ஒரு வழிப்போக்கனும் அவனது வழித்துணையும்

சித்ரன்

பகிரு

வாழ்வு நத்தையின் ஊர்தலைப் போல் அதிகுறை இயக்கத்தைக் கொண்டிருந்தது. எங்கும் சோர்வு சூழ்ந்த வெளி. ஒருவேளை அது என் மனதின் பிரதிபலிப்பாய் கூட இருக்கலாம். இம்முறையும் வங்கித் தேர்வின் முடிவு என்னை விரக்தியடையச் செய்திருந்தது. இதுநாள்வரை நான் எதிர்கொண்டிருந்த நேர்முகத் தேர்வுகளின் கேள்விகளுக்கான சாத்தியமான வேறு பதில்களை ஆராய்ந்துகொண்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாய் வழக்கம் போல் எண்ணங்களைக் கணிதச் சமன்பாடுகள் ஆக்கிரமித்துக்கொண்டன. அவை பேருந்தில் ஒலித்துக்கொண்டிருந்த பாடல்களில் என்னை ஒன்றவிடவில்லை. வண்டியோ வெகுநேரமாய்ப் புறப்படவிருப்பதைப் போல் முன்னேறுவதும் அதைத் தொடர்ந்து நடத்துநரின் விசில் ஒலிகளும் என என்னை எரிச்சலுறச் செய்திருந்தது. மாநகரின் அந்த நண்பகலை வாகனங்களின் புகையும் தூசியும் மேலும் உக்கிரமடையச் செய்திருந்தது. யாரோ என்னைத் தொட்டி நீருக்குள் அமிழ்த்துவதைப் போல் அந்த வெயிலையும் வெறுமையையும் உணரத் தொடங்கினேன். அது நீர் தொட்டியல்ல. நீராவியால் நிறைந்த தொட்டி. அப்பேருந்தே எனக்கு ராட்சச நீராவித் தொட்டியாய் தோன்றியது.

ஒருவழியாய்ப் புறப்பட்ட வண்டி எனக்கு இளைப்பாறலைத் தந்தது. சில நொடிகளில் யாரோ ஒருவர் ஓடிவந்து ஏறி என்னருகில் அமர்ந்தார். அவரது முகத்தைப் பார்க்க வேண்டுமென்ற உந்துதலைக் கட்டுப்படுத்திக்கொண்டேன். சட்டென எழுந்த ஒரு துள்ளல் இசைக்கு அருகில் இருந்தவர் தொடையில் தாளமிட ஆரம்பித்தார். சில முறைத் தாளம் தப்பி என் தொடையிலும் விழுந்தது. அது வண்டிக் குலுக்கலில் இருக்குமெனக் கால்களை ஒடுக்கி அமர்ந்தேன். வண்டி மலைக்கோட்டை நிறுத்தத்தைத் தாண்டியிருக்கையில் அவரிடமிருந்து சிரிப்பொலி கேட்டது. முழுதாய் தலையைத் திருப்பாமல் விழிகளை அவர் மேல் ஓடவிட்டேன். நாற்பது வயதிருக்கும். சற்று நரைத்த தாடியும் வயதிற்கு மீறிக் குடியேறியிருந்த முதுமையின் சாயலோடும் இருந்தவர் என்னை நோக்கித் திரும்பாமலே நான் கவனிப்பதை உணர்ந்தவர்போல் முன்னிருக்கையின் கீழிருந்த ஒலிப்பெருக்கியைச் சுட்டிக் காட்டினார். “அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்” என மனோவும் ஸ்வர்ணலதாவும் பாடிய பாடலது.

“நல்ல பாட்டுங்க” என்றார். நான் “ஆமாம்” எனத் தலையசைத்தேன். “ஓடும் காவிரி இவதான் என் காதலி குளிர்காயத் தேடித் தேடிக் கொஞ்சப்பிடிக்கும்.” இம்முறை அவர் சற்று உரக்கச் சிரித்தார். நான் என்ன என்பதைப்போல் அவரைப் பார்க்க “இல்ல ரொம்ப நாளா என் காதுல கொஞ்சப் பிடிக்கும்னு விழுகல. என்னடா இப்படி விரசமாவா பாட்டெழுதுவாங்கன்னு நெனச்சேன். அப்பறம் என் நண்பர்தான் வௌக்கமா சொன்னாரு.”

நான் அவரிடம் பேச விருப்பமில்லாதவனைப் போல் கால்களை மேலும் ஒடுக்கி அமர்ந்தேன். சாலையோரத்திலிருந்த கடையின் பெயர் பலகையைச் சுட்டி அவர் மேலும் பேச்சைத் தொடர்ந்தார். “பேரு வச்சிருக்காங்க பாருங்க ஆதிகுடி காபி கிளப். ஆதிகுடி சாராயக் கடை. சொல்லிப்பாருங்க தம்பி எவ்வளவு நல்லா இருக்கு. காபி கிளப்புக்கு ஆத்திக் குடின்னு பேரு வைக்கனும். என்ன நான் சொல்றது” எனப் பதிலை எதிர்பார்த்து எனது முகத்திற்கு மிக அருகில் வந்தார். நான் வேறுவழியின்றி

“இல்லங்க ஆதிகுடிங்கறது ஊரு பேரு. லால்குடி பக்கத்துல இருக்கு” என்றேன்.

“ஓஹோ” என ஏமாற்றமடைந்தவரைப் போல் முகத்தை வைத்துக்கொண்டார்.

“தம்பிக்கு லால்குடி பக்கமோ?”

“இல்ல புதுக்கோட்டை.”

“காஞ்சப் பய ஊரு” என முகத்தைச் சுளித்தவாறு சற்று உரக்கச் சிரித்தார்.

எனக்கு அவரது முகத்தில் ஒரு குத்து விட வேண்டுமெனத் தோன்றியது. மேற்கொண்டு பேச்சை வளர்க்க விரும்பாமல் வெளியே வேடிக்கை பார்ப்பவனைப் போல் தலையை நன்றாகத் திருப்பிக் கொண்டேன்.

பேருந்து மரக்கடை வீதி வழியாகச் சென்று காந்தி மார்க்கெட் நிறுத்தத்தில் நின்றது. பயணிகளை ஏற்றுவதற்காய் சற்று நேரம் அங்கே காத்திருந்த பேருந்து உடனே புறப்படவிருப்பதைப் போல் பாவனைக் காட்டிக்கொண்டிருந்தது. அந்தச் சில நொடிகளில் உள்ளங்கை நீளமுள்ள மல்லிகைப் பூச்சரங்களைப் பத்து ரூபாய் எனப் பேருந்தில் ஏறி இருவர் விரைவாய் விற்றுக்கொண்டிருந்தனர். நான் ஓடாத மணிக்கூண்டில் உறைந்திருந்த நேரமும் சரியாய் என் அலைபேசியில் அப்போது சுட்டிய நேரமும் பொருந்துவதைப் பார்த்து மெல்லியதாய்ப் புன்னகைத்தேன்.

“எவனுக்காகவோ போயி எவனோ சாவுறான் பாத்தீகளா?” என அவர் மணிக்கூண்டைப் பார்த்தவாறு சொன்னார். முதல் உலகப் போரில் பிரிட்டிசாருக்காய் மரித்த திருச்சிராப்பள்ளி ராணுவ வீரர்களின் நினைவிடமது.

நான் அவரோடு பேச விரும்பாததால் அவர் சொன்னது செவிகளில் விழாததுபோல் இருந்துகொண்டேன்.

பேருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. சிறுநீர் கழிப்பிடத்திற்குச் செல்கையில் அருகிலிருந்த தடுப்புச் சுவரின் மீது ஒரு பகார்டி பாட்டிலைப் பார்த்தேன். எனக்கு மது அருந்த ஆசைத் தோன்றியது. சமீபநாட்களாய் சுயஇன்பத்தைப் போல் அந்த நினைப்பும் மனதில் எழத் தொடங்கினால் என்னால் மனதை கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை. சுவர் முழுதும் ஹெச்.ஐ.வி மருத்துவம் மற்றும் ஆண்மை பெருக்கும் சுவரொட்டிகளால் நிறைந்திருந்தன. மிதமிஞ்சிய மூத்திர நெடியால் எனக்கு மூச்சடக்கி கண்மூடி சிறுநீர் கழிக்கச் சற்றுக் காலதாமதம் ஆனது. நான் தலை கவிழ்ந்து சிறுநீர் கழித்துவிட்டு நிமிர்கையில் மதுக்குடுவை கால் பங்கு நிரம்பியிருந்தது. நான் அதிர்ச்சியுற்றுத் திரும்ப நரைதாடிக்காரர்

“எவன் போதைக்காவது ஆகும்ல தம்பி” என்றவாறு சிரித்தார். சிரித்ததில் அவருக்குப் புரையேறி கண்களில் நீர் வழிந்தது. என்னால் அவரைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. அந்த  ஆள் என்னைப்  பின்தொடர்வது  போலும்  தோன்றியது. வேகமாய் வெளியேற மூத்திர நெடி பேருந்து நிலையம் முழுதும் நிறைந்திருப்பதாய் தோன்றியது. பேருந்தில் படிக்க வேண்டும் என்பதற்காய் வேளாண்மை குறித்த மாத இதழ் ஒன்றை வாங்கி வந்தேன். புறவழிச்சாலையில் செல்லும் வண்டிக்காய்க் காத்திருந்த வேளையில் அம்மாத இதழைப் புரட்டினேன். உழவர்கள் தாங்கள் விளைவித்த பொருட்களோடு புன்னகை ததும்பும் முகங்களாய் தங்கள் வெற்றிக் கதைகளைச் சொல்லியிருந்தனர். நான் என்னுடைய எதிர்காலம் குறித்த கற்பனையில் மூழ்கத் தொடங்கினேன். அடுத்த வங்கித் தேர்வில் புரொபெசனரி ஆபிசராய் தேர்வானேன். நிலத்தடி நீர் ஆயிரம் அடிகளுக்குக் கீழ் சென்ற என் நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்தேன். என் குடும்பத்தின் ஒன்றரை ஏக்கர் நூறு ஏக்கர்களாய் விரிந்து பெருகியது. வங்கி அதிகாரியாய் இருந்துகொண்டே நஞ்சற்ற காய்கறிகளை உற்பத்தி செய்கிறேன். அதை விற்பனை செய்ய எல்லா ஊர்களிலும் இயற்கை அங்காடிகளைத் திறக்கிறேன். பின் எனது நிலத்தின் விளைச்சலை மட்டுமே சமைக்கும் ஒரு உயர்தர உணவகத்தை ஆரம்பிக்கிறேன். பின் எனக்கு வங்கி அலுவலர் வேலை தேவையில்லாமல் போகிறது. செல்வம் கணக்கற்றுப் பெருகுகிறது. நான் கட்ட நினைக்கும் பங்களாக்கள் குறித்தும் பயணம் செய்ய நினைக்கும் கார்கள் குறித்தும் கற்பனை வளர்கையில் என்னவென்று சொல்ல இயலா ஒரு குற்ற உணர்வு என்னுள் உருவாகியது. அப்போது மனக்கண்ணில் வெள்ளைக் குல்லாவோடு ஜே.சி.குமரப்பா எட்டிப்பார்க்கிறார். இ.எஃப்.ஷூமாஸர் ‘சிறியதே அழகு’ என்கிறார். காந்தி ஈறு தெரிய புன்னகைக்கிறார். எனக்குக் குற்ற உணர்விலிருந்து மீள வழி கிடைத்துவிட்டது. நார்த்தாமலை திருவிழாவிற்கும் திருவப்பூர் திருவிழாவிற்கும் காலை முதல் இரவு வரை எனது உணவகத்தில் அனைவருக்கும் அன்னதானம் நடைபெறுகிறது. என்னை மக்கள் ஊராட்சித் தலைவர் தேர்தலுக்கு நிற்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர். நான் முடியாதென மறுக்கின்றேன். ஆனால் மக்கள் சக்திக்கு அடிபணிந்துதானே ஆகவேண்டும். அப்போது எனது எண்ண ஓட்டங்களைத் தம்பி தம்பியென ஒரு குரல் இடைமறித்தது. நரைதாடிக்காரர் அழைத்தார். எனது எரிச்சலை காட்டிக்கொள்ளவில்லை.

“தம்பிக்கு கூகுள் பேல அக்கவுண்ட் இருக்கா?”

“இல்லண்ணே”

“என்ன தம்பி என்னய பாத்தா களவாணிப் பய மாதிரித் தெரியுதா?”

அந்த நேரடிக் கேள்வியால் என்ன சொல்வதெனத் தெரியாமல் நான் திகைத்த வேளையில் “தம்பி என் சேக்காளி பணம் தரணும். என் அக்கவுண்டுக்குப் போடுறான். ஆனா என்னோட எ.டி.எம் கார்ட தொலைச்சுட்டேன். அதான். ஆயிரம்தான். அவன் ஒங்க நம்பர்ல போட்டதுக்கு அப்புறம் கையில இருந்து குடுத்தா போதும்” என்றார்.

என்னிடம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் இருந்தது. சரியென்று ஒப்புக்கொண்டு அலைபேசி எண்ணை கொடுத்தேன். என்னிடமிருந்து சற்று விலகிச் சென்று அலைபேசியில் பேசியவர் “தம்பி தர்மராசுங்கறது தான் ஒங்க பேரா” எனக் கேட்க நான் ஆமெனத் தலையசைத்தேன். எனது வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய்ச் செலுத்தப்பட்டது குறித்த குறுஞ்செய்தி வந்தது. எனது கூகுள்பே செயலியை சோதித்து விட்டு ஆயிரம் ரூபாயைத் தந்தேன். அவர் வேகமாய் பேருந்து நிலையத்தை விட்டு வெளியேறினார். எனக்கு ஏதோ செய்யத் தகாததைச் செய்துவிட்டதைப் போல் உறுத்தலாய் இருந்தது.

பேருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைத் தாண்டியிருக்கையில் எனது அலைபேசி எண்ணுக்கு அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்ற நொடியில் “யோவ் எவ்வளவு நேரமாச்சு போன் அடிச்சாலும் அந்த ஆளு எடுக்க மாட்டேங்குறான்?” என்றொரு குரல்  சற்று ஆவேசமாய் முறையிட்டது.

நான் சற்றுப் பொறுமையாய் “யார்ணே நீங்க எதோ ராங் நம்பர்னு நினைக்கிறேன்” என்றேன்.

“மயிரு என்ன விளையாடுறீகளா புடுங்கிகளா ஆயிரம் ரூவா அட்வான்ஸ் வாங்குனீல அயிட்டம் எங்கடா?” அவன் குரல் மேலும் உக்கிரமடைந்தது.

“என்ன அயிட்டம்ணே” என் குரலில் படபடப்போடு சற்று ஆர்வமும் தொனித்தது.

“உங்க அக்கா.”

அப்பதிலால் நான் ஆத்திரமுற்றாலும் சற்றுத் திடமான குரலில் அவரிடம் சொன்னேன் “நான் வீட்டுக்கு ஒத்தப் புள்ளண்ணே.”

“டேய் தாயளி ஒங்காயி அப்பனுக்குப் புள்ளயே இல்லாம ஆக்கிருவேன். லாட்ஜ் ரூம் செலவு வேற... தர்மராசாம் மயிராண்டி தேடி வந்து கொல்லுவேன் பாத்துக்க.”

நான் வேகமாய் இணைப்பைத் துண்டித்தேன். அந்த எண்ணிலிருந்து தொடர்ச்சியாய் அழைப்புகள் வந்தன. சற்று நேரம் கழித்து ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்பதா வேண்டாமா எனக் குழம்பி இறுதியில் அழைப்பை ஏற்றேன்.

“என்ன தம்பி பஸ் ஏறியாச்சா? எதுவும் கூப்பிட்டாங்களா?” என்ற கேள்வியின் மூலம் அழைத்தவர் யாரென அறிந்துகொண்டேன்.

“அண்ணே யார்ணே நீங்க? ஒங்களால என்னைய கொண்ருவேன்னு மிரட்டுறாங்க.”

“தம்பி ஆயிரம் ரூவாக்குல்லாம் கொல்லுவாங்களா? சும்மா ஏசிட்டு விட்டுறுவானுங்க. பயப்படாதீக. உண்மையிலே என் ஏ.டி.எம் கார்டு தொலஞ்சு போச்சு. எனக்கு அவசரமா கொஞ்சம் காசு தேவை. நாளைக்கு வந்தீகண்ணா நீங்க ஆயிரத்துக்கு எறநூத்தம்பது எடுத்துக்குங்க. என்ன நான் சொல்றது. சலுகை புதிய ஏ.டி.எம் கார்டு வரும் வரை மட்டுமே” என்று இறுதி வரியை விளம்பர அறிவிப்பைப் போல் சொல்லிவிட்டுச் சிரித்தார். எனக்கு அடிவயிற்றிலிருந்து கிளம்பிய எரிச்சலோடு வாயில் வந்த வசைச் சொல்லைக் கட்டுப்படுத்தியவாறு அழைப்பைத் துண்டித்தேன். மீண்டும் பணம் அனுப்பியவனிடமிருந்து அழைப்பு வந்தது. அழைப்பைத் துண்டித்துவிட்டு அவனுடைய எண்ணுக்கு கூகுள்பேயில் இரண்டாயிரம் ரூபாயை அனுப்பி வைத்தேன். அதன் பிறகு அவனிடமிருந்து அழைப்பு வரவில்லை.

இரவு உறங்குவதற்கு முன் நரைதாடிக்காரரிடமிருந்து வாட்ஸப்பில் நாளை காலை ஒன்பது மணியளவில் மத்திய பேருந்து நிலையத்தில் உங்களுக்காய் காத்திருப்பேனெனக் குறுஞ்செய்தி வந்தது. பதிலுக்கு நான் அனுப்பிய இரண்டாயிரம் ரூபாய் பரிவர்த்தனைக்கான ஸ்கிரின் ஷார்ட்டையும் அதன் கீழே “போயா லூசு கூ...” என்று தட்டச்சு செய்தும் அனுப்பி வைத்தேன். அவரிடமிருந்து சற்று நேரத்தில் “தம்பி இன்று நடந்ததை உங்கள் நண்பர்களிடம் சொல்லிப் பாருங்கள் அனைவரும் உங்களைத் தான் லூசு கூ... என்று சொல்வார்கள்” எனப் பதில் வந்தது. ஆத்திரத்தில் அலைபேசியை ஒலிக்காதவாறு செய்துவிட்டு தலையணையை நாலு முறைக் குத்தி விட்டு உறங்கிப் போனேன்.

மறுநாள் காலை கண்விழிக்கத் தாமதம் ஆனது. அவசரகதியில் கிளம்பி திருச்சி பேருந்தில் செல்லும் போது நரைதாடிக்காரரின் நினைப்பு வந்தது. அவரைக் குறித்துச் சிந்திப்பதைத் தவிர்த்துப் பயிற்சி வகுப்பில் அன்றைய தேர்வுக்கான பாடங்களைப் புரட்டத் தொடங்கினேன். ஆனால் மத்திய பேருந்துநிலையத்தில் இறங்கியதும் நான் எதிர்கொண்டது அவரைத்தான். எனக்கு அவரை எப்படித் தவிர்ப்பதெனத் தெரியவில்லை. ஏதோ விதி என்னைப் பெரிய வில்லங்கத்தில் தள்ளிவிட முயற்சிப்பதாய் தோன்றியது. அவரோ எனது எண்ணங்களைத் தெளிவாய் ஆராய்ந்திட போதிய நேரம் அளித்திடவில்லை. “தம்பி ராத்திரி நல்லா ஒறங்குனீகளா? ஆன் லைனுக்கே வரலையே கொஞ்சம் உங்க அக்கவுண்ட செக் பண்ணுங்க” என்றார்.

“அண்ணன் என்னைய தொந்திரவு பண்ணாதீங்க அப்புறம் போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணிருவேன் பாத்துக்குங்க.”

“சரி தம்பி நானே கூட்டிக்கிட்டுப் போரேன் பதராதீக.”

“என் பசங்க மூணு பேரு எஸ்.ஐ யா இருக்காங்க. ஒரு வார்த்தை சொன்னாப் போதும்.” (உண்மையில் என்னுடன் பயிற்சி வகுப்பில் பயில்பவனின் நண்பர்கள் சென்ற எஸ்.ஐ. தேர்வில் தேர்வாகியிருந்தனர்).

“அப்படியா என்னன்னு சொல்லுவீக”

“ஒங்ககிட்ட எனக்கென்ன பேச்சு”

“சரி தம்பி கோச்சுக்காதீக. நானும் புதுக்கோட்டைக்காரன்தான். அரண்மனைக் கொல்லைதான் பூர்வீகம். கொஞ்சம் அந்த டீக்கடைக்கு வாங்க பொறுமையாப் பேசுவோம்” என அழைத்தார். எனது அம்மாச்சியின் பூர்விக ஊர் அது. ஒரு வேளை அவர் என் உறவினராய் கூட இருக்கலாம். அதெல்லாம் நான் அவரிடம் சொல்லிக் கொள்ளவில்லை. என் முகத்தில் குடியேறியிருந்த வெறுப்பைச் சரி செய்ய அவர் ஏதேதோ பேசியவாறு வந்தார். நான் அவருக்கு எதிர் திசையில் முகத்தைத் திருப்பியவாறு சென்றேன்.

பேருந்து நிலையத்திற்கு வெளியிலிருந்த தேநீர் கடைக்குச் சென்றோம். அவர் இரண்டு தேநீரைச் சொல்லிவிட்டுச் சாலையில் செல்வதற்குச் சிரமப்பட்ட காருக்கு வழிவிடும் விதமாய் ஒரு இருசக்கர வாகனத்தை ஓரமாய் நகர்த்தி வைத்தார். இருவருக்கும் தேநீர் வந்தது.

இரண்டு தேநீருக்கும் நானே காசைத் தந்துவிட வேண்டும் என்பதற்காய் சூட்டோடு அருந்த தொடங்கினேன். “தம்பிக்கு புதுக்கோட்டையில எங்க?” என்ற அவரது கேள்விக்கு “வம்பன் நால்ரோடு” என்றேன். என் ஊர் ஆலங்குடி என்பதை நான் சொல்ல விரும்பவில்லை.

“அப்படியா நான் எட்டாவதுலேந்து பன்னென்டாவது வரைக்கும் வேங்கிடகுளத்துல தான் படிச்சேன். தம்பியும் அங்க தான படிச்சிருப்பீக?” என்றார். “இல்ல நான் ஆலங்குடியில படிச்சேன்” எனப் பதிலளித்ததற்கு “அப்பன்னா ஆலங்குடியில தானே வீடு இருக்கு” எனச் சிரித்தார். நான் எப்படிக் கண்டறிந்தார் எனப் புரியாமல் விழித்தேன்.

அவர் எனது சங்கடத்தை உணர்ந்து சிரிப்பை அடக்கும் விதமாய் உதடுகளை மடித்துக்கொண்டார். நான் வேகமாய் தேநீரை அருந்திவிட்டுக் காசைக் கொடுக்கலாம் என முயற்சிக்கையில் நான் கையில் வைத்திருந்த கண்ணாடி டம்ளரை வாங்கி அருகிலிருந்த ட்ரேயில் வைத்தவாறு அவர் பேசத் தொடங்கினார். அக்குரலில் எதோ ஒரு வசீகரமிருந்தது.

“மதுரையில டிப்ளமோ அக்ரி படிச்சேன் தம்பி. அப்ப என் கூடப் படிச்சவன் ஒருத்தன் கரூர்காரன். படிக்குற காலத்துல நல்ல நண்பன். எங்க போனாலும் ஒண்ணாத்தான் போவோம் வருவோம். படிச்சு முடிச்சுட்டு திருச்சியில உரக்கடை வைச்சோம். யோசனை அவனோடது. ஆனால் காசு முழுக்க என்னோடது. எங்க அம்மா நகையை வித்துக்கொடுத்தா. ஆனா அப்பாவுக்கு அதுல விருப்பமில்ல. கூட்டுல போகாதடான்னாரு. நான் கேக்குற மனநிலையில இல்ல. என் பார்ட்னர் அஞ்சு காசு கொடுக்கலை. கடையில நல்ல வியாபாரம். இலாபத்துல அவன் முதல் போட்ட மாதிரி கழிச்சுக்கிட்டோம். வெவசாயி எங்க வாழ்ந்தான். உரக்கடைக்காரன் தானே வாழ்ந்தான். தில்லை நகர்ல சொந்த வீடு வாங்குனேன். கல்யாணம் ஆச்சு. எங்க அம்மா முதல்ல போயி சேந்துச்சு. கொஞ்ச நாள்ல அப்பாவும் அம்மாவோட கூட்டு சேந்துட்டாரு. நல்ல வேளை அப்புறம் நான் அனுபவிச்சதெல்லாம் அவரு பாக்கல.”

சூடு ஆறியிருந்த தேநீரை ஒரே மடக்கில் அருந்திவிட்டு அருகிலிருந்த ட்ரேயில் வைத்துவிட்டு காசு கொடுக்கச் சென்றார். ஏனோ எனக்கு மறுக்கத் தோன்றவில்லை.

தேநீருக்குக் காசைத் தந்தவர் பேச்சைத் தொடர்ந்தார். “எனக்கு ஊர்ல கொஞ்சம் நெலம் இருந்துச்சு. அதுல வெவசாயம் பாக்கணும்னு ஆசை. அப்பப்ப ஊருக்கு போயிட்டு வருவேன். அந்த நேரத்துல அவன் தனியா கரூர்ல ஒரு கடை ஆரம்பிச்சிருக்கான்.

எனக்கது தெரியல. நம்ம கடை பேர்ல கடனுக்குச் சரக்கெடுத்து அவன் கடையில வித்திருக்கான். கடன் அதிகமா போகவுட்டு கடையிலேந்து அவன் பங்கு காசையும் வாங்கிட்டு வௌகிட்டான். அதுக்கப்புறம் தான் எனக்கு விசயம் தெரிஞ்சுச்சு. ஆனா என்ன பண்றது எல்லாம் கைய மீறிப் போச்சு. ஏற்கனவே இருக்குற கடன அடச்சாத்தான் மேற்கொண்டு சரக்குன்னு எல்லா டீலரும் சொல்லிட்டானுங்க. கடையில விக்க ஒன்னும் இல்ல. வீடு வித்ததுல பாதிக் கடன் தான் முடிஞ்சுச்சு. அப்புறம் கடையயும் மூடிட்டேன். கடனக் கொடுத்தவன் எல்லாம் வீடு தேடி வர ஆரம்பிச்சான். கடனத் திருப்ப வழி யில்லேன்னா பொண்டாட்டிய வைச்சுச் சம்பாரிக்கச் சொன்னானுங்க. எங்க அப்பாரு சொன்னதக் கேட்காமவிட்டுட்டோமேன்னு அப்ப வருந்துனேன். மீள்றதுக்கு வழியே தெரியல. எல்லாம் இழந்து நடுத்தெருவுக்கு வர்ரறதுனா என்னன்னு அப்பதான் புரிஞ்சிச்சு. எனக்குச் சொந்தமானது எல்லாம் கையவிட்டுப் போச்சு. உசிரு மட்டும் மிஞ்சிச்சு. கொஞ்சநாள் எப்படி சாகலாம்னு யோசிச்சுக்கிட்டு சுத்தித் திரிஞ்சேன். எனக்குச் சாகப் பயம் இல்ல. ஆனா என் சாவு மூலமா அவனப் பழிவாங்கணும். ஒரு நாள் விடியயில கரூர் பஸ்ல கிளம்பிப்போனேன். எனக்கு அவன் கண் முன்னால சாகணும்னு ஆசை. ரொம்ப நாள் கழிச்சு கர்நாடகாக்காரன் காவிரில ஒரு லட்சம் கன அடி தொறந்திருந்தான். ரெண்டு கரையும் தொட்டுக்கிட்டு காவிரி பாயுறா? அவளும் கடலுக்கிட்ட தன்ன பலி கொடுக்கப் போறான்னு தோணுச்சு. அவளைப் பாத்துக்கிட்டே பஸ்ல போனேன். ரெண்டு பேரும் எதிர் எதிர் தெசையில. ஆனா நோக்கம் ஒன்னுதானே. குளித்தலையிய அவ என்னய கூப்புடுற மாதிரி தோணுச்சு. நான் முசிறி பாலத்துல எறங்கிட்டேன். அப்படியே பாலத்துல நடந்து போனேன். விடிஞ்சு அரை மணி நேரம் ஆகியிருக்கும். பெருசா ஆளுக நடமாட்டம் இல்ல. அதுதானே அகண்ட காவிரி. என்ன ஒரு பிரம்மாண்டம். அத முழுசாப் பாக்க எனக்குக் கண்ணு கொள்ளல. கெழக்காலச் சூரியன் மேகத்துக்குள்ளாற மறைஞ்சிருந்துச்சு. இன்னும் முழுசா மேல வரல. காவிரிய வடக்கு கரையிலேந்து தெற்கு கரை வரைக்கும் ஒரு பார்வை பார்த்தேன். அப்படியே தெகப்பா இருந்துச்சு. ஏதேதோ பறவைங்க மீன் தேடித் திரிஞ்சுதுங்க. நான் அப்படியே கொஞ்ச நேரம் கண்ண மூடி நின்னேன்.” அதைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர் கண்களை மூடி சில நொடிகள் மௌனமாய் இருந்தார். அதை மீண்டும் மனதிற்குள் நிகழ்த்துபவரைப் போல. எனக்குப் படபடப்பாய் இருந்தது. இதோ அவர் என் கண் முன்னே ரத்தமும் சதையுமாய் நிற்கிறார் எதற்கு நான் பதட்டமடைய வேண்டும் என மனதிற்குள் சொல்லிக்கொண்டேன். ஆனால் என் சமாதானங்கள் என்னை ஆற்றுப்படுத்தவில்லை.

அவர் கண்களை மூடியவாறே தொடர்ந்தார். “அவள் ஆர்ப்பரிக்குற ஓசை. பால்கொடம் எடுக்கயில பொம்பள ஆளுக சாமி வந்து ஆங்காரமா ஆடுங்களே அது மாதிரி. கொஞ்ச நேரம் அந்தச் சத்தத்த கண்ண மூடிக்கிட்டுக் கேட்டுக்கிட்டிருந்தேன். திடீர்னு ஒரு குரல் கேட்டுச்சு. வா ரெண்டு பேரும் ஒன்னாப் போவோம் அப்படின்னு.”

அப்போது அவர் கண்களைத் திறந்தார். “ஆமா காவிரி பொண்ணுதான். யோசிக்காம குதிச்சிட்டேன். நான் நல்லா நீந்துவேன். ஆனால் இதுவரைக்கும் ஆத்துல நீந்துனதே இல்ல. அவ என்ன இழுத்துக்கிட்டுப் போறா. நான் அவ இழுப்புக்கு நீந்துறவனோட உள்ளுணர்வுல நீந்திப் போறேன். என்னால தெடமாச் சொல்ல முடியும். அது உயிர் ஆசையில்ல. அப்பதான் அந்த அதிசயம் நடந்துச்சு. எங்கேருந்தோ பத்து நீர்காகம் எனக்கு முன்னால பறக்க ஆரம்பிச்சுதுக. என்னமோ எனக்கு வழிகாட்டுற மாதிரி.

எனக்கும் அதுகளுக்கும் இருபதடி தூரம் எடவெளி இருக்கும். நான் எருக்கம் புதருக்குள்ளயும் நாணலுக்குள்ளாறயும் மாட்டுறப்ப அதுகளும் அந்தரத்துல எனக்காகக் காத்திருக்குதுக. நான் அதுகள நோக்கி நீந்தத் தொடங்குனேன். அதுக என்னய எங்கேயோ கூட்டிக்கிட்டுப் போகுதுங்க. கருவேலம் முள்ளு கிளிச்சு என் உடம்பெல்லாம் எரியுது. எப்படியும் பத்து சுழலுக்கிட்ட இருந்தாவது தப்பிச்சிருப்பேன். அங்கெல்லாம் அதுக வௌகிப் பறக்குதுங்க. இல்லன்னா நிச்சயம் அந்தச் சுழலுக்குள்ளாற மாட்டிருப்பேன். அப்படியே எவ்வளவு நேரம் நீந்துனேன்னு தெரியல. திடீர்னு அதுக எல்லாம் வல்லாங்கை பக்கமா பறக்க ஆரம்பிச்சுதுங்க. நானும் அதுக பின்னாடியே நீந்திப் போனேன். அதுங்க அப்படியே பறந்து போயி கரையில இருந்த ஒரு கோயில் கோபுரத்துல அமருதுங்க. அதுல ஒரு சுதைச் சிற்பம் மட்டும் தெளிவா என் கண்ணுக்குத் தெரியுது. அது தெறந்த மேனியா ஒரு பொண்ணோட சிலை. ஆனா அவ விசித்திரமா காவிரிக்குத் தன்னோட யோனிய விரிச்சுக் காட்டுறா. எனக்கு எதுவோ புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு. ஆனா மனசுல ஒன்னு தெளிவா மின்னலடிச்சுச்சு. காவிரி கடலுக்குத் தன்ன பலி கொடுக்கப் போகல. அவ எல்லாரையும் வாழவைக்கதான் போறான்னு. கடல்தானே இந்த ஒலகத்தோட கர்ப்பப்பை. மொத உசிரு அங்க இருந்து தானே உருவாச்சு. மழைத் தண்ணி இல்லென்னா நெடுங்கடலும் நீர்மை குன்றுங்கிறான் வள்ளுவன். நதிங்கிறது மழையோட ஓட்டந்தானே. கடல்ல ஆறு நொழையுதே அதுதான் பூமியோட யோனின்னு தோணுச்சு. இதெல்லாம் அப்பத்தான் தோணுச்சா இல்ல அப்புறமா நான் எனக்குள்ளாற இப்படி வௌக்கம் குடுக்குறேனான்னுத் தெரியல. நான் அப்படியே ஆத்தோட போக்குல போனேன். எலவம்பஞ்சு காத்தடிக்குறத் தெசையில பறக்குற மாதிரி. மனசுல இருந்த பாரமெல்லாம் எங்க போச்சுன்னே தெரியல. ரொம்பக் குதூகலமா இருந்துச்சு. முத்தரசநல்லூர் தாண்டுனோன்னே ஸ்ரீரங்கம் கோபுரம் கண்ணுல பட்டுச்சு. அப்படியே நீரோட்டத்துல போயி அம்மா மண்டப படித்துறையில கரையேறுனேன். தண்ணி அதிகமா ஓடுதுன்னு அங்க காவலுக்கு இருந்த போலீஸ்காரன் ஒருத்தன் என்னய ஏதோ கடவுளப் பாத்த மாதிரி கும்பிட்டான். என் உடுப்பெல்லாம் முள்ளுல கிழிஞ்சு ஆத்தோட போயிருந்துச்சு. அங்க யாருக்கோ திதிக் குடுத்த வேட்டியொண்ணு கம்பில சுத்திக் கெடந்துச்சு. நான் அதை உடுத்திக்கிட்டேன். அப்படியே நாலு நாள் தண்ணி குறையுற வர ஆத்த பாத்துக்கிட்டே அங்கயே ஒக்காந்திருந்தேன். நாலு நாளும் அந்தப் போலீஸ்காரன் தான் எனக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தான். அப்புறமா எனக்கு சாவத் தோணல” என்றார்.

இருவரும் மௌனமாய் இருந்தோம். நான் இப்படியொரு உணர்ச்சிப் பெருக்கான உரையாடலை எவருடனும் நிகழ்த்தியதில்லை. ஆகவே எனக்கு அவரிடம் என்ன சொல்வதெனத் தெரியவில்லை.

அவர் தலை கவிழ்ந்து வெகுநேரம் மௌனமாய் இருந்தார். நான் அந்த மௌனத்தைக் கலைக்கும் விதமாய் “இப்ப ஏன்ணே இந்த வேலை செய்யுறீங்க” என்றேன்.

நிமிர்ந்து என்னைப் பார்த்தவர் “என்ன தம்பி செய்யச் சொல்றீக. அரைக்காசுக்கு போன மானம் ஆயிரங் கொடுத்தாலும் திரும்ப வராது. நெட்ல இதுக்குன்னு சில சைட்ஸ் இருக்கு. அதுல என் நம்பர் கொடுத்து வைப்பேன். எவனாவது போன் பண்ணி பொம்பள கூட்டிவிடக் கேப்பான். நான் அட்வான்ஸ் அனுப்பச் சொல்லிட்டு அப்புறம் ஃபோன எடுக்க மாட்டேன். ஆயிரம் ரூபாய்க்கு மேல இல்ல. அதுவும் மூணு நாளைக்கு ஒருத்தன். எனக்கும் இந்த ஈனத் தொழில் பிடிக்கலதான். என்னால எவங்கிட்டயும் வேலைக்குப் போக முடியல.” என்றார்.

“சரிண்ணே நான் என்ன செய்யணும்”

“உங்க அக்கவுண்ட செக் பண்ணுங்க தம்பி” என்றார்.

நான் எனது அலைபேசியை வெளியில் எடுத்தேன். அதில் முப்பது தவறிய அழைப்புகள் இருந்தன. நல்ல வேளையாக நேற்றிரவு அலைபேசியை மௌனிக்கச் செய்திருந்தேன். கூகுள்பேயில் நேற்றிரவு மட்டும் ஒன்பது நபர்கள் ஆயிரம் ரூபாய் அனுப்பியிருந்தனர். அதை அவரிடம் தெரிவித்தேன். அவர் என்னை ஏ.டி.எம்முக்கு தனது ஹோண்டா ஷைன் பைக்கில் அழைத்துச் சென்றார். நான் ஒன்பதாயிரத்தை வெளியிலெடுத்து அவரிடம் தந்து விடைபெற முயற்சித்தேன். அவர் தன்னுடன் வரச்சொல்லி என்னையும் அழைத்தார். நான் மறுக்கவில்லை. அங்கிருந்து சிறிது தொலைவில் ஒரு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். வழக்கறிஞரின் பெயர் புண்ணியமூர்த்தி என்றிருந்தது. நான் வெளியில் காத்திருந்தேன். அவர் அவ்வழக்கறிஞரோடு வந்தார். வழக்கறிஞர் நெற்றியில் குங்குமமிட்டு இருந்தார். கருப்பு வெள்ளை உடையில் சற்றுப்பருத்த உடலோடும் மயிரடர்ந்த செவிகளோடும் இருந்தார். நாங்கள் எங்களது வண்டியைக் கிளப்ப அவர் தனது வெள்ளை நிற ஆக்டிவாவை இயக்கினார். அதன் முகப்பில் வழக்கறிஞர்களுக்கான கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது.

இரு வண்டிகளும் சாலையில் இணையாய் பயணிக்கையில் வழக்கறிஞர் “பரமசிவம் அந்தப் பயல நம்பலாந்தானே?” என்றார். (அப்போது தான் நரைதாடிக்காரரின் பெயர் எனக்குத் தெரிய வந்தது).

அதற்கு “சார் அவனுக்கு ரொம்ப வெவரமெல்லாம் தெரியாது. எவனோ வண்டிய ரிப்பேர் பாக்க குடுத்துருக்கானுங்க. அது செயின் அடிக்குறவங்க வண்டின்னு எப்படித் தெரியும்? முந்துன வாரம் ராமலிங்க நகர்ல செயின் அடிக்கும் போது சிசிடிவியில வண்டி நம்பர் சிக்கியிருக்கு. பாத்தா வண்டிய ரிப்பேர் பாத்த மெக்கானிக்க ஸ்டேசனுக்குக் கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க” என இவர் பதிலளித்தார்.

“சரிப்பா அவன் வண்டிக்காரன் போன் நம்பர வாங்கி வச்சிருக்கலாம்ல?” என்றதற்கு

“சார் இவன் நம்பரத்தான் கொடுத்திருக்கான். அவனுங்களடோத வாங்கல” என்றார்.

“போலீஸ்காரனுங்க வண்டி நம்பர வச்சும் ஆளப் புடிக்க முடியலேங்குறானுங்க. ஏதோ பழைய கண்டமான வண்டி நம்பராம் அது. சரி நீ எதுவும் வாயத் திறக்காத நான் பேசிக்குறேன்” என வழக்கறிஞர் சலிப்புடன் சொன்னார்.

நாங்கள் கண்டோன்மென்ட் காவல்நிலையத்திற்குச் சென்றோம். சில கரை வேட்டிக்காரர்கள் காவல் நிலையத்தின் வெளியே நின்றிருந்தனர். அதில் சிலர் வழக்கறிஞருக்கு வணக்கம் வைத்தனர். பரமசிவம் என்னை எங்கும் சென்றுவிட வேண்டாமென்றும் வெளியே காத்திருக்குமாறும் சொல்லிச்சென்றார். என்னைக் கடந்து சென்ற காவல்துறையினரின் வாக்கிடாக்கிகள் இடைவெளியில்லாமல் ஒலித்துக்கொண்டிருந்தன. யாரும் என்னைப் பொருட்படுத்தவில்லை. நான் காத்திருந்த நேரத்தில் அலை பேசியில் வாட்ஸப் செயலியைத் திறந்தேன். பணம் அனுப்பிய சிலர் என்னை மிக மோசமான வசைகளால் திட்டியிருந்தனர். அவர்கள் அனைவரையும் பிளாக் செய்தேன்.

அரைமணி நேரம் கழித்துப் பரமசிவமும் வழக்கறிஞரும் திரும்பி வந்தனர். உடன் வேறொருவரும் வலது காலைச் சற்றுத் தாங்கியவாறு நடந்து வந்தார். வழக்கறிஞர் தனது ஆக்டிவாவைக் கிளப்பும் முன்பு “யப்பா சக்திமானு அவனுங்க எதுவும் கால் பண்ணா ஒடனே போலீஸுக்கு சொல்லிரு. சரியா? என்ன சொல்லிருவாப்லயா பரமசிவம். பையனுக்குச் சாமர்த்தியம் பத்தாது போலயே?” என்றார். பரமசிவம் சக்திமானுக்கு நற்சான்றிதழ் வழங்கி “அதெல்லாம் சொல்லிருவாப்ல” என்றார். சக்திமானோ தலை கவிழ்ந்தவாறே இருந்தார். நான் அவரைப் பார்த்தவாறு இப்படியெல்லாமா பேரு வைப்பாங்க என யோசித்துக் கொண்டிருந்தேன்.

நாங்கள் மூவருமாகப் பட்டாபிராமர் தெருவில் இருந்த சக்திமானின் வீட்டிற்குச் சென்றோம். வீட்டை ஒட்டியாவாறே சிறிய டூவீலர் மெக்கானிக் ஷாப் இருந்தது. சில வண்டிகளும் நின்றன. சக்திமான் எங்களை வீட்டிற்குள் வரச் சொல்லாமலும் முறையாக விடைபெறாமலும் தனது வீட்டிற்குள் சென்றார். சற்று நேரத்தில் அவரது மனைவி வெளியில் வந்தாள். அவரும் “வாங்க” என உதட்டசைத்தாள். ஆனால் அது எங்கள் செவிகளில் விழவில்லை. அந்த அழைப்பும் வீட்டிற்குள் வரச்சொல்லி இல்லையென நான் புரிந்துகொண்டேன். பரமசிவம் அவளிடம் பைக் சாவியைத் தந்தார். பிறகுதான் அது சக்திமானின் பைக் எனப் புரிந்தது. “பையன் எப்படியிருக்கான்” எனப் பரமசிவம் கேட்டதற்கு “நல்லா இருக்கான்” எனத் தலையசைத்தாள். “உள்ள இருக்கானா?” என அவர் எட்டிப்பார்த்தார். “காலாண்டுப் பரிச்சை படிக்கிறான்” என்றாள். சரியென அவர் விடைபெற்றுக்கொண்டார். அங்கிருந்து தென்னூர் சாலையில் நடந்து சென்று வலது பக்கமிருந்த ஒரு குறுகிய சாலைக்கு அழைத்துச் சென்றார். அத்தெருவில் நடந்து செல்கையில்

“ஏன்ணே சக்திமானுங்குறது உண்மையான பேரா?” என்றேன்.

“இல்லப்பா அவன் பேரு சந்திரசேகர்.”

“அப்புறம் ஏன்ணே சக்திமானுன்னு கூப்புடுறீங்க?”

“நீ எந்த வருசம் பொறந்த?”

“தொன்னூத்தியேழு”

“அந்தச் சமயத்துல டிடிசேனல்ல சக்திமானுன்னு ஒரு நாடகம் ஓடுன்னுச்சு. அப்ப இவனுக்குப் பத்து வயசு இருக்கும். ஸ்கூல்ல எவனோ ஒருத்தன் சக்தி மானெல்லாம் சும்மா டூப்புன்னு சொல்லியிருக்கான். இவனுக்குக் கடுமையான கோவம் வந்துருச்சு. இவன் சக்திமான் உண்மைதான்னு நிரூபிக்கிறதுக்காக இப்ப சக்திமான் என்ன காப்பாத்துவாருன்னு மொத மாடியிலேந்து குதிச்சிருக்கான். நல்லவேளை அவன் ஸ்கூலுக்கு ஒரு மாடிதான். காலோட போச்சு. அதுலேந்து அதுவே அவன் பேராயிருச்சு” என்றார்.

“ஏன்ணே உங்களச் சுத்தி எல்லாம் இப்படிப்பட்ட ஆளுகளாத்தான் இருப்பாங்களா?” என்றேன்.

அவர் உரிமையோடு என்னை “டேய்” என்றார். அவரின் வீடு சற்று உள்ளடங்கியிருந்தது. “தம்பி நேத்து நீங்க அனுப்புன ரெண்டாயிரத்த இப்ப உடனே தேத்திரலாம்” என்றார். நான் அதெல்லாம் வேண்டாமென மறுத்துவிட்டு அங்கு இரைந்து கிடந்த புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் உதவி வேளாண் அலுவலர் தேர்வுக்கான வழிகாட்டி நூல்களும் இருந்தன. நான் அதைக் கையிலெடுத்துப் புரட்டினேன்.

“என்ன பண்றதுப்பா நாப்பத்திரண்டு வயசாயிருச்சு. ஒங்கள மாதிரி சின்னப் பயலுகள்ட போட்டி போட முடியுமா?” என்றவர் அப்போது தனது அலைபேசிக்கு வந்த அழைப்பை ஏற்றுப் பேசத் தொடங்கினார். அவர் பேச்சை சற்றுநேரம் கவனித்த எனக்கே அவரிடம் உண்மையில் ஏகப்பட்ட பெண்கள் கைவசமிருப்பார்களோ என எண்ணத் தோன்றியது. அவர் தன்னிடமுள்ள ஒவ்வொரு பெண்களாய் வர்ணித்து வந்தார். பழைய எழுத்தாளர்கள் அவ்வர்ணனையைச் சிருங்கார ரசம் என எழுதுவார்கள். அலைபேசியில் அவர்கள் புகைப்படம் அனுப்பச் சொல்லிக் கேட்க அது காவல் துறையிடம் சிக்கினால் பெண்களின் வாழ்க்கைப் போய்விடும். ஏனெனில் அவர்கள் கல்லூரி மாணவிகள் எனச் சொல்லி வைத்தார். பதினைந்தாயிரம் சொல்லி பன்னிரண்டில் பேரம் முடிவுற்றது. ஆயிரம் ரூபாய் முன்பணத்தை என் நம்பர் சொல்லி அதற்குக் கூகுள்பேயில் அனுப்பச் சொன்னார். இரண்டு நிமிடத்தில் என் எண்ணுக்கு ஆயிரம் ரூபாய் அனுப்பப்பட்டதற்கான குறுஞ்செய்தி வந்தது. நான் வேகமாய் அலைபேசியின் பேட்டரியை அணைத்தேன். அவர் என் பதட்டத்தைக் கண்டு உரக்கச்சிரித்தார். இம்முறையும் அவருக்குப் புரையேறி கண்களில் நீர் வழிந்தது.

சரி வீட்டிற்குக் கிளம்பலாமென அவரிடம் விடை பெற்றேன். தானும் பேருந்து நிறுத்தம் வரை உடன் வருவதாக எழுந்தார். எனக்குத் தாகமாய் இருந்தது. வீட்டின் மூலையில் மினரல் வாட்டர் கேன் இருந்தது. நான் அதனருகே சென்று நீரருந்த தலையை நிமிர்த்திய போதுதான் பரமசிவத்தின் திருமண புகைப்படத்தைப் பார்த்தேன். அவர் கண்களில் ஒருவிதக் குறும்பு தெரிந்தது. பிறகு புகைப்படத்தை மீண்டுமொரு முறை நன்றாக உற்று நோக்கி விட்டுக் கிளம்பினேன். பேருந்து நிறுத்தம் வரை பரமசிவமும் என்னுடன் வந்தார். நாங்கள் பேருந்திற்காய்க் காத்திருக்கும் போது என்னால் அக்கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.

“ஏன்ணே உங்க வீட்டுக்காரம்மா இப்ப சக்திமான் கூடத் தான் இருக்காங்களா?”

அவர் என் பக்கம் முகத்தைத் திருப்பவில்லை. பேருந்தின் வரவை எதிர்நோக்கியிருப்பதைப் போல் சாலையை வெறித்திருந்தார். நான் அக்கேள்வியைக் கேட்டிருக்கக் கூடாதெனச் சங்கடப்பட்டேன். சற்றுத்தாமதமாய் அவரிடமிருந்து பதில் வந்தது

“கடன் காரனுங்களுக்குப் பதில் சொல்ல முடியாம நான் வீட்ட விட்டுப் போயிட்டேன். அவளும் எத்தன பேருக்குப் பதில் சொல்லுவா. கையில இருக்க எல்லாத்தையும் வித்துச் சாப்புட்டுக்கிட்டு இருந்திருக்கா. என் மகனுக்கு அப்ப ரெண்டு வயசு. என்ன பத்தி எந்தத் தகவலும் இல்ல. எங்க வண்டிய சக்திமான்தான் ரிப்பேர் பாப்பான். அவளோட பழைய ஸ்கூட்டிய அவங்கிட்ட வித்துத் தர முடியுமான்னு கேட்டுருக்கா. அப்படியே பழக்கம் ஆகிருச்சு. நான் மூணு மாசம் கழிச்சு திரும்பி வந்தப்போ என் சம்சாரம் அவன் கூட இருந்தா” என்றார்.

 பரமசிவத்திற்கு அவர்கள் இருவர் மீதும் எந்தப் புகாருமில்லாமல் இருந்தது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. அன்று இரவு உறங்குவதற்கு முன் அலைபேசியை மீண்டும் உயிர்ப்பித்தேன். எனது வங்கிக்கணக்கில் இன்னொரு ஆயிரம் ரூபாய் செலுத்தப் பட்டதற்கான குறுஞ்செய்தி வந்திருந்தது. நான் கூகுள் பே செயலியை சோதித்துப் பார்த்தேன்.

பணம் அனுப்பிய எண்ணிலிருந்து எனக்கு வாட்ஸப்பில் மோசமான வசைகள் வந்திருந்தன. நான் அந்த எண்ணை பிளாக் செய்தேன்.

“இனிமேல் பணம் வேண்டாம்” எனத் தட்டச்சுச் செய்து பரமசிவத்திற்கு அனுப்பினேன். அவர் சரியெனப் பதிலளித்தார்.

“எதற்கு என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள்? உங்கள் தெருவிலேயே யாரேனும் பிடித்திருக்கலாமே?” எனக் கேட்டேன்.

அவர் வடிவேலு ஏட்டாய் இருக்கும் புகைப் படத்தை அனுப்பி “அவங்கெல்லாம் தொழிலக் கத்துக்குவானுங்க தம்பி” என்றார். நான் ஒரு புன்னகையைப் பதிலாய் அளித்து விட்டு “என் நண்பர்களிடம் இன்று நடந்ததைச் சொன்னேன் அவர்கள் அனைவரும் உங்களைத்தான் லூசு கூ.... என்றார்கள்” என அனுப்பி வைத்தேன்.

“சரி விடுங்க தம்பி அப்படி இருக்குறதுலயும் ஒரு சொகம் இருக்கு” எனப் பதிலளித்தார். நான் அவருக்கு ஒரு புன்னகையை அனுப்பிய பின் அலைபேசியின் பேட்டரியை அணைத்து வைத்தேன்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer