ஒத்திகை

பிரவின்குமார்

பகிரு

“லேய் முக்கா! டீப் லெக்ல போய் நில்லு.”

“குமாரண்ணே! யாமுன்ணே இப்படிச் செய்ய? நான் கீப்பிங் நிக்கேன்.”

“நல்ல வாயில வரும், பேசாம போய் நில்லு! லேய் கண்ணாடி! பஸ்ட் ஸ்லிப் வேண்டாம். நீ கீப்பிங் வா.” முந்தைய நாள் குமாரின் பந்துவீச்சில் சுஹைப் தவறவிட்ட கேட்சை அனைவரும் மனதில் நினைத்துக்கொண்டனர்.

ரன்னர் எண்டில் நின்ற குமாரின் அண்ணன் தமிழ் “எதுக்குல அவனைப் புடிச்சி எசலிட்டேயிருக்க?” என்று கேட்க, “நீங்க பொத்திட்டுப் பேட்டிங் பண்ணுங்க. எங்க டீமுக்குள்ள பேசிக்கிடுவோம்“ என்றான் குமார்.

சுஹைப் கீப்பிங்கை விடுத்து, முனகிக்கொண்டே டீப் லெக் தென்னையின் நிழலில் நின்று “கமான் காமன்! ஈசி விக்கெட்” என்று கீப்பிங் பழக்கத்தால் உரக்க கத்தி முன்னோக்கி நடந்து வந்தான். சுற்றிலும் விதைக்கப்பட்ட முன்னிரவு, அதிகாலை மலங்கள் ஈக்களால் மொய்க்கபட்டுக் கொண்டிருந்தன. வீச்சத்துக்குப் பழக்கப்பட்ட நர, பன்றி மூக்குகள் சிறியதும் பெரியதுமாய் நாள் முழுக்கப் பூங்காவில் மூச்சிழுத்துக்கொண்டிருக்கும். முன்னாள் பூங்கா வீதி பூங்கா இன்று பீ பார்க். செவ்வக வடிவ பூங்காவில் இடது மேல் ஓரத்தில் இருந்த பாலர் பள்ளியில் பெரும்பாலும் நந்தவனத்தெரு குழந்தைகள் மூக்குஒழுக அழுதும், ஏங்கியும், ஜன்னல் வழியே கிரிக் கெட் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். நந்தவனத்தெருவின் பின்னிருந்த நந்தவனமும் பீ பார்க்கின் சிறுகிளைப் போன்றே சிறப்பாகச் செயல் பட்டுக்கொண்டிருந்தது. பூங்காவும், நந்தவனமும் அனைத்துச் சாதி மக்களின் மலங்களால் செழித்திருந்தன. பன்றிகளுக்குச் செம்மையான கோள்.சுற்றத்தின் உழைப்பில் குறைவற்ற விருந்து. பார்க் சுவரின் சுற்றிலும் சிறுநீர் உறிஞ்சி உயர்ந்த தென்னைகள் விளையாடுபவர்களின் சோர்வுக்குத் தங்களாலான நிழலளித்தன. அவ்வப்போது தெங்கு களையும் உதிர்த்தன.

பார்க்கின் வலது மேல் ஓரத்தில் கஞ்சா இழுப்போர் தங்களுக்கான இடத்தைப் பதிவுசெய்து கொண்டனர்.

ஸுஹைபால் ஆறு ஓவர்களும் டீப் லெகில் நின்று சில ஓட்டங்களை தடுக்கமுடிந்தது. மேலும் ஒரு டிரெக்ட் ஹிட்டில் ராஜாராமை அவுட் செய்ய முடிந்தது. பீல்ட்டிங் நிற்பதே அவனது விருப்பம். என்றாலும் பந்துவீச வாய்ப்பளிக்கப்படவில்லை என்ற  வருத்தமும் ஓரத்தில் ஊறிக் கரைந்தது. இலக்கு 6 ஓவர்க்கு 58 என்று நிர்ணயிக்கபட்டிருந்தது. தனக்கு ஒரு ஓவர் அளித்திருந்தால், குறிப்பாக அந்தக் கடைசி ஒவரில் 22 ரன் போயிருக்க வாய்ப்பே இல்லை. குமார் அண்ணன் கண்டிப்பாகத் தன்னைப் பேட்டிங் கடைசியாகத்தான் இறங்க சொல்லுவான். அனைவரும் பாலர் பள்ளியின் வெளி ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ் ஓய்வு எடுத்தனர்.

“யாருக்கெல்லாம் ரஸ்னா வேணும்?” என்று சுனில் கேட்டவுடன் வியர்த்த கருத்த 4 கைகள் உயர்ந்தன. அவன் நாலு எட்டு வைத்ததும், மேலும் இரண்டுரஸ்னா எண்ணிக்கை சேர்ந்துகொண்டது.

கடைசி ஓவரில் லேகா பாலு அடித்த மூன்று சிக்ஸர்களை நினைத்துப்பார்த்தான் குமார்.

“லேய் திரும்பத் திரும்ப சொன்னேன்ல ஓபி போடாத போடாதனு, அவனுக்கு அது ஒன்னுதான் கனெக்ட் பண்ண தெரியும். ஆப்சைடு தூக்கி போட வேண்டியதுதான?” என்று ஷாஜியைக் கேட்டான்.

“தெரியலனே பால் கிரிப் இல்ல போல, அதா” என்று கூறி மீதி பதிலை குமாரின் முகம் பார்க்காமல் விழுங்கினான்.

சுஹைப்புக்கு குமார் அண்ணன் ஏன் தன்னையே குறிவைக்கிறான் என்பது நன்றாகத் தெரியும். கடந்தமாத பெட் மேட்சில் மாணிக்கம் அண்ணன் எதிர்பார்த்தபடி குமார் அண்ணன் பந்து வீச இயலாமல் “பால் கிரிப் கிடைக்கல” என்று கூற,தனக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி 3 ஓவர் களில் 4 விக்கெட்கள் வீழ்த்திய ஸுஹைபை மாணிக்கம் அண்ணன் மனதார புகழ்ந்தான். கூடவே அன்று பயன்படுத்தப்பட்ட பந்தையும் அவனிடமே கொடுத்தான். மறுநாள் மாலை நேர பயிற்சிக்குப் பின் நடந்த அரட்டையில் அணியில் விளையாடுவோர்களின் “மசை”களைப் பற்றிய உரையாடலில் குமார் அண்ணன் முதலில் சோழவராஜாவை இழுத்தான்.

“கிளி இன்னும் டியூஷன் விட்டு கௌம்பலபோல?”

“நீ சும்மா இரியாண்டே! கிளிய நம்ம மட்டும்பார்த்தா போதுமா? நமக்கு அந்த மேஜிக் எல்லாம் தெரியாத கிளிக்குக் கண்ணு யார் மேலயாக்கும் தெரியுமா?” என்று சோழவன் ஸுஹைபை நோக்கி கண்காட்டினான்.

குமார் அண்ணனுக்கு அது போதாதா? “லேய்! ஸுஹைபு... முக்கா மாமா. அண்ணே அண்ணேனு சொல்லிக்கிட்டு அண்ணிக்கே லைன் அடிக்கியால?” என்று கூற அனைவரும் வெடித்துச் சிரித்தனர். “முக்காமாமாவா?” என்று மலைச்சாமி உரக்க கூறிச் சிரித்தான்.

“அதெல்லாம் ஒன்னில்லணே. சோழவண்னே சும்மா இருக்கமாட்டியா? நான் கௌம்புகேன் நேரமாயிட்டு” என்று கூறி ஓட, அனைவரும் சேர்ந்து “முக்கா மாமா” என்று கூவினார்கள். அவர்களின் கூவலின் அர்த்தம் அடுத்த நாள் காலை வெளிக்குப் போய்க்கொண்டிருந்தபோது புரிந்தது. என்றாலும் அணியில் உள்ள யாரையும் அவன் எதிர்கேள்வி கேட்டு பழக்கப்படவில்லை. அன்றிலிருந்து தன்னை ‘முக்கா’வுக்குப் பழக்கிக்கொண்டான்.

ஆட்டம் வெகு விரைவில் முடிந்துவிடும் போலிருந்தது. நாலு ஓவர்களில் 48 ரன்கள் அடித்து விட்டாகியது.

“ஸுஹைபு... மக்கா. ஸுஹைபு” பார்க்கின் வாசல் அருகே நின்று கையசைத்து அழைத்தார் ஸுஹைபின் தந்தை நைனா முகமது. வடக்கிலிருந்து வீசிய காற்றில் மென் சிறுநீர் வீச்சம் ஸுஹைபின் மூக்கிற்கும், தந்தையின் அழைப்பு காதுக்கும் எட்டின.

“குமார் அண்ணே, எங்க அப்பா கூப்டுகு, போயிட்டு வரேன்” என்றவாறே எழுந்தான். அவனது கால்கள் செருப்புடன் உறவாடி ஓட தயாராகின. “போய் வா” என்பதாய் ஸுஹைபுக்கு தலையசைத்து “ஈஸி வின்னிங்., ரெண்டே ரன்தான்” என்று கூவினான்.

“டீம்ல எடுத்துப் போடுணே இப்போ வந்துருவேன்” என்று கூறிக்கொண்டே பார்க் வாசலை நோக்கி  ஓடினான்  ஸுஹைபு.

“என்ன பா!” நைனாவின் கையில் கேஸ்ட்ரால் காலி கேன் இருந்ததைக் கொண்டு ஒருவாறு கணித் திருந்தான் ஸுஹைபு.

“மக்கா! காலைல சொன்னேம்லா. இப்போ கடை கொஞ்சம் கூட்டமில்ல பார்த்துக்கோ, போய் வாங்கிட்டு வந்துரு” - நைனா.

“யப்பா! ஏம்பா அவளோ தூரம் போகச் சொல்லுஹ, ஒன்னோட ஒரே செரையா இருக்கு.”

“இந்த வெயில்ல எரிச்சல் படுத்துஹாப நீ”  ஸுஹைபு.

“மக்கா ஒரே ஓட்டத்துல போய் வாங்கிற மாட்டியானி. ஒரு ஓட்டம்டே. நேத்துகூட அம்மா பொண்ணு வீட்ல வடை வாங்க போயிட்டு பத்து நிமிஷ வேலைய ரெண்டே நிமிஷம் சிட்டா பறந்து வந்துடேலா, ஒரே ஓட்டம்டே, அம்ம வேற கத்திக்கிட்டே இருக்கா” என்றவாறு கேனை கைகளில் திணித்தார். தனது சட்டை மேல் பாக்கெட்டில் இருந்து பல ஓட்டைகள் கண்ட ரேஷன் கார்டை ஸுஹைபிடம் கொடுத்தார். வேண்டா வெறுப்பாக இரண்டையும் வாங்கிக்கொண்டு போகத் தயாரானவனை “மக்கா! கொஞ்ச தண்ணி அடி கைகால்கழுவிகிடுகேன்” என்று பார்க்கின் வெளிப்புறம்இருந்த அடிபம்பை நோக்கி நடந்தார் நைனா.

அருகிலிருந்த கிணற்றின் மேல் கேனை வைத்து விட்டு, பம்பினை துள்ளி துள்ளி அடித்தான். மேட்ச் முடிந்துவிட்டது போலும்.

“மக்கா கொஞ்சம் தெம்பா அடி.”

இன்னும் உயரம் துள்ளி வேகமாக அழுத்தினான். தண்ணீரை கையில் ஏந்திதன் முகத்தில் தெளித்தும் முழங்கை வரை தண்ணீரை விட்டும் கழுவினார். பாதங்களை அடியில் கிடந்த கருங்கல்லில் அழுத்தி தேய்த்து அழுக்கினை போக்கினார். “ மக்கா! நீயும் வா,கைகால் கழுகிட்டு போ” என்றார்.

“வேண்டாம். நா வீட்டுக்கு வந்து கழுவுக்கேன்.”

“சும்மா வாடே ஒரு நிமிஷம்” என்று நைனா பம்ப் அடித்தார். நைனாவுக்கு மூச்சி வாங்கியது. “போதும்பா கழுவிட்டேன்.”

“டே காலக் கழுகுடே” அழுத்தி அடித்தார் நைனா.

கழுவி முடித்ததும் தன் தோளில் கிடந்த துண்டை கொடுத்தார். வாங்கி லேசாகத் துடைத்துக்கொண்டு கேனை எடுத்து நடக்கத் தொடங்கினான்.

“மக்கா, நில்லு”

“என்னப்பா?”

“வரும்போது பக்கத்து நாடாங்கடையில பாப்பாக்கு மட்டிப்பழம் மூனு வாங்கிக்கோ, அப்டியே ஒரு சர்வத்தும் குடுச்சிக்கிடு என்னா” என்று ஐந்து ரூபாயை அவனது பாக்கெட்டில் சொருவினார். ஸுஹைபு சவேரியார் கோவில் தெரு திசைநோக்கி நடந்தான். குறுந்தெரு தாண்டி செல்கையில் ஏனோ கடைக்குப் போவது பிடித்திருந்ததாய் தோன்றியது. ஆனால் ஏன் அப்பாவுடன் எரிச்சல் என்று பிடிபடவில்லை. அம்மாவிடமும் கடைக்குப் போகச்சொல்லும் போதெல்லாம் இதே கூத்துதான்.

தெருவின் இடப்பக்கமிருந்த கசாப்பு கடையின்கூரைக்கம்பில் ஆட்டின் ஈரல் தொங்கிக்கொண்டு இருந்தது. ஆட்டின் தலைகள் இரண்டு, பெரும் அடி மரத்துண்டின் மீதிருந்தன. அதில் ஒரு ஆடு நாக்கை வேலியை விட்டபடி சிரித்த வண்ணம். வானம் நோக்கி ஏதோ யோசிக்கும் தருணத்தில் வீழ்த்தப்பட்ட ஆடுகளின் நான்கு கண்கள்.

ஸுஹைபுக்குக் குலசேகரநங்கை அம்மன் கோவில் தெருவின் இடப்பக்கம் திரும்பியபோது விர்ஜின் வீட்டைக் கடக்கப்போகிறோம் என்ற எண்ணம், சிறிது கிளர்ச்சி ஊட்டியது. சனிக்கிழமை அதுவும் மதியம் வீட்டில் இருக்கத்தான் வாய்ப்பதிகம், அவள் வீட்டைக் கடக்கும் கணத்தில் கேஸ்ட்ரால் கேன் இடக்கைக்கும், கண்கள் வலப்புறமும் சென்றன. “ஏசு அழைக்கிறார்.... ஏசு அழைக்கிறார்...” வழக்கம் போல் வரும்போது  ஒருவேளை  வாய்ப்பிருக்கலாம்.

ரேஷன் கடை வரிசையில் மூன்று பேருடன் நான்காவதாகப் போய் நின்றான். அந்த மொட்டை வெயிலிலும் சவேரியார் கோவில் சுடுமணலில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். பார்க்கில் அடுத்த ஆட்டம் ஆரம்பித்திருக்கலாம்? அவன் பின்னால் மேலும் ஒருவர் வந்து நின்றார். வரிசை குறைவதாய்த் தெரியவில்லை.

“அண்ணே! இங்க கேன் வச்சிகிட்டுப்போறேன். இரண்டு நிமிசத்தில வந்துருவேன். கொஞ்சம் பார்த்துக்கிடுங்க” பின்னால் நின்றவரிடம் கேட்டான் ஸுஹைபு.

“செரி! சீக்கிரம் வந்துருடே” என்றார். கேனை வைத்துவிட்டு சித்ரஞ்சன் தாஸ் கடைக்கு எதிரில் இருந்த நாடார்கடையைச் சேர்ந்தான்.

வெளியில் தொங்கிய ஏத்தம், செந்தொழுவன், கதலி, மட்டி, மோரிஸ், பேயன் குலைகளைக் கடந்து,வலப்பக்கம் நனைத்த வெத்தலை, இடப்பக்கம் சோடா பாட்டில் டிரே. நடுவில் ஒரு ஆள் நிற்பதற்கான இடம் மட்டுமே இருக்க, அங்கு நின்றவன்பின் நின்று ஸுஹைபு “அண்ணே! மூணு மட்டினே”என்றான். கடையின் இருளிலிருந்து வெத்தலை குதப்பியவாறு நாடார் கைகளில் இரண்டு சோடா போஞ்சுடன்  வந்தார்.

“இந்தா. அடுத்து என்னடே மட்டி மட்டும்தானா?” என்று கேட்டார்.

“ஒரு சர்வத். சோடா சர்வத்.. மஞ்ச”

இருளில் புகுந்தார். கையில் சோடா போஞ்சு சர்பத்துடன் வந்தார். காசு கொடுத்துவிட்டு, அடிக்கும் வெயிலுக்கு ஒரே அடியில் சர்பத்தைக் குடித்து முடித்தான். மேலும் காசிருந்தால் இன்னும் ஒன்று குடித்திருக்கலாம். முன்தின மாலைமுரசினுள் மட்டிகள் அடங்கின. ஓடி சென்று சரியான நேரத்தில் வரிசையில் இடத்தைப் பிடித்துக்கொண்டான். மண்ணெண் ணெய் கவனமாக அளவு குறைத்து ஊற்றப்பட்டது. கேனை இறுக மூடி அதன் மேல் கடையில் அருகில் கிடந்த வெள்ளை பிளாஸ்டிக் கவரால் கட்டி தூக்கிக்கொண்டு வீடு நோக்கி நடந்தான். விர்ஜின் வீடு பூட்டியிருந்தது. கசாப்புக் கடையில் நாக்கு வெளி தள்ளிய தலையின் கண்களில் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. கடைக்காரர் ரத்தம் தெறித்த முண்டா பனியனுடன் கூரையினுள் அமர்ந்து பீடி குடித்துக்கொண்டிருந்தார். வீட்டுக்கு போகும் முன் இன்னும் ஆட்டம் தொடர்கிறதா என்று பார்க்கை ஒரு பார்வை இடலாம் என்று பார்க்கை அடைந்தான். பிட்சில் பேட்டிங் எண்டின் மூன்று ஸ்டம்புகளும், ரன்னர் எண்டின் கருங்கல் மட்டுமே தென்பட்டன. மண்ணெண்ணெய் மனம் சலித்துப்போயிருந்தது. பார்க் வாசலில் இருந்த ட்ரான்ஸ்போர்மரின் கீழ் செடிகளின் நடுவே தூங்கிக்கொண்டிருந்த கொழுத்த பன்றி எழுத்து, சுற்றும் முற்றும் பார்த்து மீண்டும் துயின்றது. பசி வயிற்றை உரச, வீடு நோக்கி வேகம் பிடித்தான் ஸுஹைபு.

“உம்மா! இதை எங்க வைக்கது?” என்று நடையில் நின்று கூவினான். மீன்குழம்பின் கொதிப்பு மேலும் பசியேற்றியது.

“அங்கன வச்சிட்டு கைகால் கழுவிட்டு உள்ள கேறு” என்றாள், “நாள் முழுக்கப் பீ காடு, எரிய வெயிலு, என்ன கொண்டாட்டமோ?” என்று அடுக் களையில் வேலையின் நடுவே முணுமுணுத்தாள். அப்பா சாய்வு நாற்காலியில் அமர்ந்து பனை ஓலை விசிறியால் காற்றை அலைந்துகொண்டிருந்தார்.

மிதியடியில் பாதத்தின் ஈரத்தை நன்றாகத் துடைத்து, “உம்மா! வயிறு பசிக்கி. எப்பா, பேன்போட வேண்டியதுதானா?” என்று ஸ்விட்ச் பக்கம் போனான்.

“லேய்! லேய்! வெக்க காத்து தான் வருகு.பேசாம இரு. மொதல்ல பழத்த குடு, ரேஷன் கார்டு எங்க?” என்றார் நைனா.

“எதுக்குப் பறக்க? இந்த இருக்கு.” பாண்ட் பாக்கெட்டில் இருந்து விழுந்த 50 காசை மேல் பாக் கெட்டில் போட்டு அடுக்களையினுள் நுழைந்தான். ருக்ஷனா உம்மாவின் சேலையைப் பற்றிக்கொண்டு நின்றாள்.

“ருக்கு. வா வா வா... பழம் சாப்டுகியா?” நைனாகுரல் கொடுத்தார். குழந்தை அண்ணனை இடித்து விட்டுத் தத்தகா புத்தகா என்று அப்பாவிடம் ஓடியது.மூடி வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தைத் திறந்து “சூரன் செமையாட்டு கொதி. ஹ்ஹ்ம். நல்ல மனம். உம்மா வேற என்ன?”

“ஹ்ஹ்ம்... அடுப்புக்கரி. எவளோ மட்டம் சொல்லிருக்கேன். நீ வேலைய முடிச்சிட்டு போய் பந்தடினு” என்று கொழம்பு கரண்டியால் ஓங்கினாள் உம்மா. அதே கண்கரண்டியைக் கொண்டே அருகில் மூடியிருந்த பாத்திரத்தைத் திறந்து கிண்டிவிட்டாள்.

“அடிபொலி நெத்திலி அவியலும் உண்டு” என்றுஉம்மாவின் தோள்பற்றி, “அதான் வேலைய முடிச்சாச்சுலா?” என்றான் ஸுஹைபு.

“என்னத்த கிழிச்சியோ? படிக்கத கோட்டவிட்டுறாத, எதோ இப்ப தான் கொஞ்சமாட்டு வருகமாறி இருக்கு” என்றவாறு தட்டத்தில் சுடுசோறு போட்டு, மேல் கறுத்த மீன்குழம்பை ஊற்றி, நல்ல துண்டத்தை உம்மா தேட, “அந்தத் துண்டம் போடு, இது இது இந்தச் சின்னத் துண்டும்” என்று ஸுஹைபு சுட்டினான். “அவியல நானே வச்சிக்கிடுகேன், கரண்டியைக் குடு” என்றான்.

“ஒண்ணு வேண்டாம், அஞ்சு பேரு சாப்பிடணும், நீரு அள்ளி கொட்டிட்டு போவேறு” என்று தட்டத்தைப் பிடுங்கி ஒரு பகுதி நெத்திலி அவியலை வைத்து, “போய் சாப்டு” என்றாள் உம்மா.

மச்சிப்படியின் கீழிருந்த மரக்கட்டிலில் சம்மணங் கொட்டி அமர்ந்து, தட்டின் நடுவுல இருந்த மாந் துண்டினையும், எண்ணெய் குளித்த கருவேப்பிலை களையும் தட்டின் ஓரத்தில் ஒதுக்கி, விரவிய சோற்று உருண்டையின் மீது நெத்திலி அவியலை வைத்து உண்டான்.  உண்ட  வேகத்தில்  புரையேறியது.

“மெள்ள மெள்ள! தண்ணிய குடியாண்டே” என்றார் நைனா மட்டிப்பழத்தின் பாதி அவர் இடக்கையில் இருந்தது.

தலையைத் தட்டிக்கொண்டான். கண்களில் நீர் கோர்க்க, கழுத்திலிருந்து வியர்வை ஸுஹைபின் சட்டைக்குள் ஊற்றியது. பசியின், ருசியும் சேர்ந்து சூரையோடும், நெத்திலியோடும் விளையாடின. தலை குனிந்து, உடல் வளைத்து பெரும் ஏப்பம் ஒன்றை வெளியேற்றினான்.

“உம்மா! ரசம் உண்டா?”

“நேத்தைக்க ரசம்தான் இருக்கு? இங்க மூடி வச்சிருக்கேன்” உம்மா அடுக்களையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இடக்கையால் அடுப்பைச் சுட்டினாள். சிறிது சோறும், ரசமும். மூன்று வாயில் சோற்றை முடித்து,  தட்டையேந்தி  ரசம்  குடித்தான்.

“ரசம் நல்ல வொரப்பு” என்று மூக்கை உறிஞ்சிய வாறு தட்டு, மற்றும் கையைக் கழுவி, ஈரத்தை பேண்டில் துடைத்து, “வாப்பா! மாணிக்கம் அண்ணே உன்ன பார்க்கணும்னு சொல்லுச்சி” என்று கட்டிலில் அமர்ந்தான் ஸுஹைபு.

“என்னயவா? எதுக்கு மக்கா?”

“தெரில, பேசணும்னு சொல்லுச்சி. எதுக்குனு தெரில.”

“எதாவது எலவ இழுத்துட்டு வந்துராத மக்களே!” என்று உம்மா குரல்கொடுத்தாள்.

“உம்மா அதெல்லாம் ஒன்னுமில்ல, நீ சும்மாகெட. வாப்பா என்ன சொல்லுகது?” என்றான் ஸுஹைபு.

“திங்க கிழம வாப்பா வருவானு சொல்லு” என்றார் நைனா. ருக்ஷனா அவர் நெஞ்சில் தலைசாய்த்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

“செரி, நா மேல போய் கொஞ்சம் முதுக சாய்க்கேன்.” ஸுஹைபு தலையணையுடன் படிகள் ஏறினான்.

“பிள்ளைக்கு மண்டைக்காட்டுல கைவாங்கிப் போடணும் மறக்காம?” என்று நைனாவிடம் நினைவு படுத்தினாள் உம்மா.

“ஹ்ம்ம்! சாப்பிடுகேலா?”

“துஅ முடிச்சிட்டு வந்துருகேன். இந்தப் பய அந்த வழக்கமெல்லாம் பீகாட்டுல கரைச்சிட்டான்போல” என்று வாப்பா சொன்னது ஸுஹைபுக்கு கேட்டது. உண்ட மயக்கமும், உடல் சோர்வும் அனல்காற்றைக் கண்டுகொள்ளவில்லை.

மாலை நான்குமணி வெயிலின் சூடும், மணமும் ஸுஹைபுக்கு பெரும்பாலும் தலைவலி அளிக்கும். அன்று தலைவலி இல்லை என்பதே ஸுஹைபுக்கு ஆறுதல் அளித்தது. வாப்பா படிகளில் ஏறும்போதே குரல்கொடுத்தார் “மோனே! ஸுஹைபு சாயா குடிக்கலயா” என்று வார்த்தைகளுக்கு நடுவே மூச்சி வாங்கினார்.

கண்களைக் கசக்கி, சாரத்தைச் சரி செய்து எழுந்து அமர்ந்தான்.

“நா கீழ வருவேம்லா.”

“இருக்கட்டும் மக்ளே, குடி.”

வாப்பா போட்ட சாயா தான். உம்மா பட்டை, கிராம்பு சேர்த்து மணமாய்க் கொடுப்பாள். இனிப்பின் அளவு ஒருநாளும் தப்பியதில்லை.

“சாயா நல்ல இருக்கா?”

“ஹ்ம்ம்... உம்மா எங்க?”

“பிள்ளைய தூக்கிட்டு காத்தாட போயிருக்கா.”

“ஹ்ம்ம்” நைனாவின் உடல்மொழி ஸுஹைபுக்கு எரிச்சலூட்டியது. கிழமைகளை மனதில் கணக்குப் போட்டுப்பார்த்தான்.

“மற்றபடி, கயிறு இழுக்கணும், ஒரு அஞ்சே அஞ்சு நிமிஷம், என்ன மக்கா ?” என்றார் நைனா.

“வாப்பா நீ சள்ள படுத்தாத பார்த்துக்கோ. என்னால முடியாது. போய் தூண கட்டிட்டு அழு” ஸுஹைபு சிவப்பு டைல்ஸ் பார்த்த வண்ணம் சாயா குடித்துக்கொண்டே கூறினான்.

“உம்மா வந்த உடனே ஒரு அஞ்சே அஞ்சு நிமிஷம். செரி ஒரு ரெண்டு நிமிஷம் மக்கா” என்று நைனா கெஞ்சினார்.

“அத செஞ்சே ஆகணுமா? நிறைய இருக்குலா, சின்னப்பிள்லேள்தான, வாயில இருந்து கலர் பேப்பர் இழு, தொப்பி, கலர் பூக்கூட, முட்ட, கோமாளினு நெறைய இருக்குலா. பின்ன எதுக்கு இத பிடிச்சிட்டு தொங்குக. என்னால முடியாது. வேணும்னா உம்மாவையும், உங்குட்டியையும் பிடிக்கச் சொல்லு” என்று எரிந்து விழுந்தான் ஸுஹைபு.

நைனா பொறுமையாய் படியிறங்கி சென்றார்.

சொல்லிருக்கக்கூடாதுதான், வாப்பாவுக்கு வேறு போக்கில்லை. இருந்தாலும் ஒவ்வொரு முறையும் முதல் எதிர்வினை இப்படியே தான். இம்முறை என்ன செய்வார்? ஸுஹைபின் அடிவயிற்றிலிருந்து நெத்திலியின் புளிச்ச  ஏப்பம்  குமட்டி அடங்கியது.

வாயிலில் குட்டியின் குரல் கேட்டது.

“என்னா எந்திரிச்சாச்சா?” என்று உம்மா வாப்பா விடம் ஸுஹைபை கேட்பது புரிந்தது. ஸுஹைபு காதை நன்றாகத் தீட்டிக்கொண்டும் யாதொரு பயனுமில்லை. அவர்களின் கிசுகிசுக்கும் மொழி அவர்களுக்கே வெளிச்சம்.

“குட்டி.. இந்தா கயிறைப் புடி... இங்க தும்பு கிட்ட, நீ இந்தப் பக்கம்” வாப்பா ஸுஹைபு சொன்னபடி உம்மாவையும், குட்டியையும் கயிறு பிடிக்கச்சொல்வது ஸுஹைபுக்கு எரிச்சலூட்டியது. என்னவாக இருந்தாலும் சரி இந்தமுறை கயிறை தொடப்போவதில்லை என்று தன்னிடம் கூறிக் கொண்டான். ஏன் இவருக்கு இந்தச் சோலி?. ஒரு முறைகூடத் தப்பியதில்லை என்று பலவருடங்கள் மார்தட்டிக்கொண்டிருந்த வாப்பாவின் வித்தை, போன செப்டம்பர் மாதம் டிவிடி பள்ளியில் ஆட்டம் கண்டது. அன்று முதல் இந்த ஒன்றை மட்டும் ஒத்திகை பார்க்காமல் நிகழ்ச்சிக்கு போகமாட்டார். “அதுக்கு நானா பலிகடா?” என்று ஸுஹைபு பொருமிக்கொண்டே படியிறங்கினான். கீழே சிரிப்பும்  கும்மாளமும் மேலும் கோபமூட்டியது.

“நீ ஒழுங்கா புடி, இன்னும் டயிட்டாட்டு” என்று வாப்பா சொன்னதும், அவரது கழுத்தில் சுத்தப்பட்டிருந்த நல்ல வடக்கயிற்றின் இடத்தும்பை உம்மா  இழுத்துக்கொண்டிருந்தாள்.

“குட்டி ஒழுங்கா புடிச்சி இழுக்கணும் கெட்டியா?வாப்பா கழுத்த அப்டியே இருக்குபோது, கயிறு ரெண்டு பக்கமும் நல்ல டையிட்டா ஆகணும். எங்க இழு பாப்போம்?” என்று இடப்பக்க கயிறை இடக்கையால் பற்றி வலப்பக்க கயிறை தன் கழுத்தால் இழுக்கக் குட்டி கயிறுடன் வந்து வாப்பா வின் காலில் சிரித்துக்கொண்டே விழுந்தாள். சற்றென்று அழுவதுபோல் முகம் இடப்பக்கம் கோணி சென்றதை கண்ட வாப்பா சுதாரித்துக் கொண்டு “குட்டி! அப்படித்தான். நல்ல இழுத்த பார்த்துக்கோ, உம்மாவ பாரு ஒரு மண்ணும் தெரியல. எந்திரி. நல்ல புடிக்கும். இன்னும் டயிட்டா” என்று வாப்பா அடிக்கும் கூத்தைக் கண்டு ஸுஹைபு உள்ளூர எரிச்சலடைந்தான். உம்மாவும்ஏன் இதை எதுவுமே கேட்பதில்லை, அவள் கேட்கமாட்டாள். பள்ளிக்கூடத்தில் இவர்கள் நடத்தும் மேஜிக் நிகழ்ச்சிக்கு இவர்கள் இருவர் மட்டுமே வித்தைக் காரர்கள். உம்மா பெரும்பாலும் மேஜிக்கிற்குத்தேவையானவற்றை ஒருங்கிணைப்பதோடு சரி. அனைத்து வித்தைகளையும் வாப்பாவே செய்வார். கோழியாகி முட்டை இடுவார், கோமாளியாகி குட்டிக்கரணமிடுவார், விஸில் அடித்தவாறு வாயிலிருந்து வண்ணவண்ண காயிதங்களை இழுத்து கொண்டே இருப்பார். பள்ளி சிறுவர்களையும் சேர்த்துக்கொண்டு சில வித்தைகளைச் செய்வார். கருப்பு கை குட்டையிலிருந்து வெண்புறா வெளிவரும், அதுவரை மாணவர்களைச் சிரிக்கவைத்து கடைசி வித்தையாகக் கயிறை எடுத்து ஒரு பக்கம் உம்மா பிடித்துக்கொள்வாள். கூட்டத்திலிருந்து ஏதேனும் ஒரு மாணவனை அழைத்து இழுக்கச் சொல்லி, ஏன் இவர் இதை மட்டும் தூக்கித் திரிக்கிறார், ஸுஹைபு உம்மாவை பார்த்தான். வாப்பாவின் கழுத்தை இறுக்குவதில் உம்மாவுக்கு எவ்வித தயக்கமுமில்லை. குட்டி இன்னும் கீழே விழுந்துகொண்டே இருந்தாள். வாப்பா ஏன் இன்னும் இந்தக் கூத்தை நிகழ்த்துகிறார். பதினைந்து நிமிடத்திற்கு மேல் ஆகியிருக்கும் இன்னும் ஒரு முறைகூட உருப்படியாய் கழுத்தில் கயிறு இழுக்கப்படவில்லை.

“இங்க குடு குட்டி, நான் இழுக்கேன், எவளோ நேரம்” ஸுஹைபு வலப்புற கயிறைப் பற்றிக் கொண்டான்.

வாப்பா உம்மாவிடம் தயாரா? என்பதாய் கண் காட்டினார். “சொன்ன உடனே இழுடே, கோவத்துல சோலிய முடிச்சி போடாத” என்று சிரித்துக்கொண்டே இருபக்க கயிறின் இழுப்பை ஆராய்ந்தார்.

ஸுஹைபு விரல்கள்மேல் ஒரு சுற்றுசுற்றி கயிறை இழுத்தான். உம்மாவின் பக்கம் மிக சரியான இழுப்பில் இருந்தது. வாப்பா கயிறில் இருந்து கையையெடுத்தார்.

“இழு. இன்னும் டயிட்டா... இழு” என்றார் வாப்பா. குட்டி இடக்கை விரல்களை வாயில் வைத்து வாப்பாவை இமைகொட்டாமல் பார்த்தாள். வாப்பாவின் கழுத்து நரம்புகள் வெளித் தெரிய ஆரம்பித்தன.

“இழு.. இன்னும்... இ...” என்று கயிறின் முழுஇழுப்பில் இருபக்க கயிறை ஓங்கி அடித்தார். ஸுஹைபின் கையிலிருந்த கயிறு நழுவி ஸுஹைபு பின்னால் விழுந்தான். வாப்பாவின் கழுத்தில்முடிச்சி அவிழாமல் அப்படியே இருந்தது. உம்மா சுதாரித்துக்கொண்டாள்.

“என்ன மயிரல புடிக்க ஒழுங்கா புடினு சொன்னேன்லா” என்று வாப்பா விழுந்துகிடந்த ஸுஹைபை மிதிக்கக் காலை ஓங்கினார். ருக்ஷனா கூவி அழுது, உம்மாவின் கால்களில் முகம் புதைத்தாள்.

“வா ஒழுங்கா புடி” என்று மீண்டும் கயிறை ஸுஹைபின் கைகளில் திணித்தார். ஸுஹைபு வாங்காமல் கீழே அமர்ந்திருந்தான்.

“செரி புடி மக்ளே” என்றாள் உம்மா.

ஸுஹைபு வாப்பாவின் முகம் பார்க்காமல் கயிறை வாங்கினான். மீண்டும் தயாரானார்கள்.

“இழு... இன்னும் இன்னும் மேல தூக்கி...” வாப்பா பாதங்களால் தரையை இறுக பற்றினார். கழுத்து நரம்புகள் புடைத்தன. முடிச்சி இறுக ஆரம்பித்தது. ஸுஹைபு இன்னும் இறுக்கினான். வாப்பாவின் ஓங்கிய காலை நினைவில் இருந்து விலக்க முடிய வில்லை. இழுத்தான். தன்கைகளில் நரம்புகள்புடைக்க இழுத்தான்.

“ஹ்ஹ்ம்... ஹ்ஹ்ம்.. ஆ ஆஅ அட்...” என்று வாப்பா கயிறின் இருப்பக்கமும் ஓங்கி அடிக்கவே முடிச்சி மறைந்து கழுத்து விடுபட்டது. மீண்டும் ஸுஹைபு வலப்பக்கம் விழுந்தான். உம்மா குட்டியை தூக்கிக்கொண்டு அடுக்களைக்குச் சென்றாள்.

“அவளோதான் மக்ளே” என்று வலக்கையை ஸுஹைபிடம் நீட்டினார். ஸுஹைபு தானாகவே எழுந்து, மாடிப் படியேறினான். வாப்பா பொறுமை யாய் சுற்றி இரும்புப் பெட்டியினுள் வைத்துமூடினார்.

“வர புதன்கிழம மலையாள ஸ்கூல்ல ஷோ, அட்வான்ஸ் வாங்கிட்டேனாக்கும்” என்று உம்மா விடம் கூறுவது ஸுஹைபின் காதுகளுக்கு விருப்பற்ற செய்தியாய் விழுந்தது.

ஞாயிறும், திங்களும் வாப்பாவின் கால் பாதத்தை யும், கழுத்தின் இறுக்கத்தையும் எண்ணிக் கடந்தன. எதற்கு அவருடைய வீம்பை எண்ணி மீண்டும்மீண்டும் சுழல்கிறேன் என்று ஸுஹைபு தன்னைத் தானே கேட்டுக்கொண்டான். “என்னடே கீப்பரு ஈவினிங் பெட் மேட்ச், வந்துரு” என்று ஜி குரூப் நண்பன்  பொன் மாதவன் நினைவூட்டினான்.

“இல்ல மக்கா நா சீக்கிரம் வீட்டுக்கு போணும். நெட் ப்ராக்டிஸ் இருக்குப் பார்த்துக்கோ” என்றான் ஸுஹைபு.

“சரியான நேரத்தில கால வாருகியேடே, வெளையாண்டுட்டு போடே”

“மத்தநாள்னா வெளையாடுவேன்லா. இணைக்கு வாய்ப்பே இல்ல, வேணும்னா திருவாழ்மார்பன எடுத்துக்கோ, மசக்காட்டான், நல்ல சுத்துவான், கீப்பருக்குச் செமையா காத்து வீசும்” என்று ஸுஹைபு கூற, “முடியாதுனுடேலா கௌம்பிட்டே இரு” என்று பொன் மாதவன் இ குரூப் கிளாஸ்நோக்கி நடந்தான்.

பள்ளிமுடிந்து வீடு சேர்ந்தவுடன் வாப்பா இருப்பதைப் பார்த்தும் பார்க்காமலும் மாடியேறிய ஸுஹைபிடம், “மாணிக்கத்த பார்க்கணும்னு சொன்னேலா, போயிருவோமா என்னா?” என்று நைனா கேட்டார்.

“ஆமா.”

“சரி, டீ குடிச்சிட்டு ட்ரெஸ்ஸ மாத்திட்டு வா. நான் பாய் கடை கிட்ட நிக்கேன்” என்று நைனா படியிறங்கி சென்றார். கட்டிலில் ருக்ஷனா தூங்கிக்கொண்டிருந்தாள். உம்மா துணியைக் கல்லில் அடிப்பது ஸுஹைபுக்குக் கேட்டது. மாடிக்குச் சென்று சட்டையை மட்டும் மாற்றிக்கொண்டு கிளம்பினான்.

நைனா “அதுக்குள்ள வந்துட்டா, டீ எடுத்தியா?” என்று கேட்க, “ஸுஹைபு நல்ல துடியில்லா, வேகமாட்டு கப்ப கவுத்திட்டு வந்துருப்பான்” என்று கிண்டினார் பாய், விரல்களின் நடுவே புகை வெளியேறிக்கொண்டிருந்தது.

“சும்மா இருங்க மாமா! அப்புறம் குடிக்கலாம்னு வந்துட்டேன்.”

“நாயர் கடையில ஒரு காபி எடுக்கியா” என்று நைனா பாக்கெட்டில் கைவிட்டு சில்லறையைத் தேடினார்.

சாரதா பவன் திண்டில் பாலின் தரமறிய கண்ணாடி குவளைகள் அடுக்கப்பட்டிருந்தன. சில குவளையில் கால் பங்கு வெண்மை, அரைக் குவளை தண்ணீர், ஒரு குவளையில் முக்கால் பங்கு நீர், அடியில் கால் பங்கு வெண்மை. அந்தக் குவளைகளில் நடுவே நாயர் பட்டையுடன் அமர்ந்திருந்தார்.

“வேண்டா. வந்து சாப்டுட்டுப் பார்த்துக்கிடலாம்” என்று ஸுஹைபு அவ்விடத்தை விட்டு நகர ஆயத்தமானான்.

“வரட்டா, மாமிய கேட்டதா சொல்லுங்க, இமாமுதீனையும்” என்று பாயிடம் கூறிவிட்டு நைனாவும் ஸுஹைபும் பார்க் நோக்கி சென்றனர்.

“வாப்பா, இங்க ஐயப்பங் கோயில் கிட்ட நில்லுங்க, நான் உள்ள போய் கூட்டிட்டி வாரேன்” என்று ஸுஹைபு பார்க்கினுள் சென்றான்.

நெட் ப்ராக்டிசில் வழக்கம்போல் வேகப்பந்து வீச்சாளர்கள் ஐயப்பனும், மாசானமும் ஆக்ரோஷமாய்ப் பந்து வீசிக்கொண்டிருந்தார்கள். நெட்டில் மாணிக்கம் ஹெல்மெட், கிலோவிஸ் என்று சகல பாதுகாப்புடன் தடுப்பாட்டம் ஆடிக்கொண்டிருந்தார்.

“டப்... லவ்லி டெலிவரி... லவ்லி டெலிவரி... சேம் லெங்த்...”

“வெல் லெப்ட் வெல் லெப்ட்... என்ன டெஸ்ட் மேட்ச்சானே... கனெக்ட் பண்ணு” - ஐயப்பன்.

“எண்ணே மாணிக்கனே, வாப்பா வந்துருக்கு”

“டப்... குட் ஷாட்... அப்படியே புல்லா பேட் போகட்டும்... ஸ்டாப் பண்ணாத”  -  மாசாணம்.

“வாப்பா வந்துருக்கு, மாணிக்கண்ணே” என்றான் குரல்  கூட்டி அழைத்தான்  ஸுஹைபு.

“இத புடி மக்கா” அடுத்தப் பேட்டிங் பிடிக்க ஆயத்தமாகி இருந்த கணேஷிடம் நெட் பொசிஷனை ஒப்படைத்துவிட்டு மாணிக்கம் ஸுஹேபுடன் ஐயப் பன்  கோவில்  நோக்கி  நடந்தார்.

“மாமா நல்லா இருக்கேளா?” மாணிக்கம் கேட்டார், கை, கால்களில் பேடுடன்.

“நமக்கென்ன! ஆச்சி நல்லா இருக்காளா?” என்றார் நைனா.

“இப்போ பரவாயில்ல, மெல்ல நடக்கா, டீ குடிக்கலாமா மாமா?”

“இல்ல இப்போ தான் வீட்ல குடிச்சிட்டு வந்தே, இவன் நீ எதோ பேசணும்னு கூப்ட்டேனு சொன்னான், அதான்” என்றான் நைனா.

“ஆமா மாமா, நம்ம டீம் பத்தி கேள்விப் பட்டிருப்பேள்லா?”

“அது இல்லாமலா, போன வருஷம் பெருசா போட்டியெல்லாம் நடத்துனேளா, இந்த வருஷம் அப்டி ஏதாச்சும் உண்டா? பையனையும் எடுத்து போடு, வெயிலுக்கப் பிள்ளலா இவன்?” என்று ஸுஹைபை தோளில் தட்டினார் நைனா.

“அதான் மாமா, ஸுஹைபு நல்ல விளையாடுகான், பேட்டிங், பௌலிங், கீப்பிங்னு எல்லாம்நல்லா வருகு, அதான் டீம் சார்பா டிஸ்ட்ரிக்ட் செலேச்ஷன் அனுப்பலாம்னு ஒரு யோசனை. அவன்கிட்ட கேட்டேன், உங்க கிட்ட கேக்கணும்னு சொன்னான். அதான்.”

வாப்பா ஸுஹைபை பார்த்து புன்னகைத்தார். “அது சரிதான். நல்ல போகட்டும். அதுக்கென்ன?”

“சில நாட்கள் ஸ்கூலுக்கு லீவு போட வேண்டிவரும். செலேச்ஷன் ட்ரைனிங்ஸ் போகணும், மேட்ச்லாம் இருக்கும். போனா உறுதியா செலக்ட் ஆகிருவான்” என்றார் மாணிக்கம்.

ஐயப்பன் கோவிலில் பூசைக்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தன.

“அப்போ வேண்டாம் மக்கா. படிக்கட்டும். சும்மா விளையாடுகது சரிதான். பின்ன இந்த விளையாட்டு சோறு போடுமானு தெரியல?” ஸுஹைபைப் பார்த்தார். அவன் இம்முடிவை ஏற்கனவே எதிர் பார்த்ததைப்போல் மாணிக்கம் அண்ணனைப் பார்த்துப் புன்னகைத்தான்.

நைனா தொடர்ந்தார். “மக்கா இந்தப் பீ காட்டுல நம்ம சுத்திலும் இருக்கப் பிள்ளேல் எவளோ பேரு எவளோ நாள் விளையாடுகா. அதே மாற்றி எவளோ பேர் விளையாடுவா. நீங்க எல்லாரும் நல்லத்தான் விளையாடுகெயோ. பொழுதனைக்கு ப்ராக்டிஸ் செஞ்சாச்சாலும் இது நிரந்தரமானு தெரில.”

“இல்ல மாமா, ஒரு மாதிரி விளையாண்டு உள்ள போய்ட்டா போதும். ஏதாச்சும் கவர்மண்ட் வேல கூடச் சிக்கும்” என்று மாணிக்கம் விளக்கினார்.

“இங்க நித்தம் ப்ராசிடிஸ் பண்ணுக பாதிபேர் மெடிக்கல் ரெப்பாட்டு தான வெயில்ல சுத்திக்கிட்டு இருக்கீங்க மக்கா. கொறச்சி சொல்லல. அதுலகஷ்டம் இருக்குனு சொல்லுகேன். இவன் படிக் கட்டும், எனக்கும் முன்னால மாதிரி திருவிழா, ஸ்கூல், கல்யாண ப்ரொக்ராம்ன்னு கெடைக்கதுஇல்ல.  இவன் படுச்சி கொஞ்சம் தலையெடுத்தாததான்” என்று வாப்பா தொடர, அருகிலிருந்த குமார் அண்ணன் வீட்டினுள்ளிருந்து “எம்மா... எம்புள்ள... எம்புள்ள...” என்று பெருங்குரலொன்று பூங்கா வீதியை நிறைத்தது. வாப்பாவும், மாணிக்கம் அண்ண னும் வீட்டுக்குள் சற்றும் யோசிக்காமல் ஓடினர். ஸுஹைபு சுதாரித்து அவர்களைப் பின்தொடர்ந்தான்.

உள்ளே தமிழ் அண்ணன் வாயில் நுரை தள்ள, அவனை மடியில் தாங்கி சுப்பம்மாள் கதறிக் கொண்டிருந்தாள்.

நைனா தமிழைத் தூக்கி, அவனது வாயில் விரல்களை விட்டு வாந்தி எடுக்க வைத்தார்.

“அந்தத் துணிய எடு” என்று மாணிக்கத்திடம்கூற, தமிழின் யமஹா பைக்கில் காயப்போட்டிருந்த துண்டை எடுத்து கொடுத்தார். அதற்குள் பக்கத்துக்கு வீட்டார் கூடிவிட்டனர். துணியை வைத்துத் தொண்டையில்  அழுத்த, தமிழ் குமட்டிக்கொண்டு வாந்தி எடுத்தான். தமிழின் அப்பா வீட்டிற்கு ஓடி வந்தார்.  “என்னாச்சி டீ...”

“உம்ம வெச வாய வச்சிட்டு எம்புள்ளய என்ன சொன்னீரு. அவனுக்கு எதாச்சின உம்ம என்ன சிச்சை செய்யேன் பாரும்” என்று அழுது  கீறினாள்.

வாப்பா தமிழைச் செவுட்டில் அறைந்தார். அவனைத் தூக்கிக்கொண்டு “அவசர” டாக்டர் மருத்துவமனை நோக்கி ஓடினார்.

“மாமா! வண்டில போயிரலாம்” என்று மாணிக்கம் கூவ, எதையும் கேளாதவராய் நைனா தமிழைத் தோளில் போட்டு ஓடினார்.

மாணிக்கம் வண்டியை எடுத்துக்கொண்டு தொடர்ந்தார். அடுத்தத் தெரு முக்கில் நைனாவை நெருங்கி, “மாமா ஏறுங்க” என்று வண்டி மருத்துவமனை நோக்கி பயணப்பட்டது.

“கொஞ்சமா கொழம்பு... கொஞ்சமா. ஹ்ம்ம் போதும். பையனுக்கு ஆயிசு கெட்டி தான். இருந்தாலும் பொன்னையா நாயக்கர் வெடுக்குனு வார்த்தையைப் போட்ருவாரு. தமிழு சுடுசொல் பொறுக்காத பையன்” என்று நைனா சோற்றை அள்ளி உண்டார். ஸுஹைபு கோழி கொத்துப் பரோட்டா தின்றுகொண்டே வாப்பா ஓடியதை எண்ணினான்.

“அப்டி இப்டி படிச்சாலும் பள்ளிக்கூடத்துக்குப் போறான். அப்புறமென்ன. செத்துப்பார்க்கலாம்னு நெனச்சிருப்பான் போல. நமக்கும் சாவுக்கும் நடுவுல பையன் கெடந்து கடைசில இப்போதைக்கு நம்ம கிட்ட இழுத்துப் போட்டாச்சி” என்ற வாப்பாவின் பேச்சில் சற்றுப் பெருமை தெரிந்தது. ஸுஹைபுக்கு வாப்பாவின் புதன்கிழமை மேஜிக் நிகழ்ச்சியை நினைவுக்கு வந்தது, கூடவே எரிச்சலும்.

வாரங்கள் கடந்தன.

“கமான் கமான், குமரண்ணே அப்டியே போடு, ஈஸி ஈஸி” என்று ஸுஹைபு கீப்பிங்கில் நின்று கூவினான். “ரெடி” என்று குமார் பௌலிங் போட போகும் கணத்தில், தமிழ் அண்ணன் பேட்டிங் நின்றுகொண்டிருந்த விஜயிடம் சென்று “லேய் பேட் குடு, நான் பேட்டிங் புடிக்கென்” என்று கேட்டான்.

குமார் அண்ணன் “கொடு” என்பதாய் கண் அசைத்தான். தமிழ் பேட்டை வாங்கிக்கொண்டு சுத்தி நின்ற பீல்டர்களை எண்ணி, “என்ன ஸுஹைபு அப்பா எப்படி இருக்கா?” என்றான்.

“வாப்பா நல்ல இருக்கானா?”

“அடுத்த மாசம் லவன்ஸ்ல இருக்கியா?” என்று கேட்டான் தமிழ்.

“பெட் மேட்ச் லவன்ஸ்ல இருக்கேன். கீப்பிங்” என்றான் ஸுஹைபு.

குமார் “ரெடி? லேய் “ஐடியா” பிரஸ்ட் ஸ்லிப்ல நின்னு என்ன பக்கடா போட்டுட்டு இருக்க. பொசிஷன்க்கு வாடே!  மக்கா ஸுஹைபு!   ரெடியா...”

“ரெடினே... கமான் ஈஸி ஈஸி” - ஸுஹைபு.

அன்று  மலவீச்சம்  சற்று  குறைவாகவே  இருந்தது.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer