக்கிட்டு தின்ன வருவாங்களாம். பொன்ன, பொருளப் பரிசாத் தந்திருக்காங்க. அம்மாவுக்கு இளம் வயசு. நல்ல வளப்பமாயிருப்பாளாம். பக்கத்துவீட்டுப் பெருமாள் மந்திரி கிட்ட பேரம் பேசி வாங்கியிருக்கா. அவரும் கொறைஞ்ச வெலைக்கு நெலத்தப் பொழைக்கத் தந்திருக்காரு. அப்ப ஆடு, மாடுங்கதா பெரியசெல்வம். நெலங்க புல்லு மொளைச்சு சும்மா கிடக்குமாம். அந்தக் கொல்லதான் எனது. அம்பது, அறுபது வருசமா ஆண்டுகிட்டு வர்றது. இப்ப அதப்போயி புடுங்க வர்றாங்க.”

அவரது வேதனை தீர்ந்தது போல் இருந்தது. அவருக்கு யாரும் பதிலளிக்காமல் மௌனம் காத்தார்கள். தூரத்தில் தனியாக ஒருவர் நீண்ட நேரம் கண்களை மூடி அழுதுகொண்டிருந்தார். தலையில் தொப்பியும் மார்பில் தொங்கும் நீண்ட தாடியும். கைகள் இறைஞ்சுவதைப்போல் உயர்ந்திருந்தன. சுந்தரம் அங்கிருந்து நகர்ந்து அவரை நெருங்கி நின்றார்.

“அழாதிங்க. கடவுள் வேற நல்ல எடம் தருவாரு. அத ஏத்துக்குங்க” என்றார்.

இசுலாமியரின் உதடுகள் எதையோ முணுமுணுத்தன. அவர்களுடைய வேத பாடமாயிருக்கலாம். இயந்திர சத்தத்தில் சரிவரக் கேட்கவில்லை. கடைசியாகக் கண்கள் திறந்தன.

“நாங்க ரோடோரம் காவாக் கரைப் பள்ளத்துல குடியிருக்கோம். அதுக்கும் முன்னால ஆத்தோரம் இருந்தோம். அங்க வெள்ளம் வருதுன்னு தொரத்தினாங்க. பின்னால சந்த மூலையில. அங்க கடைங்க கட்டிட்டாங்க. கடைசியா இங்க வந்தோம். காவாயில ஒரு நாளும் தண்ணி வந்து பாத்துதில்ல. சாக்கடதா வத்தாம ஓடும். நாங்க ஒண்ணுக்கொண்ணு அண்ணந் தம்பி, பெரிப்பா, சித்தப்பா மொறை. மொத்தமா வரிசயா குடிசைங்க போட்டோம். சின்னதா தகரத்துலயும், ஓலையாலயும். அத வந்து இடிச்சாங்க. வெறுங்கையால பிரிச்சுப்போட்டிருக்கலாம். புல்டோசர வுட்டு அழிச்சாங்க. அதும் சக்கரங்க ஓடுறப்பவே ரெண்டு மூணு குடிசங்க பாழாப்போச்சு. மீதிய தூக்கி வாரிப் போட்டாங்க. இங்கிருந்து நாங்க மலைக்கிப் போவணுமாம். அங்கியும் ஒரு நாளைக்கு வருவாங்க.”

அவர் புத்தி பேதலித்தவரைப்போலிருந்தார். ஆறுதல் கூற முடியாதெனப்பட்டது. அங்கிருந்து சுந்தரம் பழைய சாலைக்கு நடந்தார். அவருக்குத் தலை சுற்றி வாந்தி வரும் போலிருந்தது. தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த பேருந்துகள் ஒன்றில் ஏறினார். சுந்தரம் கொல்லைக்குத் திரும்பினார். பெரிய முருகனை ஆளைக் காணவில்லை. எங்காவது தென்னை மரத்துக்குப் பின்னால் உட்கார்ந்திருப்பார். சிறிய மின்சாரக் கட்டடத்தின் சாய்ப்பில் செருகியிருந்த தபால் உறையைத் தேடினார். முதலில் கையெழுத்திட்டு வாங்கி நீண்ட நாட்களாகியும். பிரிக்காமல் வைத்திருந்தார். தொலை தூரத்தில் சாலை வேலை நடைபெறுவதைக் கேள்விப்பட்ட பிறகுதான் தபால் முத்திரைகள் நிறைந்த கடித உறையைக் கிழித்தார். உள்ளே கற்றை கற்றையாகக் காகிதங்கள். பொடிப்பொடி எழுத்துகளில் நிறைய பக்கங்களுள்ள அறிவிப்புக் கடிதம். அதில் நீண்ட நேரமாக தன் பெயரைத் தேடினார். கூடவே அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் பெயர்களும் சேர்ந்து கண்ணில்பட்டன. கடிதத்தை உறையிலிட்டு பழையபடி ஓலைக் கூரையில் நுழைத்திருந்தார். இப்போது சுந்தரம் மீண்டும் அதை எடுத்துப் படித்தார். செய்தித்தாளில் வெளியான அதே அறிவிப்பு.

அவரை அச்சம் பீடித்தது. இன்னும் சில நாட்களில் கொல்லை பறி போகப்போகிறது. அவருக்குத் தலை சுற்றி மயக்கம் வரும்போலிருந்தது. கடித உறையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார். நாற்பது, அம்பது வருடப் பழக்கமுள்ள கால்கள் தாமாக கானாற்றை, ஆற்றை, தெருக்களைக் கடந்து வீட்டை அடைந்தன. வீட்டுப் பெஞ்சின்மேல் கடிதத்தைப் போட்டார். கதர் சட்டையையும் கழற்றாமல், கால்களையும் கழுவாமல் கட்டிலில் சாய்ந்து உறங்கியும்விட்டார். சாப்பிட பொன்னம்மா அழைத்தது கூடத் தெரியவில்லை. இப்போது வழக்கம்போல் கொல்லைக்குக் கிளம்பும் அதிகாலை நேரமாகியிருந்தது. வானில் பறவைகளின் மென்மையான கீச்சுகள். ஊர்க்கோடியிலிருந்து தனியான முதல் சேவல் குரல். பக்கத்து வீட்டு கல்லுபள்ளியாவின் ஆடுகள் உறக்கச் சடைவிலிருந்து கலைந்தெழும் ஓசை. எல்லாமும் அவருக்குத் தெளிவாகக் கேட்டன. அவைதான் அவரைத் தினமும் அழைத்து எழுப்புகின்றன. அவற்றைத் தன் பிரமையெனவும் நினைத்துக்கொள்வார். அச்சப்தங்கள் மனதில் ஆழப்பதிந்து தேவைப்படுகையில் மேலெழுகின்றன. சுற்றிலும் மெல்லிய திரை போன்ற வெளிச்சம் பரவியிருந்தது. எழுந்து சால்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டார். மனைவி பொன்னம்மா தாழ்வாரத்தில் பிள்ளைகளுடன் சுருண்டு படுத்திருந்தாள். அவர்களுக்கு நன்கு விடிந்த பிறகு ஒவ்வொருவராக எழுந்துதான் பழக்கம். தெருக்கதவை வெறுமனே சாத்திக்கொண்டு கிளம்பினார். கொல்லைக்குப் பின்னால் ஏலகிரி மலையின் வானம் வெளிச்சமுறத் தொடங்கி இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *